Skip to content
Post Views: 13,455
“ ம் இருக்கா ” என்றார் சோர்வாக .
மாதவன் “போன வாரம் கூட ஒரு வரன் வந்தாங்க அன்பு, இரண்டாந்தாரமா கூட இல்ல, பையனுக்கு முப்பத்தெட்டு வயசு, தங்கைகளுக்கு கல்யாணம் முடிச்சிட்டு இப்போதான் அவனுக்கு பண்ணிக்க எண்ணமே வந்ததாம்.
இந்த வயசுல சின்ன பிள்ளைகளை கட்டிக்க பிடிக்காம நம்ம சுகந்தியை கேட்டுருக்காங்க. முடியவே முடியாதுனுடுசாம். கல்பனாகிட்டயும் கல்யாணம் பிடிக்காததால உனக்கு பாரமாகிட்டேனானு கேக்குதாம் அன்பு ” என்றார் கவலையாக.
“இவளை ” என நொந்துகொண்டவன், “இன்னைக்கு போய் இங்க அழைச்சிட்டு வா அத்த, நான் பேசிப்பார்க்குறேன் ” என்றான் அன்பரசு.
Advertisement
“வேணாம் அன்பு. உன்கிட்டயும் கோபப்படுவா. அவ விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும் ” என்றார் கல்பனா.
போனில் பேசும்போதும் நலம் விசாரிப்பது , என்ன சாப்பிட்ட ? என்ற இயல்பான உரையாடல்களுக்கு இயல்பாய் பதிலளிப்பாள் சுகந்தி . ஆனால் திருமணம் பற்றி பேசிவிட்டால் இணைப்பை துண்டித்திடுவாள் . ஒருமுறை அத்தையின் வீட்டிற்கே சென்றும் பேசிப்பார்த்தான் அன்பரசு . அறையில் சென்று கதவடைத்தவள் அன்பரசு கிளம்பும்வரை திறக்கவே இல்லை .
அதோடல்லாமல் ஒருமாதம் வரை போனிலும் கூட பேச மறுத்துவிட்டாள் . இப்படி இருப்பவளை எப்படித்தான் சரிசெய்வதென யோசித்து யோசித்து களைத்துப்போய் விட்டுவிட்டார் கல்பனா .
Advertisement
சத்தியனை விட இரண்டு வயது மூத்தவள் சுகந்தி . ஆனாலும் சத்யன் , அன்பரசு , சரவணன் மூவருமே பெயர் சொல்லி அழைப்பதே அபூர்வம்தான் . புள்ள , பாப்பா , எரும , கழுத இப்படி பல புனைப்பெயர்களை வைத்துதான் அழைப்பார்கள் .
Advertisement
என் பொண்ணு உங்களுக்கெல்லாம் மூத்தவ . சுகந்தி பெரிய பொண்ணானதும் , ஏன்டா இப்படி பேசுறிங்க என்று கல்பனாவே ஆற்றாமையோடு கேட்டிருந்தார் . அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சத்யன் , இதனால நமக்குள்ள வெட்டுப்பகை குத்துப்பகை ஆனாலும் சரி … அந்த எருமைக்கெல்லாம் மரியாதை முடியாது என்றுவிட்டான் . அண்ணனின் கூற்றையே அன்பரசும் சரவணனும் ஆமோதித்து புள்ள என்றுதான் அழைப்பார்கள் .
ராதாவும் மகேஷ்வரனும் அண்ணன் தங்கை ஆவார் . மாதவன் ராதாவையும் , மாதவனின் தங்கை கல்பனாவை மகேஷ்வரனும் திருமணம் செய்துகொண்டனர் . இப்படியாக இரு குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றானதால் பெரியவர்களும் சத்யனை கண்டிக்கவில்லை .
சுகந்தியின் திருமணத்திற்கு பின்னேதான் சுகந்தி என்று பெயர் சொல்லி அழைத்தான் அன்பரசு . பின்னே தம்பியிடமும் இனி புள்ளனு சொல்லாத . என்று கட்டளையிட்டிருந்தான் .
Advertisement
சுகந்தி திருமணத்திற்கு முன்பாகவே தனது இருபத்தி இரண்டு வயதில் பொறியியல் படிப்பு முடிந்ததுமே விரும்பிய பெண்ணை மனம் முடித்துக்கொண்டான் சத்யன். அதனால் வீட்டில் பேச்சு வார்த்தை இல்லாமல் போக, சுகந்தியிடம் பேசும் வாய்ப்பில்லாமல் ஆனதோடு, அவளின் திருமணத்திற்கும் செல்ல முடியாத சூழல் உண்டானது.
அப்பொழுதும் ஒருவாரம் கழித்து சுகந்தியை சந்தித்து வாழ்த்து கூறி திருமண பரிசை அளிக்க அவளின் கணவன் வீட்டிற்கு மனைவியோடு சென்றிருந்தான் சத்யன் .
முதலிரவிற்கு பிறகு கணவனை சுகந்திக்கு அரவே பிடிக்காமல் போக , மீள முடியாத பெரிய குழிக்குள் சிக்கிக்கொண்டதை போன்ற உணர்விலிருந்த சுகந்தி , பாசத்தோடு தன்னை காண வந்த சத்யனிடம் சரியாக பேசவும் இல்லை . இப்படி வாழ்க்கைக்கு பரிசு ஒரு கேடா என்று அவனின் பரிசையும் நிராகரித்தாள் .
குடும்பத்தார் தன்னை ஏற்காத வேதனையோடு சுகந்தியின் நிராகரிப்பு பெரும் அவமானத்தை கொடுக்க , அதன் பின் சுகந்தியிடம் பேசுவதையும் நிறுத்தியிருந்தான் சத்யன் .
திருமணம் முடிந்து தலை தீபாவளி அழைப்பு , ஆடி மாத அழைப்பு , என எந்த பண்டிகைக்கு வந்தாலும் அதன்பின் கணவனோடு சுகந்தியை அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிடும் கல்பனாவிற்கு .
என்னதான் பிரச்சனை ? என கல்பனாவும் பலமுறை கேட்டுப்பார்த்தார் . எனக்கு பிடிக்கல என்ற சொல்லோடு முடித்துக்கொள்வாள் சுகந்தி . அதுவும் அன்னை கேட்டால் மட்டுமே அந்த பதில் . மற்ற யார் கேட்டாலும் முறைப்பை பதிலாய் கொடுப்பாள் . அல்லது அழுவாள் .
இப்படியாக மகளை வற்புறுத்தி வற்புறுத்தி அனுப்பி வைத்தார் ஒன்பது மாதம் வரை . பின்னே சுகந்தி கர்பமானாள் . விசயம் கல்பனாவிற்கு சொல்லப்பட , கல்பனா கணவனோடு , மாதவன் ராதாவும் சுகந்தியை காண சென்றனர் மகிழ்வோடு .
என்னால முடியலம்மா , ரொம்ப வாந்தி வருது . நான் நம்ம வீட்டுக்கு வரேன் என பாடாய்பட்டாள் சுகந்தி . இப்போதான இரண்டு மாசம்னு சொல்லியிருக்காங்க . இரட்டைபடை மாசத்துல அழைச்சிட்டு போகக்கூடாது . அடுத்த மாசம் நல்ல நாள் பார்த்து அழைச்சிட்டு போறேன் என்று மகளைத் தேற்றிவிட்டு வந்தனர் பெற்றோரும் மாமன் குடும்பமும் .
அடுத்த பத்தாம் நாள் சுகந்தியின் கர்பம் தானாக கலைந்திட , அடித்து பிடித்து மகளைப் பார்க்க சென்றனர் கல்பனாவும் மகேஷ்வரனும் . என்ன ஆச்சு ? வெய்ட் தூக்குனியா ? என்று எத்தனை கேள்விகளை கேட்டும் வாயை திறக்கவில்லை சுகந்தி .
இப்படியே விடக்கூடாது . ஹாஸ்பிட்டல் போய் உடம்பை சுத்தம் செய்துடலாம் என்று கல்பனா கூற , அதற்கு சம்மதம் தெரிவித்தாள் சுகந்தி . பின்னே மருத்துவமணை சென்று வயிற்றை சுத்தம் செய்ததும் , நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலனா செத்துடுவேன் என்றாள் திடமான குரலில் .
பதறிய மகேஷ்வரன் , இன்னும் மயக்கம் கூட சரியா தெளியல . புள்ள இவ்வளோ உரக்க சொல்லுதுனா எதாவது இருக்கும் கல்பனா . நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போலாம் என்றார் .
கல்பனாவும் ஆமோதிக்க , அன்று மாலை தனது வீட்டிற்கு அழைத்து வந்தனர் மகளை . அதன் பின்னே ஒருமாதம் கழித்து , கணவன் வீட்டிற்கு செல்ல பொறுமையாக அறிவுரை கூற ஆரம்பித்தார் கல்பனா .
அன்று மருத்துவமணையில் சொன்னதையே மீண்டும் சொன்னாள் சுகந்தி . பலமுறை சொல்லிப்பார்த்தனர் . மாதவனும் ராதாவும் கூட எடுத்துரைத்தார்கள் .
எப்போ அங்க கூட்டிட்டு போய் விட்டாலும் அடுத்தநாளே செத்துடுவேன் என்று தன் முடிவில் இருந்து மாறவேயில்லை சுகந்தி . மாதங்கள் போய் ஒரு வருடமே முடிந்திருந்தது . ஆனால் சுகந்தி முடிவில் மாற்றம் இல்லை .
மகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கப்போகிறோம் . விவாகரத்து கொடுங்கள் என்று சுகந்தி மாமியார் கேட்க , கல்பனாவும் மகேஷ்வரனும் அதிர்ந்தனர் . ஆனால் எவ்வித சலனமும் இல்லாமல் சம்மதம் தெரிவித்தாள் சுகந்தி . விவாகரத்து பெற்ற ஆறே மாதத்தில் முதல் கணவனுக்கு திருமணமான போதும் கூட வருந்தவில்லை . மாறாக பெரிதாய் விடுதலையான உணர்வில் இருந்தாள் .
இதோ கணவனை பிரிந்து வந்து எட்டு வருடம் ஆகிவிட்டது . மறு திருமணத்திற்கும் சம்மதிப்பதில்லை . முதல் கணவைனை பிரிந்ததிலும் வருத்தமில்லை . இன்றும் சுகந்தியின் வருத்தமெல்லாம் மற்றவர் தன்னை நினைத்து வருந்துவதுதான் .
நான்கு வருடம் முன்பு கல்பனாவின் கணவன் உடல்நலக் குறைவால் இறந்திட , கணவன் இறந்த துயரமும் , மகளின் வாழ்வை நினைத்தும் நிலைகுழைந்து போனார் கல்பனா .
வீட்டில் சுப காரியம் நடந்தால் தங்கையின் மனம் ஆறுதலடையும் என்று கல்பனாவின் மகன் சேகருக்கு திருமணம் முடித்து வைத்தனர் மாதவனும் ராதாவும் .
மருமகள் நல்ல குணமுடையவளாக இருப்பதாலும் , அதே வருடத்தில் மருமகள் உண்டானது , பின்னே பேரன் பிறந்தது என சற்று தேறி வந்தார் கல்பனா . ஆனாலும் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியானதில் முழுமையான நிம்மதி என்பது இல்லாமல் போனது .
அடுத்த பேரிடியாக அண்ணி ( ராதா ) இறந்ததால் , சத்யனின் குழந்தையைப் பார்த்துகொள்ள அண்ணன் வீட்டிலேயே தங்கிகொண்டார் கல்பனா . பேரன் பேத்திகளையும் மகளையும் பார்க்கத் தோன்றினால் அன்பரசு வீட்டில் இருக்கும் நாள்பார்த்து சென்று வருவார் தனது வீட்டிற்கு .
தற்போது சத்யனின் திருமணத்தை விட அவனை விட இரண்டு வயது மூத்தவளான சுகந்தி வாழ்வே முக்கியமாய் பட அரைமணி நேரம்வரை ஆழ்ந்த யோசனையிலிருந்த அன்பரசு , “ அந்த வரன் அவளுக்கு பிடிக்கலனா விடுத்த , நான் வேற பார்க்குறேன் ” என்றான் .
“ நீ பார்த்தாலும் அவ கட்டிக்கனுமே அன்பு ” என்று கல்பனா வருந்த , “ விடுத்த பார்த்துக்கலாம் . சுகந்தி யாரையும செய்துக்கலனாலும் நம்ம ஜனனியைப் போல நானே பார்த்துப்பேன். அப்படியே விட்டுடமாட்டேன் ” என தேற்றினான் .
“ அவளை பார்த்துக்கிறதா பிரச்சனை ? சேகரும் மருமகளும் ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க . இப்படி பட்ட மரமா இருக்காளேனுதான வேதனையா இருக்கு ” என வருந்தினார் .
“ சுகந்தி கல்யாணம் முடியாம நான் செய்துக்கமாட்டேன் . போதுமாத்த ? ” என்றான் இலகுவாக .
“ ம் … அது நடந்துடுச்சினா போதும் ” என்றார் வேண்டுதலாக .
மாதவன் , “ ரங்கசாமியோட பொண்ணுகிட்ட யார் வம்பு செய்தாங்கனு கண்டுபிடிச்சிட்டியா அன்பு ? ” என்றார் .
“ கஜேந்திரன்ப்பா ”
வேறு யாராவது தொல்லை செய்திருப்பார்கள் . ரங்கசாமி வேண்டுமென்றே மகனின் ஜிம்மிற்கு வரும் ஆண்களை குறை சொல்லியிருக்கிறார் என்று நினைத்திருந்த மாதவன் “ என்ன ? நம்ம ஜிம்முக்கு வர கஜேந்திரனா ? ” என அதிர்ந்தார் வெகுவாக .
“ ஆமாம்ப்பா ” என்றவனுக்கு பிறகுதான் முல்லையின் நியாபகம் வர , அதை மறைத்து , “ இனி ஜிம்முக்கும் வரக் கூடாதுனு சொல்லிட்டேன்ப்பா . ஒரு வருசமா மறைமுகமா கிண்டலடிச்சிருக்கான் , இப்போ ஒரு மாசமா ரொம்ப தொல்லை கொடுத்திருக்கான் . ஆதிராஜ் சொன்னான் . அதனால இனி ஜிம்முக்கும் வர வேணாம்னு சொல்லிட்டேன் ” என்றான்.
கஜேந்திரன் மீது கோபம் வந்தாலும், அவனின் அயராத உழைப்பையும் இலக்கையும் நினைத்து, “இரண்டு மாசத்துல போட்டி வரப்போகுதே அன்பு. இந்த ஒருமுறை கண்டிச்சு ஜிம்முக்கு வர விட்டுருக்கலாமில்ல? ” என வருந்தினார் மாதவன்.
“ என் குணம் தெரிஞ்சும் இப்படி செய்திருக்கான் . இவ்வளோ கீழ்தரமா இருப்பானு நான் நினைச்சே பார்க்கலப்பா . இவன்லாம் ஆணழகன் போட்டியில ஜெயிச்சு மட்டும் என்னாகப்போகுது ?
நம்ம டைப் இன்ஸ்டியூட்க்கு ஸ்கூல் , காலேஜ் படிக்கிற நிறைய பொண்ணுங்க வராங்க . இவனை நம்பி எப்படி திரும்ப சேர்த்துக்கிறது ? நானும் எப்போ வீட்டுல இருப்பேன் , எப்போ ஷுட் போவேன் ? வெளில போனா ஷுட் முடிய எவ்வளோ நாள் ஆகும்னு தெரியாது . அதான் துரத்திட்டேன் ” என்றான் கோபமாக .
“மணி ஒன்பதாகப்போகுது அன்பு , சாப்பிட எடுத்து வைக்கிறேன் ” என்று கிச்சனுள் போனார் கல்பனா .
பின்னே கல்பனா பரிமாற தந்தையோடு உண்டு முடித்தவன் , வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்ய வெளியேறினான் .
அன்பரசும் சத்யனின் திருமணம் , மனைவி இறந்து எட்டு வருடங்களான போதும் மறுமணம் செய்ய மறுத்தது , சின்னவன் காதல் தோல்வியை தாளமுடியாமல் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றது , சுகந்தியின் மறுமணப் பிடிவாதம் என வேதனையில்தான் இருந்தான் .
அன்னையின் திடீர் மரணம் எவ்வித இழப்பென்றாலும் உயிரைவிட அது பெரிதல்ல என்பதை உரக்க சொல்லிக் கொடுத்தது . வாழும் காலம் எவ்வளவு என்று தெரியாது . உயிரோடு இருக்கும்வரை குறைந்த பட்சம் நம்மை சார்ந்தவர்களையாவது சந்தோசமாக வைத்துக்கொள்ள முடிவெடுத்தான் .
சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோதே மகன் கெட்டுவிடுவான் என திருமணம் செய்ய வலியுறுத்தினார் மாதவன் . இருபத்தி அஞ்சு வயசுதான் ஆகுது , அதுக்குள்ள கல்யாணமா ? என மறுத்திருந்தவன் , அன்னை இறப்பிற்கு பின்னே , சத்யன் திருமணம் செய்தால்தான் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றிருந்தான் .
தம்பி திருமணத்தில் ஆவல் கொண்டாலும் தன் மறுமணத்தைப் பற்றி யோசிக்கவேயில்லை சத்யன் . சத்யனுக்கு சுகந்தியை மணம் முடிக்கும் எண்ணத்தை எப்படி சாத்தியப்படுத்துவது ? முதலில் அத்தை , அப்பாவிடம் பேசிவிட்டு பிறகு சத்யனிடம் பேசலாமா என நினைத்தபடி நடந்துகொண்டிருந்தவன் கவனத்தை கலைத்தது ரங்கசாமியின் கரகரத்த குரல் .
முன்னே நடந்தவன் மீண்டும் பின்னே நடக்க , “ நீங்க ஏன்ப்பா அழறிங்க ? பொண்ணா பிறந்தா கல்யாணம் செய்தே ஆகனுமா என்ன ? எனக்கு நீங்களும் அம்மாவும் போதும்ப்பா ” என தந்தையை தேற்றினாள் முல்லை .
“ நாங்க இல்லாத காலத்துக்கு உனக்கு துணை வேணுமேடா ” என கலங்க , “ எனக்கு எதுக்கு துணை ? நான்தான் மத்தவங்களுக்கு துணையா இருக்கப்போறேன் . என்னை எந்த ஆஸ்ரமத்துலயிருந்து தத்தெடுத்தேனு சொல்லுங்கப்பா , நம்ம அப்பார்ட்மண்ட் , காம்ப்ளக்ஸல வர வாடகையோட என் சம்பளத்தையும் சேர்த்து நிறைய பேரை வாழ வைக்கிறேன் ” என்றாள் முல்லை .
ரங்கசாமி அன்பரசை பார்த்திட , “ என்னப்பா அமைதியாகிட்டிங்க ? ” என்ற முல்லையும் தந்தை பார்வை போன திசையைப் பார்த்து மீண்டும் தந்தையைப் பார்த்தவள் , “ டைம் ஆச்சுப்பா , கார் எடுங்க ” என்றாள் .
“ உங்க பொண்ணுகிட்ட தவறா நடந்துகிட்டவன் இனி அப்படி நடந்துக்கமாட்டான் . குடுக்க வேண்டியதை கொடுத்து ஜிம்முக்கும் வரவேணாம்னு சொல்லிட்டேன் . எங்க ஜிம் , டைப் இன்ஸ்டியூட்க்கு வர பசங்களால உங்க பொண்ணுக்கு எதாவது பிரச்சனைனா தயங்காம என்கிட்ட சொல்லுங்க . நான் இல்லைனாலும் அப்பாகிட்ட சொல்லுங்க . இதை சொல்லத்தான் நின்னேன் ” என்று தன்மையாக சொல்லி கிளம்பினான் .
error: Content is protected !!