Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 7.2

தயக்கத்தோடு எடுத்தவள், “பெரியப்பா…” முடிக்கும் முன்பே, “என்னடா சக்தி, எங்க இருக்க? டிரைவர் ஜூஸ் வாங்கிட்டு வந்தானாம், நீ அங்க ஸ்டூடியோல இல்லையாமே” 

“சாரி பெரிப்பா, நான் இங்க பக்கத்துல கோவில்க்கு வந்தேன்” என்றாள். 

“உன் குரலே சரியில்லையே, என்னடா பாப்பா எதுவும் பிரச்சனையா?” 

“நான் வரவான்னு கேளுங்கப்பா” பெரியப்பா குரலுக்கு பின்னே சகோதரன் வீராந்தகன் குரல் ஒலிக்க, மொத்த குடும்பமும் சில நிமிடங்களிலேயே ஒரே இடத்தில் கூடிவிட்டனர் என புரிந்துக்கொண்டாள். 



Advertisement

“அதெல்லாம் வேணாம், எனக்கு நேத்து பேய் கனவு வந்துச்சு அதான் கோவில்க்கு வந்தேன்” எதை கூறினால் வீட்டினரை சமாளிக்க முடியுமோ அதை கூறி எளிதாக தப்பித்துவிட அதற்கும் வீட்டினர் தைரிய வார்த்தைகள் கூறி முடிக்கும் வேளையில் கோவிலின் வாயிலில் அவர்களது வாகனம் வந்து நின்றது. 

வாகனத்தில் ஏறி அமர்ந்து வீட்டிற்கு சென்று சேரும் வரை பாட்டி முதல் அவளது இளைய சகோதரன் வரை அக்கறை, பயம், கேலி என அனைத்து விதமான வார்த்தைகளையும் கேட்டு வந்து மெத்தையில் விழுந்தவளுக்கு தமிழ்ச்செல்வனோடு சேர்ந்து வீட்டினரும் சரிக்கு சமமாய் அமர்ந்துக்கொண்டனர். 

‘நம்ம மேல தப்பில்ல சக்தி, உனக்கு தான் தமிழ் மேல அந்த மாதிரி ஒரு பீலிங்ஸ் வரவே இல்லையே. அவன் கண்டிப்பா இதுல இருந்து வெளிய வருவான். இவ்வளவு அக்கறையா இருக்க பேமிலிய விட்டு எதுக்கு தேவையில்லாம யோசிக்கிற?’ தன்னுடைய வீட்டினரின் மனதிற்காக தமிழ்செல்வன் நிலை தன்னால் சரியாகும் என்கிற நிலைக்கே வந்திருந்தாள்.

Advertisement

*******

Advertisement

படப்பிடிப்பு முடிந்து இரண்டு மணி நேரங்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட ஆட்கள் யாரும் அங்கில்லை. பாட்டிற்கான ஒரு பகுதி முடிந்திருக்க மற்றொரு சிறு பகுதி நாளையொடு முடிகிறது. இவனது கூட்டம் இரவு உணவை உண்ண சென்றிருக்க, தமிழ்செல்வனுக்கு எங்கும் செல்ல மனமே இல்லை. 

கீழே விரித்திருந்த விரிப்பில் அமர்ந்திருந்தவன் சில நிமிடங்களில் படுத்துவிட்டான். கண்களுக்கு நேர் வண்ண வண்ண விளக்குகள் மின்னிக்கொண்டிருந்த நிலையிலும் ஏதோ ஒரு மூலையில் பட்டு பிரதிபலித்த ஒளியின் வெளிச்சம் இன்னும் அழகாய் காட்சியளித்தது.

நிம்மதியான மனநிலையில் இருந்திருந்தால் இந்நேரம் அந்த ஒளியினை எந்த இடத்தில் இன்னும் எப்படி மாற்றியமைத்து பயன்படுத்தியிருக்கலாம் என யோசித்திருப்பான். இப்பொழுது உள்ளவன் மனம் எதையும் யோசிக்கும் நிலையிலே இல்லை.

Advertisement

சரியான உறக்கம் கண்டே இரண்டு வாரங்கள் ஆகிறது. உயிரினை இரும்பை கொண்டு அடிப்பது போல் அப்படி ஒரு வலி. யாரிடமாவது மடி சாய்ந்து கண்ணீர் விட்டு அழுக துடித்தது மனம். ஆனால் அதற்கும் யாரும் இல்லையே அவனுக்கு. 

“தல…” உற்சாகத்தோடு வந்த நிமலன் குரல் தமிழ்ச்செல்வனின் நிலையை பார்த்து அப்படியே நலிந்து போனது. 

அவர்களும் அவனை பலவாறு திசை திருப்ப முயன்று தான் பார்க்கின்றனர். படப்பிடிப்பு நடக்கும் பொழுது அனைத்தையும் மறந்தவனாய் சிரித்து பேசி சுற்றுபவன், அதன் பிறகு மொத்தமாய் அமைதியாகிவிடுகிறான். இதோ இப்பொழுது போல். 

“கண்ணை மூடுனாலே வந்து நிக்கிறாடா… தப்பு தான இன்னொருத்தனோட சரி பாதியாக போற பொண்ணை நினைக்கிறது?” 

“இன்னும் கல்யாணம் ஆகல தல…” நிமலன் பதிலில் கசப்பான புன்னகை தமிழ்செல்வனிடமிருந்து, 

“தூங்கவே முடியலடா… கண்ணை மூடவே பயமா இருக்கு. கண்ணெல்லாம் ஏரியிது. ஊரே தூங்குறப்போ எனக்கு மட்டும் ஏன் இந்த தூக்கம் சாபக்கேடாவே போகுது?” 

“ஸ்லீப்பிங் பில்ஸ் போடு தல, இரு வாங்கிட்டு வர்றேன்” சுசிகரன் கையை பிடித்து வேண்டாம் என்றான். 

“இப்டியே இருக்க போறியா தமிழு? ஒடம்பு என்னாகுறது? தினமும் ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் மட்டும் தூங்குனா அவ கல்யாணத்துக்கு முன்னாடியே நீ செத்துருவடா” என்றார் பேரழகன் ஆற்றாமையில் கோவமாக. 

எதையும் எதிர்பார்த்தே தான் இருந்தேன் என கூறியது அவன் அமைதி… “எவ்வளவோ கனவு வச்சிருந்தேன். அவ கூட ஒரு அழகான வாழ்க்கை, ஓவியம் மாதிரி வண்ணமயமா, எப்படி வார்த்தையால சொல்றது தெரியல” 

“இதுல இருந்து வெளிய வா தமிழு…” 

“வாய்ப்பே இல்ல பெருசு. வெளிய வர்றதுக்கு வாய்ப்பே இல்ல. யோசிச்சு பாரு என் மண்டைக்குள்ள ஒரு உலகமே இருக்கு. அதுல மொத்தமும் அவ, இப்போ? எம்பட்டி ஸ்பேஸ்” 

நிமலன், “இப்போ என்ன பண்ணனும் தல? உனக்கு நாங்க இல்லையா? இன்னும் ரெண்டு வருசமா அஞ்சு வருசமா வேற ஒரு பொண்ணு. இந்த அளவு இல்லனாலும் ஏதோ ஒரு வகைல உன்ன ஈர்க்குற பொண்ணு இல்லாமையா போகும்?” 

“கரெக்ட். நம்ம கை மீறி போற விசியம் எப்டிப்பட்டதா இருந்தாலும் சில நேரம் விற்றனும் தல” என்றான் சசிகரன். 

“டேய் அந்த பொண்ணு இவன் கைல இருந்தா தான கை மீறி போகிறது” பேரழகன் பேச்சில் நிமலன் சத்தமிட்டு சிரித்துவிட, தமிழின் பார்வை பேரழகன் முறைத்தது. 

“உங்களுக்கு நான் கலாய்க்குற மெட்டீரியல் ஆகிட்டேன்ல சிரிப்பிங்கடா” என்றான். 

“தல… ஒரு காட்டுக்கு ஒரே ஒரு சிங்கம் தான். அது எங்களுக்கு எப்பவும் நீ தான் தல” – சுசிகரன். 

தமிழ்செல்வன், “ஏண்டா சம்மந்தமே இல்லாம பேசணும்னு வரம் வாங்கிட்டு வந்தியா?” 

“அதெல்லாம் ரகசியம், சரி நாளைக்கு ஷூட் முடிச்சு சென்னை போயிடுவோம், அடுத்த நாள் சாயந்தரம் நம்ம மாதவனுக்கு நிச்சயம், காலைல கல்யாணம். வரியா தல?” 

“போகலாம்டா” என்றான் உற்சாகமாகவே. 

“என்ன போகலாம். நீ போனா உன்ன சுத்தி கூட்டம் கூடிடும். முத உனக்கு ரெண்டு பாடிகார்ட் ஏற்பாடு பண்ணனும்” 

“டேய் என்னமோ பிரதமர் ரேஞ்க்கு கதை விடாதீங்கடா. தனியா போனா கூட எவனும் சீண்ட மாட்டான்” 

பேரழகன், “இது உன்னோட தன்னடக்கம் தமிழு” 

“யோவ் கெளம்பு, டேய் போங்கடா” அடித்து விரட்டியவன் கண்களுக்கு அமைதியும் வெறுமையும் பேரிரைச்சலாக இருந்தது. 

தன்னுடைய தவறுகள் வரிசை கட்டி நின்றன. காதலை கண் பார்த்து கூறாததிலிருந்து, நட்பும் பறிபோய்விடுமோ என அஞ்சி உணர்வுகளை வேடுபடுத்தாமல் போனது, நிராகரிப்பின் பயம், நாள்தோறும் அவளது சிறு வணக்கத்திலிருந்து ஆரம்பித்து இரவு வணக்கம் வரை வாங்காமல் உறங்காதது வரை எல்லாமே தவறாக தோன்றியது. 

தற்போதைய வாழ்க்கையில் பாதி வாழ்க்கை மௌனத்திலே கழிந்துவிட்டது. அவள் பெயரை கேட்டு, அவள் வாழ்க்கை எப்படி எல்லாம் சிறக்கப்போகிறது என்பதை கேட்டு அவன் வாழ வேண்டும், அதுவும் அவன் அதில் ஒரு பாங்காய் கூட இல்லாமல் ஓரம் நின்று. 

தண்டனைகள், வேதனைகள் மனித வாழ்க்கையில் இயல்பு தான், ஆனால் அவை ஒவ்வொரு நொடியும் உயிரை குடிக்கும் வகையிலா இருக்க வேண்டும்? 

அடுத்த நாளே படப்பிடிப்பை முடித்து சென்னை வந்து சேர்ந்த மொத்த படக்குழுவினரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட, மறுநாள் இருந்த திருமண வரவேற்பிற்கு தமிழ்ச்செல்வனின் மொத்த கூட்டமும் வந்து நின்றது. அதே திருமண மண்டபத்தில் ஒரு மூலையில் சக்தியும். 

அவள் வந்திருப்பது அவனுக்கோ, அவன் வந்திருப்பது அவளுக்கோ தெரியாது. தமிழ் செல்வனின் கூட்டம் திருமணம் முடிந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தான் வந்திருக்க, நேராக உணவுண்ண சென்றுவிட்டிருந்தனர். சக்தியோ மேடைக்கு சென்று பரிசை கொடுத்து நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க, சிறு சலசலப்பு. திரும்பி பார்த்தவளுக்கு தமிழோடு நின்று சிலர் புகைப்படம் எடுக்க, இவள் பார்வை அவனிடம் மொத்தமாய் விழுந்துவிட்டது. 

நெற்றியில் சிறு சந்தன கீற்று, தலைக்கு குளித்து சரியாக துவட்டாமல் ஈரத்தோடு விரல்கள் சிகையோடு சண்டைபோட்டதன் தடம், அது காய்ந்த பிறகும் தெரிந்தது. சந்தன நிற சட்டை, அதற்கு ஏதுவாக ஒரு நீல ஜீன்ஸ். இரண்டும் சேர்த்தே ஆயிரம் ரூபாய் தாண்டாது. ‘கஞ்ச பையன்’ இதழ்கள் முணுமுணுத்தது தன்னாலே. அவனோடு பலர் சுயபடம் எடுத்த பிறகு மேடை ஏறிய அந்த ஐந்து பேர் கொண்ட கூட்டம் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்க, சக்தியின் பார்வை கூர்மையானது. 

அந்த கூட்டத்திலிருந்து நகர்ந்து சென்ற தமிழ்செல்வன் அங்கிருந்த ஒருவரோடு பேசுவது போல, ஒரு பரிசை அமைதியாக எடுத்து வந்து நண்பர்களை கை அசைக்க, எப்படி என்னும் கேள்வி தான் அனைவரிடமும். தமிழ்செல்வன் எடுத்த பரிசை புகைப்படத்திற்காக கொடுத்த பொழுது மற்ற நால்வரும் தாங்களே வாங்கியது போல் அந்த பரிசுபெட்டியை பிடித்தவாறே நிற்க, அவர்களையே கவனித்திருந்த சக்தியின் இதழ்கள் மெல்ல விரிந்தன.

பரிசை கொடுத்து முடித்து மணமகளை அனுப்பி வைத்த தமிழ்ச்செல்வனின் கூட்டம், மணமகனோடு ஒரு ஆட்டத்தை போட்டு அவனையும் ஆட வைத்து, மணமகனையும் வம்படியாக அனுப்பி வைத்து அவர்கள் மட்டும் புகைபடமெடுக்க நின்றனர். சிரிப்போடு நின்ற தமிழ்செல்வன் கண்கள் அந்த கூட்டத்தை ஏதோ ஒரு உந்துதலில் உலாவர, அவன் தேடிய சித்திரம் தென்பட்ட நொடி, அவளை பார்த்தாய் தலை அசைத்து அழகாய் புன்னகை ஒன்று சிந்த, அவ்வளவு தான் சக்தியின் கண்களும் புன்னகையும் உறைந்து போனது. 

பல நாட்களாக தோன்றிய தவிப்பிற்கெல்லாம் விடிவெள்ளியாக கிடைத்த அந்த ஒற்றை நொடி சிரிப்பும் பார்வையும் இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் மறக்காது. மனதினில் ஏறியிருந்த பாரம் இப்பொழுது இல்லை, உடலில் நிலவியிருந்த அசௌகரியம் இப்பொழுதில்லை.

நிதானமாக தோன்றியது. கைகள் இழந்த வலு கூட மீண்டும் கிடைத்த உணர்வு. அவனை பார்த்த பிறகு கிடைத்திருந்தால் கூட பல நாட்கள் காணாததால் வந்த சந்தோசம் பூரிப்பு என கூறலாம். அவனை தான் கடந்த பதினைந்து நிமிடங்களாக பார்க்கிறாளே… அப்பொழுதெல்லாம் தோன்றாத அந்த நிம்மதி ஏன் அவனது தேடல் தன்னை சேர்ந்த பிறகு உதிர்ந்த சிரிப்பில் கிடைத்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!