Skip to content
Post Views: 190
அத்தியாயம் 09
மூன்று மாதங்கள் அவன் கட்டிய தாலி துர்க்காவின் கழுத்தில் இருக்கப் போகின்றது என்று பூசாரி சொன்னதும், விரக்தி சிரிப்பு தான் வந்தது பரணிக்கு.
Advertisement
இன்றே கழட்டி உண்டியலில் போட்டால், இதோ தன் முன் பிடிக்காத தாலியை பாரமாக எண்ணி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் துர்க்காவின் அழுகை நின்று விடுமே என்றுதான் தோன்றியது.
அவனை பொறுத்தவரை அவளின் அழுகைக்கு காரணம் விரும்பத்தகாத தாலியின் பாரம் என்று தான் நினைத்தான்.
Advertisement
Advertisement
அஞ்சனாவோ நித்தியாவின் சமயோசித புத்தியை பார்வையால் மெச்சி புருவத்தை உயர்த்தினாள்.
பரணியோ “உங்க இஷ்டம் என்னமோ பண்ணுங்க.. இந்த ஒரு சம்பவத்த வச்சு நான் எந்த பிரச்சனைக்கும் வரமாட்டேன்…” என்றவன் பொதுவாக கையெடுத்து கும்பிட்டவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
Advertisement
மேலும் மேலும் அழுது கரையும் அவளை பார்க்க முடியவில்லை அவனால். அஞ்சனாவும் அண்ணனை பின் தொடர்ந்து சென்று விட,
“பிறகு என்ன மூணு மாசம் கழிச்சு தாலிய கழட்டிக்கலாம்…” என்று சொல்லி கூட்டம் கலைய
துர்க்காவின் கழுத்தில் மின்னிய தாலியை வஞ்சமாக பார்த்து நின்றது என்னவோ சகுந்தலாவும் அகிலனும் தான். பிரபாகரன் கிருபாகரனை பொறுத்தவரை காலம் தள்ளி போனது நல்லது என்று தோன்றியது சில விடயங்களை அலசி ஆராய வேண்டி இருந்தது.
ஒரு வழியாக துர்க்காவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர, பிரேமாவதி அவர் பங்கிற்கு ஒரு ஆடு ஆடி தீர்த்தார். தாயின் அத்தையின் பேச்சுக்கள் இன்று தான் அண்ணன் தம்பி இருவருக்கும் வேறு விதமாகப்பட்டது.
துர்க்கா வேகமாக வந்தவள் தன் அறையின் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இதோ அரைமணி நேரம் ஆகின்றது இன்னமுமே குளியலறை கண்ணாடியில் தன் பிம்பத்தை தான் பிரித்து பார்த்துக் கொண்டிருக்கின்றாள்.
அவளை என்பதை விட அவள் கழுத்தில் மின்னிக்கொண்டிருந்த மஞ்சள் கயிற்றையும் மார்போடு தொட்டு நின்ற மாங்கல்யத்தையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எத்தனையோ வருடங்கள் கழித்து இன்று தான் பரணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அன்று அண்ணனின் நண்பன் இன்று தன்னவன். ஆம் தாலி கழுத்தில் உள்ளவரை அவளவன் பரணி தானே.
தவறான வயதில் அவளாக அவள் விதியை அமைத்துக் கொண்டாள். பெரிய விபத்து ஒன்றில் சிக்கி உயிர் பிழைத்தாலும், உடல் அசைக்க முடியாமல் கோமாவில் இருப்பது போல், தாள முடிய துயரங்களைக் கடந்து வந்தாலும் தன் உணர்வுகளை தொலைத்து, மறைத்து, ஏனோ எதற்கோ என்று ஒரு வாழ்க்கை.
அந்த வாழ்க்கையில் அவள் எதிர்பார்க்காமல் ஏங்கிய ஒரு நிகழ்வு. தான் மட்டும் சரியாக இருந்திருந்தால் மற்ற பெண்களைப் போல் சாதாரண ஒரு வாழ்க்கை அமைந்திருக்குமே என்று அவள் எண்ணாத நாளில்லை.
தனக்கே தனக்கான ஒரு இணையை தேடாத ஒரு உயிரினம் இருக்குமா என்ன. துர்க்காவும் உணர்வுகள் நிறைந்த உயிருள்ள மனுஷி தானே.
இதோ அவள் கழுத்தில் தொங்கும் தாலி இதற்கு என்ன அர்த்தம், எதுவும் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அப்படியே பின்னாடி சென்று சவரை திறந்து அதன் அடியில் நின்றாள்.
மெல்லிய துவாரத்தின் வழி பூந்துறல்களாக அவள் தலையில் விழுந்த நீர் துளிகள், அவள் முகத்தில் இறங்கும் போது சிவப்பாக இறங்கியது.
அது பரணியின் கையால் அவள் தலையில் ஆசீர்வாதமாக கொட்டப்பட்ட குங்குமம். அஞ்சனா தான் அவன் விரல்களை மடக்க கூடாது என்ற எண்ணத்தில் அவன் உள்ளங்கை நிறைய குங்குமத்தை அள்ளி வைத்து இருந்தாளே. அது அத்தனையும் துர்க்காவின் தலையில் தான் இருந்தது.
அது இப்போது கரைந்து அவள் காவிநிற புடவையுடன் கலந்து அழகிய அரக்கு சிவப்பு வண்ணப் புடவையாக மாறி இருந்தது.
தன்னையே கண்ணாடியில் பார்த்தபடி இருந்தவள் கண்களிலும் நீண்ட வருடங்கள் கழித்து வேறு வண்ணப் புடவையில் தன்னை பார்த்ததால் ஒருவகையான புதிய உணர்வு.
தன் கழுத்தில் இருந்த தாலி முதல் மார்புச் சேலை வரை அவள் கை ஆசையாக ரசனையாக தடவிக் கொண்டது.
மறு நொடி இது எத்தனை நாட்கள் என்ற கேள்வியில் மனம் வாடி, முகம் கசங்கி பார்வையை தாழ்த்திக் கொண்டு, குளித்து முடித்து உடைமாற்றி வெளியே வந்தாள்.
தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை, தாலி மட்டுமே அவளை அவளுக்கு புதியதாய் காட்டியது. அவள் இருந்த மனநிலைக்கு அமைதி வேண்டும் என்று தோன்ற, தரையில் படுக்கையை விரித்து படுத்துக் கொண்டாள்.
“ஓய் சாரப்பாம்பு…!” பரணியின் குரல் காதில் கேட்க காதுகளை பொத்திக்கொண்டு தூங்க முயன்று வெற்றியும் கண்டாள்.
*****
பரணி தன் வீட்டின் பின் இருந்த தாழ்வான கிணற்றின் கட்டில் அமர்ந்து இருக்க, நடந்த அதிர்ச்சியிலிருந்து சற்று ஆசுவாசமாக அவனுக்கு தனிமை கொடுத்த அஞ்சனா, அவனைத் தேடி வந்து “இத உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல அண்ணா…” என்று சொல்ல
தன் பின்னே நின்ற தங்கையின் குரலில் முகத்தை பாக்கவாட்டாக திரும்பியவன் “எத எதிர்பார்க்கல?…” என்று வெறுமையான குரலில் கேட்க
அவனை சுற்றி வந்து அவன் முகம் பார்ப்பது போல், துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தவள் “கடவுளா அமைச்சு தந்த வாழ்க்கைய ஏத்துக்காம.. உங்க கையால தாலி வாங்கிட்டு நின்ன பொண்ண அப்படியே வெட்டி விட்டுட்டு வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல…” என்று சொல்ல
“கடவுளா அமைச்சு தந்த வாழ்க்கையா! அது ஒரு விபத்து…”
“சரி விபத்தாவே இருக்கட்டுமே.. உங்க கையால துர்க்கா கழுத்துல விழுந்த தாலிக்கு எந்த மதிப்பும் இல்லையா?…” என்று அஞ்சனா கேட்க
விரக்தியாக சிரித்தவன் “தாலியா!.. தகுதி தராதரம் இருக்கிறவன் கட்டுனா தான் அது தாலி.. என்ன மாதிரி தகுதி இல்லாத, அவளுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவன் கையால ஏறுனா அதுக்கு மதிப்பு இல்ல…” என்று சொல்ல
“என்ன ண்ணா அபத்தமா பேசுறீங்க.. நீங்க சொல்ற தகுதி, தராதரம் பொருத்தம், இது எல்லாத்தையும் மீறி ரெண்டு பேர ஒத்த கயிறு இணைச்சு வைக்கிறது தான் தாலி.. அதனாலதான் காலம் காலமா எது மாறினாலும் தாலிக்கான மதிப்பும் அர்த்தமும் மாறல…” என்று அஞ்சனா சொல்ல
“சரி அப்படியே இருக்கட்டும்.. அந்த கயிற தாலியா ஏத்துக்கிறதும் வெறும் கயிறா பாக்குறதும், அத சுமக்குற பொண்ணு குடுக்குற அங்கீகாரம் தானே…” என்று சொல்ல
“இப்ப என்னதான் ண்ணா சொல்ல வாரீங்க.. துர்க்காவ உங்களுக்கு பிடிக்கலையா?…” என்று தான் தவறு செய்து விட்டோமோ என்று சற்றே உள்ளே போன குரலில் கேட்க,
மெலிதாக சிரித்தவன் கண்களில் என்றும் இல்லாத ஒரு ஒளி. அது பிரம்மயோ என்னும் அளவிற்கு மறு நொடியே முகம் வெறுமையை பூசிக்கொள்ள, மௌனமாக கிணற்றுத் தண்ணீரை வெறித்தான்.
மனதில் தேவை இல்லாத ஒரு சந்தேகம் வர, அதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை அஞ்சனாவால் “துர்க்காவோட பழைய வாழ்க்கைய.. க்கும்.. பழைய வாழ்க்கைய மனசுல வச்சு தான் அவள ஏத்துக்க தயங்குறீங்களா?…” என்று சற்று தடுமாற்றத்தோடு கேட்டாள்.
அவளுக்கு நன்கு தெரியும் தன் அண்ணன் அப்படிப்பட்டவன் இல்லை என்று. இருந்தும் தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டுவிட்டாள்.
தங்கையின் கேள்வியில் நிமிர்ந்து அவள் முகத்தை தீர்க்கமாகப் பார்த்தவன் “என்ன பொறுத்த வரைக்கும் துர்க்கா என் நண்பனோட தங்கை.. என் தங்கையோட பழைய தோழி.. இத தவிர துர்க்காவ வேற எந்த அடையாளத்த வச்சும் நான் பாக்கல.. இதுல ஏத்துக்க வேண்டியது நான் இல்ல, துர்க்கா தான்.. தாலி கழுத்துல விழுந்ததுல இருந்தே அழுதுட்டே இருந்தா.. அவ நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டவன் நான், அவ இஷ்டம் இல்லாம கைய புடிக்கணுமா.. ஒரு பார்வ அவள் நிமிர்ந்து என்ன பாத்திருந்தாலும் கையோட கூட்டிட்டு வந்திருப்பேன்.. அவளுக்கு என்ன பிடிக்கல.. என் கையால விழுந்த தாலியும் பிடிக்கல.. அப்புறம் எப்படி என் கூட வாழ கூப்பிட முடியும்…” என்று கேட்க
“அப்போ துர்க்காவுக்கு உங்க கூட வாழ விருப்பம்னா உங்களுக்கு ஓகேவா?…” என்று ஆர்வமாக கேட்க
“நடக்கிறத பேசு அஞ்சு.. அவ கோபுர கலசம்.. நான் குடிசையில இருக்கிற மண் பானை…” என்றவன் அருகில் இருந்த ஊன்றுகோலை எடுத்து, தட்டு தடுமாறி எழுந்து வீட்டினுள் போக,
அவனையே பார்த்து இருந்த அஞ்சனாவோ “நீ சொல்ற கோபுர கலசம் வெயிலயும் மழையிலயும் உருக்குலைஞ்சு போகுது ண்ணா.. அதான் குடிசையில சரி கொண்டு வந்து பாதுகாக்க நினைக்கிறேன்…” என்றவள் துர்க்காவின் மனதை முதலில் மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டாள்.
*****
சகுந்தலாவோ துர்க்காவின் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டாமல் விடுவதில்லை என்ற முடிவோடு, அடுத்த மூன்று மாதங்கள் அங்கேயே தங்கிவிடும் முடிவில் இருக்க,
அகிலனும் அதே முடிவில் தான் இருந்தான். துர்க்காவின் கழுத்தில் பரணியின் கையால் தாலி ஏறியதும், எங்கே இருவரையும் சேர்த்து வைத்து விடுவார்களோ என்ற பதைபதைப்பில் இருந்தான்.
அது நடக்கவில்லை என்றதும் அப்பாடா என்று இருந்தது. அதே சமயம் இனிமேலும் துர்க்காவை விட்டு வைக்க முடியாது, தாலி சென்டிமென்ட் பார்த்து வேறு விதமான முடிவுகளை யாரேனும் எடுக்க முன், துர்க்காவை ஆசை திரு அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியில் தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.
அன்றைய நாள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மனநிலையில் நகர்ந்து கொண்டு இருக்க, நித்தியாவோ துர்க்காவிற்கு தன் வாய்க்குள்ளாகவே திட்டிக் கொண்டு வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த வீட்டில் துர்க்காவை தவிர வேறு யாரும் உண்ணாமல் வயிறு வயலிங் வாசிக்க சோகத்தில் மூழ்குவது கிடையாது. அதிலும் இந்த விடயத்தில் தெம்பாக உண்டு அடுத்த திட்டத்தை தீட்ட வேண்டுமே என்று மூன்று நேரமும் வக்கனையாக சாப்பிட்டனர்.
அதிலும் விதிவிலக்காக பிரபாகரன் மதிய உணவிற்கு வரவில்லை. இரவு உணவையும் ஏதோ யோசனையுடனே ஒன்றும் பாதியுமாக உண்டு விட்டு எழுந்து கொள்ள, கிருபாகரனும் பெயருக்கு உணவை அலைந்து விட்டு அறைக்கு வந்து விட்டான்.
நித்தியாவிற்கு மொட்ட பாறையில் காளான் பூத்த அதிசயம் தான். உதட்டை சுளித்து விட்டு தன் அறைக்கு வந்தவளுக்கு, துர்க்கா மதியமும் சாப்பிடவில்லை இரவும் சாப்பிடவில்லை என்பது சற்று கவலையாக இருந்தாலும், அவளை தேற்றும் அளவிற்கு பொறுமையும் இருக்கவில்லை.
துர்க்காவிற்கு இருந்த மனக்கலகத்தை தாண்டியும் இரவு 10 மணியை தாண்ட பசி வயிற்றைத் கிள்ளியது.
அவள் என்ன சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து அவளுக்கு சாப்பாடு கொடுப்பது பிரேமாவதி தானே,
அவரோ மகளின் கழுத்தில் மாங்கல்யம் ஏறிய நாளை கரு நாளாக கொண்டு அறையில் அடைந்து கிடக்க, பசி தாங்க முடியாமல் துர்க்கா தனது அறையை விட்டு வெளியே வந்தாள்.
அனைவரும் தூங்கி விட்டதை உணர்ந்து, சமையல் அறை சென்று பால் காய்ச்சி குடிக்கலாம் என்று வந்தாள். துர்க்கா தனது அறையை கடக்கும் போது கதவின் கீழ் நிழல் தெரிய, அப்போதுதான் அறைக்கு வந்த நித்தியா யார் என்று கதவை திறந்து பார்க்க, துர்க்காவை கண்டு கொண்டாள்.
சத்தம் கொடுக்காமல் அவள் பின் சென்று பார்க்க, துர்க்கா பாலை காய்ச்சி கிளாசில் ஊற்றியவள், சமையல் அறையிலேயே நின்று சக்கரை சேர்க்காமல் குடிக்க, மறைந்து இருந்து பார்த்த நித்தியா தலையில் அடித்துக் கொண்டாள்.
பிரேமாவதியின் கட்டுப்பாட்டினால் உப்பு, உரைப்பு, இனிப்பு சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் இப்போது யார் இருக்கின்றார்கள், யாரும் அறிய வண்ணம் பசிக்கு பால் அருந்தும் போது கூட இனிப்பு சேர்க்காத துர்க்காவை வைத்துக்கொண்டு, அதிரடி திருமணம் செய்து அவளை வாழ வைக்க நினைத்த தன்னையும் அஞ்சனாவையும் மானசீகமாக அவளே செருப்பால் அடித்துக் கொண்டாள்.
“இவள!…” என்று பல்லை கடித்தவள் அவளிடம் நேராக பேச விரும்பாமல், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்து அறைக்கு வந்தாள்.
அவளின் மகன் நடுவில் தூங்க, கிருபாகரன் அவன் இடது புறம் தூங்க, நேரத்தை கூட பொருட்படுத்தாமல் அஞ்சனாவிற்கு அழைப்பை எடுத்தாள்.
அவளும் தூக்கம் வராமல் படுத்து இருந்தவள் அழைப்பை ஏற்று “சொல்லுடி…” என்க
“என்னத்த சொல்ல.. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கல்யாணத்த பண்ணியும் பிரயோசனம் இல்லாம போச்சே…”என்று சத்தமாக பேச
நித்தியாவின் சத்தத்தில் கிருபாகரனும் தூக்கம் கலைந்து எழுந்தான். அவன் எழுந்ததை ஓரக்கண்ணால் பார்த்தவள் ‘இதுதான் வேணும்.. இன்னைக்கு அண்ணனையும் தங்கச்சியையும் ஒரேயடியா கிழிச்சி.. ஒன்னா கட்டி தோரணமா தொங்க விடல நான் நித்தியா இல்ல…’ என்று என் மனதில் நினைக்க
அந்தப் பக்கம் அஞ்சனா “அதுதான் நீ புத்திசாலியா மூணு மாசம் தாலிய கழட்டாம இருக்க வெச்சிட்டியே…” என்று சொல்ல
“ம்க்கும்.. இந்த மூணு மாசத்துல இந்த பைத்தியக்கார குரங்கு கூட்டத்துக்கு புத்தி வந்துட போகுது பாரு…” என்று நொடித்துக் கொள்ளும் போது,
தனது அறைக்கு சென்று கொண்டிருந்த துர்க்கா நித்தியாவின் அறையைத் தாண்ட, அறையின் கீழ் நிழல் தெரியவும் அதை கண்ட நித்யா
“எந்த பெண்ணாவது கழுத்துல இருந்த தாலிய கலட்ட சம்மதம் சொல்லுவாளா?.. கட்டுனவன் முடவனோ குருடனோ புருஷன் கூட வாழ்றது தானே பொண்ணுக்கு அழகு…” என்று சொல்ல
துர்க்காவின் கால்கள் ஆணி அடித்ததை போல் அங்கேயே நின்றது என்றால், கிருபாகரன் கட்டிலில் இருந்து கோபமாக எழுந்தவன்,
கதவினை பார்த்து பேசிக் கொண்டிருந்த நித்தியாவின் மணிக்கட்டை பிடித்து வேகமாக திருப்பி, அவள் கையில் இருந்த ஃபோனை பறித்து அறைச் சுவற்றில் ஓங்கி அடிக்க, அது சில்லு சில்லாக உடைந்து சிதறியது.
error: Content is protected !!
பெத்த அம்மாவே இப்படியும் இருக்குமா 🤦♀️😡.
பழனி தான் பாவம். தாலி கட்டமா இருந்துறுத்தாலும் அவன் நாள்ல இருந்துருப்பானோ என்னவோ.