காதலும் கடத்தப்படும் – 4

காதலும் கடத்தப்படும் – 4
Advertisement
காலையில் அர்ஜுன் டீ வாங்கிக்கொண்டு வந்து மதனை எழுப்பி கொடுத்துவிட்டு, அறையின் அருகே சென்று பார்க்க, அறைக்கதவு பாதி திறந்துவைக்கப்பட்டு, அஞ்சலி ஜன்னலின் வழியே எங்கோ நோக்கியபடி அமர்ந்திருந்தாள்.
“டீ” என்றவன், அவளிடம் ஒரு டீ கப்பினை கொடுத்துவிட்டு, அருகே ஒரு நெகிழிப்பையை வைத்தான். அவள் கேள்வியாய் நோக்க,
“உனக்கு மாத்து துணி வாங்கிட்டு வந்திருக்கேன். பொம்பள புள்ளைங்க போடற துணிமணியெல்லாம் எனக்கு தெரியாது. பசங்க போடற பேன்ட் சட்டை வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றுவிட்டு சென்றான். அவள் பையை திறந்து பார்க்க, உள்ளே பற்பசை முதல் பாண்ட்ஸ் பவுடர் வரை ஏதேதோ இருந்தன.
Advertisement
Advertisement
அவள் குளித்து முடித்து வர, வாயிற்கதவு திறந்தபடி கிடக்க, மதன் உறங்கிப்போயிருந்தான். அர்ஜுன் எங்கு போனான் என்று அவளுக்கு தெரியவில்லை. அறைக்குள் சென்றவள், தனது கைபேசியை எடுத்து ஏதோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க,
“டேய் எழுந்திரு மதனா” என்று அவனை தட்டி எழுப்பினான் அர்ஜுன். அவன் மெல்ல எழுந்து அமர,
“பல்ல தேச்சுட்டு வா, சாப்பிடலாம்” என்றான், அர்ஜுன்.
Advertisement
“இந்தா இட்டிலி” என்றபடி அறையில் இருந்தவளிடம் சென்று நீட்டினான், அர்ஜுன்.
“எனக்கு பசிக்கல” என்று அவள் கூற,
“பசிக்கும்போது சாப்பிடு” என்றுவிட்டு அவன் வெளியே சென்றான்.
இவள் உள்ளே இருக்க, வெளியே மதனும் அர்ஜுனும் உரையாடியபடி சாப்பிடும் சத்தம் இவளுக்கு கேட்டது.
“மதனா நீ வீட்லயே இரு, எங்கயும் போயிடாத. நான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரேன்”
“நானும் ஏதாவது தேருமான்னு பார்த்துட்டு வரேன் அஜூ”
“இல்ல வேண்டாம், அந்த பொண்ண தனியா விட்டுட்டு… எவனாவது வந்து ஏதாவது வம்படிப்பான்,,,”
“ஆமா ஒவ்வொருத்தன் முழியே சரியில்லை… முதல்ல இந்த புள்ளைய கிளப்பணும்…”
“ம்ம்”
அர்ஜுன் கிளம்பிச் செல்ல, அவள் எதிரே வந்து தரையில் அமர்ந்தான், மதன்.
“சாப்பிடலையா?”
“இல்லை…”
“ஹ்ம்ம்… ஆமா உன் பேரு என்ன?”
சற்று யோசித்தவள், “அஞ்சலி” என்றாள்.
“அஞ்சு எலியா? எல்லாமே சுண்டெலியா? பெருச்சாளியா?”
“ஏதாவது கேவலமா சொல்லிடுவேன்… வேண்டாம்…”
“நீ சொன்னாலும் சொல்லுவ…”
சிறிய அமைதிக்குப்பிறகு,
“ஆமா உன்கூட ஒரு வளர்ந்தவன் இருக்கானே, எங்க அவன்?” என்றாள்.
“பொழப்ப பார்க்க வேண்டாமா?”
“கடத்த போயிருக்கானா?”
“ஆமா, ராக்கி பாய் கூட சேர்ந்து நாலு பெட்டி தங்கத்தை கடத்த போயிருக்கான்… ஆளும் மண்டையும்…”
“அப்போ என்னதான் தொழில் பண்றீங்க?”
“பாட்டு ட்ரூப் வச்சிருந்தோம். எல்லாம் போச்சு”
“அவன் பாடுவானா?!!”
“செமயா பாடுவான்”
“நீ?”
“நானும் தான் – கோரஸ்”
“ஓ! இந்த லாலாலா பாடுவாங்களே, அதுவா?”
அவள் சிரிக்க, அவன் முறைத்துக்கொண்டு தரையில் படுத்தான்.
“அவனோட பேரு என்ன? அஜூ அஜுன்னு கூப்பிடற?”
‘இவ கேடி பக்கர், உண்மைய சொல்ல முடியாது’ என்று நினைத்தவன்,
“அவன் பேரு அர்னால்டு” என்றான்.
“உன் பேரு? வெறும் ‘மதன்’தானா?”
“இல்லை மன்மதன்”
“ஷப்பா…”
“சும்மா சொன்னேன். அது என் செல்ல பெயர்”
“அப்போ நிஜப் பெயர்?”
“மைக்கேல் ஜாக்சன்”
அவள் எரிச்சலோடு அவனை பார்த்து,
“நீ? பாடுற லாலாலா’க்கு உன் பேரு மைக்கேல் ஜாக்சனா?”
“லாலாலா பாடினாலும் மைக்குல தான பாடறேன்! அதான் மைக்கேலு ஜாக்சன்”
“நம்பிட்டேன், இப்போ உன் அர்னால்ட்டு எங்க பாட போயிருக்கான்?”
“எவன் கூப்பிடறான் பாட? கைமாத்தா காசு தேறுமான்னு பார்க்க போயிருக்கான்”
“நேத்து தான என்கிட்ட காசு வாங்குனீங்க?”
“அதெல்லாம் செலவாயிடுச்சு… அதைவிடு…” என்றவன் ஆர்வமாய் எழுந்து அமர்ந்தபடி,
“நீ யாரு? எதுக்கு உனக்கு நீயே ஸ்கெட்ச்சு போட்ட?” என்றான்.
“அதெல்லாம் நேரம் வரும்போது சொல்றேன்”
“நேரம் வரும்போதா? அப்போ மாசக்கணக்கா இங்க தான் டேரா’வா?”
“ரொம்ப பண்ணாத? எனக்கு நீங்க செலவு பண்றத செட்டில் பண்ணிட்டு தான் கிளம்புவேன், ஆனா சீக்கிரம் கிளம்பிடுவேன்…”
“திரும்பவும் வேற ஏதாவது ஸ்கெட்ச் போடுறியா?”
“நீங்க மாட்டமாட்டீங்க, போதுமா?”
அவள் மீண்டும் யோசனையாகிப் போக,
“ஆமா, எந்த தைரியத்துல நீ இங்க வந்து தங்கியிருக்க? நாங்க உன்னை ஏதாவது பண்ணிட்டா?” என்றான்.
“பண்ற மூஞ்சிகளை பார்த்தா தெரியாது?”
“ஹலோ என்ன கிண்டலா?”
“ப்ச்… எனக்கு உங்கள பார்த்தா பயமே வரல. அர்னால்ட்டு ரொம்ப நல்ல பையனாத்தான் தெரியறான். நீ சரியான காமெடி பீசு. அதான் நம்பி வந்தேன்…”
“என்னை பத்தி தெரியாம பேசற…”
“டேய், நீங்க ரெண்டு பேரும் நல்ல பசங்களாத்தான் இருக்கீங்க. அப்புறம் எதுக்கு இந்த தொழில் பண்றீங்க?”
“எல்லாம் உன்னை கடத்தணும்னு ஒரு ஆசை”
“விளையாடாத”
“நான் தான் சொன்னேன்ல, எங்க பாட்டு ட்ரூப் போயிடுச்சு, கடன் வேற, அதான் சீக்கிரம் நாலு காசு சம்பாதிக்க… இனி அஜூ இந்த வேலையெல்லாம் பண்ண மாட்டான்… நான் தான் தேவையில்லாம இழுத்துவிட்டேன்… அப்பா இருந்திருந்தா…” என்றபடி அவன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தந்தையின் புகைப்படத்தைக் காண, அதன் கீழே ஒரு மேஜை போடப்பட்டு, அதன் மீது சிகப்பு துணி விரிக்கப்பட்டு, அதன் மேல் ட்ரங்க் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
“என்ன ஏற்பாடு இது?” என்று அவளை வினவியபடியே எழுந்து சென்று பெட்டியின் அருகே நின்றான்.
“சாமி பெட்டினா இப்படித்தான் வைக்கணும், தரையில வச்சா கால்ல படும்”
“இந்த துணி?”
“என்னோட பட்டுப்புடவை தான், இருக்கட்டும்… சரி நீ போய் ஒரு விளக்கு எண்ணெய், திரிநூல், பூ, ஊதுபத்தி – இதெல்லாம் வாங்கிட்டு வா”
“எதுக்கு?”
“புடி இந்த ரூபாய, போ” என்று அவள் கூறிவிட்டுச் சென்று கட்டிலின் மேல் அமர, அவள் மீது மதனுக்கு மரியாதை பிறந்தது.
அவள் கூறியவற்றை வாங்கிக்கொண்டு அவன் வீட்டிற்கு திரும்ப எதேச்சையாக அர்ஜுனும் திரும்பியிருந்தான்.
“என்னடா நீ ஊர சுத்திக்கிட்டு இருக்க? அவ எங்க?”
“ஆமா இது பெரிய ஊட்டி கொடைக்கானல், சுத்தி பார்க்குறாங்க. அவ தான் என்னென்னமோ பூசை சாமான் வாங்கிட்டு வர சொன்னா?”
“எதுக்கு?”
“நமக்கு விபூதி அடிக்கத்தான்”
உள்ளே சென்று மதன் பையை அஞ்சலியிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்றவள், மேஜையின் மீது விளக்கேற்றி, படங்களுக்கு பூ வைத்து, பத்திகளை ஏற்றி வைத்தாள். அவளது செயலைக் கண்டு அர்ஜுன் நெகிழ்ந்து போக, அவள் வணங்கிவிட்டு சென்று, தனக்காக அவன் கொடுத்துச் சென்ற இட்டிலிகளை உண்ணத் தொடங்கினாள்.
அர்ஜுன் அமைதியாய் நிற்க,
“எதுக்கு நீ இதெல்லாம் பண்ற?” என்றபடி அவள் எதிரே வந்து நின்றான், மதன்.
“எனக்கு பதினாலு வயசு இருக்கும்போது என் அம்மா இறந்து போயிட்டாங்க. அப்ப ஆரம்பிச்ச பழக்கம். அம்மா படத்துக்கு பூ போட்டு, விளக்கேத்திட்டு தான் காலைல சாப்பிடுவேன்”
அர்ஜுனின் கண்கள் மெலிதாய் ஈரம் கொள்ள,
“பொறுமையா சாப்பிடு” என்ற மதன், அவள் பருக அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.
அவனைக் கண்டு சிரித்தவள், அந்த பாட்டிலை வாங்கிக்கொண்டு உண்டு முடித்தாள்.
“காசு கிடைச்சுதா அஜூ?”
வரவேற்பறையில் யோசனையாய் மூழ்கியிருந்தவனின் அருகே சென்று அமர்ந்தான் மதன்.
“இல்லை மதனா… கையில ஐநூறு ரூபாய் தான் இருக்கு”
“நாம தண்ணிய குடிச்சுப்போம் அந்த புள்ளைக்கு பிரியாணி வாங்கிட்டு வா”
அவனை ஆச்சரியமாக அர்ஜுன் நிமிர்ந்து பார்க்க,
“அந்த புள்ள அம்மா அப்பா போட்டோவுக்கு பூ போட்டு விளக்கேத்தி, ட்ரங்க் பெட்டியை மேஜை மேல தூக்கிவச்சு… மனசு என்னவோ போல ஆயிடுச்சு அஜூ” என்றவன் கண்கலங்க,
“டேய் மதனா…” என்று அவன் தோள் மீது ஆறுதலாய் கை போட்டான், அர்ஜுன்.
“இத்தினி நாள் நமக்கு தோணல பாரேன்…”
“ஆமா மதனா… வீடும் தலைகீழா மாறிப்போச்சுல!”
“ம்ம்… அந்த புள்ள பேரு அஞ்சலியாம். நல்லாத்தான் பேசுது”
“விவரம் எதுவும் கேட்டியா?”
“அது மட்டும் சொல்லல. நீ ரொம்ப நல்லவனாம். நான் காமெடி பீஸாம்” என்றுவிட்டு மதன் சிரிக்க,
“ஒரே நாள்ல கண்டுபுடிச்சுடுச்சா?” என்றுவிட்டு அர்ஜுனும் உடன் சிரித்தான்.
“அர்ஜூனே” என்று ஊரே அதிரும்படி கத்திகொண்டே வீட்டினுள் நுழைந்தாள், இருவது வயதை ஒத்த பெண்ணொருவள்.
“ஐயோ இந்த பிசாசா?” என்று மதன் அவசரமாக வாயிலின் அருகே சென்று அவளை தடுத்து நிறுத்தினான்.
“தள்ளுடா இம்சை” என்று வெடுக்கென அவனை தள்ளிவிட, அவன் தடுமாறி கீழே விழுந்தான்.
அர்ஜுனின் அருகே ஓடிச்சென்றவள்,
“உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் அர்ஜூனே. ரெண்டு நாள் நான் ஊருல இல்லனதும் துரும்பா இளைச்சுட்ட?!” என்று அவனது கன்னத்தை வருட அவள் கை நீட்ட, வெடுக்கென அவளது கையை பற்றி இழுத்து, அர்ஜுனுக்கு அரணாக மதன் நின்றுகொண்டான்.
“இம்சை”
“ஆமா யாரது ஒரு பொண்ணு இருக்காமே?!” என்றவள், மதன் தடுப்பதற்குள் அஞ்சலியின் அறைக்குள் சென்றாள்.
அவளது அழகையும் வனப்பையும் கண்டு சற்று பொறாமைக் கொண்டவளாய்,
“இந்தாம்மா, உன்னை காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பி உன் ஊரை பார்க்க போவாம ஏன் இங்கயே தங்கியிருக்க? வயசு பசங்க இருக்கற வீடு. ஒண்ணுன்னா என் அர்ஜுன தான் இந்த ஊரே தப்பா பேசும். பாவம் என் அர்ஜுனு” என்று நொடித்துக்கொண்டு நின்றாள்.
புரியாமல் அஞ்சலி முழித்துக்கொண்டு நின்றாள்.
“இந்த புள்ளைய காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்கோம்னு சொன்னதெல்லாம் பொய். உண்மை என்னன்னு தெரியுமா?” என்றான் மதன்.
“டேய் மதனா” என்று அர்ஜுன் பதற, அஞ்சலியும் பதற,
“இரு அஜூ” என்றவன், அப்பெண்ணிடம், “இந்த புள்ளையத்தான் அஜூ கட்டிக்க போறான். அது இவன கட்டிக்க வீட்டை விட்டு வந்துடுச்சு. பாரு விளக்கெல்லாம் ஏத்தி பூஜை போட்டிருக்கு” என்க,
“என்னடா உளர்ற?” என்று அவனை தடுத்து நிறுத்தினான் அர்ஜுன்.
அஞ்சலி அவனை முறைத்துக்கொண்டு நிற்க,
“உண்மையை சொல்லிடுங்க அண்ணி. பாவம் இந்த புள்ள மனசுல ஆசைய வளர்த்துக்கிட்டு திரியுது” என்றான், அஞ்சலியிடம்.
தர்மசங்கடத்தோடு அர்ஜுன் நிற்க, எரிச்சலோடு அஞ்சலி நிற்க, வாயெடுத்து அழுத அப்பெண்,
“நான் மலையிலிருந்து குதிச்சு நிஜமா சாகப்போறேன்” என்று கூறியபடி செல்ல, “நான் சுடுகாட்டுக்கு சொல்லி விட்டுடறேன் கவலைப்படாத” என்று மதன் கூற, அங்கிருந்த ஒரு பாட்டிலை எடுத்து அவன் மீது வீசிவிட்டு, விருட்டென அவ்விடம் விட்டு சென்றாள்.
“ஏன் மதனா இப்படி பண்ற?”
“சும்மா இரு அஜூ, தொல்லை விட்டது” என்றவன் அஞ்சலியிடம் சென்று,
“தப்பா எடுத்துக்காத. அந்த பொண்ணு அஜூவை ரொம்ப டார்ச்சர் பண்ணுது. உன்னைவிட பெரிய பஜாரி அது” – அவள் முறைக்க, பவ்யமாக சிரித்தவன், “விளையாட்டுக்கு சொன்னேன்… அந்த பொண்ணு மேல இவனுக்கு விருப்பமே இல்லை. அதான் சான்ஸ் கிடைச்சுதுன்னு அதை வெட்டி விட்டுட்டேன்” என்க,
“பரவாயில்லை” என்றவள், ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக்கொண்டு நின்றாள்.
