Skip to content
Post Views: 14,921
நாராயணன் முகம் சிறுத்திட “என் பொண்ணை யாருக்கு கொடுக்கனும்னும் எனக்கு தெரியும். கூடப்பிறந்தவங்களை எப்படி பார்த்துக்கனும்னும் எனக்கு தெரியும். அவங்கவங்க அவங்க வேலையை மட்டும் பாருங்க” என்றார் கண்டிப்போடு.
“ஓ… எங்க வேலையை மட்டும் பார்த்தா போதுமா? நாங்க இல்லாம கல்யாணம் செய்திடுவிங்களா?”
“எல்லாரையும் கூப்பிடுவேன். விருப்பம் இருந்தா வரலாம். இல்லனாலும் பரவால்ல. ஆனா நான் கூப்பிட்டு வரலைனா அன்னையோட நமக்குள்ள உறவு முடிவுக்கு வந்திடும்” என்றார் இலகுவாகவே.
இறுகிய முகத்தோடு நாராயணன் கிளம்பப்பார்க்க, “நாராயணா… நானே இல்லனாலும் என் பொண்ணு கல்யாணம் நடக்கும். எனக்கும் என் பொண்ணுக்கும் பக்கபலமா கடவுள் இருக்கார்… எப்போவும் இருப்பார். பணத்தை போட்டா உக்கார்ந்த இடத்துலயிருந்து கல்யாணத்தை முடிக்கிற அளவுக்கு உலகம் முன்னேறி ரொம்ப நாளாகுது” என்க, அவமான உணர்வோடு கிளம்பினார் நாராயணன்.
Advertisement
முல்லைக்கு கண்ணீர் வர “நீ எதுக்குடா அழற?” என கண்டித்தார் ரங்கசாமி.
“எனக்காக எல்லாரையும் பகைச்சுக்கிறிங்க” என்றாள் வேதனையோடு.
“என் பொண்ணுடா நீ… நீ நல்லா இருக்கனும்னு நினைக்கலனாலும் பரவால்ல, எதுக்கு இவ்வளோ வன்மம் வச்சிருக்காங்க? இப்படிபட்டவங்களை நான் எதுக்கு ஆதரிக்கனும்?” என உணர்ச்சிப்பெருக்கோடு சொல்லி, “கூடப்பிறந்தவங்களை எந்தளவுக்கு பார்க்கனுமோ அந்தளவுக்கு பார்த்தாச்சு. வனிதா பொண்ணுக்கு, பசங்களுக்கு, நாராயணன் மகன் மகளுக்குனு நிறைய செஞ்சிருக்கேன்.
Advertisement
நான் செஞ்சதுல ஒரு பர்சன்ட் கூட உனக்கும் பண்ணல. அவங்களை நினைச்சு வருத்தப்படுற அளவுக்கு எனக்கும் ஏதும் பண்ணல. உன் குற்றவுணர்வு தேவையில்லாதது” என மகளை தேற்றி, “இன்னைக்கு ஒரு குட் நியூஸ் சொல்லலாம்னு இருந்தேன். காலைலயே வந்து மூடை ஸ்பாயில் பண்ணிட்டாங்க” என்றார் பீடிகையாக.
Advertisement
“குட் நியூஸா?” என ஆர்வத்தோடு கண்களைத் துடைத்தவள் “ஸ்டடி முடிஞ்சதும் டிரிப் போலாம்னு சொன்னிங்களே. எங்கேயாவது போறாமாப்பா?” என்றாள் ஆசையாக.
“டிரிப் போறதுதான் குட் நியூஸாடா?” என சிரித்து, “ம்… உன்னைப் பொருத்தவரை டிரிப் போடுறதுதான் குட் நியூஸ்னா போலாமே. எங்க போக ஆசை?” என்றார்.
அன்னைக்கும் தந்தைக்கும் சுகர், ப்ரஸர் இருப்பதாலும், அதிக நேரம் பயணம் ஒத்து வராது என்பதாலும், “பக்கமா எங்கையாவது கோவிலுக்கு போலாம்ப்பா. வரும்போது ஹோட்டல்ல சாப்பிட்டு வரனும்” என்றாள்.
Advertisement
“ம்… ரொம்ப நேரம் ட்ராவல் எங்களுக்கு செட் ஆகாதுனு புரியுதுல்ல?” சிரித்து, “இப்போதைக்கு ஹோட்டல் போலாம். உனக்கு கல்யாணம் செய்து முடிச்சி என் மருமகனோட உனக்கு விருப்பப்பட்ட கன்ட்ரிக்கு அனுப்பி வைக்கிறேன். ஒகேவா?” என்றார் மகிழ்வோடு.
“அப்போ கல்யாணம் செய்து வைக்கப் போறிங்களா?” என்றாள் பாவமாக.
“ஆமாம்டா. உனக்கு கல்யாணம் செய்து, பண்டிகைக்கு அழைக்கனும், வளைகாப்பு செய்யனும், பிரசவம் பார்க்கனும், பேரன் பேத்திக்கு காது குத்து வைக்கனும்னு இப்படி நிறைய ஃபங்சன் இருக்கே. எங்களுக்கு வயசாகிட்டே போகுதில்ல? இப்போ ஆரம்பிச்சாதான் ஒரு நாலஞ்சு வருசத்துக்குள்ள இதெல்லாம் செய்து முடிக்க முடியும். அதுவரைக்கும் எனக்கு ஆயுசு கொடு கடவுளேனுதான் தினமும் வேண்டிட்டிருக்கேன்”
“அப்பா” என அணைத்துக்கொண்டவள், “அதெல்லாம் இன்னும் நிறைய வருசத்துக்கு நீங்க இருப்பிங்க” என்றவள் சில நொடி யோசனைக்குப் பிறகு, “ஒகேப்பா. உங்களுக்கு பிடிச்சமாதிரி பையன் வந்தா நான் கல்யாணம் செய்துக்கிறேன்” என்றாள் தந்தைக்காக.
“எனக்கு உனக்கு அம்மாக்குனு மூனு பேருக்கும் பிடிக்கனும். அப்படி பையனை பார்கறேன். நம்ம மூனு பேர்ல யாருக்கு பிடிக்கலனாலும் பையனை ரிஜகட் செய்திடுவோம். சரியா?” என்றார்.
“ம்” என சம்மதிக்க, “நான் சொல்ல நினைச்ச குட் நியூஸே அதான்டா. ஒரு மாசத்துக்கு முன்னவே ஒரு வரன் வந்தது. பையன் பார்க்க ரொம்ப நல்லா இருக்கான். குடும்பத்தைப் பத்தி பெருசா தெரியாது. ஆனா அந்த இடத்தை சொன்ன புரோக்கர் எனக்கு தெரிஞ்சவர்தான்.
அவரை நம்பி என் பொண்ணுகிட்ட கேட்டுட்டு சொல்றேனு சொல்லியிருக்கேன்.” என்று தனது மொபைலில் உள்ள ஃபோட்டோவை காண்பித்து, “பையனை பிடிச்சிருந்தா அடுத்த வாரம் வர சொல்லலாம்” என்றார்.
“முகம் நல்லாத்தான் இருக்கு. ஆனா என்னை விட ஹைட்டா இருப்பாங்களா? இல்லனாலும் எனக்கு பிரச்சனையில்ல, ஆனா பையனை விட நான் ஹைட்டா இருக்கேனு வேணாம்னு சொல்லப்போறாங்க” என்றாள் சிரிப்போடு.
“அப்பாக்கு வயசாகிடுச்சேனு பிடிக்காமலாம் சம்மதிக்காதடா. உனக்கு பிடிச்சிருந்தா மட்டும்தான் கல்யாணம்”
“அப்படி சம்மதிச்சா நீங்க கண்டுபிடிச்சிடுவிங்களே”
“ம் கண்டுபிடிப்பேன்தான். ஆனாலும் இந்த விசயத்துல கொஞ்சம் கஷ்டம். எனக்காகனு பார்க்கவே கூடாது. சரியா?” என்றார்.
“சரிப்பா. எனக்கு பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லிடறேன்” என்றாள்.
“ம்…” என தலைகோதி “இவங்க வரதுக்கு முன்னவே நானும் அம்மாவும் சாப்பிட்டோம். நீதான் பசியோட இருக்க. போய் முதல்ல சாப்பிடு” என்க, பின்னே ஜானகி பரிமாற முல்லை உண்டாள் பல சிந்தனைகளோடு.
ஒரு வாரம் கழித்து முல்லையை பெண் பார்க்க வந்தனர். மகளை புடவை அணிய ஜானகி வற்புறுத்தவே, அன்னையின் விருப்பப்படி நகை உடை அணிந்து வந்து நின்றாள் வந்தவர்கள் முன்னே.
ரோஜா நிறத்து முல்லை தேவதையாய் ஜொலித்தாள் ரங்கசாமிக்கும் ஜானகிக்கும். அவர்களே தற்போதுதான் மகள் புடவை அணிந்து பார்க்கிறார்கள். என் மகள் என்ற கர்வத்தோடு ரங்கசாமி இருக்க, “ஜுஸை எடுத்து எல்லாருக்கும் கொடு முல்லை” என்றார் ஜானகி.
முல்லை பழச்சாறு கொடுத்து முடித்து தந்தையருகே நின்றிருக்க, “இதென்னடா உன் வளத்திக்கே இருக்கா?” என மாப்பிள்ளையின் அன்னை மகனிடம் கிசுகிசுக்க, “இப்போவே ஹைட்டுக்கு மீறி ஒருசுத்து குண்டா இருக்கா, ஒரு குழந்தை பிறந்தா இன்னும் குண்டாகி பப்ளிமாஸ் மாதிரி ஆகிடுவா” என மாப்பிள்ளையின் அண்ணி கிண்டலடித்தாள் கொழுந்தனிடம்.
அன்னை கிசுகிசுப்பு, அண்ணியின் கிண்டல் அனைத்தையும் மீறி, புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாய் தெரிந்த முல்லையின் கபடமற்ற முகமும், ஆர்பாட்டமில்லாத தோரணையும் வந்தவனிற்கு மிகவும் பிடித்திட, “எனக்கு ஒகேம்மா” என்றான்.
மாப்பிள்ளைக்கு மகளை பிடித்ததில் ரங்கசாமி முகம் அதீத சந்தோசத்தில் ஜொலிக்க, “நிஜமாவாடா? அப்புறம் வீட்டுக்கு போய் ஏதும் குறை சொல்லக்கூடாது” என்றவரின் பேச்சில் ரங்கசாமியின் ஜொலித்த முகம் சுருங்கியது.
“ம்மா நான் என்ன சின்ன பையனா? பிடிச்சிருக்குனு சொல்றேன்ல?” என அதட்டல் விட, “சரி அப்போ உங்க மககிட்ட என் மகனை பிடிச்சிருக்கானு கேளுங்க. முல்லைக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்” என்றார்.
ரங்கசாமி மகளைப் பார்க்க, முல்லை சம்மதமாய் தலையசைக்க, “எங்களுக்கு சம்மதம்ங்க” என்றார் ரங்கசாமி.
ஆனால் ஜானகிக்கு பெண்கள் பேசும் தோரணை பிடிக்காமல் போக, முகமும் அதிருப்தியை காட்டியது. “உங்க சம்சாரம் சம்மதம் சொல்லலையே” என்றார்.
“மகளுக்கு பிடிச்சிருந்து அவருக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம்தாங்க” என்றார் ஜானகி.
“அப்போ என்னைக்கு நிச்சயம் வச்சிக்கலாம்?” என மாப்பிள்ளையின் தந்தை கேட்க, “இருங்க… அதுக்கு முன்ன பேச வேண்டியதை பேசி முடிச்சிடலாம். நிச்சயத்தப்போ எல்லார் முன்னாடியும் பேச முடியாதில்ல?” என கணவனை அதட்டி, “பொண்ணுக்கு என்ன சீர் செய்விங்க?” என்றார் ரங்கசாமியிடம்.
“பழைய நகை நூறு பவுனோட கல்யாணத்துக்குனு புதுசா எழுபத்தைஞ்சி பவுன் நகை போட்டு, வழக்கமா செய்யிற சீரோட கார் வாங்கி கொடுப்பேன்ங்க”
“அப்போ மத்ததெல்லாம்?” என்க, “மத்ததுனா?” என புருவம் சுருக்கிய ரங்கசாமி “சொத்து பத்தி கேட்குறிங்களா? முல்லை கல்யாணத்துக்கப்புறம் எங்க காலத்துக்குப் பிறகு முல்லைக்குனு எழுதி வச்சிடுவேன்” என்றார்.
“கொடுக்கிறதுனு முடிவாகிடுச்சு, கல்யாண சீரோடவே பத்திரத்தையும் கொடுத்தா நாங்களும் பெருமையா சொந்த பந்தம்கிட்ட சொல்லிக்குவோம்ல?”
முல்லையின் முகம் கடினமாக, மகளைப் பார்த்த ரங்கசாமியின் முகம் கலவரமாக, “சொல்றனேனு தப்பா எடுத்துக்க வேண்டாம். முல்லை உங்க தத்துபிள்ளைனு தரகர் சொன்னாரு. நீங்களே சொல்லவும் சொல்லியிருந்திங்களாம். கூடப்பிறந்தவங்களுக்கு இல்லாத உரிமை தத்துப்பிள்ளைக்கானு நாளைக்கு உங்க அண்ணன் தம்பி யாராவது வந்தா வில்லங்கம்தானே? எதுக்குங்க வம்பு?” என்றார் மாப்பிள்ளையின் அன்னை.
“அப்படி வம்பு வர வாய்ப்பேயில்லைங்க. அப்பார்மண்ட் என் மனைவிக்கு அவங்கம்மா கொடுத்த சீர். காம்ப்ளக்சும் இந்த வீடும் என் சுய சம்பாதியத்துல கட்டினது. பூர்வீக சொத்தை முழுசா என் கூடப்பிறந்தவங்களுக்கே விட்டு கொடுத்துட்டேன். அதனால இந்த சொத்துல பங்குக்கு வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் பிரச்சனை வராத மாதிரிதான் ரிஜிஸ்த்ரேசன் பண்ணுவேன்”
“பார்த்திங்களா? கண்டிப்பா வரமாட்டாங்கனு சொல்லாம அப்படியே வந்தாலும்னு நீங்களே சந்தேகமா சொல்றிங்க. அதுக்கேத்தமாதிரி இன்னைக்கு உங்க மகளை பொண்ணு பாரக்க வரோம். ஆனா உங்க சொந்த பந்தம் யாரும் இல்ல. இதுலயே உங்களுக்குள்ள வேறுபாடு தெரியுதுங்க. யார் நிலைமையை யார் கண்டா?” எனும்போது அதுவரை பொறுமைகாத்த முல்லை தீயாய் முறைத்தாள் மாப்பிள்ளையின் அன்னையை.
அவளின் பார்வை பார்த்து, “பெரியவங்க பேசும்போது அதிகப்பிரசங்கி தனமா பார்க்கக்கூடாது. நீ சின்ன பிள்ளை” எனும்போதே “அப்பா இவங்களை எனக்கு பிடிக்கல” என்று உள்ளே போனாள் முல்லை.
“என் மக எப்படி பார்க்கனும்னு கூட நீங்கதான் முடிவு செய்விங்களா?”என ரங்கசாமி குரலுயர்த்த, “ஆம்பிளை மாதிரி வளர்ந்திருக்க உங்க பொண்ணை கட்டிக்க சம்மதிச்சதே பெரிய விசயம். நாளைக்கு உங்களுக்கு எதாவது ஆகிடுச்சுனா குழந்தை பிறப்பு, நல்லது கெட்டதுலயிருந்து எல்லாம் நாங்கதான் பார்த்தாகனும். அதை மனசுல வச்சிக்கிட்டு முடிவெடுங்க”
“அப்பா அவங்களை போக சொல்லுங்க” என கத்தினாள் அறையிலிருந்து.
“பொண்ணு ரொம்ப சாதுனு புரோகர் சொன்னதை நம்பி வந்ததுதான் நான் செய்த பெரிய தப்பு. வாடா போலாம்” என எழவே, “நானும் புரோகர் சொன்னதை நம்பிதான் பொண்ணை கொடுக்க நினைச்சேன். அது எவ்வளோ பெரிய தப்புனு எனக்கும் இப்போதான் புரியுது” என்றார் ரங்கசாமி.
வந்தவர்கள் கிளம்பிட, மகள் அறைக்கு சென்றனர் ரங்கசாமியும் ஜானகியும். “ப்பா” என கண்களை துடைக்க, “நீ எதுக்குடா அழற? அவங்களுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்” என்றார் கனிவாக.
“எனக்கு கல்யாணம் வேணாம்ப்பா” என்றாள் கண்ணீரோடு.
“மக்கு… இவங்களுக்கு பயந்து கல்யாணம் வேணாம்னு சொல்வியா?” என்றார் சிரிப்போடு.
“இவங்களுக்கு பயந்துட்டு இல்லப்பா. எனக்கு கல்யாணம் செய்துக்க விருப்பமில்ல” என்றாள் உறுதியாக.
தற்போது நடந்த கலவரங்களால் அப்படி சொல்கிறாள். இரண்டொருநாள் கழித்து பேசலாம் என நினைத்தவர் “அப்புறம் உன் ஃப்ரண்ட்ஸ் யாரெல்லாம் மேல படிக்கிறாங்க? யாரெல்லாம் வேலைக்கு போறாங்க?” என்று கேட்டு மகளை இயல்பாக்கினார்.
பின்னே ஒரு வாரம் கழித்து மீண்டும் ஓர் வரன் வரவே, மகளிடம் சொல்லத் தயங்கி கோவிலுக்கு அழைத்து வந்தார். கடவுளிடம் வேண்டிய பின்னே வீட்டிற்கு வரும் வழியில் காரை நிறுத்தி மகளிடம் மெல்ல ஆரம்பிக்க “எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லப்பா” என்று திடமாய் மறுத்தாள் முல்லை.
*** *** *** *** ***
அன்பரசு “ப்பா சென்னை போகனும்” என்றான் அதீத சந்தோசத்தோடு.
“நாலஞ்சு முறை ஃபாரின் ஷுட்டிங்க்கு கூட போயிருக்க? அப்போ கூட இவ்வளோ சந்தோசப்படல. சென்னை போறதுக்கு இத்தனை சந்தோசமா?” என தானும் மகிழ்வோடு வினவினார் மாதவன்.
“இந்த முறை என்னை கூப்பிட்டிருக்க டைரக்டர் யார் தெரியுமாப்பா?” என சந்தோசத்தோடு வினவி, “டைரக்டர் கிருஷ்ணன்ப்பா. அதுவும் கால்ஷீட் இருக்கானு கேட்டார்ப்பா. அவர் பேசினதே பெரிய விசயம், என்கிட்ட கால்ஷீட் கேட்குறார். இன்னைக்கே வரேன்னு சொல்லிட்டேன்” என்றான் அதீத மகிழ்வோடு.
“சரிப்பா… சரிப்பா” என சந்தோசித்து, “எத்தனை மணிக்கு கிளம்புற? ஜனனிம்மா ஸ்கூல் விட்டு வந்தா கேட்குமே” என்றார்.
“ஆமாம்ல?” என நேரம் பார்த்தவன் “இன்னும் அரைமணி நேரத்துல லன்ச் டைம்தானே? ஸ்கூல்ல போய் பார்த்து சொல்லிட்டு போறேன்ப்பா” என்று இரண்டு நாட்களுக்கான தனது உடைகளை எடுத்துக்கொண்டு அறைவிட்டு வெளியே வந்து அன்னை படத்தை வணங்கி, அத்தை தந்தையிடம் சொல்லி வாயில்வரை வந்தவன், மீண்டும் தந்தையிடம் வந்து, “அப்பா அந்த ரங்கசாமி எதாவது கம்ப்ளைன்ட் பண்ணினா உடனே எனக்கு கால் பண்ணுங்க” என்றான்.
“ஏன்ப்பா? எதாவது பிரச்சனையா?”
“இப்போ ஏதும் பிரச்சனையில்லப்பா. ஆனா கஜேந்திரன் இப்படி செய்வானு நாம எதிர்பார்க்கலதானே? அதுமாதிரி எதாவது வந்தா என்கிட்ட சொல்ல சொல்லியிருக்கேன், நான் இல்லாத நேரம் உங்ககிட்ட சொல்ல சொல்லியிருக்கேன்”
ரங்கசாமி மீதான திடீர் அக்கறையில் “ரங்கசாமிகிட்ட பேசினியா?” என்றார் ஆச்சர்யமாக.
“ம் பேசினேன்ப்பா” என்றவனுக்கு முல்லை ரங்கசாமியிடம் வேதனையோடு கூறிய வார்த்தைகள் ரீங்காரமிட, வருந்தியவன், பின்னே தந்தையின் கூர்மையான பார்வையில் சுதாரித்து “நேத்து நைட் வாக்கிங் போய்ட்டு வரும்போது பார்த்தேன். இனி கஜேந்திரனால பிரச்சனை வராதுனு சொன்னேன்.
கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்கள்ல? அதோட நம்மளால அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வந்திடக்கூடாதில்லப்பா. பாவம் அவரும் வயசானவர்” என்று பொறுமையாய் விளக்கமளித்து “சரிப்பா நான் கிளம்பறேன்” என்று கிளம்பினான்.
error: Content is protected !!