Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 21

அத்தியாயம் 21

விசாகாவும் முத்துகருப்பனும் அங்கே தோட்டத்திற்கு வரும் போது அவர்களை வரவேற்றது குண்டு குண்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது க்ரீம் பன்கள். முத்துகருப்பனுக்கு மிகவும் பிடித்த ஒன்று சாலா செய்யும் க்ரீம் பன்கள். வீட்டிலே செய்யும் க்ரீம் பன், பிறந்த குழந்தையின் கன்னம் போல மிருதுவாக இருக்கும். அதற்குள் அவர் வைக்கும் க்ரீம், கொஞ்சம் மிளகு சேர்த்து காரமும் இனிப்பும்  கலந்து வித்யாசமான சுவையில் இருக்கும்.



Advertisement

இவர்களை பார்த்ததும்  கதிர், “வா முத்து.. உனக்காக தான் எல்லோரும் பன் இருந்தும் வேடிக்கை பார்த்துட்டே உட்கார்ந்து இருக்கோம், சீக்கிரம் வா” என்றான்.

“ஆமாம் மாமா, எனக்கு கூட நண்டு சித்தப்பா தரலை” என்று சோகமாக கூறினான் சேந்தன்.

Advertisement

Advertisement

பாலு “உங்க எல்லாரும்னால தான் அத்தான் வருத்தமா இருக்காங்க.. அதனால் அவங்க சாப்பிடவும் தான் சாப்பிடனும்” என்று ஸ்ட்ரிக்டாக கூறியிருந்தான்.

முத்து கருப்பனுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ‘இவ்வளவு பேர் அன்பு காட்டும் போது நாம் தான் குறையாக நினைக்கிறோமா? என்னுடைய கண்ணோட்டம் தான் தவறு போல’  என்று தோன்ற ஆரம்பித்தது.

Advertisement

பாலுவை வேகமாக தோளோடு அணைத்து கொண்டு, க்ரீம் பன் ஒன்றை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டான்.

“டேய் டாக்டருங்களா… முடியல டா உங்க பாசமழை” என்று நொடித்து கொண்டான் கதிர்.

பின் அனைவரும் க்ரீம் பன்களுடன் ஒன்றிவிட்டார்கள்.

அப்பொழுது சரியாக முருகம்மை ஆச்சியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்க ஆத்தா.. எல்லோரும் ஒண்ணா தான் இருக்கோம்” என்று ஸ்பீக்கரில் பேச ஆரம்பித்தார் அருண்.

“எல்லோரும் ஒன்னாத்தேன் இருக்கீங்களா? நல்லது… ஒரு இடம் கல்யாணத்துக்கு கேட்டு வந்திருக்கு.. கதிருக்கு பார்ப்போமா? என்ன சொல்றீங்க எல்லோரும்? பாவம் பிள்ளை தனியே இருக்கான்ல?” என்றார். போன் ஸ்பீக்கரில் இருந்ததால் அனைவருக்கும் கேட்டது.

வேறு யாரும் பதில் கூறுவதற்கு முன், “அப்பத்தா.. நீ மட்டும் தான் என்ன பத்தி யோசிக்கிற… ஐ லவ் யூ அப்பத்தா… உன்ன மாதிரி நல்ல பொண்ணா பாரு அப்பத்தா “ என்றான் கதிர் உற்சாகமாக.

அனைவரும் சிரித்துவிட்டனர், அவனது அவசர பதிலில்.

அவன் தூத்துக்குடியில் தனியே இருப்பதால் குடும்பத்தை மிகவும் மிஸ் செய்தான். அதே சமயம் அவனுக்கு அவனது வேலை மிகவும் பிடித்திருந்தது. உடனே ட்ரான்ஸ்பர் கேட்டால் அது அவன் வேலைக்கு நல்லது இல்லை. திருமணம் என்றால், உடன் மனைவி இருப்பாள் என்று அவனும் யோசித்து கொண்டே இருந்தான். யாரவது ஆரம்பிக்க மாட்டார்களா என்று இருந்தவனுக்கு அப்பத்தா கேட்டவுடன் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

சாலா, “நல்லா பார்ப்போம் அத்தை.. பொண்ணு தெரிஞ்ச இடமா?” என்று கேட்டார்.

அனைவரின் கவனமும் கைபேசியிடமே.

“நம்ம சொந்தம் தான் ஆத்தா, உங்க மாமாவோட பெரியப்பச்சி பொண்ணு, கோயம்புத்தூர்ல இருக்காங்க இல்ல?”

“நம்ம முத்து ஆச்சியா? பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சே, ஆத்தா? அவங்க ரொம்ப  வந்து போறது இல்லையே?” என்றார் அருண்.

“ஆமாம் தம்பி, அவங்க மாமியார் ரொம்ப இந்த பக்கம் அனுப்பமாட்டாங்க. இப்ப அவங்க தவறி ரெண்டு வருஷம் ஆச்சாம். முத்துக்கு ரெண்டு பொம்பிளை பிள்ளையாம். மூத்தவளுக்கு தான் இப்ப பார்க்கறாங்க. நேத்து மலைய கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருக்காங்க. திடீர்னு எங்க பெரியம்மாவை பார்க்கணும்னு இங்க புருசனையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு வந்துச்சு”

“ஓ அப்பத்தா.. பொண்ணும் வந்துச்சா? எப்படி இருந்துச்சு?” என்றான்  கதிர் இடை புகுந்து.

“டேய்.. சும்மா இருடா பொறுமையா”, என்று அண்ணன்கள் அவனை இழுத்து தங்களுக்கு இடையில் அமர்த்தி கொண்டனர்.

“நம்ம குடும்பத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்… பிள்ளைகள் ரெண்டும் அமைதியா இருக்காங்கன்னு சொன்னேன்.அதுக்கு  மருமகன், என் ரெண்டு பிள்ளைகளும் பார்க்க தான் சாது.. ரெண்டும் வானரங்கள்னு மெதுவா சொன்னாரு… நல்ல மாப்பிள்ளையா இருந்தா என்கிட்ட மட்டும் சொல்லுங்க முதல்ல அப்படினும் சொன்னாரு.. “ என்றார் அப்பத்தா சிரித்து  கொண்டே.

அனைவருக்கும் சுவாரசியம் கூடியது.

“அப்புறம்..” என்றார் வள்ளியும் தெய்வாவும் கோரஸாக.

“ஒரு பையனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு யாருக்காச்சும் அக்கறை இருக்கா? என்னமோ சீரியல் மாதிரி கதை கேக்கறத பாரு மொத்த குடும்பமும்” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் கதிர்.

“அப்புறம் பிள்ளைகளை போய் வயல் எல்லாம் சுத்தி பார்க்க நம்ம சௌந்தரத்துக்  கூட அனுப்பி விட்டிட்டு தான் பேசினோம்.

முத்துவுக்கும் மருமகனுக்கும் நம்ம கூட சம்மந்தம் பேச கொள்ளை ஆசை.

நான் உங்க கூட கலந்துட்டு பேசுறேன்னு சொல்லி இருக்கேன்”

“சரி ஆத்தா.. ஜாதகம் பார்த்துட்டு மேற்கொண்டு பேசுவோமா?” என்றார் அருண்.

“நம்ம கதிர் நட்சத்திரம் பொருந்தி தான் இருக்கு அப்பச்சி”

முருகம்மை ஆச்சியின் பேச்சினில் அவருக்கு இந்த சம்மந்தம் மிகவும் இஷ்டம் என்று தெரிந்தது. அருண் தம்பிகளை பார்த்தார், தம்பிகள் சாலாவை பார்த்தனர். சாலா வள்ளி தெய்வானையை பார்த்தார்.

இருவரும் திரு திருவென முழித்தனர்.

கதிர் நொந்து போய் விட்டான். 

“மாத்தி மாத்தி எதுக்குடா பார்க்கிறாங்க” என்றான் சுப்புவிடம்.

சுந்தரம் தான்  “கதிருக்கு விருப்பம் மாதிரி தான் தெரியுது. மேலே பேசலாமே” என்றார்.

“மாமா..” என்று கதிர் சென்று அவரை கட்டி பிடித்துக்கொண்டான்.

அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர். 

 

“சரி, நான் பேசிட்டு திரும்ப கூப்பிடுறேன்” என்று முருகம்மை ஆச்சி வைத்துவிட்டார்.

“ஆமா, பொண்ணு பேரு என்ன?” என்றான் சுப்பு.

“இப்ப கேளுடா.. இவ்வளவு  நேரம் வாயில கொழுக்கட்டையா வச்சிருந்த?” என்றான் கதிர் கடுப்பாக.

“பொண்ணு என்ன படிச்சிருக்காம், வேலைக்கு போகுதா?” என்றார் தெய்வா.

கதிர் இப்பொழுது திரும்பி தன் அம்மாவை முறைக்கவும் அனைவரும் கப் சிப்.

முத்து தான், “கொஞ்சம் நெருக்கமா வந்தப்புறம் ஆயா எல்லாம் சொல்லுவாங்க கதிர்” என்றான்.

சபையை கலைக்க மனமில்லாமல், அனைவரும் அங்கேயே பேசிக்கொண்டிருந்தார்கள். விசாகா மட்டும் கவலையாக இருந்தாள்.

“என்ன விசா ? ஏன் அமைதியா இருக்க? என்னாச்சு?” என்றார் செந்தில்.

“எல்லா அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி, அண்ணிங்க வந்து நம்ம குடும்பம் பெருசாகிட்டே இருக்கு?”

“ஆமா, அதுக்கு எதுக்கு சோகமா இருக்க?”

“அவங்களுக்கு கல்யாணம் ஆனா, நம்ம குடும்பத்துல ஒரு ஆள் கூட சேருது. ஆனா எனக்கு கல்யாணம் ஆனா, நான் மட்டும் வேற வீட்டுக்கு போய்டனும் இல்ல. “ என்றாள் கவலையாக.

பெண் பிள்ளைகளின் மனநிலை இது தானே. நான் வளர்ந்த வீட்டில் நான் விருந்தாளி மாதிரி வந்து போக வேணுமா? என்று.

“உனக்கு இப்ப கல்யாண பேச்சே எடுக்கலையே?” என்றான் கதிர் யோசனையாக.

வீரா வெற்றியிடம், “நம்ம குடும்பத்துல விரைவில் ஒரு காதல் திருமணம் உண்டு” என்றான். 

வெற்றி அதிர்ச்சியாக பார்க்கவும், சுப்பு, “எப்ப அண்ணா வளருவ நீ? அதிர்ச்சியை குறை. அண்ணிய மட்டுமே பார்த்தா, சுற்றம் கண்ணுக்கு தெரியாது” என்று வெற்றி காலை வாரினான்.

 

“டேய் நான் போலீஸ்காரன். எனக்கு தெரியாதத நீ எப்படி டா கண்டு பிடிச்ச சுப்பு?” என்றான் கதிர் இப்பொழுது.

“கதிரு.. போலீஸ் காரன் தப்பு நடந்த அப்புறம் கண்டு பிடிப்பான். வாத்தியாருங்க தப்பு செய்ய போறவன் முழிய பாத்தே கண்டுபிடிச்சுடுவான்” என்றான் தன்  காலரை தூக்கி விட்டு கொண்டே.

விசா கூறியதை கேட்டு தகப்பன் முவரும் இன்றே மகள் புகுந்த வீட்டிற்கு சென்று விட்டதை போல அமர்ந்திருந்தார்கள்.

“அன்னம், ராத்திரி இங்கேயே சாப்பிட்டுட்டு போய்டலாம்” என்றார் சாலா. 

பெண்கள், இரவு உணவு என்ன சமைக்கலாம் என்று பேசி வேலை செய்பவர்களிடம் கூறி கொண்டிருந்தார்கள்.

பாலு தன் குருவிடம், பாடத்தில் சந்தேகம் கேட்டு கொண்டு இருந்தான். விசாகா முத்து கருப்பனை சைட் அடித்து கொண்டிருந்தாள், யாரும் தன்னை கவனிக்க வில்லை என்று நினைத்து கொண்டு.

அண்ணன்கள், தங்கையின் பார்வையை கவனித்ததை அவள் கவனிக்க வில்லை. 

மீண்டும் அருண் தொலைபேசி அலறியது.

“அப்பத்தா, தீயா வேலை செய்யுது போலயே” என்று கூறினான் வீரா.

“அப்பச்சி.. முத்துக்கு ரொம்ப சந்தோசம் நம்ம விருப்பம்னு சொன்னதும். நாளைக்கு காலையில முத்துவும் மருமகனும் அங்க வந்து உங்களை நேர்ல பார்த்து பேசறாங்களாம்.”

“நாளைக்கேவா? மாப்பிள்ளை பார்க்க வர்றாங்களா?” என்றாள் நல்லம்மை  வேகமாக.

“ஆமா, எப்பயும் பொண்ணு பார்க்கற விஷேசம் போர் அடிக்குது. மாப்பிள்ளை பார்க்க பொண்ணு வரலையா?” என்றாள் வள்ளிமயில்.

இப்பவே கண்ண கட்டுதே என்று வடிவேலு பாணியில் கூறி அண்ணிகளை பாவமாக பார்த்தான் கதிர்.

“சரி அத்தை வர சொல்லுங்க. நீங்களும் புறப்பட்டு வர்றீங்களா?” என்றார் சாலா. 

“இல்லத்தா, எல்லாம் கூடி வந்தா நீங்க ஊருக்கு தானே வரணும். அலைச்சல் வேணாமேன்னு பார்த்தேன்” என்றார் முருகம்மை ஆச்சி.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, இப்பவும் பொண்ணை பத்தி எந்த தகவலும் கூறாமல் வைத்து விட்டார் முருகம்மை ஆச்சி.

கதிர் முத்து கருப்பனை பார்க்கவும், “நாளைக்கு தெரிஞ்சிடும்..விடு கதிர்” என்று ஒரு சிறிய புன்னகை சிந்தினான்.

அவனின் புன்னகையில் சுற்றம் மறந்து அவனையே பார்த்தாள் விசாகா.

இப்பொழுது இதை அன்னமும் சாலாவும் கவனித்து விட்டனர். இருவருக்கும் அதிர்ச்சியே, வேறு யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றி பார்த்தனர்.

இதை கவனித்த அண்ணன்கள் குரூப், விசா வா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாம் என்று அவள் கவனத்தை திருப்பி விட்டார்கள்.

கலாட்டாவுடன் இரவு உணவை முடித்து விட்டு சபை கலைந்தது.

 நாளை மாப்பிள்ளை பார்க்கும் வைபவத்திற்கு தயாரானது அவர்கள் வீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!