Skip to content
Post Views: 205

கண்ணாமூச்சி – 1
சென்னை மாநகரமே உறக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த அந்த இரவு வேளையில், அடையாறின் ஒரு பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்பின் நாற்பதாவது மாடியில் இருந்த அந்த ‘பென்ட்ஹவுஸ்’ மட்டும் விழித்திருந்தது. அது வெறும் வீடு அல்ல; நவீனக் கலையும், அசுரத்தனமான செல்வமும் கைகோர்த்த ஒரு பதினைந்தாயிரம் சதுர அடி அரண்மனை.
அந்த வீட்டின் உட்புறம் ஒரு கலைக்கூடத்தைப் போலக் காட்சியளித்தது. காலடியில் குளுமையான இத்தாலிய மார்பிள் கற்கள், ஆங்காங்கே கால்கள் புதைந்து போகுமளவுக்கு மிருதுவான கார்ப்பெட்கள். சுவரெங்கும் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்கள், நவீன வேலைப்பாடுகள் கொண்ட மரச்சிற்பங்கள், தானியங்கித் தொழில்நுட்பத்தில் இயங்கும் விளக்குகள் என ஆடம்பரத்தின் உச்சம் அது.
Advertisement
தனது பிரம்மாண்டமான பால்கனியில் வெற்றிடத்தை வெறித்தபடி நின்றிருந்தான் அவன். அங்கிருந்து பார்த்தால் சென்னை மாநகரமே ஒரு சிறிய பொம்மைத் தொகுப்பைப் போலக் தெரிந்தது. தொலைவில் கருநீல நிறத்தில் தெரிந்த, அலைகள் ஆர்ப்பரிக்கும் வங்காள விரிகுடாவும், அதிலிருந்து மெதுவாக உதிக்கும் முழுநிலவும், இதமாக வீசிய குளிர்ந்த காற்றும் கூட லாவாவாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் அவனது மனதின் கொதிப்பைத் தணிக்க முடியவில்லை.
அவன் – விஸ்வநாத். இருபத்தியெட்டு வயதிலேயே வெற்றியின் சிகரம் தொட்ட இளம் நடிகன், உள்ளங்கவர் நாயகன். மயக்கும் கம்பீரமும், பக்கத்து வீட்டுப் பையன் போன்ற எதார்த்தமும் கலந்த ஒரு அபூர்வக் கலவை. இவனது துடிப்பான நடிப்பும், மயக்கும் புன்னகையும், ஸ்டைலான மேனரிசங்களும் இன்று தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் மூலை முடுக்கெங்கும் உள்ள இளம்பெண்களின் கனவு நாயகனாக இவனை மாற்றியுள்ளது. பார்த்தாலே உயிர்விடும் லட்சக்கணக்கான பெண் ரசிகைகளைக் கொண்ட மாபெரும் நட்சத்திரம்.
ஆமாம், விஸ்வநாத் — அவன் ஒரு விபத்தல்ல, திட்டமிட்ட தீர்க்கமான வெற்றி அவன். ஒரு சராசரி தமிழ் குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி முடித்தவன். அவனது வசீகரம் வெறும் மேக்கப்பினால் வந்தது அல்ல; அது அவன் மரபணுவிலேயே ஊறியது. கிரேக்கக் கடவுள்களின் சிலையைப் போல, செதுக்கிய கூர்மையான நாசி, அகன்ற தோள்கள், உடற்பயிசியால் பண்பட்ட உடல்வாகு, ஆறடி உயரம். எவரையும் கட்டிப்போடும் உருகிய சாக்லேட்டைப் போன்ற நிறமுடைய கண்கள். அந்தக் கண்கள் ஒருமுறை கேமராவைப் பார்த்தால், திரையரங்கில் இருக்கும் இளம்பெண்களின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தும்.
Advertisement
ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளில் அவனது வேகம் மின்னல் போன்றது; ஆனால் அடுத்த காட்சியில் அவன் ஒரு காதல் வசனம் பேசினால், அந்த சாக்லேட் பார்வையில் உருகிப்போகாத பெண்களே இல்லை. திரையில் அவன் ஒரு புன்னகை சிந்தினால் திரையரங்கமே உருகும்.
Advertisement
“விஸ்வநாத் சிரிச்சா போதும், கதையே தேவையில்லை” என்பதுதான் விநியோகஸ்தர்களின் தாரக மந்திரம். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டின் சுவற்றிலும், இளம்பெண்களின் மொபைல் திரைகளிலும் அவனது பிம்பமே ஆக்கிரமித்திருந்தது.
ஆண் ரசிகர்களுக்கும் குறைவில்லை, அவனுக்கு. அவனது ஹேர் ஸ்டைல், உடற்கட்டு, உடை அலங்காரம், நடை உடை பாவனை அனைத்தையும் ஆதர்சமாகக் கொண்டு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அவனைப் பின்பற்றினர். அவனுடைய உடற்பயிற்சி ஒழுக்கமும், உணவு முறையும் அவர்களின் மத்தியில் பேசுபொருளாகி இருந்தது.
விஸ்வநாத்தின் கால்ஷீட்டிற்காகத் தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர். அவனது கடைசி மூன்று பான்-இந்தியா படங்கள் ‘ஆயிரம் கோடி’ வசூலைத் தாண்டிச் சாதனை படைத்திருந்தன. “விஸ்வநாத் திரையில் தோன்றினால் வசூல் மழை நிச்சயம்” என்பதுதான் கோலிவுட்டின் எழுதப்படாத விதி. ஒரு கூல்டிரிங்க் விளம்பரத்தில் அவன் பத்து வினாடிகள் வந்து போவதற்குப் பல கோடிகள் கொட்டப்பட்டன. சர்வதேச பிராண்டுகள் அவனது கால்ஷீட்டிற்காக ஒன்றையொன்று முட்டி மோதிக்கொண்டிருந்தன. உலகின் அழகான ஆண்களின் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் ஆண்மகன், அழகன் நம் விஷ்வா.
Advertisement
கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருந்தாலும், தனது சொந்த வீட்டிலும் அந்நியமாகவே உணர்ந்தான். அந்தப் பெரிய கண்ணாடிச் சுவர்களில் எதிரொலித்த அவனது நிழல் கூட அவனுக்கு உண்மையானதாகத் தெரியவில்லை.
அவனுக்கு அந்தப் புகழும், இந்த ஆடம்பரமான தனிமையும் ஒரு ‘தங்கக் கூண்டு’ போலத்தான் தோன்றியது. வெளியே தெரியாத ஒரு முகமூடியைச் சுமந்துகொண்டு, போலிப் புன்னகையைச் சிந்தி, கேமராக்களுக்கு முன்னால் இப்படி வாழ்வதே அவனுக்கு ஒரு பெரும் சுமையாகத் தெரிந்தது.
அவன் எதிரில் இருந்த பிரம்மாண்டமான கண்ணாடிச் சுவற்றில் தெரிந்த தன் பிம்பத்தையே வெறித்துப் பார்த்தான். “இங்கே யாரும் விஸ்வநாத்தை நேசிக்கவில்லை; விஷ்வா என்கிற பிராண்டையும், அவனோட புகழையும், பணத்தையும்தான் நேசிக்கிறார்கள்,” என்று அவன் மனம் கசப்போடு முணுமுணுத்தது.
“அமெரிக்காவில் நான் வெறும் விஷ்வாவாக இருந்தேன். அங்கே என் நிறமோ, அழகோ ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை அது, ஆனால் இப்போது… இங்கே… இந்த நட்சத்திர அந்தஸ்து என்னை ஒரு காட்சிப் பொருளாக, வெறும் இயந்திரமாக மாற்றிவிட்டது,” என்று நினைத்த அவனது எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன. அவன் ஒரு சாதாரண மேல் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக, தன் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த நாட்களை எண்ணியவனுக்கு ஏக்கம் பெருமூச்சாய் வெளிப்பட்டது. இன்று கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் திரும்பி வராது. ஏதோ ஒரு ஆர்வத்திற்காக ஒரு விளம்பரத்தில் நடிக்க அவன் முடிவெடுத்த அந்தத் தருணத்தை இன்றும் நொந்துகொண்டான் அந்த மின்னும் தாரகை.
மெதுவாகத் திரும்பி தன்னைச் சுற்றிப் பார்த்தான், விஷ்வா. அந்த வீடு அவனது ஸ்டேட்டஸ் சிம்பல். அவனுடைய வெற்றியையும் புகழையும் பறைசாற்றும் ஒரு கேன்வாஸ். பல கோடிகளைச் செலவிட்டு உருவாக்கப்பட்ட அந்த பிரம்மாண்டத்தில் அவன் தனியொருவனாகவே வாழ்கிறான், பெரும்பாலான சமயங்களில் ஷூட்டிங், அவுட்டோர் என்று அவன் வாழ்க்கை பயணங்களில் கழிந்தாலும், தனக்கான ஒரு தனிமையை அவன் தேடும்போது, அவன் அவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போது விஸ்வநாத் நாடும் ஒரு புகலிடம் இந்த வீடு.
நடிப்பு அவனுக்கு ரொம்பப் பிடிக்கும், ஒரு நிர்பந்தமாக இல்லாமல், அவன் விரும்பிச் செய்யும் வேலை அது. ஆனால் அதனுடன் இணைந்து வந்த இந்த அபரிமிதமான புகழும், அவனை அல்லாமல் அவன் ஏற்கும் பாத்திரங்களின் பிம்பத்தில் லயித்து, நிஜ விஸ்வநாத்தை மறந்துவிட்ட இந்த உலகமும் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பொய்யான உலகின் பேரிரைச்சலில் இருந்து தப்பித்து வந்து இந்த வீட்டில், இதன் தனிமையில், அமைதியில் ஒளிந்துகொள்வது இப்போதெல்லாம் பழக்கமாகிவிட்டது அவனுக்கு. அப்படிப்பட்ட ஓர் இரவுதான் இன்றும்.
அடுத்த வாரம், ஒரு பிரம்மாண்டமான காதல் காவியத்தின் படப்பிடிப்பிற்காக ஐஸ்லாந்தின் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளுக்கு அவன் ஒரு மாதம் பயணமாகச் செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவனுக்காக ஏழு நட்சத்திர ஹோட்டலும், நூற்றுக்கணக்கான பாதுகாவலர்களும், அவனது கண்ணசைவில் காலடியில் உலகத்தையே கொண்டு வந்து அர்பணிக்கும் பலரும் காத்திருந்தனர். ஆனால், விஸ்வநாத்தின் மனமோ ஐஸ்லாந்தின் பனிமலைகளை விடக் குளிர்ந்து போயிருந்தது.
“லைட்ஸ்” என்றான் மென்மையாக, மனதில் ஊடுருவியிருந்த அந்தக் குளிரை விளக்குகளின் வெளிச்சம் விரட்டிவிடுமோ என்ற எதிர்பார்ப்பில். அவனது கட்டளைக்குக் கட்டுப்பட்டு அந்த வீட்டின் ஆட்டோமேட்டட் சிஸ்டம் அந்த அறையின் விளக்குகளை ஒளிர விட்டது. அவனுக்குப் பிடித்த மாதிரியே, அப்போதைய அவனுடைய மனநிலைக்குத் தகுந்தது போலவே, மென்மையான இதமான வெளிச்சம், அறையெங்கும் பரவியது.
ஆனால் அந்த ஒளியும் கண்களை உறுத்துவது போலிருக்க, “ம்ப்ச், லைட்ஸ் ஆஃப், ப்ளே மியூசிக்” என்றுவிட்டு, அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து தலையைச் சாய்த்து, கண்களை மூடிக் கொண்டான். “இளமையெனும் பூங்காற்று…” இதமான இளையராஜா இசை அவனை வருடிச் சென்றது. அலைபாயும் மனம் அமைதியை நோக்கிப் பயணிக்கத் தொடங்க…
அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு கதவின் ‘பயோமெட்ரிக்’ லாக் சத்தமிட்டது. உள்ளே நுழைந்தான் பிரவீன், விஸ்வநாத்தின் ஆத்ம நண்பன். அமெரிக்காவில் விஷ்வாவுடன் இணைந்து படித்த கணினி அறிவியல் மேதை. இன்று ஒரு புகழ்பெற்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் கணினி அறிவியல் விஞ்ஞானி, விஸ்வநாத்தின் உண்மையான முகத்தை, வெளிப்படையாக, எந்த விதமான முகமூடியும் இல்லாத விஸ்வநாத்தைப் பார்க்கத் தகுதியுள்ள ஒரே மனிதன், இந்தப் பிரவீன் மட்டும்தான்.
பிரவீனுக்கு விஸ்வநாத் ஒரு ‘நடிகன்’ அல்ல, வெறும் ‘விஷ்வா’ தான்.
“என்னடா மச்சான்… இன்னும் இந்தப் பழைய இளையராஜா பாட்டைக் கேட்டுட்டு சோகமாதான் உட்கார்ந்திருக்கியா?” பிரவீனின் குரலில் தெரிந்த அந்த உரிமையே விஸ்வநாத்தின் மனதிற்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது.
“வாடா பிரவீன்! எப்போ வந்தே?” விஸ்வநாத் உற்சாகமாக எழுந்து அவனை அணைத்துக் கொண்டான்.
“இப்பதான் லேண்ட் ஆனேன். நேரா உன்னை பார்க்க வந்துட்டேன், உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது, இந்த ‘கிளாஸ் ஹவுஸ்’ உன்னை மூச்சு முட்ட வைக்குதுன்னு. சுத்தி இருக்குற எல்லாரும் ‘சார் சார்’னு நடிக்குறது உனக்கு போரடிச்சிருச்சு, இல்லையா? அதான் உன்னைக் காப்பாத்த வந்துட்டேன்,” என்றபடி சோபாவில் அமர்ந்தான் பிரவீன்.
விஸ்வநாத் பெருமூச்சு விட்டான். “ஆமாண்டா… ஒவ்வொருத்தனோட முகமூடியையும் கிழிக்கணும்னு வெறியாகுது. ஆனா முடியலையே… என்ன போலியான உலகம்டா… ஒரு நிமிஷம் கூட உண்மையா இருக்க முடியல.” அங்கலாய்த்துக் கொண்டான்.
ஆருயிர் நண்பனைப் பார்த்ததே அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் அவனுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் நாளை மதியமே அவன் அவுட்டோருக்காகக் கிளம்ப வேண்டும்.
“என்னடா, ஐஸ்லாந்து போகப் பொட்டி படுக்கை எல்லாம் ரெடியா? அங்கேயும் ஒரு நூறு கேமரா உன் சாக்லேட் கண்ணுல ஜூம் பண்ணி உலகத்தை மயக்க காத்துக்கிட்டு இருக்குமே,” என்றான் பிரவீன் கேலியாக.
விஸ்வநாத் கசப்புடன் சிரித்தான். “ம்ப்ச். ஆமா… அங்கேயும் ஒரு மாசம் ‘சூப்பர் ஸ்டார்’ விஸ்வநாத்தா நடிக்கணும். சலிப்பா இருக்குடா… எல்லாம் போதும்னு விட்டுட்டு எங்கயாவது கண்காணாம போயிடணும்னு தோணிக்கிட்டே இருக்கு… எனக்குப் புகழ்ச்சி வேணாம்டா, ஒரு துளி நிஜமான அன்பு வேணும். நான் விஸ்வநாத்தா இல்லாம, வெறும் விஷ்வாவா இருந்தா யாராவது என்னை நேசிப்பாங்களா?” ஏக்கமாகக் கேட்டான் விஷ்வா.
பிரவீன் ஒரு நிமிடம் அமைதியாக அவனை ஏறிட்டான், பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, “சரிடா, நான் உனக்கு ஒரு ஆஃபர் குடுக்கிறேன், உன்னை வேற ஒரு உலகத்துக்கு கூட்டிட்டுப் போறேன், நீ சொல்ற மாதிரி விஸ்வநாததா இல்லாம, வெறும் விஷ்வாவா வாழ ஒரு சான்ஸ் குடுக்குறேன், என்ன சொல்ற?” என்றான்.
“என்னடா ஆஃபர் கீஃபர்னு என்னென்னமோ சொல்ற? உன்னோட ஆஃபர் எல்லாமே வில்லங்கமாத்தான் இருக்கும், உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை, உன்னோட எந்த எக்ஸ்பெரிமென்ட்டுக்கும் நான் சோதனை எலியா ஆக மாட்டேன், அதனால நீ குடுக்குற எந்த சான்ஸும் வேணாம், ஆளை விடு,” என்றான் விஸ்வநாத்.
“என்ன விஷ்வா, நான் போய் அப்படில்லாம் பண்ணுவனா? அதுவும் நீ என்னோட உயிர் நண்பன்டா… நீ விஷயத்தைக் கேளு முதல்ல, அப்பறம் சொல்லு உன் பதிலை” என்று விஷ்வாவின் தோள் தட்டியவன் தொடர்ந்தான்…
”எங்க லேப்ல நாங்க ஒரு புது விதமான AI ப்ராஜெக்ட்டை உருவாக்கியிருக்கோம். இதோட பேரு SoulMate (சோல்மேட்). இது ஒரு விர்ச்சுவல் பாய்ஃபிரண்ட்/கேர்ள்ஃபிரண்ட் ஆப். ஆனா இது மத்த ஆப் மாதிரி கிடையாது. ஒருத்தரோட ஆழ்மனசுல இருக்குற விருப்பங்களையும், கற்பனைகளையும் புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு ஏத்த ஒரு துணையை அதுவே சிமுலேட் பண்ணும்.” தனது புதிய செயலியைப் பற்றி விளக்கினான் பிரவீன்.
விஸ்வநாத் குழப்பத்துடன் நண்பனையே பார்த்துக் கொண்டிருந்தான். “ஹ்ம்ம், சொல்லி முடி” என்பதுபோல் இருந்தது அவன் பார்வை.
“இப்ப அதுக்கு எனக்கு ஒரு பீட்டா டெஸ்டர் வேணும். ஒரு மாச டெஸ்டிங் பிளான் பண்ணியிருக்கேன். இதுக்கு நீ ஒகே சொன்னா, நீ இப்போ ஐஸ்லாந்துல ஷூட்டிங்ல இருக்குற ஒரு மாசத்துல, நீ விஸ்வநாத்தா, ஒரு சூப்பர் ஸ்டாரா மட்டும் இல்லாம, இந்த ஆப்ல ஒரு சாதாரண மனுஷனா, வெறும் விஷ்வாவா ஒரு விர்ச்சுவல் துணையோட பழகிப் பார்க்கலாம். உனக்கு எப்படி வேணுமோ, நீ எந்த மாதிரியான ஒரு துணையை எதிர்பார்க்குறியோ அந்த மாதிரியான ஒரு விர்ச்சுவல் துணையை நீயே உருவாக்கிக்கலாம். அந்தத் துணையோட நீ மனசு விட்டுப் பேசலாம், பழகலாம், உன்னோட கோபதாபங்கள், ஆசாபாசங்கள், சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம். நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்டு. இது வெறும் பீட்டா வெர்ஷன் தான், அதனால இதுல இருந்து டேட்டா எதுவும் சர்வர்ல கலெக்ட் ஆகாது. உன்னோட டேட்டாவை நான் மட்டும்தான் பார்ப்பேன், டெஸ்ட் பண்ணுவேன், அதுவும் நீ அனுபவிக்குற நிகழ்வுகள், காட்சிகள் இதையெல்லாம் உன்னைத் தவிர யாராலையும் பாக்க முடியாது, அதுக்கு பின்னால இருக்குற புள்ளிவிவரங்களை மட்டும்தான் பார்க்க முடியும், உன்னோட பிரைவசியும் கெடாது. கிசுகிசு, வதந்தின்னு ஒன்னும் பரவாது.” என்றான் பிரவீன்.
சுவாரஸ்யம் கூடியது விஸ்வநாத்துக்கு. ‘மேலே சொல்’ என்பது போல பிரவீனை நோக்கித் திரும்பி உட்கார்ந்துகொண்டான்.
“உன் மனசுல இருக்குற எண்ணங்களை நீ பயமில்லாம ஷேர் பண்ணிக்கலாம். ஏன்னா எல்லாமே விர்ச்சுவல், நிஜ மனுஷங்க கிடையாது. இது உனக்கு ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கும். விர்ச்சுவல் கேர்ள்ஃபிரண்டுங்கறதால, உனக்கு வேற எந்தப் பிரச்சனையும் வராது. எந்த ரெக்கார்டும் இருக்காது. நீ தேடுற அந்த உண்மையான அன்பை நீயே உருவாக்கிக்க ஒரு நல்ல வாய்ப்பாவும் இது இருக்கும். என்ன சொல்றே?” என்றான் பிரவீன்.
விஸ்வநாத்தின் கண்களில் ஒரு புதிய வெளிச்சம் தெரிந்தது. ஐஸ்லாந்தின் பனிப்பாறைகளுக்கு நடுவே, டிஜிட்டல் திரையின் பின்னால் ஒளிந்துகொண்டு ஒரு உண்மையான உறவைத் தேடும் அந்தப் பயணம் அவனுக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றியது.
விஷ்வாவின் கண்களில் தெரிந்த ஆர்வம், பிரவீனை இன்னும் உற்சாகப்படுத்தியது. அதே உற்சாகத்துடன் தனது பெட்டியத் திறந்து அதிலிருந்து ஒரு கருப்பு நிற உயர்ரக அட்டைப் பெட்டியை வெளியில் எடுத்தான்.
பிரிமியம் தோற்றத்தில் இருந்த அந்தப் பெட்டியில் தங்க நிறத்தில் SoulMate என்று பொறிக்கப்பட்டிருந்தது.
அதன் உள்ளே ஒரு மெல்லிய, ஸ்போர்ட்ஸ் ஹெட்பேண்ட் போன்ற ஒரு சாதனம் இருந்தது. அது கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டு, உட்புறம் நுணுக்கமான சென்சார்களைக் கொண்டிருந்தது.
“இது என்னடா? ஜிம்முக்கு போடுற ஹெட்பேண்ட் மாதிரி இருக்கு?” விஸ்வநாத் அதைக் கையில் எடுத்துப் பார்த்தான். இறகு போல லேசாக இருந்தது அது.
“இது வெறும் ஹெட்பேண்ட் கிடையாது விஷ்வா. இது நியூரல்-லிங்க் ஹெட்பேண்ட். மெமரி மேப்பிங் அடிப்படைல இது வேலை செய்யும். இதை உன் நெத்தில போட்டுக்கிட்டா, இது உன்னோட மூளை அலைகளை ரீட் பண்ணும். உன்னோட ஆழ்மனசுல இருக்குற எண்ணங்களை ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி உலகமா மாத்தும்” என்றான் பிரவீன்.
விஸ்வநாத் வியப்புடன் அதைப் பார்த்தான்.
“இந்த ஹெட்பேண்ட்டைப் போட்டுக்கிட்டு நீ ‘SoulMate’ ஆப்குள்ள போனா, அங்கே நீ என்னவா இருக்க விரும்புறியோ அப்படியே இருக்கலாம். உனக்குப் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் செட் பண்ணிக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன்… இது ரொம்ப அட்வான்ஸ்டு டெக்னாலஜி. நீ அங்கே பார்க்குற கேர்ள்ஃபிரண்டு, ஒரு சாதாரண AI பிம்பமா மட்டும் இருக்க மாட்டா, அவ உன்னோட உணர்ச்சிகளுக்கு ஏத்த மாதிரி ரியாக்ட் பண்ணுவா. அவ சிரிக்கிறது, பேசுறது ஏன் அவளோட சுவாசத்தைக் கூட உன்னால உணர முடியும். உன்னோட பழகப் பழக அவ உன்னைப் புரிஞ்சுகிட்டு அவளும் உனக்கேத்த மாதிரி மாறிக்கிட்டே வருவா.” என்று கூறிய பிரவீன், அந்த ஹெட் பேண்டை விஸ்வநாத்தின் தலையில் பொருத்தினான். அது மிகச்சரியாகப் பொருந்தியது.
“விஷ்வா, ஐஸ்லாந்துல நீ தனியா இருக்கும்போது, இந்த ஹெட்பேண்டை போட்டுக்கோ. நீ தேடுற அந்த ‘உண்மையான அன்பு’ இந்த டிஜிட்டல் உலகத்துல உனக்குக் கிடைக்குதான்னு பார்ப்போம். ஆனா ஜாக்கிரதை… இது நிஜ உலகத்தை விட ரொம்ப அழகா இருக்கும். தத்ரூபமா இருக்கும்… ஒரு கட்டத்துல எது நிஜம், எது நிழல்னு உனக்கே குழப்பம் வரலாம், மனசு திடமா இல்லைன்னா ஒரு போதை மாதிரி இதுக்கு அடிக்ட் ஆயிடுறதுக்கும் சான்ஸ் இருக்கு, அதனால இதை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும்தான் யூஸ் பண்ணனும், நான் அப்படித்தான் இதை செட் பண்ணப்போறேன்,” என்று பிரவீன் எச்சரித்தான்.
“சரி” என்பதுபோல் தலையாட்டிய விஸ்வநாத், “ஊருக்குப் போறதுக்கு முன்னாடியே ஒரு சின்ன டெமோ பார்த்துடலாமாடா?” அவன் குரலில் ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆர்வம் தெரிந்தது.
“ஹ்ம்ம், பார்த்துடலாமே, உன் ஃபோனைக் குடு. நான் இந்த ஆப் இன்ஸ்டால் பண்ணி எல்லாம் செட்-அப் பண்ணி குடுக்கிறேன்.” என்று ப்ரவீன் கையை நீட்டினான்.
இதைக் கேட்ட விஷ்வாவிற்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. உடனே பார்க்க முடியாதா? என்ற அவசரம் அவனிடம் வந்து தொற்றிக் கொண்டது, சுனக்கமாகவே தனது மொபைலை அவனிடம் கொடுத்தான்.
அவனுடைய அவசரத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது பிரவீனுக்கு, “பொறுமை, பொறுமை நண்பா, பத்து நிமிஷம், சில கேள்விகளுக்கு பதில் சொல்லு, அப்பறம் உன்னோட கேர்ள்ஃபிரண்டையும் உன்னையும் யாராலையுமே பிரிக்க முடியாது, டோன்ட் வொர்ரி” என்றபடி விஷ்வாவின் மொபைலில் SoulMate செயலியை இன்ஸ்டால் செய்தான்.
“இப்போ கண்ணை மூடு…” என்றான் பிரவீன்.
நண்பனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு விஸ்வநாத் தனது சாக்லேட் நிறக் கண்களை மூடினான். மூடிய இமைகளுக்குள் அலைபாய்ந்த அவனது கண்மணிகள் அவனது அலைபாயும் மனதைப் பறைசாற்றியது. அந்த ஹெட்பேண்டில் இருந்த நீல நிற விளக்கு மின்னத் தொடங்கியது. விஸ்வநாத்தின் இதயத் துடிப்பு அதிகரித்தது. அத்துடன் தீக்குள் விரலை வைப்பதற்கான அவனது ஆர்வமும் அதிகரித்தது.
“சரி, இப்போ நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு,” கேள்விக்கணைகள் தொடங்கின.
“என்ன பேர்ல உன்னை ரிஜிஸ்டர் பண்ணனும்?”
பொறுமை இல்லை விஷ்வாவுக்கு…
“வேற எந்த பேரு, விஷ்வாதான்” என்றான் பொறுமையற்று.
“வயசு?”
“என் வயசுதான்.”
“சரி. 28.”
“ஃபோட்டோ போடப் போறியா?”
“இது பர்சனல் தானே? வேற யாரும் பார்க்க முடியாதுல்ல?” கண்திறந்து நண்பனைப் பார்த்தான்.
ப்ரவீன் இல்லையென்று தலையாட்ட, “அப்போ ஃபோன்ல இருந்தே ஏதாவது ஒரு ஃபோட்டோவைப் போடு, நான் நானாதான் இருக்கணும், வேற முகம் தேவையில்லை.”
ஒரு அழகான முழு ஃபோட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டது.
“சரி, இப்போ உன் கேர்ள்ஃபிரண்டு பத்தி சொல்லு. பொண்ணு எப்படி இருக்கணும், மார்டனா, ட்ரெடிஷனலா? நல்லா யோசிச்சு சொல்லு.”
ஆப் ரெக்கார்டரை ஆன் செய்தான் பிரவீன்.
“ஹ்ம்ம்…ட்ரெடிஷனலான மாடர்ன் பொண்ணு, நீளமான தலைமுடி, பின்னி பூ வெச்சுக்கணும், கதை பேசுற மை வைச்ச கண்கள், மேக்கப் இல்லாத இயற்கையான பொட்டு வைச்ச முகம், இயல்பா டிரஸ் பண்ணிக்கிட்டு, கால்ல கொலுசு, கைல வளையல் எல்லாம் போட்டிருக்கணும், ஆடம்பரம், பகட்டு எதுவும் இல்லாத சாதாரணமான பொண்ணா இருக்கணும். என்னை விட உயரம் கம்மியா இருக்கணும், என் தோள் வரைக்கும் வந்தா போதும். ஜீரோ சைஸ்லாம் வேண்டாம், கன்னம் கொழுக்மொழுக்னு இருக்கணும். அழகா ஸ்மைல் பண்ணனும். தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரிய அழகோட இருக்கணும்…” என்று அடுக்கிக் கொண்டே போன நண்பனை விழியகலப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரவீன். “இவ்வளவு கனவு இருக்காடா உனக்கு…” என்றிருந்தது அவனுக்கு.
“என்னை எனக்காக நேசிக்கணும், இந்த மேக்கப் போட்ட, ஸ்கிரீன்ல தெரியுற நடிகனை இல்லை.” என்று முடித்தான் விஷ்வா.
ரெக்கார்டிங்கை நிறுத்தினான் பிரவீன்.
செயலியும் கடமையே கண்ணாக விஷ்வாவின் சொற்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு அழகுப் பதுமையை உருவாக்கத் தொடங்கியது.
“வர்ணனை சூப்பர் மச்சான், கலக்கிட்ட போ” என்று நண்பனைச் சிலாகித்தவன், “சரி, பேர் என்ன வைக்கபோற உன்னோட விர்ச்சுவல் காதலிக்கு?” என்றான்.
யோசனையில் ஆழ்ந்த விஷ்வாவின் கண்ணில், கண்ணாடிச் சுவருக்கு அப்பால் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருந்த முழுநிலவு விழுந்தது.
அமுதைப் பொழியும் நிலவின் மீதிருந்து விழியகற்றாமல், மயக்கம் தோய்ந்த குரலில் அவள் பெயரைச் சொன்னான் விஸ்வநாத்…
“நிலா…”
error: Content is protected !!