ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 9
பிடித்தம் 9
தன்னுள் உழன்றுக் கொண்டிருந்த மனோஜ் எதேர்ச்சையாக பிரசாத்தை பார்க்க, அவனோ மித்ராணியை பார்த்துக் கொண்டிருந்தான். என்ன தான் பிரசாத் தனது மகிழ்ச்சியை மறைக்க முயற்சித்தாலும் மித்ராணியை பார்த்ததும் அவனையும் மீறி அவனது கண்கள் உள்ளத்து மகிழ்ச்சியை காட்டிக் கொடுத்தது. மனோஜ் மனதினுள் ‘பிரசாத் மித்துவை லவ் பண்றானோ?’ என்ற சந்தேகம் எழுந்து மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.
மனோஜ் மனதினுள், ‘இப்போ நான் என்ன பண்ண? ஒருவேளை பிரசாத்தும் மித்துவை விரும்பினால் நான் என்ன பண்றது? மித்து மனதில் இன்னும் என் மேல் காதல் வராத நிலையில் பிரசாத்திற்காக விட்டுக் கொடுக்கனுமா? என்னால் என் மித்துவை விட்டுக் கொடுக்க முடியுமா? நோ.. என்னால் முடியாது.. மித்து இடத்தில் இன்னொருத்தியா! நோ.. என் மித்து இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியலையே! ஆனா பிரசாத்திற்கும் இப்படி தானே இருக்கும்?’ என்று குழம்பிக் கொண்டிருந்தவன் மித்ராணியின் தற்போதைய மனநிலையை பற்றி யோசிக்கத் தவறினான். தனது மௌனம் அவள் தன் மீது கொண்ட நம்பிக்கையை உடைக்கிறது என்பதை அவன் உணரவே இல்லை.
Advertisement
கமலா கிருபாகரனின் கையை பற்றி கலங்கிய விழிகளுடன், “ரொம்ப சந்தோசம் அண்ணா” என்று கூற,
Advertisement
கிருபகரனோ ‘பரவாயில்லை’ என்று கூறாமல் ‘உனக்காக தான் செய்தேன்’ என்ற மிதப்பான பார்வையை பார்த்தார்.
Advertisement
மல்லிகா மனதினுள், ‘இத்தனை வருஷம் ஆகியும் உன் அண்ணனை புரிந்துக்கலையே! மித்து பெயரில் மட்டும் சொத்து இல்லாமல் இருந்தால் அவர் உங்களை மதித்தே இருக்க மாட்டார்’ என்று நினைத்துக் கொண்டார்.
Advertisement
இனி மனோஜை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவிற்கு வந்த மித்ராணி ஒரு நொடி கண்களை இறுக்கமாக மூடித் திறந்து தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு எழுந்து நின்றாள்.
மித்ராணியையே பார்த்துக் கொண்டிருந்த பிரசாத்தின் மனதினுள் அபாய மணி அடித்தது.
[the_ad id=”6605″]
மித்ராணி பேசும் முன் அவசரமாக தந்தை அருகே சென்ற பிரசாத் மகிழ்ச்சியுடன், “எனக்கும் ரொம்ப சந்தோசம் பா.. எனக்……………..”
“எனக்கு இதில் சந்தோசம் இல்லை” என்று மித்ராணி இடைபுகுந்து பட்டென்று சொல்லியிருந்தாள்.
‘எல்லாம் சரியா போகுற நேரத்தில் இவ ஏன் குட்டையை குழப்புறா!’ என்று மனதினுள் நினைத்த கிருபாகரன் எரிச்சலையும் கோபத்தையும் மறைத்துக் கொண்டு அவளை பார்க்க, மல்லிகா அமைதியாக அவளை பார்க்க, பிரசாத்தும் மனோஜும் பதற்றத்துடன் பார்க்க,
கமலா அதிர்ச்சியுடன், “மித்து என்ன சொல்ற?” என்றார்.
மித்ராணி, “ஆமா எனக்கு இதில் விருப்பம் இல்லை.. நா…………………”
கமலா கோபத்துடன், “என்ன பேச்சு இது மித்ரா?”
“என் கல்யாணத்தை பற்றி நான் பேசக் கூடாதா (அம்)மா?”
“நீ சின்ன பெண்.. பெரியவங்க உங்க நல்லதிற்காக தான் சொல்லுவோம்”
“அம்மா………….” என்று அவள் ஆரம்பிக்க,
பிரசாத் வருத்தமான குரலில், “சின்ன வயசில் இருந்தே மித்துக்கு என் மேல் பிடித்தம் கிடையாது அத்தை.. அவளுக்கு விருப்பம் இல்லை னா யாரும் அவளை வற்புறுத்தாதீங்க” என்றான். (மித்ராணி மற்றும் பெரியவர்கள் மனதில் தன் மீது நல்ல எண்ணத்தை விதைக்க அவன் இப்படி கூறினான்)
பிரசாத்தை பார்த்த மித்ராணி, “எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொன்னதால் எனக்கு உன்னை பிடிக்காது என்று அர்த்தம் இல்லை”
கமலா குறையாத கோபத்துடன், “அப்பறம் என்னடி?”
மித்ராணி, “அம்மா என்னை முழுசா பேச விடு” என்றவள் மனோஜை பார்த்தாள். அவன் இப்பொழுதும் அமைதியாக இருக்கவும் அவனை கடுமையாக முறைத்தவள் மற்றவர்களை ஒரு நொடி பார்த்து பின் தீர்க்கமான குரலில், “மனோஜும் நானும் விரும்புறோம்” என்றாள்.
கமலா சட்டென்று கோபம் வடிந்தவராக தமையனை கவலை கலந்த எதிர்பார்ப்புடன் பார்த்தார்.
பிரசாத், ‘ச.. எது நடக்கக் கூடாது னு நினைத்தேனோ அது நடந்திருச்சே!’ என்று எரிச்சலும் கோபமுமாக நினைத்தாலும், அவனது ஆழ் மனம், ‘இப்ப கூட உன்னோட இந்த தைரியமும் நிமிர்வும் எனக்கு பிடிக்குது மித்து பேபி’ என்று காதலுடன் நினைக்க, மறு நொடியே அவன் மனதினுள் ‘உனக்கு ஏன் பேபி என் மேல் காதல் வரலை?’ என்று வேதனையுடன் கேட்டுக் கொண்டான்.
இரு மகன்களின் முகத்தை வைத்தே இருவரும் மித்ராணியை விரும்புவதை புரிந்துக் கொண்ட மல்லிகா இரு மகன்களையும் விட்டுக் கொடுக்க முடியாமல் அமைதியாக நடப்பதை பார்க்க முடிவெடுத்தார்.
மனோஜ் கலவரத்துடன் தந்தையை பார்க்க, அவர் அவனைத் தான் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘நான் வாக்கு தவறுவதா?’ என்ற எண்ணம் தந்த கோபம் அது.
மனோஜ் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஆமா பா நானும் மித்துவும் விரும்புறோம்.. நானே உங்களிடம் சொல்லணும்னு நினைத்தேன்” என்று மெல்லியக் குரலில் சிறு திணறலுடன் சொல்லி முடித்தான்.
கிருபாகரன் கோபத்துடன், “நான் வேதாச்சலத்திற்கு வாக்கு கொடுத்துட்டேன்” என்று சீறினார்.
“எங்களை கேட்காமல் நீங்களா எப்படி இந்த முடிவை எடுக்கலாம்?” என்று மித்ராணியும் சீறினாள்.
[the_ad id=”6605″]
கமலா சிறு கோபத்துடன், “மித்து மாமா கிட்ட மரியாதையுடன் பேசு” என்றார்.
“அம்மா உன்னோட பாசமலர் படத்தை என்னிடம் ஓட்டாத.. உனக்கு உன் மகள் உன் அண்ணன் வீட்டு மருமகள் ஆகணும்.. அது கண்டிப்பா நடக்கும் அதனால் கொஞ்சம் அமைதியா இருந்து என்னை பேச விடு ப்ளீஸ்.. இது என் வாழ்க்கை பிரச்சனை.. நான் பேசி தான் ஆகணும்” என்றவள் கிருபாகரனை பார்த்தாள்.
கிருபாகரன், “நானே வலியப் போய் பேசி முடிச்சிக்கிற கல்யாணம் இது.. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்றார்.
மித்ராணி, “எங்க வாழ்க்கையை விட உங்க வறட்டு பிடிவாதம் தான் பெருசா?”
“இது பிடிவாதம் இல்லை.. இதில் என் கௌரவம் அடங்கி இருக்குது”
“இதில் எங்கள் வாழ்க்கை அடங்கி இருக்குது”
“என் மகனின் கல்யாணத்தை முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்குது” என்றவர் மனோஜை பார்க்க, ஏதோ சொல்ல வாய் திறந்தவன் அவரது பார்வையில் அமைதியானான்.
மனோஜின் மௌனத்தில் கிருபாகரன் வெற்றி புன்னகையுடன் மித்ராணியை பார்க்க,
அவளோ மனோஜை பார்க்கமால் பிரசாத்திடம், “உன் அண்ணனை விரும்புற நான் எப்படி உன்னுடன் வாழ முடியும்?” என்று கேள்வி கேட்டாள்.
பிரசாத்தின் மனம், ‘நானும் உன்னை விரும்புறேனே பேபி! எனக்கு நீ வேணுமே!’ என்று கதற தன் மனம் கவர்ந்தவளை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தபடி அமைதியாக இருந்தான்.
எப்பொழுதும் அனைவரின் மனநிலையையும் சரியாக கணிப்பவள் தான் மித்ராணி. ஆனால் தற்போது மன உளைச்சல் மற்றும் கோபத்தில் உழன்றதால் அவளது மனதில் பிரசாத்தின் இந்த மௌனம் பதியவில்லை. காதல் இல்லா காதலிற்காக போராடுவது அவளுக்கு மன உளைச்சலை கொடுத்தது. தன் மனதில் மனோஜ் மீது காதல் இல்லை என்றாலும் அவனது காதலை ஏற்றுக் கொண்டதால் தான் போராடிக் கொண்டிருக்கிறாள். தன் காதலிற்காக சிறிதும் போராடாத மனோஜின் மீது கோபத்தில் இருக்கும் மித்ராணி பிரசாத்தின் காதலின் ஆழத்தையும் போராட்டத்தையும் பற்றி தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பளோ!
மித்ராணி நேர்பார்வையுடன் கிருபாகரனை பார்த்து தீர்க்கமான குரலில், “உங்கள் மகனின் கல்யாணத்தை முடிவு செய்யும் உரிமை உங்களுக்கு இருக்குது ஆனா என் கல்யாணத்தை முடிவு செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை………….”
கமலா, “மித்ரா” என்று குரலை உயர்த்த, அவளோ அன்னை பக்கம் பார்வையை சிறிதும் திருப்பாமல் கிருபாகரனை தான் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
கிருபாகரன், “நான் உனக்கும் அப்பா மாதிரி தானே டா” என்று பாசமான குரலில் கூற,
“அப்படியா?” என்று அவள் நக்கலாக வினவ,
எரிச்சலையும் கோபத்தையும் மறைத்துக் கொண்டு கிருபாகரன் அதே பாசக் குரலில், “ஆமா டா” என்றார்.
மித்ராணி, “இவ்ளோ பாசம் வச்சிருக்கிற நீங்க ஏன் எங்களோட மனசை புரிஞ்சுக்காம வறட்டு பிடிவாதம் பிடிக்கிறீங்க?”
கிருபாகரமன் பதில் சொல்வதறியாது திணற, மித்ராணி, “கடைசியா ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒருவேளை நீங்க இந்த சிட்டுவேஷனின் இருந்தா என்ன செய்வீங்க? அதாவது நீங்க ஒரு பொண்ணை விரும்பி, அதை உங்க அப்பா ஒத்துக்கலை.. மேலும் அந்த பொண்ணுக்கு வேற ஒருவனுடன் கல்யாணம் முடிவாகிருச்சு.. அப்போ நீங்க என்ன பண்ணுவீங்க?” என்று நிதானமாக வினவ,
கிருபாகரன் அதிர்வுடன் மனைவியை பார்க்க, மல்லிகாவும் இவரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று மல்லிகா கலங்கிய கண்களுடன் எழுந்து வெளியே சென்றுவிட, சில நொடிகள் மௌனமாக இருந்த கிருபாகரன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்து, யாரையும் பார்க்காமல், “நான் வேதாச்சலத்திடம் பேசுறேன்” என்று கூறி வெளியே சென்றுவிட்டார்.
மித்ராணியால் தன் காதுகள் கேட்டதை நம்ப முடியவில்லை. கிருபாகரன் இப்படி சட்டென்று சம்மதிப்பார் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. ‘அப்படி நாம என்ன கேட்டோம்?’ என்று யோசித்து பார்த்தவள், ‘ஒருவேளை அத்தையும் மாமாவும் காதல் கல்யாணம் தானோ! நான் சொன்ன மாதிரி ஒரு சிட்டுவேஷன் இவங்க காதலிலும் வந்து இருக்குமா? அதான் பழசை நினைச்சுப் பார்த்து சட்டுன்னு சரி சொல்லிட்டாரோ?’ என்று நினைத்தவள் அடுத்த நொடியே, ‘அத்தையும் மாமாவும் வாழ்ற வாழ்க்கையை பார்த்தா லவ் மரேஜ் மாதிரியா இருக்குது? தாமரை இலை தண்ணீர் போல ஏதோ ஒட்டாத தன்மை தானே தெரியுது!’ என்று குழம்பியவள், ‘எது எப்படியோ இந்த பஞ்சாயத்து முடிஞ்சு சம்மதம் சொல்லிட்டார்..’ என்று நிம்மதியாக நினைக்கும் முன்பே அவளது மனம் சட்டென்று, ‘இல்லை இதில் ஏதும் உள் குத்து இருக்குமோ?’ என்ற கேள்வியை எழுப்ப, மேலும் குழம்பியவள், ‘இந்த மாமா எப்போதுமே நம்மளை குழம்பிய ஸ்டேட்டிலேயே தான் வைக்கிறார்’ என்று சிறு எரிச்சலுடன் நினைத்தாள். பின் தலையை லேசாக உலுக்கிக் கொண்டு, ‘இப்போதைக்கு வேறு எதையும் யோசிக்காத மித்து’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள் நிமிர்ந்து பார்த்தபோது அந்த அறையில் அவளும் மனோஜும் மட்டுமே இருந்தனர்.
கிருபாகரன் சென்றதுமே பிரசாத்தும் வெளியேறி இருந்தான். மனதின் ஏமாற்றத்தையும் வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் தனிமையை நாடி வெளியேறி இருந்தான்.
கமலா மல்லிகாவை பார்க்க சென்றிருந்தார். மகளின் பேச்சு அண்ணன் அண்ணி மனதில் பழையதை கிளறி விட்டிருக்கும் என்பதை புரிந்துக் கொண்ட கமலா முதலில் அண்ணனை தான் பார்க்க நினைத்தார் ஆனால் அண்ணன் தன்னிடம் இதை பற்றி பேசமாட்டார் என்பதால் மல்லிகாவை பார்க்க சென்றார்.
கமலாவிற்கு அண்ணன் மேல் பாசம் அதிகம் என்றாலும் சிறு வயது முதலே இருவரும் ஒட்டி உறவாடியது கிடையாது. கிருபாகரன் இயல்பில் நல்லவராக தான் இருந்தார். என்ன! மனதை வெளிபடுத்தாத சற்று முரட்டுத்தனும் முன் கோபமும் கொண்டவராக இருந்தார். காதல் சில நேரங்களில் ஒரு மனிதனின் நல்ல குணங்களை மாற்றிவிடும் என்பதற்கு கிருபாகரன் ஒரு எடுத்துக்காட்டு. காதலில் ஜெயிக்க சில திட்டங்களை தீட்டி காதலித்தவளையே கல்யாணம் செய்துக் கொண்டவர் வாழைக்கையில் ஜெயித்தாரா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில். அது தந்த ஏமாற்றத்துடன் பணவெறியும் சேர்ந்துக்கொள்ள நேர்வழி மட்டுமல்லாது கிடைத்த வழியை எல்லாம் பயன்படுத்தி தற்போது இருக்கும் உயர்நிலையை அடைந்தார். தனது செயலால் ஒரு குடும்பமே சிதைந்ததையோ அதற்காக ஒருவன் தன்னை பழிவாங்க காத்திருந்து இப்பொழுது காய் நகர்த்துவதையோ அதனால் தன் மகன்(கள்) மட்டுமல்லாது தங்கையின் மகளும் பாதிக்கப்படுபோவதையோ அவர் அறியவில்லை.
[the_ad id=”6605″]
மனதின் மகிழ்ச்சியை மீறி மனோஜ் மனம் இப்பொழுதும் தவிப்பில் தான் இருந்தது. ‘என்ன பேச? எப்படி பேசி சமாதானம் செய்ய?’ என்ற தயக்கத்துடனும் தவிப்புடனும் மனோஜ் மித்ராணியை நெருங்க, சரியாக அப்பொழுது தான் அவள் தனது சிந்தனையில் இருந்து விட்டுபட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.
மனோஜ் கண்ணில் காதலுடனும் தவிப்புடனும் அவளை பார்க்க, அவளோ அவனை கடுமையாக முறைத்துவிட்டு அன்னையைத் தேடி வெளியே சென்றாள்.
“எப்படி மித்துவை சமாதானம் செய்ய போறேன்?” என்று வாய்விட்டே புலம்பிய மனோஜ் தலையில் கைவைத்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டான்.
கன்னங்களில் கண்ணீர் கோடாக இறங்கியிருக்க, கண்ணில் வெறுமையுடன் சுவற்றை பார்த்துக் கொண்டிருந்த மல்லிகாவை பார்த்த கமலாவின் கண்கள் கலங்கியது.
“அண்ணி” என்று அழைத்தபடி கமலா அந்த அறையின் உள்ளே செல்ல, சட்டென்று கண்ணீரை துடைத்து வரவழைத்துக் கொண்ட மென்னகையுடன் நாத்தனாரை பார்த்த மல்லிகா, “வாங்க அண்ணி” என்றார்.
மல்லிகாவின் கைகளை பற்றிக் கொண்ட கமலா, “சாரி அண்ணி.. மித்ரா பேசியது……….”
“நீங்க சாரி கேட்க இதில் எதுவும் இல்லை அண்ணி.. மித்து சாதாரணமா தான் கேட்டாள்.. விடுங்க”
“அண்ணி.. நீங்க.. அண்ணாவை மன்னிச்சிட்டீங்களா?” என்று தயக்கத்துடனே கேட்டார்.
மல்லிகா மென்னகையுடன், “ரொம்ப சீக்கிரம் கேட்கிறீங்க”
“அது.. இல்ல.. அண்ணி.. நான்” என்று அவர் திணற,
“விடுங்க அண்ணி.. நான் சும்மா தான் சொன்னேன்.. எங்க வாழ்க்கையே முடிய போகுது.. இனி அதை பத்தி பேசி ஆகபோறது ஒன்னுமில்லை”
“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க! வாழ்க்கையில் நீங்க பார்க்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்குது.. மனோ பிரசாத் கல்யாணம்.. பேரன் பேத்திங்க.. அப்பறம் அவங்க கல்யாணம் னு எவ்வளவோ இருக்குது”
மல்லிமா அமைதியாக புன்னகைத்தார்.
கமலா தயக்கத்துடனே, “அண்ணி.. அண்ணா அப்போ பண்ணது தப்பு தான் ஆனா அண்ணா அப்படி நடந்துகிட்டது உங்க மேல உள்ள காதலால் தான்” என்றார்.
“காதல்!” என்று விரக்த்தியாக சிரித்த மல்லிகா, “சில நேரம் எனக்கு இந்த சந்தேகம் வரும்.. உங்க அண்ணா நிஜமாவே என்னை காதலித்து தான் கல்யாணம் செய்துகிட்டாரா இல்லை யாரையும் பழி வாங்க என்னை கல்யாணம் செய்துகிட்டாரா னு”
“என்ன அண்ணி சொல்றீங்க? அண்ணா யாரை பழிவாங்க போறார்? அப்படியெல்லாம் இல்லை.. நீங்க தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காதீங்க” என்று கூறிக் கொண்டிருந்தபோது,
“என்ன கமலா, என்ன சொல்றா உன் அண்ணி?” என்று கேட்டபடி கிருபாகரன் உள்ளே வரவும், மல்லிகா அமைதியாகிவிட, கமலா எழுந்தபடி, “ஒன்னுமில்லை அண்ணா.. சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்றார்.
மனைவியின் முகத்தை பார்த்தபடியே, “அப்படியா?” என்றார்.
அப்பொழுது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த மித்ராணி, “கிளம்பலாமா மா?” என்று வினவினாள்.
“ஹ்ம்ம்.. கிளம்பலாம் டா” என்றவர் மல்லிகாவின் கையை பற்றி சிறு அழுத்தம் கொடுத்து கண்களால், ‘எல்லாம் சரியாகும் அண்ணி’ என்றுவிட்டு வாயால், “நாங்க போயிட்டு வரோம் அண்ணி” என்றார்.
மித்ராணி கிளம்பும் முன் மல்லிகா அருகே வந்து, “அத்தை நீங்க எதுவுமே சொல்லலையே? உங்களுக்கு இதில்…………….”
அவள் கன்னத்தை வருடியவர் மென்னகையுடன், “நீ எனக்கு மருமகளா வருவதில் எனக்கு ரொம்ப சந்தோசம் டா” என்றார் உண்மையான மகிழ்ச்சியுடன். அவருக்கு மித்ராணி மீது தனி பாசம் உண்டு.
அவளும் மென்னகையுடன், “எப்போதும் இப்படியே சிரிச்சுட்டு இருங்க.. இன்னும் அழகா இருப்பீங்க” என்றவள், “ஓகே அத்தை பை.. பை மாமா” என்றுவிட்டு அன்னையுடன் கிளம்பினாள்.
அவர்கள் கிளம்பியதும் மௌனமே அந்த அறையை ஆட்சி செய்தது.
கிருபாகரன் மனதினுள், ‘மகன்கள் கல்யாணத்தை பற்றி பேசியிருக்கிறேனே! என்ன ஏது னு கேட்கிறாளா? அவளா எதுவும் வாய் திறந்து கேட்டிற மாட்டாளே! இத்தனை வருஷம் ஆகியும் என் மனம் இவளுக்கு புரியலையா! உயிர்ப்பே இல்லாம கடமையே னு வாழறாளே!’ என்று மனம் வெதும்பியவர் தன்னை கொல்லாமல் கொல்லும் மனைவின் மௌனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், “வெளியே போயிட்டு வரேன்” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
மல்லிகாவோ, ‘இப்போ கூட மகன்கள் கல்யாணத்தை பற்றி ஏதாவது பேசுறாரா? நான் யார் இவருக்கு? என்னைக்கு தான் என் மனம் அறிந்து இவர் நடந்துக் கொள்வார்? உண்மையிலேயே இவர் என்னை காதலித்து தான் கல்யாணம் செய்துக் கொண்டாரா? ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று எப்பொழுதும் போல் பதில் இல்லா கேள்விகளை தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். வாய் திறந்து இவற்றை கிருபாகரனிடம் கேட்டிருந்தால் இந்தளவிற்கு மன வருத்தம் இருக்காது என்பதை யார் இவருக்கு சொல்லி புரியவைப்பது!
————————————————————————————————————————————————–
வெற்றிவேல், “உன் வருங்கால கணவர் பெயர் வெற்றிவேல் னு இருந்தால் ஓகே யா?” என்று கேட்டதும் மாலினி சில நொடிகள் அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றுவிட்டாள்.
கிருஷ்ணமூர்த்தி இதை எதிர்பார்த்திருந்ததால் அதிர்ச்சி அடையவில்லை என்றாலும் மனதினுள், ‘யாரும் இப்படி ப்ரொபோஸ் பண்ணியிருக்க மாட்டாங்க’ என்று நினைத்தான்.
வெற்றிவேல் மாறாத புன்னகையுடன், “என்ன ஓகே யா?” என்று கேட்டதும் தான் மாலினி சுயம் பெற்றாள்.
வெற்றிவேல் மீது பெரும் மதிப்பு கொண்டவள் சட்டென்று கோபம் கொண்டோ அவனை வருத்தும் படியோ எதையும் சொல்ல விரும்பாமல், “என்ன ACP சார் வேட்டையாடு விளையாடு ராகவன் மாதிரி கண்டதும் காதலா?” என்று மென்னகையுடனே வினவினாள்.
யாழினி திரைப்படத்தில் வரும் காவல் அதிகாரிகளுடன் தன்னை ஒப்பிடும் போது சட்டென்று கோபம் கொள்பவன் இன்று மென்னகையுடன், “நாம இன்னைக்கு தான் முதல் முறையா பார்க்கிறோமா?” என்று வினவினான்.
அவள், “இல்லை தான்.. ஆனா.. இன்னைக்கு பார்த்த கொஞ்ச நேரத்தில் இப்படி கேட்டதும் சட்டுன்னு அது தான் நியாபகம் வந்தது”
“பார்த்ததும் காதல் னு சொல்ல முடியாது ஆனால் பார்த்த அன்றே என் மனதினுள் நுழைஞ்சிட்ட.. அண்ட் உடனே கல்யாணத்தை பற்றி பேசலை.. உன் படிப்பு முடிறதுக்காக வெயிட் பண்ணி நாலு வருஷம் கழிச்சு இப்போ தான் கேட்கிறேன்” என்றதும் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
மற்றவர்கள் தப்பாக நினைக்கக் கூடாதே என்ற எண்ணத்தில் இவர்கள் அருகிலேயே நின்றுக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்திக்கும் இது அதிர்ச்சியாக தான் இருந்தது.
தன்னவளின் விழி மொழியை ரசித்தபடியே வெற்றிவேல் மென்னகையுடன், “இன்னும் நீ பதிலை சொல்லலை” என்றான்.
‘ஒரே ஒரு முறை சந்தித்து பேசிய என்னை நாலு வருஷமா லவ் பண்றாரா?’ என்ற அதிர்ச்சியிலிருந்து முழுதாக வெளிவராதவள் தன் பதிலுக்காக அவன் காத்திருப்பதை உணர்ந்து, “நான் இதை உங்களிடம் எதிர்பார்க்கலை.. உங்களை மறந்ததிற்காக சாரி கேட்டுட்டு, ஏன் இந்த கண்டுபிடி விளையாட்டு னு கேட்டுட்டு போக தான் வந்தேன்” என்றாள்.
“எதிர்பார்க்காதது நடப்பதில் தானே வாழ்க்கையின் சுவாரசியமே அடங்கி இருக்குது!”
“இருக்கலாம்.. ஆனா.. சாரி டு சே திஸ்.. எனக்கு உங்க மேல் அப்படி ஒரு எண்ணம் இல்லை”
“இப்போ இல்லை.. இனிமேல் வரலாமே?”
“ப்ளீஸ் சார்.. உங்க மேல மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கிறேன்…………..”
“எனக்கு உன்னிடமிருந்து அது தேவை இல்லையே” என்றவன், “காதலை வற்புறுத்தி வரவைக்க முடியாது.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு”
“என்ன?”
“சப்போஸ் உன் அப்பா உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை நானாக இருந்தால் உனக்கு ஓகே வா?”
“என்ன?” என்று அவள் மீண்டும் அதிர்ச்சியுடன் வினவினாள்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
