Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Meendum Orumurai – 2

பாகம்- 2(1)

 

வேலினி தன் கையில் இருந்த கைப்பேசியே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் அப்படி ஒன்றும் பெரிய படிப்பாளி அல்ல தான், இருந்தாலும் எந்த பாடத்திலும் ஒருமுறை கூட தோற்றதாக சரித்திரமே கிடையாது.

ஆனால் இன்று ஏழில் ஆறு பாடங்களுக்கு தோற்றுப் போயிருந்தாள். அவளால் அதனை ஏற்க முடியவில்லை. என்ன செய்து வைத்திருக்கிறேன் என்று அவள் மனம் அவளையே திட்டி கொண்டிருந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று சிந்திக்கும் போது, ஆறுமாத காலங்களாக தான் கடந்து வந்த வாழ்க்கை அவள் நினைவுக்கு  வந்தது.



Advertisement

ஆம் அப்போதுதான் வந்தது. அவள் ஆறு மாத காலங்களாக சரியான மனநிலையில் இல்லை. அன்று மயங்கி விழுந்தவள் எழுந்து கொள்ள கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியது.

எழுந்ததும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று அழுது அடம்பிடிக்க, வேலினியின் தாயும் தந்தையும் அவளை அழைத்துக் கொண்டு சென்றனர்.

 

Advertisement

தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் அந்த அறைக்குள் நுழைந்தவளுக்கு அங்கு இருந்தவர்கள் நிலையை கண்டு சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மனதில் அத்தனை வேதனை இருந்தது.

Advertisement

இதே அளவுக்கு குழந்தைக்கும் காயம்பட்டு இருக்குமே என்று மனம் பாதை பதைக்க உள்ளே செல்ல, சரியாக அந்த நேரம் தான் குழந்தை காயத்தின் வேதனை தாங்காமல் உயிரை விட்டிருந்தாள் என்று ஒரு மருத்துவர் அவள் பெற்றோரிடம் கூறினார்.

அடுத்த நொடி தாய் தந்தையர் இருவரும் கதறி அழுக அதற்குமேல் அவர்கள் கதறலை காண முடியாமல் அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றாள் வேலினி.

 

Advertisement

அவளின் தாய் தந்தையர் அவளை பிடித்து இழுத்து மீண்டும் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் செல்ல அங்கு மருத்துவர்கள் அளித்த மயக்க ஊசியின் உதவியோடு உறக்கத்தை தழுவி இருந்தாள்.

ஆனால் அவள் ஆள் மனம், “நீ தவறு செய்து விட்டாய். ஒரு குழந்தையை கொன்று விட்டாய்”, என்றுகூறிக்கொண்டிருந்தது.

அடுத்த நாளே வேலினியை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் வீட்டில் அவள் நிலைமை தான் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எப்போதும் எதையாவது வெறித்துக்கொண்டு சுயநினைவற்று வேதனையின் உருவாக உலா வந்து கொண்டிருந்தாள்.

 

குடும்பத்தினர் தான் அவளை எப்படியோ தேற்றி இரண்டு வாரங்களுக்கு பிறகு கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

அப்போதும் கூட சுற்றி இருக்கும் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் ஏதோ கல்லூரிக்கு செல்கிறேன் வருகிறேன் என்ற நிலைமையில் தான் இருந்தாள். தன்னுடன் இருந்த தோழி தன்னுடன் சரியாக பேசாதது கூட அவள் கவனத்தில் பதியவில்லை.

 

ஆனால் குடும்பத்தினர் தன்னை கண்டு வருந்துவது ஒரு கட்டத்தில் அவள் கவனத்திற்கு வர, அதன் பிறகு அவளும் சற்று தெளிந்து கொண்டாள். இப்போதுதான் அவளுக்கு தன் தோழியான தருணிகா தன்னுடன் பேசவில்லை என்பதும் புரிந்தது.

 

அன்று பேருந்து அத்தனை கூட்டம் இல்லாமல் இருந்த போதும் தருணிகா ஒதுங்கி இன்னொரு இருக்கையில் தான் அமர்ந்திருந்தாள்.  இப்போது இல்லை கொஞ்ச காலமாகவே இப்படி தான் நடந்து கொண்டிருக்க இது என்பதை அப்போது தான் உணர்ந்தவளாக, அதனை எண்ணியவுடன் சட்டென்று அவளை திரும்பி பார்க்க தருணியும் அப்போதுதான் இவளை பார்த்து வெறுப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி விட்டாள்.

வேலினிக்கு அவள் பார்வைக்கான அர்த்தம் அந்த நொடியிலயே புரிந்து விட்டது. “நான் குழந்தையை காப்பாற்றி இருக்க வேண்டும்” என்று எண்ணுகிறாள்.

 

அதனால் தான் இந்த பார்வை என்பதை அவள் புரிந்து கொள்ள, அவளிடம் போய் எதையும் விளக்க முடியவில்லை. தானே குற்ற உணர்ச்சியில் இருக்கும் போது அவளிடம் என்ன விளக்கி விட முடியும் வேலினியால்.

ஏற்கனவே சற்று அமைதியானவள் தான் வேலினி. இப்போது சுத்தமாக யாரிடமும் பேசாமல் அமைதியாகி விட்டாள். கல்லூரிக்கு சென்ற போதும் மற்றவர்கள் பார்வையும் அவளிடம் சற்று வெறுப்பாக தான் இருந்தது.

 

அனைவருமே அவளிடம் ஒதுங்கியே சென்றனர். தருணிகாவும் மற்ற தோழிகளும் அன்று நடந்த விஷயத்தை பற்றி இங்கு சொல்லி இருக்க வேண்டும் என்பது அவளுக்கு அப்போதுதான் விளங்கியது.

 

எந்த கெட்ட பழக்கமும் இல்லை, வெட்டியாக ஊர் சுற்றவும் இல்லை எப்போதும் பொழுதை கைபேசியில் கழிக்கவும் இல்லை, ஓரளவு நன்றாக படிக்கவும் செய்வாள் வேலினி. அப்படி இருக்க அவளுடைய மதிப்பெண்கள் குறைந்து வந்தது கடைசியாக இறுதி பரிட்சையில் தோற்றும் போயிருந்தாள்.

இதை எப்படி வீட்டில் சொல்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை. தன் மேல் நிறைய கனவுகளோடு தன்னை பெற்றவர்களுக்கு தான் என்ன செய்யப் போகிறேன் என்று அவள் மனம் கிடந்து அல்லாடியது.

வீட்டிற்கு சென்றவள் தான் தந்தை வரும் வரை காத்திருந்தாள் அவரும் வீட்டுக்கு வந்ததும் தயங்கி தயங்கி அவர்களிடம் உண்மையை சொல்லிட, அவர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

முதல் மாணவியாக வரவில்லை என்றாலும் நன்றாக படிக்கும் பெண்தானே. இவள் எப்படி இத்தனை பாடத்தில் தோற்றுப் போனாள் என்று அவர்கள் வாட , ஆனால் அதே சமயத்தில், “இவ்வளவுதானா? அடுத்த தடவை சரி பண்ணிக்கலாம்” என்று அவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்லவும் மறக்கவில்லை.

அவர்கள் பெற்றோர் எப்போதுமே அவளுக்கு துணை இருந்தனர். தங்கையிலிருந்து பாட்டி வரை அனைவருமே அவளைத் தேற்றி அடுத்த முறை நன்றாக எழுது என்று கூறினர். அவளுக்கு தான் குற்ற உணர்ச்சி அதிகமாகியது.

பழைய கதையை மட்டும் நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தையும் இவர்களின் எதிர்காலத்தையும் தான் வீண் அடிக்கிறோமோ என்று மனதோடு தவிக்க ஆரம்பித்தாள்.

“இல்லை இதுக்கு அப்புறம் இப்படியே இருந்தா, சரிப்பட்டு வராது. நான் ஏதாவது பண்ணனும். என் குடும்பமே என்னை நம்பி தான் இருக்கு. நான் இப்படி இருக்க கூடாது”, என்று எண்ணிக்கொண்டாள்.

 

அனைவரும் இரவு உணவு உண்டு தூங்க செல்லவும் இவளும் தூங்க சென்றாள்.

 

மறுநாள் காலை விடியலில் வேகமாக எழுந்து தயாரானவள் என்ன நினைத்தாளோ தாயிடம் கோயிலுக்கு சென்றுவிட்டு,  அப்படியே கல்லூரி செல்வதாக தெரிவித்துவிட்டு கோயிலுக்கு சென்றாள். கோவில் அவள் எப்போதும் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரண்டு நிறுத்தம் தள்ளியே உள்ளது.

கோவிலுக்கு வந்தவள், அங்கு புன்னகையுடன் வீற்றிருந்த அந்த முருகனை கடைசியாக சந்தித்த நாள் நினைவில் கொண்டே வந்தாள்.

 

அந்த விபத்து நடப்பதற்கு முதல் நாள்தான் அவளுடைய தாய், “மறுநாள் இரண்டாம் ஆண்டு கல்லூரிக்கு முதல் நாள் செல்கிறாய், கோவிலுக்கு போய் வரலாம் வா”, என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தார்.

மனமுருக அவனை வேண்டி விட்டு வீட்டிற்கு வந்தவள் தான் அதன் பின்னர், இந்த இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் அவனை கையெடுத்து கும்பிடவே இல்லை. அந்த விசயமே அப்போதுதான் அவளுக்கு உரைத்தது.

“என் சின்ன வயசுல இருந்து உன்னை கையெடுத்து கும்பிடறது நான் மறந்ததே இல்ல. ஆனா இந்த ஆறு மாசம் எப்படி உன்னை நான் மறந்தேன், எனக்கே தெரியல?

 

முருகா இன்னிக்கு ஏதோ தோனுச்சு உன்னை பாக்க வந்துட்டேன். இதுக்கப்புறம் என்ன நடக்க போகுதுன்னு எனக்கு தெரியல ஆனா நான் எல்லாத்தையும் சரி பண்ணனும்.

என் குடும்பத்தை பாத்துக்கணும். என் மனசுல இருக்க குற்ற உணர்ச்சி, நான் செத்தாலும் போகாதுன்னு எனக்கு தெரியும். ஆனால் இதை மறந்து வாழ்கிற ஒரு பாக்கியத்தை எனக்கு கொடு”, என்று கூறிவிட்டு முருகனின் திருநீரையும் நெற்றியில் வைத்துக் கொண்டவள் கல்லூரிக்கு பேருந்தில் ஏறி சென்றாள்.

அடுத்த மூன்று வருடம் அவள் கல்லூரி வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்தது என்று கண்டிப்பாக சொல்லிவிட முடியாது. அதே வேதனையும் குற்ற உணர்ச்சியும் மனதின் ஓரம் இருந்து கொண்டு தான் இருந்தது.

 

ஆனால் எப்படியோ கவனத்தை படிப்பில் வைத்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெரும் அளவிற்கு எழுதி சிறப்புடன் கல்லூரி படிப்பை முடித்திருந்தாள் வேலினி.

 

கல்லூரி படிப்பு பெரிதாக தடங்கல் இல்லாமல் முடிந்திருந்தது தான், ஆனால் வீட்டில் பிரச்சனை பல மடங்கு பெருகி இருந்தது. அவளுடைய பாட்டி சிவகாமிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக மாறியது. இதயத்தில் அறுவை சிகிச்சை வரை சென்றது அவரின் உடல்நிலை.

அதற்கு லட்சத்தில் செலவு செய்திருக்க, அதன் பின்னும் கூட அவருக்கு மாதத்திற்கே பல ஆயிரங்கள் மருந்து மாத்திரைக்கு மட்டும் செலவு செய்ய ஆரம்பித்தனர்.

அதனை அவர் தடுத்து பார்த்தும் மற்றவர்கள் கேட்க தயாராக இல்லை. அவர்களுக்கு பாட்டி சிவகாமி அத்தனை முக்கியமானவர் ஆகிற்றே.

அது மட்டும் இன்றி, தன் தையல் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி கொண்டிருந்த ஆறுமுகமும் பணத்தை தன் தாயின் மருத்துவத்திற்கு செலவு செய்ததால் சரியான நேரத்தில் குத்தகையை புதுப்பிக்க முடியாமல் போனது. அதனால் கடையும் அவர் கைவிட்டு போயிருந்தது.

இப்போது ஒரு பலசரக்கடையில் சரக்கு போடும் பணியில் இருந்தார்‌. வீட்டில் இருந்த தாயும் சிறிது சிறிதாக சமையல் வேலையை பெருக்கிதான் பார்க்கிறார், ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

மூன்று வருடத்தில் அவளுடைய தங்கையான குழலின் கல்லூரி படிப்பிற்கான காலமும் வந்திருக்க குழலினியால் அவளுக்கு பிடித்த பொறியியல் படிப்பை படிக்க முடியாமல் போனது.

 

வேலினி பொறியியல் சேரும் முன்பே, “என்னை நான் விரும்பவதையே படிக்க விடுங்கள், அவளுக்கு பொறியியல் கற்றுக் கொடுங்கள்”, என்று கூறினாள்.

ஆனால் அவள் தாய் தந்தை இருவரும், “இரண்டு பேரும் அதையே படியுங்கள்” என்று தெரிவித்திருந்தனர். ஆனால் சூழ்நிலையை மொத்தமாக அவர்கள் முடிவை மாற்றி இருக்க, குழலினி தானாக முன்வந்து தான் கலைக் கல்லூரியில் சேர்ந்து கொள்வதாக கூறினாள்.

அவளுக்கு கிடைத்த மதிப்பெண்ணில் ஒரு அரசு கலைக்கல்லூரியில் அங்கு அவள் கேட்ட கணிதப் பிரிவிலேயே இடம் கிடைத்துவிட, அதனால் பெரிதாக எந்த பணமும் அவர்கள் கட்ட வேண்டிய சூழ்நிலை இல்லாமல் போனது.

அமைதியாகவே கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள் குழலினி. ஆனால் வேலினியால் தான் அதனை தாங்க முடியவில்லை. அவள் விரும்பியதை கூட படிக்க முடியாத சூழ்நிலையில் இப்படி மாட்டிக் கொண்டாளே என்று இருந்தது வேலினிக்கு.

அனைத்துக்கும் குற்றவாளியாக அவள் மனசாட்சி அவளை தான் காட்டியது. உண்மைதான், அவளுக்கு ஒரு எண்ணம் இருந்தது. பாட்டிக்கு இருதய பிரச்சனை வந்ததற்கு காரணம் மன அழுத்தம் அதிகமானது தான் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

சிவகாமி வேற எதை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாக போகிறார்? நிச்சயம் அதற்கு தான் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று அவளுக்கு தோன்றியது.

 

அதன் தொடக்கமாகத்தான் இன்று குழலினி வரை அனைவரையும் அது பாதிக்கிறது என்று மனதின் ஓரம் ஆழமாக பதிந்து போக அவளின் குற்ற உணர்ச்சியின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!