Skip to content
Post Views: 13,290
அத்தியாயம் 4
முல்லைக்கும் மனதினுள் தாளமுடியாத வேதனைதான். ஆனால் ரங்கசாமியின் மனக்குமறல் விபரீதத்தை உண்டாக்கிடுமோ என்ற அச்சத்தில் தந்தையை தேற்றிக்கொண்டிருந்தாள்.
முல்லையின் படிப்பு முடிந்து இருபதுநாள் முடிந்திருந்தது. கேம்ப்பஸில் தேர்வான வேலைக்கு செல்ல வேண்டாம் என ரங்கசாமி சொல்ல, வயதான தாய் தந்தையை விடுத்து செல்ல முல்லைக்கும் மனமில்லாமல் போக, வேலைக்கு செல்லும் எண்ணத்தை விட்டுருந்தாள்.
வனிதாவின் இரட்டை மகன்களில் ஒருவனான சதீசுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆனால் பார்க்கும் பெண்களை எல்லாம் நிதீஷ் மறுத்துவிட, எந்த பெண்ணை பார்த்தாலும் எதாவது குறை கண்டுபிடித்தான். எனக்கும் எழுபத்தி ஏழு வயசாகுது, உனக்கும் முப்பதிரண்டு வயசாச்சு. இனி பொண்ணு தேட என்னால முடியாது. பேசாம முல்லையை கட்டிக்க. சொத்தாவது மிஞ்சும். உன் பேச்சை மீறாம இருப்பா’ என்று மகனிடம் சொல்ல, நிதீசும் சம்மதம் தெரிவித்தான்.
Advertisement
மகளின் பரிட்சை முடிந்த பின்னே தரகர் சொன்ன வரனைப் பற்றி சொல்லலாம் என நினைத்திருந்த ரங்கசாமி இன்று வௌளிக்கிழமை. நல்லநாள். மகளிடம் திருமணம் பற்றி பேசும் எண்ணத்திலிருந்தார்.
ஆனால் கல்லூரிக்கு செல்லும் வேலையும் இல்லை என்பதால் இரவு படம் பார்த்துவிட்டு உறங்கிய முல்லை ஒன்பது மணியாகியும் இன்னும் எழவில்லை.
மகள் எப்பொழுது வருவாள் என ரங்கசாமி ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்க, கணவன், பெரியமகன், மருமகள், சின்ன மகனோடும் வனிதா வந்தார் பூ மற்றும் பழத் தட்டோடு.
Advertisement
“வாக்கா… நிதிஷ்க்கு பொண்ணு அமைஞ்சிடுச்சா? குடும்பத்தோட இவ்வளோ நேரத்துக்கு வந்திருக்க” என மகிழ்வோடு வரவேற்றார் ரங்கசாமி.
Advertisement
“எல்லாம் நல்ல விசயம்தான். அதான் நல்ல நேரத்துல வந்திருக்கோம்” என்றவர் “எங்க முல்லையைக் காணோம்?” என்றார் உரிமையாக.
எப்பொழுது வந்தாலும் மகளைக் கண்டு கொள்ளாதவர் இன்று நல்ல விசயம் சொல்ல முல்லையை தேடுவது அதிசயத்திலும் அதிசயமாக இருக்க, வியப்பை உள்ளடக்கி, “நைட் ரொம்ப நேரம் டிவி பார்த்துட்டிருந்துச்சாம். இன்னும் எழுந்துக்கல” என்றார் ரங்கசாமி.
“கல்யாணம் செய்து குடும்பத்தை தூக்கி நிறுத்துல புள்ள இவ்வளோ நேரம் தூங்கலாமா? எழுப்பு ஜானகி” என்றார்.
Advertisement
“முல்லை வரது இருக்கட்டும். நீ வந்த நல்ல விசயத்தை சொல்லுக்கா. பொண்ணு யாரு? இந்த பொண்ணாவது நிதீஷ்க்கு பிடிச்சதா? இல்ல உன் பிடிவாதத்துக்கு சம்மதிச்சானா?” என்றார் ரங்கசாமி.
“இவன் எங்க சம்மதிச்சான். எல்லாம் என் பிடிவாதம்தான். எனக்கும் எழுபத்திஏழு வயசாகுது. இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கப்போறேனோ? இந்த வருசம் நிதீஷ்க்கு முடிச்சே ஆகனும்னு இருந்தேன். எப்படிபட்ட அழகியை காட்டினாலும் எதாவது ஒரு குறை சொல்றான். பொண்ணு கேட்டு போற இடத்துலயும் இது உன் அம்மம்மாவானு கேட்குறாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு. அதான் நம்ம முல்லையை கேட்டு வந்திருக்கேன்” என உடைத்தார் விசயத்தை.
ரங்கசாமி அதிர்ந்து பார்க்க, ஜானகிக்கு இது முன்பே தோன்றிய எண்ணம் ஆதலால் மிகவும் சந்தோசமடைந்தவர், “வந்தனா எல்லாருக்கும் டீ போடு” என்றார் சமைக்கும் பெண்ணிடம்.
“இது சரிவராது வனிதா” என்றார் ரங்கசாமி.
வனிதா “ஏன்டா அபத்தமா பேசுற? ஏன் சரி வராது?” என்றார் சிறு அதட்டலோடு.
“நீ குலம் கோத்திரம்னு நிறைய பார்ப்ப. அவ்வளோ ஏன்? நான் முல்லையை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரும்போது சண்டை போட்டதான? இப்போ எப்படி மருமகளாக்கிக்க முடிவு செய்த?”
“அதெல்லாம் அப்போ. இப்போ வயசாகிடுச்சில்ல? பக்குவம் வந்துடுச்சு. இப்போல்லாம் குலம் கோத்திரம் ரொம்ப பார்க்குறதில்ல. அப்படியேன்னாலும் முல்லை உன்னோட பொண்ணாகிட்டா. இன்னும் என்ன வேணும்?” என்றார் பிணைப்பாக.
இன்னைக்கு நேரம் சரியில்ல போல, பிரச்சனை வெடிக்கத்தான் போகுது என நினைத்து “ம்” என பெருமூச்சிழுத்தவர், “கல்யாணம்லாம் பிடிக்காம பண்ணக்கூடாதுக்கா. நிதீஷ்க்கு பிடிக்கல, உன் பிடிவாதத்துலதான் சம்மதிக்க வச்சேன்ற. இப்படி பையனுக்கு என் மகளை கொடுக்க எனக்கு விருப்பமில்ல” என்றார் பொறுமையாகவே.
“நீயும் ஜானகியும் முன்ன பின்ன பார்த்து பேசியா கல்யாணம் செய்திங்க? இல்ல நானும் நாராயணனும்தான் அப்படி செய்தோமோ? நம்ம குடும்பத்துல எல்லாருக்குமே பெரியவங்க பார்த்து செய்துவைக்கிற கல்யாணம்தானே?” என அதட்டி, “எல்லாம் போகப்போக பிடிச்சிடும். நீ நல்ல நாள் பார்க்க ஆரம்பி” என்றார்.
வனிதாவின் பேச்சு கோபத்தை கொடுக்க, “என் மகளுக்கு நிதீஷை பிடிக்க வேணாமா?” என்றார் பொறுக்கமாட்டாமல்.
“ஏன்? ஏன் பிடிக்காது? என் மகனுக்கு என்ன குறைச்சல்? அதோட அவகிட்ட எதுக்கு சம்மதம் கேட்கனும்? என் மகன் நான் சொன்னதும் சரின்னுட்டான். நீ சொல்லி முல்லை கேட்கமாட்டாளா?” என்றார்.
“நான் சொன்னா கேட்பாதான். ஆனா நான் சொல்லமாட்டேன். நிதீஷை எனக்கு பிடிக்கும். ஆனா மகளை கொடுக்க எனக்கு விருப்பமில்ல. இரண்டு பேருக்கும் ஒத்து வராது. நீ வேற இடம் பார்த்துக்கோக்கா” என்ற நேரம் முல்லை வெளியே வந்தாள்.
“எனக்கும் வயசாகுது. பெரிய மருமக டாக்டர். வீட்டுல இருக்க நேரமேயிருக்கிறதில்ல, இவளாவது என்னை பார்த்துப்பானுதானே கேட்கிறேன். எனக்காக பொண்ணை கொடுக்கமாட்டியா?” என்றார் பணிவாக.
“எனக்கும்தான்க்கா வயசாகுது. அதுக்காக என்னை பார்த்துக்க வேண்டி மருமகன் தேட முடியுமா? பெத்தவங்களை பார்த்துக்கிற கடமை பிள்ளைகளுக்குத்தான் இருக்கு. இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெத்துருக்க. அவங்களால உன்னை பார்த்துக்க முடியாதுனா வேலைக்கு ஆள் வச்சிக்கோக்கா” என்றவர் இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதுபோல் “வாடா முல்லை, போய் டீ குடி” என்று சமைக்கும் பெண்ணை பார்க்க, அப்பெண் முல்லையிடம் டீ யை கொடுக்க, “உன் ரூமுக்கு போய் குடிடா” என்றார் ரங்கசாமி.
தனது மறுப்பிற்கு நிச்சயம் எதிர்வினையாற்றுவார்கள். அது மகளின் மனதை பாதிக்கும் என்றுதான் ரங்கசாமி மகளை உள்ளே செல்லச்சொன்னார். ஆனால் தன்னையா பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியில் முல்லை நின்றிருக்க, “எனக்கு மறுக்கமாட்டனு நம்பி குடும்பத்தோட வந்துருக்கேன். என் புருசனுக்கு என்ன மரியாதை?” என்று வனிதா பொறும..
கணவனருகே வந்த ஜானகி “ஏங்க கொஞ்சம் யோசிச்சு” எனும்போதே, “இதுல யோசிக்க ஒன்னுமில்ல ஜானு. என் மகளை என் வீட்டுல இருக்கவே தகுதியில்லாதவனு நினைச்சவங்க வீட்டுக்கு எப்படி என் பொண்ணை கொடுப்பேன்? கூடப்பிறந்த பாசம் வேற. பெத்த பிள்ள பாசம் வேற.
இது இரண்டையும் விட பெருசு நம்மளை நம்பி நாமதான் உலகம் இருக்க பெறாத பிள்ளையை கரையேத்துறது. நம்ம வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவ முல்லை. நமக்காக இருக்க ஒரே ஜீவன். அதேபோல முல்லைக்கும் நம்மளை விட்டா யார் இருக்கா? நம்ம பொண்ணுக்கு இப்படி கல்யாணம் செய்து வைக்கிறதுக்கு பதிலா நம்மளோடவே வச்சிக்கலாம்” என்றார் இறுகிய முகத்தோடு.
“எழுந்திரி வனிதா போலாம். தத்தெடுத்த பிள்ளைக்காக கூடப்பிறந்தவளை உதாசினப்படுத்துறவன் வீட்டுல இனி ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது” என எழுந்தார் வனிதாவின் கணவன்.
நிதீஷ் “மகன் போலனு என்மேல வச்ச பாசம் அவ்வளோதானா மாமா?” என ஆற்றாமையோடு கேட்க, “நீ எனக்கு எப்போவும மகன் போலத்தான் நிதி. அதுக்காக முல்லையை பணையம் வச்சு அதை நிரூபிக்க முடியாது. இங்க பொண்ணு கேட்ட மாதிரி வேற எங்கையும் பொண்ணு கேட்டா கொடுப்பாங்களானு யோசி.
வீட்டுக்கு வர மருமக பெரியவங்களை பார்க்கனும்தான். அதுக்காக அடிமையா இருக்கனும்ன்ற அவசியம் எந்த பொண்ணுக்கும் கிடையாது. பொண்டாட்டியை நல்லபடியா வச்சி காப்பாத்துறவன்தான் ஆம்பள. அடிமை வேலை செய்யவும், பிள்ளை பெத்து கொடுக்கவும் கட்டிக்கிறவன் ஆம்பிளை கிடையாது. மகன் போல உன்னை நினைச்சதால சொல்றேன். ஆம்பிளையா இருக்கப் பாரு. அப்போதான் நிம்மதியா இருக்க முடியும்” என்றார் ரங்கசாமி.
வனிதா “என் மகனுக்கு புத்தி சொல்ல நாங்க இருக்கோம்” என ரங்கசாமியிடம் பொறுமி, மகனிடம் “நீ என்னடா கெஞ்சிட்டிருக்க? எந்த முகத்தை வச்சிகிட்டு மக கல்யாணத்துக்கு அழைக்க வருவானு பார்க்கலாம். நல்லது கெட்டதுக்கு நாம வந்து நிற்கலைனா அப்போ தெரியும் நம்ம அருமை” என சபதம் போல் சொல்லி கிளம்பினார் குடும்பத்தோடு.
திருமணமான நாளிலிருந்து வனிதா தனக்கு பக்கபலமாய் இருந்தவர் ஆதலாலும், முல்லையை தத்தெடுக்கும் முன்பாக நாத்தனார் மற்றும் கொழுந்தனார் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பார்த்தவர் ஆதலாலும் “ஏங்க, கொஞ்சம் தன்மையா பேசியிருக்கலாமில்ல?” என வருந்தினார் ஜானகி.
“என்ன தன்மையா பேசுறது? பேசினா புரிஞ்சிக்கிற ஜென்மமா?” என கடிய, “நானும்கூட நம்ம நிதீஷ்க்கு கொடுக்கத்தான் ஆசைப்பட்டேன்” என்றார் சன்னக்குரலில்.
“நிதீஷ் நல்லவன்தான் ஜானு. ஆனா அவனுக்கும் முல்லை மேல விருப்பம் இல்ல, வனிதா சொன்னதுக்காக சம்மதிச்சிருக்கான். எந்தெந்த விசயத்துல அம்மாம பேச்சு கேட்கனும்னு வரைமுறையிருக்கு. வனிதா பொண்ணு கேட்ட விதத்தை பாரத்தியா? இப்படி கேக்குறவங்க குடும்பத்துல முல்லையால சந்தோசமா இருக்க முடியுமா? சந்தோசத்தை விடு, முதல்ல நிம்மதியா இருக்க முடியுமா?”
“இனி உறவே வச்சிக்கமாட்டாங்க போல” என ஜானகி வருந்த, தன்னால்தான் தந்தையின் உடன்பிறப்பு உறவு விட்டுப்போச்சு என நினைத்தவளுக்கு கண்கள் கலங்கியது.
“உறவு வச்சிக்கலனா போகட்டும்” என மனைவியை அதட்டி, “நீ ஏன்டா கலங்குற? வனிதானு இல்ல, இப்படி யார் பொண்ணு கேட்டாலும் கட்டிக்கொடுக்கமாட்டேன். நீ தேவதைடா. உன் அருமை புரியறவங்களுக்குத்தான் உன்னை கட்டிக்கொடுப்பேன்” என தேற்றினார் மகளை.
அனைவரும் வருத்தத்தில் இருக்க, அரைமணி நேரம் கழித்து நாராயணன் வந்தார். “வாடா” என வரவேற்றார் அமர்த்தலாக. வனிதா விசயத்தை சொல்லித்தான் நாராயணன் வருகிறான் என ரங்கசாமிக்கு புரிந்தது.
ஜானகியிடம் “முல்லையை தத்தெடுக்கும் முன்ன எவ்வளோ உதவி செய்திருக்கு அக்கா” எனும்போதே, “அதுக்கு?” என முறைத்தார் ரங்கசாமி.
“எப்படியும் கல்யாணம் செய்துதானே ஆகனும்? யாருக்கோ கொடுக்கிறதுக்கு நம்ம நிதீஷ்க்கு கொடுக்கலாமே? அவனுக்கென்ன குறை? நல்ல வேலைல இருக்கான். எந்த கெட்ட பழக்கமும் இல்ல”
“இதெல்லாம் எனக்கு தெரியாதா?” என முறைத்து, “எனக்கு இவ்வளோ சொல்ற நீ… ஏன் அபர்ணாவை கொடுக்கல? முல்லையை விட மூனு வயசு பெரியவ அபர்ணா. முப்பத்திரண்டு வயசு நிதீஷ்க்கு சரியான மேட்சாவும் இருந்துருக்கும். உன் அக்கா குடும்பத்தை கட்டி காப்பாத்தின மாதிரியும் இருந்திருக்கும்ல?” என்றார் அமர்த்தலாக.
“வனிதாக்கா அபர்ணாவை கேட்கல, அதோட கட்டிக்கொடுத்த பொண்ணைப் பத்தி பேசாதண்ணா”
“போன வருசம்தான கட்டிக்கொடுத்த? நிதீஷ்க்கு அஞ்சு வருசமா வனிதா பொண்ணு பார்த்துட்டுதானே இருக்கு? ஏன் அங்க கொடுக்காம வெளில கொடுத்த?” என்றவர், “அப்புறம்… வனிதா பொண்ணு கேட்கலனு சொல்லாத. முறைப்படி கேட்கலனு சொல்லு.
நீயும் உன் பொண்டாட்டியும் நிதீஷ்க்கு கொடுக்கமாட்டிங்கனு வனிதாக்கு தெரியும். அதனால மாமாக்கு தெரியாம முதல்ல கேட்டுட்டு அதுக்கப்புறம் முறைப்படி கேட்கலாம்னு ரகசியமா உன்கிட்ட பொண்ணு கேட்டதை அன்னைக்கே அபர்ணா குட்டி என்கிட்ட சொல்லிடுச்சு” என்றார்.
error: Content is protected !!