Skip to content
Post Views: 96
கண்ணாமூச்சி 30
இரு உதடுகளும் மென்மையாகச் சங்கமித்த அந்த விநாடி, காலமும் கடலும் தங்களின் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது போலிருந்தது. விஷ்வாவின் இதழ்கள் அவளது இதழ்களின் மீது மென்மையாக அழுந்தி, அவளுக்குள் இருந்த எஞ்சிய அச்சத்தையும் தவிப்பையும் முழுமையாகத் துடைத்தெறிந்தன. அவளது இடுப்பை வளைத்திருந்த அவனது கரங்கள் அவளை இன்னும் நெருக்கமாகத் தன்பால் இழுத்துக் கொள்ள, நிலா விஷ்வாவின் தோள்களைத் தன் விரல்களால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அவனது இதழ்களின் வெதுவெதுப்பும், அதில் இழைந்திருந்த எல்லையற்ற பிரியமும் அவளை ஒரு புதிய பரவச உலகிற்கு அழைத்துச் சென்றன. அது வெறும் உடல்களின் தீண்டல் அல்ல; இரு ஆன்மாக்கள் தங்களின் கடந்த கால வலிகள் அனைத்தையும் மறந்து, ஒருவரையொருவர் முழுமையாக ஆட்கொண்ட உன்னதத் தருணம். அந்த நீண்ட, நெடிய முத்தத்தின் முடிவில், விஷ்வா மெதுவாகத் தன் இதழ்களை விலக்கி, நிலாவின் நெற்றியில் தன் சிரசை சாய்த்தான். இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து தகித்துக் கொண்டிருந்தது.
அந்த முத்தத்தின் தகிப்பு மெல்ல அடங்கி, இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடொன்று கலந்தது, அந்தப் பால்கனியில் ஒரு புதிய அமைதி குடியேறியது. நிலா மெதுவாகத் தன் நீண்ட இமைகளை உயர்த்தி, விஷ்வாவின் காதல் நிறைந்த விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தாள். அவளது கன்னங்கள் வெட்கத்தால் சிவப்பு வண்ணம் பூசியிருக்க, அவளது நெற்றி விஷ்வாவின் நெற்றியுடன் லேசாக முட்டிக் கொண்டிருந்தது.
அவளது கைகள் அவசரமாய் விலகிவிடவில்லை. அவனது அகன்ற மார்பின் மீது தன் மென்மையான இரு கரங்களையும் அப்படியே பதித்து, அவனது சீரான இதயத்துடிப்பை தன் உள்ளங்கைகளால் உணர்ந்தபடியே நின்றாள். அவனது சட்டையின் தையல்களைத் தன் விரல்களால் மெதுவாக வருடியவள், சற்று நேரம் அப்படியே நின்றாள்.
Advertisement
வார்த்தைகளற்ற அந்த இனிய மௌனம் எவ்வளவு நேரம் நீடித்ததோ, இருவருமே உணரவில்லை, அந்த மௌனத்தையும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு நிலாவே கலைத்தாள். “விஷ்வா…” என்று அவனது பெயரை ஒரு மந்திரம் போல உச்சரித்தாள். அவளது குரலில் காதலின் மயக்கம் இழையோடினாலும் அதில் ஒரு ஆழமான முதிர்ச்சியும் தெளிவும் இருந்தது. “நாம இப்போவே… எங்க அம்மா, அப்பாகிட்ட நம்ம காதலைப் பத்தி சொல்லணும் விஷ்வா. அவங்க கிட்ட இருந்து நான் எதையுமே மறைக்க விரும்பலை.”
விஷ்வா அவளது முகத்தை இன்னும் பிரியமாய் அள்ளித் தன் கைகளுக்குள் ஏந்திக் கொண்டு, அவளது கண்களுக்குள் தன் பார்வையைப் பதித்தான்.
நிலாவின் பேச்சு அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. “இப்போவேவா நிலா? நாமளே இப்போதான் நம்ம காதலை முழுசா உணர்ந்து ஏத்துக்கிட்டிருக்கோம். அதுக்குள்ள ஏன் இவ்வளவு அவசரம்?” என்று மென்மையாகக் கேட்டான்.
Advertisement
நிலா அவனது கைகளைப் பற்றிக்கொண்டு, “எங்க அம்மா, அப்பா என்மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்காங்க, விஷ்வா. தன்னோட பொண்ணு தப்பா எதுவும் செஞ்சிட மாட்டான்னு ரொம்ப நம்புறாங்க. அவங்க நம்பிக்கையை ஒரு சின்ன விஷயத்துல கூட நான் உடைச்சிடக் கூடாது. வாழ்க்கையோட இவ்வளவு முக்கியமான ஒரு முடிவை அவங்களை மீறி நான் எடுத்ததா இருக்கக் கூடாது. அவங்ககிட்ட நம்ம காதலை மறைக்கிறதுல எனக்கு உடன்பாடே இல்லை.” என்றவளுக்கு, திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றியது.
Advertisement
“ம்ம்… நீங்க… நீங்க இந்த… நம்மளோட காதல் பத்தி சீரியஸா தானே இருக்கீங்க… இப்போல்லாம் கமிடட், சிச்சுவேஷன்ஷிப் அப்படின்னுல்லாம் என்னென்னவோ சொல்றாங்க… நான் பாட்டுக்க நீங்க என்ன நினைக்குறீங்கன்னு யோசிக்காம…” என்று தயக்கமாக விஷ்வாவின் முகம் பார்த்தாள்.
விஷ்வா ‘மேலே சொல்’ என்பது போல் அவளையே பார்க்க, அதில் என்ன கண்டாளோ, நிலா அவனை விட்டு விலகி நின்றாள், “எனக்கு இதுலல்லாம் நம்பிக்கை இல்லை. காதல்னா அது கடைசி வரை காதல் மட்டும்தான், கேஷுவல் ரிலேஷன்ஷிப் எல்லாம் என்னால முடியாது, அப்படி இருந்தா இப்போவே…“ மீண்டும் அவன் இதழ்கள் அவளின் இதழ்களை ஆக்கிரமித்திருந்தன.
சுற்றியிருந்த உலகம் மங்கிப் போனது. சொல்ல வந்த வார்த்தைகள் எண்ணங்களாக எழுவதற்கு முன்னரே மறந்து போயின நிலாவுக்கு. இதயத்தில் இருக்கும் காதலை இதழ்களால் கவிதையாக எழுத முற்பட்ட விஷ்வாவின் முயற்சியும் வெற்றியே, விலக மனமின்றி அவன் மெதுவாய் விலக… பேசவே தோன்றாமல் வாயடைத்து நின்றாள் நிலா.
Advertisement
“ம்ம், போலாம் நிலா, உங்க அம்மா அப்பாகிட்ட போய் பேசலாம், நானும் வர்றேன்,” என்றான் அவளுக்குத் தன் காதல் மீது நம்பிக்கை ஊட்டும் விதமாக.
‘சரி’ என்பதுபோல் தலையாட்டிய நிலா, “விஷ்வா, ஆரம்பத்துல அவங்க இந்த விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியாகலாம், ஒருவேளை எதிர்க்கவும் செய்யலாம். ஏன்னா அவங்களைப் பொறுத்தவரை, நாம வேற வேற உலகத்துல வாழ்றவங்க. ஆனா, நம்ம காதல் எவ்வளவு உண்மையானதுன்னு நாம அவங்களுக்கு நிதானமா புரிய வைக்கணும்,” என்றாள் நிலா. தன் தந்தையின் கண்டிப்பு அவளுக்குத் தெரியுமே, மனதுக்குள் பயமாக இருந்தாலும், பெடரரிடம் உண்மையாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள்.
அவளது வார்த்தைகளில் இருந்த நேர்மையும், பெற்றோர்கள் மீதான அவளது மதிப்பும் விஷ்வாவை இன்னும் அதிகமாகக் கவர்ந்தது. அவளது நெற்றியில் மீண்டும் ஒருமுறை முத்தமிட்டவன், “கிளம்பலாம் நிலா. நானும் உன்கூடவே வர்றேன். நாம ரெண்டு பேரும் ஒன்னாவே போய் உன் அப்பாம்மாகிட்ட பேசி, அவங்க சம்மதத்தைக் கேட்போம்,” என்று உறுதியளித்தான்.
அவர்கள் கிளம்ப ஆயத்தமான அந்தத் தருணத்தில், விஷ்வாவின் மொபைல் அலறியது. திரையில் அரவிந்தின் பெயர் மின்னியது. விஷ்வா அழைப்பை ஏற்ற அடுத்த நொடி, மறுமுனையில் இருந்து அரவிந்தின் குரல் பதற்றமாக ஒலித்தது.
“விஷ்வா! நிலா உங்க கூடத்தான் இருக்காங்களா? ப்ளீஸ், உண்மையைச் சொல்லுங்க…” என்று மூச்சிரைக்கக் கேட்டான் அரவிந்த்.
“ஆமா அரவிந்த், நிலா என் கூடத்தான் இருக்கா. நாங்க இப்போ அவங்க வீட்டுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கோம், அவங்க பேரண்ட்ஸை மீட் பண்ண…” என்று விஷ்வா சொல்லி முடிப்பதற்குள், அரவிந்த் பதறிப் போய் கத்தினான்.
“நோ! விஷ்வா, தயவுசெஞ்சு வீட்டை விட்டு ஒரு அடி கூட வெளிய எடுத்து வச்சிறாதீங்க! நான் இப்போ உங்க அபார்ட்மெண்ட்க்கு தான் வந்துட்டு இருக்கேன். நான் அங்கே வர்ற வரைக்கும் வாசல் கதவைத் திறக்காதீங்க,” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அரவிந்தின் பதற்றம் விஷ்வாவிற்கும் பற்றிக் கொண்டது. என்னவோ ஏதோவென்று நிலாவும் குழம்பிப் போனாள்.
அடுத்த சில நிமிடங்களிலேயே விஷ்வாவின் வீட்டுக்குள் புயலென நுழைந்தான் அரவிந்த். அவனது முகம் வியர்வையில் நனைந்திருந்தது, கைகளில் இருந்த மொபைலை விஷ்வாவிடம் நீட்டினான்.
“விஷ்வா, எல்லாமே கைமீறிப் போச்சு. நீங்களும் நிலாவும் சேர்ந்து இருக்குற மாதிரியான போட்டோஸ், அப்புறம் இன்னைக்கு கார்ல அபார்ட்மெண்ட்குள்ள நிலா வந்த போட்டோஸ் எல்லாமே சோசியல் மீடியாவுல லீக் ஆயிடுச்சு. அதுமட்டுமில்ல… நீங்க ரெண்டு பேரும் இங்க பால்கனியில ஒன்னா இருந்தப்போ எடுத்த போட்டோஸும் வெளிய வந்திருக்கு விஷ்வா!” என்றான் அரவிந்த் அதிர்ச்சியோடு.
விஷ்வா கோபத்துடன் மொபைலை வாங்கிப் பார்த்தான். சற்று முன் பால்கனியில் அவர்கள் இருவரும் கைகோர்த்து நடனமாடிய புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. “யார் இதைப் பண்ணுனது? இது என்னோட பர்சனல் விஷயம் அரவிந்த்! என் பெர்மிஷன் இல்லாம எப்படி போட்டோ எடுக்க முடியும்?” என்று கத்தினான்.
“இதுக்கு பின்னால இருக்கிறது நயனிகாதான்!” என்றான் அரவிந்த் தீர்க்கமாக. விஷ்வா அவளுடைய காதலை நிராகரித்து, அவளை அவமதிப்பது போல் பேசியதற்காக நெஞ்சிலேயே வஞ்சம் வைத்து சரியான நேரத்திற்காகக் காத்திருந்தாள் நயனிகா. விஷ்வா பிரவீனின் ஆஃபீசுக்குச் சென்று வந்த நாளிலிருந்து மேனேஜர் மூலம் அவனைப் பின்தொடர ஆள் ஏற்பாடு செய்தவள், அபார்ட்மெண்ட் பால்கனியில் விஷ்வா நிலாவுடன் நெருக்கமாக இருந்த அத்தனை தருணங்களையும் சட்டவிரோதமாக லாங் லென்ஸ் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து, சோசியல் மீடியாவில் கசிய விட்டிருந்தாள்.
“மீடியால ‘சூப்பர் ஸ்டாரின் ரகசியக் காதலி… பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?’ அப்படின்னு ரொம்ப மோசமான தலைப்புகளோட நியூஸ் வைரல் ஆயிட்டு இருக்கு. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வெளிய போனீங்கன்னா, சிச்சுவேஷன் சுத்தமா கைமீறிப் போயிடும்,” என்றான் அரவிந்த் கவலையோடு.
செய்தியைக் கேட்டதும் நிலாவின் முகம் சட்டென்று வெளுத்துப் போக, அவளுக்குத் தன் பெற்றோரைப் பற்றிய பயமே மேலோங்கியது. அவர்களுக்கும் இந்த விஷயமெல்லாம் தெரிந்திருக்குமே என்ற அச்சம் அவளை ஆட்கொள்ள, செய்வதறியாது திகைத்து நின்றாள். “விஷ்வா… எங்க அப்பாவுக்கு இந்த மாதிரி மீடியா, தேவையில்லாத விளம்பரம் இதெல்லாம் ரொம்ப அலர்ஜி. அவரால இதைத் தாங்கிக்கவே முடியாது. இப்போ நாம ரெண்டு பேரும் ஒண்ணா போனா, அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னே தெரியாது. அதனால, நான் முதல்ல தனியாப் போய் அம்மா, அப்பாகிட்ட பேசி நிலைமையை விளக்குறேன். அதுக்கப்புறம் இந்த மீடியா விவகாரம் கொஞ்சம் அடங்கினதும், நீங்க வந்து அவங்களைப் பாருங்க,” என்றாள் நிலா, கண்களில் கண்ணீரோடு.
அரவிந்தும் நிலாவின் யோசனையை ஆமோதித்தான். “நிலா சொல்றதுதான் சரி விஷ்வா. நீங்க இப்போ நிலா கூடப் போனா உங்க பின்னாடியே மீடியாவும் வரும். அது நிலாவோட குடும்பத்துக்குத் தேவையில்லாத மன உளைச்சலைக் குடுக்கலாம். நான் நிலாவை என்னோட கார்ல, பின்னாடி இருக்கிற சர்வீஸ் என்ட்ரன்ஸ் வழியா யாருக்கும் தெரியாம அவங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்,” என்றான்.
வேறு வழியின்றி விஷ்வாவும் அதற்குச் சம்மதித்தான். நிலாவின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, “பயப்படாத நிலா… நான் இருக்கேன், எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு,” என்று தைரியம் கூறினான்.
ஆமோதிப்பாக அவனிடம் தலையசைத்து விடை பெற்றுக்கொண்ட நிலா, அரவிந்துடன் சர்வீஸ் நுழைவாயில் வழியாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு வெளியேறினாள். அரவிந்த் நிலாவைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் அவளது வீட்டை நோக்கிச் செலுத்தினான். ஆனால், நிலாவின் துரதிர்ஷ்டம் அவளது வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தது.
அரவிந்த் காரை நிலாவின் வீட்டின் அருகே நிறுத்திய போதே, அங்கே ஏற்கனவே பல செய்தி நிறுவனங்களின் வாகனங்களும், கேமராக்களும் நின்றிருப்பதை நிலா அதிர்ச்சியோடு கவனித்தாள். விஷ்வாவுடன் இருக்கும் அந்தப் பெண் நிலா தான் என்பதை எப்படியோ கண்டுபிடித்து, மீடியா அவளது வீட்டு வாசலிலும் குவிந்திருந்தது.
கார் நின்றதும், நிலா காரை விட்டு இறங்கப் போக, அவளைத் தடுத்த அரவிந்த், “இப்போ இங்க இறங்காதீங்க மேடம், மீடியாக்காரங்களைத் தாண்டி உள்ள போறது அவ்வளவு ஈசியான விஷயம் இல்லை, உங்க வீட்டுக்குப் பின்னாடி கேட் இருக்கா?” என்று கேட்டான்.
பயத்தில் வார்த்தைகளை விழுங்கிய நிலா, ‘ஆம்’ என்று தலையாட்ட, காரை அங்கு நிறுத்தாமல், பின்தெரு வழியாகச் சென்று அங்கே இருந்த பின் கேட் அருகில் நிலாவை இறக்கிவிட்டான். அவள் வீட்டிற்குள் செல்லும் வரை காத்திருந்தவன், பின்னரே அங்கிருந்து வண்டியைக் கிளப்பினான்.
பின் வாசல் வழியாக, பதைபதைக்கும் இதயத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா. வீட்டிற்குள் ஒரு பயங்கரமான அமைதி நிலவியது. ஹாலின் நடுவே, நிலாவின் தந்தை அடக்கமுடியாத கோபத்தோடு, டிவியை வெறித்தபடி நின்றிருந்தார். அருகிலிருந்த சோபாவில் அவளது அம்மா முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தார். டிவியில் இவர்களது செய்தியே ஓடிக்கொண்டிருந்தது.
நிலா மெதுவாக, பயத்தால் நடுங்கும் கால்களை எடுத்து வைத்து ஹாலுக்குள் நடந்தாள். அவளது தொண்டை வறண்டு போயிருக்க, மிக மெல்லிய குரலில், “அப்பா…” என்று அழைத்தாள்.
அவளது குரல் கேட்ட அடுத்த விநாடி… புயலென அவளை நோக்கிப் பாய்ந்து வந்த சந்திரசேகர், தன் ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் திரட்டி நிலாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். விழுந்த அறையின் அதிர்ச்சியில் நிலா நிலைகுலைந்து, அறையின் மூலைச் சுவற்றில் போய் மோதி அப்படியே தரையில் சரிந்து விழுந்தாள்.
error: Content is protected !!