Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 42

அத்தியாயம் – 42

 

கள்ளச் சாவியின் உதவியுடன் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்த நிதினும் சம்யுக்தாவும் வீட்டை ஒருமுறை பார்வையால் அலசினர், சம்யுவோ எங்கும் படிந்திருந்த தூசியையும் ஒட்டடையையும் கண்டு சற்றே மிரண்டவள்,.. ​”வீட்டைப் பார்க்கவே ஒரு மாதிரி பயமா இருக்கே நிதின்…” என்று மெல்லிய குரலில் சொல்ல, நிதினோ…​”உன்னைப்பற்றி தான் எனக்கு தெரியுமே, சரி வா… பயமா இருந்தா வந்த வழியிலேயே போயிடலாம்!” என்று அவன் சொல்ல, சம்யுவோ… “இருங்க நிதின்… அதான் கஷ்டப்பட்டு வந்தாச்சுல்ல, சும்மா ஒரு தடவை எல்லாத்தையும் பார்த்துட்டுப் போவோம்.” என்றாள்..

​”இங்க எதுவும் கிடைக்காது சம்யு, சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற… சரி போ, அந்த ஒட்டடை படிஞ்ச வீட்டை ஒரு ரவுண்டு சுத்திப் பாரு,” என்று நிதின் சலித்துக் கொள்ள, அவளோ மெல்ல அடியெடுத்து வைத்து ஒவ்வொரு இடமாகப் பார்வையிடத் தொடங்கினாள். அங்கு என்ன கிடைக்கும் என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் ‘இங்கு ஏதோ ஒன்று இருக்கிறது’ என்று அவளது மனதின் ஓரம் மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தது…



Advertisement

​வீட்டின் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தவள், அங்கிருந்த புத்தக அலமாரியில் இருந்த புத்தகங்களைக் கவனிக்கத் தொடங்கினாள், அங்கு ஏராளமான நாவல் புத்தகங்ள் இருந்தன, சம்யுவிற்கு நாவல்கள் படிப்பது என்றால் கொள்ளைப் பிரியம் அல்லவா!

​ஆர்வத்தில் தான் வந்த வேலையை மறந்துவிட்டு, ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டிப் பார்க்கத் தொடங்கியவளின் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்த நிதின்… “என்ன பண்ண வந்தோம்? இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவன் வினவ, அவனை முறைத்துப் பார்த்தவள்,.. ​”கொட்டினதுக்கு நாலு கொட்டு கண்டிப்பா திருப்பித் தருவேன் பாருங்க!” என்று மிரட்டிவிட்டு.. “எல்லாமே நல்ல ஸ்டோரி புக்ஸ் நிதின், போகும்போது இதையெல்லாம் எடுத்துட்டுப் போகணும்,” என்றாள்.

​”ஆட்டைய போடப் பார்க்கிறியா?” என்று நிதின் கிண்டல் செய்ய, “இது என் அண்ணி வீடு நிதின்! நான் அண்ணிகிட்ட சொல்லிக்கிறேன், நீங்க மூடுங்க,” என்று அவள் கூறவும், “சொல்லுவடி சொல்லுவ…” என்று நிதின் முணுமுணுத்தவாறே, “இங்க எதுவும் கிடைக்காது சம்யு, கிளம்பலாமா?” என்றான்.

Advertisement

​”ம்ம்… சரி போலாம்,” என்றவள் ஒரு நிமிடம் நின்று, “அண்ணியோட தாத்தா ரூம்க்கு மட்டும் ஒரு தடவை போய் பார்த்துட்டு வருவோமா?” என்று கேட்க, நிதினும் சம்மதித்து அவளை வீரமாணிக்கத்தின் அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த அறையும் மற்ற இடங்களைப் போலவே தூசி படிந்து வெறிச்சோடிக்காணப்பட்டது.
அங்கிருந்த பழைய காலத்து மரச் சாமான்கள், அந்த வீட்டின் மௌனமான கதையைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன…

Advertisement

​”இங்க பாருங்களேன் நிதின், இந்த ரூம் மட்டும் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கு?” என்று சம்யு ரகசியக் குரலில் கேட்க, “ஏய்… ஆள் இல்லாத வீடு அப்படித்தான் இருக்கும், சீக்கிரம் பார்த்துட்டு வா,” என்று நிதின் அவளைத் துரிதப்படுத்தினான்.

​சம்யு அந்த அறையை சுற்றிலும் தன் பார்வையால் சுழற்றினாள், மெத்தையின் அருகில் இருந்த ஒரு சிறிய மேஜையின் மீது பழைய மூக்குக்கண்ணாடி ஒன்றும், ஒரு சிறிய செம்புத் தட்டும் அப்படியே இருந்தன, அவள் மெல்ல அந்த மேஜையின் ட்ராயர்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்த போது, அங்கே சில பழைய மருந்துச் சீட்டுகளும், சில கோயில் பிரசாதங்களும் மட்டுமே இருந்தன.

​ஏமாற்றத்துடன் அதை மூடியவள், மீண்டும் அந்த அறையைப் பார்வையால் ஒரு சுற்று சுற்ற, அவளது விழிகளில் அந்த ரகசியக் கேமரா தென்பட்டது, அதனை உற்றுப் பார்த்தவள், “நிதின்… அது என்ன?” என்று வினவிட, ​அவனும் அவள் சொன்ன இடத்தை கவனித்தவன், “என்ன இது?” என்று யோசித்தபடியே அதன் மேல் இருந்த தூசியை லேசாகத் தட்டிவிட்டு அதனை கையில் எடுத்த பிறகு தான் அது ஒரு சிறிய ரகசியக் கேமரா என்பது அவனுக்குத் தெரிந்தது…

Advertisement

​”இது கேமரா தானே?” என்று அவள் கேட்க, “ஆமா… ஆனா இது எப்படி இங்க வந்தது?” என்று  ஆச்சரியத்துடன் வினவியவன், “இதுல மெமரி கார்ட் இருக்கு!” என்று சொல்ல, ​இருவரும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டனர். அதில் ஏதோ ஒரு பெரிய உண்மை ஒளிந்திருக்கு என்பதை உணர்ந்தவர்கள், உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் காரினுள் ஏறி அமர்ந்தனர்…

நிதின் தனது லேப்டாப்பில் அந்த மெமரி கார்டை செருகிய போது, இருவரது இதயத் துடிப்பும் எகிறியது. “இதுல என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க நிதின்?” என்று சம்யு பதற்றத்துடன் கேட்க, “தெரியல சம்யு, ஒருவேளை தாத்தா பாதுகாப்புக்காக இதை வச்சிருப்பாரோ என்னவோ…” என்று சொல்லிக்கொண்டே கோப்புகளைத் திறந்தான் நிதின்.

​அதில் ஒரே ஒரு வீடியோ கோப்பு மட்டுமே இருந்தது. நிதின் அதை பிளே செய்ய, ​ஆரம்பத்தில் விஷ்வாவின் முகம் தான் தெரிந்தது, அதனை வைத்தே அந்த ரகசியக் கேமராவைப் பொருத்தியதே அவன் தான் என்பது அந்த கணம் இருவருக்குமே தெளிவாகப் புரிந்தது, அதன் பிறகு விஷ்வா அங்கிருந்து செல்வதும், வீரமாணிக்கம் அறைக்கு வந்து படுப்பதும், அவரது அன்றாடச் செயல்பாடுகளும் மிக எதார்த்தமாகப் பதிவாகியிருந்தன…

​வீடியோவைச் சற்று நகர்த்திப் பார்த்தபோது, மீண்டும் விஷ்வா அந்த அறைக்குள் நுழைந்திருந்தான், அவன் அலமாரியைத் திறந்து, லாக்கரின் பாஸ்வேர்டைப் போட்டுத் திருட்டுத்தனமாகப் பணத்தைப் பையினுள் திணிப்பதும், அதே நேரத்தில் எதிர்பாராத விதமாகத் தாத்தா அங்கு வருவதும் பதிவாகி இருந்தது.

​இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடக்க, அதன் பிறகு அவர்கள் கண்ட காட்சி இருவரையும் நிலைகுலைய வைத்தது. ஆம்… ஆத்திரமடைந்த விஷ்வா, தாத்தாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி, அவர் துடிக்கத் துடிக்க சாவதைக் கொடூரமாகப் படம்பிடித்திருந்தது அந்த கேமரா. சம்யுவோ பயத்தில் அதைப் பார்க்க முடியாமல், விம்மலோடு நிதினின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

​அதன் பிறகு, சத்தம் கேட்டு ரன்வீர் ஓடி வருவதும், துடித்துக் கொண்டிருந்த தாத்தாவைக் காப்பாற்ற அவர் கழுத்திலிருந்த கயிற்றை உருவ முயல்வதும் பதிவாகியிருந்தது. அந்த நேரத்தில் மிருதுளா சரியாக அங்கு வருவதைக் கண்ட விஷ்வா, அந்தப் பழியை ரன்வீர் பக்கம் திருப்பி விட்டதும் வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகி இருந்தது…

இப்படியொரு ஆதாரம் கிடைக்கும் என்று நிதின் எதிர்பார்க்கவே இல்லை, தன் நண்பன் ரன்வீரின் வாழ்க்கையைச் சிதைத்த அந்த பாவி விஷ்வாவின் முகத்திரை இவ்வளவு ஆதாரபூர்வமாக கிழியும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

​’செத்தடா விஷ்வா! இத்தனை நாள் நீ ஆடிய ஆட்டம் எல்லாம் இனிமே செல்லாது.’ என்று மனதுக்குள் வஞ்சினம் பூண்டவன், தன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்து, இவ்வளவு பெரிய உண்மையைக் கண்டறியக் காரணமாக இருந்த தன்னவளை இறுக அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பில் இருந்த அந்த நெகிழ்ச்சி, ரன்வீர் மீதான அவனது நட்பின் ஆழத்தையும், உண்மை ஜெயித்த அந்தத் திருப்தியையும் உணர்த்தியது….

“ஏன் விஷ்வா, எப்பப் பார்த்தாலும் அந்த போனையே பார்த்து பல்லைக் காட்டிட்டு இருப்பியா? இப்போல்லாம் நீ ஆபீஸுக்கும் சரியா வர்றது இல்லை, உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க?” என்று சுந்தரம் ஆதங்கத்துடன் கேட்டிட,.. ​”ப்ச்… புலம்பாதீங்கப்பா! இதுதான் என்ஜாய் பண்ணுற வயசு. கொஞ்ச நாள் என்னை விட்டுடுங்க,” என்று அலட்சியமாக சொன்ன விஷ்வாவோ போனில் ஒரு பெண்ணுடன் அத்துமீறி மெசேஜ் செய்வதில் மும்முரமாக இருந்தான்.

​தாத்தாவின் பணம் கைக்கு வந்ததிலிருந்து விஷ்வாவின் ஆட்டம் அதிகரித்திருந்தது, தினமும் மதுபான விடுதிக்குச் செல்வதும், பெண்களுடன் ஊர் சுற்றுவது என்று தன் இச்சை செயல்களில் மூழ்கிக் கிடந்ததால், அன்று தாத்தாவின் அறையில் தான் வைத்த அந்த ரகசியக் கேமராவைப் பற்றி சுத்தமாக மறந்தே போயிருந்தான்…

​”சரி, நீ ஆபீஸ்தான் வர மாட்டேங்கிற, நான் சொல்ற மெயிலையாவது செக் பண்ணலாம்ல?” என்று சுந்தரம் மீண்டும் சொல்ல, “ப்ளீஸ்பா, டோன்ட் டிஸ்டர்ப் மீ!” என்று சொன்ன மகனைப் பார்த்து நெற்றியில் அறைந்து கொண்டவர், “உன் லேப்டாப்பையாச்சும் கொடு, நான் சொன்ன முக்கியமான ஃபைல்ஸ் எல்லாம் அதுலதானே சேவ் பண்ணி வச்சிருக்க?” என்று கேட்டார்.

​”ஆமாப்பா, அதோ இருக்கு எடுத்துக்கோங்க,” என்று சொல்லிவிட்டு விஷ்வா மீண்டும் போனுக்குள் மூழ்க, சுந்தரம் சலிப்புடன் எழுந்து சென்று மடிக்கணினியை எடுத்து வந்து
பார்க்கத் தொடங்கியவர்,..
​”என்ன ஃபோல்டர்ல சேவ் பண்ணி இருக்க?” என்று கேட்க, “நீங்களே பாருங்கப்பா,” என்று எரிச்சலுடன் பதிலளித்தான் விஷ்வா.

சுந்தரமும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்த கணம் திடீரென ஒரு வீடியோ பிளே ஆனது. அதில் விஷ்வா, தாத்தா வீட்டு லாக்கர் பாஸ்வேர்டைத் திருட்டுத்தனமாகப் பதிவு செய்திருந்தது தெரிந்தது.

​”டேய்! இதை இன்னும் டெலீட் பண்ணாம தான் வச்சிருக்கியா? இது யார் கைக்காவது கிடைச்சா என்ன ஆகுறது?” என்று சுந்தரம் மகனை அதட்டிட, சலிப்புடன் போனை வைத்த விஷ்வா, “இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க? கொடுங்க, இப்போவே டெலீட் பண்ணுறேன்,” என்று கூறி அந்த வீடியோவை அழித்தான்…

​”இந்த மாதிரி வேற வீடியோ எதுவும் இல்லையே? இருந்தா இப்போவே அழிச்சிடு,” என்று சுந்தரம் எச்சரிக்க, “அதெல்லாம் இல்லப்பா,” என்று சொன்ன விஷ்வாவிற்கு அப்போதுதான் ஒரு அதிர்ச்சியான விஷயம் நினைவுக்கு வந்தது.

​அன்று பாஸ்வேர்ட் சரியாகப் பதிவாகவில்லை என்றால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கையாக, அவன் மீண்டும் கேமராவை வைத்துவிட்டு வந்ததை, அவன் எடுக்கவே இல்லை!

​”ஓ மை காட்!” என்று தலையில் கை வைத்தவனை கண்டு, ​”என்னடா ஆச்சு?” என்று சுந்தரம் பதற, “அப்பா… அன்னைக்குத் தாத்தா ரூம்ல மறுபடியும் கேமரா வச்சேன். ஆனா… நான் அதை எடுக்கவே மறந்துட்டேன்ப்பா!” என்று விஷ்வா திணறிக்கொண்டே சொல்ல, சுந்தரத்திற்கு இதைக் கேட்டதும் இதயம் நின்றுவிடும் போலானது.

​”என்னடா சொல்ற? மறுபடியும் எப்போ வச்ச?” என்று அவர் வினவ, “அது… அன்னைக்குத் தாத்தாவைக் கொன்னேன்ல… அன்னைக்குத் தான் வச்சேன்,” என்று அவன் யோசித்தபடியே சொல்ல, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டார் சுந்தரம்..

​”அப்பா, பயமா இருக்குப்பா! அந்த கேமராவை யாராவது எடுத்து இருப்பாங்களா?” என்று விஷ்வா நடுங்கிய குரலில் கேட்க, சுதாரித்துக் கொண்டு எழுந்த சுந்தரம், நிதானமாக யோசித்தபடி “யாராவது எடுத்து இருந்தா இந்நேரம் போலீஸ் வந்திருக்கும், அப்படி வராததால அது யார் கண்ணுலயும் படலைன்னு நினைக்கிறேன், வா, இப்போவே போய் அதை எடுத்துட்டு வந்துடலாம்!” என்று மகனை அவசரப்படுத்திட, அவனும் பதற்றத்துடன் அவரோடு புறப்பட்டான்,..

சரியாக இதே நேரத்தில்தான், அந்த வீட்டில் நிதினும் சம்யுவும் கேமராவைக் கண்டெடுத்து ஆதாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

​இதற்கிடையில், தன் கணவனும் மகனும் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டு அவசரமாக வெளியே செல்வதைக் கவனித்த சரஸ்வதி, இன்று எப்படியாவது உண்மையை மிருதுளாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி, அவளது வீட்டிற்குப் புறப்பட்டார்…

​தன் மகன் ஒரு கொலை செய்ததை கேட்டு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை அவரும் மறைக்கத்தான் நினைத்தார், மகனின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாதே என்ற தாயுள்ளம்தான் அதற்குக் காரணம். ஆனால், கையில் பணம் வந்ததும் விஷ்வா வழிதவறிப் போவதைப் பார்த்த அவருக்கு, அவன் இனி ஒருபோதும் திருந்தப்போவதில்லை என்பது புரிந்துவிட்டது, அவனாகத் திருந்த நினைத்தாலும், தன் கணவர் சுந்தரம் அவனை இந்த ஜென்மத்தில் திருந்த விடப்போவதில்லை என்பதையும் உணர்ந்தவர், ​அவன் செய்த பாவத்திற்குத் தண்டனை கிடைத்தாலாவது திருந்துகிறானா என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில், சரியான சமயத்திற்காகக் காத்திருந்தவர், இன்று துணிந்து மிருதுளாவைத் தேடி அவளது வீட்டிற்கே கிளம்பிவிட்டார். அவருக்கு நேரடியாகப் போலீஸிடம் சென்று சொல்லும் அளவிற்குத் தைரியம் இல்லை, அதனால்தான் அவருக்குத் தெரிந்த உண்மையை மிருதுளாவிடமாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!