Skip to content
Post Views: 45

அத்தியாயம்-29
அன்று ஆதித்யா தன்னுடன் ரிசார்ட்டிற்கு வர மறுத்ததில் இருந்தே தர்ஷாவின் மனநிலை சரியில்லை. அவனது கவனத்தை ஈர்க்க அவள் எவ்வளவோ முயன்றும், எதுவும் அவளுக்கு சாதகமாக நடக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, கல்லூரியின் முதல் நாளிலேயே சீனியர்களின் ராக்கிங்கில் இருந்து அவளைக் காப்பாற்றியதிலிருந்து அவன் தான் அவளின் ஹீரோ.
ஆனால் ஆதித்யாவைப் பொறுத்தவரை அவள் அவனது மற்ற ஆண் நண்பர்களைப் போல ஒருத்தி அவ்வளவுதான்.அவளுகென்று எந்தவொரு சிறப்பு கவனிப்போ சலுகையோ அவன் ஒருபோதும் காட்டியதில்லை.
Advertisement
மற்ற பெண்களிடம் அவன் காட்டும் ஒதுக்கத்தைப்பார்த்து அவன் அவளிடம் காட்டும் அந்தச் சாதாரண நட்பே பெரிய விஷயம் என்று அவள் திருப்தி அடைய வேண்டியிருந்தது.அவளது கல்லூரி வாழ்க்கை முழுவதும் அவன் மேல் வைத்த ஒருதலை காதலில் ஏங்கியே கழிந்தது.
கல்லூரி முடிந்த பிறகு, அவனுடனான தொடர்பு அவளுக்கு முற்றிலும் விட்டுப்போனது. அவனைத் தொடர்பு கொள்ள அவள் எவ்வளவு முயன்றும், அவனது எண் அவளுக்குக் கிடைக்கவே இல்லை. அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் இல்லாததாலும், அனைவருடனான தொடர்பையும் அவன் துண்டித்துக் கொண்டதாலும், அவன் மாயமாய் மறைந்துவிட்டது போலவே இருந்தது. ஒருவேளை அவன் தனது மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவளே ஒரு முடிவுக்கு வந்தாள். ஆனாலும் அவளால் அவனை மறக்கமுடியவில்லை; இதயத்தின் ஆழத்தில் அவனுக்கான காதலைச் சுமந்து கொண்டு,அவன் வருவான் என்று காத்திருந்தாள். அவளது பல வருடப் பிரார்த்தனைக்கு ஒரு நாள் விடை கிடைத்தது. ஆதி நெக்செஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறான் என்ற செய்தி அவளுக்குத் தெரியவந்தபோது, அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தான் மறுபிறவி எடுத்தது போல உணர்ந்தாள்.
பெரிய கனவுகளோடும் நம்பிக்கையோடும் அவள் ‘நெக்செஸ்’ வந்தாள். ஆனால் முதல் நாளிலேயே, அவன் கல்லூரி காலத்து ஆதித்யா இல்லை என்பதை அவள் புரிந்துகொண்டாள். அவன் எப்போதுமே பெண்களைத் தவிர்த்து, தனிமையை விரும்புபவன் தான் என்றாலும் இப்போது இருப்பதுபோல் யாருக்கும் இளகாத பாறையாக முன்பு அவன் இருந்ததில்லை.
Advertisement
ஆனால் தண்மதியிடம் மட்டும் அவன் வேறு ஒரு ஆளாக இருந்தான் என்பதை அவள் பார்த்தவுடன் புரிந்து கொண்டாள்.தண்மதியை அவன் பார்த்த விதம் அவள் மீது அவனுக்கு இருந்த பிரியத்தை அப்பட்டமாக காட்ட, பொறாமைத்தீ அவளுக்குள் பற்றி எரிந்தது.
Advertisement
அவனுடன் ஒட்டிக்கொண்டு அலைந்து அவனை கவர அவள் எவ்வளவோ போராடினாள், ஆனால் ஒரு அங்குலம் கூட அவனிடம் நெருங்க முடியவில்லை.
அவன் இதயத்தைப் பூட்டி சாவியைத் தொலைத்தவன் போல இருந்தான்.
அவளது நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இந்தச் சமயத்தில்தான், ஆதியும் நவீனும் பேசியதை அவள் கேட்க நேர்ந்தது. ஆதி மேல் தீராத காதலில் இருந்த அவளது இதயம்,இந்த சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடித்தது.
Advertisement
ஆதியின் ஞாபக மறதியைப் பயன்படுத்தித் தான் தான் அவனது கடந்த காலக் காதலி என்று பொய் சொல்ல முடிவு செய்தாள்.
‘ஒரு பொய்யுடன் இந்த உறவைத் தொடங்கினால் என்ன? தன் உண்மையான காதலால் பின்னாளில் அவன் இதயத்தை வென்றுவிட முடியும் என்று நம்பினாள்.தேவையெல்லாம் கொஞ்சம் பொறுமைதான்.. அதில்தான் அவள் ஏற்கனவே மாஸ்டர்ஸ் முடித்துவிட்டாளே!’
ஆனால், அவனை மதியிடம் பேச அனுமதித்தால் தனது காதல் (பொய்) கதை முடிவுக்கு வந்துவிடும் என்று அவளுக்குத் தோன்றியது. எனவே, சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் செயல்படத் தீர்மானித்தாள்.
மதி எங்கோ நிலைகுத்திய பார்வையுடன் கவனமில்லாமல் தன் காபியைப் பருகிக் கொண்டிருந்தாள்.
“ஏன் திடீர்னு என் லைஃப் இப்படி தலைகீழா மாறுச்சு…?’
முதல் நாள் இரவு அவள் வானத்தில் பறப்பது போன்ற மகிழ்ச்சியில் இருந்தாள், ஆனால் மறுநாள் காலையில் பூமிக்குக் கீழே, பாதாளத்தில் தூக்கி எறியப்பட்டு பாறையின் அடிவாரத்தில் கிடந்தாள்..
‘அன்னைக்கு நைட் அவனுக்கு என்னதான் ஆச்சு..? அவனுக்கு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஏதாவது இருக்கா..? நான் என்ன தப்பு பண்ணினேன்?’ அவளுக்குள் ஏகப்பட்ட கேள்விகள் முட்டிக்கொண்டிருந்தன, ஆனால் அதற்கு பதில் அளிக்க வேண்டியவனோ அவளை பார்ப்பதற்குகூட தயாராக இல்லை.
ஒரு கையால் எப்படி ஓசை எழுப்ப முடியும்? தங்களுக்குள் எல்லாம் சரியாக வேண்டும் என்று அவள் மட்டும் முயன்றால் போதுமா?அவன் தன் பிடிவாதத்திலிருந்து சற்றும் இறங்கி வருவதாகத் தெரியவில்லையே.
அவன் செல்லும் இடமெல்லாம் அவனது பின்னால் துரத்திச் செல்வதிலும், அவனது பாதையில் கிடக்கும் ஒரு தூசியைப் போல அவனால் உதாசீனப்படுத்தப்படுவதிலும் அவள் முற்றிலும் சோர்ந்து போயிருந்தாள். அவளது சுயமரியாதை இனிமேலும் அவனது பின்னால் ஓடதே வேண்டாம் என்று அவளைத் தடுத்தது.இப்போது அவனிடமிருந்து மெல்ல விலகத் தொடங்கியிருந்தாள்.
இப்படி முற்றிலும் அந்நியர்களாக மாறி நிற்பதற்கு அவனைத்திரும்ப பார்க்காமலே இருந்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு மூலையில் அவனுக்காக காத்துக்கொண்டே காலத்தைக் கழித்திருக்கலாம் என்று கூடதோன்றியது.
அவளை குப்பை மாதிரி தூக்கி எறியத்தான் முதல்நாள் அவளிடம் அத்தனை அன்புடனும் உரிமையுடனும் நடந்து கொண்டானா ?
எப்பொழுதும் போல ‘ஹிட்லராகவே’ இருந்திருந்தால் அவனது நிராகரிப்பை தாங்கியிருக்க முடியுமே… ஆனால், அவனது அன்பை திகட்ட திகட்ட அனுபவித்தபின், இந்த நிராகரிப்பைத் தாங்கிக் கொள்வது அவளுக்கு நெஞ்சை கிழிப்பது போல் வலித்தது.
ஏகப்பட்ட எண்ண அலைகள் முட்டி மோத அந்த உணர்ச்சி சுழலில் சிக்கி அவள் மூழ்கிக் கொண்டிருந்தபோது, தனக்கு எதிரே இருந்த நாற்காலியில் யாரோ அமர்வதை உணர்ந்து அவளது சிந்தனை கலைந்தது. அங்கே ஆதி அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அவளது கண்கள் விரிந்தன.
‘கடவுளே! பட்டப்பகல்ல எனக்கு பிரம்மை (Hallucination) பிடிக்க ஆரம்பிச்சிருச்சா…?’ தன் பகல் கனவிலிருந்து விடுபடுவதற்காக அவள் தன் இமைகளை வேகமாக சிமிட்டிப் பார்த்தாள்.
ஆனால் அவன் அங்கிருந்து மறையவில்லை… மாறாக, தன் கையில் இருந்த காபி கப்பின் விளிம்பை விரல்களால் வருடிக்கொண்டிருந்தான்.
“ஒருவேளை தெரியாம இங்க வந்து உட்கார்ந்துட்டாரோ..?” அவள் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்ப எழுந்தவளை அவனது அழைப்பு நிறுத்தியது..
“மதி…”
‘நிஜமாவே அவன் என்பேரை அழைத்தானா…?’ அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை, ஏனென்றால் அவனது குரலி வெறும் காற்றாகத்தான் ஒலித்தது.
அவள் அவனைச் சந்தேகத்தோடு பார்த்தாள், அவனோ அவளைத் தவிர வேறு எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்
அவர் என்னைக் கூப்பிடல…’ என்று தனக்குள்ளேயே முடிவு செய்து கொண்டு அவள் மீண்டும் கிளம்பத் திரும்பினாள்.
“மதி…” இந்த முறை அவனது அழைப்பு சற்றே சத்தமாகவும், கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது.
“ப்ளீஸ் உட்காரு… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
திகைத்துப் போய் ஒரு பொம்மையைப் போல அவள் அமர்ந்தாள்.
அவன் உடனே பேசத் தொடங்கவில்லை. உரையாடலை எப்படித் தொடங்குவது என்று சரியான வார்த்தைகளைத் தேடுவது போல் இருந்தது. படபடக்கும் இதயத்தோடு, அவன் எப்போது பேசுவான் என்று பொறுமையின்றி காத்திருந்தாள்.
“மதி.. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா…?”
“என்ன கேட்கணும்?”
“அஞ்சு வருஷம் முன்னாடி பெங்களூருல நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல பழக்கமானவங்க இல்லையா..?”
“ஆமா…” அவளது வாய் பதிலளித்ததே தவிர, மனதோ… ‘ஏன் திடீர்னு இவருக்கு பாஸ்ட்டைப் பத்தி தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வம் வருது?’ என்று குழம்பியது.
“அப்போ… நமக்கு நடுவுல என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் இருந்ததுன்னு எனக்குக் கொஞ்சம் தெளிவா சொல்றியா?” கேட்கும் போதே அவனது வார்த்தைகள் தடுமாறின.
மதியின் இதயம் வேகமாகத் துடித்தது. ‘அவர்களுக்கிடையே அந்தப் பேச்சை இனிமேல் எடுக்கக் கூடாது என்று சொன்னவனே, இப்போது ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறான்…? ஒருவேளை… எல்லாப் பிரச்சினைகளையும் சரி பண்ணனும்னு நினைக்கிறானா?’
அவளுக்குள் ஒரு புதிய உற்சாகமும், சிறு நம்பிக்கையும் துளிர்த்தது. குறைந்தபட்சம் அவனுக்குத் தங்களது கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் ஆர்வம் வந்திருக்கிறதே, இதுவே ஒரு நல்ல பாசிட்டிவான அறிகுறிதானே!
‘எப்படித் தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது என்று தன் படபடக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவள் ஒரு சரியான வாக்கியத்தை மனதிற்குள் கோர்ப்பதற்குள்… தர்ஷாவின் குரல் அவர்களது காதில் கீச்சிட்டது.
“ஆதி…”
அவளது முகத்தில் இருந்த பதற்றத்தையும், குரலில் இருந்த அவசரத்தையும் கண்டு ஆதி தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான்.
“என்ன ஆச்சு தர்ஷா?”
அவள் அவனைக் மிகுந்த அனுதாபத்தோடு பார்த்தாள், அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.
“ஐ அம் சாரி ஆதி.. ஐ அம் ரியலி சாரி.. நான் எவ்வளவு பெரிய முட்டாள்? நாம இங்க மீட் பண்ணினதுல இருந்தே நீ ஒரு மாதிரியா வித்யாசமா நடந்துக்கிறதை நான் கவனிச்சேன்.. அப்போ நீ என் மேல ஏதோ கோபத்துல இருக்கேன்னுதான் நான் நினைச்சேன்.. ஆனா நீ உன்னோட நினைவுகளை இழந்திருப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கல..”
“அது உனக்கு எப்படித் தெரியும் தர்ஷா?” அவளது தொடர் உளறலை அவனது கடுமையான குரல் இடையிட்டு நிறுத்தியது.
அவனது கோபத்தில் இறுகிய குரலில் தர்ஷா சற்றே தடுமாறினாள்.. ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ நவீன் கூடப் பேசிக்கிட்டு இருந்ததை நான் தற்செயலா கேட்க நேர்ந்தது…” அவளது குரலில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் தெரியவில்லை.
“ஆதி.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம்.. நீ சொல்லாம கொள்ளாம காணாம போயிட்ட.. உன்னை நினைச்சு நான் எவ்வளவு கவலைப்பட்டு அழுதிருக்கேன்னு உனக்குத் தெரியுமா? உன்னைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் எனக்கு உயிரே இல்லை.. ஆனா உன்னைப் பார்த்ததுக்கப்புறம் நீ நம்மளப் பத்தி ஒண்ணுமே பேசாம இருந்தது எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது. உன்கிட்ட மனசு விட்டுப் பேசணும்னுதான் உன்னை மகாபலிபுரம் ட்ரிப்புக்குக் கூப்பிட்டேன்.. ஆனா நீ அதையும் மறுத்துட்ட… நீ என்னை அவாய்ட் பண்றன்னு கூட நான் நினைச்சேன்.. உன்னைத் தப்பா நினைச்சதுக்கு ஐ அம் சாரி ஆதி.. ஆனா இப்பதான் நீ வித்தியாசமா நடந்துக்குறதுக்கான காரணம் தெரிஞ்சது.. டோன்ட் வொர்ரி ஆதி, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.. எது நடந்தாலும் சரி, நாம முன்னாடி பிராமிஸ் பண்ணிக்கிட்ட மாதிரி நான் எப்பவுமே உன்கூடவே தான் இருப்பேன்…”
“தர்ஷா.. தேவையில்லாம வளவளன்னு பேசாம. ஸ்ட்ரெயிட்டா பாயிண்ட்டுக்கு வா…”
அவளது வாயிலிருந்து அடுத்து என்ன வரப்போகிறது என்பதை அவன் ஏற்கனவே கணித்துவிட்டான். ஆனால் அதுவாக இருக்கக்கூடாது என்று மனம் அடித்துக்கொண்டது.
தர்ஷா தன் முன்னால் இருந்த அந்தப் பாவப்பட்ட ஜீவன் மீது,ஒரு மிகப்பெரிய பொய்யை ஏவுவதற்கு முன் ஒரு ஆழமான மூச்சை எடுத்துக்கொண்டாள்.
“நான்… நான்தான் உன்னோட பாஸ்ட்ல (Past) நீ லவ் பண்ணின பொண்ணு…அஞ்சு வருஷமா நீ காத்துட்டு இருக்க அந்த மிஸ்ட்ரி (mystery) கேர்ள் நான் தான்..”
ஆதி ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான்.அவன் எதைக் கேட்கக் கூடாது என்று நினைத்தானோ எது நடந்துவிடக்கூடாது என்று தவித்தானோ அது நடந்தே விட்டது.
‘இல்ல.. இது உண்மையா இருக்க வாய்ப்பே இல்லை…’ அவனது இதயம் உள்ளூக்குள் கதறியது… ஆனால் வெளியே முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் சிலையாக நின்றான்.
தர்ஷா வீசிய எரிகுண்டிற்கு பிறகு, அங்கே ஒரு கனத்த அமைதி நிலவியது… ஆனால், அதற்கு நேர்மாறாக இருவர் மனதிலும் பூகம்பமும் புயலும் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது..
ஆதியின் கண்கள் அனிச்சையாக மதியைப் பார்த்தன.
தர்ஷா அங்கு வந்த நொடியிலிருந்தே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை மதி உணர்ந்திருந்தாள். என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அவளது அசந்தர்பமான வருகையால் ஏதோ ஒன்று தவறாக நடக்கப்போகிறது என்று மட்டும் அவளது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது..
அவள் ஆதியிடம் பேசத் தொடங்கியதில் இருந்தே மதியின் அடிவயிற்றை பயம் கவ்வியது. இறுதியாக, அவளது வாயிலிருந்து அந்த வெடிகுண்டு மிகச் சரியாகத் தூக்கி வீசப்பட்டபோது, மதியின் இதயம் மில்லியன் துண்டுகளாகச் சிதறிப் போனது.
அவளும் தன்னையறியாமல் ஆதியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இவ சொல்றத நீ நம்புறியா?” என்று அவனிடம் கேட்பது போல இருந்தது அவளது அந்தப் பார்வை.
பேச்சின்றி அவளை வெறித்துப் பார்ப்பதைத் தவிர…அவனிடம் அதற்கு எந்தப் பதிலும் இருக்கவில்லை.
தொடரும்..
error: Content is protected !!