Skip to content
Post Views: 66
ஓம் ஸ்ரீ சாய்ராம்
நிழலாடும் நினைவுகள்…
அவர்கள் திருமணம் நடந்து முடிந்த கையோடு ரம்யாவின் ஒன்றுவிட்ட தம்பிக்கு டெல்லியில் திருமணம் நடக்கவிருந்தது. குடும்பத்தினர் அனைவரும் அதில் கலந்துகொள்ள திட்டமிட்டனர். அங்கிருந்து அப்படியே குலு மணாலி சென்று தங்கள் தேனிலவைக் கொண்டாடி விட்டு வருவதாக அறிவித்தான் ஷ்ரவன்.
எல்லோரும் ஒரே இடத்திலிருந்து புறப்படலாம் எனப் பேசிக்கொண்டதில், ரம்யாவின் அம்மாவும் அப்பாவும் முன்தினமே அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.
Advertisement
பிரயாணத்திற்குத் தயாரான அனைவரும் அவரவர் பயணப்பெட்டிகளை வசிப்பறைக்குக் கொண்டுவந்து வைக்க,
“ரம்யா! நம்ம பெட்டியை உள்ளே எடுத்துட்டுப்போ,” அதட்டினான் ஷ்ரவன்.
“என்ன ஆச்சு ஷ்ரவன்?” அவள் கவலை கொள்ள,
Advertisement
“நாம ஊருக்குப் போகல,” என்றவனிடம் அதே இறுகிய தோரணை.
Advertisement
ரம்யாவின் முகம் நொடியில் வாடியது. புதுமணத் தம்பதிக்குள் ஏதாவது மனஸ்தாபம் இருக்குமோ எனப் பெரியவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சைகை செய்துகொண்டனர். ஆனால் தருணின் முகத்தில் மட்டும் விஷமப்புன்னகையில் மின்னியது.
“போதும்டா என் ஃபெரெண்டை ஓட்டியது. உன் திட்டத்தைச் சொல்லு,” ரம்யாவின் தோளினை அரவணைத்தபடி அண்ணனை அதட்டினான் தருண்.
“நீங்க எல்லாரும் டெல்லியில் கல்யாணம் அடென்ட் பண்ணிட்டு, அப்படியே ஹரித்வார், ரிஷிகேஷ், மதுரா, அயோத்தியான்னு பத்து நாள் டூர் முடிச்சுட்டு வரப்போறீங்க,” ஷ்ரவன் சொல்லவும்,
Advertisement
“நான்தான் உங்க டூர் கைட்,” இளித்தான் தருண்.
“அப்போ நீங்க ரெண்டுபேரும்!” குறுக்கிட்டார் தாமோதரன்.
என்னவள் என உரிமை பொங்க, மனையாளை தம்பியின் பிடியிலிருந்து இழுத்தவன், “நாங்க எங்க ஹனிமூன இங்கேயே இந்த வீட்டுலேயே கொண்டாடப் போகுறோம்,” என்றான் காதல் மன்னன்.
நாணம் கொண்ட பெண் கணவனின் கைச்சிறையில் நெளிய, ஆஹா ஓஹோ என அலப்பறைகள் செய்தனர் குடும்பத்தினர்.
“அது சரிடா! ஆனால் பத்து நாளுக்குத் தேவையான துணிமணிகளை பேக் பண்ணிக்கலீயே,” என்றார் திலகா.
“உங்க நாலுபேருக்கும் தேவையான அத்தனையும் நான் பேக் பண்ணிட்டேன்,” இரு பெட்டிகளைச் சுட்டிக்காட்டினான் தருண்.
ரகசியத் திட்டமிட்ட மகன்களின் சாமர்த்தியத்தை மெச்சிய திலகா இருவருக்கும் திருஷ்டி வழிக்க,
“மாப்பிள்ளை! நீங்க இந்த வீட்டுல ஹனிமூன் கொண்டாட, உங்க அம்மா அப்பாவுக்கு டூர் ஏற்பாடு பண்ணிருக்கீங்க சரி. எங்களுக்கு எதுக்கு. நானும் சாருவும் கல்யாணம் மட்டும் அடென்ட் பண்ணிட்டு வந்துடறோம். எனக்கு ஆபிஸ் வேலை தலைக்குமேல இருக்கு,” என்றார் ரம்யாவின் தந்தை ரவிச்சந்திரன்.
“நீங்க ரெண்டு பேரும் உள்ளூர்ல இருந்துங்கீன்னா, சாரும்மா சும்மாவே இருக்கமாட்டாங்க. தினமும் ஏதாவது சமைச்சு எடுத்துட்டு வந்துடுவாங்க. அப்புறம் என் பொண்டாட்டி எங்கத்த சமையல் கத்துக்க,” ஷ்ரவன் அப்பாவியாக உச்சுக்கொட்ட, அழகாய் அசடுவழிந்தார் சாருலதா.
காதல் பித்தனாகிப் பிதற்றுபவனை அதற்குமேலும் தொந்தரவு செய்யாமல், ஊருக்குப் புறப்பட்டனர்.
அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தவளை, கதவில் சாய்த்து, தன் இரும்புக் கரங்களுக்கு நடுவே சிறைசெய்தான் ஷ்ரவன்.
“ஏய் பொண்டாட்டி, நாம நம்ம ஹனிமூன வீட்டுலேயே கொண்டாடப்போகுறோம்னு சொன்னதும் உன் மனசுல வந்த முதல் எண்ணம் என்ன?” நெற்றிமுட்டி கண்சிமிட்டினான்.
“ஹான்…” எனக் கண்ணோடு கண் ஏறிட்டவள், “என் புருஷன் வடிகட்டின கஞ்சனா இருக்காறேன்னு யோசிச்சேன்,” வெட்டும் பார்வையில் வீழ்த்தி, அவன் கைச்சிறையிலிருந்து தப்பினாள்.
“குலு மணாலி என்ன ரம்யா. நீ விரும்புற அத்தனை இடத்துக்கும் அழைச்சிட்டுப் போகுறேன்,” அவன் குரல் சரியவும்,
அவனருகே ஓடி வந்தவள், “விளையாட்டுக்குத்தான் சொன்னேன் ஷ்ரவன். உலகத்தேயே சுத்தி வந்து ஹனிமூன் கொண்டாடினாலும், காலத்துக்கும் வாழப்போகுற நம்ம வீட்டில் சேமிக்கப்போகும் பசுமையான நினைவுகளுக்கு எதுவுமே ஈடாகாது,” எனத் தேற்றி,
“என்னவொண்ணு! அண்ணனும் தம்பியும் என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்,” கொஞ்சிப் பேசினாள்.
உதடு பிரிக்காது புன்னகைத்தவன், “நிஜமாவே உனக்கு வேறெதுவும் தோணலையா ரம்யா,” ஆழமான குரலில் கேட்டான்.
“ம்ப்ச்! நீங்க எதையோ மனசுல வச்சுகிட்டு, நானும் அதே பதிலைச் சொல்லணும்னு எதிர்பாக்குறீங்க,” அவன் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி குறும்பு செய்தாள்.
அவளிடமிருந்து எத்தனித்தவன், “குழந்தை பெத்துக்க முடியாததுனால ஹனிமூன் வேண்டாம்னு முடிவெடுத்திருப்பேன்னு…” தயக்கத்தில் தலைகுனிந்தான்.
“எந்தக் காலத்தில் இருக்கீங்க ஷ்ரவன். ஹனிமூன்றது குழந்தை பெத்துக்க மட்டும்தானா?” அவள் கொந்தளிக்க,
இல்லையென மறுப்பாய்த் தலையை மட்டும் ஆட்டி மௌனம் கடைப்பிடித்தான்.
ஆழ்ந்த பெருமூச்செறிந்தவள், “உங்களோட சண்டைபோட கூடாதுன்னு பார்க்கிறேன். என்ன ஸ்வீட் பிடிக்கும்னு சொல்லுங்க. நம்ம ஹனிமூனை ஸ்வீட்டோட தொடங்கலாம்,” திடமாகப் பேசினாள்.
“உன் கையால விருந்தே சாப்பிட காத்துட்டு இருக்கேன் ரம்யா. ஆனால் அதுக்கு முன்னாடி நீ என் காதல் கதையை முழுசா தெரிஞ்சுக்கணும்,” அவன் மீண்டும் தொடங்க,
“இனிமேல் எதுக்கு ஷ்ரவன். நமக்குக் கல்யாணம் கூட ஆயிடுச்சு,” நொந்துபோனாள் பாவை.
“இல்ல ரம்யா. நான் சொல்ல வந்தப்ப எல்லாம், இதோ அதோன்னு தட்டிக்கழிச்சிட்ட. நீ முழுசா தெரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம் சொல்லப்போகுற முடிவைத்தான் நான் ஏத்துப்பேன்,” என்றான் தீவிரக்குரலில்.
“பிடிக்கலன்னு சொன்னா விவாகரத்துக் கொடுத்துடுவீங்களா,” எரிச்சல் தொக்கி நின்றது அவள் முகத்தில்.
“அதுதான் உன் முடிவுன்னா கண்டிப்பா ஏத்துப்பேன்,” பிடிவாதமாய் நின்றான்.
“இருபது நிமிஷம் முன்னாடி தானே ஷ்ரவன் என்னை ஆசையா பொண்டாட்டின்னு கூப்பிட்டீங்க,” நினைவூட்டியவளுக்குக் கண்களில் நீர் கட்டிக்கொண்டது.
“வாழ்க்கை முழுக்க கூப்பிடணும்னு தான் எனக்கு ஆசை. ஆனால் நீ முழுசா தெரிஞ்சுக்காத வரை, நீ என்னை விட்டுட்டுப் போயிடுவீயோன்ற பயத்துலேயே உறவாடுவேன்.
அதுவும், பல காலம் சந்தோஷமா வாழ்ந்துட்டு, திடீர்ன்னு உனக்கு என் முன்னாள் காதலின் நிகழ்வுகளில் ஏதோவொண்ணு உறுத்தி, அதனால நீ என்னைவிட்டுப் பிரிஞ்சுபோனீனா மறுபடியும் ஒரு பிரிவைத் தாங்கிக்குற சக்தி எனக்கில்ல. அதுக்கு இப்பவே. பிரி….” அவன் தடுமாற,
இனியும் அவனை வதைக்க மனமில்லாமல், “சரி சொல்லுங்க! கேக்குறேன்,” தொப்பென்று சோஃபாவில் விழுந்தாள்.
விறுவிறுவென மாடி ஏறிச்சென்றவன், நான்கு கனமான நோட்டுப்புத்தகங்களை கொண்டுவந்து அவளிடம் நீட்டினான்.
“இத்தனையும் படிக்கணுமா! நோ வே!” வாயைப் பிளந்தவள், நடந்தவற்றை ரத்தினச்சுருக்கமாக விவரிக்கச் சொல்லி குழைந்தாள்.
“ம்ஹூம்! வாய்வார்த்தையா சொல்லும்போது எதையாவது சொல்ல மறந்துடுவேன். இல்ல உள்ளதை உள்ளபடி சொல்லாமல் போக வாய்ப்பிருக்கு. அதனால நீயே படி,” என்றான்.
“உங்களஅஅஅ,” இழுத்தவள், “சரி! ஈவினிங்க் என் முடிவைச் சொல்றேன்,” என்றாள்.
குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது நேரமெடுத்துப் படிக்குமாறு கூறி அதற்கும் தடைவிதித்தான் நேர்மைக்குப் பெயர்போனவன்.
அன்று இரவு புத்தகமும் கையுமாக படுக்கை அறைக்குள் வந்தவள், “ஒரு காலேஜ் லெக்சரர்ர படி படின்னு டார்ச்சர் பண்ணற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்க,” சிடுசிடுத்தபடி, ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஆங்கில வாரயிதழில் மூழ்கியிருந்த கணவனின் தோளில் வாஞ்சையாகச் சாய்ந்துகொண்டாள்.
நாசுக்காய் விலகி எழுந்து நின்றவன், “ நீ உன் முடிவைச் சொல்ற வரைக்கும் நான் கெஸ்ட் ரூம்ல படுத்துக்கிறேன்,” என நகர்ந்தான்.
“இன்னும் ஒரு அடி எடுத்து வச்சீங்கன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்!” அதட்டியவள் படார் என நோட்டுப்புத்தகத்தை மூடினாள்.
“ரம்யா…” அவன் விழிகள் கெஞ்ச,
“இங்கதான் படுக்குறீங்க!” ஆணையிட்டவள், “உங்க காதல் காவியத்தைப் படிச்சதுக்கு அப்புறம் எனக்கு உங்களோட வாழப் பிடிக்காம கிளம்பிட்டா, என்னை கல்யாணம் செஞ்சுகிட்டதுக்கு இந்த நாலு நாளாவது ஒண்ணா வாழ்ந்தோம்னு நீங்க நம்ம காதல் காவியத்திலும் ரெண்டு பக்கமாவது எழுத கன்டென்ட் கிடைக்கும்,” பொரிந்து தள்ளி, விளக்கை அணைத்துவிட்டு புரண்டு படுத்தாள்.
அவள் கோபத்தில் வெளிப்பட்ட காதலை உள்வாங்கினான். அமைதியாக மறுபுறம் படுத்துக்கொண்டவன், ‘இந்த நான்கு நாட்கள் கண்மூடித்திறக்கும் முன் ஓடிவிடவேண்டும்,’ எனப் பிரார்தித்தான்.
தொடர்ந்து வந்த நான்கு நாட்களுக்கும் அவளுக்குப் படிப்பதைத் தவிர வேறெந்த வேலையும் இல்லை என்ற ரீதியில், சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என அனைத்து வீட்டு வேலைகளையும் தானே செய்து வந்தான் ஷ்ரவன்.
“வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டுட்டு படி படின்னு டார்ச்சர் பண்ணறீங்களே ஷ்ரவன்,” சிணுங்கியவள், “ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு கன்டின்யூ பண்ணட்டுமா,” லாவகமாக அவன் மடியில் தலை சாய்த்துக்கொண்டாள்.
“இந்த தாஜா பண்ணற வேலையே வேண்டாம்,” என்றபடி அவளை அலேக்காக நிமிர்த்தி உட்காரவைத்தவன், தந்தை விட்டுச்சென்ற புது கட்டிட திட்டத்தின் வரைப்படத்தையும் மடிக்கணினியையும் எடுத்துக்கொண்டு எதிர் சோஃபாவில் அமர்ந்துகொண்டான்.
வணங்காமல் படிக்கிறாள் என்பதை அவள் உடல்மொழியே காட்டிக்கொடுத்தது.
“கவனமா படி. எந்த பேஜ்லேந்து வேணும்னாலும் கேள்வி கேட்பேன்,” அவன் எச்சரிக்க,
‘வவ்வ்வ்வ்வ்வ்’ என அழகுகாட்டி பக்கங்களைப் புரட்டி பெருமூச்சுவிட்டாள் ரம்யா.
உதடுகளில் நமுட்டுச் சிரிப்பு தாண்டவமாட அவளையே கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவன், “உனக்கே படிக்க வணங்கல. இந்த லட்சணத்துல நீ உன் ஸ்டுடென்ட்ஸ்க்கு என்ன சொல்லித்தரீயோ,” வம்பிழுத்தான்.
வெடுக்கென்று நோட்டுப்புத்தகத்தை மூடியவள், “கார்பரேட் அகௌன்ட்ஸ் கத்துக்கொடுக்கிற லெக்சரர கண்ணே மணியேன்னு ஜொள்ளுவிடுற லவ் ஸ்டோரியைப் படிக்கச் சொன்னா எப்படி வணங்கும்,” சண்டைக்குப் பாய்ந்தாள்.
“நீ நாலு பக்கம் கூடப் படிக்கலன்னு நல்லா தெரியுது ரம்யா,” கசந்த குரலில் உரைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஷ்ரவன்.
அவன் பொறுமை எல்லை கடந்துவிட்டதை உணர்ந்தவள் கவனமாகப் படிக்கத் துவங்கினாள்.
முகமதிய பெண்ணிடம் காதலைச் சொல்லும் அளவிற்குத் துணிந்தவனா என முதல் பக்கத்திலேயே பிரமித்துப் போனாள்.
கல்லூரிப் பருவக் காதல் என்ற போதிலும், கட்டிடக்கலை-மருத்துவம் என இருவேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள், காதல் உணர்வுகள் தங்கள் கல்விக்குத் தடையாக இருக்காத வண்ணம் பக்குவப்பட்ட மனத்துடன் உறவாடியதைப் படிக்கப் படிக்க அவர்கள் மேல் மரியாதை கூடியது அவளுக்கு.
மனத்திடம் இருந்தால் கட்டுப்பாடுடன் காதலிக்கலாம் எனப் பக்கத்துக்குப் பக்கம் நிரூபித்த காட்சிகளை மனக்கண்ணில் ஓட்டியவளுக்கு, ‘நீ நாலு பக்கம் கூடப் படிக்கலன்னு நல்லா தெரியுது ரம்யா,’ ஷ்ரவன் வெளிப்படுத்திய அதிருப்தி புரிந்தது.
இருவரின் இளங்கலை பட்டப் படிப்பும் முடிந்திருந்த நிலையில் தங்கள் காதலை வீட்டில் அறிவிக்கப் பரபரத்த ஷ்ரவனின் பிடிவாதம், மீண்டுமொரு முறை அவன் கண்ணியத்தை அவளுக்கு வலியுறுத்தியது. தன் வெளிப்படையான பேச்சில் ஷர்மிலா பானுவின் குடும்பத்தினரின் மனத்தையும் வென்றிருந்தான் என மூன்றாம் பாகம் முடிய, ஆர்வம் மேலோங்கியது அவளுக்கு. நொடியும் தாமதிக்காமல் நான்காவது பாகத்தை எடுத்தாள்.
நான்கு ஆண்டுகளாகப் பூட்டிவைத்திருந்த ஆசைகளை நனவாக்கிக்கொண்ட காதல் ஜோடிகளின் ஊடல்களைத் தன்னையும் மறந்தவளாய் ரசித்துப் படித்தாள்.
அவர்கள் பிரிய காரணமாக இருந்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளை அறிந்தவளுக்கு மனம் கனத்துப் போனது. சண்டைகளும் பிடிவாதங்களும் எல்லையைக் கடந்த போதிலும், அவளால் இருவரையும் குறை சொல்ல முடியவில்லை. மாறாக அவர்களின் தன்னலமற்ற குணத்தையே கண்டாள்.
அவர்கள் பிரிந்ததுனால் தான் தனக்கொரு நிறைவான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதையே முற்றிலும் மறந்தவளாக, அவர்கள் காதல் தோல்வியை எண்ணி விக்கித்து அழுதாள்.
இரவோடு இரவாக படித்து முடித்தவளுக்கு, உடனே அவனிடம் தன் எண்ணங்களைக் கொட்டிவிட வேண்டுமென மனம் பரபரத்தது. ஆனால், கண்ணியத்திற்குப் பெயர்போனவன் ஒப்புக்கொள்ளமாட்டான் என மனத்தில் செல்லமாகத் திட்டிக்கொண்டவள், அவன் கொடுத்த அவகாசம் முடியம்வரை காத்திருந்தாள்.
ஓடி வந்து அணைத்துக்கொள்வாள் என்ற எதிர்பார்ப்புடன் ஐந்தாம் நாள் காலை விழித்துக்கொண்டவனுக்கு, நித்திராதேவியாகத் தரிசனம் தந்தாள் பாவை.
அவளுக்கு மிகவும் பிடித்த ஃபில்டர் காபியுடன் எழுப்பிவிடலாம் என ஓசையில்லாமல் சமையலறைக்குள் நகர்ந்தான்.
தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருந்த பாவையோ, காபி வாசம் மூக்கைத் துளைத்ததும் சமையலறைக்கு ஓடினாள். சூடுபறக்கும் காபியை மெல்ல உறிஞ்சி ருசித்து வெறுப்பேற்றினாள். குளித்து முடித்து வந்த பிறகும் நேராக பூஜை அறையில் ஐக்கியமானாள். வழிபாடு முடித்துவிட்டு வந்து நல்ல முடிவைச் சொல்வாள் என நம்பிக்கையுடன் காலை உணவைச் சமைத்து முடித்தான். இனிப்புடன் தொடங்கும் ஆசையில் அவள் விரும்பிச் சாப்பிட்ட பால்கோவாவை வாங்கிவர தெருமுனையிலிருந்த ஆவின் பாலகத்திற்கு ஓடினான். ஆனால் மங்கைதான் வந்தபாடில்லை.
விதிமுறைகள் இட்டுச் சோதித்த கணவனைப் பழிவாங்குவதற்காக நேரத்தைக் கடத்துக்கிறேன் என்ற பெயரில், தனக்குத் தெரிந்த அத்தனை ஸ்லோகங்களையும் உரக்கப் பாடி அனைத்து தெய்வங்களைக்கும் அன்புத்தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தாள்.
வழிபாடு முடித்து வந்தவள் மறுபடியும் மாடிக்குச் சென்று, நான்கு புத்தகங்களையும் எடுத்து வர, இதயம் துடிக்க மறந்தது ஷ்ரவனுக்கு.
அவள் அவற்றை அவன் முன்னிருந்த மேஜையில் வைக்கவும், எல்லாம் முடிந்துவிட்டது என்ற தீர்மானத்திற்கே வந்துவிட்டான்.
“நீ உங்க வீட்டுக்குக் கிளம்பு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்,” தொண்டை அடைக்க பேசியவன், புத்தகங்களைத் திரட்ட,
“நான் போகுறேன்னு சொல்லவே இல்லையே!” இறுகிய குரலில் பேசினாள்.
மகிழ்ச்சியும் துக்கமும் முட்டிமோத, “இதுக்கு என்ன அர்த்தம்,” நோட்டுப்புத்தகங்களைச் சுட்டிக்காட்டினான்.
“இதையெல்லாம் அழிச்சிட்டா, உங்க மனசுல பதிஞ்ச நியாபகங்கள் அழிஞ்சிடுணும்னா சொல்லுங்க, இப்பவே போகி கொண்டாடிலாம்,” என்றாள் அதிகாரமாக.
ஷ்ரவன் தலைகுனிந்த விதத்திலேயே அவன் பதிலை உணர்ந்தாள்.
இனியும் வதைக்க விரும்பாதவள், அவன் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தி, “குடும்பத்துக்காக காதலை தியாகம் செஞ்சிருக்கும் உங்க ரெண்டுபேரோட வலியையும் நல்லாவே புரிஞ்சுகிட்டேன். நீங்க எல்லாத்தையும் மறந்து என்னோட வாழணும்னு நான் என்னைக்குமே சொல்லமாட்டேன். நடந்தது எல்லாம் நன்மைக்கேன்னு ஏத்துக்குற மனப்பக்குவம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்க கடந்த காலத்துனால நமக்குள்ள மனஸ்தாபமே வராது,” தெளிவுபடுத்தினாள்.
கண்ணீரை உள்ளிழுத்தபடி தலையசைத்தான் அவன்.
என்னவள் என்ற கர்வத்தோடு நெய் மணக்கும் பால்கோவாவை ஊட்டிவிட்டவன், “வெளியே போயிட்டு வரலாமா?” என்றான் காதல் பொங்க.
“ம்ம்ம். கோவிலுக்குப் போயிட்டு வரலாம்,” என்றாள் இமைக்கும் நொடியில்.
“அடியேய்! காலையில ரெண்டு மணிநேரம் பூஜை செஞ்சது பத்தாதா,” அவன் ஓட்ட,
“கல்யாணமாகி முதல் முதலா வெளியே போகுறோம். ஃப்ர்ஸ்ட் கோவில்,” பிடிவாதமாய் நின்றாள்.
“ரம்யா! கீழே வரும்போது வண்டிச்சாவியை எடுத்துட்டு வா,” வாலட்டில் வைத்திருந்த பணத்தை எண்ணிக்கொண்டே குரல் கொடுத்தான் ஷ்ரவன்.
ஜல்ஜல் கொலுசின் ஓசையில் அவன் விழிகள் மாடிப்படிகளைத் தழுவியது.
பழுத்த மல்கோவா மாம்பழ நிறத்தில் பொடிப் பொடியான சிவப்பு புட்டாக்கால் சிதறிக்கிடந்த சில்க் காட்டன் சுடிதார், அதற்குத் தோதாக இடதுபக்கத் தோள்ப்பட்டியயிலிருந்து விரிந்தாடிய சிவப்பு நிற சிஃப்ஃபான் துப்பட்டா, குட்டி வைர ஜிமிக்கிகள், வலக்கையில் வைர கற்கள் பதித்த பிரேஸ்லட், இடதுகை மணிக்கட்டில் டைட்டன் கைகடிகாரம், இடுப்பு வரை நீண்ட பின்னல் ஜடையில் மலர்ந்தும் மலராமல் தொங்கும் மல்லிச்சரம் எனத் தயாராகி வந்தவளை முதல் முறையாக காதலாய் ரசித்தான் ஷ்ரவன்.
கண்கொட்டாமல் ரசிக்கும் கணவனின் பாவனையில் வெட்கம் அப்பிக்கொள்ள, “வாங்க கிளம்பலாம்,” என வண்டிச் சாவியை அவன் முகமருகே ஆட்டினாள்.
சுயத்திற்கு வந்தவன், வண்டிச்சாவியைக் கண்டதும், “இது தருணோட பைக் சாவி ரம்யா,” என்றான்.
“தெரியும் ஷ்ரவன். உங்களோட டூ வீலர்ல லாங்க் டிரைவ் போகணும்னு ஆசையா இருக்கு,” எனக் குழைந்தாள்.
மென்னகையுடன் தலையசைத்தவன் ஹெல்மெட் எடுத்துவருகிறேன் என நகர்ந்தான்.
ஹெல்மெட்டுடன், வித்தியாசமான லெதர் க்ளவுஸ்ஸும் அவன் எடுத்துவர, இது எதுக்கு?” என வினவினாள் ரம்யா.
“உன் புருஷனோட வலது கையில் நாலு விரல் தான் இருக்குன்றத மறந்துட்டீயா,” கண்சிமிட்டி, செயற்கை மோதிரம் விரல் பொருத்திய அந்த கை உரையை அணிந்துகொண்டான்.
தேவையில்லாமல் கசப்பான தருணங்களை கிளறிவிட்டேனே என நொந்தவள், காரிலேயே போகலாம் எனக் கூற, “என் பொண்டாட்டி கேட்டுச் செய்யாம இருப்பேனா! கிளம்பலாம் வா,” எனக் கண்சிமிட்டினான்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைத் தரிசனம் செய்து முடித்ததும், “அடுத்து எங்க போறோம்,” கண்களில் ஆர்வம் மின்ன கேட்டு, வண்டியில் ஏறிக்கொண்டாள் ரம்யா.
“சர்ப்ரைஸ்!” என்றவன் கால்மணி நேரத்தில் மவுன்ட் ரோட் ஹிக்கின்போதாம்ஸ் முன் நிறுத்த,
“மறுபடியும் புத்தகங்களா! ஆளவிடுங்க ஷ்ரவன்,” உள்ளே வர மறுத்தாள்.
சிறுபிள்ளை எனத் தர்க்கம் செய்கின்றவளை ரசித்துச் சிரித்தவன், “ நீ இப்படி அடம்பிடிக்கிறத உன் ஸ்டுடென்ட்ஸ் யாராவது பார்த்திடப் போகுறாங்க,” காதோரம் கிசுகிசுத்து, வலிய உள்ளே இழுத்துச்சென்றான்.
அவளுக்குப் பரிசு வாங்கி வருவதாகக் கூறி நழுவியவன், ஐந்தே நிமிடத்தில் முந்நூறு பக்கங்கள் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர் புத்தகத்தின் பிரதி ஒன்றுடன் வர, அவனை கேள்வியாகப் பார்த்தாள் ரம்யா.
“தினமும் நியூஸ்பேப்பர் வந்ததும் இருபதே நிமிஷத்தில முக்கால்வாசி பஸுல் சால்வ் பண்ணிடுற. அந்த மிச்ச நாலஞ்சு கேள்விகளுக்கும் கொஞ்சம் மூளையைக் கசக்கி ஆன்சர் கண்டுபிடிச்சா தான் என்ன?” அவன் கேட்கவும்,
“உங்களுக்கு….உங்களுக்கு எப்படித் தெரியும்,” முழித்தாள் ரம்யா.
“எனக்கும் க்ராஸ்வர்ட் சால்வ் பண்ண ரொமப் பிடிக்கும் ரம்யா. அதுவும் க்ரிப்டிக் க்ராஸ்வர்ட்ஸ்ன்னா கொள்ளை இஷ்டம்.
அதை உனக்கு மறைமுகமா சொல்லாம்னு நானும் கல்யாணமான நாள்லேந்து நீ விட்ட கேள்விகளுக்குப் பதில் நிரப்பி காத்திருந்தேன். ஆனால் நீயோ டுடேஸ் நியூஸ் பேப்பர் இஸ் டுமாரோஸ் வேஸ்ட்பேப்பர்ன்னு அதைப் பொட்டலம் கட்டக் கூடச் சீண்டமாட்டேன்ற,” அவன் விளக்கவும், அழகாய் அசடுவழிந்தாள் ரம்யா.
அன்று இரவு உறங்க வந்தவள் குறுக்கெழுத்துப் புதிர் புத்தகத்தை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.
“என்ன! அதே நாலு க்வெஸ்டின்ஸ் ஸ்டக் ஆகிருக்கீயா?” குறும்பாய் சிரித்தான் அவன்.
“ம்ஹூம்!” என மறுப்பாய்த் தலையசைத்தவள், “இனி நாம சேர்ந்து ஸால்வ் பண்ணப்போறோம். காலையில் நியூஸ்பேப்பர். நைட்ல இந்த புக்,” என அவனருகே ஒட்டிக்கொண்டவள், பென்சிலை அவன் கைகளில் திணித்தாள்.
“அவுச்!” என அவன் அலறவும், பென்சிலின் கூர்முனை குத்திவிட்டதோ எனக் கைகளைச் சோதித்தாள்.
இடது உள்ளங்கை முழுக்க சிவந்து கொப்பளித்துக் கிடப்பதைப் பார்த்து, “என்ன இது ஷ்ரவன்,” எனத் திடுக்கிட்டாள்.
“லெதர் க்ளவுஸ் போட்டுக்கிட்டடுனால வந்திருக்கும் ஸ்கின் அலர்ஜி ரம்யா. ரெண்டு நாளுல சரியாகிடும்,” அவன் சொன்னதும்,
“ஒத்துக்காதுன்னு சொல்லியிருக்கலாமே,” என மனமுடைந்தாள்.
“என் பொண்டாட்டி முதல் முதலா கேட்டதை மறுக்க முடியல,” வலது கரம்கொண்டு அவள் முகவாயைக் குவித்துப் பேசினான்.
“கேட்டதை செய்யும் புருஷனை விட, ஒளிவுமறைவு இல்லாமல் உண்மையைச் சொல்லும் புருஷனைத் தான் விரும்புறேன்,” என வெடுக்கென்று எழுந்தவள் மறுபுறம் புரண்டு படுத்தாள்.
கோபம் தலைக்கேறிய மனையாள் முன் அவன் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் செல்லாக்காசாக இரண்டு நாட்கள் நகர்ந்தன.
நடைப்பயிற்சி முடித்து வந்தவன், நடு மெத்தையில் தன் நோட்டுப்புத்தங்களைப் பரப்பி வைத்துக்கொண்டு விசும்பிக் கொண்டிருக்கும் பாவையைக் கண்டு குழம்பி நின்றான்.
அவன் உருவத்தைக் கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்தவள், “ப்ளீஸ் ஷ்ரவன். இனிமேலேந்து எதுவாயிருந்தாலும் ஓபென்னா சொல்லுங்க,” கெஞ்சினாள்.
“சரிம்மா,” எனத் தலைகோதியவனின் அணைப்பில் சில நிமிடங்கள் குளிர்காய்ந்தவள், மென்சிரிப்புடன் விலகி, நோட்டுப்புத்தகங்களை தன் அலமாரியில் பூட்டிக்கொள்ள, கேள்வியாய் அவளை நோக்கினான்.
அதை உணர்ந்து அவனருகே வந்தவள், “இனி உங்க காதல் காவியத்தை நான்தான் வச்சுப்பேன். நமக்குள்ள மனஸ்தாபம் வரும் போதெல்லாம் இதிலிருந்து நாலு வரி படிச்சா போதும். இவங்க சந்திச்ச சவால்களை விட உன் பிரச்சனையும் வலியும் பெருசான்னு மனசாட்சி உறுத்தும். அதுக்கு அப்புறமும் உங்களவிட்டு விலகி இருக்க முடியுமா…அதான்…” அவள் குழைய,
இதுதான் சமரசத்திற்குக் காரணமா என அசைபோட்டவனுக்கு, அவள் தன்மேல் வைத்துள்ள கண்மூடித்தனமான நேசத்தின் ஆழம் புரிய பெருங்காதல் கொண்டான்.
அவளைக் கண்பார்க்க எதிரில் நிறுத்திக்கொண்டவன், “ஏய் பொண்டாட்டி! என்னோட வாழணுமா இல்லையான்னு முடிவெடுக்க தந்த கடைசி வாய்ப்பை யூஸ் பண்ணி உன் பதிலை சொல்லிட்ட. இனி பிரியுறது விலகுறது…இந்த ஆப்ஷனுக்கு எல்லாம் இடமே இல்லை,” காதல் பொங்க எச்சரித்து, தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டான்.
வலிகள் மட்டுமே நிறைந்திருந்த என் வாழ்வில்,
வருடித்தரும் மயிலிறகாய் வந்த தேவதையே!
விரட்டி விரட்டி காதலித்த உன்னை ஆயுளுக்கும்
தக்கவைத்துக் கொள்ளும் பேராசையில் – விடை தேடுகிறேன்
தாரமே நிழலாவும் நின் நினைவில்….
error: Content is protected !!