Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

கண்மணியே காதல் என்பது நீ தானே 10 2

மதுவின் காவல் நிலையம் எப்போதும் போலவே பரபரப்பாக இருந்தது. அவள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பாள். விடியலில் எழுந்து உடல் பயிற்சி செய்யாமல் இருந்ததே இல்லை.

கட்டுடல் ஏறிய புஜங்கள் ஆண்களுக்கு மட்டும்தான் அழகா? பெண்களுக்கும் அழகுதான். அதிலும் அவளது உயரத்திற்கும் அணிந்திருக்கும் உடைக்கும் ஏற்ற உடல் வாகை கொண்டவள் அல்லது அதை சரியாக பராமரித்து கொண்டிருப்பவள். சீருடையில் இருக்கும்போது மதிப்பான தோற்றத்தையும், மற்ற உடைகளில் என்ன அழகு எத்தனை

அழகு என்று மயக்கும் தோற்றத்தையும் கொண்டவள். பெண்களே அதில் விதிவிலக்கு அல்ல என்னும்போது ஆண்கள்? அப்படி என்றால் நான்? தேன் நிற உடல் வர்ணத்தையும், பச்சை நிற கண்களையும் கண்டு நானும்தான் மயங்கி போகிறேன். அதிலும் உன்னிப்பாக பார்க்கும்போது லேசாக சிறுத்துக் கொள்ளும் அந்த கண்கள்! அப்பா! பேரழகுதான். ஆனால்  எனக்கு ஒரு பெரிய வருத்தம் இருக்கிறது. ஏனோ அவளுக்கு சிரிக்க தெரியவில்லையே?

பெண்ணுக்கு அழகே புன்னைகைத்தானே? அப்படி எல்லாம் இல்லை. அவளுக்கு பொன்  நகையும் பிடிக்காது. புன்னகையும் தான்.



Advertisement

  பத்து  சவரன் நகை திருடியவனை பிடித்து  அடித்து கொண்டிருந்தார்கள்.

“என்ன கேஸ்?

“பொண்ணு கல்யாணத்துக்கு வச்சிருந்த பத்து சவரன் நகையை திருடி இருக்கான் மேடம். இதுல கொடுமை என்னனா அவங்களே கூலி வேலை செய்யறவங்க. கார பேந்த வீட்டுல இருக்கறாங்க”

Advertisement

“ஏன்யா எதுக்குடா ஏழை வீட்டுல திருடின? உனக்கு எந்த பணக்கார வீடும் கிடைக்கலையா? “

Advertisement

நக்கலாக கேட்டாள் .

“பணக்கார வீட்டுல நிறையா நாய்ங்க வச்சுருக்காங்க மேடம். நிம்மதியா போனோமா எடுத்தோமா தொழில் செய்ய முடியல. இந்த மாதிரி வீடுன்னா பூட்டு தான் போட்டுருப்பாங்க, இல்ல பீரோல வச்சிருப்பாங்க. போனா  பத்தே நிமிஷம். எடுக்க வேண்டியதை சத்தமில்லாம எடுத்தோமோ, சரக்கடிச்சோமா நிம்மதியா இருக்கலாம்”

“ஆமா  இவரு அப்படியே  பெரிய அம்பானி தொழில் செய்யறாரு”

Advertisement

மதுவின் கண்களை பார்த்து அர்த்தம் புரிந்து கொண்ட  கான்ஸ்டபிள்  கோபத்தில் இன்னும் அடி பிளந்தார்.  அப்போது வெளியில் இருந்து இன்னொரு காவலர் ஓடி வந்தார்,

“மேடம் மேடம் ! ஒரு பொண்ணு கையில தலையோட  வந்துருக்கு”

உள் வந்தவளை பார்த்த ஒரு பெண் கான்ஸ்டபிள் வாயை மூடிக்கொண்டு வாந்தி எடுக்க ஓடினாள். இன்னொரு ஏதோ கேஸ் விஷயமாக வந்திருந்த பெண் மயக்கம் போட்டு விழுந்திருந்தாள் .

வந்திருந்த பெண்ணோ எதை பற்றியும் கவலை இல்லாமல், நேராக  பார்த்துக் கொண்டிருந்தாள். சிறு பெண்ணாகத் தான் இருந்தாள் . மேலே ஒரு ஷர்ட்டும் கீழே ஒரு பாவாடையும் அணிந்திருந்தாள் . முகம் எங்கும் வியர்வையும் ரத்தமும் வழிந்து  கொண்டிருந்தது. கை முழுவதுமே ரத்தம். மற்றவர்களுக்கு இருந்த பயம் அருவருப்பு எதுவும் அவளுக்கு இல்லை. தைரியமாகவே நின்றிருந்தாள் .

அவளை பார்த்த மதுவுக்குமே  பயம் வரவில்லை. மாறாக அவளை பார்த்தவளுக்கு காளி இப்படித்தான் போர் களத்தில்  நின்றிருப்பாள் என்று தோன்றியது. அந்த தலைக்கு சொந்தக்காரனோ சற்று முதுமை அடைந்தவன் போல இருந்தான்.நாற்பதுகளில் இருக்கலாம். சிறு பெண் மீது கை  வைத்திருப்பான். கோபத்தில் வெட்டி விட்டாள் . என்று ஊகித்தாள் மது. ஆம்! அவள் கையில் நீண்ட அறிவாளும்தான்  இருந்தது. அவள் வந்தபோது ரோட்டில் இருந்தவர்கள் கூட அலறியடித்து ஓடி இருந்தார்கள். காலில் அணிந்திருந்த பெரிய கொலுசின் சத்தம் அவள் நடந்து  வந்த போது  பயத்தையே தந்திருந்தது.  அவளை தொடர்ந்து கொண்டு யாரோ பத்திரிக்கை காரனும் வந்திருந்தான். காவல் நிலையத்தில் அவன் அனுமதிக்க படவில்லை. வெளியிலேயே நிறுத்தி வைக்க பட்டான் . மிகவும் பரபரப்பான விஷயம். மிகவும் முக்கியமானதும் தான்.

மது அவளிடம் எதுவும் பேசவில்லை. கை  கட்டி அவளையே உன்னிப்பாக பார்த்திருந்தாள் .

வந்த பெண்ணே ஆரம்பித்தாள்.

“என்னோட பேரு  செல்வி. நாங்க விழுப்புரத்துல இருக்கற அரசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவங்க. அம்மா இல்ல. அப்பாவும் அக்காவும்தான் . இங்க பஞ்சம் பிழைக்க வந்தோம். இதோ இவன் வீட்டுலதான் எங்க அப்பா தோட்டத்து வேலை செஞ்சாங்க. அக்கா சமையல் அறைல மேல் வேலை செஞ்சுகிட்டு இருந்தது. இவன் அக்காவை கெடுத்துட்டான். அக்கா விஷம் குடிச்சு செத்து போச்சு. அப்பா போலீசுல சொன்னாங்க. ஏழைங்க. எங்களை யாருமே திரும்பி பாக்கல . வீட்டுக்கு ரெண்டு பேர் வந்தாங்க. அய்யா கூப்புடறதா  சொல்லி கூப்பிட்டாங்க. காலைல வரேன்னு அப்பா எவ்வளவோ சொன்னாரு. கேக்காம தூக்கிட்டு வண்டில ஏத்திட்டு போன்னாங்க . அப்பா வரவே இல்ல. இவன்தான் எங்க வீட்டுக்கு வந்தான். அக்காவும் அப்பாவும் செத்து  போய்ட்டாங்க. நீ என் கூட இருன்னு சொன்னான். இன்னும் அக்காவை பத்தியும் தப்பா  பேசினான்.

“என்ன சொன்னான்?”

“இல்ல அவன் சொன்னதை என்னால சொல்ல முடியாது”

“இல்லமா நீ சொல்லித் தான் ஆகணும்”

“நான் சொன்னா  இங்க இருக்கற எந்த ஆம்பிளையும் காதால கேக்க முடியாது. பொண்ணுங்க தூங்க மாட்டாங்க. பரவால்லையா?”

“சரி விடு. அப்புறமா தனியா எங்கிட்ட சொல்லு. உன்கிட்டையும் தப்பா  நடந்துக்கிட்டதால அவனை வெட்டிட்ட . சரியா?”

“ஆம்!” தலை ஆடியது.

“எத்தனை நாள் ஆச்சு சாப்பிட்டு?”

“ரெண்டு நாள்”

“மதுவின் கண்ணசைவில் அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு உணவு வந்தது. ஒன்று அல்ல. மூன்று”

அவள் வயதிற்கு பாதி உண்டாலே அதிசயம்தான்.

இது பசியினால் அல்ல. மனதின் பிரச்சனை என்பதை மதுவினால் புரிந்து கொள்ள முடிந்தது. திருப்தியாக உண்டு முடித்தவள் கைகளை கழுவிக் கொண்டாள் . ரத்தம் தெளித்திருந்த முகத்தையும் கழுவினாள் .

“கை  கழுவிட்டேன். முகம் கழுவிட்டேன். கொலைகாரின்னு இருக்கற இந்த பட்டத்தை?”

ஓவென கதறினாள்.

இத்தனை நேரம் பத்ர காளி போல இருந்தவள் இப்போது பச்சை குழந்தையாக கதறினாள். அவளை அடக்க முற்பட்ட மாற்ற காவலர்களை தடுத்து விட்டாள்  மது. அடுத்த சில நிமிடங்களில் மெதுவாக இவளே அவள் தலை கோதினாள்.

“நீங்க கவலைப்படாதீங்க மேடம். நான் மைனர்  தான். பெரிசா ஒன்னும் தண்டனை கிடைக்காது” அவளே தன்னை சமாதானம் செய்து கொண்டாள் .

அவளை சிறையில்  போட்டார்கள். அடுத்து அடுத்து நடக்க வேண்டிய விஷயங்கள் நடந்தன.

அந்த பெண்ணை நினைத்த மதுவுக்கு அன்று மனம் முழுவதும் யோசனையாகவே இருந்தது.

அவளுக்காக வாதாட அரசே வக்கீலை நிமித்தது. அந்த பெண் வக்கீலிடம் இவள்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

“இந்த பொண்ணுக்கு தண்டனை இல்லாம வெளில கொண்டு வர முடியுமா?”

“நீங்க இப்டி கேக்கலாமா? “

“நான் ஒரு காவலரா  இதை கேக்க முடியாது. ஒரு சக மனுஷியா கேக்கறேன். இந்த பொண்ணு அவனை வெட்டி இருக்கலன்னா அவன் இன்னும் எத்தனை பொண்ணுங்களை  இந்த மாதிரி பண்ணுவானோ?”

“அதுக்குத் தான் சட்டம் இருக்கே?”

“இருக்குத்தான். நான்தானே போய் அவங்க அப்பாவோட, அக்காவோட பிணங்களை அள்ளி  போட்டுக்கிட்டு வந்தேன். அதுக்கு சட்டம் இருக்குத்தான்”

“உங்க கோபம் சரியானதுதான். ஆனா நாம  சட்டத்தை மதிக்கணும்”

“குடிச்சுட்டு ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, நண்பர்கள் கூட சேர்ந்து அணுஅணுவா சிதைச்சு கொன்னவனுக்கு மைனர்னு சொல்லி தையல் தொழில் செஞ்சுக்கோன்னு கத்தரிக்கோலை குடுக்க முடியும்னா இந்த பொண்ணுக்கு ஏன் நியாயம் கிடைக்க கூடாது?

“இதே பாயிண்டை நான் நீதிபதிகிட்ட வைக்கறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் அவளுக்காக போராடுவேன். கவலைப்படாத மது” வக்கீல் ஆறுதலாக கையில் தட்டி கொடுத்தாள் .

“அது சரி இப்ப அந்த பொண்ணு வெளி வந்ததுக்கு அப்புறம் என்ன செய்வா ? எங்கையாவது மகளிர் சுய உதவி குழு, இல்லை வேற ஏதாவது சேவா சங்கத்துல இருந்துக்குவாளா? நீதிபதி கேப்பாங்களே?”

“அதெல்லாம் பத்தி நீயும் நானும் கவலை பட வேண்டாம். மேடத்துக்கு ஒரு காதல் இருக்கு. அத்தை பையனாம் “

“ஓ  பப்பி லவா” இருவருக்கும் ஒரு மாதிரி வெட்கம் கலந்த சிறு புன்னகை வந்தது.

“ஓகே டியர். ஏற்கனவே ரொம்ப லேட்டாகிடுச்சு. ட்ரைவரை வேற வீட்டுக்கு அனுப்பனும்”

காரில் ஏறி அமர்ந்ததும்  முதலில் செல்வியை பற்றி யோசித்தவளுக்கு பிறகு அவளின் காதல் கதை நினைவுக்கு வந்தது. கூடவே சேர்ந்து தன் மனம் கவர்ந்தவனின் நினைப்பும் வந்தது. தன்  மனதை அழகிய புன்னைகையில் திருடிக் கொண்டவன் இவளது புன்னகையையும் சேர்த்தே திருடி விட்டான் போலும். அதனால் தானோ என்னவோ இவள் உதட்டோர வளைவை தவிர பெரியதாக புன்னகிப்பதில்லை. பிறந்த போதே தாயை இழந்தவளுக்கு இருந்த தந்தையும் விமான விபத்தில் இறந்து போனார். நல்ல வசதியான குடும்பம். தந்தையின் தம்பி அனைத்து சொத்துக்களையும் சுருட்டிக் கொண்டு இவளை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டார். உற்றார் உறவினர், பணம் எல்லாம் இருந்தும் இவள் யாரும் இல்லாத.   அனாதையாகத் தான் அன்றும் இருக்கிறாள். இன்றும் இருக்கிறாள்.

“மேடம் வீடு வந்துருச்சு” என்ற காவலரின் குரலில் நடப்புக்கு வந்தாள் .

இனி இதை பத்தி நினைக்க கூடாது.

“காலைல சீக்கிரம் வந்துருங்க. அந்த ராக்கி கேஸ் விஷயமா நாளைக்கு கோர்ட்டுக்கு போகணும். டீசல் புல் பண்ணிடுங்க”

“எஸ் மேடம் ” கிளம்பி விட்டார். குளித்து, உண்டு முடித்தவளுக்கு படுத்தால்  போதும்  என்றிருந்தது.

இந்த பகுதி சற்றே கடினமாக இருந்திருக்கலாம். வாருங்கள் நாமும் மதுவுடன்  சேர்ந்து உறங்க போகலாம்.

தொடரும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!