Skip to content
Post Views: 7,336
அவர்கள் அமைதி வெண்ணிலாவை பாதிக்க பரணி, ரகு, மதனை மேடைக்கு அனுப்பி வைத்த வெண்ணிலா மைதிலியை அழைத்துக் கொண்டு தானும் மேடை ஏறினாள்.
அனைவரும் அங்கு கதை பேச புவி சற்று பேசினான். அப்போதும் மதன் மற்றும் ரகுவிடம் பேசினானே தவிர சுஜியிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை.
Advertisement
அப்போது மைதிலி “நான் கிளம்புறேன்”, என்று சொல்ல அனைவரும் அவளுக்கு விடை கொடுத்தார்கள். அவள் அனைவரிடமும் சொல்லி விட்டு வெளியே வந்தாள். யாருக்கும் சந்தேகம் வராதவாறு மதனும் அவள் பின்னே வந்தான். அவன் வருவான் என்று தான் அவளுக்கு தெரியுமே.
அவள் டிரைவர் சீட்டில் ஏறி அமர அவனும் அவசரமாக அவள் அருகே ஏறி அமர்ந்தான். அவள் சிறு சிரிப்புடன் அவனை ஏறிட “நைட் வரைக்கும் தண்டனை கொடுக்காம இருக்க முடியலை டி. சாரி”, என்று சொன்னவன் அவளை இழுத்து அணைத்தான். அவன் அதிரடியில் அவள் திகைக்கும் போதே அவளுடைய உதடுகளை சிறை செய்து விட்டான். அவன் முத்தத்தில் கரைந்தவளின் கைகள் அவன் முதுகில் பிடிப்பில்லாமல் அலைந்து இறுதியில் அவனுடைய பின்னந்தலையை கோதியது.
Advertisement
Advertisement
சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன் “உன்னை விடவே மனசில்லை டி. ஒரு மாசம் மட்டும் பொறு. கல்யாணம் பண்ணிக்கலாம். இப்ப போயிட்டு வா”, என்று சொல்ல ஏக்கமாக அவனைப் பார்த்து தலையசைத்தாள். அவளுக்கு மட்டும் அவனை விட்டு செல்ல மனதிருக்குமா என்ன?
“ஐ லவ் யு மயூ”, என்று சொன்ன மதன் மீண்டும் ஒரு நீண்ட நெடிய இதழ் முத்தத்தைக் கொடுத்து விட்டே காரில் இருந்து இறங்கினான். அவனை பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றாள் மைதிலி.
Advertisement
கார் போன பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான் மதன். அவளை இப்போதே அவனுடைய பெற்றோருக்கு அறிமுகப் படுத்த ஆசை தான். ஆனால் சுஜி திருமணத்தில் எந்த குழப்பமும் வேண்டாம் என்று தான் அவளை அனுப்பி விட்டான். “அவளை ரொம்ப நாள் அவ அப்பா கிட்ட விட்டு வைக்க கூடாது. சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்”, என்று முடிவு எடுத்து விட்டே மண்டபத்துக்குள் சென்றான்.
அதற்கு பின் சுஜியும் புவியும் மறுவீட்டுக்கு சுஜியின் வீட்டுக்குச் சென்றவர்கள் அங்கேயே இரவு உணவை முடித்து விட்டு தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் அவளை ஓய்வெடுக்க சொல்லி விட்டுச் சென்றாள் வெண்ணிலா. அந்த அறையில் பார்வையை ஓட்டினாள். அது தான் புவியின் அறை என்று புரிந்தது. “இனி என்னோட ரூமும் இது தான்”, என்று சிரிப்புடன் எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அறைக்குள் வந்த வெண்ணிலா “என் கூட வா டி சுஜி”, என்று சொல்லி தனதறைக்கு அழைத்துச் சென்றாள். ரோஹினியின் கணவன் ரஞ்சித்தும் பரணியும் சேர்ந்து புவியின் அறையை அலங்கரித்தார்கள். ஒற்றைக் கட்டிலை எடுத்து விட்டு சீராக வந்த கட்டிலை அங்கு போட்டார்கள்.
“போய் குளிச்சிட்டு வா சுஜி”, என்று சொன்ன வெண்ணிலா அவளுக்கு மிதமான ஒரு சேலையை எடுத்து அணியச் சொன்னாள். பின் அவளுக்கு தலை பின்னி அலகரித்து விட்டு வெளியே சென்றாள்.
பின் அறைக்குள் வந்து “எந்திரி சுஜி. அப்ப ரெஸ்ட் எடுத்தல்ல? அது தான் அண்ணா ரூம். அங்க போ. இந்தா டி பால். அண்ணாவுக்கு பால் பிடிக்காது. அதனால அவனை கொஞ்சமாவது பார்மாலிட்டிக்கு குடிக்கச் சொல்லிட்டு நீயே குடிச்சிரு”, என்று அவள் கையில் டம்ளரைக் கொடுத்தாள் வெண்ணிலா.
“பயமா இருக்கு டி”
“எங்க அண்ணன் ரொம்ப சாஃப்ட் டி. கண்டிப்பா காயப் படுத்த மாட்டாங்க”, என்றாள் வெண்ணிலா. அவள் உடல் காயத்தைப் பற்றிச் சொல்ல புவியோ மிகப் பெரிய மனக் காயத்தை அவளுக்கு கொடுக்கத் தயாராக இருந்தான்.
சுஜி வெண்ணிலாவின் அறையை விட்டு வெளியே வரும் போது அங்கே யாருமே இல்லை. அனைவரும் உறங்கச் சென்றிருந்தார்கள்.
மெல்லிய படபடப்பும் தடுமாற்றமும் சேர்ந்து கொள்ள நடுக்கத்துடன் தான் அந்த அறைக்குள் நுழைந்தாள். ஆனால் அவன் அங்கு இல்லை. இப்போது அந்த அறையில் இரட்டைக் கட்டில் போடப் பட்டு அதில் மெத்தை விரிப்புகள் புதிதாக போடப் பட்டிருந்தன. அதற்கு மேல் பூக்களை எல்லாம் தூவி அலங்காரம் செய்திருந்தார்கள்.
அருகிலே ஒரு டேபிள் மீது பழங்கள் வைக்கப் பட்டிருக்க அதன் அருகே சென்று பாலை வைத்தவள் அந்த கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.
“இவங்க எங்க போனாங்க? எப்ப வருவாங்க?”, என்று அவள் யோசனை ஓடியது.
அவனோ பயங்கர டென்சனில் மொட்டை மாடியில் நின்றிருந்தான். அவனுக்கு இதெல்லாம் புதிது. வீட்டினருக்காக திருமணம் செய்து கொண்டாலும் அவனுக்கு பல தயக்கங்கள். அவள் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு அவனை கொன்று போட்டது. சட்டென்று அவனால் திருமண உறவுக்குள் செல்ல முடியவில்லை.
வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் மோதிய தென்றல் கூட அவனுக்கு அமைதி அளிக்க வில்லை.
“இந்நேரம் இங்க என்ன டா பண்ணுற? இன்னைக்கு என்ன நாள்ன்னு மறந்துட்டியா மாப்பிள்ளை?”, என்று குரல் கேட்டு திரும்பினான்.
பரணி தான் நின்றிருந்தான். “மாமா”, என்று தயக்கமாக அழைக்க “உன்னை என்ன வேட்டைக்காடா போகச் சொல்றேன். இப்படி தயங்குற? நீ தாலி காட்டின உன் பொண்டாட்டி கூட முதலிரவு கொண்டாடச் போகச் சொன்னது குத்தமா டா? எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு இங்க வந்து நின்னுட்ட?”, என்று கேட்டான் பரணி.
“பயமா இருக்கு மாமா”
“லூசா டா நீ? இதுக்கு என்ன பயம்? அவ உன் பொண்டாட்டி”
“யோவ் மாமா, உனக்கு எப்படி என் டென்ஷன் தெரியும்? உனக்கும் இப்படி ஒரு சந்தர்பம் வந்தா அப்ப தெரியும்?”
புவி முகத்தில் இருந்த கலக்கத்தில் பரணியின் புருவம் உயர்ந்தது. என்ன செய்யப் போகிறானோ என்று கவலையாகவும் இருந்தது. அவன் சொன்னது உண்மை தான். பரணிக்கே அந்த பயம் எல்லாம் இருக்க அவனால் எப்படி அவனைத் தேற்ற முடியும்?
“உன் பயம் புரியுது டா மாப்பிள்ளை. பயத்தை விட்டுட்டு ரூமுக்கு போடா. அந்த பிள்ளை பாவம். போய் என்ன செய்றான்னு பாரு. உன்னை நம்பி தானே வந்துருக்கா?”
“நானா என்னை நம்பி வரச் சொன்னேன்? இவ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருக்கலாம்ல? ஏதாவது படிச்ச பையனா பாத்து கட்டிருக்க வேண்டியது தானே?”
“அதை அவ கிட்ட போய் கேளு டா. இங்க இருந்து புலம்பி என்ன செய்ய?”
“மாமா”
“போடா மாப்பிள்ளை. சுஜி இந்நேரம் தூங்கிருப்பா. நீயும் போய்த் தூங்கு. எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்”, என்று சொல்லி அவனை அனுப்ப முயன்றான் பரணி.
“நிஜமாவா மாமா?”
“ஆமா டா, அவ தூங்கிருப்பா. நீ போ”
“ஆனாலும் எப்படி மாமா? ஒரு தெரியாத பொண்ணு கூட ஒரே ரூம்ல தூங்குறது?”
“சரி நீ போகாத. நான் பாரி மாமாவை எழுப்பி என்னன்னு கேக்குறேன்”
“ஐயோ வேண்டாம்”
“அப்புறம் என்ன? பேசாம போ”
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு மெதுவாக தன்னுடைய அறைக்கு சென்றான்.
கதவை திறந்து விட்டு உள்ளே சென்றவன் அவளைப் பார்த்ததும் திகைத்துப் போனான். தூங்காமல் அவன் வரவுக்காக தான் முழு அலங்காரத்தில் காத்திருந்தாள் சுஜி. கட்டிலில் அமர்ந்திருந்தவள் அவனைக் கண்டதும் தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.
“ஐயோ இவ என்ன தூங்காம இருக்கா. இப்ப என்ன பண்ணுறது?”, என்று எண்ணிக் கொண்டே கதவை அடைத்தவன் “நீ இன்னும் தூங்கலையா? களைப்பா இருக்கும். படுத்துக்கோ”, என்று சொல்லி விட்டு தான் அணிந்திருந்த சட்டையைக் கழட்டினான்.
அவன் பேச்சில் அதிர்ந்தவள் அவன் செயலில் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள். ஒரு வெள்ளை உள் பனியனுடன் அவன் நிற்க அவளுக்கு அவனைப் பார்க்கவே தயக்கமாக இருந்தது.
ஒரு பக்கம் கட்டிலில் அமர்ந்தவன் அவள் அப்படியே நிற்கவும் “படுத்துக்கோ”, என்று சொல்லி அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்.
அவன் செயலில் விக்கித்து விட்டாள் சுஜி. காதல் கொண்ட மனது ஏதேதோ எதிர் பார்க்க அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போனது. அவள் ஆசைகள் கனவுகள் அனைத்தையும் தரை மட்டமாக்கி இருந்தான் புவியரசன்.
error: Content is protected !!