Skip to content
Post Views: 25
கண்ணாமூச்சி 21
“ஹலோ, நிலா… நிலாதானே? நான் விஷ்வா… விஸ்வநாத் பேசுறேன்…”
அந்தக் கம்பீரமான ஆண் குரல் காதுகளில் விழுந்த அடுத்த நொடி, நிலா அப்படியே உறைந்து போனாள். விர்ச்சுவல் உலகில் எத்தனையோ முறை கேட்ட அதே குரல், அதில் அதே காந்த ஈர்ப்பு. ஆனால், அவளது மூளை இந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முற்றிலும் மறுத்தது. இவ்வளவு இரவில் ஒரு சூப்பர் ஸ்டார் தனக்கு ஃபோன் செய்கிறான் என்பதை அவளால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
Advertisement
மிகுந்த அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் அவளது கைகள் நடுங்க, கையில் இருந்த மொபைல் நழுவி மொட்டை மாடித் தரையில் விழுந்தது. படபடக்கும் இதயத்தோடு, கீழே விழுந்த போனை பதறியடித்துக் கொண்டு கையில் எடுத்தவள், மறுமுனையில் பேசுவதைக் கேட்கக் கூடக் காத்திராமல், டக்கென்று அழைப்பைத் துண்டித்தாள். அவளது முகம் பயத்தால் வெளுத்துப் போயிருந்தது.
ஆனால், அடுத்த சில விநாடிகளில் அதே எண் மீண்டும் திரையில் மின்னியது. நிலா எடுக்காமல் தவிர்க்க முயன்றாள். ஆனால், அது தொடர்ந்து ஒலிக்கவே, கோபமும் பயமும் கலந்த மனநிலையில் போனை மீண்டும் காதில் வைத்தாள்.
“நிலா… ப்ளீஸ் கட் பண்ணாத. நான் பேசுறதைக் கொஞ்சம் கேளு. நான் தான் விஸ்வநாத் பேசுறேன், சினிமா ஆக்டர் விஸ்வநாத். நேத்து சோல்மேட் ஆபீஸ் டெரஸ்ல நாம மீட் பண்ணினோமே, ஞாபகம் இருக்கா?” விஷ்வா மறுமுனையில் மிகவும் நிதானமாக, அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.
Advertisement
மறுமுனையில் அவனது குரல் அத்தனை அமைதியாகவும், அதே சமயம் ஒருவித தவிப்போடும் ஒலித்தது. திரையில் இடி முழக்கமாய் அதிரும் ஒரு சூப்பர் ஸ்டாரின் குரல், தன் காதுகளுக்குள் இவ்வளவு மென்மையாக, கெஞ்சும் தொனியில் பாயும் என்று நிலா தன் வாழ்நாளில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அவனது ஒவ்வொரு சொல்லும் அவளது காதுகளின் வழியே நரம்புகளுக்குள் ஊடுருவி, மூளையின் தர்க்க சிந்தனைகளைச் செயலிழக்கச் செய்தது.
Advertisement
அவளது இதயம் அந்தக் குரலை மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு கொண்டது. சோல்மேட் அலுவலகத்தின் மொட்டைமாடியில் கேட்ட அதே குரல் தான்; கோடிக்கணக்கான ரசிகர்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அதே விஸ்வநாத்தின் குரல் தான் என்பதை அவளது உள்மனம் அடித்துச் சொன்னது.
ஆனாலும், நிலா அதை வெளியில் காட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு பெண்ணுக்கே உரிய இயல்பான தற்காப்பு உணர்வும், அதீத பயமும் அவளை உடனடியாக ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் சுருட்டிக் கொள்ளச் செய்தன. ‘இவ்வளவு பெரிய ஆக்டரான விஸ்வநாத் தனக்கு ஏன் போன் செய்யப் போகிறார்? இது சாத்தியமே இல்லாத ஒன்று!’ என்று அவளது மூளை எச்சரித்தது. யாரோ விஷ்வாவின் குரலை அப்படியே அச்சுப்பிசகாமல் மிமிக்ரி செய்து, தன்னிடம் பிராங்க் செய்கிறார்கள் என்றே அவள் கசப்புடன் நினைத்துக் கொண்டாள்.
“யாரு நீங்க? எதுக்காக இப்படிப் பொய் சொல்றீங்க? நீங்க விஸ்வநாத்னு சொன்னா, நான் நம்பிடனுமா? அனாவசியமா எதுக்கு இப்படி ஃபோன் பண்ணி தொந்தரவு பண்றீங்க!”
Advertisement
அவளது குரலில் கோபமும், தன்னை யாரோ ஏமாற்றுகிறார்கள் என்கிற ஆத்திரமும், அதே சமயம் உள்ளுக்குள் எழுந்த பயமும் ஒன்றாகக் கலந்து படபடப்பாக வெளிவந்தது. இதற்கு மேல் அந்த முனையில் இருந்து வரும் எந்த விளக்கத்தையும் கேட்க அவளது மனம் தயாராக இல்லை. படபடக்கும் இதயத்தோடு, கைகளில் நடுக்கத்தோடு, மீண்டும் அந்த ஃபோனை அவசர அவசரமாகக் கட் செய்தாள்.
ஆனால், விஷ்வா அவளை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. தன் வாழ்க்கையின் மிக முக்கியமான தேடலை, ஒரு போன் கட் செய்யப்பட்டதற்காக அப்படியே கைவிட்டுவிடுவான என்ன? அவன். அவனது பிடிவாத குணம் மீண்டும் அவளை அழைக்கச் செய்தது. நிலாவின் மொபைல் திரை மீண்டும் இரவின் இருட்டைக் கிழித்துக் கொண்டு பிரகாசமாய் மின்னியது.
தொடர்ந்து அலறிக்கொண்டிருந்த போனைப் பார்த்த நிலாவின் பொறுமை முற்றிலும் எல்லை கடந்தது. பயம் இப்போது அதீத ஆத்திரமாக மாறியிருந்தது. இந்த முறை போனை எடுத்தவள், மறுமுனையில் விஷ்வா ஒரு வார்த்தை கூடப் பேசுவதற்கு அவகாசம் தராமல், தன் மனதில் தேங்கியிருந்த மொத்தக் கோபத்தையும் எரிமலையாய்ப் பொரிந்து தள்ளினாள்.
“ஹலோ! உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? யாருன்னு சொல்லாம இப்படி ராத்திரி நேரத்துல ஃபோன் பண்ணி ஒரு பொண்ணை ஹராஸ் பண்றீங்க? உங்களுக்கு எப்படி என்னோட பேரு தெரிஞ்சது? என்னோட போன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது?” பொரிந்தாள் நிலா.
“மாரல் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாம இவ்வளவு லேட் ஹவர்ல போன் பண்ணி இரிடேட் பண்றீங்க? இன்னொரு தடவை இந்த நம்பர்ல இருந்து எனக்கு போன் வந்தா, நான் கண்டிப்பா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன், ஜாக்கிரதை!” என்று அந்த இரவின் நிசப்தத்தில் தன்னால் முடிந்த அளவு தன் குரலை லேசாக உயர்த்தி எச்சரித்தாள். அவளது உடல் கோபத்தாலும் நடுக்கத்தாலும் விறைத்துப் போனது.
ஆனால், விஷ்வா அவளது இந்த ஆக்ரோஷமான கோபத்தைக் கண்டு அஞ்சவோ, பின்வாங்கவோ இல்லை. அவனது திரையுலக பிம்பத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு சராசரி மனிதனின் பிடிவாதமும், நிலாவைத் தன் வசப்படுத்தும் ஆவலும் அவனுக்குள் மேலோங்கியிருந்தது. அவளது கோபத்தின் நியாயத்தைப் புரிந்து கொண்டதால், அவனது குரல் இன்னும் நிதானமாக, உறுதியாக வெளிவந்தது.
“நிலா, நான் சொல்றதை நீ நம்பல, சரி. உன் கோபத்துல தப்பில்லை. இப்போ நான் உனக்கு ஒரு வீடியோ கால் பண்றேன். நீயே நேர்ல பார்த்து நான் விஷ்வாதான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கோ, ஓகேவா?” என்றான் மிகவும் சாதாரணமாக.
வீடியோ கால் என்ற வார்த்தையைக் கேட்ட அடுத்த விநாடி, நிலாவுக்குள் இருந்த பயம் பல மடங்கு அதிகமானது. இந்த நவீன டிஜிட்டல் உலகத்தில் நடக்கும் மோசடிகளைப் பற்றி நன்கு அறிந்தவள் என்பதால், முகம் தெரியாத, அடையாளம் தெரியாத ஒருவனுடன் வீடியோ காலில் பேசுவதா என்கிற தற்காப்பு உணர்ச்சி அவளை ஆட்கொண்டது. அது நிஜ விஷ்வாவாகவே இருந்தாலும், இந்தச் சூழலில் அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“என்ன தைரியம் இருந்தா என்கிட்ட வீடியோ கால் வரச் சொல்லுவீங்க? ஒழுங்கா போனை வச்சிடுங்க!” என்று ஒட்டுமொத்த மாடியும் அதிரும் வகையில் கத்தினாள். அவளது வார்த்தைகளில் பயமும், தன்னை ஒருவன் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளுகிறான் என்கிற தவிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன.
மறுமுனையில் நிலா பயந்து நடுங்குவதையும், அவளது குரலில் இருக்கும் தவிப்பையும் விஷ்வா தெளிவாக உணர்ந்துகொண்டான். அவளை மேலும் அச்சத்தில் ஆழ்த்துவது அவனது நோக்கமல்ல என்பதால், சட்டென்று தன் குரலை இன்னும் சற்றே மென்மையாக்கினான். ஒரு குழந்தையைத் தேற்றுவது போன்ற ஆசுவாசமும், அதே சமயம் மறுக்க முடியாத ஒரு மென்மையின் கரகரப்பும் அவனது தொனியில் குடியேறியது.
“சரி நிலா, நீ இப்போ பயப்படுறதுல நியாயம் இருக்கு. நாம இப்போ வீடியோ கால் பேச வேண்டாம். ஆனா, நாம நாளைக்கு நேர்ல மீட் பண்ணலாம். பப்ளிக் பிளேஸ்ல என்னால ஒப்பனா வர முடியாது, மீடியால சின்னதா ஏதாவது கசிஞ்சாலும், பிரச்சனை ஆயிடும். அதனால கொஞ்சம் அமைதியா, கூட்டம் அதிகமா இல்லாத ஒரு அமைதியான கஃபேல நாளைக்கு மீட் பண்ணலாம். நாம நேர்ல பேசலாம்.”
விஷ்வாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நிலா முற்றிலும் நிலைகுலைந்து போனாள். அவளது காலடியில் இருந்த பூமி சட்டென்று நழுவுவது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு. உலகமே அண்ணாந்து பார்க்கும் ஒரு சூப்பர் ஸ்டார், தன்னிடம் இவ்வளவு தூரம் இறங்கி வந்து, தன் பயத்திற்கு மதிப்பளித்து, நாளை நேரில் சந்திக்கலாம் என்று அனுமதி கேட்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளது ஒட்டுமொத்தப் பாதுகாப்பு வளையமும் நொறுங்குவது போல் உணர்ந்தாள்.
“எனக்கு உங்களைச் சந்திக்க எந்த அவசியமும் இல்லை! நான் எங்கேயும் வரமாட்டேன். என்கிட்ட இனிமே பேசாதீங்க!” என்று தன் அச்சத்தை மறைக்கக் குரலை இன்னும் சற்றே கறாராக்கிக் கூறினாள். அவனது அத்தனை கோரிக்கைகளையும் ஒற்றை வார்த்தையில் நிராகரித்து, இந்த விசித்திரமான நள்ளிரவு அத்தியாயத்திற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கத் துடித்தாள்.
அவள் ஆத்திரத்தோடு போனை காதில் இருந்து எடுத்து, கட் செய்ய முயன்ற அந்த விநாடி… மறுமுனையில் இருந்து விஷ்வாவின் குரல் மயிலரகைப் போல் மென்மையாக, ஆனால் அதே சமயம் அசைக்க முடியாத ஒரு தீர்க்கமான தொனியில் ஒலித்தது. அவனது வார்த்தைகள் காற்றில் சாட்டையடி போல் பாய்ந்தன.
“நிலா… நாளைக்கு நீ என்னைச் பார்க்க வரலைனா, நீ இருக்குற இடத்தைத் தேடி நானே அங்க வருவேன். நீயே முடிவு பண்ணிக்கோ!”
அவன் சொன்னதைச் செய்யும் பிடிவாதக்காரன் என்பதை அவனது குரலின் அழுத்தம் நிலாவுக்கு அப்பட்டமாக உணர்த்தியது. தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்துவிட்ட கம்பீரத்தோடு, அவளது பதிலை எதிர்பாராமல், இந்த முறை அவனே அழைப்பைத் துண்டித்தான்.
மறுமுனையில் ‘டூட்… டூட்…’ என்ற சத்தம் மட்டும் ஒலிக்க, நிலா தன் கையில் இருந்த போனை வெறித்துப் பார்த்தபடி, அந்த நிசப்தமான குளிர் இரவில் உறைந்து போய் நின்றாள். அவளது இதயம் விநாடிக்கு அதிவேகமாகத் துடிக்கத் தொடங்கியிருந்தது.
போன் கட் ஆன பிறகும், அந்த நிசப்தமான இரவில் மொட்டை மாடியில் நின்றிருந்த நிலாவுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. சுற்றிலும் வீசிய குளிர்ந்த காற்று அவளது உடலை நடுங்கச் செய்ததா, அல்லது விஷ்வாவின் அந்தத் தீர்க்கமான வார்த்தைகள் அவளை உலுக்கியதா என்று அவளுக்கே தெரியவில்லை. அது விஷ்வாவின் குரல்தான் என்பதில் அவளுக்குச் சந்தேகமே இல்லை; அந்தத் தனித்துவமான கம்பீரத்தை வேறு யாராலும் மிமிக்ரி செய்துவிட முடியாது.
ஆனால், ஒட்டுமொத்த தேசமே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டார், தன் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்துத் தன்னைத் தேடி வருவேன் என்று கூறுவதை அவளது எதார்த்த மனதால் நம்பவும் முடியவில்லை, அதே சமயம் வெறும் விளையாட்டு என்று சாதாரணமாகக் கடந்து போகவும் முடியவில்லை. பயமும் குழப்பமும் இருள் சூழ்ந்த அந்த இரவை விடக் கனமாக அவளைப் பிடித்து ஆட்டுவித்தது.
‘அவருக்கு எப்படி என் நம்பர் தெரிந்தது? என் பெயர் எப்படித் தெரிந்தது?’ என்ற கேள்விகள் அவளது மூளைக்குள் சுழன்றடித்த போது, திடீரென்று அவளுக்கு மதியம் ஆபீஸ் கஃபேட்டீரியாவில் அனன்யா கேட்ட அந்த விசித்திரமான கேள்வி மின்னலென நினைவுக்கு வந்தது.
“ஒருவேளை சூப்பர் ஸ்டார் விஸ்வநாத்துக்கு நிஜமாவே உன் மேல காதல் இருந்தா… உன்னைத் தேடி வந்து தன்னோட காதலைச் சொன்னா… நீ அதை ஏத்துக்குவியா?”
அந்த நினைப்பு வந்த அடுத்த நொடி, இருட்டில் நிலாவின் கண்கள் அதிர்ச்சியால் அகல விரிந்தன. கோர்வையில்லாமல் சிதறிக் கிடந்த புதிரின் துண்டுகள் சட்டென்று ஒன்றாக இணைவது போல் இருந்தது. “ஒருவேளை அனன்யாவுக்கு இதில் சம்பந்தம் இருக்குமோ? அவள்தான் தன் அனுமதியின்றி, தனக்குத் தெரியாமல் இந்த மொபைல் நம்பரை விஷ்வாவுக்குக் கொடுத்திருப்பாளோ? ஆனால், ஏன் அவள் இப்படிச் செய்தாள்? தன் உயிர் தோழி தனக்குத் துரோகம் செய்ய மாட்டாள், அப்படியிருக்க எதற்காகத் தன் தனிப்பட்ட விவரங்களை ஒரு சினிமா நடிகரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்?” என்று எண்ணியவள், இதற்கு மேல் குழம்புவதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தாள். விடிந்ததும் முதல் வேலையாக அனன்யாவை நேருக்கு நேர் சந்தித்து, சட்டையைப் பிடித்துக் கேட்காத குறையாக உண்மையை உலுக்கி எடுக்க வேண்டும்இதைப் பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்தாள்.
மாடியை விட்டு அவசர அவசரமாகக் கீழே இறங்கித் தன் அறைக்குச் சென்றவள், கதவைத் தாழிட்டுப் படுக்கையில் படுத்துக் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். எப்படியாவது இந்தச் சிந்தனைகளில் இருந்து தப்பித்துத் தூங்கிவிடத் துடித்தாள். ஆனால், தூக்கமும் ஆவலுடன் கண்ணாமூச்சி ஆடியது. விஷ்வாவின் அந்தக் கடைசி வார்த்தைகள் அவளது காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்க, நள்ளிரவு கடந்து அதிகாலைப் புலர்வது வரை படுக்கையில் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டே இருந்தாள் நிலா.
மறுபுறம், தனது பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பின் படுக்கையறையில், விஷ்வா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனநிலையில், மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தான். நிலா தன்னை அடையாளம் காண மறுத்து, கோபமாகப் பொரிந்து தள்ளி ஃபோனை கட் செய்திருந்தாலும், அவளுடன் நிஜமாகப் பேசிய அந்தச் சில நிமிடங்கள் அவனுக்குள் ஒரு பேரானந்தத்தை விதைத்திருந்தன. திரையுலகின் போலித்தனமான பாராட்டுக்களுக்கு மத்தியில், நிலாவின் அந்தக் கோபமும், மிரட்சியும் அவனுக்கு அத்தனை தூய்மையானதாக, வசீகரமானதாகத் தோன்றியது.
“முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம், அதுவும் இரவு நேரத்தில் பெண்கள் காட்டும் இயல்பான அந்தப் பயமும், தற்காப்பு உணர்வும்தான் நிலாவின் இந்த அதிரடி மறுப்புக்குக் காரணம”’ என்பதை அவன் மிகச் சரியாகப் புரிந்து கொண்டான். அவளது கோபம் அவனுக்குள் எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை; மாறாக, அவளது கண்ணியத்தின் மீது அவனுக்கு இருந்த மதிப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியிருந்தது.
நாளை அவளை கஃபேவில் சந்திக்கப் போகும் அந்தத் தருணத்தை எண்ணிய மாத்திரத்தில், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை ஆளும் அந்த சூப்பர் ஸ்டாரின் இதயம், ஒரு சாதாரணக் காதலனைப் போலத் துள்ளிக் குதித்தது. நிலாவைப் போலவே, தூக்கம் அவனுக்கும் அந்த இரவில் எட்டாக் கனியானது. படுக்கையின் விளக்குகளை அணைத்துவிட்டு, ஜன்னல் வழியே தெரிந்த சென்னை மாநகரத்தின் நள்ளிரவு ஒளிகளைப் பார்த்தபடி அவனும் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டே இருந்தான்.
நாளை நிலாவை முதன்முதலில் நிஜ உலகத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் போது என்ன பேச வேண்டும்? அவளது மனதில் இருக்கும் அந்த அதீத பயத்தையும் தயக்கத்தையும் எப்படித் தன் அன்பால் போக்க வேண்டும்? தன்னை ஒரு எட்டாக்கனி சூப்பர் ஸ்டாராகப் பார்க்காமல், வெறும் விஷ்வாவாக அவளை எப்படி ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நொடியையும் அணுஅணுவாகக் கற்பனை செய்யத் தொடங்கினான். அவளது முகபாவனைகள், அவளது மிரண்ட கண்கள் என அத்தனையையும் தன் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தபடியே விஷ்வா அந்த இரவைக் கழித்தான்.
சினிமா வெளிச்சத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு துருவமும், எதார்த்தமான நடுத்தரக் குடும்பத்துச் சூழலில் இருக்கும் மற்றொரு துருவமும்… இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இந்த இரு மனிதர்களின் அந்த முதல் நிஜ சந்திப்பிற்காக, அந்த மார்கழி இரவின் மணித்துளிகள் வழக்கத்தை விட மிக மெதுவாக நகரத் தொடங்கின.
மறுநாள் காலை விடிந்ததும் நிலாவின் மனதில் இரவு முழுக்கத் தேங்கியிருந்த பாரம் அவளின் கோபத்தை அனன்யாவை நோக்கித் திருப்பியது. இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்த தவிப்பும், விஷ்வாவின் மிரட்டலான வார்த்தைகளும் அவளை ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்கவிடவில்லை. விடிந்தும் விடியாததுமாகப் படுக்கையை விட்டு எழுந்தவள், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்; தூக்கமில்லாத கண்களும், சோர்ந்த முகமும் அவளது தவிப்பை அப்பட்டமாகக் காட்டின. தன் உணர்ச்சிகளை எப்படியோ கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு, மொபைலை எடுத்து அனன்யாவுக்குப் போன் செய்தாள்.
ஆனால், அந்த அதிகாலை நேரத்தில் வீட்டில் பெற்றோர் நடமாட்டம் இருந்ததாலும், சமையலறையில் அம்மாவின் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதாலும், அவளால் போனில் எதையும் விரிவாகவோ, சத்தமாகவோ பேச முடியவில்லை. தன் கோபத்தையும் அதிர்ச்சியையும் தொண்டைக்குள்ளேயே அமுக்கிக் கொண்டு, “அனன்யா, நீ இப்போவே கிளம்பி எங்க வீட்டுக்கு வா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்,” என்று மட்டும் சுருக்கமாக, மிகவும் கண்டிப்பான குரலில் கூறிவிட்டு, அனன்யாவின் பதிலைக்கூட எதிர்பாராமல் போனை டக்கென்று வைத்தாள்.
நிலாவின் குரலில் இருந்த அந்த அசாதாரணமான நடுக்கமும், இதுவரை இல்லாத ஒரு தீவிரமும் மறுமுனையில் இருந்த அனன்யாவைத் திடுக்கிடச் செய்தது. நேற்று மாலை விஷ்வாவிடம் நிலாவின் போன் நம்பரைத் தூக்கிக் கொடுத்த குற்ற உணர்ச்சி அவளை ஏற்கெனவே உள்ளுக்குள் புழுவாக வாட்டிக் கொண்டிருந்தது. இப்போது நிலாவின் இந்த அவசர அழைப்பைக் கேட்டதும், ‘விஷயம் ஏதோ தப்பாக நடந்திருக்கிறது, விஷ்வா நேற்று இரவே நிலாவுக்குப் போன் செய்துவிட்டார்’ என்பதை அனன்யா உடனடியாக ஊகித்துக் கொண்டாள். அதன் விளைவாக, தன் தோழியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற பயத்தோடும் பதற்றத்தோடும், அடுத்த சில நிமிடங்களிலேயே வண்டியை எடுத்துக்கொண்டு நிலாவின் வீட்டிற்கு விரைந்தாள்.
error: Content is protected !!