Skip to content
Post Views: 46
கண்ணாமூச்சி – 13
லிஃப்ட்டின் கச்சிதமான எஃகு கதவுகள் மெதுவாக இருபுறமும் விலகின.
விஷ்வா அவசர அவசரமாகத் தன் தலையிலிருந்த தொப்பியை இன்னும் சற்றே தாழ்த்தி இழுத்துவிட்டுக்கொண்டு, உள்ளே அடி எடுத்து வைக்க முயன்றான். அதே நொடியில், தனக்கு முன்னால் நின்றிருந்த பெண் ஒருத்தி, கையில் இருந்த ஃபைல்களை நெஞ்சோடு அணைத்தபடி, குனிந்த தலை நிமிராமல் லிஃப்ட்டை விட்டு வெளியேறினாள்.
இருவரும் கடந்து சென்ற அந்த ஒரு நொடிக்கும் குறைவான கணத்தில், ஏதோ ஒரு பரிச்சயமான உணர்வு விஷ்வாவை அதிரடியாகத் தாக்கியது. மின்னல் தாக்கியது போல அவனது கால்கள் தானாக அனிச்சையாக உறைந்து நின்றன. ஐஸ்லாந்தின் பனிமலையில், மெய்நிகர் உலகின் ஏகாந்தத்தில், நிலா தன் விரல்களோடு விரல்களைப் பின்னிக்கொண்டு நடந்தபோது ஏற்பட்ட அதே உணர்வு!
Advertisement
“நிலா…” அவனது உதடுகள் அவனையுமறியாமல் மெல்லப் பிதற்றின.
விஷ்வா சட்டென்று திரும்பிப் பார்த்தான். கூலிங் கிளாஸிற்குள் இருந்த அவனது கண்கள் அகல விரிந்தன. டைடல் பார்க்கின் பளபளப்பான தரைத்தள வெளிச்சத்தில், சுடிதார் அணிந்த அந்தப் பெண் ஃபைல்களுடன் காரிடாரின் வளைவில் வேகமாகத் திரும்பி மறைந்து கொண்டிருந்தாள். அவளது முகம் அவனுக்கு முழுமையாகத் தெரியவில்லை. அவளது பக்கவாட்டுத் தோற்றமும், காற்றில் பறந்த அவளது கூந்தலின் அசைவும் மட்டுமே அவனது பார்வையில் தட்டுப்பட்டன.
ஆனால், அவனது காதல் இதயம் உரக்கக் கத்தியது—’இது அவள்தான்! என் நிலா தான்!’
Advertisement
அவனது மூளை தடுத்தது. ‘விஷ்வா, உனக்குக் பைத்தியம் பிடிச்சுடுச்சா? அவ ஒரு விர்ச்சுவல் அவதார். சாஃப்ட்வேர் அல்காரிதம். அவ எப்படி இங்கே நிஜ உலகத்துல, அதுவும் இங்க, டைடல் பார்க் ஆபீஸ்ல நடமாட முடியும்?’ என்று லாஜிக் பேசியது. ஆனால், அவனது இதயம் அந்த லாஜிக்கைத் தூக்கி எறிந்தது. அந்த ஒரு விநாடிப் பார்வை அவனது உடலுக்குள் பல வோல்ட்டுக்கு நிகரான மின்சாரத்தைப் பாய்ச்சியிருந்தது. இழந்த உயிர் மீண்டும் உடலுக்குள் வந்தது போன்ற ஒரு பேரானந்தம் அவனைத் தொற்றிக்கொண்டது.
Advertisement
அவன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு, பின் வெறிபிடித்தவன் போல 22-வது மாடியில் இருந்த பிரவீனின் பிரத்யேகக் கேபினை நோக்கி ஓடினான்.
கேபினின் கதவை அதிரடியாகத் திறந்து கொண்டு விஷ்வா உள்ளே நுழைந்தபோது, பிரவீன் தன் லேப்டாப்பில் அமெரிக்காவில் நடந்த மீட்டிங்கின் டேட்டாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். விஷ்வாவின் மூச்சிரைப்பையும், அவனது முகத்தில் இருந்த விசித்திரமான பரவசத்தையும் கண்டு பிரவீன் திடுக்கிட்டு எழுந்தான்.
“டேய் விஷ்வா! என்னடா ஆச்சு? நயனிகா கூட ஏதோ பெரிய பஞ்சாயத்து ஓடிட்டு இருக்குன்னு அரவிந்த் சொன்னான். நீ என்னடான்னா இங்க வந்து நிற்குறே? ஏண்டா இப்படி மூச்சிரைக்குது உனக்கு? ஆர் யூ ஓகே?” என்று கவலையுடன் கேட்டான் பிரவீன்.
Advertisement
விஷ்வா தன் கூலிங் கிளாஸையும் தொப்பியையும் மேஜை மீது வீசி எறிந்தான். அவனது கண்கள் பளபளத்தன. பிரவீனின் இரு தோள்களையும் இறுகப் பற்றிக் கொண்டு, “பிரவீன்! நான் அவளைப் பார்த்துட்டேன்டா! என் நிலாவை நான் நிஜத்துல பார்த்துட்டேன்!” என்றான் உற்சாகத்துடன்.
பிரவீன் புரியாமல் புன்னகைக்க முயன்று, “என்ன உளறுறே விஷ்வா? நிலாவோட ஃபைல் தான் டெலீட் ஆயிடுச்சே. நான் இப்போதான் அதை ரெக்கவர் பண்றதுக்கான கோடிங் எழுதப் போறேன். அதுக்குள்ள ஆப் ஓபன் பண்ணிப் பார்த்துட்டியா?” என்றான்.
“இல்லைடா முட்டாள்! நான் ஆப்ல பார்க்கல. நிஜ உலகத்துல… இப்போ, இந்த நிமிஷம், உன்னோட இந்த சோல்மேட் இந்தியா ஆபீஸ் லிஃப்ட் வாசல்ல அவளை என் கண்ணால நேர்ல பார்த்தேன்டா!” என்று உற்சாகமாகக் கூறினான் விஷ்வா.
பிரவீன் அப்படியே திகைத்துப்போய் விஷ்வாவை உற்றுப் பார்த்தான். அவனது முகம் தீவிரமானது. “விஷ்வா, காய்ச்சலோட எஃபெக்ட் உனக்கு இன்னும் குறையலன்னு நினைக்கிறேன். நயனிகாவோட வந்த அந்த நியூசோட பிரஷர் வேற உன்னை அபெக்ட் பண்ணியிருக்குன்னு நினைக்குறேன். நிலா ஒரு அல்காரிதம். உன்னோட மைண்ட் செட்டுக்கு ஏத்த மாதிரி நம்ம ஏஐ கிரியேட் பண்ணின ஒரு கற்பனை கதாபாத்திரம். அவ எப்படிடா இங்க ரத்தமும் சதையுமா நடமாட முடியும்? உனக்கு ஏதோ பிரமை தட்டியிருக்கு,” என்றான் சமாதானப்படுத்தும் குரலில்.
“நோ பிரவீன்! நோ!” விஷ்வா ஆக்ரோஷமாகத் தலையசைத்தான். “இது பிரமை இல்லை. ஒரு ஹீரோவா பல நூறு முகங்களை கேமராவுல பார்க்குறவன் நான். எனக்கு முகங்களை மறக்காது. அவளோட அந்தப் பக்கவாட்டு முகம், அவளோட அந்த வாசனை… அதைவிட முக்கியமா, அவளைப் பார்த்தப்போ என் இதயம் அடிச்சுகிட்ட வேகம்… அது பொய் சொல்லாதுடா. அவ இந்த ஆபீஸ்லதான் வேலை பார்க்குறா இல்லன்னா இங்கதான் இருக்கா. ப்ளீஸ் பிரவீன், இந்த ஆபீஸ்ல இருக்குற அத்தனை பெண் ஊழியர்களோட ப்ரொஃபைலையும் இப்போவே செக் பண்ணு. என் நிலா இங்கதான் இருக்கா!” என்று தன் நண்பனை நோக்கிக் கெஞ்சினான் விஷ்வா.
பிரவீன் குழப்பமடைந்து, “சரிடா, நீ சொல்றதை வச்சே பார்க்கலாம். ஆனா, விர்ச்சுவல் வேர்ல்டுல நிலாவை நீ மட்டும்தான் பார்த்திருக்கே. அவ எப்படி இருப்பான்னு எனக்குத் தெரியாது. அவளோட அடையாளத்தைச் சொல்லு, நான் செக் பண்றேன்,” என்றான்.
உடனே விஷ்வாவின் முகம் காதலில் உருகியது. “அவளா… அவ கண்ணுல ஒரு குறும்பு இருக்கும்டா. சிரிச்சா கன்னத்துல குழி விழும். தலையை லேசா சாய்ச்சுப் பேசும்போது அவ்ளோ அழகா இருக்கும். ரொம்பக் கியூட்டா…” என்று நிலாவை வர்ணிக்கத் தொடங்கினான் விஷ்வா.
பிரவீன் தலையில் கை வத்துக் கொண்டான். “டேய், டேய் விஷ்வா! நிறுத்துடா! நீ சொல்ற வர்ணனை கவிதைக்கு ஓகே. ஆனா ஆபீஸ் டேட்டாபேஸ்ல ‘கியூட்டான பொண்ணு, சிரிச்சா குழி விழும்’னு தேட முடியாது. இது சிசிடிவி-யில தேட துளியும் உதவாது,” என்று கையை விரித்தான்.
என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கணம் குழம்பிய பிரவீன், உடனடியாக அனன்யாவைத் தன் கேபினுக்கு அழைத்தான். சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்தைப் பார்த்து அனன்யா ஒரு நொடி திகத்தலும், அதைப் பெரிதாக வெளியே காட்டி கொள்ளாமல், அவனைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தாள். மனதுக்குள் நிலா விஸ்வநாத்தைப் பார்த்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டவள், விஷ்வா சொன்ன விஷயங்களைக் கேட்டு அதிர்ந்து போனாள்.
ஒருவேளை விஸ்வநாத் நிலாவைத்தான் ஆபீசில் எங்காவது பார்த்துவிட்டுச் சொல்கிறானோ என்று தோன்றிய சந்தேகத்தை, சாத்தியமற்ற ஒன்றாக எண்ணிப் புறக்கணித்தவள், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, ஒரு யோசனையைச் சொன்னாள். “பிரவீன், விஷ்வாவோட நியூரல் ஹெட்பேண்ட் டேட்டா இன்னும் மெமரியில இருக்கும். விஷ்வாவின் விர்ச்சுவல் அனுபவங்கள்ல இருந்து அவரோட மூளை அலைகள் ரெக்கார்ட் பண்ணின அந்த பிம்பங்களை நாம ஏன் இமேஜா ஜெனரேட் பண்ணக் கூடாது?”
பிரவீனின் கண்கள் மின்னின. “எஸ்! சூப்பர் ஐடியா!”
இருவரும் உடனடியாக சிஸ்டத்தில் அதற்கான குறியீடுகளை எழுதி இயக்கினர். சோல்மேட் செயலியால் நிஜ உலகப் புகைப்படங்களை அப்படியே உருவாக்கித் தர முடியவில்லை என்றாலும், விஷ்வாவின் நினைவலைகளில் இருந்து ஓவியம் போன்ற படங்களை அது ஒவ்வொன்றாக உருவாக்கத் தொடங்கியது. விஷ்வாவும் நிலாவும் மெய்நிகர் உலகில் சந்தித்த ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஒவ்வொரு ஓவியமாக திரையில் தோன்றியது.
அவற்றைப் பார்த்த விஷ்வா, “ஆமாம்… இதுதான் என் நிலா!” என்று விரல் காட்டினான். அதே நொடியில் அனன்யாவின் மனமும், “இது என் நிலா, இல்லை?” என்று கேள்வி எழுப்பியது.
விஷ்வாவும் பிரவீனும் அந்த ஓவியப் படங்களை வைத்துக் கொண்டு, லிஃப்ட் ஏரியாவின் சிசிடிவி கேமரா பதிவுகளைத் துருவித் துருவி ஆராயத் தொடங்கினர்.
ஆனால், அந்தச் சிசிடிவி காட்சிகள் விஷ்வாவிற்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்தன. அந்தப் பெண் குனிந்த தலை நிமிராமல், கேமராவின் கோணங்களுக்குப் பின்னால் மறைந்து சென்றதால் அவளது முகம் துல்லியமாகத் தெரியவில்லை. “ஷிட்! இது க்ளியரா இல்லையே!” என்று விஷ்வா விரக்தியில் கத்தினான்.
அனன்யாவுக்கோ பெரும் நிம்மதியாக இருந்தது. விஸ்வநாத் இன்று பார்த்தது நிலாவகவே இருந்தாலும், இப்போதைக்கு அவர்களால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிசிடிவி காட்சிகளில் மங்கலாகத் தெரிந்த அந்தப் பெண் நிலாதான் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
தேடிக்க களைத்த பிரவீன் தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, “விஷ்வா, இந்த மங்கலான ஃபுட்டேஜை வச்சு மட்டும் அந்தப் பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமில்லாம, ஹெச்ஆர் டிபார்ட்மெண்ட்டோட ஸ்பெஷல் அப்ரூவல் இல்லாம என்னால ஊழியர்களோட தனிப்பட்ட ஃபைல்ஸை ஓபன் பண்ண முடியாது. நான் இன்னைக்கே அப்ரூவலுக்கு மெயில் போடுறேன். இந்த ஓவியப் படங்களோட ஒத்துப்போற பொண்ணு யாருன்னு கண்டிப்பா கண்டுபிடிக்கிறேன். நீ இப்போ கிளம்பு, ஏர்போர்ட் கலாட்டாவுக்கு அப்புறம் மீடியா உன்னைத் துரத்திட்டு இருக்கும், யார் கண்ணுலயும் படாம வீட்டுக்குப் போ” என்று விஷ்வாவைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.
விஷ்வா தீராத ஏமாற்றத்துடனும், ஆற்றாமையுடனும் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
error: Content is protected !!