Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 30

வாத்சல்யனை பொறுத்தவரை சந்தானலஷ்மி சந்தோஷமாக இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட.. லஷ்மியும் எதிர் வீட்டு குழந்தைகளும் சிரிக்க சிரிக்க.. கலகலப்பாக கிரிக்கெட் விளையாடியதை நுழைவாயிற் கதவின் மேல் இரண்டு கைகளை வைத்தபடி ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வாத்சல்யன்.

அவள் முகத்தில்தான் எத்துணை சிரிப்பு, எவ்வளவு உற்சாகம்..! இதுதான்.. இதுதான் அவனுக்கு வேண்டும்.

அடுத்த நாளும் இந்த கோஷ்டி இதே போல் கிரிக்கெட் விளையாடி மூன்றாவது வீட்டின் ஜன்னலை உடைத்ததாக அந்த வீட்டு சொந்தக்காரர் வந்து புகார் செய்துவிட்டு போனார்..



Advertisement

“சின்ன பசங்களோட சேர்ந்து உங்க மனைவியும் கூத்தடிக்கிறாங்களே..! இதெல்லாம் நீங்க தட்டிக் கேட்க மாட்டீங்களா மிஸ்டர் வாத்சல்யன்..! நல்லாத்தானே இருந்தாங்க..! திடீர்னு என்ன வந்துச்சு அவங்களுக்கு..!” என அவர் கத்திவிட்டுப் போன அடுத்த நாள்.. சந்தானலஷ்மி & கோ.. திட்டமிட்டு அவர் வீட்டு ஜன்னலின் அடுத்த கண்ணாடியையும் கல்லை விட்டு எரிந்து உடைத்தது குறிப்பிடத்தக்கது.

பாவம் வீட்டு உரிமையாளரிடம் கண்ணாடிக்கான கப்பம் கட்டி, அவரை சமாதானப்படுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டான் வாத்சா!

வேணு.. மீனாட்சியின் வீடு..

Advertisement

வேணு ஒரு முக்கிய விஐபி கஸ்டமர் பிக்கப் செய்வதற்காக ஏர்போர்ட் போயிருந்தான்.. மீனாட்சி காய்கறிகள் வாங்க மார்க்கெட் சென்றிருந்தாள்.

Advertisement

குற்றவாளிகளாக லஷ்மி.. வினோத் நந்தினி மூவரும் எதிர் இருக்கையில் திருட்டு முழியுடன் அமர்ந்திருக்க.. வக்கீலாக வாத்சல்யனும் நீதிபதியாக தீப்தியும் இந்த பக்கம்..!

“எதுக்காக இப்படி செஞ்சீங்க..? அன்னிக்கு தெரியாம உடைச்சதை போனா போகுதுன்னு அந்த மனுஷன் மன்னிச்சு விட்டுட்டார்.. இனினிக்கு வேணும்னே போய் அவர் வீட்டு கண்ணாடியை உடைச்சுட்டு வந்துருக்கீங்க..! சந்தா உன்னை சொல்லணும் குழந்தைகளுக்கு சரிசமமா வரவர நீயும் ரொம்ப அமர்க்களம் பண்ண ஆரம்பிச்சிட்ட..!” மனைவியை திட்டியதும் பக்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு வாண்டுகளும் வாயை பொத்திக்கொண்டு சிரித்தன.

“என்ன அங்க சிரிப்பு..?”

Advertisement

“ஆன்ட்டியை திட்டாதீங்க அங்கிள். கண்ணாடியை உடைச்சது நாங்கதான்..!”

“ஏன்..?” முன்கை கட்டிக்கொண்டு அவர்களை தீர்க்கமாக பார்த்தான் வாத்சல்யன்

“அந்த ஆளு..!” என மேற்கொண்டு சொல்ல வினோத் வாயெடுக்க..

“வினோத் பெரியவங்கள மரியாதை இல்லாம பேசக்கூடாது..” அதட்டினான் வாத்சல்யன்..

“ஓகே அங்கிள்..! அந்த மூணாவது வீட்டு அங்கிள் ஆன்ட்டியை பார்க்கும்போதெல்லாம் முனுமுனுன்னு ஏதோ திட்டிக்கிட்டே போனார்.. ஆன்ட்டி அப்செட்..! எனக்கு தாங்க முடியல அதனாலதான் மறுபடி அவங்க வீட்டு ஜன்னல் கண்ணாடியில கல்ல விட்டு எறிஞ்சேன்..” என உண்மையை ஒப்புக்கொண்டான்.

“ஆன்ட்டிக்கு ஏதாவது ஒரு பிரச்சனைனா அவங்களே பாத்துக்குவாங்க.. சின்ன பசங்க நீங்க இதுல தலையிடக்கூடாது..!”

“அப்படியெல்லாம் விட முடியாது..! ஆன்ட்டியை யாராவது ஹர்ட் பண்ணினா நாங்க சும்மா இருக்க மாட்டோம்..!” போட்டி போட்டுக் கொண்டு சொன்னார்கள் இருவரும்.

“மூணு பேரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க.. சரி நான் சொல்றத கேளுங்க.. உங்க ஆன்ட்டியை யாராவது ஏதாவது சொன்னா என்கிட்ட வந்து சொல்லுங்க.. நான் பாத்துக்கறேன்..! ஆனா நீங்களே ஏதாவது வைலண்டா செஞ்சுவெச்சா இனிமே அங்கிள் ஆன்ட்டி உங்க கிட்ட பேசவே மாட்டோம்.” வாத்சல்யன் சற்று கடுமையான குரலில் சொல்ல இரண்டு பிள்ளைகளும் அதிர்ந்து லஷ்மியை பார்த்தன..!

அவர்கள் முகம் போன போக்கில்.. “இனிமே குழந்தைங்க அப்படி பண்ண மாட்டாங்க வாத்சா..! நான் கேரண்டி கொடுக்கிறேன் ப்ளீஸ் அவங்களை திட்டாதீங்க..!” என பரிந்து கொண்டு வந்தாள் லஷ்மி..!

தீப்தியை பார்த்தான் வாத்சல்யன்.. “என்ன பண்ணலாம்..? மன்னிச்சு விட்டுடலாமா இல்ல பனிஷ்மென்ட் கொடுக்கலாமா..?”

“போனா போகுது.. மன்னிச்சு விட்டுடலாம்!” பெரிய மனுஷி போல தீப்தி சொல்ல அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பு முட்டியது.

“எங்க பாப்பா சொல்றதுனால உங்கள மன்னிச்சு விடறேன்..!” பெரிய மனதோடு.. உதட்டை பிதுக்கி தாடையை நீவியபடி சொன்னான் வாத்சல்யன்.

“அப்பாடி அங்கிள் மன்னிச்சிட்டார்..!” குழந்தைகளின் கையை பிடித்துக் கொண்டு அவள் சந்தோஷமாகச் சொல்ல.. “குழந்தைகளுக்குத்தான் மன்னிப்பு.. ஆனா உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு..!” வார்த்தைகள் அதிகாரமாக வந்தாலும் கண்கள் பரிமாறிய அர்த்தம் வேறென்றாய் இருக்க.. ம்ம்..! என கன்னங்களோரம் வெட்கம் பூக்க தலையசைத்தாள் சந்தா..

“சரி இப்ப எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிட போகலாமா..?”

“ஹே…ய்!” பிள்ளைகளின் கூச்சலோடு அவர்களை அழைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் பார்லருக்கு காரை விரட்டினான் வாத்சல்யன்.

இப்படித்தான் ஆன்ட்டி என்று கொஞ்சும் பிள்ளைகளும்.. அக்கா.. அக்கா என அன்பை காட்டும் மீனாட்சியும் சந்தானலஷ்மியை எதையும் யோசிக்கவிடாமல் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக வாத்சல்யன் நினைக்கிறான்.

ஆனால் அவள் மன ஓட்டங்களை அறியும் நாள் வரும்போது.. அவர்கள் செய்து வைத்திருக்கும் தவறின் வீரியத்தை புரிந்து கொள்ளும்போது.. இருவரின் வாழ்க்கை பாதையும் திசைமாறி போயிருக்கலாம்.

அவசரமாக செருப்பை கழட்டி போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் சந்தான லஷ்மி..!

பாய் விரித்து காலை நீட்டி அமர்ந்திருந்தாள் மீனாட்சி.

அடிப்பாதத்தில் சிவந்தும் கருகலுமாக தீப்புண்களும் கொப்பளங்களும் ..

“என்ன மீனாட்சி இப்படி பண்ணிட்ட..! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே.. திடீர்னு தீமிதிக்கனும்னு வேண்டுதல் வைக்கற அளவுக்கு அப்படி என்னடி அவசியம்.. எல்லாம் நல்லாத்தானே போகுது..!” கோபமும் வருத்தமுமாக அவள் பாதங்களை பரிவுடன் பார்த்தாள் லஷ்மி..!

வினோத் தன் தாய்க்காக ஒரு ஒரு கண்ணாடி குவளையில் பழரசம் தயாரித்து எடுத்து வந்தவன்.. இப்போதுதான் லஷ்மி வந்திருப்பதை கவனிக்கிறான்..

“ஆன்ட்டி உங்களுக்கும் ஜூஸ் கொண்டு வரேன்..!” என மீண்டும் சமையலறைக்கு போக..

“வேண்டாம் கண்ணா..! இப்பதான் காபி குடிச்சேன்.. நீ வந்து இப்படி உட்கார்..!” என்றாள் அவள்.

“இருங்க ஆன்ட்டி! கிச்சனை சுத்தம் பண்ணிட்டு வரேன்..!” என்றுவிட்டுப் போன வினோத்தை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது அவளுக்கும்.

இன்னொரு பக்கம் நந்தினி வாஷிங்மெஷினில் துணிகளை போட்டு துவைத்துக் கொண்டிருந்தாள்..!

“இப்ப சொல்லு ஏன் இப்படி செஞ்ச..? இந்த வேண்டுதல் பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே நீ..! நான் எப்படி கவனிக்காம விட்டேன்.!” தலையில் கை வைத்துக் கொண்டாள் லஷ்மி.

“சாமி காரியம்க்கா எதுவும் பேசாதீங்க.. அமைதியா இருங்க..! வேண்டுதல் பலிக்கணும் அதுதான் எனக்கு முக்கியம்..”

“அப்படி என்ன வேண்டுதல்..?”

“அதை சொல்லக்கூடாதுக்கா! எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் அப்புறம் சொல்றேன்.!”

“பரவாயில்லை..! என்கிட்ட சொல்லலாம்.. தப்பில்ல.. சொல்லு..” லஷ்மியின் பிடிவாத குரலில் சொல்லாமல் விடமாட்டாள் என புரிந்து கொண்ட மீனாட்சி ஒரு சில கணங்கள் தயங்கி பிறகு..

“எல்லாம் உங்களுக்காகதான்க்கா!” என்றாள்.

கண்கள் சுருக்கினாள் மீனாட்சி.

“என்ன சொல்ற? எனக்கு புரியல எனக்காகவா..?”

“உங்களுக்கு குழந்தை பிறக்கனும்னு வேண்டுதல்..”

“மீனாட்சி..!” லஷ்மியின் உதடுகள் நடுங்கின.

“சொன்னா நீங்க விட மாட்டீங்கன்னு தெரியும்.. அதனாலதான் வேண்டுதல் முடிச்சுட்டு சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.!”

“எனக்காக இப்படி ஒரு வேண்டுதல் வைக்கணுமா நீ..! தீக்குழியில் இறங்கும் போது காலெல்லாம் சுட்டிருக்குமே! எப்படி பொறுத்துக்கிட்ட..! ஏன் மீனாட்சி இப்படி..?” கண்களில் பெருகிய கண்ணீரோடு விசும்பினாள்.

“ஓம் சக்திய மனசுல நினைச்சுக்கிட்டேன்.. வலியோ அனலோ எதுவும் தெரியல.. நீங்க நிறைமாத வயிறோட நடந்து வரும் உருவம் மட்டுந்தான் என் கண்ணுக்குள்ள தெரிஞ்சது..! உண்மையான பக்திக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லக்கா..!” அவள் சிரித்தாள்.

“அய்யோ.. மீனாட்சி!” அவள் மடியில் விழுந்து கதறினாள் லஷ்மி!

இந்த அன்பை எதைக்கொண்டு ஈடு செய்வேன்.. பல கோடி ஜென்மங்கள் இவள் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் என் பாவம் தீருமா..?

“அக்கா.. ப்ளீஸ் அழாதீங்க..! இந்த குடும்பத்துக்காக நீங்க எவ்வளவோ பண்ணி இருக்கீங்க..! உங்க அன்பையும் நீங்க செஞ்ச உதவியையும் எதைக்கொண்டும் ஈடு செய்ய முடியாது.. ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன முயற்சி..! என் வேண்டுதல் கண்டிப்பா பலிக்கும்.. கடவுள் நிச்சயம் கண் திறப்பார்.. நீங்க வேணா பாத்துட்டே இருங்க.. கூடிய சீக்கிரம் என்கிட்ட வந்து நல்ல செய்தி சொல்லத்தான் போறீங்க..!” நம்பிக்கை பளீச்சிட்ட கண்களோடு சிரித்தாள் மீனாட்சி.

அவள் இரு கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் லஷ்மி.. “இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல மீனாட்சி..!” பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு.. குரல் தழுதழுக்க விம்மினாள் அவள்.

“என் குழந்தைகளை உங்க குழந்தைங்களா பாக்கற அந்த அன்பை விட.. நீங்களும் அண்ணாவும் எதிர்பார்ப்பில்லாம என் குடும்பத்து மேல வச்சிருக்கிற பாசத்தை விட.. இதெல்லாம் பெருசில்லக்கா..!”

அழுகை நின்று போனது.. உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவளை வெறித்துப் பார்த்தாள் லஷ்மி..

“அக்கா..!” மீனாட்சி அவளை உலுக்கினாள்.

“நான் போய் ஏதாவது சமைச்சுக் கொண்டு வரேன்..!” சேலை தலைப்பால் கண்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து போனாள் லஷ்மி..!

வாத்சல்யனிடம் இது பற்றி சொல்ல.. சில கணங்கள் முகம் இறுகி மௌனமாக இருந்தவன்..

“அந்த நல்ல பொண்ணோட வேண்டுதல்தான் நமக்கு குழந்தை கிடைக்கப் போகுதுன்னு நினைச்சுக்கோ சந்தா..! காலம் கடந்தாச்சு இனி எதையும் மாத்த முடியாது.. மனச போட்டு குழப்பிக்காம நிம்மதியா இரு..!” முதுகை தட்டிக் கொடுத்துவிட்டு போனான்.

சந்தாவால் இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.. அந்த குடும்பம் தங்கள் மீது வைத்திருக்கும் மாசற்ற அன்புதான் உள்ளுக்குள் தேள் கொடுக்கின் விஷம் போல் தீராத வலியை தருகிறது.

உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தாள் அவள்..! வாத்சல்யனிடம் எதையும் வெளிப்படுத்துவதில்லை.. அவனை பார்க்கும்போதெல்லாம் சிரிக்கிறாள்.. விளையாடுகிறாள்.. முத்தமிட்டு கட்டி அணைத்து காதல் செய்கிறாள்..

மனைவியின் முகத்தை படிக்கத் தெரியாதவன் இல்லை வாத்சல்யன்.

அவள் முகத்தை கூர்ந்து பார்த்து உணர்வுகளை புரிந்து கொள்ளும் நேரத்தில்.. வலுக்கட்டாயமாக தனக்குள் இழுத்து அவனை மூச்சு முட்ட புதைத்துக் கொள்கிறாள். தாபங்களில் கொதித்திருக்கும் தருணங்களிலும் மனைவி மீது கொண்ட மயக்கத்திலும் வேறு எதையும் அறிய நினைப்பதில்லை அவன்.

மீனாட்சியின் கால்களின் தீக்கொப்பளங்களும் புண்களும் ஆறத் தொடங்கியிருந்தன.. இன்னும் இரண்டு நாட்களில் அலுவலகம் செல்ல முடிவெடுத்திருந்தாள் அவள்.

அன்று லஷ்மி மீனாட்சி வீட்டுக்கு உணவு கொண்டு வந்து தரும்போது வீட்டில் வேணு இருந்தான்.

“என்ன வேணுண்ணா..! இந்த மாதிரி பண்ணி வச்சிருக்காளே நீங்களாவது புத்தி சொல்லி அவளை தடுத்திருக்க கூடாதா..!” ஆற்றாமையோடு புலம்பினாள் இவள்.

“என்கிட்ட கேக்காம பண்ணுவாளா..! சாமி காரியம்.. வேண்டுதல் நிறைவேத்த நானும் கூட சேர்ந்து பூ மிதிக்கறேன்னு சொன்னேன். இவதான் கேட்கல..! உங்களுக்கொரு நல்லது நடந்தா அதுல சந்தோஷப்பட போற முதல் ஆளு நாங்கதான்..! ஓம்சக்தி கைவிடமாட்டா..! அவளை நம்புங்க.. நிச்சயம் நல்லது நடக்கும்..!” என்றான் அவன்.

லஷ்மியால் அங்க நிற்கவே முடியவில்லை.. மூச்சு முட்டியது.. உணவை மேஜைமேல் மீது வைத்துவிட்டு விறுவிறுவென வீட்டுக்கு ஓடி வந்தாள்.

கட்டிலில் அமர்ந்து இலக்கற்று தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதவை திறக்கும் ஓசை கேட்ட பிறகும் கூட சிலையாகத்தான் அமர்ந்திருந்தாள்.

சின்ன கொலுசு சத்தமெழுப்ப.. தீப்தி பாப்பா உள்ளே வருவதை பார்த்த பிறகுதான் கண்களை அந்த பக்கம் திருப்புகிறாள்.

இன்னும் ஒரு மாதம்.. பிறகு இந்த பிள்ளை இந்த உலகத்தில் இருக்கப் போவதில்லை..!

வாயில் கை வைத்து தன்னை தலை சாய்த்து பார்க்கும் குழந்தையை பார்த்த பிறகு இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த வேதனையும் அழுத்தமும் ஒன்று சேர பொங்கி பொங்கி வெடிக்கிறது..

“தீ..ப்..தி!”

அடித்தொண்டையிலிருந்து கத்தி அழுது தீப்தியை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறாள்.

நிச்சயம் தீப்தி இதை விரும்பாது.. அவளை அடிக்கும்.. நகத்தால் பிராண்டும்.. கடிக்கும்..! அதுதான் அவளுக்கும் வேண்டும். உடம்பு புண்ணாக வேண்டும். மனக் காயத்திற்கு அதுதான் மருந்து..

“என்னை அடி தீப்தி..! என்னை அடி..! நான் பாவி..! என்னை கொன்னுடு..!” அவள் சின்ன கைகள் வைத்து தன்னை அடித்துக் கொண்டு கதறுகிறாள்..

“அம்மா..!” என்றொரு சின்ன குரல்..!

தீப்திதான் அழைக்கிறாள்.

தீப்பந்தத்தை தண்ணீருக்குள் அமிழ்த்து விட்டார் போல்.. அவள் ஆக்ரோஷம் தணிந்து சிலையாகிறாள் லஷ்மி.

“எ.. என்ன சொன்ன..?”

“அம்மா..! நீ அம்மா..!” அவள் கழுத்தை வளைத்து தன் தோளில் சாய்த்துக் கொள்கிறது குழந்தை..!

கைக்குழந்தையாகி.. தீப்தி இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைகிறாள் லஷ்மி..

தீப்தி அவள் நெற்றியில் முத்தமிடுகிறது கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிடுகிறது.. அவளை கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருக்கிறது.

“தீ..ப்தி!”

“அம்மா..!”

“நான் அம்மாவா?” குழந்தையை விலக்கி கேட்கிறாள்.

“ஆமா!” என தலையசைக்கிறது தீப்தி.

“யார் அப்படி கூப்பிட சொன்னாங்க..?”

யாரும் இல்லை என்பதோடு வார்த்தைகள் முடிந்து போகின்றன.. ஆத்மார்த்தமாக அந்த மழலையின் மனதிலிருந்து வரும் அழைப்பு அது.. அந்த குழந்தையின் கண்களுக்கு அம்மாவாக தெரிய என்ன தவம் செய்தாளோ தெரியவில்லை..

அம்மா..! என்று அழைப்பின் கணம் தாங்காமல் தீப்தியின் தோளில் கொடி போல சரிகிறாள்.. அடிவயிறு சுருட்டியிழுக்க, நெஞ்சம் கனத்து புரியாத உணர்வில் பொங்கி வழிகிறாள் லஷ்மி..

இதுதான் தாய்மை உணர்வா..? கண்கள் கரகரவென கண்ணீரை சொரிகின்றன!

குழந்தையின் மடியில் சேயாகி படுத்து கொண்டிருக்கிறாள் லஷ்மி..! தாயாகி அவள் தலையை வருடி கொடுக்கிறது தீப்தி..!

குழந்தையை தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற அச்சத்துடன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு இரண்டு மணி நேரமாய் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் சந்தானலஷ்மி..!

“அம்மா..!” அவள் கழுத்தில் பிஞ்சு கரங்கள் வருட அழைக்கிறது தீப்தி..

“இது போதும்.. இது போதும் குட்டிமா..! இந்த ஜென்மத்திலேயே உனக்கு தாயா வாழ்ந்துட்டேன்.. தாய்மைன்னா என்னன்னு நிறைவா உணர்ந்துட்டேன்.. எனக்கு இது போதும்..! இது போதும் என் குட்டி கண்ணம்மா..!” கண்களில் கண்ணீரும் வாய் நிறைய சிரிப்புமாக தீப்தியின் கன்னத்தில் முத்தமிடுகிறாள் லஷ்மி!

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!