Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 17

பூவே 17

 

 

 



Advertisement

 

“ஏம்த்தா, நகத்தை கடிக்குற?” என்று பேத்தியின் முகத்தை கையில் ஏந்தி மயிலம்மா சொன்னதும்,

 

Advertisement

“அது வந்து பாட்டி, மாமாவைத்தான் தேடுறேன். ஆளையே காணோம்… இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா. அதுக்கு மாமா எனக்கு சட்டை எடுக்கப் போச்சு. இன்னும் ஆளை காணோம்…” என்றாள் வாசலையே பார்த்துக்கொண்டு.

Advertisement

 

“ஏந்தா, உனக்குத்தான் சட்டை துணி இருக்கே. அப்பறம் எதுக்கு புதுசு எடுக்கப் போனான் உன் மாமன்?” என்றார்.

 

Advertisement

“ஐய்யோ பாட்டி… நா டான்ஸ் ஆடுறேன். ஆம்பள வேஷம். அதுக்கு வேஷ்டி சட்டை வேணும். மாமா வேஷ்டி சரி பண்ணிக்கலாம். மாமா சட்டை நல்லா தொளதொளன்னு இருக்கு. அது வேணாம்னு டீச்சர் சொல்லிட்டாங்க. அதுக்குத்தான் மாமா டவுனுக்குப் போயிருக்கு..” என்ற வேல்விழி‌ சொல்லிக்கொண்டே தெரு வாசலுக்கு  போனாள்.

 

இருவரின் பேச்சு வார்த்தையையும் கேட்டிருந்த காளியம்மாவின் வயிறு கபகபவென எரியத் தொடங்கியது.

 

‘இவ கெட்ட கேட்டுக்கு எம்புள்ள துணி கேட்குதா? இவளை எப்ப வீட்டை விட்டு துறத்தப் போறேன்னு தெரியல…’ என்று தனக்குள்ளே முணங்கிக்கொண்டு வெளியே வந்தார்.

 

“ஏட்டி, வேற வேலை சோலி இல்லையோ?” என்ற காளியம்மா சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தாள்..

 

“அது எல்லாம் முடிச்சிட்டேன் பாட்டி, இப்ப பள்ளிக்கொடம் போகணும்.. ” என்றாள்..

 

“அதுக்கு ,பத்து பாத்திரம் தேய்க்கக்கூடாதுன்னு யாராவது சொன்னாங்களா உனக்கு.. புழக்கடையில அம்புட்டு பாத்திரம் தேய்க்க போட்டிருக்கு.. நிக்குற நேரத்துக்கு போய் தேய்ச்சு போடு” என்ற காளியம்மாவை , பாவமாக பார்த்தாள்..

 

“பாட்டி, நா இராத்திரி வந்து தேய்ச்சு  தரேன் பாட்டி.. இப்ப நா ஸ்கூலுக்கு போகணும்” என்று மெல்ல சொன்னதும்..

 

“எது ! இராத்திரி தேய்க்குறீயா? திங்குறது ஓசி சோறு, அதுக்கு கூட உன்னால் வேலை செய்ய முடியாதோ…?” என்று அவள் காதருகே மெல்ல சொன்னதும்..

 

அவளுக்கு கண்கள் கலங்க, அவரை நிமிர்ந்து பார்த்தவளுக்கு.. இந்த ஒரு வாரத்தில் தன்னை முழுதாக  வெறுக்கும்.. காளியம்மா , அவளுக்கு புதுசாவும் இருக்க.. கூடவே பயமாகவும் இருந்தது..

 

“ஏம்த்தா , நிக்குற நீ பள்ளிக்கொடம் போ! மாமன் வந்தா , அங்க வரச்சொல்லுறேன்” எனக் குரல் கொடுத்தார் மயிலம்மா..

 

“இல்லை பாட்டி இன்னும் நேரமிருக்கு.. நா பாத்திரம் தேய்ச்சிட்டே போறேன்.. இன்னும் டவுன் பஸ் வரலல்லை” என்று சொல்லும் போதே மூக்கில் நீர் ஒழுகியது. கண்ணீரை அடக்கியவளுக்கு மூக்கில் வரும் நீரை கைகளால் துடைத்துக்கொண்டு , கொள்ளை பக்கம் சென்றாள்..

 

“நா, சரசு வூடு வரை போயிட்டு வரேன்த்தை.. நாளைக்கு நிச்சயத்துக்கு என்னென்ன பண்ணனும்னு பார்த்து  சொல்லிட்டு வரேன்னு” தகவலாக சொல்லி சென்றார்..

 

“இவளுக்கு என்னாச்சு மக வூட்டுக்கு போயிட்டு வந்ததிலிருந்து.. ஒரு மார்க்கமாக தான் இருக்கா” என்று தன்னைப்போல் சொல்லிக்கொண்டார்..

 

“என்னடி  மயிலா, தனியா பேசிக்குற! கால் இப்ப பரவாயில்லையா” என்று பக்கத்து வீட்டு கோடியம்மா கெழவி கேட்டுக்கொண்டே , திண்ணையில் அமர்ந்தார்..

 

இங்கு புழக்கடைக்கு வந்தவளுக்கு தலையே சுற்றி போனது.. ‘பரந்த மேலிருந்த அண்டா, குண்டானு ஆரம்பிச்சு அம்புட்டு பித்தளை பாத்திரத்தை அள்ளி போட்டு போயிருந்தார் காளியம்மா..

 

அடக்கி வைத்த அழுகை கூட , இம்புட்டு பாத்திரத்தை பார்த்ததும்.. கண்களில் இருந்து நீர் வழிய,

 

செங்கலை தூள் பண்ணி கூடவே கற்பூரவள்ளியும் சேர்த்து.. கொஞ்சமா சோப் துண்டுபோட்டு லேசாக தண்ணீ தெளித்து.. வைக்கோலை கைகளில் சுற்றி… முதலில் சின்ன சின்ன பாத்திரங்களை தேய்க்க ஆரம்பித்தாள்..

 

அவள் உயரத்தில் பாதியளவு இருந்த , அண்டாக்களை அவளால் தூக்கவே முடியவில்லை, மெல்லமா அதை உருட்டி வரவே! அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது

..

 

அண்டாக்கே இந்த நிலை என்றால்.. அவள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பித்தலை தவலையை பார்த்து.. மூச்சு பிடித்துக்கொண்டது..

 

‘வேலு, இந்த தவலையை பார்த்துட்டு நின்னா இன்னைக்கு முழுக்க நீ நின்னுட்டு தான் இருக்கணும்.. சீக்கிரம் தேய்க்குற வேலையை பாருடி’ தனக்கு தானே சொல்லிக்கொண்டு,

முதலில் அண்டாவை தேய்க்க தொடங்கினாள்..

 

அதே நேரம்‌ அங்கே வந்த வெற்றி. அவளிருந்த நிலையை கண்டு கோவம் தலைக்கேற,

 

“வேலு” என்றான் சத்தமாக,

 

சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க,

 

 

“மாமா, சட்டை வாங்கிட்டு வந்துட்டியா?” என்று சிரிப்புடன் கேட்டவளை,

 

ஒரு நொடி இமைக்காமல் பார்த்து நின்றான் வெற்றி.

கண்கள் கலங்கி, மூக்கு சிவந்து, பாவாடை முழுக்க செங்கல் தூள் ஒட்டியிருந்தது.

 

கைகளெல்லாம் சுருங்கிப் போய், பெரிய அண்டாவை தேய்த்துக்கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு நெஞ்சே வலித்தது.

 

“இதெல்லாம் என்னத்துக்கு பண்ற?” என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டான்.

 

“அது… நா சும்மாத்தான் மாமா…” என்று அவள் இழுத்ததும்,

 

“சும்மாவா?” என்று சுற்றி கிடந்த பித்தளை பாத்திரங்களை பார்த்தான்.

 

அவன் குரலில் இருந்த கோபத்தை விட, கண்களில் இருந்த வலி தான் வேல்விழியை அமைதியாக்கியது.

 

“மாமா, முதல்ல சட்டையை காட்டு. டீச்சர் திட்டுவாங்க…” என்று அவள் மீண்டும் அதையே கேட்டதும்,

 

வெற்றிக்கு தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருந்தது.

 

இத்தனை பாத்திரங்களுக்கு நடுவில் உட்கார்ந்து அழுதுகொண்டே வேலை பார்த்திருக்கிறாள். ஆனால் அவள் கவலை முழுக்க பள்ளிக்கூட ஆண்டு விழாவையும், தான் வாங்கி வரச் சொன்ன சட்டையையும் பற்றித்தான் இருந்தது.

 

“வேலு…” என்று மெதுவாக அழைத்தவன்,

 

“எழுந்திரு…” என்றான்.

 

“இல்ல மாமா, இதை தேய்ச்சிட்டு”

 

“எழுந்திருன்னு சொல்றேன்…” என்றவன் குரல் கரகரத்தது.

அதில் இருந்த கோபத்தை விட, பாசம் அதிகமாக இருந்தது.

 

வேல்விழி மெதுவாக எழுந்து நின்றாள்.

 

“மாமா…”

 

“நீ போய் கை, கால் கழுவிட்டு வா. மீதி வேலையை நா பாத்துக்குறேன்…” என்றவன் சட்டையை திண்ணையில் வைத்துவிட்டு, வேட்டியை மடித்துக்கட்டினான்.

 

“ஐய்யோ, வேணாம் மாமா. நா தேய்ச்சிடுறேன்…” என்று அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.

 

“உன்னை யாருடி இதெல்லாம் செய்யச் சொன்னது?” என்று பல்லைக் கடித்தவன், பெரிய அண்டாவை இழுத்து வைத்தான்.

 

“மாமா, வேணாம். பாட்டி திட்டுவாங்க…” என்று அவள் மீண்டும் அவன் அருகே வந்தாள்.

 

“திட்டுனா திட்டட்டும். நீ தள்ளி நில்லு…” என்றவன் வைக்கோலை எடுத்து பாத்திரத்தை தேய்க்க ஆரம்பித்தான்.

 

வேல்விழியோ, அவனை வேலை செய்ய விடாமல் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.

 

“மாமா, நா பண்ணிக்கிறேன்…”

 

“வேலு…”

 

“மாமா…”

 

“தள்ளி நில்லுடி…” என்று சொல்லிக்கொண்டே தவலையின் மீது தண்ணீர் ஊற்றினான்.

 

அவன் சொன்னதைக் கேட்காமல், கையில் இருந்த வைக்கோலை பிடுங்க முயன்றாள்.

 

“குடு மாமா…”

 

“முடியாது…”

 

“குடுன்னா…”

 

இருவரும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க, கீழே சிந்தியிருந்த சோப்புத் தண்ணீரில் வேல்விழியின் கால் வழுக்கியது.

 

“அச்சோ…!”

 

என்று அலறியவள் சரிய,

 

“வேலு!” என்று பதறிய வெற்றி அவளைப் பிடிக்க கை நீட்டினான்.

 

ஆனால் அவன் காலும் சோப்புத் தண்ணீரில் வழுக்க,

 

அடுத்த நொடி,

 

“தொப்பென்று…”

 

இருவரும் ஒன்றாக கீழே விழுந்தனர்.

 

வெற்றி கீழே விழ, அவன் மேல் வேல்விழி வந்து விழுந்தாள்.

 

ஒரு நொடி இருவரும் என்ன நடந்தது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

 

அதே நேரம்,

 

“அடியாத்தி…!” என்ற குரல் கேட்டது.

 

சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்த வெற்றிக்கு, வாசலில் நின்ற அன்னையின்  கண்கள் விரிய அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

விழுந்த அதிர்ச்சியை விட, அம்மா பார்த்துவிட்டார் என்பதுதான் வெற்றியின் நெஞ்சை பதற வைத்தது.

 

ஆனால் காளியம்மாவின் பார்வையோ வெற்றி மீது இல்லை.

 

அவன் மேல் விழுந்து கிடந்த வேல்விழியின் மீது மட்டுமே நிலைத்திருந்தது.

 

“பா… பாட்டி…” என்று திக்கித் திணறினாள்.

 

வெற்றியும் எழுந்து நின்றான்.

“எதுக்கு ம்மா, பரண்மேல இருந்த அண்டா, குண்டா எல்லாம் எடுத்து போட்டீங்க?” என்றான்.

 

மகன் திடீரென கேட்ட கேள்வியில் சற்று திகைத்தவர்,

 

“அது ஒன்னுமில்லடா… நாளைக்கு நிச்சயத்துக்கு அக்கா வீட்டுல சமைக்க பாத்திரம் வேணும்னு கேட்டாங்க. அதான் இப்பவே கழுவி வச்சிடலாம்னு எடுத்துப் போட்டேன்…” என்றார் இயல்பாக.

 

“அதுக்கு வேலுவை எதுக்கு கழுவ விட்டீங்க?” என்றான்.

 

“அட, நா எங்கடா கழுவ விட்டேன்? பள்ளிக்கொடம் போக இன்னும் நேரமிருக்கு. சும்மா நின்னுக்கிட்டு இருந்தா. அதான், ‘ரெண்டு பாத்திரம் தேய்ச்சிட்டு போ’ன்னு சொன்னேன். இவளா எல்லாத்தையும் இழுத்து போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கா…” என்று பழியை அவள் மேல் திருப்பினார்.

 

உடனே வேல்விழி பதறி,

“ஆமா மாமா… நாதான் தேய்க்க ஆரம்பிச்சேன்…” என்றாள்.

 

அவளை ஒரு நொடி பார்த்த வெற்றிக்கு, அது உண்மை இல்லை என்பது புரிந்தது.

 

அழுது சிவந்திருந்த கண்களும், சோர்ந்து போயிருந்த முகமும், அவள் எவ்வளவு நேரமாக இந்த வேலையை செய்து கொண்டிருந்தாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.

 

ஆனால் எதுவும் பேசாமல்,

“சரி, போய் கை, கால் கழுவிட்டு வா. நேரம் ஆகுது இல்ல…” என்றான்.

 

வேல்விழி தயக்கமாக காளியம்மாவை பார்த்தாள்.

 

“போடி… பள்ளிக்கொடத்துக்கு நேரம் ஆகுதுல…” என்று காளியம்மாவும் முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னார்.

 

அவள் அங்கிருந்து

ஓடியதும், வெற்றி மெதுவாக அன்னையின் பக்கம் திரும்பினான்.

அவன் எதுவும் பேசவில்லை.

 

ஆனால் அந்த அமைதியான பார்வையே, காளியம்மாவுக்கு ஏதோ குற்றம் செய்தது போல ஒரு நெருடலை கொடுத்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!