Skip to content
Post Views: 3,099
அத்தியாயம் 24
கோவிலின் பூசாரி வந்து சாலாவையும் அருணையும் முன்னே அழைத்தார். விசாகா அப்பா அம்மாவின் இடையில் நின்றுகொண்டாள். மற்றவர்கள் அனைவரும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார்கள்.
Advertisement
பாலு வீடியோ அழைப்பில் இங்கு நடப்பதை தனது ஆயா அய்யாவிற்கு காட்டி கொண்டிருந்தான். அமெரிக்காவில் மகன் வீட்டில் இருந்து அவர்கள் இருவராலும் வர இயலவில்லை. ஏற்கனவே ஒரு முறை இந்த ஆண்டு இந்தியா வந்து சென்றதால், மீண்டும் வருவதற்கு விசா பிரச்சனை இருத்தது.
ஒரு தாம்பாளத்தில் பழங்கள், பூ, வெற்றிலை பாக்கு அனைத்தும் வைத்து இருவரும் பூசாரியிடம் கொடுத்தனர். அதில் தங்கத்தில் செய்த வேல் முருகனுக்கு காணிக்கையாக வைத்திருந்தனர்.
Advertisement
Advertisement
அர்ச்சனை செய்து முடித்து, “இன்றுமுதல் முருகன் தனது குமாரியான முருகம்மை என்ற விசாகாவை அருணாச்சலம் விசாலாட்சி தம்பதியருக்கு தத்து கொடுக்கிறார். இன்று முதல் இவள் உங்கள் மகள், பெற்றுக்கொள்ளுங்கள்” என்று முருகன் பாதத்தில் இருந்த பூமாலையுடன் வெற்றிலை பாக்கு வைத்து அருண் சாலா கையில் கொடுத்தார் பூசாரி.
நெகிழ்ச்சியாக இருவரும் அந்த தாம்பூலத்தை பெற்றுக்கொண்டனர்.
Advertisement
“அந்த மாலையை பொண்ணு கழுத்துல போட்டு விடுங்க” என்றார்.
கலங்கிய கண்ணும் நடுங்கும் கைகளுடன் முருகம்மை ஆச்சி தன் பேத்தி முருகம்மை கழுத்தில் மாலை போட்டு உச்சி முகர்ந்தார்.
“பிரகாரத்தை மூணு முறை சுத்தி வந்து சாமிய நமஸ்காரம் பண்ணிட்டு போங்க” என்றார் பூசாரி.
அனைவரும் சேர்ந்து பிரகாரத்தை சுற்றி வந்தனர். யாரும் எதுவும் பேசவில்லை. அமைதி மட்டுமே அங்கே.
பின் அனைவரும் விழுந்து வேலணை வணங்கிவிட்டு புறப்பட்டனர். சிறியவர்கள் முன்னால் இறங்கினார்கள், பின்னால் பெரியவர்கள் வந்தார்கள்.
“அப்பத்தா, இறங்கிடுவியா? தூக்கிட்டு போணுமா?” என்றான் கதிர் சத்தமாக.
“போடா போடா.. கருப்பு கண்ணாடி போட்டுட்டு நீ கண்ணு தெரியாம விழுந்து வாரமா பாத்து இறங்கு” என்று அவன் காலை வாரினார் அப்பத்தா.
காலையில் இருந்து சாப்பிடாதது, மிகவும் உணர்ச்சி வசமாக இருந்ததும் சாலாவிற்கு லேசான மயக்கத்தை தந்தது. யாரும் கவனிப்பதற்குள், முத்து கருப்பன் முதலில் பார்த்து வேகமாக வந்து அவரை தாங்கி பிடித்துக் கொண்டான்.
பதட்டப்படவில்லை, “அத்தை பார்த்து” என்றான் மெதுவாக.
ஆச்சி.. ஆச்சி..
பெரியம்மா…
அம்மா..
சாலா…
ஆத்தா…
என்று ஏனையவர்கள் அனைவரும் பதறினார்கள்.
“ஒன்னும் இல்லை…நான் கூட்டிட்டு வரேன்… எல்லாரும் இறங்குங்க..” என்றான் முத்து.
“வெற்றி கீழே சீக்கிரம் போய் இளநீர் வாங்கி வை” என்று கூறிக்கொண்டே சாலாவை தூக்கி கொண்டு படியில் இறங்கினான்.
‘எல்லா டைம்லயும் இப்படி அமைதியா இவரால மட்டும் தான் இருக்க முடியும்’ என்று வியந்து கொண்டே வந்தான்.. வேற யாரு குட்டி டாக்டர் பாலு தான்.
கீழே வந்ததும், சாலா முகத்தில் தண்ணீர் தெளித்து, இளநீர் குடிக்க கொடுத்தான் முத்து.
“இயற்கையான க்ளுகோஸ் இது தான்…குடிங்க.. காலையில இருந்து எதுவும் சாப்பிடலை இல்லையா.. விரதம் இருந்தா நிறைய தண்ணீர் குடிக்க சொல்லிருக்கேன் இல்ல அத்தை?” என்றான் கண்டிப்பான குரலில்.
“நீங்க எல்லோரும் என்ன பண்றீங்க.. எப்ப பாத்தாலும் அரட்டை.. அத்தை தண்ணீர் குடிச்சங்கங்களான்னு யாரும் பார்க்கலயா?” என்றான் அனைவரையும் பார்த்து.
சாலா சற்று தெளியவும், பஸ் வர சொல்லுங்க.. புறப்படலாம் என்றார் முருகம்மை ஆச்சி.
பின் அனைவரும் வீடு வந்திறங்கினார்கள்.
அனைவரும் உடை மாற்றி வந்து சற்று இலகுவாக அமர்ந்தனர். ‘காபி..’ என்று மெதுவாக கேட்டான் வீரா.
அனைவருக்கும் மணக்க மணக்க சுக்கு காபி வந்தது.
சுக்கும் கருப்பட்டியும் சேர்ந்து சூடான பானம் இதமாக தான் இருந்தது.
மறு நாள் காலை அனைவரும் புறப்படுவதாக ஏற்பாடு.
“இன்னும் கல்யாணத்துக்கு நாள் ரொம்ப இல்ல. சீக்கிரம் வேலை எல்லாம் பாருங்க..” என்றார் முருகம்மை ஆச்சி.
கல்யாணம் வரை அருண் சாலா ஒரு வாரம், செந்தில் வள்ளி ஒரு வாரம், ராஜா தெய்வா ஒரு வாரம் என்று ஊருக்கு வந்து செல்வதாக ஏற்பாடு.
நல்லம்மையையும் வள்ளி மயிலையும் அங்கு இருந்த மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து வருமாறு முருகம்மை ஆச்சி கூறினார். இரண்டு தம்பதியினரும் புறப்பட்டு சென்றனர்.
நல்லம்மைக்கு கடந்த சில மாதங்களாகவே குழந்தை இல்லை என்ற ஏக்கம் வரத்தொடங்கி இருந்தது. அதனால் முருகா சரணம் என்று மற்றவர்கள் பிரார்த்தணையுடன் காத்து கொண்டிருந்தார்கள்.
நல்ல செய்தியுடன் வீடு திரும்பினார்கள் இருவரும், அனைவருக்கும் மகிழ்ச்சி.
“டேய் அண்ணாக்களே … இப்படி உங்க மனைவிகளை வாந்தி எடுக்க கடுமையா உழைச்சிட்டு.. காலையில இந்த அப்பாவியை குற்றம் சுமத்திட்டீங்களே“ என்று வசனம் பேசினான் கதிர்.
“எல்லாருக்கும் ஸ்வீட் கொடுங்க பெரியம்மா” என்றான் சுப்பு.
“யார் கண்ணும் படாம இருக்கனும்… கல்யாணம் வருது.. ரெண்டு புள்ளைகளும் மாசமா இருக்குதுங்க.. சுத்தி போடனும் ஆத்தா” என்றார் முருகம்மை சாலாவிடம்.
உடனே உப்பும் மிளாகாயும் எடுத்து வந்து அனைவரயும் அமர வைத்து சுற்றி போட்டார் சாலா.
“நாங்க வீட்டுக்கு போய் அப்பா அம்மாவை பார்த்துட்டு அங்கே இருந்து கிளம்பி வந்துடறோம்” என்று சுந்தரம் அன்னத்துடனும் முத்து கருப்பனுடனும் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டார்.
செல்லும் வழியில் முத்து கருப்பனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வரவும் அவன் அதில் கவனமாகிவிட்டான். ‘இன்று எதுவும் பேச முடியலையே.. அத்தை மாமா கேட்டா என்ன சொல்றது’ என்று அன்னம் குழம்பிக்கொண்டே வந்தார். சுந்தரம் அன்னத்தின் கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டார்.
“பார்த்துக்கொள்ளலாம் அனு கவலை படாதே” என்று மெதுவாக கூறினார்.
அருண் தன் தம்பிகளிடம் ”நம்ம எதிர்த்த வீட வாங்கலாம்னு யோசிக்கிறேன்.. விலை தான் அதிகமா சொல்றான்” என்றார்.
“எதுக்கு அண்ணா?” என்றனர் இருவரும்.
அனைவரது கவனமும் இப்பொழுது அருணிடம்.
“சாலா தான் கேக்க சொன்னா” என்றார்.
“இல்ல அப்பச்சி.. ஊரு கண்ணே நம்ம குடும்பத்து மேல தான்.. கொஞ்சம் பொறுமையா செய்வோம்.. எல்லா பக்கமும் காலை வைக்க கூடாது “ என்றார் முருகம்மை ஆச்சி.
“இல்ல அத்தை.. குடும்பம் பெரிசாகுது.. அதான் அந்த வீட்டை வாங்கி.. ஆறு மாடி வைத்து அபார்ட்மெண்ட் மாதிரி கட்டலாம்னு. பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு வீடா இருக்கும்னு யோசிச்சேன்.. உடனே முடியாது இல்லையா? ஒரு வருஷம் குறைஞ்சது ஆகிடும்” என்றார் சாலா தன் யோசனையை.
“எதுக்கு அத்தை தனியா போனும்?” என்று அதிர்ச்சி அடைந்தனர் நல்லம்மையும் வள்ளிமயிலும்.
“அதானே நாங்க தனியா போக மாட்டோம்” என்றான் கதிர்.. உடன் சுப்புவும்.
“இல்லப்பா.. தனியா இருக்கறது தான் சவுகரியம்.. எல்லாருக்கும் பொறுப்பு அப்ப தான் வரும். பக்கத்து பக்கத்துல தானே இருக்க போறோம்.. நாங்க மூணு பேரும் தனி தனியா தானே இருக்கோம்.. நல்ல நாள்.. விசேஷம்னா ஒன்னு சேரலாம்” என்றார் சாலா அமைதியாக.
மேலும் அதை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் கொஞ்ச நேரம்.
விசாகா மெதுவாக சகோதரர்களை அழைத்து கொண்டு வீட்டின் முற்றத்திற்கு வந்தாள்.
வெற்றி பாலுவின் அருகில் அமர்ந்துகொண்டு “டேய் நண்டு.. வர வர நீ உன் டாக்டர் அத்தான் கூட தான் இருக்க. என்னை கண்டுக்கவே மாட்டேங்கற” என்றான் வருத்தமாக.
அவன் பிறந்ததில் இருந்து தூக்கி வளர்த்த பிள்ளை அல்லவா?
“நீ என்ன விட்டுட்டு அமெரிக்கா போய்ட்ட தானே.. அப்ப எல்லாம் வெற்றி அண்ணா.. வெற்றி அண்ணான்னு எவ்வளவு தேடினேன் தெரியுமா?அப்ப அத்தான் தான் என் கூட இருந்தாங்க.. நீ சேந்தன் பொறக்க போறான்னு தெரிஞ்சதும் தானே இந்தியா திரும்பி வந்த. எனக்காக வரலை தானே?” என்றான் பாலு தன் நீண்ட வருட மன குமுறலை.
“தப்பு தான் நண்டு.. இன்னும் அண்ணா மேல கோவமா” என்றான் வெற்றி பாவமாக.
“கோவம் இல்ல அண்ணா.. அப்ப அத்தான் கூட அதிக நேரம் இருப்பேன் இல்ல.. அந்த அட்டாச்மெண்ட்… அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுக்காக உங்கள பிடிக்காதுன்னு இல்ல அண்ணா.. எனக்கு நீங்க எப்பவும் ஸ்பெஷல் தான் அண்ணா” என்று வெற்றியை கட்டி பிடித்துக்கொண்டான்.
“என்ன விசா.. நீ விவசாயம் பண்ணி பயிர் வளர்ப்பியோ இல்லையோ.. இவங்க பாசப்பயிர் நல்லா வளர்க்கிறாங்க” என்றான் கதிர் சூழ்நிலையை கலகலப்பாக்கும் பொருட்டு.
“ஆமா அண்ணா… அடுத்து நம்ம வீட்ல பொண்ணு பொறக்கனும் அண்ணா.. ரெண்டு அண்ணில ஒருத்தருக்காவது பொண்ணு பொறக்கனும்” என்றாள் விசாகா.
“ரெண்டு பேருக்குமே பொண்ணு பிறக்கட்டும்” என்றான் பாலு.
“அப்படியே ரெண்டு பேருக்கும் பையன் பொறந்தாலும் கவலை பட வேண்டாம்மா.. சீக்கிரமா நான் ஒரு சிங்க பெண்ணை பெத்து கொடுக்கிறேன் “ என்றான் கதிர்.
‘அடப்பாவி’ என்று அனைவரும் அவனை பார்த்தனர்.
“அப்புறம் விசாகா, அடுத்து உன் கல்யாணம் தான்” என்றான் கதிர் தங்கையை ஆழம் பார்ப்பதற்காக.
அனைவரும் விசாகா என்ன சொல்ல போறான்னு அவளை தான் பார்த்தனர்.
“நீ தான் அண்ணா கேக்கற… பெரியவங்க ஒன்னும் சொல்லையே” என்றாள் விசாகா.
‘அடிப்பாவி’ என்று இப்பொழுது விசாகாவை பார்த்தனர் அண்ணன்கள்.
“அடுத்து அத்தான் இருக்காங்க.. சுப்பு அண்ணா இருக்காங்க.. அவங்க ரெண்டு பேரும் அக்காவோட பெரியவங்க தானே” என்றான் பாலு.
“இவன் ஒருத்தன்… டாக்டரோடு சேர்ந்து நல்ல பழமா இருக்கான்” என்றான் கதிர் முணுமுணுப்பாக.
“சும்மா.. கேட்டோம் டா.. உனக்கு படிக்க ஒன்னும் இல்லையா?” என்றான் சுப்பு அவனை திசை திருப்ப.
“ஆமாம் அண்ணா.. எனக்கு நாளைக்கு ஒரு அசைன்மென்ட் முடிக்கனும்” என்றான் பாலு கவலையாக.
“சரி சரி.. டாக்டர் ஆகறதுன்னுனா சும்மாவா.. நீ போய் எழுது…போ” என்று அவனை கிளப்பி விட்டனர். பின் அவனை வைத்து கொண்டு பேச முடியாது அல்லவா?
“உனக்கு முத்துவை பிடிச்சிருக்கா?” என்று கேட்டான் வெற்றி விசாகாவிடம்.
“தெரியல அண்ணா.. அப்படி தான் தோணுது” என்றாள் விசாகவும் வெளிப்படையாக.
“அப்ப வீட்ல பெரியவங்க கிட்ட பேசுவோமா?”
“எனக்கு பிடிச்சிருக்கு தான்.. ஆனா அவங்களுக்கு அந்த எண்ணம் இருக்க மாதிரி தெரியலையே” என்றாள் கவலையாக.
“அவன் ஒரு படிப்ஸ்… நல்லவன் நாலும் தெரிஞ்சவன் அப்படின்னு அவனை அவனே நினைச்சிட்டு இருக்கான்… அவனுக்கு விருப்பம் தோன்றது கொஞ்சம் கஷ்டம் தான்” என்றான் வீரா.
வீரா கூறியதை கேட்டு ‘ஹா ஹா ஹா’ என்று கதிர் சிரிக்க தொடங்கிவிட்டான்.
விசாகா முறைக்கவும்,”சரி சரி.. என்ன பண்ணலாம், வீட்ல பேசி பார்ப்போமா?” என்றான் கதிர்.
“நீ தெளிவா உன் எண்ணத்தை சொல்லு.. அப்புறம் பேசுவோம்” என்றான் சுப்பு.
விசாகா நான்கு அண்ணன்களையும் பார்த்தாள்.
“இந்த எக்ஸாம் எழுதிடறேன். வேலை கிடைச்சதும் வீட்ல சொல்லுவோம் அண்ணா. அதுக்குள் மிஸ்டர் கருப்பனுக்கு பல்பு எரியுதான்னு பார்ப்போம்” என்றாள் முடிவாக.
சகோதரர்கள் நால்வருக்கும், முத்து தங்கள் செல்ல தங்கை கணவனாக வருவதில் மகிழ்ச்சியே.
“பல்பு எரியாட்டியும், எரிய வச்சிடலாம் விசாம்மா… கவலை படாதே” என்று தங்கையை ஆதுரமாக அணைத்து கொண்டான் கதிர்.
அதுவரைக்கும் இது நம்ம ரகசியமாவே இருக்கட்டும் என்று முடிவு செய்து கொண்டார்கள்.
——————
மறு நாள் காலை ஒரு அவசர அறுவை சிகிச்சைக்கு முத்து கருப்பன் சென்னையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. அவனது நோயாளி ஒருவர் மிகவும் அபாய நிலையில் இருப்பதாக தொலைபேசியில் மருத்துவமனையில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அதனால் அவன் உடனே புறப்பட வேண்டும் என்று சுந்தரத்திடம் கூறினான்.
இவர்கள் முருகம்மை ஆச்சி வீட்டில் இருந்து காரில் தங்கள் ஊர் சென்றுகொண்டிருந்தனர். உடனே சுந்தரம் தன் தந்தைக்கு அழைத்து, “நாங்கள் வந்து சாமி கும்பிட்டிட்டு கிளம்பறோம் அப்பச்சி.. தம்பிக்கு நாளைக்கு ஒரு ஆப்பரேஷன் இருக்காம். ஒரு டிரைவர் ஏற்பாடு செய்ய முடியும்ன்னா ஏற்பாடு பண்ணிடுங்க” என்று கூறி புறப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்.
வீட்டிற்கு சென்றதும், அன்னம் தன் மாமியாரிடம் தனிமையில், “எனக்கு முருகம்மை ஆச்சி பேத்தி முருகுவை தம்பிக்கு கேக்கனும்னு ஆசை அத்தை. ஆனா இன்னும் கேக்க சந்தர்ப்பம் கிடைக்கல. ஊருக்கு போனதும் கேட்டுட்டு உங்களுக்கு போன் பண்றேன். அவங்க கிட்ட பேசாம சொல்ல கூடாதுன்னு தான் சொல்லலை” என்று கூறி விட்டார்.
அவருக்கும் இதில் மறுப்பு சொல்ல எதுவும் இல்லை. சொல்ல போனால் இது நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நடக்க வேண்டும் என்றும் தன் குல தெய்வத்திடம் வேண்டுதல் வைத்தார்.
“நாள் கடத்தாம பேசிட்டு சொல்லுத்தா… நான் அப்பமே, எதோ வயசான காலத்துல ஆத்தமாட்டாம என்னமோ சொல்லிப்புட்டேன்.. மனசில வச்சிக்காத ஆத்தா.. பத்திரமா போயிட்டு வாங்க” என்று சந்தோஷமாகவே வழி அனுப்பி வைத்தார்.
விசாகா குரூப் எக்ஸாம் மிகவும் சிறப்பாக செய்திருந்தாள். நிச்சயம் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று சந்தோஷமாகவே வலம் வந்தாள். கதிர் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே ஊருக்கு சென்றுவிட்டாள் பெரியவர்களுடன்.
வெற்றி வீரா தம்பதியினர், அன்னம் சுந்தரம் அனைவரும் திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன் கிளம்புவதாக ஏற்பாடு.
அன்னம் கிளம்புகையில் ,”தம்பி நானும் அப்பாவும் கிளம்புறோம். நீ பத்திரமா இருப்பா.. தூங்குனா மறக்காம கதவை பூட்டிக்கிட்டு தூங்கு.. சாப்பிடாம வேலை பார்த்துட்டே இருக்கக் கூடாது.. ஒரு நாள் முன்னே லீவ் சொன்ன மாதிரி வந்துடு.. பத்திரமா போனும் கார் ஓட்டும் போது..” என்று அன்னம் ஆயிரம் பத்திரம் சொன்னார் மைந்தனுக்கு..
“அன்னும்மா.. நான் என்ன குழந்தையா? பத்திரமா இருந்துப்பேன் .. நீங்க போய்ட்டு வாங்க..அங்க போய் உங்க முருகு கூட சேர்ந்து அந்த ஓட்ட வண்டியில அதிகம் சுத்தாதீங்க.. நான் இல்லனு காபி நிறைய குடிக்காதீங்க.. எண்ணை பலகாரம் அதிகமா சாப்பிடாதீங்க..” என்று இப்பொழுது மகன் அன்னைக்கு பத்திரம் கூறினான்.
சுந்தரம் கன்னத்தில் கை வைத்து இவர்கள் சம்பாஷனையை கேட்டுக்கொண்டிருந்தார்.
“ரெண்டு நாள் தான் நாம முன்ன போறோம்.. அவன் வந்துட போறான் பின்னாடியே.. உங்க அலப்பறை தாங்க முடியலையே” என்றார் அன்னத்திடம்.
“உங்களுக்கு பொறாமை “ என்று கணவனிடம் கூறிவிட்டு மீண்டும் முத்துவிடம்,
“தம்பி, அடுத்து உன் கல்யாணம் தான்” என்றார் அன்னம்.
“அதான் பொண்ணு பார்த்து வச்சிருக்கீங்களே.. பேசுங்க” என்றான்.
“பொண்ணு யாருன்னு கேக்கமாட்டியா?”
“உங்க இஷ்டம் தான் அன்னும்மா?”
“நான் பார்க்கற பொண்ணு உனக்கு பிடிக்கலைன்னா?”
“நீங்க நினைச்சிருக்க பொண்ணை எனக்கு நிச்சயம் பிடிக்கும்”
“அடப்பாவி.. நான் கூட உனக்கு அப்படி எண்ணம் இல்லன்னு தானே நினைச்சேன்.. உனக்கு பிடிச்சு இருந்தா .. நீ தானே முதல்ல அந்த பொண்ணு கிட்ட சொல்லணும். நீயே சொல்லி சம்மதம் கேளு.. அப்புறம் நாங்க பெரியவங்க கிட்ட பேசுறோம்”.
“நான் என்ன பேசுறது.. எனக்கு பிடித்தம், எண்ணம் அப்படி எல்லாம் ஏதும் இல்லை. நீங்க தானே பொண்ண பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னீங்க. அதனால இது தான் பொண்ணா இருக்கும் அப்படின்னு ஒரு யூகம் .. அவ்வளவு தான் அன்னும்மா”
“நீ என்ன கழுவுற மீன்ல நழுவர மீன் மாதிரி சொல்ற”
“அது மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை… நீங்க சொல்ற பொண்ணு எனக்கு ஓகே”
“அம்மாவும் பையனும் எந்த பொண்ணை பத்தி பேசிட்டு இருக்கீங்க?” என்று இவர்கள் சம்பாஷணையில் நுழைந்தார் சுந்தரம்.
“எங்க பெரியப்பச்சி மகன் முருகப்பன் அண்ணன் போன மாசம் அவர் பொண்ணை கூட்டிட்டு வந்திருந்தார் இல்லையாங்க .. அந்த பொண்ணு பொண்ணு சிவகாமி, இங்க சென்னைல ஒரு இண்டர்வீயூக்கு வந்திருந்துச்சே.. நம்ம தம்பி தானே கூட்டிட்டு கூட போயிட்டு வந்தான்.. நல்ல பிரில்லியண்ட் அப்படின்னு கூட சொன்னான்னே.. அந்த பொண்ணு தான்” என்றார் அன்னம்.
அதுவரை தனது லாப்டாப்பினுள் தலையை கொடுத்து பேசிக்கொண்டிருந்த முத்து விழுக்கென்று நிமிர்ந்து அன்னத்தை பார்த்தான்.
சுந்தரம் மனைவியின் பேச்சில், கமுக்கமாக சிரித்துக்கொண்டு ,” ஓ, அந்த பொண்ணா? பாக்க நல்லா அழகா தான் இருந்துச்சு” என்று மனைவியின் வழியிலே பேசினார்.
“உங்க அண்ணன் பொண்ணா?” என்றான் முத்து அதிர்ச்சியாக.
“நீ பிரில்லியண்ட்ன்னு பாராட்டி சொல்லும் போதே உனக்கு பிடிச்சிருக்கும்னு நினைச்சேன், கரெக்டா கண்டு பிடிச்சிட்டியே”
“அன்னும்மா அந்த பொண்ணா?” என்றான் உள்ளே சென்று விட்ட குரலில்.
“ஆமா.. நீ வேற யாரையம் நினைச்சயா?”
இப்பொழுது திரு திரு என விழித்தான் முத்து கருப்பன்.
“அது வந்து.. அது வந்து..”
“யாரு தம்பி?”
“நீங்க உங்க முருகுவை சொல்லுவீங்கன்னு நினைச்சேன்..”
“அப்ப உனக்கு முருகுவை பிடிச்சிருக்கா? விரும்புரியா?”
“அப்படி எல்லாம் இல்லை.. நீங்க அவளை தான் சொல்லுவீங்கன்னு நினைச்சேன். நீங்க ஒரு பொண்ணை யோசிச்சிருக்கேன்னு சொல்லவும் எனக்கு அது விசாவா தான் இருக்கும்ன்னு தோணுச்சு”
‘இன்னிக்கு இந்த நழுவுற மீனை பிடிச்சு குழம்பு வைக்காம விட மாட்டேன் பாரு..’ என்று மனதினுள் நினைத்து கொண்டே, “நான் சிவகாமியை தான் நினைச்சேன்.. உனக்கு முருகுவை கட்டணும்னு ஆசைன்னா சொல்லு, யோசிப்போம்” என்று விட்டார்.
முத்து, அப்பா துணைக்கு வருவாரா என்று பார்த்தான். அவர் செய்தி தாளில் மூழ்கி விட்டார்.
“கேட்டு பாருங்க அன்னுமா” என்றான்.
“சிவகாமியையா?”
“விசாகாவை..”
“அப்ப உனக்கு விருப்பம்”
“…….. “
“நீ முதல்ல முருகு கிட்ட பேசு.. அது தான் உண்மையான நேசத்திற்கான மரியாதை. நாங்க ஊருக்கு போயிட்டு வரோம்.. நீ யோசிச்சு முடிவை சொல்லு. எப்பவுமே டிப்ளமேடிக்கா இருக்க முடியாது.. அழுகுற பிள்ளை தான் பால் குடிக்கும்.. உன் காதலுக்கு நீ தான் முயற்சி எடுக்கனும்… நீ முருகுகிட்ட பேசிட்டு அப்புறம் சொல்லு.. நாங்க பெரியவங்க கிட்ட பேசுறோம்” என்று தெளிவாக பேசிவிட்டு சுந்தரத்தை அழைத்து கொண்டு கிளம்பி விட்டார் அன்னம்.
அவன் அன்னம் விசாகாவை தான் பெண் கேட்டு பேசி முறையாக திருமணம் ஏற்பாடு செய்வார் என்று நினைத்திருக்க.. ‘நீ தான் காதலை சொல்ல வேண்டும்’ என்று அன்னம் கூறி சென்றது முதலில் சற்று அதிர்ச்சியாக இருந்தது. யோசிக்க யோசிக்க ஒரு வகையில் அவனுக்கு இது பிடித்து இருந்தது.. ஒரு சந்தோசமான சங்கடமாக இருந்தது.
‘எப்படி சொல்றது தன் விருப்பத்தை?’ என்று யோசிக்க தொடங்கினான் மருத்துவன்.
—————–
error: Content is protected !!