Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 28

அத்தியாயம் 28

பறவைகளின் கீச் கீச் என்ற இனிய கானத்துடன் விடியும் அழகிய காலை பொழுதுகள்.. பசுமையான வயல்கள்.. மாந்தோட்டங்கள்.. சுத்தமான காற்று என்று இயற்கை நிறைந்த கிராமத்தில் மகிழ்ச்சியாக தொடங்கியது விசாகா முத்துகருப்பனின் இல்லறம்.



Advertisement

மூன்று படுக்கை அறை  கொண்ட பழங்காலத்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர். முத்து தஞ்சாவூரில் ஒரு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துவிட்டான். வாரத்தில் ஒரு நாள், சென்னை சென்று அங்கே முக்கிய கேஸ்கள் பார்த்துவிட்டு வருவான்.

இவர்கள் கிராமத்தில் இருந்து தினமும் முப்பது நிமிட மிதிவண்டி பயணம்  அவன் மருத்துவமனைக்கு…  அவசர தேவைக்கு  ஒரு காரையும்  வைத்திருந்தனர். விசாகா ஊரில் இருப்பது போல ஒரு டி.வி.எஸ். வண்டி வாங்கிகொண்டாள். 

Advertisement

Advertisement

சமையல் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளுங்கள் என்று குடும்பத்தார்கள் கூறிய அறிவுரைகளை நிராகரித்து விட்டு நாங்களே பார்த்து கொள்கிறோம் என்றுவிட்டனர் இருவரும்.

வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்துகொண்டனர். விசாகா சுறுசுறுப்பாக இருந்தாலும் முத்து கருப்பன் அளவிற்கு பொறுப்பு கிடையாது. சில நாள்கள் காலையில் விசாகா  வயல்களுக்கு சென்று விடுவாள். அப்பொழுது முத்து கருப்பன் சமையல் செய்து மனைவிக்கும் எடுத்துகொண்டு சென்று கொடுத்துவிட்டு வேலைக்கு செல்வான்.

Advertisement

இரவு முத்துகருப்பன் வருவதற்கு தாமதமாகும். அதனால் விசாகா தான் பெரும்பாலும் இரவு  சமையல். விடுமுறை தினங்களில் இருவரும் சேர்ந்து சமையல் செய்து இதர வேலைகளையும் செய்து கொள்வார்கள்.அன்று ஞாயிற்று கிழமை, இருவரும் காலை உணவை முடித்து  கொண்டு வெளியே செல்ல முடிவு செய்திருந்தார்கள்.

“நேரமாச்சு .. சீக்கிரம் சாப்பிட வா விசாம்மா….” என்று கூறி கொண்டே கருப்பட்டி பணியாரத்தை ஊற்றிக்கொண்டிருந்தான் முத்து கருப்பன்.

“தம்பி, மெல்ல அந்த கருதை வைத்து ஒரு பணியாரத்தை திருப்பி பாரு..”

 

இவனும் திருப்பினான்.

“ஆன்.. கரெக்டா இருக்கு, சீக்கிரம் எல்லா பணியாரத்தையும் திருப்பி போடு”

“ஓகே வா?”

“அடுப்பை குறைச்சு  வைப்பா.. இன்னொரு ரெண்டு நிமிஷம் வேகட்டும்.. அப்புறம்  எடுத்துடு..”

அன்னம் தான் அலைபேசி வீடியோ அழைப்பில் மகனுக்கு பக்குவம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“சரி அன்னும்மா.. இனி நான் பார்த்துகிறேன்.. தேங்க்ஸ்..” என்று அழைப்பை  வைத்துவிட்டான்”

“எவ்வளவு நேரம் கிளம்புவ? இப்ப வர போறியா இல்லயா? முருகம்மா…. முருகம்மா..”

“இதோ வந்துட்டேன் கிரீம் பன்னு” என்று வந்தாள் விசாகா அழகான மாந்துளிர் நிற சுடிதாரில்.

மனைவியாய் அழைக்கும் போது ‘முருகம்மா’ என்று தான் அழைப்பான். இரவில் காதலாய் அழைக்கும் பொழுதுகளில் ‘முத்தம்மா’ என்பான். தோழியாய் இருக்கும் பொழுதுகளில் ‘விசாம்மா’ என்பான்.

ஆக மொத்தம் தங்கமாய் தாங்கினான் பெண்ணவளை..

விசாகா அவனிடம் உரிமையாக சண்டைகள் போட்டாள், அவனையும் போட வைத்தாள். கொஞ்சம் காரம் கொஞ்சம் இனிப்பு என்று இருக்கும் அவனுக்கு பிடித்த கிரீம் பன் போலவே இருக்கும், தன்னவனை ஆசையாக ‘கிரீம் பன்’ என்று அழைத்தாள் விசாகா. சகோதரர்களிடம் பேசும்பொழுதும் கோவமாக இருக்கும் பொழுதும் ‘மிஸ்டர்.கருப்பன்’ என்பாள்.  மற்றவர்கள் முன்பு ‘அத்தான்’ என்ற அழைப்பு மட்டுமே.

“இதோ வந்துட்டேன்…. நைட் தூங்க நேரமாயிடுச்சா இல்லையா.. “என்று நிதானமாகவே வந்தாள்.

அடுப்பு மேடையில் இருந்து வா.. வா.. என்று அழைத்தது கருப்பட்டி பணியாரம். கருப்பட்டி பணியாரம் சாப்பிடனும் போல இருக்கு என்று இரண்டு நாள் முன்பு சொன்னதை ஞாபகம் வைத்து, அதை செய்திருந்த கணவனை கரைகடந்த காதலுடன்  பார்த்தாள்.

 

“சரி சரி வாங்க சாப்பிடுவோம்..” என்று ஆளுக்கு நாலு கருப்பட்டி பணியாரத்தை எடுத்து சின்ன தட்டில் வைத்து கொண்டு அமர்ந்தாள்.

ஊப்..ஊப் .. என்று ஊதி முதல் பணியாரத்தை பிட்டு கணவனுக்கு தான் கொடுத்தாள்.

செல்லமாக அவள் தலையை ஆட்டி விட்டு, “சீக்கிரம் சாப்பிடு.. நேரமாயிடும்” என்று கூறி, பிறகு வேகமாக இருவரும் உண்டுவிட்டு இருவரும் இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கும் ஒரு வாட்டர் பால்ஸிற்கு புறப்பட்டனர்.

இவர்கள் இங்கே தனிக்குடித்தனம் இருப்பதால், அன்னம் சுந்தரம் தனிமையாக உணர்வார்களோ என்று விசாகவிற்கு ஒரு சிறிய நெருடல் இருந்தது. ஆனால்  அதற்கு அவசியம் இல்லை என்பது போல, வீராவும் நல்லம்மையும் சுந்தரம்  வீட்டின் மாடிக்கு குடி பெயர்ந்தனர். புது வீடு கட்டும் வரை இங்கே இருக்கிறோம் என்று கூறிவிட்டனர். கேட்காமலே புரிந்து நடந்துகொள்ளும் உறவுகள் கிடைப்பது வரம் தானே..

அன்னத்தின் பொழுதுகளை வண்ணமயக்கினாள் தமிழினி. தமிழினி என்ற பெயரை வைத்ததே அன்னம் தான். நல்லம்மை மகிழ்ச்சியாக தமிழினியை அன்னத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கினாள்.  

விசாகா வேலைக்கு சேர்ந்து  நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அக்கம் பக்கம் உள்ள பத்து கிராமபுரத்தில் இருக்கும் விவாசியிகளுக்கு யோசனை சொல்வது, அவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது, முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை கூறி அவர்களை வழி நடத்துவது.. என அவளது வேலை சென்றது.

முதலில் இவ்வளவு சின்ன பெண், அதுவும் பட்டணத்து பெண்ணுக்கு என்ன தெரியும் என்று அலட்சியமாய் இருந்த  ஊர் மக்கள், இப்பொழுது அவளது நுட்பமான அறிவுரைகளும், சமயோஜித யோசனைகளும் தந்த எண்ணற்ற பலன்களை உணரத்தொடங்கினார்கள்.

‘படிச்ச புள்ள..’ என்று மெச்சிக்கொண்டனர்.

‘ஆச்சி…’ என்றே மக்கள் பிரியமாக அவளை அழைக்க தொடங்கினார்கள். ‘ஆச்சி சொன்னா சரியா தான் இருக்குமென்று’ நம்பினார்கள்.

அவளுக்கு பிடித்தமான வேலை என்பதால் மிகவும் உற்சாகமாகவே இருந்தாள் எப்பொழுதும்.

இதற்கிடையில் முத்து கருப்பனின் இல்லம் கட்டும் ஆசையை சுந்தரத்திடமும் அன்னத்திடமும் விசாகா கூறினாள். அவர்கள் இருவருக்கும் மிகவும் பெருமை. அந்த வாரமே இருவரும் நேரில் வந்தனர் மகனை பார்க்க. 

“நல்லா யோசிச்சு என்ன பண்ணலாம்னு நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணுங்க தம்பி, நாங்க எப்போதும் உங்களுக்கு துணையா இருப்போம். ஆண்டவன் புண்ணியத்துல நம்மகிட்ட காசு பணம் நிரம்ப இருக்கு. உங்களுக்கு நல்ல மனசு இருக்கு.. நிச்சயம் நீ நினைக்கிற மாதிரி பண்ணிடலாம் “ என்றார் சுந்தரம்.

“எனக்கு உன்னை மகனா கொடுத்த உங்க அம்மாவை நான் வணங்காத நாளே இல்லை தம்பி. அவங்க நம்ம வீட்டை வாழ வைக்கிற சாமி. அவங்களுக்காக, அவங்க பட்ட சிரமத்தை பார்த்து  நீ எடுத்த இந்த முடிவு, ஒரு அம்மாவா எனக்கு வார்த்தையால் விவரிக்க முடியாத பெருமையை கொடுக்குது தம்பி..” என்றார் அன்னம் மிகவும் உருக்கமாக.

“எங்களோடவே வந்துடுங்களேன் அன்னும்மா.. “ என்றாள் விசாகா சலுகையாக.

முத்து கருப்பனிடம் எப்பொழுதும் இருக்கும் இறுக்கமும், கவனமும் குறைந்து ஒரு இலகுதன்மை வந்திருப்பதாக தோன்றியது அன்னத்திற்கு. அதனால் “கொஞ்ச நாள் போகட்டும்.. அப்புறம் பாப்போம் டா..” என்று விட்டார்.

சென்னையில் சுந்தரத்தின் வழிகாட்டுதலின் படி, சுப்பு பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ட்யூசன் சென்டர் ஒன்றை துவங்கினான். அது நல்ல வரவேற்பை பெற்றது. சுப்புவின் இந்த வளர்ச்சி அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்து.

அவனது பயிற்சி கூடத்தில் வருடத்திற்கு பத்து ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி  அளிக்க படுகிறது. அதே சமயம் மற்ற மாணவர்களிடம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றபடியான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அந்த மாதம் கடைசி சனி ஞாயிறு அனைவரையும் தூத்துக்குடிக்கு அழைத்திருந்தார்கள் கண்ணம்மை கதிர் ஜோடி.

அனைவரும் தயாராகினர் தூத்துக்குடிக்கு செல்ல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!