Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் Final 2

“ஏன் டி எனக்காக இந்த அளவுக்கு பண்ணனுமா? ஆனா நான் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன் டி”

“அது என்னைப் பொறுத்த வரைக்கும் ரொம்ப நல்ல விஷயம் மாமா. நீ பீல் பண்ணி அதை தப்புன்னு சொல்லாத”



Advertisement

“எங்க டி சூடு வச்சிக்கிட்ட? கால்லன்னு சொன்னாங்க. எங்க காலைக் காட்டு பாப்போம்”

Advertisement

“வீட்டுக்கு வாங்க காட்டுறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டாள். இருவரும் புன்னகையுடன் வீட்டுக்கு வர அவர்களைக் கண்டு அனைவர் மனமும் நிறைந்தது. 

Advertisement

அன்று இரவு அறைக்குள் வந்ததும் “காட்டு”, என்றான் பரணி.

Advertisement

“என்னது?”, என்று அவள் குழப்பமாக கேட்க “சூடு வச்சதை காட்டு டி”, என்றான்.

“அது சும்மா சொன்னேன். அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை மாமா”, என்று வெட்கத்துடன் சொன்னாள் வெண்ணிலா. 

“இல்லை, ஏதோ இருக்கு. அக்கா சொல்லுச்சு. காட்டு டி”

“வேண்டாம் மாமா”, என்று அவள் மறுக்க “உன் கிட்ட என்ன கேக்குறது? நானே பாக்குறேன்”, என்று சொல்லி அவள் சேலையைத் சற்று மேலேற்ற “ஐயோ என்ன பண்ணுறீங்க?”, என்று வெட்கப் பட்டாள்.  

அங்கிருந்த தழும்பைப் பார்த்தவனுக்கு மனதே பாரமானது. அந்த இடத்தை விரலால் வருடியவன் அந்த தழும்பில் முத்தமிட அவளுக்கு உடல் சிலிர்த்தது. ஆனால் அவனுடைய கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அவள் தழும்பில் மீது விழுந்தது.

அவன் கண்ணீரைப் பார்த்தவள் “லூசு ரொமான்ஸ் பண்ணாம அழுதுட்டு இருக்கு”, என்று எண்ண அவனோ அவள் காலில் முத்தமிட்டுக் கொண்டே இருந்தான். கண்களை மூடி அவன் முத்தத்தில் கரைய அவளிடம் இருந்து சத்தம் வராததால் நிமிர்ந்து பார்த்தவன் அவள் முகத்தில் இருந்த உணர்வலைகளில் தவித்துப் போனான்.

பழைய நினைவுகள் படையெடுக்க கணவன் என்ற உரிமையும் சேர்ந்து கொள்ள அவனாகவே அவளை நெருங்கினான். அந்த ஏகாந்த இரவும், மனதுக்கு பிடித்த மனைவி என்ற நினைவும் சேர்ந்ததால் அவன் தேகம் மெதுவாக சூடேற ஆரம்பித்தது. 

அவள் அதிர்ச்சியும் திகைப்புமாக அவனை பார்க்க அவன் உதடுகள் அவள் நெற்றியில் பதிந்தது. அவன் உதடுகள் கன்னம் காது என்று பயணித்து கடைசியில் இதழில் இளைப்பாறியது. அவள் கரங்கள் உயர்ந்து அவனை வாகாக அணைத்துக் கொண்டது. 

முதலில் மென்மையாக துவங்கிய அவனது அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூடியது. 

அவன் அவளுக்குள் முழுமையாக கலக்க அவளும் முழு மனதுடன் அவனுடன் ஒன்றிப் போனாள். மூச்சு வாங்க அவளிடம் இருந்து விலகி அவளை தன்னோடு இறுக்கி கொண்டு படுக்க “நீயா மாமா கல்யாணம் வேண்டாம்னு சொன்னது?”, என்று கேட்டாள் அவன் மனைவி. 

“எல்லாத்தையும் வெறுத்து தான் டி இருந்தேன். ஆனா அன்னைக்கு ஹோட்டல்ல அது நமக்குள்ள நடந்த அப்புறம் ஒவ்வொரு நாள் இரவும் நரக வேதனையா இருந்தது எனக்கு தான் தெரியும்”, என்று சொன்னவன் மீண்டும் அவளை ஆட்சி செய்ய சுகமாய் அவன் தொடுகையில் கரைந்தாள். அன்று சட்டென்று முடிந்த ஒன்று இன்று நீண்ட நிகழ்வாக அரங்கேறியது. 

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தது. வெண்ணிலா வேலையை விட்டு வந்து விட்டாள். கணவனுடன் இருப்பதை விட அவளுக்கு வேலையா முக்கியம்? 

புவி புதிய கடை ஆரம்பித்ததால் கொஞ்சம் சேல்ஸ் கம்மியாக இருந்தது. ஆனாலும் போக போகச் சரியாகி விடும் என்ற நம்பிக்கை வந்தது. அவன் அதிக நேரம் உழைக்க வேண்டி இருந்தது. 

அப்போது ஒரு நாள் சுஜி மயங்கி விழ “அம்மா”, என்று அலறினான் புவி. 

இப்போதெல்லாம் புவியின் குரல் அந்த வீட்டில் சற்று ஓங்கியே ஒலிக்கிறது. அவனுடைய தயக்கங்கள் எல்லாவற்றையும் தான் அவனது மனைவி விரட்டி இருந்தாளே.

“கத்தாத பா”, என்று காதை மூடிக் கொண்டாள் பவித்ரா. 

“என்ன ஆச்சு புவி?”, என்று கேட்டுக் கொண்டே அவர்கள் அறைக்குச் சென்றாள் மல்லிகா. 

அங்கே சுஜி அரை மயக்கத்தில் படுத்திருக்க அவளை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பாவும் மகளும். 

“என்ன ஆச்சு டா? சுஜி, என்ன மா செய்யுது?”

“கிறக்கமா வருது அத்தை? தலை சுத்துது”, என்று சொல்ல மல்லிகாவுக்கு பொறி தட்டியது. 

இப்போதெல்லாம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த ஒற்றுதலைப் பார்த்த மல்லிகாவுக்கு இது குழந்தை என்று உறுதி தான். ஆனால் தானாக வாயை விடக் கூடாது என்பதால் “அவளை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போ புவி”, என்று சொல்ல சரி என்று சொல்லி அழைத்துச் சென்றான். 

“நானும் வருவேன், என்று அடம் பிடித்த பவித்ராவை வெண்ணிலா தான் தூக்கிக் கொண்டாள். சின்னக் குட்டிக்கும் அத்தை என்றால் போதுமே? 

சுஜியை பரிசோதித்த மருத்துவர் சுஜி தாய்மை அடைந்திருக்கும் செய்தியைச் சொல்ல புவி அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

முதல் குழந்தை உண்டான போது எழுந்த சந்தோஷத்தை வெளிப் படுத்தாமல் மனதுக்குள் வைத்திருந்தவன் இப்போது சந்தோசத்தில் ஆர்ப்பரித்தான். வீட்டுக்கு வந்ததும் அவன் கொடுத்த அலப்பறையில் சுஜிக்கு தான் வெட்கமாக இருந்தது.

பிறந்த வீட்டில் இருந்து அனைவரும் அவளை பார்த்து விட்டுச் சென்றார்கள். ரோகிணியும் தன்னுடைய கணவர் குழந்தையுடன் வந்து அவளைப் பார்த்து விட்டுச் சென்றாள். 

வீடே சந்தோசத்தில் திளைத்தது. அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் புவி. அவள் சோர்ந்து போகையில் அவளுக்கு தோள் கொடுத்து தாங்கினான். 

அவள் உண்ணாமல் இருந்தால் அவனே உணவு ஊட்டி விடுவான். “அப்பா நேக்கும்”, என்று மகள் வர அவளுக்கும் அவன் தான் ஊட்டி விடுவான். அவன் மட்டும் அல்ல, மொத்த குடும்பமும் சுஜியை தாங்கத் தான் செய்தது. இப்போது மல்லிகா தான் சமையல் செய்தாள். உடன் இரண்டு வேலைக்காரிகள் இருந்தார்கள். ரேணுகாவும் வெண்ணிலாவும் அவளுக்கு உதவி செய்தனர்.

சுஜி தானே செய்வதாக சொல்ல மல்லிகாவே அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டாள். புவிக்கும் முந்தைய தன்னுடைய தவறு புரிந்தது. தான் சுஜிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் மற்றவர்களும் அவளை அவ்வளவு கஷ்டப் படுத்தி இருக்க மாட்டார்களோ என்று தோன்றியது.

அப்போது ஒரு நாள் தன்னுடைய அறையில் ஏதோ யோசனையில் இருந்தான் பரணி.

“என்ன ஆச்சு மாமா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டாள் வெண்ணிலா.

“இல்லை, அவன் மட்டும் ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை பொண்டாட்டி கூட ஒண்ணா இருக்கான். உடனே அப்பா ஆகிறான். ஏன் நமக்கு மட்டும் அப்படி இல்லை”

அவன் அப்படிக் கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “என்ன டி சிரிக்கிற? ஏதாவது தப்பா பண்ணுறேனா? கொஞ்சம் மாப்பிள்ளை கிட்ட கேட்டுகட்டா?”, என்று பரணி சீரியசாக கேட்க “கொன்னுறுவேன் கொன்னு. உங்க சந்தேகத்துக்கு நான் விடை சொல்றேன்”, என்று சொன்னவள் நாள் கணக்கைச் சொல்ல ஆரம்பிக்க அவன் முகம் மலர்ந்தது. 

வெண்ணிலா குழந்தை உண்டாகி இருப்பது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. விஷயம் தெரிந்து அனைவரும் சந்தோஷப் பட்டார்கள். அவனைப் பார்த்து சிரித்த புவி “நீயா மாமா கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னது? என்னால நம்பவே முடியலை”, என்றான்.

“நான் மட்டுமா? நீயும் தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன. இப்ப நானாவது ஒண்ணு. நீ ரெண்டாவது டா மாப்பிள்ளை”, என்று அவனை வார புவி முகம் சிவந்தது. 

வெண்ணிலாவும் மாசமாக இருப்பதால் சுஜி பவித்ராவை அழைத்துக் கொண்டு தாய் வீடு செல்ல மனைவி மகளை பிரிந்து இருக்க முடியாமல் புவியும் அங்கேயே சென்று விட்டான். 

மாமியார் வீட்டில் அவன் வந்து தங்கியது அங்கே அனைவருக்கும் சந்தோஷம். கூடவே மகள் வாழ்க்கை மலர்ந்தது அவர்களுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. 

குழந்தை பிறந்த பிறகு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தான் இனி வீட்டுக்கு வருவான் என்று பாரி மற்றும் மல்லிகாவுக்கு புரிந்தாலும் அவன் சந்தோஷம் தான் முக்கியம் என்பதால் ஒன்றும் சொல்ல வில்லை. அவ்வப்போது மல்லிகா புலம்பினாலும் “உன் மகன் மாமியார் வீட்ல இருக்கான்னு தானே உனக்கு எரியுது. அதை நீ உன் மகன் கிட்டயே சொல்லு. என் காதை பஞ்சர் ஆக்காதே”, என்று சொல்லி விட்டார் பாரி.

“எதுக்கு? அவன் கிட்ட சொன்னா இது தான் சாக்குன்னு அங்கே செட்டில் ஆகிறுவான். இப்பவாது குழந்தையோட இங்க வருவான்”

“தெரிஞ்சா சரி. கொஞ்சம் பிள்ளைங்க சந்தோசத்தையும் பாரு மல்லி. எங்க இருந்தாலும் புவி நம்ம மகன் தான்”, என்று சொல்லி மனைவியை சமாதானம் செய்தார்.

இரண்டாம் வளைகாப்புக்கு என அவளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த புவி அன்றே அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு அடுத்த நாளே அவனும் அங்கு சென்று விட்டான். 

அவன் மனம் புரிந்த சுஜியும் அவனை விட்டு அங்கே இங்கே நகர வில்லை. பவித்ரா வேறு குட்டி தம்பி குட்டி தம்பி என்று மதன் மற்றும் மைதிலியின் குழந்தை ராமுடனே இருக்க சுஜிக்கு கணவனைக் கவனிப்பது மட்டுமே வேலையாக இருந்தது. 

போன முறை போல அல்லாமல் இந்த முறை பிரசவ நேரத்தில் அவளுடனே இருந்தான் புவி. சுகப் பிரசவத்தில் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்க மகனை கையில் ஏந்தி முத்தமிட்ட புவிக்கு இந்த புவியையே வென்ற கர்வம் வந்தது. 

மகனுடனே மனைவியைக் காணச் சென்றான். அவள் களைப்பில் கண்களை மூடி படுத்திருக்க அவள் நெற்றியில் இதமாக முத்தமிட்டான். அவனைக் கண்டு நிறைவாக சிரித்தாள் சுஜி.

குழந்தையை ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு அழைத்து வந்ததும் அகிலன் என்று பெயர் வைத்தான். அதற்கு அடுத்த மாதத்தில் வெண்ணிலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பரணியை கையில் பிடிக்க முடியவில்லை. மகளுடனே நேரம் செலவழித்தான். 

“டேய் கடையைப் பாருடா”, என்று பாரி சொல்ல “நீங்க போய் பாருங்க மாமா. நீங்க ஒரு நாள், நான் ஒரு நாள். எப்படி என் ஐடியா?”, என்று சொல்லி பாரியிடம் பேரம் பேசினான் பரணி. அவருக்கும் பிள்ளைகள் சந்தோஷத்தை தவிர வேறு என்ன வேண்டுமாம்? கடையைப் பார்க்கச் சென்று விட்டார். ரேணுகாவும் இப்போது கருவுற்றிருந்தாள். அதனால் வீட்டில் சந்தோஷம் தாண்டவமாடியது. 

தன்னுடைய அறையில் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் சுஜி. பவித்ரா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். மனைவி அருகே வந்து அமர்ந்தான் புவி. 

அவன் கண்கள் அவளை ஆசையாக நோக்க “திருட்டுப் பூனை என்ன லுக்கு?”, என்று கேட்டு சிரித்தாள். “சும்மா”, என்று சொன்னவனின் இதழ்கள் அவளுடைய கன்னத்தில் பதிய அவளும் அந்த வளர்ந்த குழந்தையை அணைத்துக் கொண்டாள். 

இதற்கு மேல் அவளுக்கு வேறு என்ன வேண்டுமாம்? இதே போல எப்போதுமே அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று நம்புவோம். 

……முற்றும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!