Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு 24.1

அத்தியாயம் 24

    காலை ஆறுமணியிலிருந்து பத்து முறைக்கு மேல் சத்யனுக்கு அழைத்துவிட்டான் அன்பரசு. சத்யன் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்றே வர கடுப்பாகிப்போனான்.

    “என்ன அன்பு டென்ஷனா இருக்க? ஏதும் பிரச்சனையா” என விருந்திற்காக குடும்பத்தோடு வந்திருக்கும் சேகர் கேட்க, “அதெல்லாம் ஒன்னுமில்லை சேகர்” என்றுவிட்டான்.

     சத்யனை கண்டதும் சுகந்தியின் சந்தோசத்தை பார்க்கும் ஆவல் அன்பரசினுள் இருக்க, சத்யனும் அதையே எதிர்பார்த்திருப்பதால் சத்யன் வருவதை மாதவனைத் தவிர வேறு யாருக்கும் சொல்லவில்லை அன்பரசு.



Advertisement

   “என்னாச்சு அன்பு? சத்யனை இன்னும் காணோம்” என்று மாதவன் ரகசியமாய் கேட்க, “நேத்து காலைல கூட நைட் வந்திடுவேனு சொன்னான்ப்பா. ஏன் வரலைனு தெரியல, இப்போ நம்பர் ரீச் ஆகமாட்டேங்குது” என்றான் கவலையாக.

    “சரி சரி விடு, ஃப்ளைட் ஏதும் மிஸ் பண்ணியிருப்பான். வந்திடுவான், பத்து மணி வரைக்கும் வெய்ட் பண்ணலாம்” என சமாதானம் செய்தார். பிறகு ஒரு மணி நேரம் கழித்து சத்யனே அழைத்தான் அன்பரசுக்கு.

   “என்ன சத்யா இது? நைட் வந்திடுவேனுதான சொன்ன? நீ சொன்னதை நம்பித்தான இன்னைக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்தேன், மணி எட்டாகிடுச்சு, இன்னும் நீ வரல. இங்க சேகர் வேற எல்லாம் தயாரா இருந்தும் ஏன் கிளம்பலனு நச்சு பண்றார்” என அண்ணனை காய்ந்தான்.

Advertisement

   “நைட் ஃப்ளைட் மிஸ் பண்ணிட்டேன்டா, அடுத்து டிக்கட் கிடைக்க அஞ்சு மணிநேரத்துக்கு மேல ஆகிடுச்சு. இதோ ஏர்போர்ட் வந்துட்டேன், இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவேன். நீங்க கோவிலுக்கு கிளம்புங்க, நான வந்திடறேன்” என்றான்.

Advertisement

   “அதான் அரைமணி நேரத்துல வந்திடுவல்ல? வெய்ட் பண்றோம்” என்று இணைப்பை துண்டித்தான் அன்பரசு.

   “அத்த எல்லாம் ரெடி பண்ணி வைங்க, இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பிடலாம். கால் பேசிட்டு வந்திடறேன்” என்று தனதறைக்கு சென்றான் அன்பரசு.

   சன்னக்கரையிட்ட சாஃப்ட் சில்க் உடுத்தி கோவிலுக்கு செல்ல தயாராகியிருந்த மனைவியை ரசித்தவன், “முகம் ஏன் வாட்டமாயிருக்கு? உடம்பேது சரியில்லையா?” என்றான்.

Advertisement

  “நல்லாத்தான் இருக்கேன். ஆனா கோவிலுக்கு வரத்தான் பயமாயிருக்கு” என்றாள் இறங்கிய குரலில்.

  “கோவிலுக்கு வர பயமாயிருக்கா?” என்றான் யோசனையாக.

  ஆமாம் என தலையசைக்க, “என்ன பயம்?” என்றான் புரியாமல்.

   முல்லை தயங்க, “என்ன முல்லை? உடம்பேது சரியில்லையா? வீட்டுல சொன்னா எதாவது நினைப்பாங்கனு யோசிக்கிறியா?” என்றான் அர்த்தமாக.

    “இல்ல உடம்புக்கு ஒன்னுமில்ல” என அவசரமாய் மறுத்து, “ஆடும், கோழியும் பாவம், இன்னும் கொஞ்ச நேரத்துல” என பரிதவித்தாள் முல்லை.

   “ஹேய்… இதான் விசயமா?” என தேற்றி, “நீ வேணும்னா வீட்டுலயே இருந்துக்கிறியா?” என்றான்.

   “இல்லயில்ல, இதெல்லாம் பழகிக்கனும். நான் வரேன். ஆனா ஆடு கொல்லும்போது மட்டும் வெளிய வந்து நின்னுக்கட்டுமா?” என்றாள்.

   இதென்னடா இது? எதோ ப்ளான் பண்ணி கொலை பண்ண போற ரேன்ஜ்க்கு யோசிக்கிறா என, “நீ கோவிலுக்கே வரவேணாம், யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க” என்றான்.

   “இல்ல வரேன், நம்ம கல்யாணம் முடிஞ்சதுக்குத்தான பூஜை… நானில்லாம எப்படி? நான் வந்தேதான் தீருவேன், இதெல்லாம் பழகிக்கனும்”

   சாப்பிடறதுலான் பிரச்சனை வரும்னு பார்த்தா கிடாவெட்டுலயே ஆரம்பிக்குதா பிரச்சனை? என பார்க்க, “ரொம்பலாம் படுத்தமாட்டேன், பயப்படாதிங்க” என்றாள்.

   அப்பொழுதும் அன்பரசு யோசனையோடு பார்க்க, “கோவிலுக்கு வந்தேதான் தீருவேன்” என்றாள் மீண்டும்.

    சத்யனிடமிருந்து அழைப்பு வர, ஏற்றவன் “எங்க வந்திட்டிருக்க?” என்றான்.

    “நான் வரது இருக்கட்டும், என் பொண்ட்டியை மட்டும் வீட்டுல விட்டுட்டு நீங்க எல்லாரும் கிளம்புங்க” என்றான்.

    “டேய்” என சிரித்து, “சரி ஆகட்டும்” என இணைப்பை துண்டித்தவன், மனைவியோடு வெளியே வந்து, “அப்பா சத்யன் அண்ணிம்மாவை கூட்டிட்டு வந்திடறானாம், நாம கிளம்பறதாம்” என்றான் சிரிப்போடே.

    “சத்யன் வரானா?” என சந்தோசித்தான் சேகர்.

   “ஸ்… மெல்ல பேசு சேகர், அண்ணிம்மா ரூம் திறந்திருக்கு” என கிசுகிசுத்து, ம், இன்னும் கால்மணி நேரத்துல வந்திடுவான். அண்ணிம்மா அவனோட வருவாங்க, நாம கிளம்பலாம்” என்றான்.

   சத்யன் வருவது அதீத சந்தோசம் என்றாலும், “பொங்கல் மருமகள்தான் வைக்கனும், முல்லைக்கு ஏதும் செய்ய தெரியாது. சுகந்தி இல்லாம எப்படி அன்பு? கொஞ்ச நேரத்துல வந்திடுவான்தானே? எல்லாரும் ஒன்னாவே போலாம்” என்றார் கல்பனா.

   அன்பரசு சேகரை பார்க்க, “ம்மா, கோவிலுக்கு போறோம்னு சத்யனுக்கு தெரியாதா? வந்ததும் டீ குடிக்கலனா சத்யனுக்கு ஆகாது. நாம கிளம்பலாம், அவங்க வருவாங்க” என அதட்ட, கல்பனா கிளம்ப தயாரானார்.

   ஆட்டோவில் ஆடு, கோழி, பூஜைக்கு தேவையான சாமான்களோடு மாதவன் கிளம்ப, மற்றவர்கள் காரில் கிளம்ப ஆயத்தமானார்கள்.

   கார் சத்தம் கேட்டு அறையிலிருந்து சுகந்தி வெளியே வர, “இவங்களை விட்டுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன் அண்ணிம்மா” என்று சிரிப்போடு சொல்லி கிளம்பினான் அன்பரசு.

    மற்றொரு காரில் சேகர் குடும்பத்தோடு செல்ல, இரண்டு கார் போகுது, எனக்கு இடமில்லையா என யோசித்தாள். சேகரின் முகம் அதீத பொலிவை காட்ட, அன்பரசின் சிரித்த முகத்தையும் ஒப்பிட்டு, ஒருவேளை வருவானோ? என யோசிக்க மனம் இனிய படபடப்பிற்குள்ளானது.

  ‘ச்சு… இதென்ன? என்னவோ இருபது வயசுல கல்யாணமான இளஞ்ஜோடியாட்டம்? முப்பத்திரண்டு வயசாகுதுடீ சுகந்தி’ என தன்னைத்தானே அதட்டிக்கொண்டாள்.

    சத்யன் வருவான் என்ற காரணம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அன்பு தன்னை விட்டுவிட்டு செல்லமாட்டான்  என மனம் உறுதியாய் சொல்ல, முத்தம் கேட்டானே?  ஃபோட்டோவுக்கு கொடுத்தியா என விசாரிப்பானோ? என யோசித்திருந்தவளுக்கு இருபது நிமிடம் போனதே தெரியவில்லை.

   இதோ வந்துவிட்டான் சத்யன். வேலையை விடுத்து வந்ததால் உடைமைகள் அதிகம். நான்கு பெரிய பைகள் என்பதால் முதலில் இரண்டை எடுத்து உள்ளே வந்தான். சுகந்தி படபடப்பாய் பார்க்க, மனைவியின் பாவனையை ரசித்தவன் “பார்த்து இரண்டு வாரம் ஆச்சுடீ, நல்லா இருக்கியானு கேட்கமாட்டியா?” என செல்ல முறைப்போடு வெளியேறி அடுத்து இரண்டு பைகளை எடுத்து வந்தான்.

  எப்படியும் அன்பரசு மூலமாக இன்றைய நிகழ்வை தெரிந்துதான் வந்திருப்பான் என, “எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க, சீக்கிரம் குளிச்சு வா, நான் டீ வைக்கிறேன்” என கிச்சன் செல்ல எத்தனிக்க, இவன் ஆயாசமாக சாய்ந்தான் கட்டிலில்.

   என்ன படுத்துட்டான் என்பதாய் பார்க்க, முறைத்தவன் “எவ்வளோ தூரத்துலயிருந்து வந்திருக்கேன்? அதுவும் ஃப்ளைட் மிஸ் பண்ணிட்டு, அஞ்சு மணிநேரம் ஏர்போர்ட்ல வெய்ட் பண்ணி அடுத்த ஃப்ளைட் பிடிச்சு வீடு வந்து சேரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு” என அலுப்பாக சொல்லி,

   “டையர்டா வந்திருக்கானே… ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுக்க விடலாம்னு தோணுதா?” என கடுகடுத்து குளிக்கபோனான்.

   ஆமாம்ல? என்று சுகந்திக்கு சங்கடமாகிட, “சரி நீ குளிச்சிட்டு ரெஸ்ட் எடு, நான் கோவிலுக்கு போய்ட்டு வரேன்” என்றாள் உண்மையாக.

   “உனக்கு புருசனோட இருக்கலாம்னு தோணலைனாலும், எனக்கு  பொண்டாட்டியோட இருக்கனும். இரண்டு நிமிஷத்துல வந்திடுவேன், போய் டீ வை” என்றான் உள்ளிருந்து.

   “வேணும்னே என்ன சொன்னாலும் குறை கண்டுபிடிக்கிறான்” என சத்தமாகவே முணுமுணுத்து டீ வைக்க போனாள்.

   சிரித்தபடியே குளித்து முடித்தவன், வேஷ்டி சர்ட் அணிந்துகொண்டு ஹாலுக்கு வர, சுகந்தி டீயை நீட்டினாள்.

   டீயை வாங்கிப் பருகிக்கொண்டே, “அன்பு பைக் சாவி எடு” என்றான்.

   சுகந்தி பைக் சாவியை நீட்ட, “ஒரு முறையாவது நான் கொடுத்த ஹோம் ஒர்க்கை பண்ணுனியா?” என்றான் சாவி கேட்ட தோரணையிலேயே.

   சில நொடி புரியாமல் பார்த்தவள், பின்னே போட்டோவிற்கு முத்தம் கொடுக்க சொன்னதை கேட்கிறான் எனப்புரிந்து சுகந்தி வெளியேற எத்தணிக்க, மனைவியை ரசித்தவன்,

   “நான் இருக்கும்போது ஒருநாளாவது இப்படி நிறக்க பூ வச்சு, குங்குமம் வச்சிருக்கியாடீ?” என அதட்டி, இழுத்தணைத்தவன் கன்னத்தில் முத்தமிட, சுகந்தி ‘கோவிலுக்கு போகனும்’ என சொல்வதற்குள் சத்யனின் முத்தம் இதழுக்கு இடம்மாறியது.

   சற்று நேரம் கழித்து விடுவிக்கவும் இவள் தலைகுனிய, இவனும் சிரிப்போடு குனிந்து சுகந்தி முகம் பார்க்க,  “லூசு கோவிலுக்கு போகனும்டா” என முணுமுணுத்தாள் சன்னக்குரலில்.

   “முத்தம் சாமி குத்தத்துல வராது” என கண்ணிமைத்து, “மச மசனு நிக்காம வீட்டை பூட்டு, நான் போய் வண்டி துடைக்கிறேன்” என்று வெளியேறினான்.

   பைக்கில் செல்லும்போது சுகந்தி அமைதியாக வர, “குலசாமிகிட்ட பையன் வேணும்னு வேண்டிக்கடி” என்றான் இன்றைய இரவை உணர்த்தும் பாவனையில்.

   சத்யனோடு வாழும் எண்ணத்தில்தான் இருக்கிறாள் சுகந்தி. ஆனால் அந்தநேரம் தன்னையறியாமல் முகம் ஒவ்வாமையை காண்பித்துவிட்டால் சத்யன் கோபப்படுவானோ என்ற பயம் இருக்க, தற்போது சத்யன் மகன் கேட்கவும் முகம் தன்போல் பதட்டத்தை காண்பித்தது.

   பைக் கண்ணாடியில் சத்யன் தன்னை ஊன்றிப் பார்ப்பதை உணர்ந்து, “இந்த நினைப்பையெல்லாம் தள்ளி வச்சிட்டு வண்டி ஓட்டு” என்றாள் முறைப்பாக.

   “ஏண்டீ? ஏன் தள்ளி வைக்கனும்?” என உரிமையாய் கேட்க, “நீ புள்ளையை கொடுத்துட்டு குவைத் போய்டுவ, நான் தனியா கஷ்டப்படனுமா? முடியாது போடா” என்றாள் கோபம்போல்.

   “ஹாஹா” என உல்லாசமாய் சிரிக்க, இவனிடம் இப்படியெல்லாம் பேசுகிறோமே என சுகந்திக்கே வியப்பாகிட, “என்ன இளிப்பு? வாய மூடிட்டு வண்டி ஓட்டுடா” என அதட்டினாள்.

   இதமான மனநிலையோடு குலதெய்வக் கோவிலை அடைந்தனர் இருவரும்.

   திருமணத்திற்கு பின்னே முதன்முதலாய் இன்முகத்தோடு ஜோடியாய் வந்திருக்கும் மகள் மருமகனை பார்த்து மனம் நிறைந்து போனார் கல்பனா.

   “வா சத்யா, வரேனு சொல்லவேயில்ல” என மகிழ்வோடு குறைபட்டு, “முல்லை பொங்கல் வச்சிட்டிருக்கா, போய் என்னனு பாரு சுகந்தி” என்றார்.

   “பெரியப்பா” என ஜனனி தந்தையிடம் செல்ல, செல்ல மகளை அணைத்து முத்தமிட்டான். அனைவரும் சத்யன் நலம் விசாரித்தபின்னே அடுப்பில் விறகை வைத்துக்கொண்டிருக்கும் அன்பரசிடம் சத்யன் வர, “வாடா” என வரவேற்றான் மகிழ்வோடு.

   “நல்லாயிருக்கிங்களா மாமா?” என முல்லையும் மூக்குறிஞ்சியபடியே விசாரிக்க, “நல்லாயிருக்கேன்ம்மா, “கல்யாணத்தன்னைக்கே விட்டுட்டு போனான்ல? அவனே வைக்கட்டும், இந்த பக்கம் வாம்மா” என்றான் சிரிப்போடு.

   “ஆமாம்ல மாமா?” என முல்லை புகையிலிருந்து நகர்ந்தாள். சாதமும் தண்ணீரும் சரியான பதத்தில் இருக்க, “இதுக்கு மேல நெருப்புபோட தேவையில்ல, தணலே போதும்” என புகைந்துகொண்டிருந்த விறகை வெளியே எடுத்து தண்ணீர்போட்டு அணைக்க, புகை மட்டுபட்டது.

    “அண்ணிம்மானா அண்ணிம்மாதான்” என அன்பரசு பாராட்ட, சத்யன் வருவது தெரிந்தும் அன்பரசு தன்னிடம் சொல்லாத கோபத்தில், “உன் பாராட்டு தேவையில்ல போடா, இரண்டு பேரும் கூட்டு களவானிங்க” என்றாள் சுகந்தி.

    “நான் என்ன அண்ணிம்மா பண்ணினேன். எப்போவும் நான் உன் கட்சிதான?” என பாவமாய் அன்பரசு சொல்ல, சிரித்த சத்யன், “நான்தான் எரும சொல்ல வேணாம்னேன்” என்றான்.

    “அதைத்தாண்டா கூட்டு களவானிங்கனு சொன்னேன்”

   “பெரியம்மா, எனக்கும் ஒரு ரகசியம் தெரியுமே” என்றாள் ஜனனி.

   “பார்த்தியா? நீயும் என்பக்கம் இல்லையா?” என சுகந்தி கோபிக்க, “நான் உங்க பக்கம்தான். அதனாலதான் தாத்தா சொன்ன ரகசியத்தை சொல்லப்போறேன். அது என்னன்னா இனி பெரியப்பா குவைத் போகமாட்டார். நம்மளோடவேதான் இருக்கப்போறாராம்” என்றாள் மகிழ்வோடு.

    அப்படியா? என்பதாய் சுகந்தி பெரும் வியப்போடு கணவனைப் பார்க்க, சிரித்தவன் “பொங்கலை பாரு. பூஜைக்கு நேரமாகிடுச்சு” என்றான்.

   பொங்கல் இறக்கியதும், அனைத்தும் சுவாமி சிலைமுன் கொண்டுசெல்லும்வரை உதவிய முல்லை, கிடா வெட்ட தயாரானதும் கண்ணை மூடி நின்றவள், ஆடு,கோழி வெட்டியபின் அன்பரசு பக்கத்தில் வரவும்தான் கண்திறந்தாள்.

   “அங்கெல்லாம் ரத்தமா இருக்கு, இந்தபக்கம் வா” என மனைவியை வேறுபாதையில் அழைத்து வந்து, “சத்யனோட போ, நான் இதெல்லாம் க்ளீன் பண்ணிட்டு அப்பாவோட வரேன்” என அனுப்பி வைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!