Skip to content
Post Views: 31
கண்ணாமூச்சி 5
சென்னையின் நள்ளிரவு அமைதியில், ‘SoulMate’ ஆய்வகம் மட்டும் கணினிகளின் மெல்லிய இரைச்சலுடனும், நீல நிற வெளிச்சத்தோடும் இயங்கிக் கொண்டிருந்தது. பிரவீன் தன் இருக்கையில் முன்னோக்கிச் சாய்ந்து, கண்கள் வலிக்கத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது காபிக் கப்பில் இருந்த காபி எப்போதோ ஆறிப்போயிருந்தது.
அவனது லேப்டாப் திரையில் இரண்டு அலைவரிசைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்று விஸ்வநாத்தின் ‘User_Beta_01’, மற்றொன்று நிலாவின் ‘User_Beta_02’.
பிரவீன் அல்காரிதத்தின் அத்தனை புள்ளிவிவரங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்தான். “டேட்டா லாக்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு. எந்தப் பெரிய எரரும் காட்டல. இந்த ரெண்டு பேரோட மூளை அலைகளும் தங்களுக்குள் தனித்தனி பேரலல் லைன்ல ரொம்ப சீரா ஓடுது. சிஸ்டம்ல எந்த அப்நார்மலிட்டியும் இல்லை,” என்று நிம்மதியோடு தன் நாற்காலியில் சாய்ந்தான்.
Advertisement
அருகில் நின்றிருந்த அனன்யா, “அப்போ எந்தப் பிரச்சனையும் வராதா சார்? டேட்டா கிராஸ் ஆக வாய்ப்பில்லையா?” என்று கேட்டாள்.
“இப்போதைக்கு வாய்ப்பில்லை அனன்யா. மாடல் ரொம்ப ஸ்டேபிளா இருக்கு. நாம பயந்த மாதிரி எந்த குளறுபடியும் நடக்கல,” என்றான் பிரவீன்.
எதற்கும் ஒருமுறை நிலாவுக்கோ விஷ்வாவுக்கோ அழைத்து நிலவரத்தைப் பற்றி விசாரித்திருந்தால், பின்னர் நேரப்போகும் அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாமோ???
Advertisement
ஏனென்றால், அந்தத் துல்லியமான மென்பொருள் அல்காரிதத்தின் ஆழத்தில், அவர்களின் கண்களுக்குத் தப்பி ஒரு மர்மமான மாற்றம் நிகழ்ந்திருந்தது. தொழில்நுட்ப ரீதியாக எந்தப் பிழையும் காட்டாமல், அந்த இரண்டு பேரலல் கோடுகளும் மிகவும் ரகசியமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, ஒரே புள்ளியில் மெர்ஜ் ஆகியிருந்தன. அது கணினியின் புள்ளிவிவரங்களுக்குப் புலப்படாத ஒரு மென்மையான இணைப்பு!
Advertisement
அவர்கள் இருவருமே அறியாமல், அந்த நியூரல்-லிங்க் ஹெட் பேண்ட்டை மாட்டும் போதெல்லாம், அந்தச் செயலி இப்போது இருவரிடமும் ஒரே ஒரு விசித்திரமான கேள்வியை வினவத் தொடங்கியது:
“உன் உலகமா… என் உலகமா? (Your Place or Mine?)”
கடந்த இரண்டு நாட்களில் அல்லாமல், ஹெட்பேண்ட் இன்று இந்தக் கேள்வியைக் கேட்க, நிலா சற்று குழம்பிப் போனாள். “மை பிளேஸ்” என்றால் விஷ்வா என் வீட்டிற்கு வருவாரா? அப்போ “யுவர் பிளேஸ்னு” சொன்னா நான் விஷ்வா வீட்டுக்குப் போக முடியுமா?” வரிசையாகக் கேள்விகள் எழும்பின.
Advertisement
பிறகுதான் அவளுக்கு உரைத்தது, “ஐயோ, நான் பார்க்குற விஷ்வா உண்மை இல்லையே… அவர் வெறும் விர்ச்சுவல் விஷ்வாதானே… அப்பறம் எப்படி நிஜ விஷ்வாவோட வீட்டுக்குப் போக முடியும்?” என்று தன் அறியாமையைச் சாடிக் கொண்டாள் நிலா.
“சரி, ஏதாவது புது சாஃப்ட்வேர் அப்டேட் பண்ணியிருப்பா இந்த அனன்யா,” என்று நினைத்தவள், மனதில் “மை பிளேஸ்” என்று நினைத்தாள். இந்த நியூரல் ஹெட்பேண்ட் கொடுக்கும் சர்ப்ரைஸ்களுக்கு அளவே இல்லை என்று நினைத்துக் கொண்டாள், இதனால் அவளுக்கு நேரவிருக்கும் மாபெரும் சர்ப்ரைஸ் சம்பவங்களைச் சிறிதும் அவதானிக்காமல்.
அதே சமயம், ஐஸ்லாந்தில் அன்றைய ஷூட்டிங் முடிந்து, அன்று எடுக்கப்பட்ட காட்சிகளின் “ரஷ்” பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா. மிக நெருக்கமான காதல் காட்சி அது, கதாநாயகி நயனிகா ஸ்கிரிப்ட்டையும் மீறிய நெருக்கத்தைக் காண்பித்திருந்தாள், அவளது அதிகப்படியான இழைவும், அளவுக்கு மீறிய உரசுதல்களும், அவள் கண்களில் அவன்பால் தோன்றியிருந்த மயக்கமும் விஸ்வநாத்துக்கு ஒரு விதமான தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
அவன் எவ்வளவுதான் டீசண்டாக நடந்து கொண்டாலும், அவனுடன் நடிக்கும் பெரும்பாலான கதாநாயகிகள் படம் முடிவதற்குள் அவன் மீது மையல் கொண்டு பித்து பிடித்துப் போய்விடுகிறார்கள். அமரக் காதல், தூய்மையான அன்பு என்றெல்லாம் சிலர் பேசினாலும் அதிலிருக்கும் போலித்தனம் விஸ்வநாத்துக்கு அப்பட்டமாகவே விளங்கும், அதிலும் சிலர் எல்லாம் துறந்து அவனுடன் ஒரு இரவெனும் கழித்து விட வேண்டும் என்றும் பெரு முயற்சிகள் செய்துள்ளனர்.
அதனாலேயே விஸ்வநாத் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டான், யாரையும் தன்னை நெருங்கவும் விடமாட்டான். இன்றும் நயனிகாவின் நெருக்கம் அவனுக்கு அருவருப்பையே ஏற்படுத்தியிருந்தது. ஈர்ப்பில்லாத நெருக்கம் அவனைப் பொருத்தவரையில் அருவருக்கத்தக்கதே!
ரஷ் பார்த்து முடித்த இயக்குனர் உதயச்சந்திரன், “வாவ் விஷ்வா, அபாரமான ஷாட், ரீடேக்கே இல்லாம ஒரே ஷாட்ல மாஸ்டர் ஸ்ட்ரோக் அடிச்சுட்டீங்க… இந்த ரொமாண்டிக் சீனைப் பார்த்து உலகமே மயங்கி நிக்கப் போகுது…” என்று ஸ்லாகித்தான், விஷ்வாவின் தோள் தட்டி.
“தாங்க்ஸ் உதய், அப்போ பேக்-அப் தானே, நான் போகலாமா?” என்றான் விஷ்வா பொறுமையில்லாமல்.
இன்று கேரவான் வரவில்லை, அதீதப் பனிப்பொழிவு காரணமாக எல்லோரும் வீல்களில் ஆண்டி-ஸ்கிட் சங்கிலிகள் பொருத்தப்பட்ட கார்களில் தான் லொக்கேஷனுக்கு வந்திருந்தனர்.
யூனிட்டில் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, “அரவிந்த், போலாமா? என்றபடி தனது காரை நோக்கி நடந்தவனை, பின்னாலிருந்து “விஸ்வா…” என்ற நயனிகாவின் குரல் தடுத்து நிறுத்தியது.
“உங்களுக்குப் பிடிக்கவே இல்லைன்னாலும், அதை வெளிப்படையா காட்டிடாதீங்க விஷ்வா, அது உங்க இமேஜை ஸ்பாயில் பண்ணிடும்… அவங்க பண்றது யாருக்கும் கண்ணுல தெரியாது, ஆனா உங்களை குற்றவாளியாக்கிடுவாங்க இந்த ஃபீமேல் ஆர்டிஸ்ட்… கொஞ்சம் பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கோங்க… ரொம்ப ஹார்ஷா பேசிடாதீங்க…” என்று அரவிந்த் அவனை கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான்.
நயனிகா அவனிடம் வந்து நெருக்கம் காட்டுவது பிடிக்காமல் விஷ்வா அதை அரவிந்திடம் வெளிப்படுத்திய போது, ‘பெரிய பட்ஜெட் படம், ரொம்ப செலவு செஞ்சு எடுக்குறாங்க,’ என்பதால் அவனிடம் இந்த வேண்டுகோளை வைத்திருந்தான் அவன்.
“உங்களை அவங்க தொந்தரவு பண்ணாதபடி நான் பார்த்துக்குறேன்,” என்று அரவிந்த் வாக்கு கொடுத்திருந்ததால் விஸ்வநாத் தனது விருப்பமின்மையைக் காட்டாமல் அடக்கிக் கொண்டான்.
இப்போது அரவிந்த் காரைக் கொண்டு வருவதற்குள் நயனிகாவிடம் மாட்டிக் கொண்டான் விஸ்வநாத். அவள் குரல் கேட்டுப் பல்லைக் கடித்தவன், ஒரு பெருமூச்சுடன் இதழ்களில் கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்துக் கொண்டு “சொல்லுங்க, நயனிகா,” என்றபடி திரும்பினான்.
“இன்னிக்கு நைட் ஃப்ரீயா? நாம டின்னர் போலாமா?” என்றாள் மயக்கும் குரலில்.
“ஹ்ம்ம், இல்லை, நைட் ப்ரொட்யூசர் ஒருத்தர் கூட கான்கால் இருக்கு, இன்னொரு நாள் பார்க்கலாமே…” என்றான் அதே செயற்கையான புன்னகையுடன்.
அதற்கு மூக்கைச் சுருக்கி, வருத்தம் காண்பித்த நயனிகா, “நாளைக்கு ஷூட்டிங் இல்லையே, எங்கயாவது அவுட்டிங் போலாமா? நீங்களும் நானும் மட்டும்…” என்றாள், ஒயிலாகக் கண்களைச் சிமிட்டி.
அதற்குள் அரவிந்த் வந்துவிட, “நாளைக்கு விஸ்வநாத் சாருக்கு ஸ்பா ட்ரீட்மென்ட் புக் ஆயிருக்கு, சார் ஃப்ரீ இல்லை, மேடம், உங்களுக்கும் வேணும்னா, உங்க அசிஸ்டன்ட் கிட்ட சொல்லி ஒரு ஸ்பா அப்பாயின்ட்மென்ட் புக் பண்ணச் சொல்லவா?” என்றான் அவளிடம்.
“தேவையே இல்லை, நானே பார்த்துக்குறேன்,” என்று அவனை முறைத்துவிட்டு தன் காரில் சென்று ஏறிக் கொண்டாள் நயனிகா.
“சாரி விஷ்வா,” என்று அரவிந்த் காரின் கதைத் திறந்துவிட, சற்று எரிச்சலாகவே உள்ளே அமர்ந்துகொண்டவனின் கவனத்தை மொபைலில் வந்த நோட்டிபிகேஷன் ஒலி திசை திருப்பியது.
“சந்திப்போமா?” என்று சோல்மேட் செயலியில் இருந்து மெசேஜ் வந்ததாகக் காட்டியது.
‘குப்’பென்ற ஒரு வெம்மை உணர்வு தன் உடலெங்கும் பரவ, “அரவிந்த், என்னோட பேக் எங்கே? கொண்டு வந்திருக்கியா?” என்றான் பரபரப்பாக.
“ஹான், இருக்கு விஷ்வா, என்று காரின் முன்பக்க இருக்கையில் இருந்த லேப்டாப் பேக்கை அவனிடம் அரவிந்த் கொடுக்க,
“நான் கொஞ்ச நேரம் மியூசிக் கேக்கப் போறேன், என்னை ஹோட்டல் போற வரைக்கும் டிஸ்டர்ப் பண்ணாத அரவிந்த்” என்றவன், காரின் டிவைடரை மூடிவிட்டு, பையிலிருந்து தனது நியூரல் பேண்டை வெளியில் எடுத்து ஆன் செய்தான்.
எப்போதும் போல நீல விளக்கு மின்னாமல் புதிதாக அதில் பச்சை விளக்கு மின்னிக் கொண்டிருந்தது.
என்றுமில்லாமல் இன்று புதிதாய் தனது சோல்மேட் பேண்ட் சந்திக்க அழைப்பு விடுக்கிறதே என்ற யோசனை எல்லாம் தோன்றவே இல்லை அந்தக் கணத்தில் விஷ்வாவுக்கு.
நிலாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே மேலிட, பேண்டை நெற்றியில் அணிந்து கண்களை மூடினான்.
“மை பிளேஸ்” என்று நினைத்த நிலா, கண் திறந்தபோது தன் வீட்டில், மொட்டை மாடியில், அவளும் அவளது தந்தையும் சேர்த்து அமைத்த குட்டித் தோட்டத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. சில சமயங்களில் இப்படி மொட்டை மாடியில் வந்து நின்று பாட்டு கேட்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. இன்றும் அப்படியேதான் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
காதுகளில் இயர்ஃபோனில் இளையராஜா இசையில் எஸ்பிபி தேன்குரலில் “வண்ணம் கொண்ட வெண்ணிலவே…” என்று காதல் பாடிக் கொண்டிருந்தார்.
“பொது இடங்கள் என்றால் சரி, ஆனால் என் வீட்டுக்குள்ளேயே என்னால் விஷ்வாவை எப்படிச் சந்திக்க முடியும்?” லாஜிக்காக கேள்வி கேட்டது புத்தி.
அதற்கு விடையளிப்பது போல், நிலாவின் “சந்திப்போமா?” என்ற கேள்விக்கு, “காத்திருக்கிறேன் உன்னைச் சந்திக்க…” என்று விஷ்வா விடையளித்திருக்க… அவனை சோல்மேட் செயலி, சென்னையில் நிலாவின் வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.
“இங்க நிலா எங்க இருப்பா?” என்று நடுத்தெருவில் நின்றுகொண்டு அவன் சுற்றும் முற்றும் தேட, அவனுக்கு முன்னால் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் நிலா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
கீழிருந்து கையசைத்து அவள் கவனம் ஈர்க்க முயன்றவனின் முயற்சி தோல்வியடைய, சற்றும் யோசிக்காமல் சுவர் ஏறிக் குதித்து, மொட்டை மாடியை அடைந்துவிட்டான்.
கருப்பு நிற ஹூடி அணிந்து, சுவரேறிக் குதித்த விஷ்வாவைப் பார்த்ததும், நிலாவின் இதயம் தாளம் தப்பி ஒலித்தது.
“என்ன…என்ன இப்படி வர்றீங்க விஷ்வா? எங்க வீடு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் படபடப்பாக. அவர்கள் இருப்பது விர்ச்சுவல் உலகம் என்ற நினைவே இல்லாமல், யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் அவளுக்குள் தோன்றியது.
“ஹாய் நிலா, இதுதான் உங்க வீடா? ரொம்ப கியூட்டா இருக்கு,” என்றான் விஷ்வா சுற்றும் முற்றும் பார்த்து.
இரவின் குளிர்ச்சியில், மாடியில் படர்ந்திருந்த நித்யமல்லிக் கொடியில் பூத்திருந்த மலர்களின் வாசத்தோடு வீசிய தென்றல் இருவரையும் மென்மையாகத் தழுவிச் சென்றது.
“பாட்டு கேக்கறியா? என்ன பாட்டு?” என்றபடி அவளது ஒரு காதில் இருந்த இயர்பீசை எடுத்துத் தன் காதில் வைத்துக்கொள்ள,
“கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை…”
என்று இயர்பீஸில் பாலு விரகம் விளக்கிக் கொண்டிருந்தார்.
“ஹ்ம்ம் கரெக்ட், தள்ளித் தள்ளி நீயிருந்தால் சொல்லிக் கொள்ள வார்த்தையில்லை,” என்று பாடிக்கொண்டே நிலாவின் மிக அருகில், தோள்கள் உரசும் அருகாமையில் பாரப்பெட் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டான் விஷ்வா.
இத்தனை நெருக்கத்தை ஒரு வேற்று ஆண்மகனிடம் இதுநாள் வரையில் உணர்ந்திராத நிலாவிற்கு நாணம் வந்து ஆட்கொள்ள, மெதுவாய் அவனிடமிருந்து விலக முயன்றாள்.
தள்ளிப் போனவளின் கைப்பிடித்து மீண்டும் தன் அருகில் இழுத்துக் கொண்டவன், “போகாத நிலா, என் பக்கத்துலையே இரு…” என்று அவள் காதருகில் கிசுகிசுக்க, அவனது பிடியில் இருந்து கையை விடுவிக்க முயன்று தோற்றவள், மெதுவாக விழி உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்.
அவள் பார்வையைச் சந்தித்தவன், அவளை இன்னும் கொஞ்சம் அருகில் இழுத்து நிறுத்திக் கொண்டான், கூச்சமாக இருந்தாலும் அவனிடமிருந்து இப்போது விலகவில்லை நிலா.
இயர்பீஸில், அந்தப் பாடல் முடிந்து,
“இருபது கோடி நிலவுகள் கூடிப் பெண்மை ஆனதோ…”
என்று அடுத்த பாடல் ஒலிக்கத் தொடங்க…
“என் எதிரே வந்து புன்னகை செய்யக் கண் கூசுதோ” என்று அடுத்த வரியை விஷ்வா நிலாவின் முகம் பார்த்துப் பாடினான். நிலா வெட்கத்தில் அவனிடமிருந்து விழியகற்றி எதிரே இருந்த வெளியை வெறிக்கத் தொடங்க, விஷ்வா மெதுவாகத் தன் தலையை நிலாவின் தோளில் சாய்த்து கண்களை மூடிக் கொண்டான்.
இரவின் குளுமையும், மலர்களின் நறுமணமும், இதமான இசையும், தனக்குப் பிரியமானவளின் அருகாமையும், இந்த உண்மையற்ற, பாசாங்கு உலகம் விஷ்வாவின் மனதில் உண்டாக்கிய ரணத்திற்கு மருந்து பூசியது.
எப்போதும் ஒருவருடன் ஒருவர் வாதாடும், சளசளக்கும், சண்டையிடும் சந்திப்பாக இல்லாமல், கணங்கள் மௌனத்திலேயே, அருகாமை மட்டுமே தந்த நிம்மதியிலேயே கரைந்து முடிந்து போயின.
“விஷ்வா, ஹோட்டல் வந்திடுச்சு,” என்ற அரவிந்தின் குரல் அவனை நிஜ உலகிற்கு இழுத்து வந்தது.
மெதுவாகத் தனது ஹெட்பேண்டைக் கழற்றி அதற்கான பையில் வைத்தவன், மௌனமாகவே இறங்கி ஹோட்டலுக்குள் நுழைந்தான்.
“விஷ்வா, டின்னர் என்ன சொல்லட்டும்? என்ற அரவிந்தின் கேள்விக்கு, “எப்பவும் மாதிரிதான், ரூமுக்கு அனுப்பிடு,” என்றுவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
ஒரு மணிநேரம் முடிந்து நனவுலகுக்குத் திரும்பிய நிலா, ஹெட்பேண்டை கழற்றி மேஜை மீது வைத்தவள், மொட்டை மாடிக்கு ஓடினாள். அங்கு யாரும் இல்லை. அவள் அமைத்த நந்தவனம் இருந்தது, அதில் நித்யமல்லிக் கொடியும் இருந்தது, தென்றல் காற்றும் இதமாகவே வீசியது, ஆனால் விஷ்வா மட்டும் அங்கு இல்லை. நிழல் உலகில் கண்ட நாயகனை நிஜ உலகில் காண முடியாமல் தவித்தது நிலாவின் மனது.
மெதுவாக நடந்து சென்று விர்ச்சுவல் உலகில் விஷ்வாவுடன் நின்றிருந்த அந்த இடத்தில் மதில் சுவரில் சாய்ந்து நின்று கண்களை மூடிக் கொண்டாள், அவள் கை தன்னிச்சையாக விஷ்வா சாய்ந்திருந்த தோளை மெல்ல வருடியது. எவ்வளவு நேரம் நின்றாளோ தெரியாது,
“நிலா… நிலாம்மா… என்ற தங்கம்மாவின் குரல் அவளை விழிக்க வைத்தது, “மணி பதினொண்ணாச்சு, இந்த நேரத்துல மொட்டை மாடில என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” என்று கேட்டபடியே அவளருகில் வந்தார்.
“ஒ ஒண்ணுமில்லைமா, சும்மாதான் வந்தேன், வா கீழ போகலாம்…” என்று அம்மாவையும் அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கத் தொடங்கினாள் நிலா.
நிலாவுடன் அவளது அறைக்குள் வந்த தங்கம்மா, “இந்தா பால் சூடா இருக்கு குடிச்சுடு” என்று பால் கிளாசைக் கொடுத்தவர் கண்ணில் நிலவின் மேஜை மீது இன்னும் மின்னிக் கொண்டிருந்த நியூரல் பேண்ட் பட்டது.
“என்ன நிலா இது, புதுசா இருக்கு, இந்த இயர்ஃபோன் வாங்கினதை நீ என்கிட்டே சொல்லவே இல்லையே,” என்று அதை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தார்.
“அ… அது இயர்ஃபோன் இல்லைம்மா, அது நியூரல் ஹெட்பேண்ட், அனன்யா ஆஃபீஸ்ல உருவாக்குனது, அதை டெஸ்ட் பண்ணிப் பாக்கச் சொல்லி என்கிட்டே குடுத்தா…” என்றாள் நடுக்கத்தோடு. அதில் வரும் விர்ச்சுவல் விஷயங்களை அம்மா பார்த்துவிட்டால் என்னவாகுமோ என்று பயம் வந்தது நிலாவுக்கு.
“அப்படியா…அனு பண்ணினதா இது, இதுல என்ன டெஸ்ட் பண்ணுவ?” என்றார்.
“அது ஒரு லேர்னிங் ஹெட்பேண்ட்மா, காலேஜ் பாடங்கள் அதுல இருக்கும், அதை தலையில் மாட்டிக்கிட்டா அதுல இருந்து நாம படிக்கலாம், இல்லன்னா அதுவே நமக்கு படிச்சுக் காட்டும்,” சரளமாகப் பொய் வந்தது நிலாவுக்கு.
“எப்படி, இப்படியா போட்டுக்குவ? என்று அந்த ஹெட்பேண்டை தன் நெற்றியில் அணிந்து கொண்டார் தங்கம்மா. உயிரே போய்விட்டது நிலாவுக்கு, “ஐயோ, நெத்தியில மாட்டிக்கிட்டா விர்ச்சுவல் செஷன் ஆரம்பிச்சுடுமே, விஷ்வாவைப் அம்மா பார்த்தா…அவ்வளவுதான். இன்னிக்கு நான் செத்தேன்…” என்று அவள் நடுங்க ஆரம்பிக்க,
“என்ன நிலாம்மா… இதுல ஒண்ணுமே தெரியல, ஒருவேளை ஆஃப் ஆயிருக்கோ,” என்று அதை கழற்றி மறுபடியும் முன்னும் பின்னும் அவர் பார்க்க,
நிலா ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள், அது அவளது நியூரல் அலைகளுக்கு மட்டுமே செயலாற்றும் என்று அனன்யா சொன்னது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
“அம்மா… அது நான் போட்டுக்கிட்டா மட்டுந்தான் வேலை செய்யும், இன்னும் இது ரிலீஸ் ஆகாலைல்ல, டெஸ்டிங் தானே அதான்…” என்றாள், மழுப்பலாக.
“அப்படியா, சரி பாப்பா, இந்தா இதைப் பத்திரமா வை, பாலைக் குடிச்சுட்டு தூங்கு.” என்றபடி நிலாவின் அறையை விட்டு வெளியேறினார் தங்கம்மா.
படபடப்பு இன்னும் அகலாத நிலா, வேகமாக ஹெட்பேண்டை அதன் பெட்டியில் வைத்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். “நல்லவேளை அம்மா எதையும் பாக்கலை,” என்று தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.
நிழலுக்கும் நிஜத்துக்குமான வேறுபாடு மெல்ல மாய்ந்து ஒன்றோடொன்று கலந்து கொண்டிருந்தது, இது உண்மையல்ல என்று நினைத்து நிழலை அனுபவித்துக் கொண்டிருந்த உள்ளங்கள் “இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமே” என்று ஏங்கத் தொடங்கியிருந்தன…
நிஜ உலகக் காதல் மட்டுமல்ல… விர்ச்சுவல் உலகக் காதல் கூட உள்ளத்தில் கள்ளம் புகுத்தும் என்பதை நிலா நிரூபித்துக் கொண்டிருந்தாள்…
error: Content is protected !!