Skip to content
Post Views: 2,854
அத்தியாயம் 23
விசாகா ஒரு மாதமாக ஊரில் தன் அப்பத்தாவுடன் தான் இருக்கிறாள். விவசாய அதிகாரிக்கான அரசு குரூப் எக்சாமிற்கு படித்து கொண்டிருக்கிறாள். இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு. அங்கே தினமும் வயல்களை சென்று பார்ப்பதும், அங்கே விவசாயிகளுடன் நேரம் செலவழிப்பதும் என்று பொழுதுகள் இனிமையாக சென்றது பெண்ணிற்கு . அவள் மனதிற்கு ஒரு தெளிவு தேவை பட்டது. அதனாலே ஊருக்கு வந்திருந்தாள்.
Advertisement
இப்பொழுது தை பூசத்திற்காக மற்றவர்கள் அனைவரும் வந்திறங்கினார்கள். தை பூசத்திற்கு முருகம்மை ஆச்சி இல்லம் இரண்டு நாட்கள் முன்னே இருந்தே களைகட்ட துவங்கியது.
இந்த முறை சுந்தரம், அன்னம், முத்து கருப்பன் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். சுந்தரத்தின் அப்பாவிற்கு கண் அறுவை சிகிக்சை செய்திருந்தார்கள். அய்யாவையும் அப்பத்தாவையும் தங்களுடன் வருமாறு நீண்ட நாட்களாக அழைத்து கொண்டிருக்கிறான் முத்து.
Advertisement
Advertisement
“எங்களுக்கு இங்கன தான் வசதி..” என்று ஒரே மூச்சாக மறுத்து விட்டனர். அதில் பேரனுக்கு சற்று மனவருத்தம்.
“ஊருக்கு எப்ப வந்தாலும் முருகம்மை ஆச்சி வீட்லயே இருக்கீங்க.. எங்களுக்கு யாரு இருக்கா?” என்று சுந்தரத்தின் அம்மா வருத்தப்படவும், இங்கே வந்திருந்தார்கள் இம்முறை.
Advertisement
அன்று அனைவரும் குடும்பமாக அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுந்தரத்தின் அப்பா, “என்ன தம்பி, நல்ல இடம், பொண்ணு ஒன்னு வருது.முத்துக்கு தோதா இருக்கான்னு பார்ப்போமா” என்றார்.
சுந்தரம் மகனை பார்க்கவும், முத்து “இப்ப என்ன அய்யா அவசரம்” என்றான்.
“இல்ல முத்து, நீ டாக்டர் படிச்சதனால நாள் செல்லட்டும்ன்னு இவ்வளவு நாள் விட்டோம். ஏற்கனவே தாமதம் தான்” என்றார்.
“நம்ம சொந்தத்துல ஒரு டாக்டர் பொண்ணு, நல்லா சிவத்த பிள்ளையா இருக்கு. பொண்ணுக்கு நிறைக்க செய்வாங்க …பேசுவோமா?” என்றார் சுந்தரத்தின் அம்மா.
முத்து அமைதியாக இருந்தான். இந்த பேச்சு வார்த்தைகளில் அன்னம் சற்று மிரண்டு விழித்தார்.
“என்ன அன்னும்மா?” என்றான் முத்து அவரை கவனித்து.
“ஒன்னுமில்ல தம்பி. ஏதோ யோசனை” என்றார்.
“என்ன யோசனை? நீ பெத்த பிள்ளையா இருந்தா வேற யோசனை வருமா? நீ இல்ல இந்த பேச்சை முதல்ல ஆரம்பிச்சிருக்கனும்? இப்பவும் வேற யோசனையா?” என்றார் சுந்தரத்தின் தாய் நொடித்துக்கொண்டு.
அன்னம் அதிர்ந்து விட்டார் இந்த குற்ற சாட்டில். அவர் கண்ணில் இருந்து பொலபொலவென கண்ணீர்.
“இதுக்கு தான் எங்களை வர சொன்னீங்களா அப்பத்தா” என்று எழுந்து விட்டான் முத்து கருப்பன்.
அவனது ஆவேசத்தை பார்த்து அனைவரும் ஒரு நிமிடம் பயந்தே விட்டனர். எப்பொழுதும் பொறுமையாகவே இருப்பவனிடம் இத்தனை கோவத்தை யாரும் எதிர் பார்க்கவில்லை.
“அது என்ன நீ பெத்த பிள்ளையா இருந்தான்னு ஒரு பேச்சு… நான் அன்னும்மா பிள்ளை தான். அத மனசுல வச்சுகிட்டு பேசுங்க.. என் கல்யாணம் பத்தி அன்னும்மா யோசிக்காமலா என் ஜாதகத்தை பார்த்தாங்க. அது என்ன, குரு பார்வையா? அது இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் எனக்கு வருதாம். தெரியாம பேசாதீங்க அப்பத்தா “
“உன் ஜாதகம் எங்க கிட்ட இல்ல இருக்கு” என்றார் அப்பத்தா.
“உங்ககிட்ட காப்பி கூட இல்லையே தம்பி, எப்படி பார்த்தீங்க? நாங்க, நீங்க வரதுக்கு முன்ன தானே ஜாதகத்தை பார்த்தோம். இன்னும் நாலு மாசத்துக்குள்ளார கல்யாணம் முடிஞ்சுடும்னு சொன்னாரே நம்ம ஜோசியரு “
என்றார் சுந்தரத்தின் அப்பா சுந்தரத்திடம்.
இப்பொழுது சுந்தரம் அன்னம் இருவரும் திரு திருவென விழித்தனர்.
முத்து கேள்வியாக தாய் தந்தையை பார்த்தான். பெரியவர்களும் அவர்களை பார்த்தனர்.
“அது வந்து.. அது வந்து..”
“என்ன அன்னுமா?”
“எனக்கு ஒரு பொண்ணை உனக்கு செய்யனும்னு எண்ணம். கதிர் மாமனார் திடீர்னு உன்ன பத்தி கேக்கவும், ஏதாச்சும் காரணம் சொல்லணும்னு அப்படி சொல்லிட்டேன்”
“யாரு அந்த பொண்ணு?” கோரஸ் குரல், அய்யாவும் அப்பத்தாவும்.
‘காப்பாத்துங்களேன்’, என்று சுந்தரத்தை பார்த்தார் அன்னம்.
“அது வந்து அப்பா, எங்களுக்கே இன்னும் தெளிவு கிடைக்கல. மனசுல ஒரு ஆசை, அவ்வளவு தான்.”
“அப்பத்தா அய்யா எங்களுக்கு ஒரு உரிமையும் இல்ல.. அப்படித்தானே… மனசுல நீ நினைப்ப.. அத கூட நாங்க தெரிஞ்சுச்சுக்க கூடாதா?” என்றார் சுந்தரத்தின் தாய்.
“சும்மா ஏதாச்சும் சொல்லிட்டு இருக்காத… நேரம் வந்ததும் சொல்லுவாங்க.. நம்ம பேரனுக்கு, நல்ல இடமா அமையனும்…அவ்வளவு தானே. தம்பி சொல்ற மாதிரி, நாளைக்கு தை பூசம் முடியட்டும்.. பேசுவோம்.. அந்த வேலன் நல்ல வழி காட்டுவான்” என்று தன் மனைவியை அடக்கி விட்டார் அய்யா.
“இன்னிக்கு சாயங்காலம் நாங்க முருகம்மை ஆச்சி வீட்டுக்கு போறோம். தை பூசத்திற்கு அங்க ரொம்ப விசேஷமா இருக்கும் இல்ல… நீங்க வர்றீங்களா?” என்றார் சுந்தரம்.
“கூட்டமா இருக்கும் தம்பி, நாங்க வீட்ல இருந்தே கும்பிட்டுக்கிறோம். நீங்க போயிட்டு வாங்க” என்று முடித்து விட்டார் அய்யா.
முத்து அன்னத்தை குறுகுறுவென பார்த்தான். அன்னம் வேலை இருப்பது போல எழுந்து உள்ளே சென்று விட்டார்.
அன்று மாலை இவர்களும் முருகம்மை ஆச்சி வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
ஆரவாரமாக வரவேற்றார்கள் இவர்களை.
மறு நாள் காலை தை பூசத்திற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் தை பூசத்தன்று மாலை விசாகாவை முருகனிடம் இருந்து தத்து வாங்கிக்கொள்கிறார்கள் சாலா அருண் தம்பதியினர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது ஒரு புறம். உற்சாகமாக அனைவரும் பேசிக்கொண்டே ஆளுக்கொரு வேலையாக செய்து கொண்டிருந்தார்கள்.
கதிரும் பாலுவும் இரவு தான் வந்திறங்கினார்கள். கதிர் கையில் பெரிய பை எடுத்து கொண்டு வந்தான்.
“என்னடா.. இவ்வளவு பெரிய பை.. ஊரை காலி பண்ணிட்டு வந்துட்டியா?” என்றார் தெய்வா.
“மம்மி.. நம்ம எல்லாருக்கும் நாளைக்கு நான் டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். அதான்”
“டேய் வீரா, இவன் இவ்வளவு நல்லவன் இல்லையே?” என்றான் வெற்றி தம்பியிடம்.
“ஆமா அண்ணா, ஏதோ உள்குத்து இருக்கும்” என்றான் சுப்பு.
“அலெர்ட்டா இருக்கனும் அண்ணாஸ்” என்றாள் விசாகா.
பாலு வழக்கம் போல முத்து கருப்பன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
“நீயே வாங்கிட்டியா.. கொடு பாப்போம்” என்றார் வள்ளி ஆர்வமாக.
“நோ.. பெரிய மம்மி.. நாளைக்கு காலையில தான் பார்க்கணும். நான் சொன்ன மாதிரி லேடீஸ்க்கு பிளவுஸ் ரெடியா?”
“அது எல்லாம் ரெடி.. நீ சொன்ன மாதிரி கோல்டன் பிளவுஸ் ரெடி”
“ஏற்பாடுலாம் பலமா இருக்கே” வீரா.
“நம்ம குடும்பத்து மேல எனக்கு இருக்க அன்பு உங்க யாருக்கும் புரியாது..” என்று கதிர் சிவாஜி கணேசன் பாணியில் வசனம் பேசினான்.
‘சரி சரி.. நாளைக்கு உன் பாசத்தை பார்த்துடுவோம்.. சாப்பிடலாம்’ என்று அனைவரும் இரவு உணவு உண்ண தொடங்கினார்கள்.
“நாளைக்கு காலைல இங்க எல்லார் ட்ரெஸ்ஸும் இருக்கும். அதை போட்டுக்கனும்” என்று கூறி விட்டு கமுக்கமாக படுத்து விட்டான் கதிர்.
——————
காலை ஒவ்வொருவராக எழுந்து வந்து முற்றத்தில் அமர்ந்தனர். அனைவருக்கும் குடிக்க காபி வந்தது.
“எல்லோரும் சல சலக்காம வெள்ளன குளிச்சு கிளம்புங்க” என்று கூறினார் முருகம்மை ஆச்சி.
“ஆமாம், பஸ் ஏற்பாடு பண்ணிருக்கு இல்ல. எல்லோரும் ஒன்னாவே போய்டலாம். லேட்டா கிளம்பக்கூடாது, சரியா ஏழு மணிக்கெல்லாம் புறப்படனும்” என்று கூறினார் சாலா.
“எங்க நம்ம டிரஸ். கொடுங்க.. சட்டுபுட்டுனு கிளம்புவோம்” என்றனர் வள்ளிமயிலும் நல்லம்மையும்.
“கதிர் அண்ணன் எங்க காணும்?” என்றாள் விசாகா.
குளித்து முடித்து நெற்றியில் பட்டையுடன் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று கூறி கொண்டே வந்தான் கதிர்.
வீடே ஆ.. என்று அவனை பார்த்தது.
“என்ன பெரியம்மா இன்னும் யாரும் கிளம்பல?” என்று வேறு சாலாவை கேட்டான்.
“டேய், நீ தானே டிரஸ் தரேன் சொன்ன.. அதுக்கு தான் வைட்டிங்” என்றான் வெற்றி.
“நீங்க இன்னும் எடுக்கலயா? அதோ முருகன் முன்னாடி வச்சிருக்கேன் பாருங்க. முருகனே ஆசீர்வாதம் பண்ணி வச்சிருக்காரு. போய் எல்லோரும் போட்டுட்டு வாங்க”
“நான் போய் பார்க்கிறேன்” என்று வேகமாக சென்றார் வள்ளி.
“நோ… எல்லோரும் அவங்க அவங்க ரூம்ல போய் தான் பிரிச்சு பார்க்கனும். சரப்ரைஸ்..” என்று கூறி அவர் அவர் பெயர் போட்டு வைத்திருந்த கவர்களை எடுத்து கொடுத்தான்.
“என்ன கதிரு உன் முழியே சரி இல்லையே” என்றான் முத்து.
ஹி.. ஹி.. என்று அசடு வழிந்து கொண்டே,”சீக்கிரம் கிளம்புங்க ப்பா.. நானும் போய் என் ட்ரெஸ்ஸ போட்டுட்டு வரேன்..” என்று கூறி தனது கவரை எடுத்து கொண்டு ஓடி விட்டான் கதிர்.
அடுத்து ஐந்து நிமிடங்களில்,
கதிரு…
கதிர்..
டேய்ய்….
என்று பல குரல்களுடன் மீண்டும் ஒன்று கூடியது குடும்பம்.
அனைவருக்கும், நல்ல கிளி பச்சை நிறத்தில் உடை எடுத்திருந்தான்.
கிளி பச்சை என்றால்…. அப்படி ஒரு பச்சை… கண்ணே கூசியது பார்ப்பதற்கு.
“என்ன என்ன.. எதுக்கு எல்லோரும் டென்ஷன்?” என்றான் கூலாக.
“என்னடா கலர் இது.. எப்படி இத போடறது?” என்றான் முத்து.
“ஏன் இந்த கலருக்கு என்ன? ஏன் கலர் பார்க்கிறீங்க. அதை வாங்கி கொடுத்த என் மனசை பாருங்க..” என்றான் அனைவரையும் பார்த்து.
அனைவரும் அவனை முறைத்து கொண்டே நின்றனர். பெண்களுக்கு கிளி பச்சை நிற பட்டு புடவை. ஆண்களுக்கு கிளி பச்சை நிற சட்டையும் அதே கிளி பச்சை நிற கரை வைத்த வேஷ்டியும்.
முருகம்மை ஆச்சி.. “அதானே, பிள்ளை ஆசையா வாங்கியாந்திருக்கான். நல்லா தான் இருக்கு.. நான் போய் புறப்படறேன். விரசா கிளம்புங்க எல்லோரும்” என்று கூறி சென்று விட்டார். அவருக்கு கிளி பச்சை கலர் எப்பொழுதும் பிடிக்கும். அவர் நிறத்திற்கும் வெள்ளை ரவிக்கைக்கும் எடுப்பாக தான் இருக்கும்.
கதிர் சாலாவும் அன்னமும் இருக்கும் புறம் முதலில் திரும்பி, “பெரியம்மா.. நான் நீங்க தூக்கி வளர்த்த பிள்ளை இல்லையா?”
“அன்னும்மா.. நான் உங்க செல்ல பிள்ளை இல்லையா?”
என்றான் ராகமாக.
“நல்ல பிள்ளை போடா..” என்று சாலாவும் அன்னமும் சிரித்து கொண்டே சென்றுவிட்டனர், உடன் அருணும் சுந்தரமும்.
“அப்புறம் மம்மி”
“டேய்… சம்பந்தம் இல்லாம ஏதாவது உளராத.. நான் இதையே கட்டிக்கிறேன்.. உன் மொக்கைய வேற கேக்க முடியாது” என்று தெய்வா சென்று விட்டார். உடன் வள்ளியும் “ஏன்டா.. வேற கலரே கிடைக்கலையா?” என்று புலம்பிக்கொண்டே சென்றுவிட்டார்.
“நெக்ஸ்ட்..” என்று நல்லம்மை வள்ளி மயில் பக்கம் திரும்பினான்
“அண்ணியார்களே… உங்களுக்கு ராமாயணம் தெரியுமா? அதுல சீதை பிராட்டிக்கு எப்படி லட்சுமணனோ அப்படி தான் நான் உங்க ரெண்டு பேருக்கும். அதாவது…”
“தம்பி… நாங்க அந்த சேலையை கட்டிக்கிறோம்… தயவு செய்து ராமாயணம் கதை எல்லாம் சொல்லாதீங்க” என்று கூறிவிட்டு சேலையை எடுத்து கொண்டு சென்று விட்டனர் இருவரும்.
“நல்ல வேலை, பிளவுஸ் அத்தை கோல்டன் கலர் தைச்சிருக்காங்க.. அதுவும் பச்சையா இருந்தா அவ்வளவுதான்” என்றாள் நல்லம்மை வள்ளி மயிலிடம் போகும்போது.
செந்திலும் ராஜாவும் கதிரை முறைத்து கொண்டே “கிறுக்கு பய” என்று திட்டி விட்டு சென்றனர்.
“சப்பாடா… “ என்று கதிர் மூச்சை இழுத்துவிட்டு திரும்பவும், இளைஞர் அணி நின்று கொண்டிருந்தது.
அடுத்து என்ன சொல்வது என்று கதிர் யோசிக்கும் பொழுதே, நான் எல்லாம் இதை போட மாட்டேன் என்றான் சுப்பு.
விசாகா “கதிர் அண்ணே, என்ன காரணம் உண்மைய சொன்னா நான் போட்டுகிறேன்” என்றாள்.
“அண்ணன் ஒரு கோவில் என்றால், தங்கை ஒரு தீபம் அன்றோ..”. என்று சிவாஜி கணேசன் பாடலை பாடவும் அனைவரும் கதிரை அடிக்க துரத்தினர்.
“கேளுங்க நான் என்ன சொல்ல வரேன்னு… எல்லோரும் சும்மா அடிக்க வரீங்க.. என் தங்கச்சி யாரு.. ஒரு விவாசாய அதிகாரி ஆக போறா.. விவாசாயிகளின் நிறம் என்ன.. பச்சை.. அதான் இந்த பச்சை.. “என்று தன கையில் இருந்த பச்சை சட்டையை சுற்றிக்கொண்டே ஓடினான்..
“எப்படி அண்ணா.. உன்னால மட்டும் இப்படி கதை சுத்த முடியுது…” என்று விசாகா சிரித்து கொண்டே தனதறைக்குள் சென்று விட்டாள்.
ஒரு டிரஸ் போட வைக்கறதுக்குள்ள கண்ண கட்டுதே.. என்று கூறிக்கொண்டே திரும்பினான்.
பாவமாக முகத்தை வைக்கவும், “டேய் இந்த கலர் உன் ஆளுக்கு பிடிச்ச கலரா?” என்றான் வீரா.
“ஆடிட்டரு.. மூலக்காரன்டா.. எப்படி கண்டுபிடிச்ச?” என்றான் கதிர்.
“டேய்.. உன் ஆளுக்கு பிடிச்ச கலர்ன்னா நீ மட்டும் போட வேண்டியது தானே” என்றான் வெற்றி கடுப்புடன்.
“அதானே..” என்று பின் பாட்டு பாடினர் பாலுவும் சுப்புவும்.
“அது ஒரு பெரிய கதை..”
“சீக்கிரம் சொல்லி தொலைடா” என்றான் முத்து கடுப்பாக.
“நான் தான்,’நீ தை பூசத்திற்கு வரபோற இல்ல.. நம்ம ரெண்டு பேரும் மேட்சிங் மேட்சிங் டிரஸ் போடலாம்னு’ சொன்னேன் கண்ணுக்கிட்ட. அதுக்கு கண்ணு சொன்னா….’ அது ஓல்ட் பேஷன்.. ஹிந்தி சீரியல்ல எல்லாம் பேமிலி தீம் கலர் டிரஸ் தான் போடுவாங்க.. சோ பொண்ணு பாமிலி ஒரு கலர் மாப்பிள்ளை பாமிலி ஒரு கலர்..’ அப்படின்னு.
‘சரி உங்க பாமிலி கலர் நான் சொல்றேன்.. நீங்க எங்க பாமிலி கலர் சொல்லுங்கன்னு.. ‘சொன்னா”
அனைவரும் தலையில் அடித்துக்கொண்டனர்.
“எல்லாம் சரி தான், வேற கலர் கிடைக்கலையா? நீ அவங்களுக்கு என்ன கலர் சொன்ன?”
“மிட்டாய் ரோஸ்ஸ் …”
“நீயும் அவளும் சேர்ந்தா குடும்பம் அவ்வளவுதான்” என்று தலையில் அடித்து கொண்டனர்.
“ப்ளீஸ்ஸ்ஸ்… போட்டுட்டு கிளம்புங்க டா. இல்லனா என் மானம் போய்டும்.. “ என்று கடைசியில் கெஞ்சவே தொடங்கிவிட்டான் கதிர்.
வேற வழி இல்லாமல் அனைவரும் கிளம்பி வந்தனர் கிளி பச்சை தீமில்.
“சித்தப்பா எனக்கு இந்த கலர் பிடிக்கலை “ என்ற சேந்தனை பைக்ல நாலு ரவுண்ட் என்று லஞ்சம் தருவதாக சமாளித்து அவனையும் தயார் செய்தான்.
ஒரு வழியாக அனைவரும் தயாராகி, பஸ் வர காத்துக்கொண்டிருந்தனர்.
கீங் கீங்.. என்ற ஹாரன் சத்தத்துடன் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது பஸ்.
டேய்ய்ய்…
கதிரு…
எருமை..
என்று மீண்டும் ஒரே அலறல்.
காரணம் வந்து நின்ற பஸ் கிளி பச்சை கலர். பஸ் ஏற்பாடு செய்திருந்தது நம்ம கதிர்.
“நேரமாச்சு…. எல்லோரும் வந்து ஏறுங்க” என்று வந்தான் கதிர்.
“கண்ணை கூசுது.. “ என்று கூலர்ஸ் போட்டு கொண்டு ஸ்டைலாக நின்றான்.
“உவாக்..உவாக்… “
வாந்தி எடுக்கும் சத்தம்.. எல்லாரும் யாரு என்று பார்த்தால், நல்லம்மை..
“டேய்… உன் ஆளு ஆசை பட்டுச்சுன்னு.. இப்படி கண்ணை கெடுக்கிற கலர் எங்க பாத்தாலும்.. பாரு உன் ஆளுன்னால, என் நல்லு வாந்தி எடுக்குறா” என்று கதிருடன் சண்டைக்கு கிளம்பினான் வீரா.
“டேய் டிரஸ் கூட ஓகே.. எதுக்கு டா பஸ் கூட கிளி பச்சை கலர்” என்று கடுப்பாக கேட்டார் ராஜா.
“அப்பா.. தீம் கலர்ன்னா எல்லாம் கிளி பச்சை கலர் தான். அப்ப தான் எபெக்ட் நல்லா இருக்கும்.. என் கண்ணு இம்ப்ரெஸ் ஆகணும் இல்லையா?” என்றான் அப்பாவியாக.
“உவாக்.. உவாக்..” மீண்டும் வாந்தி எடுக்கும் சத்தம்..
“நல்லா.. “என்று வீரா நல்லம்மை புறம் திரும்பினான்,
வாந்தி எடுத்துக்கொண்டிருந்தது இப்பொழுது வள்ளி மயில்.
வெற்றி கொலை வெறியுடன் கதிரை பார்க்கவும், முருகம்மை ஆச்சி தான் கதிர் உதவிக்கு வந்தார்,
“டேய் உங்க பொண்டாட்டி வாந்தி எடுத்தா கதிர் என்னடா பண்ணுவான்.. போக்கத்தவைங்களா.. பச்சை கலர் பார்த்தா வாந்தி வருமா? யாரு கண்டுபிடிச்சா?” என்றார் முறைப்பாக.
“மலையய்யா.. நல்ல சேதியா சொல்லுமய்யா” என்று முருகம்மை ஆச்சி முருகனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு வண்டியில் ஏறினார். அவருக்கு நல்ல செய்தியாக இருக்குமோ என்ற யூகம் இருந்தது.
பின் அனைவரும் பேருந்தில் ஏறினார்கள். பேருந்து அரை கிலோமீட்டர் செல்லுமுன், “வண்டியை நிறுத்துங்க.. நிறுத்துங்க..” என்று கத்தினார் சுந்தரம்.
வண்டி நிற்கவும் அன்னம் வேகமாக இறங்கி வாந்தி எடுத்தார்.
உவாக்.. உவாக்..
இப்பொழுது கதிர் சுந்தரத்தை கேள்வியாக பார்க்கவும்.
“டேய்.. ஏதாச்சும் சொல்லி மானத்தை வாங்கிடாதடா..” என்றார் சுந்தரம் பதறிக்கொண்டு.
முத்து கருப்பன் அன்னத்திற்கு தண்ணீர் கொடுத்து அழைத்து வந்தான்.
மீண்டும் பேருந்து புறப்படவும், “ஊருக்கு வந்ததுல இருந்து காபி.. காபி.. காபி.. தான் எல்லோரும். அதுலயும் அன்னும்மா நேத்து வந்ததில் இருந்து நீங்க குறைந்தது பன்னெண்டு காபி குடிச்சிருக்கீங்க.. வாந்தி வராம என்ன வரும்?” என்றான் கண்டனமாக.
நல்லமையும் வள்ளிமயிலும் பக்கத்தில் அமர்திருந்த தங்கள் கணவர் மீது சாய்ந்து தூங்குவது போல கண்ணை மூடிக்கொண்டர்.
அவன் திரும்பி முருகம்மை ஆச்சியையும் சாலாவையும் பார்த்து, ”ஆயா, இனிமே வீட்ல காபி போட வேணாமுன்னு சொல்லிடுங்க. எல்லாருக்கும் சுக்கை தட்டி போட்டு கருப்பட்டி கலந்து குடிக்க கொடுங்க போதும்” என்றான்.
“அத்தை, நீங்களும் ஒரு கண்ணு வச்சுக்கோங்க.. எல்லாரும் கேடிங்க நம்ம வீட்ல.. யாருக்கும் காபி கிடையாது” என்றான் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்து.
விசாகா பக்கத்தில் இருந்த சுப்பு,”விசா நம்ம இதை ஒத்துக்குவே கூடாது… யாரு சுக்கு கருப்பட்டி எல்லாம் குடிக்கிறது. ஊருக்கு வந்தா தானே பசுமாட்டு பால் கிடைக்குது… அதுவும் சவுந்திரம் அக்கா டிகாஷன் செம” என்றான்.
“பேசாம இரு சுப்பு அண்ணா.. அப்புறம் மிஸ்டர் கருப்பன், பாவற்காய் ஜூஸ், வேப்பிலை ஜூஸுன்னு சொன்னாலும் சொல்லிடுவாரு” என்றாள் நொடித்துக்கொண்டே.
“செஞ்சாலும் செய்வான் சரியான இம்சை டாக்டர்… “என்று மொனங்கினான் சுப்பு.
இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த பாலு இவர்கள் இருவரையும் கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான்.
“டேய்.. நண்டு.. என்ன முறைப்பு.. போடா..” என்றான் சுப்பு .
ஒரு வழியாக அனைவரும் மலைய கோவில் வந்திறங்கினார்கள். சற்று நேரத்திலே கண்ணம்மை குடும்பம் மிட்டாய் ரோஸ் தீமில் கிளி பச்சை தீமோடு இனைந்து கொண்டார்கள்.
இவர்களை தான் கோவிலில் பலரும் ஒரு தினுசாக பார்த்து சென்றார்கள்.
கலகலப்பான பேச்சுக்களோடு.. சின்ன சின்ன வம்பு.. செல்ல கோவம் என்று இவர்கள் குடும்பத்தை கண்ணம்மைக்கு மிகவும் பிடித்து விட்டது. “இப்படியே உங்களோடு வந்துடாலாம்னு இருக்கு” என்றாள் கதிரிடம்.
“வரலாம் ஓகே.. ஆனா இனிமே ஹிந்தி சீரியல் பார்க்கக்கூடாதும்மா .. கண்ணெல்லாம் வலிக்குது” என்றனர் வள்ளியும் தெய்வாவும் பின் இருந்து.
அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.
காலை பூசைகள், அதை தொடர்ந்து அன்னதானம் அனைத்தும் மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது. கண்ணமை குடும்பம் நிறைவான மனதுடன் விடைபெற்று சென்றனர்.
மாலை விசாகாவை முருகனிடம் இருந்து தத்து வாங்கி கொள்ளும் ஏற்பாடுகள் மேற்கொண்டார்கள் இப்பொழுது. வீட்டிற்கு சென்று சற்று நேரம் ஓய்வு எடுத்து வரலாம் என்றார் முருகம்மை ஆச்சி.
சாலாவும் அருணும் தாங்கள் கோவிலியே இருப்பதாக கூறிவிட்டனர். அவர்களுடன் விசாகாவும் பாலுவும் ஆளுக்கொருபுறம் அமர்ந்துகொன்டனர்.
அனைவரும் பின் அங்கேயே அமர்ந்து விட்டனர்.
“வருவாண்டி..தருவாண்டி..மலையாண்டி..” சாலா தன் கணீர் குரலில் பாடத்துவங்கினார்.
அவரை தொடர்ந்து சேந்தன் “ஈசனோடு பேசியது போதுமே.. என்னோடும் பேசு ஸ்வாமிநாதனே..” என்று தன் மழலை குரலில் பாடினான்.
பிறகு முத்து கருப்பன், கதிர், வெற்றி, வீரா, விசாகா, சுப்பு, பாலு என்று ஆளுக்கொரு திருப்புகழ் பாடலை பாடினார்கள். ஒரு தெய்வீக சூழல் அங்கே உருவாகியது.
அனைவரும் கொஞ்சம் உணர்ச்சி வசமாக இருந்தார்கள்.
error: Content is protected !!