Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

49. பிரியா முரளி - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா… – 12

கண்ணாமூச்சி – 12

ஐஸ்லாந்தின் இறுதிப் படப்பிடிப்பை ஒருவழியாக முடித்துவிட்டு, விஷ்வா இந்தியா திரும்பும் விமானத்தில் ஏறியபோது அவனது மனம் முழுக்க ஒரே ஒரு சிந்தனைதான் ஆக்கிரமித்திருந்தது—எப்படியாவது வீட்டிற்குச் சென்று, அந்த நியூரல் ஹெட்பேண்டை மாட்டி, மெய்நிகர் உலகத்தில் தன் நிலாவை மீண்டும் சந்திக்க வேண்டும் என்பது மட்டும்தான் அது. பிரவீன் அமெரிக்காவில் இருந்து வந்ததும் செயலியில் உள்ள பிழையைச் சரிசெய்துவிடுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அவனது இதயம் துடித்துக்கொண்டிருந்தது.
‘நான் இந்தியா வந்ததும் நீ ஆப்ல இருக்குற பக் (Bug) எல்லாத்தையும் சரி பண்ணி, நிலாவோட டேட்டா ஃபைலை ரெக்கவர் பண்ணி குடுத்துடணும் பிரவீன்’ என்று அவன் தன் நண்பனிடம் போனில் கறாராகச் சொல்லியிருந்தான். அமெரிக்காவில் இருக்கும் பிரவீன் இந்தியா திரும்பியதும் எல்லாவற்றையும் சரிசெய்துவிடுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அவனது இதயம் எதிர்பார்ப்புடன் துடித்துக் கொண்டிருந்தது. தன் நிஜ உலகத் தனிமைக்கு விடைதரப் போகும் அந்த மெய்நிகர் தேவதையின் நினைவுகள் மட்டுமே அவனுக்குள் ஒரு புதிய ரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
ஆனால், தனக்குப் பின்னால் நயனிகாவும் அவளது மேனேஜரும் சேர்ந்து நரித்தனமாக எவ்வளவு கேவலமான, அசிங்கமான சதிவலையைப் பின்னியிருக்கிறார்கள் என்பதை விஷ்வா அப்போது அறிந்திருக்கவில்லை. நயனிகா மிகவும் தந்திரமாக, விஷ்வா ஐஸ்லாந்தில் இருந்து கிளம்பும் சர்வதேச விமானத்தில் ஏறும் நேரத்தைக் கணக்குப் போட்டாள். அவன் விமானத்தில் இருக்கும் அந்தா இருபது மணிநேரப் பயண நேரத்தில், அவனால் உலகத் தொடர்பில் இருக்க முடியாது. இணையத்தையோ, ஊடகங்களையோ பார்த்துத் தன் தரப்பு விளக்கத்தை உடனடியாகத் தர முடியாது என்பதை அவள் நன்கு அறிவாள்.


Advertisement

சரியாக அவன் காற்றில் பறந்து கொண்டிருந்த அந்தப் புள்ளியில், அவளுடைய மேனேஜர் திட்டமிட்டு எடுத்த அந்த கேண்டில் லைட் டின்னர் புகைப்படங்களை, மிகவும் நெருக்கமாக இருப்பது போல எடிட் செய்து, ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அதிரடியாக லீக் செய்திருந்தாள் நயனிகா. விஷ்வாவின் அலைபேசி விமானப் பயன்முரையில் இருந்த அந்த இருபது மணி நேரத்தில், இந்தியாவில் அவனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு மாபெரும் வதந்திப் புயல் உருவாகித் தயாராக நின்றது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையம் அன்று வழக்கத்திற்கு மாறாக, திருவிழாக் கூட்டத்தைப் போலப் பரபரப்பாகக் காட்சியளித்தது. விஷ்வாவும் நயனிகாவும் ஒரே விமானத்தில் சென்னை திரும்புகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் கசிந்ததால், நூற்றுக்கணக்கான முதன்மைப் பத்திரிகையாளர்களும், பிரம்மாண்ட கேமராக்களுடன் நின்ற கேமராமேன்களும், யூடியூப் சேனல் நிருபர்களும் ‘சூப்பர் ஸ்டார்’ விஷ்வாவின் அந்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியைப் பிடிப்பதற்காக ஒருவரையொருவர் முட்டி மோதிக்கொண்டு நின்றிருந்தனர். போலீஸ் பாதுகாப்பையும்ம் மீறி அங்கே ஒரு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது.
விமான நிலையத்தின் விஐபி கதவுகள் மெதுவாகத் திறக்கப்பட்டு, சோர்வுடன் ஆனால் தனக்கே உரிய கம்பீரத்துடன் விஷ்வா வெளியே வந்தான். அவனுக்குச் சற்றுப் பின்னால் நயனிகாவும், கண்களை மறைக்கும் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து, உதடுகளில் ஒரு தந்திரமான புன்னகையோடு ஸ்டைலாக நடந்து வந்தாள்.

Advertisement

அவர்களைக் கண்டதும் பிரஸ், மீடியா காரர்கள் வெறித்தனமாகப் பாய்ந்தனர். “விஷ்வா சார்! விஷ்வா சார்!” என்ற அலறல் சத்தங்களுக்கு நடுவே, நூற்றுக்கணக்கான கேமராக்களின் பிளாஷ் லைட்டுகள் பளீரிட்டு விஷ்வாவின் கண்களைக் கூசச் செய்தன. மொபைல் ஃபோன்களும், மைக்குகளும் அவனது முகத்திற்கு மிக அருகில் நீட்டப்பட்டு அவனது வழியை மறித்தன.

Advertisement

“விஷ்வா சார்! நயனிகாவுக்கும் உங்களுக்கும் ஐஸ்லாந்துல ரகசியமா கல்யாணம் முடிஞ்சதா வர்ற செய்தி உண்மையா?” “சார்! இன்னைக்கு காலையில சோஷியல் மீடியாவுல லீக் ஆன உங்களோட அந்த இன்டிமேட் போட்டோஸ் பத்தி உங்க கமெண்ட் என்ன? நீங்க ரெண்டு பேரும் கடந்த சில மாதங்களா லிவிங்-டூகெதர்ல இருக்கீங்களா?” “நயனிகா மேடம், நீங்க சொல்லுங்க… விஷ்வா சார் உங்களைக் காதலிக்கிறதை உங்க வீட்ல ஏத்துக்கிட்டாங்களா?”
இந்தத் திடீர் கேள்விகளின் தாக்குதலால் விஷ்வா அப்படியே அதிர்ந்து போய் நின்றான். ஐஸ்லாந்தில் ஒரு டின்னர் சாப்பிட்டதைத் தவிர வேறு எதுவும் நடக்காத சூழலில், அதற்குள் இந்தியாவிற்குள் இப்படி ஒரு வதந்தி  வெடித்திருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் குழப்பத்திலும் ஆத்திரத்திலும் திணறிய அந்த நொடியை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நயனிகா ஏற்கனவே கச்சிதமாகத் தயாராக இருந்தாள்.
அவள் நிருபர்களின் மைக்குகளுக்கு முன்னால் வந்து, தன் கூலிங் கிளாஸைக் கழற்றி, மழுப்பலாகவும் நாணத்துடனும் புன்னகைத்தாள்.

Advertisement

“ப்ளீஸ்… ஃபிரண்ட்ஸ், கொஞ்சம் வழி விடுங்க. இப்போதான் ரொம்ப லாங் டிராவல் முடிச்சுட்டு வர்றோம். எங்களோட ரொம்ப ரொம்ப பர்சனலான விஷயங்களைப் பத்திப் பேச இது சரியான நேரம் இல்லைன்னு நினைக்கிறேன். விஷ்வா இன்னும் அந்த உடம்பு சரியில்லாத நிலமையில இருந்து முழுசா மீளல, ரொம்ப டயர்டா இருக்கார். நாங்க ரெண்டு பேரும் இதைப் பத்தி அப்புறமா மீடியாவை முறையா கூப்பிட்டுப் பேசுறோமே, ப்ளீஸ் கோஆபரேட் பண்ணுங்க,” என்று கூறி, தாங்கள் இருவரும் நிஜமாகவே ‘ஒன்றாக’த்தான் இருக்கிறோம் என்ற விபரீதமான, தவறான உள் அர்த்தம் பொருந்திய செய்தியை ஒட்டுமொத்த ஊடகங்களுக்கும் மிக நேர்த்தியாகத் தீனியாகப் போட்டாள்.
விஷ்வா அந்தப் பரபரப்பிற்கும், நயனிகாவின் அந்தப் போலி நாடகத்திற்கும் நடுவே முற்றிலும் மௌனமாக, சிலையாக உறைந்து நின்றான். அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன. தனக்குப் பின்னால் நடந்து வந்த அரவிந்தைப் பார்த்து முறைத்தவன், “அரவிந்த்! வாட் த ஹெல் இஸ் ஹாப்பனிங் ஹியர்? என்னடா நடக்குது இங்கே? இவங்க ஏன் இப்படி இல்லாத விஷயத்தைப் பத்தி அர்த்தமில்லாத கேள்விகளைக் கேக்குறாங்க?” என்று பற்களைக் கடித்தபடி ரகசியமாகக் கேட்டான்.
அரவிந்த் சென்னையில் வந்திறங்கியதும்தான் தனது மொபைலில் சமூக ஊடகப் பக்கங்களைத் திறந்திருந்தான். அதுக்கு முன்னே அவனுக்கு பல்வேறு பத்திரிகை நிருபர்கள், தயாரிப்பாளர்கள் என்று பல்ரிடமிர்ந்தும் அழைப்புகள் வரத் தொடங்கியிருந்தன. அவனுக்குமே இந்த மாதிரியான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளிவந்துள்ளது தெரிந்து சில நிமிடங்களே ஆகியிருந்தன. 
ஏற்கனவே நடுநகிப் போயிருந்தவன், விஸ்வநாத்தின் கோபத்தில் இன்னும் வெளிறினான். “விஷ்வா… பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. நீங்க அன்னைக்கு நைட் நயனிகாகூட டின்னர் சாப்பிட்ட போட்டோஸ் யாரோ லீக் பண்ணிருக்காங்க. ஆனா அதை ரொம்ப தப்பா எடிட் பண்ணி, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா இருக்கிற மாதிரி காட்டியிருக்காங்க. சோஷியல் மீடியா முழுக்க இப்போ உங்களோட லவ் அண்ட் மேரேஜ் பத்தித்தான் பிரேக்கிங் நியூஸ் ஓடிட்டு இருக்கு சார்,” என்றான் பதற்றத்துடன்.
விஷ்வாவிற்கு இதைக் கேட்டு ஆத்திரம் தலைக்கேறியது. நயனிகாவும் அவளது மேனேஜரும் சேர்ந்து ஆடிய அந்தத் தந்திரமான ஆட்டம் அவனுக்குப் பளிச்சென்று புரிந்தது. நயனிகாவைத் திரும்பி ஒரு முறை சுட்டெரிப்பது போலப் பார்த்தவன், அவளது முகமூடியை அங்கேயே கிழிக்க நினைத்தான். ஆனால், பொதுவெளியில் தான் காட்டும் எதிர்வினை இந்த அசிங்கமான வதந்திக்கு இன்னும் அதிக விளம்பரமாக மாறிவிடும் என்பதை அவனது சினிமா அனுபவம் அவனுக்கு உணர்த்தியது.
இதற்கு எந்தவொரு விளக்கமும் தந்து இதை இன்னும் பெரிதாக்க அவன் விரும்பவில்லை. அதனால் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் பிரஸ் மீடியாவை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, தன் காரில் ஏறிப் பறந்தான்.
உண்மை தெரியாத, ஆனால் விஸ்வநாத்தின் மௌனத்தால் குழம்பிய ஊடகங்கள் தங்களின் இஷ்டத்திற்கு ஊகங்களை அள்ளி வீசத் தொடங்கின. விஸ்வநாத் பதிலேதும் சொல்லாமல் தங்களைப் புறக்கணித்துவிட்டுச் சென்ற ஆத்திரத்தில், தொலைக்காட்சி சேனல்கள் விவாத மேடைகளை அமைத்தன. “விஷ்வாவின் இந்த மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா? நயனிகாவின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்ன?” என்று 24 மணி நேரமும் அலசத் தொடங்கின.
ஆனால் விஷ்வாவிற்கு இந்த உலகப் புகழோ, சினிமா அந்தஸ்தோ, தன்னைச் சுற்றி நடக்கும் இந்த மாபெரும் சதியோ எதைப் பற்றியும் கவலை இல்லை. அவனுக்குத் தன் ஆன்மாவான நிலாவை விர்ச்சுவல் உலகில் மீட்க வேண்டும், அதற்குப் பிரவீனைச் சந்திக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே லட்சியமாக இருந்தது. அவன் பிரவீனின் வருகைக்காகக் காத்திருக்கத், வெளியுலகத் தொடர்பைத் துண்டித்துத் தன் வீட்டிற்குள் முடங்கினான்.
மறுபுறம், தன் வீட்டில் சிறிய அறைக்குள் அமர்ந்து, தன் மொபைல் திரையில் விஷ்வாவின் இந்த ஏர்போர்ட் கலாட்டாவையும், நயனிகா காட்டிய அந்தப் போலி நாணத்தையும் நிலா உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள். நயனிகா சொன்ன “நாங்க இதைப் பத்தி அப்பறமா பிரஸ் கிட்ட பேசுறோம்” என்ற வார்த்தைகள் அவளது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
அவளது இதயம் மேலும் பலவீனமடைந்தது. ‘நான் எடுத்த முடிவு எவ்வளவு சரி! அவர் நயனிகாவோடுதான் இருக்கிறார். நிஜ உலகத்து சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்துக்கு நயனிகா தான் பொருத்தமான ஜோடி. விர்ச்சுவல் உலகத்துல நடந்தது எல்லாமே பொய்தான், போலிதான் என்ற எண்ணம்அவளைத் துளைத்தெடுத்தது. விஷ்வாவின் மீதான தன் காதலை ஒரு தற்காலிகமான பைத்தியக்காரத்தனம் என்று சொல்லித் தன் மனதைத் தேற்றிக்கொண்டாள்.
அடுத்த சில நாட்களில் நிலாவின் கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் மற்றும் தீசிஸ் வேலைகள் அதிவேகமாகத் தொடங்கின. அவளது சிறந்த கல்வித் தகுதியின் அடிப்படையிலும், அனாலிசிஸ் துறையில் அவளுக்கு இருந்த அசாத்திய திறமையின் காரணமாகவும், அவளது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னை டைடல் பார்க்கில் இருக்கும் ‘சோல்மேட் இந்தியா’ தலைமை லேபின் அனாலிசிஸ் டிபார்ட்மெண்டிற்கு நிலா நேரடியாக நியமிக்கப்பட்டிருந்தாள்.
தன்னை மனரீதியாக இந்தளவுக்குக் காயப்படுத்திய, தன் நிம்மதியைக் குலைத்த அதே ‘சோல்மேட்’ செயலிக்காக வேலை செய்வதை நிலாவின் எளிய மனம் முற்றிலும் ஏற்க மறுத்தது. அந்தப் பெயரைத் தாங்கிய கார்டை கழுத்தில் அணிவதற்கே அவளது இதயம் நடுங்கியது. அவள் மிகுந்த தயக்கத்துடனும் குழப்பத்துடனும் அனன்யாவை அழைத்தாள்.
“அனன்யா… எனக்கு அந்த ஆபீஸ் பத்தி நினைக்கக் கூட பிடிக்கலடி. அந்த சோல்மேட் ஆப்னால நான் பட்ட மன உளைச்சல் எல்லாம் போதும். அந்த ஆபீஸ்க்குள்ள நுழைஞ்சாலே எனக்கு அந்த விர்ச்சுவல் நினைவுகள் வந்து என் நெஞ்சை அடைக்குதுடி. கைடு கிட்ட பேசி நான் வேற ஏதாச்சும் கம்பெனியில ப்ராஜெக்ட் மாத்திக்கவா? ப்ளீஸ்டி…” என்று கெஞ்சினாள் நிலா. 
அவளுக்கு அந்த புராஜெக்ட் கிடைக்க அனன்யாவும் ஒரு முக்கியக் காரணம். சோல்மேட்டின் கணினிசார்ந்த செயல்பாடுகளில் நிலா தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் செயலியால் அவளுக்கு ஏற்பட்ட அந்த விர்ச்சுவல் அனுபவத்தை அவளால் அறிவியல் பூர்வமாகக் கையாள முடியும் என்று நினைத்தாள்.
அதனாலேயே அனன்யா அவளது பேச்சை முற்றிலும் மறுத்து, அவளுக்குள் ஒரு புதிய தைரியத்தை ஊட்டினாள். “லுக் நிலா! நீ ஒரு மெச்சூர்ட் ப்ரொபஷனல் இன்ஜினியர். ஒரு சாதாரண யூசரா அந்த ஆப்போட பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டையுமே நீ பிராக்டிக்கலா, லைவா அனுபவிச்சிருக்கே. ஒரு ஆப் மனிதனோட ஆழ்மனசுல எவ்ளோ பெரிய சைக்கலாஜிக்கல் தாக்கத்தை ஏற்படுத்துதுன்னு உனக்கு நல்லாத் தெரியும். சோ, அந்த ஆப்ல இருக்குற குறைபாடுகளைக் கண்டுபிடிச்சு, அதைச் சரி பண்ண உன்னை விடச் சிறந்த தகுதியான நபர் இந்த உலகத்துலேயே யாரும் இருக்க முடியாது நிலா. உன்னோட தீசிஸ்க்கு இதுதான் பெஸ்ட் அண்ட் ஸ்ட்ராங் சாய்ஸ். இப்படி ஒரு தனிப்பட்ட சோகத்துக்காக உன்னோட கரியரை இழந்துட்டு பயந்து ஓடாதே. தைரியமா ஃபேஸ் பண்ணு நிலா,” என்று தீர்க்கமாகக் கூறினாள்.
தோழியின் அந்த அறிவுப்பூர்வமான வார்த்தைகளால் ஒருவாறு சமாதானமடைந்த நிலா, தன் தனிப்பட்ட சோகங்களையும் விஷ்வாவின் நினைவுகளையும் இதயத்தின் ஒரு மூலையில் போட்டுப் பூட்டி வைத்துவிட்டு, சோல்மேட் லேபின் டேட்டா அனாலிசிஸ் பிரிவில் முழு மூச்சாகத் தன் பணியைத் தொடங்கினாள். கணினியின் நிரல்களுக்குப் பின்னால் தன் துயரத்தை மறைக்கப் பழகினாள்.
நாட்கள் மிகவும் வேகமாக நகர்ந்தன…
அமெரிக்காவின் தலைமை அலுவலகக் கூட்டங்களை முடித்துக் கொண்டு, சோல்மேட் நிறுவனத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுகளுடன் பிரவீன் இந்தியா திரும்பினான். அவன் சென்னை டைடல் பார்க் ஆபீஸிற்குள் நுழைந்து தன் கேபினுக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடம், விஷ்வாவின் கறுப்பு நிற சொகுசு பிஎம்டபிள்யூ கார் சோல்மேட் நிறுவனத்தின் அடித்தள பார்க்கிங்கில்  வந்து சீறிக்கொண்டு நின்றது.
தலையில் கறுப்புத் தொப்பியையும், முகத்தை மறைக்கும் பெரிய கூலிங் கிளாஸையும் மாஸ்க்கையும் மாட்டிக்கொண்டு, தன் உலகையே தலைகீழாக மாற்றிய நயனிகாவின் வதந்திகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், தன் இதயத்தின் துடிப்பான நிலாவை விர்ச்சுவல் உலகில் எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற ஒற்றை வெறியோடு, பிரவீனைச் சந்திப்பதற்காக லிஃப்ட்டை நோக்கி விஷ்வா வேகமாக நடந்தான்.
அதே நேரத்தில், அதே லிஃப்ட்டின் முன்னால்… கையில் முக்கியமான டேட்டா அனாலிசிஸ் ஃபைல்களுடன், அனாலிசிஸ் பிரிவின் புதிய இன்டெர்னாகத் தன் பணியை மேற்கொண்டிருந்த நிலாவும், அடுத்த ஃப்ளோருக்குச் செல்வதற்காக அந்த லிஃப்ட் ஏறுவதற்குக் காத்திருந்தாள்!
விதி தன் அடுத்த ஆபத்தான, சுவாரசியமான ஆட்டத்தைத் தொடங்க, அந்த மூடிய இரும்பு கதவுகளுக்குப் பின்னால், புயலின் மையப்புள்ளியில் இரு நிஜ மனிதர்களின் பாதைகளும் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்கக் காத்திருந்தன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!