Skip to content
Post Views: 70
கண்ணாமூச்சி 29
மறுநாள் காலை, விடியல் நிலாவுக்கு ஒரு புதிய தெளிவைக் கொண்டு வந்தது போலிருந்தது. காய்ச்சலின் உஷ்ணம் அவளது உடலை விட்டு முழுமையாக நீங்கவில்லை என்றாலும், விஷ்வாவைச் சந்திக்க வேண்டும் என்கிற அவளது மன உறுதி, அவளுக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்திருந்தது.
அவள் படுக்கையை விட்டு எழுந்து ஆடை மாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த அனன்யா பதறிப்போனாள்.
“நிலா! என்னடி பண்ற? உனக்கு இன்னும் உடம்பு முழுசா சரியாகல. டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டுப் போயிருக்கார். நீ என்னன்னா எதுவுமே ஆகாத மாதிரி கிளம்பிக்கிட்டு இருக்க… இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ் போட்டுடுடி,” என்று தடுத்தாள் அனன்யா.
Advertisement
நிலா அவளைத் திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் பழைய சோர்வு இல்லை, ஒரு தீர்க்கமான முடிவு தெரிந்தது. “எனக்கு இன்னைக்கு ஆபீஸ்க்குப் போகணும் அனன்யா. என் உடம்புக்கு ஒண்ணும் இல்லை, நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்றாள் சுருக்கமாக.
அவளது பிடிவாதத்தைக் கண்ட தங்கமும், “என்னம்மா நிலா இது? நேத்து ராத்திரி வரைக்கும் உடம்பு தணலா கொதிச்சது. அதுக்குள்ள என்ன அவசரம்? இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருமா,” என்று கெஞ்சினார்.
“இல்லைம்மா, ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்,” என்று பொய் சொல்லிவிட்டு, அம்மாவிடம் மேற்கொண்டு பேசாமல் கிளம்பினாள் நிலா. அனன்யாவுக்கு நிலா ஏன் இவ்வளவு பிடிவாதமாகப் போகிறாள் என்பது புரிந்தது. விஷ்வாவைச் சந்திக்கத்தான் இந்த அவசரம் என்பதை உணர்ந்து, அவளும் நிலாவை அமைதியாகப் பின்தொடர்ந்தாள்.
Advertisement
ஆபீஸ் வளாகத்திற்குள் நுழைந்ததும் நிலா நேராகத் தன் இருக்கைக்குச் சென்றாள். ஆனால், அவளது கவனம் சிஸ்டத்தின் மீதோ, வேலைகளின் மீதோ இல்லை. கடிகார முட்கள் நகர்வதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
மதியம் இரண்டு மணி. நிலாவின் மொபைல் அதிர்ந்தது. பிரவீனிடமிருந்து அழைப்பு வந்தது.
“நிலா… நான் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவுல கார்ல வெயிட் பண்றேன். விஷ்வா உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னான். நீங்க கிளம்பி வாங்க,” என்றான்.
நிலா மெதுவாக எழுந்து தன் பையை எடுத்துக் கொண்டாள். அருகிலிருந்த அனன்யா அவளது கையைப் பற்றினாள். அவளது கண்கள் இன்னமும் குற்ற உணர்ச்சியில் கலங்கியிருந்தன. “நிலா… விஷ்வாகிட்ட எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கோடி. என்மேல இருக்கிற கோபத்துல உன்னோட நிஜமான காதலை இழந்துடாத,” என்றாள் குரல் தழுதழுக்க.
Advertisement
நிலா பதில் ஏதும் சொல்லாமல், அனன்யாவின் கையை மெதுவாக விடுவித்துவிட்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தாள்.
பார்க்கிங் ஏரியாவில் கார் தயாராக இருந்தது. நிலா பின் இருக்கையில் ஏறி அமர்ந்ததும், பிரவீன் காரைக் கிளப்பினான். முன் கண்ணாடியின் வழியாக நிலாவின் முகத்தைப் பார்த்த பிரவீன், “நிலா, ஆரம்பத்துல ஒரு சின்ன பீட்டா டெஸ்டிங்னு சாதாரணமா நினைச்சு பண்ணினது இவ்வளவு தூரம் போகும்னு நாங்க நினைக்கல. விஷ்வா உங்களை நிஜமாவே…” என்று ஏதோ பேச முயன்றான்.
“பிரவீன், ப்ளீஸ்… நாம அங்கே போற வரைக்கும் எதுவும் பேச வேண்டாம். எனக்கு கொஞ்சம் அமைதியா இருக்கணும்,” என்று நிலா ஜன்னல் பக்கமாகத் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளது மன ஓட்டத்தைக் கலைக்க விரும்பாமல் பிரவீனும் மௌனமாக காரைச் செலுத்தினான்.
அடுத்த இருபது நிமிடங்களில், விஷ்வாவின் அந்த பிரம்மாண்டமான அபார்ட்மெண்ட் வளாகத்திற்குள் கார் நுழைந்தது. விஷ்வா வசிக்கும் தளத்திற்குச் செல்லும் பிரத்யேக லிஃப்ட்டில் நிலாவை ஏற்றிவிட்ட பிரவீன், “விஷ்வா மேல எதுவும் கோபப்பட்டுடாதீங்க நிலா. அவனும் உங்களை மாதிரிதான் சோல்மேட்டால பாதிக்கப்பட்டிருக்கான், அதனால் அவன் சொல்றதை முழுசா கேளுங்க நிலா. நான் இங்கேயே கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
லிஃப்ட் கதவு திறந்ததும், நிலாவின் கால்கள் லேசாக நடுங்கின. அவளுக்கு முன்னால் விஷ்வாவின் வீட்டின் பிரதானக் கதவு அகலத் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
நிலா மெதுவாக உள்ளே நுழைந்தாள். அந்த விசாலமான ஹாலின் நடுவே, ஜன்னல் வழியே தெரிந்த வெளியுலகைப் பார்த்தபடி விஷ்வா நின்றிருந்தான். நிலாவின் காலடிச் சத்தம் கேட்டு அவன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
அவனது முகம் தூக்கமில்லாத இரவுகளாலும் தவிப்பாலும் வாடியிருந்தது. நிலாவைக் கண்டதும் அவளது முகம் இன்னும் காய்ச்சலின் சோர்வில் இருப்பதைக் கவனித்து அவனது இதயம் துடித்தது.
இருவருக்குள்ளும் சில நொடிகள் மௌனம் மட்டுமே நிலவியது. வார்த்தைகள் வராமல், கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன.
விஷ்வா மெதுவாக அவளை நோக்கி நடந்து வந்தான். அவளுக்கு மிக அருகில் வந்து நின்று, அவளது வாடிய முகத்தை உற்றுப் பார்த்தான். “நிலா…” என்று அவனது தொண்டை அடைத்தது.
நிலா நிமிர்ந்து அவனது தீர்க்கமான கண்களைப் பார்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் திரளத் தொடங்கியது. “விஷ்வா… நீங்க என் முன்னாடி நிஜமாவே நிக்குறீங்களா? இல்ல இதுவும் அந்த சாஃப்ட்வேர் எனக்குக் காட்டுற மாயையா?” என்று விம்மினாள் நிலா.
விஷ்வா சற்றும் யோசிக்காமல், அவளது இரு கைகளையும் தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். அவனது கைகளின் உஷ்ணமும், அவனது விரல்களின் நடுக்கமும் நிலாவின் கைகளிலும் படர்ந்தது.
“இப்போ உணர்றியா நிலா? இந்தத் தொடுதல் நிஜம்… இந்த நடுக்கம் நிஜம்… உன்னைப் பார்க்கத் தவிச்ச என் இதயத் துடிப்பு நிஜம். அந்த கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கும், விர்ச்சுவல் உலகத்துக்கும் அப்பாற்பட்டு, உன்னோட இந்த விஷ்வா நூறு சதவீதம் நிஜமானவன் நிலா…” என்று விஷ்வா உணர்ச்சிப் பெருக்கோடு கூறினான், அவனது கண்கள் காதலோடு அவளை ஊடுருவின.
விஷ்வாவின் கைகளின் உஷ்ணமும், அவனது வார்த்தைகளில் இருந்த உண்மையும் நிலாவின் நெஞ்சில் சாட்டையாய் சுழன்றடித்த அத்தனை கேள்விகளுக்கும் மௌனமாய் விடையளித்தன.
விஷ்வா அவளை மெதுவாக அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான். அவளது முகம் இன்னும் காய்ச்சலின் சோர்வில் வெளிறிப் போயிருப்பதைக் கண்ட அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சமையலறைக்குச் சென்று ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து, “முதல்ல இதைக் குடி நிலா…” என்றான் மெல்லிய குரலில்.
நிலா தண்ணீரை வாங்கி சில மடக்குகள் குடித்துவிட்டு, கிளாஸை மேஜை மீது வைத்தாள். அவளது கண்கள் விஷ்வாவையே உற்று நோக்கின.
“எனக்கு இன்னும் ஒரு விஷயம் புரியல விஷ்வா…” என்று மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். “அனன்யாவும் பிரவீனும் சோல்மேட் ஹெட்பேண்ட் பீட்டா டெஸ்டிங் பண்ணனும்னு சொன்னாங்க. என்னோட சிந்தனைகள், என்னோட கற்பனைகள் அதுக்கு உருவம் குடுக்குற மாதிரி நாங்க அவதாரா ஸ்கேன் பண்ணின உங்க ஃபோட்டோ எல்லாமே அந்த சிஸ்டத்துல ஃபீட் ஆகி, அதை வச்சுதான் நீங்க என்கிட்ட பேசினீங்கன்னு சொன்னாங்க. அப்போ… நான் காதலிச்ச அந்த விஷ்வா, நீங்க இல்லையா? ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்தான் என் கூட பழகிச்சா?” நிலாவின் குரலில் ஏமாற்றமும் வலியும் இழைந்திருந்தன.
விஷ்வா சோஃபாவில் அமர்ந்திருந்தவளுக்கு எதிரே மண்டியிட்டு அமர்ந்து, அவளது முகத்தை நேராகப் பார்த்தான்.
“இல்லை நிலா, நீ தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கே. அனன்யாவும் பிரவீனும் ஆரம்பிச்ச அந்த சிஸ்டம் உன்னோட ரசனைகளையும், கற்பனைகளையும் மட்டும்தான் விர்ச்சுவல் அனுபவமா எனக்குக் காட்டுச்சு. ஆனா, அந்த விர்ச்சுவல் உலகத்துல உன்கிட்ட பேசினது, பழகினது, உன்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும் மனசார பதில் சொன்னது எல்லாமே இந்த விஷ்வாதான்! எந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டராலும் காதலைப் போலியாக உருவாக்க முடியாது நிலா. உன்கிட்ட பேசும்போது எனக்குள்ள உருவான அந்தப் பரவசம், உன்னோட மெல்லிய சிரிப்புக்கு என் இதயம் துடிச்ச துடிப்பு… இதெல்லாம் எந்த சாஃப்ட்வேராலயும் உருவாக்க முடியாது,” என்று தன் நெஞ்சில் கைவத்துக் கூறினான் விஷ்வா.
நிலா மௌனமாக அவனது விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது மூளை இன்னும் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும், அவளது உள்ளுணர்வு விஷ்வாவின் கண்களில் இருக்கும் உண்மையை முழுமையாக நம்பத் தொடங்கியிருந்தது.
“ஒருவேளை… அந்தத் டேட்டா உங்களோட என்னை லிங்க் பண்ணாம இருந்திருந்தா, நீங்க என்னை ஏறிட்டாவது பார்த்திருப்பீங்களா விஷ்வா? ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்துப் பொண்ணுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருந்திருக்கும்? இந்தத் தொழில்நுட்பம் மட்டும் இல்லைன்னா நாம ரெண்டு பேரும் இப்படி சந்திச்சிருக்கவே முடியாது இல்லையா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் நிலா.
விஷ்வா லேசாகப் புன்னகைத்தான். அவளது கைகளை மீண்டும் தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டான்.
“உண்மைதான் நிலா. இந்தத் தொழில்நுட்பம் இல்லாட்டி நாம வேற வேற உலகத்துலதான் வாழ்ந்திருப்போம். ஆனா, இதை நான் எப்படிப் பார்க்கிறேன்னா… உலகத்துல இருக்குற கோடிக்கணக்கான மனிதர்கள்ல, நாம ரெண்டு பேரும் சந்திக்கிறதுக்காக இயற்கை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு சின்னப் பாலம் தான் அந்தத் தொழில்நுட்பம். பாலம் செயற்கையானதா இருக்கலாம் நிலா, ஆனா அதைக் கடந்து வந்து நாம ஒருத்தரை ஒருத்தர் தொட்ட அந்த உணர்வு நிஜமானது. நான் தேடின அத்தனை அன்பும், நிம்மதியும் உன்கிட்ட மட்டும்தான் இருக்குன்னு என் இதயம் உணர்ந்துகிட்டது முற்றிலும் உண்மை,” என்றான் விஷ்வா அழுத்தமான குரலில்.
அவனது வார்த்தைகள் நிலாவின் மனபாரத்தை அப்படியே இறக்கி வைத்தன. இத்தனை நாட்களாகத் தனக்குள் இருந்த தவிப்பும், பயமும், குழப்பமும் விஷ்வாவின் இந்த ஒற்றைப் பார்வையில் கரைந்து போவதை அவள் உணர்ந்தாள். அவள் காதலித்த விஷ்வா அவளுக்கு முன்னால் உண்மையாக, ரத்தமும் சதையுமாக நின்று கொண்டிருக்கிறான். அவளது காதலும் அவனது காதலும் உண்மையானது என்கிற தெளிவு அவளுக்குள் பிறந்தது.
அவள் கண்களிலிருந்து மௌனமாகக் கண்ணீர் வழிய, முதன்முறையாக விஷ்வாவை நோக்கித் தன் கைகளை நீட்டினாள். விஷ்வா அவளைத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அந்த ஆடம்பரமான ஹாலில், எல்லா விர்ச்சுவல் மாயைகளையும் கடந்து, இரு உண்மையான இதயங்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன. நீண்ட தவிப்பிற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு நிம்மதியான அமைதி குடியேறியது.
விஷ்வா மெதுவாக நிலாவின் முகத்தைத் தன் ஆள்காட்டி விரலால் நிம்ர்த்திப் பார்த்தான். அவளது முகத்தில் இருந்த காய்ச்சலின் சோர்வும் தவிப்பும் முற்றிலும் மறைந்து, ஒரு மெல்லிய வெட்கத்தின் சாயல் படிந்திருப்பதை அவன் அணு அணுவாக ரசித்தான்.
“இப்போவாவது நம்புறியா நிலா? இந்த உலகத்துல இப்போதைக்கு நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம். இது எந்த ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கின காட்சியும் இல்லை,” என்றான் விஷ்வா, ஒரு குறும்புப் புன்னகையோடு.
நிலா அவனது கண்களை நேராகப் பார்க்க முடியாமல் தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு, அவனை விட்டு விலகி நின்றாள், “ம்ஹூம்… இன்னும் எனக்கு ஏதோ ஒரு விர்ச்சுவல் உலகத்துல இருக்குற மாதிரியேதான் இருக்கு விஷ்வா. ஏன்னா, நிஜ உலகத்துல ஒரு சூப்பர் ஸ்டார் எனக்கு முன்னாடி இப்படி மண்டியிட்டுப் பேசுறதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று,” என்றாள் லேசான கேலியுடன்.
விஷ்வா சத்தமாகச் சிரித்தான். அவளது மென்மையான கரங்களை மீண்டும் தன் கைகளுக்குள் பற்றிக் கொண்டு, அவளை அப்படியே மெதுவாக இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். இந்த முறை நிலா அவனிடமிருந்து விலக முயலவில்லை. மாறாக, அவனது சட்டையைத் தன் பிஞ்சுக் கரங்களால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, அவனது இதயத்துடிப்பின் அதிர்வை உற்றுக் கேட்டாள்.
“கேட்குதா நிலா? இது என்னோட ஒரிஜினல் ஹார்ட் பீட். இதுக்கு எந்த ஒரு கோடிங்கும் எழுதப்படல. உன்னோட இந்த ஒற்றைத் தீண்டலுக்கு மட்டும் தான் இது இப்படி அதிவேகமாத் துடிக்குது,” என்று அவளது காதோரம் மெதுவாக முணுமுணுத்தான். அவனது மூச்சுக்காற்று அவளது கழுத்துப் பகுதியில் பட்ட மாத்திரத்தில் நிலாவின் உடலெங்கும் ஒரு புதிய சிலிர்ப்பு மின்னலாய் ஓடிப் பாய்ந்தது.
அவளைத் தன் அணைப்பிலிருந்து சற்றே விலக்கிய விஷ்வா, அவளது விழிகளை ஆழமாக நோக்கினான். பின்னர், அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து, அத்தனை பிரியத்தோடு ஒரு நீண்ட முத்தமிட்டான். அவனது இதழ்களின் வெதுவெதுப்பில் நிலா தன் கண்களை மூடி அந்த விநாடியை அப்படியே தன் மனதிற்குள் சிறைபிடித்தாள்.
அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியாது, நிலாவிற்கு லேசாகப் பசி எடுக்கத் தொடங்க, “விஷ்வா… எனக்கு பசிக்குது,” என்று நிலா மெல்லக் கூற, விஷ்வா அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“ஊர்ல உங்களுக்குக் காரக்குழம்பு சாதம் ஊட்டி விட்டது வேணா அந்த விர்ச்சுவல் நிலாவா இருக்கலாம். ஆனா, இந்த நிஜமான நிலாவுக்கு இப்போ நிஜமாவே பசிக்குது சூப்பர் ஸ்டார்!” என்று அவள் கண்சிமிட்டினாள்.
“இதோ, இந்த விஷ்வாவோட சமையல் திறமையை இன்னைக்கு நீ நேர்ல பார்க்கப்போறே,” என்று சவால் விட்டபடி, அவளது கையைப் பிடித்துத் தன் பிரம்மாண்டமான சமையலறைக்கு அழைத்துச் சென்றான் விஷ்வா.
“என்ன சாப்பிடற, மிளகு ரசம் வைக்கவா?” என்று கேட்டவனை ஆச்சரியமாகப் பார்த்தவள், “உங்களுக்கு சமைக்கல்லாம் தெரியுமா, விஷ்வா? நிஜம்மாவா?” சிரித்தபடி அவளை அலேக்காகத் தூக்கி மேடை மீது அமர வைத்தவன், “ஹ்ம்ம், ஓரளவு சுமாரா சமைப்பேன்,” என்றபடியே ரைஸ் குக்கரை எடுத்து, அரிசி கழுவி வைத்தான்.
பிறகு, புளி ஊறவைத்தான், தக்காளியை எடுத்து வெட்டத் தொடங்கினான். அதில் இருந்து ஒரு துண்டை எடுத்து நிலாவின் வாயில் ஊட்டியவன், “மேடம் எப்படி, சுடுதண்ணியாவது வைக்கத் தெரியுமா?” என்றான்.
“என்னை பத்தி என்ன இப்படி நினைச்சுட்டீங்க, நான் சூப்பரா சுடுதண்ணி காய்ச்சுவேன் தெரியுமா? சூப்பரா டிகிரி காபி போடுவேன், அதுக்கப்பறம் எங்கம்மா சூப்பரா சமைச்சு போட்டா நான் சூப்பரா சாப்பிடுவேன்,” என்றாள் பெரிய்ய சாதனை செய்வது போல்.
இப்படியே அவளிடம் வளவளவென்று பேசிக்கொண்டே, மிளகு ரசம் வைத்து அப்பளம் சுட்டு முடித்திருந்தான். அவன் தக்காளியை வெட்டிய நேர்த்தியையும், எந்தவொரு தடுமாற்றமும் இன்றி சமையலை முடித்த லாவகத்தையும் நிலா ரசித்துக்கொண்டே இருந்தாள். திரையில் லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன் ஒற்றைப் பார்வையால் கட்டிப்போடும் இந்த நாயகன், இப்போது தனக்காக ஒரு சமையலறையில் சமைத்துக்கொண்டிருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
“விஷ்வா… நானும் ஹெல்ப் பண்றேன், என்ன பண்ணனும்னு சொல்லுங்க,” என்று நிலா ஊடே புகுந்து உதவ முயல, “அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீ உக்காரு…” என்று அவளை மீண்டும் மேடையின் மீது உட்கார வைக்க, இருவருக்குள்ளும் அந்த மெல்லிய தீண்டல் அந்தச் சமையலறையின் வெப்பத்தை இன்னும் சற்றே கூட்டியது.
உணவு தயாரானதும், அவர்கள் பால்கனிக்குச் சென்றனர். வங்காள விரிகுடாவின் கடல் காற்று அவர்கள் மீது சிலிர்ப்பாய் வீசியது. மாலை நேரத்து செவ்வானம் அழகாய் பிரகாசித்துக் கொண்டிருக்க, கீழே வெகு தொலைவில் ஒட்டுமொத்த நகரமும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
விஷ்வா ஒரு தட்டில் இருந்த உணவை எடுத்து, தன் கைப்பட நிலாவுக்கு மென்மையாக ஊட்டி விட்டான்.
“எப்படி இருக்கு நிலா?” என்று அவன் ஆவலோடு கேட்க, நிலா அவனது கையைப் பற்றிக் கொண்டு, “ரொம்ப சூப்பரா இருக்கு… நீங்க ஊட்டி விடுறதால இன்னும் ருசியா இருக்கு விஷ்வா,” என்றாள் நெகிழ்ச்சியோடு.
நிலா அந்தத் தட்டைத் தன் கையில் வாங்கிக் கொண்டு, விஷ்வாவுக்கும் தன் கைப்பட உணவை ஊட்டி விட்டாள். விர்ச்சுவல் உலகின் நெல் வயல் வரப்பு இல்லை என்றாலும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில், அந்த மாலை மயங்கும் நேரத்தில், இரு உண்மையான இதயங்களின் காதல் இன்னும் ஆழமாக வேரூன்றிப் படரத் தொடங்கியது.
சாப்பிட்டு முடித்ததும், விஷ்வா தன் மொபைலை எடுத்து ஒரு பழைய பாடலை ஒலிக்க விட்டான். அதே இளையராஜாவின் மெல்லிசை…
விஷ்வா நிலாவின் இடுப்பில் தன் கைகளை மெதுவாக வத்து, அவளைத் தன்னுள் இழுத்துக் கொண்டான். நிலா அவனது தோள்களில் தன் கைகளைக் கோர்த்து, அவனது அசைவுகளுக்கு ஏற்ப மெதுவாக நடனமாடத் தொடங்கினாள். காற்றில் அசைந்த தொட்டிச் செடிகளும், குளிர்ந்த இளந்தென்றலும் அவர்களின் இந்த முதல் நிஜமான ரொமான்டிக் எக்ஸ்பீரியன்ஸுக்கு மௌன சாட்சிகளாய் நின்றன.
“இனிமே நாம எப்பவுமே இப்படித்தான் இருக்கப்போறோம் நிலா… நாம அந்த விர்ச்சுவல் உலகத்துல அனுபவிச்சதை எல்லாம் இனிமேல் நிஜத்துலேயே வாழ்ந்து காட்டுவோம்,” என்று விஷ்வா அவளது இதழ்களுக்கு மிக அருகில் வந்து சொல்ல, நிலா எவ்விதத் தடையுமின்றித் தன் கண்களை மூடி அவனது காதலை முழுமையாக ஏற்றுக் கொண்டாள். இரு உதடுகளும் மென்மையாகச் சங்கமித்த அந்த விநாடி, தொழில்நுட்பத்தின் மாயைகள் யாவும் அழிந்து, அவர்களின் உண்மையான காதல் அங்கே வென்று நின்றது.
error: Content is protected !!