Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 7

அத்தியாயம்: 7

சுருதி…



Advertisement

வேலைக்குச் சேர நேர்காணல் நடந்த போது கூட, அவள் இத்தனை பதற்றமாக இல்லை. ஆனால் இப்போது நடுக்கத்துடன், முதுகுத் தண்டு விடைக்க, இரு கைகளாலும் கால் முட்டியைப் பற்றியபடி, சோபாவில் திருதிருவென அமர்ந்திருந்தாள்.

ஆள் உயர இரும்பு கேட். அதில் தொங்கிய tolet பலகையைப் பார்த்து வந்தாள். சில அடிகள் நீளம் கொண்ட சிறிய தோட்டம். ஒரு பக்கம் வாகனங்கள் நிறுத்த புல் தரையாகவும், மற்றொரு பக்கம் அரலி, செம்பருத்து, ரோஜா போன்ற மலர்களைத் தரும் குட்டைச் செடிகளும் இருந்தன. வீடு சற்று சிறியது தான். தோட்டத்திற்கு என்று இடம் விடாமல் கட்டியிருந்தால் பெரிதாக இருந்திருக்கும் என்ற எண்ணம் வீட்டை அளவிட்ட போது சுருதிக்குத் தோன்றியது.

Advertisement

Advertisement

தோட்டத்தைக் கடந்தால் வராண்டா. வீடு வாடகைக்கு வேண்டும் என்று, வந்து பேசிய மூன்று நாளும் அங்கேயே வைத்து பேசி அனுப்பி விட்டார் அந்த வீட்டின் மூத்தக் குடியான ஜெயசுதா.

இன்று தான் உள்ளே பார்க்க அனுமதி கிடைத்தது. அழகிய கூடம், பல நினைவுகளைத் தாங்கிய புகைப்படங்களைச் சுமந்து கொண்டிருந்த சுவர். அதைப் பார்க்கும் போதே இதழில் சிறு புன்னகை. அந்தப் படங்கள் அனைத்தும் அதிதி, பத்ரி மற்றும் வேறொரு பெண்ணின் புகைப்படங்களுமாக இருந்தன. மூவரும் நிறைய அலுச்சாட்டியங்கள் செய்திருக்க வேண்டும். பார்த்ததும் சிரிப்பை வரவைக்கும் போஸ்களில் தான் புகைப்படங்கள் இருந்தன.

Advertisement

வீட்டின் அழகிலும் நேர்த்தியிலும் கவரப்பட்டவளின் கண்களுக்குச் சுவரின் மூளையில் இருந்த சீசிடீவி கேமராக்கள் தென்பட்டு, திக்கென்று உணர வைத்தது.

“வீட்டுக்கு வெளில கேமரா வச்சி பாத்திருக்கேன். இதென்ன வீட்டுக்குள்ளயும் கேமரா! எங்கேயோ இருந்திட்டு வீட்டில நடக்குறத கண்காணிக்கிறான்னா! இவங்க பையன் நிச்சயம் சைக்கோவாத் தான் இருப்பான்!” என்று யோசனைகள் சென்று கொண்டிருக்கும் போதே,

“எம்பையன் உங்கிட்ட பேசணும்னு சொன்னான்ம்மா. இரு வீடியோ கால் போடுறேன்.” என்று விட்டு சுதா உள்ளே செல்ல, இவளுக்குத் தான் இருப்புக் கொள்ளவில்லை. நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே ஒரு வித அசௌகரியத்தை உண்டாக்கியது. பேந்த பேந்த விழித்தபடி இருந்தவளின் இருப்பைத் தொலை தூரத்தில் இருந்த ஒருவன் சுவாரசியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.

tablet-ஐ எங்கே வைத்தேன் என்று மேஜையில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தவரின் மீது பார்வைப் படிந்தது.

முகம், சில பல சுருக்கங்களுடன் இருந்தாலும் ராஜ கலையைக் காட்டியது. துப்பைப் பூவாய் கேசம் அந்தப் பேரிளம் பெண்ணின் நரையைக் காட்டியது. சற்று கனத்த தேகம் தான். உடல் தளர்ந்து கைகள் நடுங்கிக் கொண்டிருப்பது மட்டுமல்ல தனக்குத் தானே புலம்பிக் கொண்டே இருந்தார். அது, வயோதிகத்தின் காரணமான வந்தது.

“இங்க தான் வச்சிருந்தேன்… எங்க போச்சின்னு தெரியல. இந்தப் பிள்ளை தான் எங்கயாது தூக்கிப்‌ போட்டிருக்கும். கொஞ்சங்கூட பொறுப்பே கிடையாது. வீடான வீட்டுல ஒரு பொருள் ஒரு இடத்துல இருக்கா? என்னை டென்ஷன் படுத்தணும்னே செய்றா.” என முணுமுணுத்துக் கொண்டே அவர் தேட,

சுருதி, “ம்மா… இங்க இருக்கு. பாருங்க.” என்று இடத்தைச் சுட்டிக் காட்டினாள். கண்ணுக்கு முன்னேயே வைத்துக் கொண்டு இத்தனை நேரம் தேடியதால் ஒரு அசட்டுப் புன்னகையுடன், வியர்வையை முந்தானையில் துடைத்துக் கொண்டு அமர்ந்தார்.

ஜெயசுதா… அறுபத்தி ஐந்தைக் கடந்த பேரிளம் பெண். கணவன் சீனிவாசன். சென்னையில் பெயர் சொல்லும் ஒரு பெரிய நிறுவனத்தின் வாரிசு. கிளைகளைப் பரப்ப வேண்டி மனைவி, மகள் பவானி, மகன் பத்ரி நாராயணனுடன் செங்கல்பட்டில் குடியேறி விட்டார். இங்கு சில வீடுகளும் சில நிலங்களும் அவருக்குச் சொந்தம். போதாததற்கு சொந்தமாக வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கும் கடையை நடத்தி வந்தார்.

எதற்கும் குறைவில்லாத, கவலைப்படாத கலகலப்பான குடும்பம் சீனிவாசனுடையது. அன்பே உருவாய் மகள், குறும்புடன் வளம் வரும் மகன், அனைத்தையும் அனுசரித்துக் கணவனைப் புரிந்து நடந்து கொள்ளும் மனைவி, மனைவிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் கணவன் என அந்தக் குடும்பம் தென்றல் காற்றை வேணு கானமாக்கும் மூங்கில் காடாகத் தான் இருந்தது.

யாரின் கண் பட்டதோ, மூங்கில் காடு, சிறு பொறி பற்றிக் கொண்டதால், தீக்கு இறையானது. முதல் பொறியாக அமைந்தது பவானியின் காதலும் திருமணமும். பிடிவாதமாக அவனைத் தான் கட்டுவேன் என்று வீட்டில் சண்டை போட்டு நடந்தது அவளின் திருமணம். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பம் அல்ல அது. ஆனாலும் எதிர்ப்பு வந்தது, மகள் தேர்வு செய்த பையனும் அவனின் குடும்பத்தாரும் சரியில்லை என்பதால். ஆனாலும் மகள் பிடிவாதத்திற்கு அசையத்தான் வேண்டியிருந்தது.

அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை சரியில்லை என்பதை திருமணமான சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டாள். இருந்த போதிலும் அதை முறித்துக் கொள்ள காதல் மனம் அனுமதிக்கவில்லை. அவன் வீட்டாருடன் அனுசரித்து வாழ்ந்தாள்.

தீயப் பழக்கங்களுக்கு அடிமையான ஜான், பல ஆண்டுகள் படுத்த படுக்கையில் கிடந்து, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட, பவானியும் தற்கொலை செய்து கொண்டாள்.

புத்திர சோகத்தால் இருந்தவர்களைப் பத்ரி சமாதானம் செய்து, குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கினான்.

அவனுக்கும் பவானியின் இழப்பு பெருந்துயரம் தான். ஜெயசுதாவைக் காட்டிலும் பவானி தான் அவனுக்கு நெருக்கம். ஜெயசுதாவால் உடல் பருமன் காரணமாக வேலை செய்வதில் சிக்கல் உண்டு. ஓடியாட அவரால் எந்த வயதிலும் முடியாது. பத்ரி செய்யும் சேட்டைகளைச் சமாளிக்க முடியாது அவர் தவிக்க, தமக்கை தாயாய் மாறிப் போனாள் அவனின் விடயத்தில்.

சோறூட்டுவது முதல் அவனின் படிப்பு வரை அவள் உடன் இருந்தாள். அவனுக்கென லட்சியத்தை வகுத்துக் கொடுத்ததும் அவள் தான். அந்தப் பாசம் தான் காதல் என்றவளுக்காகப் பரிந்து பேசி தாய் தந்தையின் சம்மதத்தை வாங்கித் தந்தது.

ஜானுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் பவானி இருந்த போது, அதிதிக்கு அவன் தான் எல்லாம். தாய், தந்தையாக தாய் மாமன் இருக்கிறான். பவானி இறந்த போது அதிதிக்கு வயது பதினொன்று.

சில காலம் சீராக நகர, நடந்தேறிய துக்கங்களில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த அடியாக சீனிவாசன் இறந்து போனார். ஜெயசுதா முதுமையிலும் தனிமையிலும் தவித்துப் போனார்.

பவானி இறப்பதற்கு முன்னரே பத்ரி கேப்டனா டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். சட்டெனப் பணியை விட்டு வந்து விட முடியாது அவனால்.

இப்பொழுது பாட்டி பேத்தி என்று இரு பெண்கள் மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர். அவனுக்குக் குடும்பத்தாருடன் இருக்க இயலாத சூழல். ஆனாலும் விடுப்பு கிடைக்கும் சமயமெல்லாம் வந்து விடுவான். தூரத்தில் இருந்தாலும் அந்த வீட்டில் சிறு எறும்பு அசைந்தாலும் அவனுக்குத் தெரியும்படி பார்த்துக் கொள்வான்.

ஜெயசுதாவிற்கு இயல்பிலேயே உடல் கோளாறுகள் பல உண்டு. குனிந்து நிமிரும் சமயமெல்லாம் தலை சுற்றல் வரும். அவருக்காகத் தான் அந்த சிசீடிவி கேமராக்களைப் பொருத்தியிருந்தான் பத்ரி.

வீட்டில் தனியாக இருந்த ஜெயசுதா, சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக, மயங்கிச் சரிந்துள்ளார். வீட்டு வேலைக்கு என காலை, மாலை வந்து செல்லும் பணியாள் மூலமாகத்தான் தகவல் அவனுக்குத் தெரிந்தது. அத்தோடு சுதா கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் சங்கிலியும் காணாது போயிருந்தது.

பணியாளைச் சந்தேகத்துடன் கேள்வி கேட்க இயலாத சூழல். சுதாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என்பதால் வீட்டில் கேமராக்களைப் பொறுத்தி அவரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறான்.

தன் குடும்பம் என்று வரும் கால் அவனுக்கு யாரின் மீதும் நம்பிக்கை எழாது. சொந்தங்கள் எல்லாம் சொத்தை ஆட்டையைப் போடும் நிறமாறிகளாக இருந்தனர்.

வீட்டின் மேல் பகுதியை வாடகைக்கு விடலாம் என்றார் சுதா. தன்னுடன் பேசிப் பழக ஆள் கிடைக்கும் என்று.

சீனிவாசன் அவென்யூவில் ஏற்கனவே வந்து குடியேறிய குடிகளால் அவனுக்குச் சில அனுபவங்கள் உண்டு.

வயதானவர் என்பதால் ஏமாற்றிவிடலாம் என்ற குள்ளநரி தத்துவத்துடனே வந்து சேர்ந்தனர். ஒன்றல்ல இரண்டல்ல வரும் ஒவ்வொரு குடியும் ஒவ்வொரு விதமாக அமைந்தது.

ஒரு சமயம், கணவன் மனைவி என்று இரண்டு பேர் வந்தார்கள். சில காலத்திலேயே அண்ணன் தம்பி என்று ஆண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போக, வீடு லாஜ்ஜாக மாற்றப்பட்டதை உணர்ந்து சண்டை போட்டு துரத்தி விட்டான்.

மற்றொரு குடி, பேங்கில் வேலை பார்க்கும் குடும்பத் தலைவனுடன் நான்கு பேர் அடங்கிய குடும்பம். ஆனால் இரண்டே மாதத்தில் ஊரெல்லாம் EMI யில் ஏகப்பட்ட பொருள்களை வாங்கி, பணம் எதுவும் கட்டாமல், பொருள்களை மட்டும் அள்ளிக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டுத் தப்பித்து விட்டது. கடன் கொடுத்தவர்கள் வீடு தேடிவந்து சுதாவிடம் பிரச்சனை செய்ய‍, அது காவல் நிலையம் வரை சென்றது வேறு விடயம்.

இது இப்படி இருக்க, வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்து மருமகள், மகன், மாமனார், மாமியார் என்று குடும்பமாய்ப் பார்த்து வீட்டை வாடகைக்கு விட, அவர்கள் வீட்டை, குழந்தையைச் சுகப் பிரசவம் பார்க்கிறேன் என்று மருத்துவரே இல்லாத மகப்பேறு நிலையமாக்கி விட்டனர்.

அவைகள் எல்லாம் வீட்டை விட்டு தூரம். இப்பொழுது வீட்டிலேயே, தன் தாய்க்குப் பக்கத்தில் வரப் போகும் குடி அது. நேரடியாக பேசி, தான் விசாரியாது யாருக்கும் வாடகைக்கு விடக் கூடாது என்று சுதாவிடம் திட்டவட்டமாகச் சொல்லி விட்டான்.

 பத்ரி, “வீடு உங்களுக்காக?”

சுருதி, “இல்ல… என்னோட சிஸ்டருக்கு.”

“சிஸ்டர்னா?”

“பெரியப்பா பொண்ணு. அக்கா.”

“உங்க கசின் என்ன பண்றாங்க?” என்க, அவள் அதற்கு பதில் சொல்லாது அவனைத்தான் கூர்ந்து பார்த்தாள்.

‘ஏன் டா! உன் வீட்ட வாடகைக்குத் தான்டா கேட்டேன். விலைக்குக் கேக்க வந்தது மாதிரி மூஞ்சிய வச்சிட்டு பேசுற?’ என்று உள்ளுக்கு ஓடிக் கொண்டிருந்தது.

“ஹலோ… மிஸ் சுருதிகா… சுருதிகா தான உங்க பேரு.” என்று அவளின் கருவிழிகளைத் திரைக்குக் கொண்டு வர வைத்தான்.

“ஆமாம் சார். சுருதிகா தான் எம்பேரு.”

“சொல்லுங்க சுருதி.”

“சாரி சார்… என்ன கேட்டிங்க?”

“உங்க கசின் ஃபேமிலி என்ன பண்றாங்க? எத்தனை பேர் இருக்காங்க? ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க? எங்க வேலை பாக்குறாங்க? இதுக்கு முன்னாடி எங்க இருந்தாங்க? இங்க என்ன காரணத்துனால வர்றீங்க?” என்று அடுக்கிக் கொண்டே போக,

“சார்…. கொஞ்சம் கேப் குடுங்க. பதில் சொல்றேன்.”

“ம்… சொல்லுங்க.”

“என்னோட சிஸ்டர் மதுரை இருக்கா. இங்க ARN ஸ்கூல்ல Office Admin-னா வேலை கிடைச்சிருக்கு.”

“அந்த ஸ்கூல்ல தான் எம்பேத்தி படிக்கிறா!” என்று இடை புகுந்தார் ஜெயசுதா.

பத்ரி‍, “மதுரைய விட்டுடுட்டு ஏன் இங்க வரணும்? அங்க எந்த ஸ்கூலும் இல்லயா?”

“அவளுக்கு ஹஸ்பெண்ட் கிடையாது சார். இறந்துட்டாரு.” எனும் போதே,

“உங்க அக்காவுக்கு என்ன வயசு இருக்கும்மா?” என்று பரிதாப்பட்டார் சுதா.

 “31 வயசு தாம்மா அவளுக்கு. பத்து வயசுல பெண் குழந்தை இருக்கு.” என்க, அவரின் முகத்தில் நிஜக் கவலையின் சாயல் தெரிந்தது. அவர் தன் மகளைப் பற்றி ஏதோ சொல்ல வாய் திறக்க,

“ஹஸ்பெண்ட் இறந்ததுக்கும் இங்க வர்றதுக்கு என்ன சம்மந்தம்?” என்றான் பத்ரி.

“அங்க ஊர்ல இருக்க முடியல சார். சொந்தக்காரங்க பேச்சு, பார்வை எல்லாத்தையும் அவளால சகிச்சுக்க முடியல. புது இடமா இருந்தா நல்லா இருக்கும்னு இந்த வேலைய கேட்டு வாங்கிருக்கா.”

“ஹஸ்பெண்ட் எப்ப இறந்து போனாரு?”

“நாலு மாசமாகப் போது சார். மச்சான் வீட்டுல இருக்குறவங்க கொஞ்சம் தகராறு பிடிச்சவனுங்க…” என்று ஜெயசுதாவின் பரிதாபப் பார்வைக்கு எரியூட்டினால், வீடு உறுதியாகிவிடும் என்று நினைத்துச் சொல்ல,

“பிரச்சனையா!! இங்க வந்து தகராறு பண்ணுவாங்களா?” என்று பத்ரி கேட்க,

“வந்தா நான் பாத்துக்கிறேன் டா.” என்று வீரமாகச் சொன்ன சுதாவை முறைத்தான் மகன்.

“உங்க வீரம் எனக்குத் தெரியும். வர்றவங்க போறவங்க கிட்ட காட்ட வேண்டாம்.” என்று அன்னையிடம் சொல்லி விட்டு,

“எங்களுக்கு இருக்குற இடம் தெரியாம அமைதியா இருக்குற ஆள்கள் தான் தேவை. வீட்டு முன்னாடி கூச்சல் போடுற மாதிரி, போலிஸ் வந்து பஞ்சாயத்து பண்ற மாதிரிலாம் இருந்தா! வேற இடம் பாத்துக்கங்க.” என்று கறாராக சொல்ல,

“ஐயோ! அதெல்லாம் எதுவும் நடக்காது சார். நான் உறுதியா சொல்றேன். யாரும் ரிதுவ தேடி வந்து சண்டை போட மாட்டாங்க. அவளும் யார்க்கிட்டயும்‌ சண்டைக்கி போக மாட்டா. ரொம்ப அமைதியான கேரக்டர்.”

“நீங்க கேரண்டி தர்றீங்களா?” என்றதும் எல்லா பக்கமும் தலையை உருட்ட,

“நீங்க என்ன வேலை பாக்குறீங்க?”

“GM ஹால்பிட்டல்ல ஹெட் நர்ஸ். நான் ஹாஸ்டல்ல தங்கிருக்கேன். பிள்ளைய வச்சிக்கிட்டு ஹாஸ்டல்ல தங்க முடியாது. அதான் தனி வீடு தேடுறோம்.” என்று அத்தனை உண்மையையும் கூறினாள். ஒரே ஒரு பொய்யை யாரும் அறியாமல் சொருகியிருக்கிறாள். அதைப் பிறர் கண்டறிய முடியாத வண்ணம் இருந்தது அவளின் பேச்சு.

“சோ… மூணு பேர்.!”

“அம்மா பொண்ணுன்னு ரெண்டு பேர் மட்டும் தான் சார். நான் அப்பப்ப வந்திட்டு போவேன்.”

“அதைத்தான் நான் சொன்னேன். மூணு பேர். பிக்ஸ் பண்ணிக்கிறேன். அதுக்கு மேல ஆளுங்க வந்து தங்கக் கூடாது. அட்வான்ஸ் ரெண்ட் எல்லாம் அம்மா சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன். தண்ணீக்குத் தனி பில். அது வாடகை கூட சேராது. வீட்ட சுத்தமா வச்சிக்கணும். மூணு மாசத்துக்கு ஒருக்க நான் வீட்டுக்குள்ள வந்து செக் பண்ணுவேன். இல்லீகலா எந்த அக்டிவிட்டியும் இருக்க கூடாது.”

“கண்டிப்பா இருக்காது சார். நீங்க தாராளமா இன்ஸ்பெக்ட் பண்ணலாம்.”

“குட்… வேறமாதிரி எதுவும் இருந்தா தயவு தாட்சணை பாக்காம வெளில அனுப்பிடுவேன். ஒரு வர்ஷத்துக்குள்ள வீட்ட காலி பண்ணா அட்வான்ஸ் கிடையாது. வர்ஷத்துக்கு ஒருக்க அக்ரிமெண்ட்ட ரென்யூ பண்ணணும். அப்ப வாடகை ஏறும். முன்னாடியே சொல்லிடுறேன். அப்றம் சொல்லலன்னு பிரச்சனை வந்திடக் கூடாது.” என்று பலபல நிபந்தனைகளைப் போட்டான். அனைத்திற்கும் சரி என்று தலையசைத்தாள்.

“உங்க சிஸ்டரோட ஆதார்கார்டு ஜெராக்ஸ் வேணும். அக்ரிமெண்ட் பேப்பர்ல நான் குடுக்குற கன்டென்ட்ட ப்ரிண்ட் பண்ணி, நீங்க, உங்க சிஸ்டர்ன்னு ரெண்டு பேரோட கையெழுத்து போட்டு அம்மாட்ட குடுத்திட்டு போங்க.” என்றவன், எப்பொழுது குடி வரப் போகின்றனர் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான். கடைசியாக,

“மிஸ் சுருதிகா… ஒரு அப்ளிகேஷன்.” என்று இழுக்க,

“சொல்லுங்க சார்.”

“நீங்க நர்ஸ். உங்க கசின்ன பாக்க எப்படியும் வருவீங்க. அப்ப அம்மாவுக்கு ப்ரஷர், சுகர் செக் பண்ணி எனக்கு ரிப்போர்ட் அனுப்ப முடியுமா? டெய்லி இல்ல. வீக் எண்ட் இல்லன்னா மன்த் எண்டுல கூட ஓகே தான். இதுக்காக உங்களுக்கு நான் தனியா பே பண்றேன்.” என்று கோரிக்கை வைத்தான்.

தினமும் இன்சுலின் போடவென நர்ஸ் ஒருவர் வருவார் தான். ஆனால் அவரின் மீது நம்பிக்கை இல்லாததால் இவளையும் பணிக்கிறான்.

அது தெரியாது, அவன் தாய் மீது வைத்திருந்த அக்கறையில் கனிந்து வந்த குரலில், சரியென்று சம்மதித்தாள்.

சரியாக இணைப்பைத் துண்டிக்கப் போகும் தரும், “சார்…” என்க, புருவம் சுருக்கி என்ன என்பது போல் பார்த்தான்.

“இந்தக் கண்காணிப்புக் கேமரா… இந்த வீட்டுக்கு மட்டும் தான? வாடகைக்கு விட்டிருக்குற வீட்டுலயும் இருக்குமா?” என்று தயங்கியபடி கேட்க, அவன் எதுவும் சொல்லாது, இணைப்பைத் துண்டித்தான்.

“உஃப்…” என்று நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள், இத்தனை ஸ்ட்ரிட்டாக பேசும் இவனுக்கு, ரிது, கணவனை விவாகரத்து செய்தவள் என்ற உண்மை தெரிந்தால் என்னாகும்? என்று அப்போதைக்கு யோசிக்கவில்லை.

ரிதன்யா சொல்லும் போதே, ‘ பாதுகாப்பான வீடு வேண்டும். எவ்வித சச்சரவுகளும் தொந்தரவுகளும் இருக்கக் கூடாது.’ என்று அழுத்தமாகத் திரும்பத் திரும்பக் கூறியிருந்தாள். அவளிடம் சென்று, ‘நீ விவாகரத்தானவள் என்பதை மறைத்து தான் வீடு பார்த்திருக்கிறேன்.’ என்றால் தொலைத்து விடுவாள்.

ஆதலால் அதை அவளிடமும் மறைத்து விட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள் ஜெயசுதாவிடம் பேசி விட்டு, அவர் கொடுத்த சாத்துக்குடி சாறை அருந்தி விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

“Mission completed” என்று ரிதன்யாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பிய வைத்தாள்.

அதை வாசித்துப் பார்த்தவள், கட்டிலில் படுத்துக் கொண்டு, கால்களை ஆட்டியபடி, டிவி பார்த்துக் கொண்டிருந்த, மகளின் முன் வந்தமர்ந்தாள். சிறிய கின்னத்தில் கழுவிய திராட்சைக் கொத்துக்களைக் கொண்டு வந்து வைத்தவள், மகளின் தலையை ஆதுரமாகத் தடவி,

“பாப்பு… நாம இந்த ஊர விட்டு வேற ஊருக்குப் போகலாமா?” என்று கருத்துக் கேட்டாள்.

எந்த ஒரு விடயமாக இருந்தாலும் மகளின் கருத்து கேட்காது எதையும் அவள் செய்தது இல்லை. முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவிற்கான சாதக பாதகங்களை ஆராய்ந்து, ஏற்றுக் கொள்ளும் திறனும் வேண்டும் என்று நினைத்தாள்.

“ஓ…. போலாமே… எங்க போறோம்?” என்று கேட்டவள், வாயில் கருந்திராட்சையைப் பிட்டுப் போட்டுக் கொண்டாள்.

“ம்… நல்ல ஸ்கூல்ல பாப்பாக்கு இடம் கிடைச்சிருக்கு. நமக்கு வீடும் கிடைச்சிருக்கு.”

“அதெல்லாம் எங்கம்மா?”

“சென்னை பக்கம்.”

“அவ்ளோ தூரமா?” என்று கேட்க வந்தைக் கேட்காது விட்டாள் தாயின் முகம் பார்த்தாள்.

“அங்க போய்ட்டா இனி ஆச்சி, தாத்தா, மாமான்னு யாரும் உங்களத் திட்ட மாட்டாங்க தான.” என்க, தாய்க்கு நெஞ்சடைத்தது.

“ம்… மாட்டாங்க.” என்றாள் கண்ணீருடன்.

“அப்பா… நம்மல பாக்குறேன்னு சொல்லி வீட்டுக்கு வர மாட்டாரு தான.” என்க, கண்ணீர் கன்னம் தவண்டு ஓடியது ரிதன்யாவிற்கு.

இந்தச் சின்ன வயதில் இவளுக்கு என்ன புரியும். கவலைகள் இன்றி சந்தோஷமாகச் சிறகடித்துப் பறக்க வேண்டிய வயதில், திகிலோடும் கலக்கத்துடனும் இருக்கும் மகளைப் பார்த்து வருந்தியது தாய் மனம்.

“ஆமாம் பாப்பு… இனி யார் தொல்லையும் இருக்காது. நமக்குன்னு ஒரு புது வாழ்க்கை. ஆனா புது இடத்துல உனக்குப் பழக கொஞ்ச நாள் பிடிக்கும். சமாளிச்சி நின்னா… நம்மால சர்வேவ் பண்ண முடியும்.” என்று மகளின் நெற்றி முட்டிச் சொன்னாள்.

“ஒன்னு மட்டும் உறுதி பாப்பா. எங்க இருந்தாலும் நம்ம சந்தோஷம் நம்மக்கிட்ட தான் இருக்கும்.”

“யாராலையும் அதைக் களவாண்டுட்டு போக முடியாது.” என்று சொல்லி தாயை அணைத்துக் கொண்டாள் மகள்.

 

கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!