Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 15

அருண் சொன்னது போலவே தமயந்தியை அந்தப் பிரச்சனையில் யாருமே இழுக்கவில்லை. அருணையும் அந்த பையனையும் மட்டும் எளிமையாக  விசாரணைக்கு அழைத்து புத்திமதி சொல்லி அனுப்பிவிட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில் அதை எல்லோரும் மறந்தே போனார்கள். தமயந்திக்கு ஆச்சரியம் என்றாலும் பூமியின் வருகை வேறு எதையும் சிந்திக்க விடவில்லை. இடையில் அருண் அவளை தவிர்த்ததெல்லாம் மறந்தே போனாள். 

பூமிக்கு பூர்ணிமாவுடன் பழகுவதில் கொஞ்சம் தடுமாற்றம்தான். அதிலும் பூர்ணிமா எங்கு வந்தாலும் கூடவே  மற்ற மூவரும் அவளுடன் சேர்ந்து வருவார்கள். தமயந்திக்காக பொறுத்துக்கொண்டாள்.  ஆறு பேர் சேர்ந்து ‘ஷாப்பிங்’ சென்றார்கள். பூர்ணிமாவின் ஆரவாரம்,துள்ளல் பூமிக்கு “இவ யாரு இவ கள்ளு குடிச்ச கொரங்காட்டம்” என்று கோபம் வந்தது. புவன் எப்போதும் அவள் அருகிலேயே இருப்பதால் வரும் எரிச்சலா என்று தெரியவில்லை!!

அடுத்து இருபது நாட்களில் பூமி ஐநூறு பேருக்கும் மேல் அமரும் அரங்கத்தில் பாட்டு கச்சேரியில் பாடப் போகிறாள். உள்ளுக்குள் படபடப்பு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் ‘ஜாலி’யாக வலம் வந்து கொண்டிருந்தாள்.

புவன் “என்ன இந்த வாட்டி யாரும் கிண்டல் பண்ணாம பாத்துக்கணுமா சொல்லு என்னால பாத்துக்க முடியும்”



Advertisement

பூமி “அதெல்லாம் எதுவும் தேவையில்லை நான் நல்லாவே பாடுவேன்”

புவன் “அப்படியா எங்க பாடி காட்டு கேட்போம்”

பூமி “முடியாது கச்சேரியிலதான் பாடுவேன்”

Advertisement

புவன் “அப்புறம் நான் எப்படி கேட்கிறது”

Advertisement

 பூமி “கச்சேரிக்கு வா வந்து கேளு”

புவன் “அப்போ நாங்க பாட்டுக்கு கச்சேரிக்கு வரலாம் அப்படித்தானே”

இவர்கள் சம்பாஷணையை கவனித்த சிரஞ்சீவி “வெக்கமே இல்லடா உனக்கு” 

Advertisement

அந்த அரங்கமே புவன் குடும்பத்தினருடையது  தான். அதிலும் அந்த அரங்கத்தில் இருக்கும் ஒரு அறையில் தான் அவன் ‘செஸ் ப்ராக்டீஸ்’ செய்வான். அந்த அரங்கம் மனதளவில் புவனுக்கு நெருக்கம் என்பது அறிந்ததால்தான் அவளுக்கு அங்கு கச்சேரி செய்ய பிடிக்கவில்லை.அதுவே திருவாரூர் சென்று வந்ததிலுருந்து ஒரு மாற்றம். அவள் பழகிய ராகங்கள் அவளுக்கு ஆறுதல் கொடுத்தது. இப்படி ஒரு தெளிவு பிறக்குமென அறிந்திருந்தால் முன்பே சென்றிருப்பாள். பாட்டு சொல்லிக்கொடுத்த கணவன் மனைவி இருவருமே இசையில் லயித்து பாடுவதை கண்டு அதையே அவளும் தொடர கோபமும்,வஞ்சகமும் அவளைவிட்டு வெகுதூரம் சென்றது. அம்மா மீதிருக்கும் வருத்தமோ, புவன் அருண் சிரஞ்சீவி மீதிருக்கும் க்ரோதமோ பெரிதாக தெரியவில்லை. இசையில் மூழ்கி அதில் மட்டுமே கவனம் செலுத்துவதில் மற்றதெல்லாம் அல்பமாக தெரிந்தது.இசையை மருந்து என்கிறார்களே, சும்மாவா!!

பூமிகாவின் அம்மா அம்பிகாவோ மகள் கான சபாவில் கச்சேரி செய்கிறாள் என்பதை பத்திரிக்கை அடித்து ஊர் முழுக்க கொடுத்து அழைத்திருக்கிறார். சபாவுக்கே சொந்தக்காரன் வரலாமா என்று கேட்டால் வா என்று சொல்லாமல் என்ன சொல்வதாம்!!

அருணுக்கும் தமயந்திக்கும் அடுத்த ‘போட்டோ ஷூட்’ க்கு ப்ராண்ட் மேனேஜரிடமிருந்து அழைப்பு வந்தது. தமயந்தி ‘போட்டோ ஷூட்’ நடக்கும் அறைக்கு சென்றபோது மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. மாலதி மேக்-அப் மற்றும் ஏபி பிராண்ட் உடைகள் அணிந்துகொண்டு புகைபடமெடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். அருண் ஓர்  ஓரத்தில் அங்கே போட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு முகத்தைக் கடுகடுவென வைத்திருந்தான்.

தமயந்தி சென்று அவளுக்கான உடை அணிந்துக்கொண்டு வந்ததும் இப்போது மூன்று பேரையும் பக்க பக்கமாக நிற்க  வைத்து புகைப்படம் எடுக்க தொடங்கினர். அருணுக்கும்  தமையந்திக்கும் உயரம் ஒரே அளவில்  இருக்க இவர்களுடன் நிற்கும் மாலதியோ ஐந்து அடியில் நிற்க புகைப்படம் எடுப்பவரோ “ஃப்ரேம் நல்லாவே இல்ல” என்று  குறை சொல்ல தொடங்கினார்.

அப்படியும் சில போஸ்கள் கொடுக்கும்போது மாலதி “எனக்கு வரல, நான் செய்ய மாட்டேன்” என்று அதிகாரமாய் பேசினாள்.பிராண்ட் மேனேஜர் தமயந்தி பார்த்து முறைத்துக் கொண்டு நின்றார்.

ஆறடி உயரத்திற்கும் ஐந்தடி உயரத்திற்கும் ஈடு கட்ட இவர்களை முன்னபின்ன நிற்கவைத்து படம் எடுத்தாலும் சரிவரவில்லை.  உயர வித்தியாசமும்  இடிக்க மாலதியின் “இதெல்லாம் நான் செய்யமாட்டேன்” “ எனக்கு இந்த போஸ் எல்லாம் செட் ஆகாது” என்கிற பேச்சும் அங்கே இருந்த எல்லோரையும் எரிச்சல்படுத்தியது. மாலதியின் ஒத்துழைப்பில்லாமல் மூன்று பேர் நிற்க வைத்து போட்டோவும் எடுக்க முடியவில்லை. யாரையேனும் ஒருவரை வெளியே எடுத்தாக வேண்டும், அதிலும் பெண்கள் இருவர் இருப்பதால் ஒருவர் வெளியே வந்தே ஆகவேண்டும். 

பிராண்ட் மேனேஜர் குழப்பத்தில் ஆழ்ந்தார். அவருக்கோ கழுத்தளவு கோபம். இந்த தமயந்தி மட்டும் இந்த மாலதிக்கு அவர் ஃபோன் நம்பர் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு இது வந்திருக்காது. மாலதியோ கம்பெனியின் சி.இ.ஓ வரை சென்று அவரின் பரிந்துரையில் மாடலிங் செய்ய வந்திருக்கிறாள். இவர்களுக்கான ப்ரத்தியேக சீசன் மாடலிங் இல்லாமல் தமயந்தி அருண் போல வருடக்கணக்கில் ஒப்பந்தம் வேறு செய்திருக்கிறார்கள். ‘கான்செப்ட்’ ஒத்துவராது என்று இவர் தெரிவிக்க சி.இ.ஓ ‘ப்ராண்ட் மானேஜர் எதுக்கு இருக்கீங்க. கான்செப்ட் ரெடி பண்ணி எடுங்க’ என்று சொல்லிவிட்டார்.  

எது செய்யப்போனாலும் மாலதி அதற்கு எதிராக நடந்து  இவர்கள் ‘ஐடியா’வில் குழப்பத்தை உருவாக்கினாள். 

பிராண்ட் மேனேஜருக்கு தெரியும் அவர் கொடுக்கும் காசில்தான் தமயந்தி காலேஜ் பீஸ் கட்டி அடுத்த வருடம் படிக்கவேண்டும் என்பது.அதற்காகவே விளம்பரம் உருவாக்கும் பட்ஜெட்டில் அவளுக்கென்று மாபெரும் பங்கை சேமித்து வைத்திருந்தார். இப்போது இருவருக்கு கொடுக்க வேண்டிய காசை மூவருக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அப்போது தமயந்திக்கு காசு கம்மியாகத்தான் கிடைக்கும். கோபம் வந்தது அவருக்கு தமயந்தியை நினைத்து  ‘எப்படி இந்த மாதிரி முட்டாளாக ஒரு பொண்ணு இருக்கு’ 

உச்சபட்ச எரிச்சலில் கத்தினார் “தமயந்தியை  தூக்குங்க. வெளில வா தமயந்தி. இந்த சீசன் அவங்க ரெண்டு பேரும் மட்டும் இருக்கட்டும்” தமயந்திக்கு அதிர்ச்சி ஆனது.போட்டோ எடுப்பதற்கென்று போட்டிருந்த வெள்ளை ஸ்க்ரீன் இடம் விட்டு வெளியே வந்தாள். 

பிராண்ட் மேனேஜர் அவர் கோபம் தீரும் வரை தனியாக அழைத்துக்கொண்டு போய் திட்டி தீர்த்தார். “இங்கேயே உட்காரு எங்கும் போகாத. உன்னை தனியா நிற்க வைத்து தான் ஷூட்டிங் பண்ண முடியும்” எரிச்சலாக பேசிவிட்டு போட்டோ ஷூட் நடப்பதை பார்க்கும்படி அமர வைத்துவிட்டு சென்றுவிட்டார். மாலதியும் அருணும்  ஃபோட்டோ ஷூட்டில் விதவிதமாய் போஸ் கொடுத்துக்கொண்டிருக்க அருண் பார்வை அவளை விட்டு விலகவே இல்லை. அந்த கண்கள் பேசும் மொழி புரியவில்லை என்றாலும் அவன் கவனம் முழுக்க அவள் மீது இருப்பது படபடப்பாக இருந்தது. பதிலுக்கு முகம் சிவக்க, சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அத்தனை ஏச்சு பேச்சு வாங்கி வந்து உட்கார்ந்திருந்தாலும் அருண் நம்மை திட்டுவானா இல்ல சமாதானம் செய்வானா என்றே  எண்ணம் ஓடியது.

இன்னொருபக்கம் ‘அடுத்த வருஷம் காலேஜ் பீஸ் என்ன செய்யப்போற’ என்று கேட்டு கவலை பூதம் கண் முன்னே வந்து நின்றது.‘இதெற்கெல்லாம் நாம் தகுதியான ஆளா’ என்ற கேள்வி சிலசமயம் அவளுக்குள் எழும் இப்போது அருணை பார்க்கும்போது அதே கேள்வி எழுந்தது. இடைவேளையில் அருண் இவளை பார்த்து முறைத்தான் எதுவுமே பேசவில்லை. கஷ்டமாக இருந்தது. ‘வேதாளம் முருங்கை மரம் ஏறிருச்சா தமயந்தி…’ கேட்டுக்கொண்டாள்.  

உணவு இடைவேளைக்குப் பிறகு வந்தவர் பிராண்ட் மேனேஜர் தமயந்தியிடம்  ” நாளைக்கு வந்து சேரு. லெஹங்கா ஷூட்டிங் இருக்கும் உனக்கு.இன்னைக்கு இங்க எட்டு  மணி வரைக்கும் இருக்க நீ. தனியா ஒரு செட் போட்டோஷூட் எடுத்துட்டுதான் வீட்டுக்கு போற நீ ” என்று அதிகாரமாய் எரிச்சலை காட்டி  பேசிவிட்டு மாலதியை பார்த்து குழைவாக  “நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த நாள் வாங்கமா தனியா ஷூட்டிங் கொஞ்சம் இருக்கு உங்களுக்கு” என்றார்.அருணிடம் “நாளைக்கு வாங்க தம்பி உங்களுக்கும்  தனியாக ஷூட்டிங் இருக்கு” சொல்லிவிட்டு அகன்றார். போட்டோகிராபர் சிறிது நேரம் மாலதியை அமர சொல்லிவிட்டு தமயந்தியையும் அருணையும் சட்டு சட்டென பத்து விதமாக புகைப்படம் எடுத்தார்.அவரும் எரிச்சலாக பேச தமயந்திக்கு இன்னமும் சோகம் கூடியது. எப்போதும் போல “நாமதான் தப்போ” என்கிற கேள்வி எழுந்தது, காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.  

அடுத்த நாள் ‘போட்டோ ஷூட்’க்கு  சென்ற பின்பு தான் தமயந்திக்கு தெரிந்தது அது ஏபி பிராண்ட் போட்டோ ஷூட் இல்லை அவர்களது இன்னொரு திருமணத்திற்கு உபயோகிக்கும் மணமகன் மணமகள் உடைகளுக்கான ப்ரத்தியேக அங்காடியின் போட்டோ ஷூட்.மணமகள்அலங்காரங்களுடன் இவள் வந்து நிற்க மணமகன் அலங்காரங்களுடன் அருண் வந்து நின்றான். விதவிதமாய் இவள் லெஹங்கா அணிந்துக்கொண்டு நிற்க அவனும் குர்தா, தலைப்பாகை என்று பலவிதமாக வந்து நின்றான். 

பிராண்ட் மேனேஜர் முந்தின நாள் போல கோபமாக இல்லாமல் அவளை  பாசமாக கடிந்துகொண்டார் “கொஞ்சமாச்சும் யோசிக்கமாட்டியா தமயந்தி? உனக்கு சீசனுக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் கொடுத்தால்தான் உன்னால படிக்க முடியும்ன்னு நான் வேற யாரையும் எடுக்காம  எல்லாத்துக்கும் உன்னையே மாடலாக யூஸ் பண்ணிக்கிறேன். இப்போ மாடலிங் பட்ஜெட்டில் அவளையும் சேர்க்கும் போது உனக்கு கம்மி காசு தானே கிடைக்கும். இப்போ என்னால உனக்கு முப்பத்தஞ்சாயிரம்  தான் ஏபி பிராண்ட் சார்பாக கொடுக்க முடியும்.இதோ இந்த போட்டோ ஷூட்ல என்னால உனக்கு அறுபது ஆயிரம் வரைக்கும் ஏற்பாடு செய்ய முடியும். கஷ்டமாதான் இருக்கும் இந்த ஷூட்டிங் ஆனா யோசிக்காம அவங்க கேக்குற விதத்துல போஸ் கொடு, ஒருநாள்ல முடிச்சிடலாம். அதே மாதிரி இந்த லெஹங்கா போட்டோஸ்  சில டிரஸ் எல்லாம் வாங்கினா அதுக்குள்ள  போட்டோ மாதிரி  வைப்பாங்கல்ல, அப்படியும் இதை யூஸ் பண்ணிப்பாங்க அதுக்கெல்லாம் இந்த அக்ரீமெண்ட் போட்டுருக்கேன். படிச்சு பாரு. இனி என் போன் நம்பர் யாருக்கும் கொடுக்காத சரியா”

தமயந்திக்கு இரண்டு நாள் குழப்பம் இப்போதுதான் ஒரு தீர்வுக்கு வந்தது. அருண் அப்போதும் கொஞ்சம் கோபமாய் கடுகடு முகத்துடன் இருந்தாலும்  சட்டென “இந்த லெஹெங்கா எல்லாம் உனக்கு நல்லா சூட் ஆகுது” என்றான்

இவள் கண்களை விரித்து புன்னகை பூத்த முகமாக அவனை ஏறிட்டு பார்க்க “இப்ப கொஞ்சம் பரவால்ல அழகா தெரியுற” என்றான்.

தமயந்தி “நீயும் தான் மாப்பிள்ளை போல ஜம்முன்னு இருக்கே” என்றாள். அருண் “அப்படியா, உள்ள எல்லாம் ஜரி  உரசி எரியுது எனக்கு ” எரிச்சல் ஆனான்.  இப்போது மனதில் உள்ள பணத்திற்கான பாரமும் சற்று குறைய அருணும் சிரித்த முகமாய் பேச அந்த நாள் முழுக்க விதவிதமாய் ஆடை அணிகலன்கள் மாற்றி மாற்றி அணிந்து போட்டோ எடுத்தும் சோர்வாக இல்லை. 

கல்லூரியில் அன்றைக்கு  மத்திய உணவு  இடைவேளையில் பூர்ணிமா மிகவும்  துள்ளலாக “கச்சேரில உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கே” என்றாள். தமயந்தியும் பூர்ணிமாவுடன் ‘சஸ்பென்ஸ்’ சிரிப்பு சிரிக்க புவன் மட்டும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் ” என்ன செய்யப் போறீங்க டான்ஸ் ஆட போறீங்களா” 

பூர்ணிமா “அது அங்க வந்து பாருங்க” 

பூமியின் கச்சேரியை எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர்.

பூமி அவள் பாடப்போகும் பாடல்கள் ஒவ்வொன்றாய் தமயந்தியிடம் பாடிக் காட்டி நல்லா பாடுறேன் தானே என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்… 

தமயந்தி “சூப்பரா பாடுற”

பூமிகா “இதே மாதிரி அன்னைக்கு மேடையிலும் நான் ஒவ்வொரு பாட்டு முடிச்சதும் சூப்பரா பாடுறேன் நீ சொல்லணும்” 

‘சொல்கிறேன்’ என தமயந்தி வேகமாக தலையாட்டினாள். 

பூமிக்கு ஒரு பக்கம் மனம் சங்கடத்தில் திளைத்திருந்தது.  தமயந்தி இரண்டாம் ஆண்டு  காலேஜ் ஃபீஸ் கட்டுவதற்கு பணம் போதாமல்  தவிக்கிறாளே! அம்மாவோ நமக்காக பத்திரிக்கை எல்லாம் அடித்திருக்கிறார். இந்த பணம் தமயந்தி படிப்பிற்கு  உதவி இருக்கும் அல்லவா? யோசனை ஓடிக்கொண்டிருந்தது, அதனாலேயே  இன்னமும் அம்மாவிடம் பேசாமல் இருந்தாள். 

பொறுத்து பார்த்தவர் அம்பிகா  மகளை கேள்வி கேட்க ஆரம்பித்தார். “ஏன் பேச மாட்டேங்கற அப்படி அம்மா என்னடா தப்பு பண்ணிட்டேன் உனக்காக தானடா எல்லாம் செய்றேன் அம்மா கிட்ட பேசுடா கண்ணா” என்றெல்லாம் கொஞ்சியும் கெஞ்சியும் பார்த்துவிட்டார். மகள் சட்டையே செய்யாமல் போனாள். ஆனாலும் விடாமல் அடுத்த நாள் எப்படி என்று பட்டியலிட்டார். “அலங்காரத்துக்கு பியூட்டிஷியன் எல்லாம் ஏற்பாடு செய்துட்டேன். காலைல போய் சவுண்ட் சிஸ்டெம் செக் பண்ணிட்டு வா, மேக்-அப் முடிச்சிட்டு ஹாலுக்கு போக கரெக்ட்டா இருக்கும். உனக்கு உன் வண்டிக்கு ட்ரைவர் போட்டிருக்கேன். நாளைக்கு ஒரு நாள் ஜீப் ஓட்டாத என்ன” 

பூமிகா பேசாமல் அவளது கைபேசியிலேயே மூழ்கி இருந்தாள். அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டு நடப்பதை எல்லாம் பார்த்து சங்கடத்தில் நெளிந்துகொண்டிருந்த தமயந்தி தான் “சரி ஆன்ட்டி பார்த்துக்கலாம்” என்று பதில் சொல்லிவிட்டு “அப்படித்தானே மீபூ” என்று தோழியை கேட்டாள். அப்பவும் பூமிகா எதுவும் பேசாமல் இருக்க அம்பிகா கோபமாக “என்னவோ செய்ங்க” சொல்லிவிட்டு அகன்றார்.

தமயந்தி “ஏன் மீபூ இப்படி நடந்துக்கற”

பூமிகா “ப்ச் நான் இத பத்தி பேச போறதில்ல தம்மு ” 

அடுத்த நாள் காலை கச்சேரி நடக்கும் அரங்கத்திற்கு ‘சவுண்ட் சிஸ்டெம்’ சரிபார்க்க சென்றாள். அங்கே சவுண்ட் எஞ்சினியர் “என்னம்மா தனியா வந்திருக்க நீ பாட பாட எல்லாம் பக்கமும் போய் செக் பண்ண இன்னோரு ஆள் வரணுமே. உங்கம்மாட்ட சொலிருந்தேனே”

பூமிகா “பிரெண்ட் வருவாண்ணா”

சவுண்ட் எஞ்சினியர் “சீக்கிரம் வரச்சொல்லும்மா. டெக்கரேஷன் செய்ய ஆள் வரதுக்குள்ள நாம முடிக்கணும்”

தமயந்தி வர தாமதமானது. பூமிகா பதற்றமடைய தொடங்கினாள். சவுண்ட் எஞ்சினியர் இன்னொரு முறை “என்னமா ஆரம்பிக்கலாமா” என்று கேட்க இவளுக்கு தொண்டை வறண்டது.

சட்டென “நான் செக் பண்றேன். நீ போய் பாடு பூமிகா” என்று நறுக்கென பேசும் அதிகார குரல் கேட்டது.

சவுண்ட் என்ஜினீயர் “சரிங்க தம்பி. மொத அந்த கதவுகிட்ட நில்லுங்க. எப்படி கேட்குது சொல்லுங்க” என்று பவ்யமாக புவனிடம் சொல்லிவிட்டு “நீ போய் பாடு கண்ணு. ஒவ்வொரு முறையும் அடி குரல்ல, அப்பறம் ஹை பிட்ச்ல பாடு ரெண்டு வகையில பாடு சரியா” என்றார்.

நேரம் போக போக பூமியின் குரல் அவன் இதயத்தை தீண்டியது. குழந்தை ரைம்ஸ் சொல்வது போலே இருந்த குரல் எப்போ இப்படி மோகன குரலாக மாறியது. 

சவுண்ட் என்ஜினீயர் “நீ எதோ பெரிய பாட்டு பாடப்போறதா உங்க அம்மா சொன்னாங்க”

பூமிகா “ஆமா அமிர்தவர்ஷினில  பாடப்போறேன்”

சவுண்ட் என்ஜினீயர் “அப்படியா எங்க பாடு” என்று கேட்க பூமிகா பொறுமையாக ஆரம்பித்து பாடவும் அவரே  வியப்படைந்தார்.  “நல்லா பாடுறம்மா ஆனா பதட்டமா இருக்க… சீக்கிரம் ரெடி ஆகிட்டு வந்திரு ரெண்டு ரவுண்ட் மேடைக்கு வரது போறதெல்லாம் ஒத்திகை பார்த்துடலாம்”

பூமிகா “அதெல்லாம்… பிரச்சனை இல்ல நான் பார்த்துப்பேன்”

சவுண்ட் என்ஜினீயர் “அட நான் சொல்றத கேளு, வெறும் ரெண்டு பேர் பாக்கறப்பவே சில இடத்துல மூச்சு வாங்குற அது மைக்ல நல்லா கேட்குது. நீ கூட்டத்தை பார்த்து செட் ஆனாதான் நல்லா பாடுவ. இவ்வளவு நல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டு நல்லா பாடணும்லே”

பூமிகாவுக்கு மண்டையை பீய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. அவள் பாட பாட அவள் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றவன் நன்றாக பாடுகிறாய் என்று கைகளை தட்டி ‘சூப்பர்’ என்று செய்கையில் சொல்லவும் மகிழ்ச்சியில் அவளையும் அறியாமல் நிறுத்தி சிரித்துவிட்டு பாடினாள். அதைத்தான் சவுண்ட் என்ஜினீயர் சொல்லிக்காட்டுகிறார்.

நிதானமாக வந்த தமயந்தி கையில் பல பைகள் இருந்தன.அதில் சாயமேற்றிய பூக்களின் சரம் புவன் கண்களில் பட்டது. 

தமயந்தி “சாரி மீபூ பூ கடையில லேட் ஆகிடுச்சு”

பூமிகா “யாராவது ஆள் வச்சு வாங்கியிருக்கலாமே. நீ ஏன்டி போன”

தமயந்தி “ஏய் ஆன்ட்டி உனக்கு பிடிக்குமேண்ணு ஆசையா ஆர்டர் பண்ணாங்க”

பூமிகா “நீ யாருக்கு பிரெண்ட்ன்னே எனக்கு தெரியல  தம்மு” கோபித்துக்கொண்டாள்.

புவனை கண்டுகொள்ளாமல் பூமிகா செல்ல,தமயந்தி “தேங்க்ஸ் புவன். நல்லவேளை நீ வந்த, இல்லன்னா கஷ்டமா போயிருக்கும்”

புவன் “கடைசில ட்ரெஸ் எதோ பிடிச்சது போல கிடைச்சிருச்சு போலயே” கேட்டுக்கொண்டே அவள் கைகளிலிருந்து பையை வாங்க பார்த்தான். தமயந்தி பைகளை கொடுக்காமல் “ஹிம் சர்பரைஸ்” சொல்லிவிட்டு பூமியை நோக்கி ஓடினாள்.

புவன் வீட்டிற்கு சென்றவன் நண்பர்கள் இருவரையும் “இப்பவே கடைக்கு போகணும் கிளம்புங்க” என்று அடம்பிடித்து அழைத்து சென்றான்.

சிரஞ்சீவி “ஒன்னு ஜூல தூங்கிட்டே இருக்கிற சிங்கம் போல உய்யோன்னு, இருக்க இல்ல இப்படி புயல் போல கிளம்பிடுற மச்சான்”

புவன் “பேசாம வா ஜிப்பா வாங்கலாம்”

சிரஞ்சீவி “அய்யய்ய ஜிப்பாவா. நான்லாம் ஏதும் மிருதங்கம் வாசிக்க எல்லாம் பேர் குடுக்கலடா”

அருண் அதிகாரமாக “ஜரிகை வச்சது எல்லாம் போடமாட்டேன். காட்டன் இருந்தா வாங்கலாம்”

சிரஞ்சீவி “ நீ என்னடா உடனே ஒத்துக்கிட்ட… ஓ நீ அப்படி போற… அது சரி… ஆனா யூ கோ மேன் வொய் மீ”

அருண் சிரஞ்சீவியை கழுத்து பிடித்து வண்டி விட்டு இறக்கி “அது எப்படி நீ மட்டும் ஜாலியா இருக்கலாம்” என்று சொல்லி தரதரவென கடைக்குள் இழுத்து சென்றான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!