ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 12
பிடித்தம் 12
அன்று சிறிது நேரம் கழித்து ராகுல் பிரசாத்தை அழைத்த போது பிரசாத் தான் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாகவும், இன்னும் தன் காதலை அந்த பெண்ணிடம் கூறவில்லை என்றும் கூறியவன் ராகுல் அந்த பெண் யாரென்று கேட்டதிற்கு தன் காதலை அந்த பெண் ஏற்றுக் கொண்ட பிறகு அவள் யாரென்று சொல்வதாக கூறி ராகுலை சமாளித்தான். ராகுலும் மனதை தேற்றிக் கொண்டு நண்பனின் காதல் வெற்றிப் பெற வாழ்த்தி அழைப்பைத் துண்டித்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்த என்று பிரசாத் தீவிர யோசனையில் இருக்க, மனோஜோ மித்ராணியை சமாதானம் செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.
Advertisement
ஆம்.. மித்ராணி மனோஜை முற்றிலும் தவிர்த்தாள். மனோஜின் முகத்தை பார்க்க கூட மறுத்தவள், அவனது கைபேசி அழைப்புகளை எடுப்பது இல்லை. அவன் அவளது வீட்டிற்கு சென்றால் கதவை மூடிக் கொண்டு தனது அறையினுள் அடைந்து கிடப்பவள் அவன் கிளம்பிய பிறகே அறையை விட்டு வெளியே வருவாள். அவனிற்காக பேச வரும் அன்னையை ‘எங்களுக்கு நடுவில் நீ வராதே’ என்று தீர்க்கமாக கூறி தள்ளி நிறுத்தினாள்.
Advertisement
இவளை அணுக முடியாமல் திண்டாடியவன் ஒரு முடிவுடன் அவளது ஆடை தொழிலகத்திற்கு சென்றான். அதே நேரத்தில் பிரசாத்தும் மித்ராணியிடம் பேசும் எண்ணத்துடன் அங்கே தான் வந்து கொண்டிருந்தான்.
Advertisement
மனோஜ் வருவதை வலை படவி(WEB CAMERA) மூலம் பார்த்த மித்ராணி இன்டர்காம் மூலம் நிவேதாவை அழைத்தாள்.
Advertisement
நிவேதா அழைப்பை எடுத்ததும், “மனோ வரான்.. அவனை நான் இப்போ பார்க்க விரும்பலை னு சொல்லி அனுப்பிடு” என்றாள்.
“என்னாச்சு மித்து?”
“சொன்னதை செய்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
‘என்ன பிரச்சனையோ!’ என்று தோழிக்காக வருந்திய நிவேதா சரியாக மனோஜ் மித்ராணியின் அறை கதவில் கை வைக்கும் நேரம் அவன் அருகே சென்று, “உங்களை பார்க்க விரும்பலை னு மேடம் சொல்லச் சொன்னாங்க சார்” என்றாள்.
மனோஜ் சிறு ஆச்சரியத்துடன், “நீங்.. நீ நிவேதா தானே! நீ எப்போ இங்கே வேலையில் சேர்ந்த?”
தன்னை அவன் நியாபகம் வைத்திருப்பதை எண்ணி ஒரு நொடி சிறு ஆச்சரிய பார்வை பார்த்தவள் பின், “ரெண்டு வாரம் ஆச்சு” என்றாள்.
[the_ad id=”6605″]
“ஓ! எப்படி போகுது உன் மரேஜ் லைஃப்?”
“நல்லா போகுது”
“என்னாச்சு ரெண்டு வார்த்தையில் பதில் சொல்லிட்டு இருக்கிற?”
“மித்ரா உங்க மேல கோபத்தில் இருக்கா”
“அதுக்கு நான் தானே கவலைப் படனும்?”
“உங்களை இப்போ உள்ளே விடக் கூடாது னு சொல்லி இருக்கா”
“நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே செல்ல, அவளும் சிறு பதற்றத்துடன் அவன் பின்னே சென்றாள்.
கதவை திறந்து உள்ளே வந்தவனை பார்க்காமல் அவன் பின்னால் நின்றிருந்த நிவேதாவை முறைத்தாள் அவள்.
நிவேதா, “நான் சொன்னேன்.. அவர் கேட்கலை” என்று கூற,
மனோஜ், “நான் தான் உள்ளே வந்தேன்.. நிவேதா மேல் கோபப் படாதே” என்று கூறினான்.
அவளோ அவனை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் காதில் கைபேசியின் செவிப்பொறியை மாட்டி பாடலை ஒலிக்கவிட்டு தனது வேலையை தொடர்ந்தாள்.
செவிப்பொறியை பிடுங்கிய மனோஜ், “ப்ளீஸ் மித்து நான் சொல்றதை கேளு” என்று கெஞ்சினான்.
அவளோ கோபத்துடன், “வேணாம் மனோ.. இப்போ என்னை பேச வைக்காத.. அது உனக்கு தான் நல்லதில்லை” என்று எச்சரிக்கும் குரலில் கூறினாள்.
அவனோ அதை கண்டுக் கொல்லாமல், “ப்ளீஸ் மித்து புரிஞ்சுக்கோ.. நான் அப்பாவுக்கு பயந்து அமைதியா இல்லை.. எப்படி பேசுறது னு யோசிச்சிட்டு இருந்தேன்.. நீ சொல்லலைனா நானே சொல்லி இருப்……………”
அவள் கோபத்துடன், “எப்போ? எனக்கும் உன் தம்பிக்கும் கல்யாணம் முடிந்த பிறகா?”
“இல்லை மித்து.. நான்……………”
“நீ சொல்ற சமாதானம் உண்மை இல்லை னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.. மேலும் மேலும் பொய் சொல்லாத.. எனக்கு அதை கேட்டு கோபம் கூடத் தான் செய்யும்…………”
“இல்லை மித்து……………..”
“இதோ பார்.. உன் காதலை ஏற்று உன்னை கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னதாலும், உன்னை கல்யாணம் செய்ய ஒத்துகிட்டு உன் தம்பியை கல்யாணம் செய்துக்க என் மனம் இடம் கொடுக்காததாலும் மட்டுமே நான் போராடினேன்.. மத்தபடி உன் மேல் எனக்கு விருப்பம் இல்லை.. என்ன பார்க்கிற? காதலிற்கோ கல்யாணத்திற்கோ அடிப்படை நம்பிக்கை.. அதை நீ உடைச்சிட்ட.. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நீ என்னை கை விட மாட்ட அப்டிங்கிற நம்பிக்கையை எப்போ நீ எனக்கு தரியோ அப்போ நானே உன்னிடம் பேசுறேன்.. இப்போ உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம நீ கிளம்பு” என்றாள்.
அவன் அடிபட்ட பார்வை பார்க்க அவளோ எரிச்சலுடனும் கோபத்துடனும், “நீ தந்த வலியை விட இது ஒன்னும் பெருசு இல்லை.. அதுவும் நான் உனக்கு வலியை தரலை.. ஜஸ்ட் நீ செய்ததை விளக்கினேன்” என்றவள், “இப்போ நீ கிளம்பலை நான் வெளியே போய்டுவேன்” என்றதும் மனோஜ் வேதனையுடன் கிளம்பினான்.
[the_ad id=”6605″]
மித்ராணி பேசியதை அவளது அறை வாயிலில் இருந்து கேட்ட பிரசாத் அவளிடம் பேசும் எண்ணத்தை கை விட்டவனாக கிளம்பியதை இவர்கள் யாரும் அறியவில்லை.
மனோஜ் சென்றதும் தன்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த நிவேதாவை பார்த்து, “உனக்கு வேற தனியா சொல்லனுமா? போ.. போய் வேலையை பார்” என்றாள் கோபத்துடன் கத்தினாள்.
மித்ராணியின் பேச்சில் இருந்து அவளது மனதை அறிந்துக் கொண்ட நிவேதா அவளது நல்வாழ்விற்காக மனதினுள் இறைவனிடம் வேண்டியபடி வெளியே சென்றாள்.
அன்று காலையில் புகழ்வேந்தன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த போது சதீஷ் அவனை கைபேசியில் அழைத்தான்.
புகழ்வேந்தன் யோசனையுடன் அழைப்பை எடுத்தான். ஏனெனில் ரொம்ப முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே இந்த நேரத்தில் சதீஷ் அழைப்பான்.
புகழ்வேந்தன் அழைப்பை எடுத்ததும் சதீஷ், “குட் மார்னிங் பாஸ்” என்றான்.
புகழ்வேந்தன், “குட் மார்னிங்.. என்ன விஷயம்?”
“ஒரு வாரத்தில் மனோஜ் கல்யாணத்தை முடிவு பண்ணி இருக்காங்க” என்று சிறு பரபரப்புடன் கூற,
புகழ்வேந்தானோ அலட்டிக் கொள்ளாமல் நிதான குரலில், “உனக்கு எப்படி தெரியும்?” என்று வினவினான்.
“நம்ம கல்யாண மண்டபத்தை தான் பிக்ஸ் பண்ணி இருக்கிறாங்க”
வாய் விட்டு சிரித்த புகழ்வேந்தன், “ஸோ கடவுளே என் பக்கம் தான் இருக்கார்” என்றான்.
சதீஷ் அமைதியாக இருக்க புகழ்வேந்தன், “ஓகே ஆபீஸில் பார்க்கலாம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
ஆம்.. இன்னும் ஒரு வாரத்தில் மனோஜ் மித்ராணி கல்யாணம். பிரசாத் ஏதும் செய்வதற்கு முன் இவர்கள் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்பதற்காக முதல் முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார் கிருபாகரன். இதை இன்னும் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. நேற்று மாலையில் தான் கல்யாண மண்டபத்தை பதிவு செய்து பத்திரிக்கை அடிக்க அச்சகத்தில் கொடுத்து இருக்கிறார். இன்று மாலை தான் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல நினைத்திருக்கிறார்.
புகழ்வேந்தன் அழைப்பை துண்டித்ததும் சதீஷ், ‘நமக்கு தான் என்ன நடக்க போகுதோ! னு பக்கு பக்கு னு இருக்குது.. ஆனா இந்த பாஸ் எவ்ளோ கூல் ஆ இருக்கிறார்!
என்ன செய்ய போறார் னு தெரியலையே! எப்போதும் ஏதாவது சின்ன ஹின்ட்டாவது கிடைக்கும்’ என்று தனக்கு தானே புலம்ப, அவனது மனசாட்சியோ, ‘ஆமா அந்த ஹின்ட்டை வச்சு அப்படியே கண்டு பிடிச்சிடுவ!’ என்று அவனை கேலி செய்ய,
அவனோ, ‘அட்லீஸ்ட் பாஸ் அந்த விதயத்தை முடிக்கும் நேரத்தில் இதை தான் செய்ய போறார் னு கெஸ் பண்ணுவேனே! அதுவே எவ்ளோ பெரிய விஷயம்!’ என்று மனசாட்சியை அடக்கியவன், ‘ஆனா இந்த முறை ஒன்னுமே தெரியலை.. எங்கெங்கே ஸ்பை வச்சிருக்கிறார் னு கூட தெரியலை..’ என்றான்.
பிறகு, ‘இது பெர்சனல் விஷயம் னு ரொம்ப ரகசியமா செய்றார் போல.. சரி இப்போ வேலையை பார்ப்போம்.. ஒரு வாரத்தில் பாஸ் கல்யாணம் வேற இருக்குது!’ என்று கூறி வேலைகளை செய்யத் தொடங்கினான்.
சதீஷிடம் பேசிய பிறகு வேகமாக கிளம்பி கீழே வந்த புகழ்வேந்தன் வீட்டு கூடத்தில் மாட்டி இருந்த ஆள் உயர படத்தை உணர்ச்சியற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது விழிகள் உணர்ச்சியை துறந்து இருந்தாலும் அவனது மனமோ மலர் மாலை போடப்பட்டிருந்த அந்த ஆள் உயர சட்டத்தினுள் கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்த தந்தை ராமனிடம் மானசீகமாக பேசிக் கொண்டிருந்தது.
‘நான் செய்துட்டு இருக்கிறதில், இந்த கல்யாண விஷயம் உங்களுக்கு விருப்பம் இருக்காது னு எனக்கு தெரியும்.. எனக்கு நியாயமா படுற இந்த கல்யாணம் ராணியை பொறுத்தவரை அநியாயம் னு புரியுது ஆனா என்னால் இதை செய்யாமல் இருக்க முடியலை.. ஒரு மனம் இது தப்பு னு சொல்லுது ஆனா நம் குடும்பத்தை காவு வாங்கியவனை சும்மா விடுறதா னு இன்னொரு மனம் கொந்தளிக்குதே! வினை விதைத்தவன் வினை அறுப்பான் னு சொல்றதை போல் அவனோட பசங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை சரி தான்.. ஆனா ராணி!’ என்று கூறி நிறுத்தியவன் பெருமூச்சை வெளியிட்டு திரும்பிய போது அவனையே பார்த்தபடி அவனது அன்னை கலைவாணி நின்றுக் கொண்டிருந்தார்.
புகழ்வேந்தன் மென்னகையுடன், “குட் மார்னிங் மா.. என்ன அப்படி பார்க்கிறீங்க? உங்க பையன் அழகா இருக்கிறேனா?” என்று கேட்டு கண்சிமிட்டினான்.
கலைவாணி மகனை ஆச்சரியத்துடன் பார்த்தார். புகழ்வேந்தன் சிறு வயதில் குறும்புத்தனம் நிறைந்தவனாக தான் இருந்தான். அவனுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே பேச்சற்று ஒரு கையும் ஒரு காலும் விளங்காத நிலையில் படுத்த படுக்கையாக இருந்த அவனது தந்தை ராமன் அவனது பத்து வயதில் வானுலகம் சேர்ந்தார். இருப்பினும் குடும்பத்தின் சோகத்தை வெளியே காட்டாது கேலியும் கிண்டலுமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தவன் தான். சிரிக்கும் போது எதிரில் இருப்பவரையும் சிரிக்க அழைக்கும் அவனது விழிகள் சில வருடங்களாக உயிர்ப்பை இழந்திருந்தது. என்று தனது குடும்பம் சிதைந்ததிற்கான காரணத்தை அறிந்துக் கொண்டானோ அன்றில் இருந்து ஒரு இறுக்கம் அவனை வந்து ஒட்டிக் கொண்டது. அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவனது அன்னையே கண்டுபிடிக்க முடியாதபடி தன்னை தானே செதுக்கிக் கொண்டவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எப்படி உயர் நிலையை அடைவது என்று தொழில் ரீதியான திட்டங்களை தீட்டத் தொடங்கினான். படித்து முடித்ததும் வெறியுடன் நேர் வழியில் உழைத்து இந்த உயர் நிலையை அடைந்திருக்கிறான்.
மகனின் உயர்வில் கலைவாணிக்கு மகிழ்ச்சியே என்றாலும் மகனை குறித்த கவலை சில ஆண்டுகளாக அவரை அரித்துக் கொண்டு இருக்கிறது. அதுவும் தான் தான் தேவையில்லாமல் சில உண்மைகளை கூறி மகனின் இயல்பை மாற்றிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி வேறு அவரை வதைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சில நேரங்களில் அவன் சிரித்தாலும் அவன் விழிகளை அந்த சிரிப்பு எட்டியதில்லை ஆனால் இன்று சற்றே அவனது விழிகள் உயிர் பெறத் தொடங்கியது போல் அவனது அன்னைக்கு தோன்றியது. அவனது விழிகள் உயிர் பெற தொடங்கியதின் காரணம் கிருபாகரனை வெல்ல போகும் தருணத்தை நினைத்தா அல்லது அவனது அல்லி ராணியை நினைத்தா என்பது அவனது ஆழ்மனம் மட்டுமே அறிந்த உண்மை.
[the_ad id=”6605″]
அன்னையின் ஆச்சரிய பார்வையைக் கண்டு, விரிந்த புன்னகையுடன், “என்ன மா?” என்றான்.
அவர் சிறிது கலங்கிய விழிகளுடன் அவனது கன்னம் வருடி, “எப்போதும் இப்படியே சந்தோஷமா இரு ராஜா” என்றார்.
“எப்படி இப்படியே முரட்டு சிங்கிளா வா?”
அவர் புரியாமல் பார்க்கவும் அவரது இரு தோள்களிலும் கை வைத்து அவரை சோபாவில் அமர செய்தவன், “நம்ம ரெண்டு பேருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு? னு கேட்பீங்களே! இந்த வீட்டை நிறைக்கும் வேலையில் இறங்கலாம் னு இருக்கிறேன்” என்று அவன் கூற,
அவனது மனசாட்சியோ, ‘முத்தல்ல உன்னோட அல்லி ராணியை சமாதானம் செய்யோணும்! அப்பறம் அவ மனசில் இடம் பிடிக்கோணும்! அப்பறம் அவளை நெருங்கி அஸ்திவாரம் போடோணும்.. அப்பறம் தான் வீட்டை நிறைக்க முடியும்’ என்று நடிகர் பொன்னம்பலம் போல் அவனை நக்கல் செய்தது.
மனசாட்சி கூறியதை புறம் தள்ளியவன் அன்னையை பார்த்தான்.
அவரோ, “என்ன டா சொல்ற?” என்றார்.
அவன், “நீங்க அடிக்கடி கேட்கிறதை நிறைவேத்தலாம் னு முடிவு பண்ணியிருக்கிறேன்”
அவர் ஆனந்த பரபரப்புடன், “பொண்ணு பார்க்கவா ராஜா?” என்றார் ஆவலே உருவாக.
அன்னையின் மகிழ்ச்சியில் ஒரு புறம் நெகிழ்ந்தாலும் ஒரு புறம் குற்ற உணர்ச்சியும் எழுந்தது. அவனது குற்ற உணர்ச்சியின் காரணம் தன்னை மட்டுமே உலகமாக நினைக்கும் அன்னை கேட்டதை இத்தனை நாட்கள் நிறைவேற்றாதது மற்றும் மித்ராணியை கல்யாணம் செய்துக் கொள்ள அவன் தேர்ந்தெடுத்து இருக்கும் வழி.
அன்னையை தனது அலுவலக அறைக்கு அழைத்து சென்றவன் அவரை இருக்கையில் அமர செய்து, “பொண்ணு நானே பார்த்துட்டேன் மா” என்றவன் சிறு தயக்கத்துடன் நிறுத்தி அன்னை முகத்தை பார்த்தான்.
அவரோ மகிழ்ச்சியுடன், “பொண்ணு பெயர் என்ன? போட்டோ வச்சிருக்கியா?” என்றார்.
மென்னகையுடன், “உங்க மருமக பெயர் மித்ராணி” என்றவன் தனது கைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தை கட்டினான். மித்ராணி பற்றி நினைக்க தொடங்கியதும் அவனது உதட்டோரம் மென்னகை ஒட்டிக் கொள்வதை அவன் உணரவே இல்லை. எந்த பெண்ணையும் திரும்பி பார்க்காதவனின் மனதை மித்ராணி அசைத்திருப்பதை உணரவிடாமல் அவனது பழி உணர்ச்சி தடுத்ததோ! இந்த கல்யாணம் கிருபாகரனை பழி வாங்கத் தான் என்றாலும், மித்ராணியை பற்றி அறிவதற்கு முன்பே இந்த கல்யாண திட்டத்தை போட்டிருந்தாலும், அது வலு பெற்றது அவனது ஆழ் மனதில் மித்ராணி ஏற்படுத்திய சலனத்தால் தான் என்பதை என்று உணர்வானோ!
புகைப்படத்தை ஆசையுடன் பார்த்த கலைவாணி, “ரொம்ப அழகா இருக்கா டா.. உங்க ஜோடி பொருத்தம் அருமையா இருக்கும்” என்றவர் “மித்ராணி அப்பா என்ன பண்றார்? என்னைக்கு அம்மா போய் பேசட்டும்?” என்று வினவினார்.
புகைப்படத்தை பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தவர் மகனிடம் பதில் இல்லை என்றதும் நிமிர்ந்து பார்த்தார்.
இத்தனை நேரம் இருந்த இதம் சிறிதும் இன்றி கல் போல் இறுகி இருந்தது அவனது முகம்.
கலைவாணி அவனது கையை பற்றி, “புகழ் என்னாச்சு?” என்றார்.
அவன் இறுகிய குரலில், “என்னை மன்னிச்சிடுங்க மா.. நான் இப்போ சொல்லப்போறதை கேட்டா உங்களுக்கு கஷ்டமா இருக்கும் ஆனா என் முடிவில் மாற்றம் இல்லை.. மித்ராணி கிருபாகரனோட தங்கச்சி மகள்………….”
“அவர் செய்த தப்புக்கு மித்ராணி என்ன செய்வா? அம்மா சம்மதிக்க மாட்டேன் னு நினைத்து தான் இந்த டென்ஷனா? உன் சந்தோஷத்தை தவிர வேறு என்ன வேண்டும் அம்மாக்கு?” என்றார் புன்னகையுடன் அவனது கையைப் பற்றி.
சில நொடிகள் அமைதியாக அன்னையை பார்த்தவன் பின் சுவற்றை பார்த்தபடி அதே இறுகிய குரலில், “அம்மா நான் பேசி முடிக்கிறவரை நடுவில் பேசாதீங்க ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நாள் கழித்து தான் இதை பத்தி பேசணும் னு நினைத்தேன் ஆனா இப்போ பேச வேண்டிய சூழ்நிலை.. என் மனைவியா மித்ராணியை நான் முடிவு பண்ணியிருக்கிறேன் ஆனா நானும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பலை.. அவ என்னை நேரில் பார்த்தது கூட கிடையாது.. இன்னும் ஒரு வாரத்தில் கிருபாகரன் மூத்த மகன் மனோஜுக்கும் மித்ராணிக்கும் கல்யாணம் நடத்த நம்ம கல்யாண மண்டபத்தை நேத்து தான் புக் பண்ணி இருக்கிறாங்க.. ஆனா அன்னைக்கு நடக்க போறது என்னோட கல்யாணம்.. அதாவது எனக்கும் மித்ராணிக்கும்………………..”
“புகழ்” என்று அதிர்ச்சியுடன் அலறிய கலைவாணி எழுந்தே நின்றுவிட்டார்.
அன்னையின் நிலையை கண்டு உள்ளுக்குள் வருத்தம் எழுந்தாலும் வெளியே இறுகிய குரலில், “இன்னும் ஒரு வாரத்தில் எனக்கும் மித்ராணிக்கும் கல்யாணம் நடக்கும்” என்று அவன் கூறி முடிக்கும் முன் கலைவாணி கோபத்துடன் அவன் கன்னத்தில் அறைந்து இருந்தார்.
அவன் மேலும் இறுகிய குரலில், “என் முடிவில் மாற்றம் இல்லை மா” என்றான்.
‘நிச்சயம் செய்து முடிப்பேன்’ என்ற அவனின் இந்த குரல் அவரை கலவரப் படுத்தியது. அவர் கோபத்தை கை விட்டவராக கலங்கிய குரலில், “இது வேண்டாம் புகழ்.. உன்னோட பழி வெறியில் ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்காத”
“என்னை கல்யாணம் செய்தால் அந்த பொண்ணோட வாழ்க்கை அழியுமா மா?”
“உன் மனதில் பழி வெறி தானே இருக்குது” என்றார் தவிப்புடன்.
அவரை அடிபட்ட பார்வை பார்த்தவன், “இந்த கல்யாணத்தின் மூலம் அவனுக்கு தண்டனை தரேன் தான்.. அதுக்காக என்னோட ராணியை நான் காயப்படுத்துவேனா மா?” என்று ஆற்றாமையுடன் வினவினான். ‘நீ என்னை புரிந்துக் கொள்ளவில்லையே’ என்ற ஆற்றாமை அது.
‘என்னோட ராணி’ என்று கூறியதையோ அப்படி கூறிய போது அவன் குரலில் இருந்த உரிமையையும் அவன் இப்பொழுதும் உணரவே இல்லை ஆனால் அதை கலைவாணி கவனித்தார். மகனின் மனதை புரிந்துக் கொண்டாலும் அவர் மித்ராணிக்காக தான் பேசினார்.
அவர், “மித்ராணி மனதில் நீ இல்லையே! அவ…………………”
“அவ மனதில் இடம் பிடித்து, என் வாழ்க்கையை எப்படி நேர் செய்றது னு எனக்கு தெரியும் மா.. அதை பற்றி நீங்க கவலைப்படாதீங்க.. நீங்க என்ன சொன்னாலும் என் முடிவில் மாற்றம் இல்லை”
சில நொடிகள் மௌனத்தில் கழிய, “நீங்க ராணி வாழ்க்கைக்காக பேசுறதை கேட்டு பெருமையா இருக்குது மா..” என்றவன் அவன் அன்னை மனம் வருந்த கூடாது என்பதற்காக அடுத்து பொய் கூறினான்.
அவன், “ஆனா நீங்க போராட தேவையே இல்லை மா.. ஏன் னா ராணி மனதில் யாரும் இல்லை.. அவ மனோஜை விரும்பலை.. ஸோ என்னை கல்யாணம் செய்றதால் அவ வாழ்க்கை அழியாது” என்றான்.
உண்மையிலேயே மித்ராணி மனதில் யாரும் இல்லை தான் ஆனால் அது அவனுக்கு தெரியாதே! அதனால் அவனை பொறுத்தவரை மித்ராணி மனதை பற்றி அவன் கூறியது பொய்.
அவனது அன்னை, “உன்னிடம் இந்த ஆணாதிக்கத்தை நான் எதிர்பார்க்கலை”
“அம்மா!”
“பின்ன நீ பண்றதுக்கு பெயர் என்ன? அவ மனோஜை விரும்பலைனா உன்னை விரும்பிடுவாளா? அதுவும் அவளோட கல்யாணத்தை நிறுத்தி உன்னை கல்யாணம் செய்ய சொன்னதும் அவ உடனே சரி சொல்லி உன்னை விரும்பிடுவாளா? அவ உயிருள்ள மனுஷியா பொம்மையா? அவளுக்கு னு ஒரு மனம் இருக்காதா?” என்றார் கோபத்துடன்.
[the_ad id=”6605″]
அன்னையின் கூற்று சாட்டை அடியாய் அவனது கர்வத்தை அழித்ததோடு அவனது செயல் தவறு என்று சுட்டிக் காட்டியது தான் இருப்பினும் அவனால் பின் வாங்க முடியவில்லை. பழிவாங்கலையும் மீறி ஏதோ ஒரு விசை அவனை செலுத்தியது ஆனால் அது என்னவென்று ஆராயும் நிலையில் இப்பொழுது அவன் இல்லை.
தன்னை தானே சமாதானம் செய்தவன் அன்னையை தேற்றும் நோக்கத்தில், “நீ சொல்றதெல்லாம் சரி தான் மா.. அதுவும் உன் மருமகள் சண்டிராணி தான்.. முதலில் என் கல்யாண வாழ்க்கை போர்களமா தான் இருக்கும் ஆனா நிச்சயம் அதை நான் சரி செஞ்சிருவேன்” என்றான் உறுதியான குரலில்.
“இப்படி ஒரு கல்யாணம் தேவையா?”
“நிச்சயம் தேவை” என்றான் இறுகிய குரலில்.
“எனக்கு இதில் துளி கூட விருப்பம் இல்லை”
“நாம இழந்ததை நினைத்துப் பாருங்க”
“அதுக்காக தெரிந்தே ஒரு பொண்ணோட மனதை கஷ்டபடுத்த என்னால் முடியாது”
அவரை ஆழ்ந்து நோக்கியவன், “எனக்கு கல்யாணம் னு ஒன்னு நடந்தால் அது மித்ராணி கூட மட்டுமே.. இந்த கல்யாணம் நடக்கலைனா என்னைக்குமே நான் உங்க மகன் மட்டும் தான்”
“புகழ்” என்று அவர் தவிப்புடன் அழைத்து, “பழி வாங்குறதால் உனக்கு எதுவும் கிடைக்க போறதில்லை……….”
“நான் பழி வாங்கலை.. அவன் செய்ததிற்கு தண்டனை கொடுக்கிறேன்”
“அதை கடவுள் பார்த்துப்பார்.. நீ………..”
“கடவுள் தான் என் மூலமா தண்டனை தரார்”
“இது வேணாம் புகழ்”
“நீங்க வேணா அன்னை தெரசா வா இருங்க.. என்னால் அப்படி இருக்க முடியாது.. நம்ம குடும்பத்தோட ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அழித்தவனை என்னால் மன்னிக்க முடியாது.. எத்தனை இழப்பு! அப்பா கண்ணில் பாசத்தை விட வேதனையை தான் அதிகமா நான் பார்த்திருக்கிறேன்.. அப்பா பாசத்துக்காக நான் எவ்ளோ ஏங்கினேன் னு உங்களுக்கு சொன்னா புரியாது மா.. இயற்கையா நடந்திருந்தால் அது வேறு ஆனா” என்று கூறி நிறுத்தியவனின் விழிகள் ரௌத்திரத்தில் தீயாக ஜொலித்தது. அந்த நிலையில் அவனை பார்க்க கலைவாணிக்கே சற்று பயமாக இருந்தது.
இனி பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த கலைவாணி, “இதுக்கு மேல நான் சொல்ல எதுவும் இல்லை.. உன் இஷ்டம்” என்று இறங்கிய குரலில் கூறி வெளியே சென்றவர் நேராக பூஜை அறைக்கு சென்று கடவுளிடம் தஞ்சமடைந்தார்.
அன்னை வெளியே சென்றதும் சில நொடிகள் கண்களை மூடி அமர்ந்திருந்தவன் பின் எழுந்து அலுவலகத்திற்கு சென்று விட்டான்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
