Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 2

அத்தியாயம் 2

விசாலாட்சி, அருணாச்சலம், முருகம்மை ஆச்சி மூவரும் மலையேறி, முருகன் சந்நிதானத்திற்கு முன்பு வரவும், முருகனுக்கு பால் அபிஷேகம் நடக்கவும் சரியாக இருந்தது. கலங்கி இருந்த மனங்கள் எல்லாம் அமைதி ஆனது.



Advertisement

நேற்றைய கொண்டடாட்டங்கள் முடிவடைந்து, இன்று கூட்டம் குறைவாகவே  இருந்தது.

முருகன் சன்னதிக்கு நேர் எதிரே அமர்ந்துகொண்டார் விசாலாட்சி. பேச்சுவார்த்தைக்கு தயாரானது போல இருந்தது அவரது தோற்றம்.

Advertisement

Advertisement

“நீயே உன் முருகன் கிட்டே பேசிட்டு வா. நான் இங்கே உட்கார்ந்திருக்கேன்”, என்று அமர்ந்துகொண்டார் அருண். முருகம்மையும் மகன் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்.

“முருகா.. இது நீ காட்டின சமிக்ஞையா முருகா? எனக்கு புரிஞ்சிக்க தெரியலையா? எங்களை ஒரு குழந்தையை தத்து எடுத்துக்க சொல்றியா? அது தான் எங்களுக்கு விதிச்சதா?  பதில் சொல்லு முருகா?” என்று அந்த மலை  அய்யாவிடம் தன் கேள்வியை முன் வைத்தார் சாலா.

Advertisement

இந்த பழக்கம் சாலாவிற்கு சிறு வயதில் இருந்தே உண்டு. தனக்கு சந்தேகம் வந்தால் முருகனிடம் தான் கேட்பார். முருகனும் ஏதாவது ஒரு வழியில் அவருக்கு பதில் கொடுத்து விடுவார். சில சமயங்களில் பூ விழுந்து ஆமோதிப்பார், சில சமயங்களில் விபூதி குங்குமம் கொண்டு பதில் கொடுப்பார். சில சமயம் கனவில் தோன்றி அருள் புரிவார்.

சாலா தன் கேள்வியை மானசீகமாக முருகன் முன் வைத்துவிட்டு, தனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ் பாடல்களை பாடத் தொடங்கினார்.

தெய்வீக குரல் சாலாவிற்கு. அவர் தன் குரலில் பக்தி சொட்ட சொட்ட பாடுகையில் அந்த முருகனே மெய் மறந்துதான் போய்விடுவார்.

மனமுருக அவர் பாடுகையில், அருணும் முருகம்மை ஆச்சியும் தங்களை மறந்து பாடல்களுடன் ஒன்றிவிட்டனர்.

அப்பொழுது ஒரு இளம் வயது தம்பதியினர் அங்கு வந்தனர். பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல தோன்றினார்கள். அந்த பெண்ணின் கையில் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்தது. 

“சாமி, குழந்தையை தத்து கொடுத்து வாங்க வந்திருக்கோம் சாமி”, என்று அந்த பெண்ணின் கணவன் பூசாரியிடம் கூறினான்.

திரும்பவும் தத்து என்ற வார்த்தையை கேட்டதும், சாலா பாடுவதை நிறுத்திவிட்டு அவர்களை கவனிக்க தொடங்கினார்.

“என்ன விஷயம்? எதுக்கு தத்து கொடுக்குறீங்க? ஜோசியர் சொன்னாரா?” என்று பூசாரி கேட்டார்.

“நாங்க எங்க சாமி ஜோசியம் எல்லாம் பார்க்க போறோம். பிள்ளைக்கு மூணு மாசம் தான் சாமி ஆகுது. குறை மாசத்துல பொறந்துடுச்சு. போன வாரம் ஜுரம் வந்து கண்ண திறக்கவே இல்லை பிள்ளை. எங்க பக்கத்துக்கு வீட்டு கிழவி தான் சொல்லுச்சு.. ‘மலை அய்யாவுக்கு தத்து கொடுத்து அப்புறம் வாங்கிக்கோங்க.. அவன் பிள்ளையை பார்த்துப்பான் அப்படின்னு..’ நாங்களும் தத்து கொடுத்து வாங்கிக்கிறோம்னு வேண்டிக்கிட்டோம் சாமி. அடுத்த நாள் காலையில பிள்ளை சிரிச்சு விளையாடுறான். ஜுரம் மாயமா போச்சு சாமி. அதான் சாமி வந்திருக்கோம்” என்றாள் அந்த பெண்.

“எல்லாம் அவன் செயல். பூசை சாமான் கொண்டு வந்திருக்கீங்களா?”

என்றார்.

கொஞ்சம் பழங்கள், அரளிப்பூ மாலை, வெற்றிலை பாக்கு, என்று ஒரு சிறு தட்டில் வைத்து கொடுத்தனர்.

“போதுமா சாமி, வேறு ஏதும் வேணுமா?” என்றனர் தயங்கிக்கொண்டே.

“தெய்வத்துக்கு தத்து கொடுக்கிறீங்க.. நிறைஞ்ச மனசுடன் கொடுங்க.. முருகன் ஏத்துப்பான்” என்றார்.

பிறகு முருகன் பாதத்தில் வைத்து பூசை செய்தார். முறைப்படி குழந்தையை முருகனுக்கு தத்து கொடுக்கும் பூசையை செய்தார்.

பின் குழந்தைக்கு விபூதி இட்டு, “மறக்காம, குழந்தை கல்யாணத்துக்கு முன்னாடி வந்து சாமிகிட்ட இருந்து நீங்க தத்து வாங்கிக்கோங்க” என்றார்.

“சரிங்க சாமி.. “என்றனர்.

“மறந்துடாதீங்க.. இப்ப இவன் முருகன் பிள்ளை. அவன் பிள்ளைக்கு நீங்க கல்யாணம் செய்ய முடியாது. அவன்கிட்ட திரும்ப வந்து தத்து வாங்கிட்டு போகணும். குறிச்சு வச்சிக்கோங்க.. வீட்ல இன்னும் கொஞ்சம் பேர் கிட்ட சொல்லி வைங்க.. இல்லைனா தெய்வ தோஷம் ஆயிடும் “ என்று கூறி அனுப்பினார்  பூசாரி.

அவர்கள் சென்றதும், சாலாவிற்கு முருகன் தனக்கு பதில் அளித்து விட்டதாக தோன்றியது.

“முருகா… இது தான் எனக்கான பதிலா?” என்று கண்ணீர் மல்க கைகூப்பி நின்றார் சாலா.

அருணும் முருகம்மையும் சாலாவின் அருகில் வந்தனர்.

“என்ன சாலா?”

“முருகன் எனக்கு பதில் சொல்லிட்டான் அத்தை.” 

“என்ன சொல்ற சாலா?” என்றார் அருண்.

“ஏங்க, நம்ம குழந்தையை நாம முருகனுக்கு தத்து கொடுத்துடுவோம். அப்புறம் அவன் கிட்ட இருந்த தத்து வாங்கிப்போம். இது தான் நமக்கு முருகன் வச்சிருக்கிறது. நாம தத்து எடுக்கனும் அப்படின்னு ஜோசியர் சொன்னார் இல்லையா? நாம முருகனுக்கு கொடுத்துட்டு பின்னாடி அவன் கிட்ட இருந்து வாங்கிக்கனும்“

“வாங்க, நாம குழந்தையை முருகனுக்கு தத்து கொடுத்துட்டு வாங்கிக்கிறோம்னு வேண்டிப்போம்” என்று அருணின் கையை பிடித்துக்கொண்டு இன்னும் சந்நிதிக்கு சற்று அருகே சென்றார்.

முருகம்மைக்கு சாலா கூறியதையும் கிரகக்கவே சில நிமிடங்கள் ஆனது. அதற்குள், சாலவும் அருணும், “அய்யா முருகா.. எங்க குழந்தையை உனக்கு தத்து கொடுத்திடறோம். அப்புறம் உன் கிட்ட இருந்து வாங்கிக்கிறோம் முருகா… “ என்று கூறி வேண்டிக்கொண்டார்கள்.

“யோசிக்காம, பெரியவங்ககிட்ட கேக்காம என்ன செய்றீங்க நீங்க ரெண்டு பேரும்” என்று முருகம்மை ஆச்சி கேட்கும் பொழுதே, முருகன் மேலே இருந்த அரளிப்பூ மாலை கீழே விழுந்தது.

முருகா சரணம் என்றனர் சாலவும் அருணும். இதற்கு மேலே அவர்களுக்கு விளக்கம் தேவைப்படவில்லை. முருகனே ஒப்புதல் கொடுத்துவிட்டான் என்று எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.

நடந்ததை  முருகம்மை ஆச்சி கூறவும், “பிள்ளையே பொறக்க வழியை காணும், இதுல நீங்க அந்த கடவுளுக்கே கொடுப்பீங்களாக்கும்?”  என்று மெதுவாக கூறுவது போல அனைவரும் கேட்குமாறு கூறினார் மீனா.

யாரும் அதை பொருட்படுத்தவில்லை.

“ஏன் ஆத்தா?  நாமளா இப்படி வேண்டிக்கலாமா? கோவில்ல அப்படி நடந்துச்சுனா, அவங்க வீட்டு பழக்கமா இருக்கும். நம்ம பக்கம் ஜாதகத்துல தோஷம் இருந்தா தான் சாமிக்கு தத்து கொடுப்பாங்க” 

“அத்தை நான் என் முருகனை நம்புறேன். அவன் எனக்கு இதை தான் சொல்றான்” என்று முடித்துக்கொண்டார் சாலா. 

அருணும், “அம்மா, முருகன் விருப்பம் அது தான்னா அப்படியே நடக்கட்டும்”

முருகா சரணம், என்று கூறி நிறைவான மனதுடன் சாலவும் அருணும் சென்னைக்கு புறப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!