Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சொல்லி விடு வெள்ளி நிலவே

சொல்லி விடு வெள்ளி நிலவே – 13

அன்று மானுவின் மாமா சிவச்சந்திரன் குடும்பம் சகிதம் ஒரு காரில் வந்து இறங்கிய பின், துரித கதியில் அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற்றன.

நல்ல கூட்டம் கூடி விட்டது.

அரசு பேருந்து ஓட்டுனர், பஸ்சை ஓட்டிக் கொண்டு சென்ற போதே நெஞ்சு வலி வந்தாலும் வலியையும் பொறுத்துக் கொண்டு பயணிகள் அனைவரின் உயிரைக் காக்கும் பொருட்டு, பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்திய பின் மயங்கி, பின் உயிரையும் விட்டு விட்டது வேகமாக மீடியாக்களின் மூலம் தெரிந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செய்யவென்று மிக அதிக கூட்டம்!

அதன் பின்னான பாமாவிற்கு செய்யப்பட வேண்டிய, அவரைக் காயப்படுத்தும் சடங்குகள் பலவற்றை தவிர்க்க சொல்லி விட்டாள் அத்தை அமிர்தா!



Advertisement

“அட!” என்று அத்தனை துயரத்திலும் வியந்து மனைவியைப் பார்த்தார் சிவா!

அம்முவா இப்படி பேசுவது?

அதே மாதிரி அடுத்து வந்த பதினாறாம் நாள் காரியத்தின் போதும் உறவினர்கள் கூடி மரியாதை செய்யும் பல சம்பிரதாயங்களையும் தவிர்க்க சொல்லி, மானுவின் கையில் பணமாக கொடுக்க சொல்லி உறவினர்களை ஊக்கினாள் அவள்!

Advertisement

“ஏன்?” என்று கேட்ட போது,

Advertisement

“இந்த பார்மாலிட்டி எல்லாம் செய்றதுனால ஆம்பிளை இல்லாத இந்த வீட்டிற்கு என்ன யூஸ்?

அதுக்கு அதா காசா கொடுத்தாவாச்சும் அவங்களுக்கு செலவுக்கு ஆகும்!” என்று அவள் சொன்ன நியாயம் அனைவராலுமே ஏற்றுக் கொள்ளப் பட்டது!

எல்லோரும் கையில் பணமாக வைத்துக் கொடுத்து சென்றனர்!

Advertisement

இத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிவா, அவ்வளவு நல்லவள் எல்லாம் இல்லையே நீ என்று அம்முவை சந்தேகமாக பார்த்தார்!

உண்மை தான்!

அவள் ஒன்றும் காரணம் இல்லாமல் இவற்றை செய்ய வில்லை.

கூடியிருக்கும் உறவினர் சபையில் வைத்து சிவாவிடம் அவர் தங்கையையும் அவள் பெற்ற பொண்ணையும் நீ தான் உன் வீட்டுக்கு கூட்டி சென்று வைத்து பாத்துக்கணும் என்று சொல்லி யாராவது வாக்கு வாங்கி விடுவார்கள் என்ற பயம் அதிகமாக இருந்தது அவளுக்கு!

அதனால் முடிந்தவரை உறவினர் கூட்டத்தைக் கலைத்து விட எண்ணினாள்.

இவர்கள் பாட்டுக்கு சாங்கியம் சம்பிரதாயம் என்று சொல்லி நீட்டிக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் தங்கை மேல் உள்ள பாசத்தில், இந்த அரைப் பயித்தியத்தையும், அந்த மானுவையும் கூட்டிக் கொண்டு வந்து விடப் போகிறார் என்ற பயம்!

உறவினர்கள் அவரிடம் அப்படி பேசி அவரிடம்  வாக்கு வாங்கிக் கொண்டு,  இதுகளை நம் தலையில் கட்டி விடப்போகிறார்கள் என்ற பயம்!

அதை மனதில் வைத்தே செய்ததே இவையெல்லாம்!

ஆனால் அவள் அத்தனை மெனக்கிட்டும் அதை எல்லாம் ஒருவர் வந்து கலைத்து விட்டார்!

அவர் –  மணி குடியிருக்கும் அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி!

அந்த அம்மாள் வந்து, “என்ன சார் பண்ணப் போறீங்க? வீட்டைக் காலி பண்ணிட்டு இவங்களை உங்களோடு கூட்டிப் போகப் போறீங்களா?

ஒரு ஆம்பிளை துணையில்லாம இப்படி ரெண்டு பொம்பளங்க  எப்படி இங்கே தனியா இருப்பாங்க! பேசாம நீங்க கூட்டிட்டுப் போய்டுங்க சார்! பாவம் அவங்க!” என்று சொல்லியே விட்டார்.

அந்த பெண்மணி அப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை அமிர்தா!

இந்தாம்மா, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கூட்டத்தைக் கலைச்சு விட்டா, இப்படி வந்து எனக்கு ஆப்படிச்சு விட்டிட்டியே? அவள் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக போய் விட்டது!

“நீங்க சொல்றது சரிதாங்கம்மா. நான் அவங்கள என்னோடு தான் அழைச்சிட்டுப் போகப் போறேன்.

கொஞ்சம் வேலைகள் இங்க செய்ய வேண்டியிருக்கு.

மானுவின் அப்பா டெத் சர்டிபிகேட், வாரிசு சரிடிபிகேட் எல்லாம் வாங்கணும்.

மானுவின் எக்ஸாம் முடிந்த பின், அவளை எங்க ஊரில் சேர்ப்பது  பத்தி அவ காலேஜ்ல போய் விசாரிக்கணும்.

இப்படி கொஞ்ச வேலைகள் இருக்கும்மா. அது எல்லாம் முடிஞ்ச பின்னே, நாங்க வீட்டைக் காலி செய்து கொடுக்கிறோம்” என்றார் அவர்.

“சரிங்க. பார்த்து பண்ணுங்க. ரெண்டு மூனு மாசம் எடுத்துக்கங்க. அதுக்குள்ள ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லி சென்றார் அந்த அம்மாள்.

அவரைத் தெருமுனையில் வைத்து சந்தித்தாள் அமிர்தா.

“ஏங்க.. கொஞ்சம் நில்லுங்க.” என்று அவரை வழி மறித்து

“ஏங்க என் வீட்டுக்காரரிடம் போய் அப்படி சொன்னீங்க?

நானே அவர் இப்படி ஏதவாது பண்ணி அதுங்கள என் வீட்டுக்கு கூட்டி வந்திடுவாருன்னு என்னமெல்லாமோ செஞ்சு வைச்சுருந்தா, நீங்க இப்படி பொசுக்குன்னு என் புருஷன் கிட்ட இப்படி பேசி, பாருங்க இப்ப அவர் அதுங்கள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரப் போறார்! வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களோ?” என்று எகிற,

 அந்த அம்மாவுக்கும் கோபம் வந்து விட்டது!

“என்னம்மா சொல்ற நீ? ஊர் உலக நடைமுறையை தானே நான் சொன்னேன். உன் புருசனோட தங்கச்சி தானே அது! அப்ப உங்களுக்கு தானே கடமை!

என் மனசுக்கு நியாயம்ன்னு பட்டதை நான் சொன்னேன் இதில் என்ன தப்பு இருக்கு?”

“உன் நியாயத்தை எல்லாம் உன் வீட்டோட வச்சுக்க, இங்க வந்து எதுக்கு சொல்ற?” ஏக வசனத்துக்கு மாறினாள் அமிர்தா!

இது அந்த அம்மாவின் கோபத்தை அதிகரிக்க செய்தது!

“சரிம்மா.. நீ சொல்றது சரி தான்! என் நியாயத்தை எல்லாம் உன் வீட்டுல வந்து சொல்லல!

ஆனா நான் சொல்லிட்டு வந்த மாதிரி வீட்டை மூனு மாசத்துக்குள்ள காலி பண்ணிடனும்! இல்லன்னா என்னோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க.” அவரும் கோபமாக சொல்லிவிட்டே தன் ஸ்கூட்டியை கிளப்பி சென்றார்!

இவர்கள் பேசுவதை எல்லாம் அருகில் இருந்த பெட்டிக்கடையில் பால் பாக்கெட் வாங்கிக் கொடுக்க வந்திருந்த ரித்து கேட்டுக் கொண்டிருந்தான்!

ரித்துவும் அங்கு அடிக்கடி போய் வந்தான். பாபு அண்ணாவும் சிவாவிடம் சொல்லி விட்டே சென்றிருந்தார்.

“தம்பி, நமக்கு வேண்டியவர், ரொம்ப நல்லமாதிரி.

மணியண்ணன் இறந்த அன்னிக்கு கூடவே இருந்து நிறைய உதவிகள் செஞ்சார்.

நீங்க வரவும் லேட்டாகிடுச்சு அன்னிக்கு. தம்பி மட்டும் இல்லன்னா நானும் கொஞ்சம் கஷ்டம் பட்டிருப்பேன்!” என்று சொல்லியிருந்ததால், சிவாவும் அவனைப் பற்றி பெரிதாக கேட்டுக் கொள்ள வில்லை!

ரித்துவிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது!

அய்யோ, என் குட்டிமாவின் நிலை இப்படி ஆகிடுச்சே! அவங்க மாமா வீட்டுல எல்லாம் அவளுக்கு ஆதரவு கிடைக்காது போலயே!

நாம தான் ஏதாச்சும் பண்ணனும் இப்ப!  எதுவாக இருந்தாலும் சீக்கிரமாக!

மனதுள் முடிவெடுத்தவனுக்கு, இந்த நிலைமை வர மூலக் காரணமாக இருந்த, அந்த ரமேஷ் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

இந்த ஆள் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாமல், சக்தி மாமாவிடம் ஏதோ சொல்லி வைக்க, அவர் மானு அப்பாவைப் பார்த்து ஏதோ பேசியிருக்கார்!

பேசினாரோ, இல்லை மிரட்டினாரோ! இப்போது அவர்கள் மீது அவனுக்கு சந்தேகம் வலுத்தது!

நேரே வீட்டுக்குப் போய் அந்த ரமேஷ் வீடு எது என்று பில்டிங் செக்யூரிட்டியிடம் கேட்டான்.

“செகண்ட் ப்ளோர் தம்பி. அவர் கூட அடிக்கடி உங்களைப் பத்தி கேட்டுகிட்டே இருப்பார்” என்றார் அவர் கூடுதலாக!

“என்னைப் பத்தியா? என்ன கேட்டார்?”

“நீங்க கும்பகோணம் தானா, அடிக்கடி உங்க கூட வருமே அந்த பாப்பா யாரு, அடிக்கடி அதை அழைச்சுகிட்டு வருவீங்களா, இப்படி கேட்டுகிட்டே இருப்பார்!” என்று சொல்ல, ரித்துவிற்கு கோபம் தலைக்கேறியது!

அவர் வீட்டுக்குப் போய் அவர் எங்கே என்று கேட்க, அந்த ரமேஷ் வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று அவர் மனைவியை விட்டு சொல்ல சொன்னார்.

அவருக்கும் மணியின் மரணம் பற்றி தெரிந்து இருந்தது. அவர் சாவுக்கு தானும் ஒரு காரணமோ என்ற குற்ற உணர்வு அவருள் எழுந்து, ரித்துவை சந்திக்கவே பயந்தார்!

ஒரு வயது பையன். அதுவும் தனக்கு தெரிந்த வீட்டுப் பையன், இப்படி அடிக்கடி ஒரு பொண்ணை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து வந்து போறானே, இது தப்பாச்சே என்று நினைத்தே, அவன் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லி கண்டிக்க சொல்லலாம் என்று நினைத்தார் அவர்!

மேலும் ரித்துவைப் போன்ற பணக்காரப் பையன்களை இப்படி பெண்பிள்ளைகள் கூட சேர்ந்து சுற்றுவது அவருக்குப் பிடிக்கவில்லை!

ஆனால் மானு மணியின் பெண் என்று அறிந்த பின் அவர் பின் வாங்க தான் நினைத்தார். ஆனால் சக்தி விட வில்லை. அவரை சந்தித்து பேசியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, வேறு வழியில்லாமல் தான் கூட சென்றார்.

சக்தி , மணியிடம் உங்க பொண்ண கண்டிச்சு வைங்க என்று சொல்லி விட்டு வருவார் என்று இவர்  எதிர்பார்த்திருக்க, நடந்ததோ வேறு!

சக்தி இப்படி கீழ்த்தரமாக பேசுவார் என்று அவரும் எதிர்பார்க்க வில்லை!

மணியும் சரியான பதிலடி கொடுத்து விட்டே சென்றதால், அத்தோடு முடிந்தது என்றே நினைத்தார்.

ஆனால், மணிக்கு அது மிகப்பெரிய மன உளைச்சல் கொடுத்து கடைசியில் அவர் உயிரையே பறித்துவிடும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை!

அதனால் அவர் ரித்து எப்படியும் இதை தெரிந்து கொண்டு வந்து விடுவான். அப்படி வந்து விட்டால் அவனை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தார் அவனிடமிருந்து!

ஆனால் எத்தனை நாள் முடியும்?

ஒரு நாள் கடைக்கு சென்று விட்டு இரண்டு கையிலும் கனத்த பைகள் சகிதம் தன் வீட்டுக் காலிங்பெல்லை அடித்துக் கொண்டிருந்தவரை ரித்து பார்த்து விட்டு, அவர் வீட்டுக்குள் சென்று, அவர் கழுத்தையே பிடித்து விட்டான்!

“ஏய்.. யாருப்பா, நீ, என்ன பண்ற? விடு அவரை!” அவர் மனைவி கத்திக் கொண்டு வந்து அவனைத் தடுக்க முற்பட்டாள்.

“உனக்கு ஏன் இந்த வேலை? பாங்குல வேலைப் பார்த்தமா, வீட்டுக்கு வந்து உன் பொண்டாட்டி பிள்ளைங்கள பார்த்துகிட்டமான்னு இல்லாம, எதுக்கு அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கிற?

எட்டிப் பார்த்து உளவு சொல்ற? உனக்கே இது அசிங்கமா இல்ல? உன்னால் இப்ப ஒரு உசிரே போயிடுச்சு, ரெண்டு பொம்பளங்க இப்ப ஆதரவு இல்லாம தவிக்கிறாங்க! நான் தெரியாம தான் கேக்குறேன் உனக்கு ஏன் இந்த எட்டப்பன் வேலை?” என்று சொல்லி அவர் குரல்வளையை அழுத்தினான்.

“எப்பா..  தம்பி விடு அவரை, என்ன நடந்ததுன்னு சொல்லு முதல்ல!”

“உங்க புருசனையே கேளுங்க ஒரு குடியை கெடுத்த கதையை சொல்லுவாரு. இந்த பாவம் எல்லாம் உங்க பிள்ளைங்கள தான் தாக்கும் அதையும் மனசுல வச்சுக்கங்க” என்று கோபமாக சொல்லி அவர் கழுத்திலிருந்து கையை எடுத்தான் ரித்து!

“என்னங்க நடந்துச்சு. இந்த பையன் என்னென்னமோ சொல்றாப்ல?” அவர் மனைவி கேட்க, நடந்த அனைத்தையும் சொன்னார் ரமேஷ்!

கூடவே தான் எண்ணி இருந்ததையும் சொன்னார்!

கேட்டுக் கொண்ட அவர் மனைவியும் அவரைத் தான் திட்டினார்.

“உங்களுக்கு ஏங்க இந்த வேண்டாத வேலை! இவங்க குடும்பமே ஒரு திமிர் பிடிச்ச குடும்பம்! ஜாதி வெறியனுங்க. எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி செய்திருக்க கூடாது!

ஏங்க.. கூட வேலைப் பார்க்கிற உங்களையே அவங்களுக்கு ஈக்வலா உள்ள ஜாதின்றது னால தான் வீட்டுக்குள்ளையே சேர்த்தாங்க! அவங்களப் பத்தி நல்லா தெரிஞ்சும் நீங்க இப்படி பண்ணியிருக்க கூடாது” என்று அவரும் ரமேஷை கண்டபடி திட்டினார்.

“சொல்லி வைங்க. உங்க புருசன்கிட்ட. என் விசயத்துல இனிமே தலையிடக்கூடாதுன்னு” என்று எச்சரிக்கை கொடுத்து விட்டு வந்தான் ரித்து.

அதன் பின் அவன் மானுவை அவர் கண் பார்க்க அடிக்கடி வீட்டிற்கு கூட்டி வந்தான். அவர் பார்ப்பது தெரிந்தால், வேண்டுமென்றே மானுவின் தோளில் கைப்போட்டு செல்வான்!

மானுவின் வீட்டிலிருந்து  அவளது மாமாவை போன் மேல் போன் போட்டு வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு விட்டாள் அமிர்தா!

அய்யப்ப சீசன் ஆரம்பித்து விட,  அவரது ட்ராவல்ஸ் பிசியாகி விட்டிருந்தது. உண்மையிலேயே டிரைவர் பற்றாக்குறை இருக்க அவரும் சவாரி சென்று விட்டார்.

பாபுவை அழைத்து, “மணியின் டெத் சர்டிபிகேட், பி எப் க்லைம் போன்ற சான்றிதழ்கள் பெற குட்டிமாவை நீ தான் கூட்டிட்டு போகணும்” என்று கேட்டுக் கொண்டார், ஆரம்ப கட்ட வேலைகளை மட்டும் அவர் பார்த்து விட்டு.

“சரிண்ணே” என்று சொல்லி பாபு அவளை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அழைத்துப் போனார்.

இடையில் அரசு விடுமுறைகள் வந்து விட்டதால், அந்த  வேலைகள் கொஞ்சம் நின்று விட்டிருந்தன.

அதற்குள் பாபு அண்ணாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட ஹாஸ்பிட்டலுக்கு அலைந்து கொண்டிருந்த அவரை தானும் தொல்லைக் கொடுக்க கூடாது என்று எண்ணிய மானு, தானே தனியே சென்று வந்தாள் அந்த அலுவலகங்களுக்கு!

ஆனால்  வேலை மட்டும் ஆக வில்லை. நாளைக்கு வாங்க என்றோ அல்லது சம்பந்தப்பட்ட ஆள் லீவ், சீட்டில் இல்லை என்று அலைகழித்தார்கள்!

மானு தனியே சென்று வருவதை தெரிந்து ரித்து அவளைத் திட்டி விட்டு, அவனே அழைத்துப் போக ஆரம்பித்தான்.

ஒரு நாள் , அங்குள்ள கீழ்நிலைப் பணியாளர் ஒருவர் அவனைத் தனியே அழைத்தார்.

“தம்பி, நீங்க உள்ளே போய் பாருங்க தம்பி, இந்த பொண்ணு போனா வேலையே ஆகாது! இப்படியே வந்து வந்து போய்க்கிட்டு இருக்க வேண்டியது தான்!” என்றார் அவர்.

“ஏன் அப்படி?” என்று கேட்டதுக்கு

“இது பொம்பளை பிள்ளை தம்பி. அதுவும் சிறு வயசுப் பொண்ணு!  இது கிட்ட காசு கேக்கவே மாட்டாங்க. இதே கிராமத்து வயசான பொம்பளையா இருந்தாவோ இல்ல உன்னை மாதிரி ஆம்பிளை ஆளாவோ இருந்தா நேரிடையாவே கொஞ்சம் செலவாகும்னு சொல்லி கேட்டுடுவாங்க. இவங்க கிட்ட கேக்கவே மாட்டாங்க. அதே சமயம் காசு வாங்காம வேலையும் செய்ய மாட்டாங்க!”

“ஏன் அப்படி? என்று மீண்டும் கேட்டதுக்கு,

“இது சோசியல் மீடியா காலம் தம்பி, இந்த மாதிரி படிச்ச பொண்ணுங்க கிட்ட காசு கேட்டுட்டா, அத அவங்க போனில் ரெக்கார்ட் பண்ணி மாட்டிவிட்டுடுவாங்களோன்னு ஒரு பயம் தான்!

அதான் தம்பி. நீங்க போய் பேசுங்க” என்று நடைமுறை யதார்த்தத்தை சொன்னார் அவர்.

சொன்ன அவரின் கையில் ரூபாய் நோட்டொன்றை கொடுத்தவன், உள்ளே சென்று “பேசிய” பின் துரித கதியில் வேலைகள் நடக்க தொடங்கின!

மானு, இன்னமும் பழைய மாதிரி ஆகவில்லை!  இன்னமும் கண்ணில் சோகத்துடன்தான் இருந்தாள். சிரித்தாலும் கூட, அவளது பழைய சிரிப்பு காணாமல் தான் போயிருந்தது.

இயந்திர கதியில் இருந்தாள். அவளிடம் மாறாத ஒன்று , அவள் ரித்து மேல் கொண்டிருந்த நம்பிக்கை மட்டுமே!

இயந்திரகதியில் அவன் சொன்னபடி செய்வதையே வழக்கமாக்கி விட்டிருந்தாள்!

அவனும் அவளுக்குப் பிடித்தவற்றை வாங்கி கொடுத்தும் பார்த்து விட்டான். ஆனாலும் பயனில்லை!

பொங்கல் பண்டிகை வந்தது.

அவன் அம்மாவும் தன் பிசினஸ் ட்ரிப்களை எல்லாம் முடித்து விட்டு ஊருக்கு வரவிருந்ததால், வேறு வழியில்லாமல் அவனும் அங்கு செல்லவேண்டியிருந்தது!

கல்லூரியும் பத்து நாட்கள் விடுமுறை வேறு. வீட்டுக்குப் போகாமல் இருக்க முடியாது.

மானுவின் வீட்டில் அவளின் அப்பாவிற்கு கொஞ்சம் முன்னதாக பொங்கல் படைத்து கும்பிட்டார்கள். அதற்கு  வந்த சிவாவை உடனே அழைத்து சென்று விட்டாள் அமிர்தா.

மானுவும் அவள் அம்மாவும் மட்டும் தனித்து!

இது அவர்களுக்கு ஏற்கனவே பழக்கம் தான் அவள் அப்பா இருந்த போதே!

அவர் பணிக்குப் போய் இருப்பதாக நினைத்துக் கொண்டு அம்மாவுடன் தனியாகவே இருந்தாள் மானு.

தன் வீட்டுக்கு சென்ற ரித்து, அவன் அம்மாவிற்கு தெரியாமல் அவன் சக்தி மாமாவைப் பார்த்து பேசினான்.

“என்ன பேசுனீங்க, குட்டி..  மானுவின் அப்பாகிட்ட? நீங்க பேசிட்டு போனதுக்கப்புறம் அவருக்கு நெஞ்சு வலி வந்து செத்தே போய்ட்டாரு தெரியுமா?”

“ம்ம். தெரியும். கேள்விப்பட்டேன், பரவாயில்ல ரோசக்காரன் தான்! மானஸ்தன் தான் போல! அவன் பொண்ணு எப்படின்னு தெரியல!” என்றார் நக்கலாக.

“வேண்டாம் மாமா. போதும் இத்தோட நிறுத்திக்கோங்க. என்னோட வாழ்க்கையில நீங்க தலையிடாதீங்க. மரியாதையா இருக்காது!” ரித்து அவரை எச்சரித்தான்.

“என்னடா நிறுத்தணும்? எத நிறுத்தணும்? என் தங்கச்சி பையனை கட்டிக்க,   நீ நான்னு போட்டிப் போட்டுகிட்டு நாங்க மூனு பேரும் பொண்ணுங்களை பெத்து வச்சுட்டு இருக்கோம். நீ என்னடான்னா, குடியிருக்க சொந்தமா ஒரு குச்சி வீடு கூட இல்லாத ஒருத்தன் பொண்ணைப் போய் கட்டிக்க போறேன்னா சும்மா இருக்க முடியுமா?  அதான் அந்த டிரைவர கூப்பிட்டு பொண்ண கண்டிச்சு வைன்னு சொல்லிட்டு வந்தேன். இதுல என்ன தப்பு?”

“என் கல்யாணம், என்னோட சொந்த விஷயம்! அதில நீங்க யாரும் தலையிட வேண்டியது இல்ல!

என் மம்மி சம்மதம் இருந்தா மட்டும் போதும் எனக்கு! மம்மி ஒண்ணும் உங்கள மாதிரி காட்டுமிராண்டி கூட்டம் இல்ல!

என் ஆசை, என் சந்தோசம் அதான் அவங்களுக்கு முக்கியம்!

என்னோட லவ்வை நிச்சயம் அவங்க புரிஞ்சி ஏத்துப்பாங்க.

ஏன்னா அவங்களே அந்த காலத்துல காதலிச்சு கல்யாணம் செய்தவங்க தானே!

நீங்க மட்டும் அவங்கள அன்னிக்கு ஆதரிச்சு ஏத்துக்கிட்டு இருந்திருந்தா, என் அப்பாவும் இந்நேரம் உயிரோட இருந்திருப்பார்!

அன்னிக்கு அவங்களுக்கு கிடைக்காத ஆதரவை மம்மி நிச்சயம் எனக்கு கொடுப்பாங்க!”

“ம்ம். கொடுப்பா. கொடுப்பா, நாங்க கொடுக்க விட்டுடுவோமா?” கொக்கரித்து விட்டு சென்றார் சக்தி.

அவர் போனவுடன் அவர் பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தான் ரித்து.

குடியிருக்க ஒரு குச்சி வீடு கூட இல்லாதவன் மகள்! இந்த வார்த்தை திரும்ப திரும்ப அவன் மனதில் வட்டமடித்தது!

கூடவே அந்த மானுவின் வீட்டு ஓனரம்மா சொல்லி விட்டுப் போய் இருந்த கெடு!

பேசாமல், எனக்கு என் அப்பா வழி சொத்தாக எனக்கு கிடைத்த அந்த ப்ளாட்டை குட்டிமா பேருக்கு மாத்திட்டா என்ன என்ற யோசனை அவனுள் வலுத்தது.

நான் மேஜர். என் சொத்துப் பத்தி நான் எடுக்கும் முடிவை யாராலும் தடுக்க முடியாது! மம்மியே கூட.

மம்மி என்ன சொல்லுவாங்க? தெரியவில்லை! முதலில் மாத்தி விடுவோம். பின்னாடி ஒரு நாள் மம்மிகிட்ட சொல்லி விடலாம் என்று முடிவெடுத்தவன், அவனுக்கு தெரிந்த வேறு ஒரு டாகுமென்ட் ரைட்டரைப் பிடித்தான்.

அவன் அம்மா அனுப்பி அவன் நிலம் வாங்கிப் போட்ட அந்த ரியல் எஸ்டேட் நபரைக் கவனமாகவே தவிர்த்திருந்தான்!

ஆனால் அந்த பத்திரம் எழுதுபவர் வேறு ஒரு குண்டைப் போட்டார்.

வீட்டோட வேல்யூ ஜாஸ்தி தம்பி! பத்திர செலவு நிறைய ஆகும்!

எவ்வளவு என்று அவன் கேட்க அவர் சொன்ன தொகை அவனை கொஞ்சம் தலை சுற்ற வைத்தது!

அய்யோ அவ்வளவு பணம் என்கிட்ட இருக்காதே! வெளியில் ஏற்பாடு செய்தாலும் மம்மிக்கு தெரிந்து விடும்! என்ன செய்யலாம் என்று அவன் குழம்பிய போது, அவரே ஒரு வழியையும் சொன்னார்.

“பெரிய முடிவு தம்பி. நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க. சரின்னா நானே எல்லா ஏற்பாடும் பண்ணி தரேன்!

அதிக செலவில்லாம நீங்க நினச்சதை செய்ய இது ஒண்ணு தான் வழி” என்றார்.

அந்த வழி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!