Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 13

அத்தியாயம் 13

வள்ளிமயில் வெற்றிவேலன் திருமணம் செட்டிநாட்டு முறைப்படி சீரும் சிறப்புமாக நிறைவேறியது. ‘வள்ளி வள்ளி என வந்தான் ..’ ரிங் டோன் இப்பொழுது ‘மயிலு மயிலு மயிலம்மாவாக’ மாறி இருந்தது. திருமணம் முடிந்து  இரண்டு வாரத்தில் மனமே இல்லாமல் வெற்றி மட்டும் முதலில் புறப்பட்டு  சென்றுவிட்டான். இரண்டு வாரங்கள் இரண்டு நிமிடங்களாக கலாட்டாவுடன்  சென்றிருந்தது.



Advertisement

வீசா(visa) வரும் வரை வள்ளிமயில் இவர்கள் அனைவருடனும் இருந்தாள். அவளது அப்பா அம்மா இருப்பது மதுரையில். ஒரே பெண்ணாக வளர்ந்த வள்ளிமயிலுக்கு இவர்களுடன் இருப்பது புது அனுபவமாக இருந்தது. எப்படி இந்த சூழலில் இருந்துவிட்டு தன் கணவரால் தனியாக இருக்க முடிகிறது என்று வியப்பாக இருந்தது பாவைக்கு. கணவனின் பிரிவு தன்னை வாட்டும் என்று நினைத்ததற்கு மாறாக, கணவனுடன் வீடியோ கால்களும் இவர்கள் அனைவருடன் இனிமையான பொழுதுகள் என்று அழகாக சென்றது அவளது நாட்கள். தங்களுடன் இருக்குமாறு அழைத்த பெற்றோர்களிடம் கூட, நான் இங்கே இருக்கிறேன் என்று விட்டாள்.

அனைவரும் சாலா வீட்டில் அன்று ஒன்று கூடி இருந்தார்கள். விசாகா தொன்னூற்றி எட்டு சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாள். விருப்பமே இல்லாமல் அனைவரின் கட்டாயத்தினால் எழுதிய நீட் பரீட்சையிலும் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தாள்.

Advertisement

Advertisement

நிச்சயம் மெடிக்கல் சீட் கிடைத்துவிடும். ஆனால், நான் அக்ரி தான் படிப்பேன் என்று கூறி கொண்டிருக்கிறாள், அதற்கான மீட்டிங் தான்.

காலையில் தன் சகோதரர்களிடம் தனக்கு சாதகமாக பேச வேண்டும் என்று கூறி இருந்தாள். “எனக்கு சாதகமா பேசமுடியாட்டி பேசாமல் இருங்க” என்று மிரட்டியும்  இருந்தாள். 

Advertisement

காரணம், அனைவரும் முத்து கூறினால் மண்டையை ஆட்டிவிடுவார்கள் என்று தெரியும் அவளுக்கு.

வீரா, கதிர், சுப்பு மூவரும் தங்கள் அண்ணியுடன் ஒருபுறம் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். எதிரே அருண், செந்தில், ராஜா, சுந்தரம் அமர்ந்திருந்தார்கள். அன்னம், சாலா, முத்து ஒரு புறமும் விசாகா, பாலு மறுபுறமும் இருந்தார்கள். 

யார் பேச்சை தொடங்குவது என்று சற்று நேரம் அமைதியாக இருந்தது.

“என்ன மாமா, எல்லோரும் பேசாம இருக்கீங்க?” என்று ஆரம்பித்தான் முத்து.

மகள் கேட்டதை மட்டுமே கொடுக்கும் பாசக்காரர்கள் வாயை திறக்கவில்லை.

“விசா.. நாங்க சொல்றதை புரிஞ்சிக்க. சும்மா நாங்க சொல்றோம்னு அதுக்கு எதிரா வேற முடிவு எடுக்க கூடாது” என்று ஆரம்பித்தார் சாலா.

“எனக்கு அக்ரி படிக்க தான் ஆசை..விருப்பம்.. கனவு.. எல்லாம்”

“இவ்வளவு மார்க் எடுத்துட்டு யாராச்சும் அக்ரி படிப்பாங்களா?” என்றான் முத்து.

“எல்லா ஆப்ஷன் பத்தியும் யோசி.. டாக்டர், என்ஜினீரிங், ஆர்கிடெக், ஆடிட்டிங்..” என்று கூறிக்கொண்டே சென்றார் சாலா.

“ஏன் அக்ரி படிச்சா என்ன?” 

“இவ்வளவு மார்க் எடுத்துட்டு முட்டாள் தான் இப்படி செலக்ட் பண்ணுவான்” என்றான் முத்து இடை புகுந்து.

“என்ன?  என்ன முட்டாள் தான் செலக்ட் பண்ணுவான்? அப்ப என்னை முட்டாள்ன்னு சொல்றீங்களா?”

“அக்ரி படிச்சு விவசாயம் பார்க்க போறியா?”

“பார்த்தா என்ன?”

“விதண்டாவாதம் பேசாத விசாகா.. எத்தனை நாளா சொல்றேன் கரியர் பத்தி யோசின்னு.. எனக்கு யோசிக்க தெரியும்னு சொல்லிட்டு இப்ப அக்ரின்னு சொல்ற?”

 

“யோசிச்சு தான் முடிவு செஞ்சிருக்கேன்”

“சபாஷ் சரியான போட்டி.. “ கதிர் கூறவும், அனைவரும் அவனை முறைத்துப் பார்த்தனர்.

“அக்ரி படிக்கிறது தப்பில்ல விசாம்மா.. உன் மார்க்குக்கு அதை விட நல்ல நல்ல படிப்பு எடுக்கலாம்னு தான் சொல்றோம். நீ சின்ன பொண்ணு.. உனக்கு தெரியாத விஷயத்தை பெரியவங்க எடுத்து சொன்னா புரிஞ்சுக்க வேணாமா? நாங்க சொல்றதை தான் கேக்கணும்னு சொல்லல. கண்ணை மூடிக்கிட்டு ஒன்னையே பிடிச்சிக்கிட்டு தொங்க கூடாது” என்றார் சாலா தன்மையாக.

“நாலையும் யோசிச்சு ஒன்னை செலக்ட் பண்ணனும். நல்லது சொன்னா  புரியனும்.. எனக்குத் தான் தெரியும்னு ஆடக்கூடாது” என்றான் முத்து.

“நீங்க எதுக்கு எனக்கு சொல்றீங்க? நான் கேட்டனா?”

அன்னத்திற்கு மகனை விசா அப்படி கூறவும் கோவம் வந்துவிட்டது.

“உன் மேல இருக்க அக்கறையில் தானே முருகு, தம்பி சொல்றான். எதுக்கு எடுத்தெறிஞ்சு பேசுற” என்றார் கண்டமாக.

“அக்கறை சக்கரை எல்லாம் எனக்கு புரியுது.. எனக்கு வேண்டாம்.

எங்க அண்ணன் எல்லாம் அவங்களோட பெரியவங்க.. அவங்க என்ன பண்றதுனு கூட இவங்க தான் சொல்றாங்க”

 

“தங்கம், நல்லது யார் சொன்னா என்ன டா? வயசா முக்கியம்? சொல்ற விஷயம் சரின்னா ஏத்துகிறது தப்பில்லை டா” என்றான் வீரா இப்பொழுது.

 

“கரெக்ட் வீரா அண்ணா.. சொல்றவங்க வயசா முக்கியம். நான் சின்ன பொண்ணுன்னு நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு மறுக்கமால் யோசிக்க சொல்லுங்க உங்க பெரியம்மாவையும் அவங்க மருமகனையும்.

“எந்த பக்கம் பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்போம்ல என்றான்” கதிர் கையை தொடையில் தட்டிக்கொண்டே. 

“அதானே, வான்டெட்டா மாட்டிக்கிச்சே வீரா அண்ணா..” என்றான் சுப்பு 

வள்ளிமயில் காரசாரமான பேச்சிலும் காலட்டாவை சேர்த்து சூழலை அவ்வப்பொழுது இலகுவாக்கும் கொழுந்தன்களை அன்பாக பார்த்தாள்.

அருண், “எனக்கும் டாக்டரோட அப்பான்னு சொன்னா பெருமையா இருக்கும்ல விசாம்மா” என்றார்.

“எனக்கு கூட தான் எங்க அப்பா டாக்டர்ன்னு சொல்ல ஆசையா  இருக்கும்” என்றாள் விசா பதிலுக்கு.

“பெரியப்பாவே எப்பயாச்சும் தான் வாயை திறப்பாரு.. இந்த பல்பு தேவையா?” என்றான் கதிர் கிசுகிசுப்பாக.

“ஆமா எங்க நம்ம ரெண்டு மம்மீசும் ஆளை காணும்?” என்றான் சுப்புவும் அதே கிசுகிசுப்பான குரலில். வள்ளியும் எங்கே என்று தேடினாள்.

“அண்ணியாரே, எப்படியும் அவங்க சொல்றதை கேக்க ஆள் இருக்காது. அதுவில்லாமல் அவங்க ரெண்டு பேரும் அப்பத்தா பெரியம்மா சொல்றதை கேட்டுப்பாங்க . நோ அப்ஜெக்ஷன் நோ டென்ஷன் பாலிசி.. அதனால  உங்க ரெண்டு மாமியாரும், மாஸ் என்ட்ரி கொடுப்பாங்க.. பாருங்க” என்றான் கதிர்.

சரியாக அந்த நேரம் “எல்லோரும் சுத்தி  வளைச்சு பிள்ளையை இப்படி கேள்வி கேக்கறீங்க. பிள்ளை தொண்டைத்தண்ணி வத்தி போச்சு.. இந்தாடா விசா.. குடிச்சிட்டு தெம்பா பேசு” என்று நெஞ்செலும்பு சூப் கொண்டு வந்து கொடுத்தார் தெய்வா.

அவருக்கு பின்னே வந்த வள்ளி மற்ற அனைவருக்கும் கொண்டு வந்து கொடுத்தார்.

“விசாகா சொல்றதும் சரி தானே.. நீங்க சொல்றதை அவள் கேக்கனும் யோசிக்கனும் என சொல்ற மாதிரி அவள் சொல்ல வரதையும்  கேக்கனும் தானே?” என்றார் சுந்தரம் மகனையும் சாலாவையும் பார்த்து.

‘தெய்வமே!’ என்று அவரை பார்த்தாள் விசாகா. இந்த மொத்த கும்பலில் தனக்காக பேசிய மாமாவை இப்பொழுது அவளுக்கு மிகவும் பிடித்தது.

திரும்பி அப்பா சித்தப்பாக்களை பார்த்தாள். மகள் என்றால் உயிர் தான். ஆனால் அந்த மகளின் வாழ்க்கையின் மிக பெரிய முடிவல்லவா?அதனால் அவர்கள் சாலாவை பார்த்தனர். சாலா முத்துவை பார்த்தார்.

“உனக்கு விவசாயம் பத்தி என்ன தெரியும்? சென்னையில்  வளர்ந்த உனக்கு அதை பத்தி என்ன தெரியும்? “ என்றான் முத்து கருப்பன் விசாகாவிடம்.

“தெரிஞ்சுக்க தானே படிக்கப்போறேன்”

“படிச்சிட்டு என்ன பண்ண போற?”

“சீப் அக்ரிகல்சரல் ஆபிசர் ஆகனும். இந்தியாவில் உள்ள பல கிராமங்களுக்கு  போய் வேலை செய்யனும். அக்ரி படிக்கிறது சுலபம் இல்ல, அதில்  நிறைய இருக்கு.  நிறைய அதை பத்தி யோசிச்சு, படிச்சு  வைச்சிருக்கேன், இருங்க “ என்று கூறி ஒரு பைலை எடுத்து தன் அன்னையிடம் கொடுத்தாள். ”அதில் அவள் சேகரித்த பல விஷயங்கள் இருந்தது. ஆழமாக யோசிச்சே இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்று புரிந்தது.

“நான் சொல்றதுக்காக பிடிவாதம் பிடிக்கிறதுனா. நான் எதுவும் சொல்லலை விசா, என்னோட முதல் தோழி நீ தான். உன் மேலே உள்ள அக்கறையில் தான்  சொன்னேன். உங்க எல்லோரையும் என் குடும்பமா யோசிச்சு தான் உரிமையா சொல்றேன். மத்தபடி நிஜமா உனக்கு இதை தான் படிக்கனும்னா நானும் அதை பத்தி யோசிக்கிறேன்” என்றான் முத்து  சற்றே வருத்தமனா குரலில்.

மகனின் வருத்தம் அன்னத்தை வருத்தியது. என்ன பிடிவாதம் இந்த முருகுக்கு என்றே அவர் யோசித்தார்.

“இப்பவும் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை விசா” என்றார் சாலா.

“இது ரொம்ப முக்கியமான முடிவு விசாகா, யோசிச்சு பாரு” என்றான் முத்து. 

“யார் சொன்னாலும் இந்த விஷயத்துல கேக்க மாட்டேன். வேணும்னா அந்த முருகன் வந்து சொல்லட்டும் நான் எடுக்கிற முடிவு தப்புன்னு”

“நாளைக்கு பேசுவோம். எல்லோரும் யோசிங்க” என்றார் சுந்தரம். அத்துடன் சபை கலைந்துவிட்டது. 

அடுத்த நாள் காலை, “அத்தை அத்தை ..” என்று வேகமாக வந்தான் முத்து கருப்பன். 

“கரு.. கரு.. “ என்று அவரும் வேகமாக வெளிய வந்தார்.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த ஆண்கள், என்ன ஒரே பாசமா இருக்கு என்று வேடிக்கை பார்த்தனர்.

அனைவரும் சாலா வீட்டின் வரவேற்பறையில் தான் இருந்தார்கள்.

“நல்லா  வேடிக்கை பார்க்கறீங்க.. வேடிக்கை பார்க்கும் ஆடவர்  சங்கம்” என்று அனைவரையும் முறைத்து கொண்டிருந்தாள் விசாகா. தனக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை என்று கோவம் அவளுக்கு.

“அத்தை.. நேத்து.. நேத்து.. “ என்று உணர்ச்சி மிகுதியில் குரல் கமறியது முத்து கருப்பனுக்கு.

“எனக்கும் கரு.. நேத்து.. நேத்து..” என்றார் சாலா.

இருவரும் “முருகா  சரணம்” என்றார்கள் ஒன்றாக.

“என்ன விசா ஒண்ணுமே புரியல? ஆனா அவங்க ரெண்டு பேரும் புரிஞ்ச மாதிரி ரியாக்ட் பண்றாங்க?” என்றாள் வள்ளிமயில் குழப்பமாக.

“அது டெலிபதி மாதிரி.. ரெண்டு பேருக்கும் புரியும்..”

“நம்மளை மதிச்சு பதில் சொல்லமாட்டாங்க. அவங்களே சொல்லுவாங்க “ என்றாள் கடுப்பாக.

வள்ளியும் தெய்வாவும் வாக்கிங் முடிச்சு வந்து இந்த பாச போராட்டத்தை  வேடிக்கை பார்க்க அமர்ந்தனர்.

“நேத்து எனக்கு ஒரு கனவு”  என்றார் சாலா. 

“எனக்கும்” என்றான்  முத்து.

இருவரும் திரும்ப “முருகா சரணம்” என்றார்கள். அன்னமும் சுந்தரமும் வாக்கிங் முடித்து அவர்களும் இங்கே வந்தார்கள்.

என்ன கனவு என்றனர் வேடிக்கை பார்க்கும் ஆடவர்கள் அணி. கோரஸ் குரல் தான்.

“கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல்னு வயல்..”

“ஒருபக்கம் பொன்னா விளைஞ்சிருந்துச்சு நெல்லுமணி”

“வயலுக்கு நடுவுல அழகான தோகை மயில்”

“தோகை விரிச்சு அப்படி ஒரு நடனம்…” 

“அந்த முருகனே மயிலா வந்து எங்களுக்கு புரிய வச்சிட்டான்”

மாறி மாறி இருவரும் கூறினார்கள்.

“விசாகா.. நீ முருகன் சொன்னா கேக்றேன்னு சொன்ன.. அந்த முருகனே எங்களுக்கு சொல்லிட்டான்..” என்றான் முத்து கருப்பன்.

“ஆமா, விசாம்மா..உன் விருப்பம் தான் மலையய்யா விருப்பமும்” என்றார் சாலாவும்.

இருவரும் முருகா சரணம் என்று பூஜை அறை நோக்கி சென்றார்கள்.

“அது எப்படி வள்ளி, ரெண்டு பேருக்கும் ஓரே  கனவு.. அதையும் பாதி பாதியா சொல்றாங்க?” என்று வியப்பாக கேட்டார் தெய்வா.

“முருகா..ரொம்ப தேங்க்ஸ். இந்த அத்தை மருமகன் கூட்டணிக்கு வயலும் வாழ்வும் கனவு காட்சியளித்து என் விருப்பத்தை நிறைவேற்றியதுக்கு “ என்று முருகனுக்கு நன்றியை கூறி மகிழ்ச்சியாக தனதறைக்கு சென்றாள் விசாகா.

சாலாவும், முத்து கருப்பனும் 

“முத்துகுமரா..முத்துகுமரா..முருகையா வா வா..” என்று முருகனை கண்ட  ஆனந்தத்தில்  பாடினார்கள்.

நேற்றைய கனவில் மயிலின் நடனமும் முருகன் தங்களுக்கு சொன்ன பதிலும் என்று இருவரும் மெய் சிலிரித்து உள்ளம் உருகி நின்றார்கள்.

இப்படி முருகனின் அருளால் தனக்கு பிடித்த பி.எஸ்.சி.அக்ரி மதுரை கல்லூரியில் சேர்ந்தாள் விசாகா.

———————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!