Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஒளி சிந்தும் இரவு 1.1

                 சர்வம் சிவ மயம்

                 ஒளி சிந்தும் இரவு

                   அத்தியாயம் 1

  நிலா காய்கிறது…



Advertisement

  நிறம் தேய்கிறது…

  யாரும் ரசிக்கவில்லையே…

  இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்” என்ற ஏழு வயது மகளின் குரலில் மயங்கியபடி வீட்டிற்குள் நுழைந்தான் அன்பரசு.

Advertisement

   சித்தப்பா வருகையின் சந்தோசத்தை கண்களால் காட்டியபடி

Advertisement

   “தென்றல் போகின்றது…

   சோலை சிரிக்கின்றது…

   யாரும் ரசிக்கவில்லையே…

Advertisement

   சின்ன கைகள் மட்டும் உன்னை தேடும்…” என்றவளின் பாவனையில், மயங்கியவன், “இன்னைக்கு பாட்டு க்ளாஸ் நல்லா போனுச்சாடா” என்றான் நெற்றி முத்தமிட்டபடி.

   “சூப்பரா போச்சுப்பா,  என் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்காம், தாளம் தப்பாம பாடுறேனாம், அதனால மிஸ் காம்படேஷன்ல கலந்துக்க சொல்றாங்க” என்றாள் சலுகையாக.

    “ஹம்… அப்படியா?” என சந்தோசித்து, “காம்படேஷன்ல கலந்துக்கனும்னா அதுக்கு இரண்டு கண்டிஷன் இருக்கே” என்றான்.

    “என்ன கண்டிஷன்னாலும் எனக்கு ஓகேப்பா” என்றாள் ஜனனி.

    “ஃபர்ஸ்ட் கண்டிஷன் பாட்டுனால படிப்பு போய்டாம பார்த்துக்கனும், இரண்டாவது கண்டிஷன் சப்போஸ் நீ தோத்துட்டா ஃபீல் பண்ணக்கூடாது. இதுக்கு ஒகேன்னா என் ஜனனிம்மா தாராளமா காம்படேஷன்ல கலந்துக்கலாம்” என்றான்.

    “அவ்வளோதானே? எனக்கு டபுள் ஓகே. ஆனா நீங்க பேச்சு மாறக்கூடாது” என்றாள் நம்பாத் தன்மையோடு.

    “கண்டிப்பா மாறமாட்டேன்” என்றான் கண்ணிமைத்து.

   “அப்போ நீங்களே மிஸ்க்கு கால் பண்ணி சொல்லிடுங்க, இல்ல நம்பமாட்டாங்க” என்றாள்

   “இப்போ வேணாம், நாளைக்கு க்ளாஸ்ல விடப்போகும்போது நேர்ல சொல்லிக்கலாம்” என்றவன், “அத்தை ஜனனிம்மாவுக்கு சாப்பாடு ரெடியா?” என்றான்.

   சிறுமியின் முகம் வாடிட, “அப்பா சொன்னா செய்வேன், நீ கண்டிப்பா காம்படேஷன்ல கலந்துக்குற. ஓகேவா” என்றான் கட்டை விரலை உயர்த்தி.

   “ம்” என்று ஜனனி சந்தோசிக்க, “என்ன ஆச்சர்யம்?” என்றபடி பேத்திக்கு உணவு கொண்டு வந்தார் கல்பனா.

   “பத்து வயசு பாப்பாகிட்ட தோத்துட்டேன்னு அஞ்சு வயசுல அழுது ஆர்பாட்டம் செய்துட்டாத்த, அதான் இவ்வளோ நாள் கலந்துக்க விடல” என்றான் அன்பரசு.

   “ப்பா” என மகள் சிணுங்க, “ஆயா கேட்கவும்தான்டா சொன்னேன்” என்றவன், “அத்தை, என்னை ஏன் பழசு பேச வைக்கிற?” என முறைத்தான் பொய்யாக.

   “சரி பேசல” என நிறைந்த பார்வை பார்த்தார் கல்பனா.

   பின்னே ஜனனி உண்டு முடிக்க, “ஹோம்வெர்க் முடிச்சிட்டியாடா?” என்க, “இதோ இப்போ பண்ணப்போறேன்ப்பா, முடிச்சிட்டுதான் தூங்குவேன்” என கிளம்பினாள் அறைக்கு.

   “பாப்பாவை போட்டிக்கு அனுப்ப நினைச்சது ரொம்ப சந்தோசமா இருக்குப்பா” என நெகிழ்ந்தார் கல்பனா.

   “ஹம்… இதுக்கு மேல கட்டுப்படுத்தினா தப்பாகிடும்த்த, அதான் சம்மதிச்சுட்டேன், அதோட ஜனனிம்மா சிங்கிங்ல இப்போ ரொம்ப நல்ல டெவலப்மண்ட்” என்றான் பாராட்டுதலாக.

    “இப்போல்லாம் ஜனனிம்மா அவங்கப்பனை கேக்குறதேயில்ல, சத்தியனையாவது பேத்தியை வந்து பார்த்துட்டு போக சொல்லு அன்பு, இப்படியே இருந்தா ஒட்டுதலே இல்லாம போய்டும்” என்றார் கவலையாக.

   “வேணாம்த்த, அவன் ஜனனிம்மாகிட்ட ஒட்டவே வேணாம், அவனுக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டான்னா போதும், என் ஜனனிம்மாக்கு நானிருக்கேன்” என்றான் வழக்கம்போல்.

    “ம்” என்று சோர்ந்த முகத்தோடு ஆமோதித்து, “வெளில எங்கையாவது போகனுமா அன்பு?” என்றார்.

    “இல்லத்த, நீ வீட்டுக்கு போகனுமா?”

    “ம்… போய்ட்டு வரலாமானு பார்க்குறேன், சுகந்தி என்னை எதிர்பார்த்துட்டு இருப்பா, எனக்கும் பார்க்கனும்போல இருக்கு. நீ ஒருவாரம்  வீட்டுலயே இருப்பேன்னா சொல்லு, இல்லைனா மெதுவா போய்க்கறேன்”

   “போகனும்னு நினைச்சா என்னை எதிர்பார்க்காதத்த, அப்பா இருக்கார்ல? பார்த்துப்பார்”

   “நான் இருந்தாலாவது சாப்பிடறார், இல்லைன்னா அண்ணியை நினைச்சி நொடிஞ்சு போய்டுறாரு அன்பு” என்றார் வேதனையாக.

   “ப்ச் அத்த” என கண்டித்து, “எனக்கு சாப்பாடு ரெடியா?” என்றான்.

   “ம் செய்துட்டேன் அன்பு, எடுத்து வைக்கிறேன், கை கால் கழுவிட்டு வா” என சமையலறைக்கு சென்றார்.

   அத்தையின் மனமறியாதவனா அன்பு? கல்பனாவிற்கு சற்றும் குறையாத வேதனையை தன்னுள் புதைத்திருக்கிறான் அன்பரசு. அதை வெளிக்காட்டுவதில் எந்த பலனும் இல்லை, மேலும் வேதனையின் அடர்த்தி அதிகமாகிக்கொண்டே போகும். நிதர்சனத்தை உணர்ந்து வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உறுதியோடிருக்கிறான்.

   ஆனாலும் சுவற்றில் புகைப்படமாய் இருக்கும் அன்னையை வணங்கும்போதெல்லாம் அவனின் உறுதி உடையும்தான். அன்னையை வணங்க கண்களை மூடுபவன் உடைந்த மனதையும் முயன்று ஒட்ட வைத்த பின்னேதான் கண் திறப்பான்.

   மனம் முழுதும் வேதனை என்றாலும் நமக்கான வாழ்க்கையும் கடமையும் இருக்கிறதே… அதிலும் அன்னை எதிர்பார்த்ததை போன்ற வாழ்க்கையை வாழ வேண்டும். அதுதான் மகனாக நான் அவருக்கு கொடுக்கும் ஆத்ம சாந்தி என மனதை திடப்படுத்துவான் தினமும்.

    சத்யன், அன்பரசு, சரவணன் என மூன்று ஆண்மகன்கள். ஆணழகன் போட்டியில் மூன்று முறை மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டம் வாங்கியவன் அன்பரசு. உலக சாம்பியன் ஆவதே அவனின் இலக்காக இருக்க, அதற்காக பெரிதாய் உழைத்துக்கொண்டிருந்த சமயம், எதிர்பாராத நிகழ்வாக நான்காம் முறை மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டத்தை தவறவிட்டான்.

   மனம் உடைந்த நிலையில் கலைத்துறையில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. கலைத்துறையில் நுழைந்தால் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போய்விடுமா என்று யோசித்தான்.

   ஆனாலும் தான் படித்த டெக்ஸ்டைல் டிசைனிங் டிப்ளமோ படிப்பிற்கு அப்படியொன்றும் பெரிதாய் வேலை கிடைத்திடாது. மேற்கொண்டு படித்தாலோ, அல்லது டிசைனிங்ல் ஆர்வமிருந்தாலோ இந்த துறையும் நல்ல துறைதான். ஆனால் உடற்பயிற்சியில் இருக்கும் நாட்டம் படிப்பில் இல்லாமல் போக, மேற்கொண்டு படிப்பதை நிறுத்தி தேக வடிவத்தை மெருகேற்றுவதில் ஆர்வம் கொண்டு நாளொன்றுக்கு ஆறுமணி நேரம் வரை உழைத்தான்.

    எத்தனை உழைத்தும் இதோ இப்போது தோற்றுவிட்டோமே… முதலிடம் பிடித்தவனிற்கும் அன்புக்கும் சிறு புள்ளிகள்தான் வித்யாசம் என்றாலும் வெற்றி பறிபோனது போனதுதானே. எனில் தான் நினைத்துதான் நடக்கும் என்பதும் உறுதியல்ல. தேடி வரும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று பலமாய் யோசித்து நடிக்க ஒப்புகொண்டான்.

    தனது பட வாய்ப்பை தந்தையிடம் சொல்ல, இருபத்தி மூன்று வயதுதான் ஆகிறது, மனம் அலைபாயும் வயதில் திரைத்துறை வேணவே வேணாம் என மறுத்தார். அன்னையிடம் கெஞ்சி கொஞ்சி சம்மதிக்க வைத்து, தந்தைக்கு தெரியாமல் முதல் படத்தை நடித்து முடித்தான்.

    அன்பரசுக்கு மட்டும் அது முதல் படமல்ல, இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன் என இவர்களுக்கும் இது முதல் படம். வெற்றிப் படமாக அமைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும், ஆறடி நாயகனை விட, ஆறடிக்கும் சற்று கூடுதல் உயரமும், அயராத பயிற்சியால் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தான் விரும்பும்படி செதுக்கியிருக்கும் வில்லன் கதாப்பாத்திரமே அனைவராலும் விரும்பப்பட்டது.

    மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை மூன்றுமுறை தொடர்ந்து வாங்கியதால் தன் தேக வடிவை நிறையமுறை பெருமையாய் நினைத்திருக்கிறான் அன்பரசு. ஆனால் முக வடிவில் அழகானவன் என்றெல்லாம் ஒரு நாளும் நினைத்ததில்லை.

    ஆனால் தற்போது சமூக வலைதளங்களில், வில்லத்தனமா சிரிக்கும்போதே இவ்வளோ அழகாயிருக்கானே, இன்னும் காதலோட சிரிச்சா எப்படியிருக்கும் என்றும், கோபம், வில்லப் பார்வைனு எதுவானாலும் ரசிக்க வைக்குது என்றும், அவன் கண்ணுக்கும், தாடைல விழற குழிக்கும் மிஸ்டர் தமிழ்நாடுன்ற பட்டம் மட்டுமில்லாமல் மொத்த தமிழ்நாட்டையும் எழுதி வைக்கலாம் என்றும் தனது முகம்பற்றி ரசிகர்கள் கூறுவதை நினைக்க, ம்… அப்படியா இருக்கிறோம்? என்று வியப்பு, திரைத்துறையில் கிடைக்கும் வாய்ப்புகளை தைரியமாக பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

    அடுத்தடுத்து ஆறு படங்களில் வாய்ப்பு வரவே, முதல் படத்தில் தந்தைக்கு தெரியாமல் நடித்தவன் இனி அப்படி முடியாது என்பதால் அன்னையின் துணையோடு தந்தையிடம் சொன்னான்.

    சினிமால நுழைஞ்சவங்க பாதிக்கும் மேல பொண்ணாசையில அழிஞ்சி போய்டுவாங்க, இல்ல தப்பு நடக்காமலே தப்பா சித்தரிக்கப்படுவாங்க, நமக்கு இந்த துறை வேணாம், உனக்கு பிடிச்ச  பாடிபில்டிங்ல கவனத்தை செலுத்து என்று மறுத்தார் மாதவன்.

   தப்பு செய்யனும்னு முடிவு பண்ணிட்டா கலைத்துறைனு இல்லப்பா, எந்த துறையிலும் நடக்கும். என் மனக்கட்டுப்பாடு என்னைக்கும் உடையாது. என்மேல நம்பிக்கையில்லையா உங்களுக்கு? என்று பேசி சம்மதிக்க வைக்க முயற்சித்தான்.

    மகன் பிடிவாதத்தை விட மகன் நடிக்க வேண்டும் என்பதில் மனைவி பிடிவாதம் அதிகமாக, பெரிய மருமகள் இறந்தபின்னே அதீத குற்றவுணர்விலிருந்த மனைவி வருடங்கள் கழித்து ஆர்வமாக இளைய மகனின் சந்தோசத்தை பற்றி யோசிக்கிறாள், இப்படியாவது தேறி குற்றவுணர்விலிருந்து மீண்டு வரட்டும் என்ற எதிர்பார்ப்போடு அன்பரசுவின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்தார் மாதவன்.

   பெரியமகன் சத்தியனும், கடைக்குட்டி சரவணனும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள்தான். ஆனால் அவர்களிடமிருந்து பணம் வாங்குவதில்லை மாதவன். சம்பாதிக்க ஆரம்பித்ததுமே அவரவர் வாழ்க்கையை அவர்களே முடிவு செய்துகொண்ட பெரியமகன், கடைசி மகன்களிடம் கோபமாய் இருந்தனர் மாதவன் ராதா தம்பதி.

    அன்பரசே குடும்பத்தின் மொத்த நம்பிக்கையாய் இருக்க, அவன் வாங்கிய பதக்கங்கள் அதீத பெருமையை கொடுத்தது. அதோடு திரைத்துறையில் கால்பதித்தது அன்னைக்கு மட்டற்ற மகிழ்வை  கொடுத்தது.

   பெரிய மருமகளின் இறப்பை சற்று மறந்து பேத்தியை கவனிப்பதிலும், வழக்கம்போல் அன்பரசிற்கு சமைப்பதிலும் தன் கவனத்தை செலுத்தினார் ஆர்வத்தோடு.

    நாட்கள் நன்றாக சென்றுகொண்டிருந்தது. என்றுமில்லாமல் அன்று பேத்தி தன் அன்னையைப் பற்றி கேட்டிருக்க, பேத்தி பெரியவளான பின்னே அவளின் அன்னைக்கு நான் எதிரி என நினைப்பாளோ? தன்னை வெறுப்பாளோ என்ற வேதனையிலிருந்த நேரம் அன்னையை காண ஆசையோடு வந்தான் அன்பரசு.

   அன்னைக்கு சந்தோசம் கொடுக்கும் செய்தியோடு வந்தான். அன்றுதான் அன்னையின் இறுதிநாள் என அன்பரசு அறியவில்லை அப்போது. அந்த பெரிய நடிகரின் பெயரை சொல்லி “ம்மா அவரே என்னை பாராட்டினார்ம்மா, என் நம்பரை விசாரிச்சு வாங்கி எனக்கு வீடியோ கால் பண்ணினார்.

   கலைத்துறையில நல்ல இடத்தை பிடிப்பேனு பாராட்டினார்” என சந்தோசித்து, “என் முதல் படத்துக்கான சம்பளத்துல வாங்கி வந்தேன்” என்று தங்க வளவியை அணிவித்தான் அன்னைக்கு.

   அன்று பேத்தி தன் அன்னையை பற்றி கேட்ட துக்கமும், பெரிய மகனின் வாழ்வு இச்சிறு வயதிலேயே பட்டமரமாகிப்போன வேதனையோடு அன்பரசு சொன்ன சந்தோச செய்தி எவ்விதமான உணர்வை கொடுத்ததோ பெற்றவளுக்கு.

    துக்கம் சந்தோசம் என்று இரட்டை உணர்வோடு, “இருப்பா திருஷ்டி சுத்தி போடறேன்” என்றெழுந்து சமையலறை சென்றவர்தான் பின்னே திரும்பவில்லை.

    “எவ்வளோ நேரம்மா திருஷ்டிக்கு ரெடி பண்ணுவ? எனக்கு பசிக்குது, சீக்கிரம் வா” என குரல் கொடுக்க, அன்னையிடமிருந்து சத்தம் வராமல் போகவே மாதவன்தான் மனைவியை தேடி கிச்சன் சென்றார்.

    மதவனின் பதட்டக் குரலில் உள்ளே சென்ற அன்பரசு “என்னாச்சுப்பா?” என தரையில் கிடந்த அன்னையை தூக்கிகொண்டு மருத்துவமணை செல்ல நினைத்து வாசலுக்கு வர, “வேணாம் அன்பு. உன் அம்மா போய்ட்டா” என்று கண்ணீர் விட்டார் மாதவன்.

    “இல்ல, அப்படி இருக்காது” என்றவனின் பதட்ட குரலில் கூட்டம் கூடிட, வந்தவர்களும் அன்னையின் இறப்பை உறுதி செய்தனர். ஆனாலும் மனம் ஏற்க மறுக்க, அருகிலுள்ள மருத்துவரை அழைத்து வந்தான்.

    மருத்துவரும் அன்னையின் இறப்பை உறுதி செய்ய, “இன்னைக்கு பேத்தி அவ அம்மா பத்தி கேட்டா அன்பு, அப்போலயிருந்து பித்து பிடிச்ச மாதிரி இருந்தா” என்று மாதவன் புலம்ப, அன்னையை இழப்பை ஏற்க முடியாமல் தவித்தான் அன்பரசு.

   இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்கள் நடைபெற, அன்னையின் மன உளைச்சல் அறியாமல் தான் சொன்ன செய்திதான் அவரின் உயிரை பறித்து விட்டதா? சந்தோசமோ துக்கமோ… அளவிற்கு அதிகமானால் அதுவும் ஆபத்துதானே? என அன்னையின் உயிரை தான்தான் பறித்துவிட்டேன் என்று மிகுந்த வேதனையடைந்தான்.

   பெற்றவளை பறிகொடுத்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது. தான் சொன்ன மகிழ்வான செய்திதான் அன்னையின் உயிரை பறித்துவிட்டது என்று தினம் தினம் வேதனை கொள்பவன் இன்றும் அன்னையின் நினைவில் உழன்றான்.

   கல்பனா “அன்பு… எத்தனை முறை சாப்பிட கூப்பிடறது?” என்ற அத்தையின் குரலில் தன்னுணர்வுக்கு வந்தவன் ஏதும் சொல்லாமல் உண்ண அமர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!