Skip to content
Post Views: 13,907
அத்தியாயம் 5
சென்னை வந்து டைரக்டரை பார்த்தவனிற்கு அதீத சந்தோசம் தொற்றிக்கொண்டது. அதிலும் இரட்டை சந்தோசம். எதோ ஓரிரு காட்சிக்காக அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து அன்பரசு வந்திருக்க, நானே முக்கிய வில்லன் என்று இயக்குனர் கூறியது பெரும் சந்தோசம் என்றால், படத்தில் தனது முதல் படப்பிடிப்பு குவைத்தில்.
தன் அண்ணன் இருக்கும் நாடு. இரண்டு நாட்கள் கழித்து அண்ணனை நேரில் பார்க்கப்போகிறேன் என்ற சந்தோசம் மனதை ஆர்ப்பரித்தது. சத்யனிற்கு அழைத்து சொல்லலாமா? இல்லை சொல்லாமல் சென்று அவன்முன் நிற்கலாமா? என யோசித்தவன், ம்… அங்கே சென்றபின் தனக்கு ஓய்வு நேரத்தில் அவனிற்கு ஓய்விருக்குமா? சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து நாம் ஏமார்ந்திட வேண்டாம்.
காட்சிகள் சரியாக அமைந்தால் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிந்திடும் என்று இயக்குனர் சொன்னதை நினைத்தவன், முன்பாகவே சத்தியனுக்கு சொல்லி விடுவதுதான் நல்லது என அண்ணனிற்கு அழைத்தான்.
Advertisement
அழைப்பை ஏற்ற சத்யன் “நானே கால் பண்ணலாம்னு இருந்தேன்டா. கிருஷ்ணன்சார் படத்துல கமிட் ஆகியிருக்கியாமே. கங்ராட்ஸ்டா” என்றான் உற்சாகமாக.
“அப்பா சொன்னாரா?”
“ம்” என்றான் பெருமையாக.
Advertisement
“போன்ல வாழ்த்தினா பத்தாது” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
Advertisement
“ம்… எனக்கும் ஊருக்கு வர ஆசைதான். நீதான் எத்தனை வருசம் ஆனாலும் கல்யாணம் செய்துக்க முடிவு செய்தா வா. இல்ல குவைத்லயே சாவுனு சொல்லிட்ட” என்றான் சோகம்போல்.
சிரித்தவன் “ஏன் நீதான் இந்தியா வருவியா? நாங்கள்லாம் குவைத் வரமாட்டோமா?” என்றான்.
“டேய்…” என சந்தோசமாய் கத்தி, “இங்கதான் ஷுட்டிங்கா?” என்றான்.
Advertisement
“ம் வியாழக்கிழமை அங்க இருப்பேன்” என்றவன் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சொல்ல, “டேய் அது நான் இருக்கிற இடத்துலயிருந்து ஒன்ஹார்தான். நான் ஏர்போர்ட் வரேன்” என்றவன், “பாப்பாக்கு பாஸ்போர்ட் எடுனு எத்தனை முறை சொன்னேன்?” என்றான் கோபமாக.
“பாஸ்போர்ட் இருந்தா மட்டும் கூட்டிட்டு வந்திடுவேனா? என்னைக்கோ ஒருநாள் நீ கொஞ்சலைனுதான் என் பொண்ணு ஏங்கி கிடக்குறாளா?” என்றான் கடுப்பாக.
சத்யன் அமைதியாக, “ப்ச்” என கண்மூடித்திறந்தவன், “நான் ரொம்ப நல்ல மூட்ல இருக்கேன். உன்னை திட்ட வைக்காதே. உன்கிட்ட முக்கியமான விசயம் பேசனும். நான் அங்கயிருக்கும்போது ஒருநாள் லீவ் போடுறமாதிரி பார்த்துக்கோ” என்று இணைப்பை துண்டித்தான்.
சுகந்தி பற்றிய தனது முடிவை சத்யன் ஏற்பானா என பலமாய் யோசித்தான். ஒரு வாரம் கழித்து வீடியோ காலில் அழைத்து சத்தியனிடம் இதுபற்றி பேசலாம் என்றுதான் நினைத்தான். தற்போது நேரில் பார்க்கும் வாய்ப்பு வரவே, நேரிலேயே எடுத்துரைத்து எப்படியாவது சத்யனை சம்மதிக்க வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தான்.
சென்னையிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்து, குவைத் கிளம்பினான் குழுவினரோடு. சொன்னது போலவே ஏர்போர்ட் வந்திருந்தான் சத்யன்.
இருவரும் ஆரத்தழுவிக்கொண்டதையும் முக சாயலையும் இயக்குநர் யோசனையோடு பார்த்திருக்க, “என் அண்ணன் சார். கூடப்பிறந்தவன். என் அம்மா இறப்புக்கு வந்தவன் அதுக்கப்புறம் வரவேயில்ல. இரண்டு வருசமாச்சு இவனைப் பார்த்து” என அறிமுகம் செய்தான். குழுவினர் அனைவரும் இருப்பதால் குடும்பத்தின் நலன் விசாரிப்பு, இவனின் பட வாய்ப்பு போன்ற விசயங்களை பேசினான்.
இயக்குனர் ஷுட்டிங் பார்க்க அனுமதிக்கவே அன்பரசோடுதான் இருந்தான் சத்யன். மகளின் திறமை, தந்தை, அத்தை உடல்நலம் அவர்களின் குடும்ப உறுப்பினர் நலம் என நிறைய அறிந்துகொள்ள ஆசை.
மாலை நேரத்து காலநிலை எடுக்கப்போகும் காட்சிக்கு ஏற்றார் போல் இருக்க ஏர்போர்ட்டிலிருந்து விடுதிக்கு சென்றதுமே படபிடிப்பிற்கு தயாராக சொல்லியிருந்தார் இயக்குனர். அதனால் தம்பியிடம் தனித்து பேசும் சூழல் அமையவில்லை.
இந்த படத்தில் தனது எதிரிகளை மிரட்டி தற்கொலை செய்ய வைக்கும் குணமுடையவன் அன்பரசு. அப்படியொரு காட்சிதான் தற்போது படமாக்கப்பட இருக்கிறது. எதிராளியின் தற்கொலைக்கு முன்னே அவனின் அடியாட்களை அடிக்கும் காட்சி எடுக்கப்படயிருக்க, அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
பெரிய இயக்குனரிடம் பணி புரியப்போகிறோம். ஒரு காட்சி கூட தன்னால் ரீடேக் ஆகக்கூடாது என்று கால்மணி நேரம் வரை தனது காட்சிக்கான ஒத்திகையை மனதினுள் ஓட்டிக்கொண்டிருந்த அன்பரசை அழைத்தார் இயக்குனர்.
பின்னே அன்பரசிடம் காட்சியினை மீண்டும் விளக்கி, படமெடுக்க தயாரானார்கள். முதல் அடியாளை அடிக்கும்போதே மற்ற நால்வரும் தெறித்து ஓடும் காட்சியில், ஐவரும் தனது சர்ட்டை உயர்த்தியவாறு அன்பரசை நெருங்கினர்.
“டேய் இவனை அடிக்க இத்தனை பேரா?” என ஒருவன் மட்டும் முன்னே வர, பத்து நிமிடம் வரை அவனின் கால் சுழற்றலுக்கும், கைக்கும் சிக்காமல் போக்கு காட்டி, பின்னே வயிற்றில் ஒரு குத்து விட்டு, கழுத்தை பிடித்து சுவற்றோடு மேலேற்றினான் அவனின் காட்சிப்படி.
அங்கே பென்ஞ்ச் போட உதவியாளர்கள் மறந்திருக்க, இயக்குனர் கோபமாக, பத்து நிமிடம் தொடர்ந்து எடுத்த காட்சி, இச்சிறு விசயத்தால் பலனற்று போகாமல் இருக்க, சுவற்றோடு ஒட்டியிருந்தவனின் குரல்வளை வலிக்காமல் இருப்பதற்காக அவனின் பாரத்தை தன் மற்றொரு கையால் அன்பரசு தாங்கவே, அது தெரியாவண்ணம் காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டது.
“கட்… கட். எக்ஸலண்ட் அன்பு” என இயக்குனர் பாராட்ட, அன்பரசோ… அடியாளாக நடித்தவனிடம் “ஓகே வாண்ணா?” என்றான் அக்கறையாக.
“தொண்ணூத்தியெட்டு கிலோ அன்பு நானு. அசால்ட்டா தூக்கிட்ட?” என வலியோடு பாராட்டினான் அவன்.
இங்கே, சற்று நேரத்தில் தற்கொலை செய்வதாக நடிக்க இருக்கும் நடிகன் அன்பரசின் திறமையை வியந்தும் பயந்தும் பார்த்திருக்கும் காட்சியும் படமாக்கப்பட்டிருக்க, அந்த நடிகனோடு சத்யனும் தன் தம்பியின் திறமையை வியந்து பார்த்திருந்தான்.
ம்… அந்த நடிகனை ஒற்றைக் கையால் தூக்கி உயர்த்தியபோது முகத்தில் இலகுவான பாவனையும், டீசர்ட் போட்டிருந்தவனின் ஆர்ம்ஸ் தம்பியின் வீரத்தை பறைசாற்றிய விதமும் அத்தனை அழகாய் இருக்க, இவனிற்கு இப்படியெல்லாம் நடிக்கத் தெரியுமா? அதுவும் ஒரே டேக்கில்… என ரசனையாகவும் வியப்பாகவும் பார்த்திருந்தான் சத்யன்.
பின்னே சற்று நேரத்தில் அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடக்க, அதற்கான முக பாவனையை முற்றிலுமாக மாற்றியிருந்தான் அன்பரசு. “உன்னை நான் கொல்லமாட்டேன். ஏன்னா? உன்னை கொன்னபிறகு எவிடன்ஸ் அழிக்கனும். ஒருவேளை யாராவது கண்டுபிடிச்சா அதுக்கு ஒருத்தனை சரண்டர் ஆக்கனும்.
சரண்டர் ஆகப்போறவனும் உன் ஆளைத்தான் ஏற்பாடு செய்வேன். சரண்டர் ஆகலனா அவனோடு சேர்த்து மொத்த குடும்பத்தையும் இல்லாம செய்திடுவேன்” என கண்ணிமைத்து எதோ ரொமாண்டிக் வசனம் போல் பேசியவன், “நீயா செத்துட்டா ஒரே குண்டுல சித்திரவதையில்லாம போய்சேர்ந்திடலாம். இல்ல… மொத்த பார்ட்டயும் தனித்தனியா பிரிச்செடுத்த பின்னதான் உயிரை விடுவ” என்றான் இலகுவாக.
இயக்குனர் சொன்னதுபோல் இணை நடிகன் துப்பாக்கியை பார்க்க, “குட்” என பாராட்டிய அன்பரசு, சற்று முன் கொன்றவனை துப்பாக்கியால் சுடுவதுபோல் நடித்து, இணை நடிகனை பார்த்து “அவனை கொன்னுட்டு நீ தற்கொலை செய்துக்கிட்டமாதிரி போலீஸ் நம்பனும்ல?” என்று சாவதுபோல் நடிப்பவனிடம் துப்பாக்கியை கொடுத்தான்.
அவன் தன்னையே சுட்டுக்கொண்டு உயிர்விடுவதுபோல் நடித்த பின்னே, வெற்றிப்பார்வை பார்த்து அவ்விடம் விட்டு கிளம்புவதுபோல் நடிப்பதோடு அன்பரசிற்கான அன்றைய படப்பிடிப்பு முடிந்திருந்தது.
இயக்குனர் “நீயே டப்பிங் பண்ணிடுறியா அன்பு? வசன ஏற்ற இறக்கம்லாம் அற்புதமா இருந்தது. குரலும் நல்லாயிருக்கு” என்றார் பாராட்டுதலாக.
“உங்களுக்கு ஒகேனா பண்ணிடறேன் சார்” என்றான் அன்பரசு.
“ம் பேக்கப் பண்ணிக்கலாம். விடியகாலம் மூனு மணிக்கு ஷுட் இருக்கு” என்று இயக்குனர் சொல்ல, பிறகுதான் அண்ணனிடம் வந்தான் அன்பரசு.
“இதுக்கேன்டா குவைத் வரைக்கும் வரனும்? இந்தியாலயே எடுத்துருக்கலாமே?” என்றான் கிண்டலாக.
“இந்த பில்டிங்க்காகத்தான். படத்துலயும் ஹீரோயின் குவைத்லதான் இருப்பாங்க. நாளைக்கு காலைல எனக்கான ஷுட் முடிஞ்சதும் இந்த பில்டிங்க்கு ஹீரோயின் வராங்க. அவங்கதான் டெட் பாடியை பார்ப்பாங்க. இதுக்குமேல கதையை சொல்லக்கூடாது” என்றான் சிரிப்போடு.
“செம ஆக்ட்டிங்டா. நல்லவேளை பாடிபில்டிங் விட்டுட்டு ஆக்டிங்க்கு வந்த. நல்ல எதிர்காலம் இருக்கு” என்று வெகுவாய் பாராட்ட, அன்பரசின் சிந்தனை சுகந்தியிடம் செல்ல, அண்ணனின் பாராட்டை புறக்கணித்து “சரி வா ரூம்க்கு போலாம்” என்று முன்னே சென்றான்.
அறைக்குள் வந்ததும் ஜனனியின் படிப்பு, குணாதிசயம், அவளின் பாட்டு பற்றி விசாரிக்க, உண்டுகொண்டே இன்முகமாய் பதிலளித்துக்கொண்டிருந்தவனிற்கு உண்டு முடித்ததும் தூக்கம் கண்களை இழுக்க, ட்ராவல் செய்து வந்து ஓய்வெடுக்காமல் படிப்பிடிப்பிற்கு வந்தது, நாளையும் அதிகாலையில் செல்ல வேண்டும் என்பதாலும், “சரிடா நீ தூங்கு, நாளைக்கு பேசிக்கலாம்” என்றதுதான், “ஹம்” என்றவன் அடுத்த நொடி தூங்கிப்போனான்.
வெகு நேரம் தமையனையே பார்த்திருந்தவன் நள்ளிரவிற்கு மேல் தூங்கிட, அதிகாலை அன்பரசு படப்பிடிப்பிற்கு சென்று வந்த பின்னே அவன் எழுப்பவும்தான் எழுந்தான்.
“ஷுட் முடிச்சிட்டே வந்துட்டியா?” என கண்களை தேய்க்க, “ம். எதாவது சாப்பிட ஆர்டர் பண்ணு. ரொம்ப பசிக்குது. முகம் கழுவிட்டு வரேன்” என்று குளியலறை புகுந்தான்.
நேரம் பார்க்க ஐந்துதான் ஆனது. “நீ சாப்பிடற அளவுக்கு ஹெல்திஃபுட் இந்த நேரம் கிடைக்காது” என குளியலறை வெளியிலிருந்து சொல்ல, “எதாவது பண்ணுடா” என்றான் உள்ளிருந்து.
பின்னே பர்கர் ஆர்டர் செய்தான். தம்பியின் பசியறிந்து நிறைய செய்திருந்தான். தன்னை சுத்தம் செய்து வந்தவன் உண்டு முடித்ததும், “எதோ முக்கியமான விசயம் பேசனும்னியே? என்னடா?” என்றான்.
“கல்யாண விசயம்” என்றதும் சத்யன் முகம் இறுகிட, இவனுக்கு வேற மாதிரி சொல்லனும் என பொறுமையை வரவழைத்து “உன் கல்யாணம் இல்ல, நம்ம சுகந்தி கல்யாணம் பத்தி” என்றான் அன்பரசு.
“நல்ல வரன் வந்துருக்காடா? சுகந்தி சம்மதிச்சிட்டாளா? எவ்வளோ சீர் கேட்டாலும் நிறைவா செய்து வச்சிடலாம்டா” என்றான் ஆவலாக.
சத்தியனுக்கு சுகந்தி மேல் உள்ள பாசம் தெரியும்தான். அந்த நம்பிக்கையில்தான் இப்படி முடிவெடுத்தான். ஆனால் பாசம் வேற, அன்பு வேற. சுகந்தியை கூடப்பிறந்தவளாதான் நினைக்கிறேன் அது இது என்று அவளை கல்யாணம் செய்துக்க முடியாது என்றிடுவானோ என்ற பதட்டம் வர, “டேய்… இத்தனை கேட்குறேன். அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? சொல்றதை முழுசா சொல்லித் தொலையேன்டா” என கடுகடுத்தான் சத்யன்.
“நல்ல வரன் வந்திருக்குதான். ஆனா வழக்கம்போல சுகந்தி கல்யாணத்துக்கு” மறுத்துட்டா என சொல்ல வந்தவன் மாற்றி “மறுத்துடுச்சு” என்றான் மரியாதையாக.
“கல்யாணத்துக்கு என்னை எவ்வளோ டார்ச்சர் பண்ற? அங்க காமியேன் உன் திறைமையை” என சத்யன் முறைக்க, “உன் விசயம் வேற, சுகந்தி விசயம் வேற. அதனால சுகந்திகிட்ட என்னால பேச முடியாது” என்றான் இவனும் கோபமாக.
“நான் பேசினாலும் சம்மதிக்கமாட்டாடா. சும்மா நலன் விசாரிப்புனா பேசுவா. கல்யாணம்னு பேச்செடுத்தா பட்டுனு கட் பண்ணிடுறா. ஒரு முறை நானும் ட்ரை பண்ணினேன்” என்றான் வருத்தமாக.
error: Content is protected !!