Skip to content
Post Views: 3,232
இரண்டு நாட்கள் பறந்ததே தெரியாமல் திரு அம்மா வீட்டிலிருந்து தனது கணவன் நிவாஸுடன் கிளம்பினாள். இனி,இந்த வீட்டில் நான் விருந்தாளிதான் என்றும் அவள் மனதில் தோன்றியது. கணவனுடன் இந்த நொடிவரை சொல்லிக்கொள்ளும் படிக்கு உறவிலும் எந்த முன்னேற்றமும் இல்லையே! அதனாலோ என்னவோ தன் அம்மா வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்கு கிளம்ப அவளுக்கு சந்தோசம் என்று சொல்லமுடியாது.
திருமணமும் ஆகிவிட்டது .இங்கேயிருந்து கிளம்பியாக வேண்டும்.தனது அம்மாவும் அண்ணியுமாக அவளுக்காக துணிகளை புதியது,தினசரி உபயோகத்திற்கு என்று இரண்டு தனித்தனி சூட் கேசில் அடுக்கி வைத்திருந்தார்கள். ஏற்கனவே, திருவின் இரண்டு சூட்கேஸுகள் நிவாஸின் வீட்டிற்கு சென்றுவிட்டது.
Advertisement
இப்போது புதியது என்பது இன்னும் கொஞ்சம் ஆடைகளை கண்மணி வாங்கியிருந்தார். திரு அமெரிக்க செல்வதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே திருவுக்கு பாஸ்போர்ட் இருப்பதால்,இப்போது விசாவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். காரில் திரும்ப செல்லும் பொழுது நிவாஸ் சொல்லிக்கொண்டு வந்தான்.
“உனக்கு இன்னும் விசாவுக்கு அப்ளை பண்ணனும். இன்டெர்வ்யூ இருக்கு.அப்புறமாதான் நீ அங்கே வர முடியும். நா க்ரீன் கார்டு ஹோல்டர்.அதனால உனக்கும் அங்கே செட்டில் ஆகுறது ஈஸிதான் பட் நாம ரெண்டுபேரும் ஒண்ணா கிளம்ப முடியாது.இன்னும் பத்து நாள்ல நா கிளம்புறேன். நீ இங்கே சென்னைல தான் இருக்கணும். அட்லீஸ்ட் நீ அங்கே வர ஒரு மாசமாவது ஆகும்.“
Advertisement
Advertisement
கேட்டுக்கொண்டே வந்தவளுக்கு ‘இதுவேறா ‘ என்றுதான் தோன்றியது. அவனுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.ஆனால் ,அவனது பேச்சை கேட்டுக்கொண்டு வருவதற்கு அடையாளமாய் அவனை பார்த்துக்கொண்டு வந்தாள் .
அவளது செய்கையை பார்த்தவன்,”குட்,இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். நா சொல்றதை நீ கேக்குற வரைக்கும் நம்ம லைப் எந்த பிரச்சனையும் இல்லாமல் போகும்“என்றான் வெகு திருப்தியாய். அவனது அந்த வார்த்தைகளை கேட்டவளுக்கு இப்போதும் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று புரியவில்லை.
Advertisement
அதனாலேயே மீண்டும் அவளிடம் மௌனம்.
அவன் என்ன சொல்ல வருகிறான்?இவனுடனான எனது வாழ்க்கை எப்படி போகப் போகிறது என்று அவளுக்கு உள்ளூர யோசனைதான். தான் அவசரப் பட்டுவிட்டோமோ .என்று குழப்பம். தேவையே இன்றி அவளது மனம் சாகேத்துடனான தனது திருமணம் பற்றி நரேந்திரன் அப்பாவிடம் பேசியதுவேறு ஞாபகம் வந்து அவளை படுத்த எரிச்சல் அதிகமானது தான் மிச்சம்.
நேரே, அவளை கூட்டிக்கொண்டு விசாவுக்காக தனது நண்பனிடம் கூட்டிக்கொண்டு சென்றான். அவன் நண்பனிடம் அவளது சம்மந்தமான ஆவணங்கள்,திருமண பதிவு சம்மந்தமான ஆவணங்கள், திருமண போட்டோக்கள் என்று கொடுத்துவிட்டு இருவரும் நங்கநல்லூரில் இருக்கும் நிவாஸின் வீட்டுக்கு வந்தார்கள்.
வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே நிவாஸின் அப்பா,”நிவாஸ், இன்னிக்கு சாயங்காலம் ரெண்டுபேரும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு வாங்க.“என்று சொல்ல நிவாஸ் மறுப்பு எதுவும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றான். அதுவே அவன் அப்பாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.புதியதாக வந்திருக்கும் பெண்ணின் முன் தன்னை ஏதாவது சொல்லிவிட்டால் என்ற பதட்டம் வேறு.
முன்பெல்லாம் நிவாஸ் இவ்வளவு மோசம் என்று சொல்ல முடியாது.கொஞ்சம் ,ஹான் ..கொஞ்சமே கொஞ்சம் டாமினேட்டிங் . ஆனால் ,அமெரிக்கா சென்று,அதுவும் இப்போது இருக்கும் நிறுவனத்தில் இவ்வளவு பெரிய நிலைக்கு வந்தபிறகு அவன் நிறைய மாறிவிட்டான்.
எல்லோரிடமும் அலட்சியம். தூக்கி எறிந்து பேசுவது,’தான் ”தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியம்‘ என வீட்டினருக்கே அவனிடம் பேச தயக்கம் வந்துவிட்டிருந்தது. இதோ,திருவுடன் அவன் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வான் என்று கூட அவன் வீட்டினர் நம்பியிருக்கவில்லை.
தன் இஷ்டத்திற்கு யாராவது ஒரு அமெரிக்க பெண்ணை மணக்கக் கூடும் என்று நினைத்துக்கொண்டே தான் அவனிடம் திருமணம் பற்றியும், திருவை பற்றியும் சொன்னதே! நிவாஸின் அம்மா ஜாதகப் பொருத்தம்,பெண் பார்க்கும் படலம்,குடும்பம் பற்றிய விசாரிப்புகள் எல்லாவற்றையும் முடித்து கடைசியாக திருவை பற்றிய விவரங்களை நிவாஸிடம் கொடுத்த பொழுது “ம்ஹ்ம்..நா அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்றேன்“என்று முடித்துக்கொண்டான்.
உண்மையில் நிவாஸ் பேசும்பொழுது திரு அவனிடம் ஒரு வித மயக்கத்தில் இருந்தாள் .அவன் பேசியவற்றிற்கு ஒருவித பணிவுடன் பதில் சொன்ன திருவை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் சொல்ல சொன்னது.
நரேந்திரன் அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சாகேத் வீட்டிலேயே தங்கி விட்டான்.சாருவும் கூட திருமணத்துக்கு முதல்நாள் தனது மாமியார் மாமனாரிடம் சொல்லிவிட்டு அங்கே சாகேத் வீட்டில் சென்று தங்கிவிட்டாள் . நிவாஸ்-திருவுடன் இல்லாத சகஜ நிலை சாருவுக்கு சாகேத் குடும்பத்துடன் வந்திருந்தது.
அது புரிந்ததனாலேயே சாம்பசிவமும் கண்மணியும் ஒன்றும் சொல்லவில்லை. ராஜம்-துரை இருவரும் வேறு நேரில் வந்து சாம்பசிவம் தம்பதியை அழைத்து சென்றிருக்கிறார்கள்.திருவிடம் கூட நிவாஸின் பெயரையும் எழுதி ஒரு பத்திரிக்கையை துரை கொடுத்துச் சென்று இருக்கிறார்.
திரு அந்த பத்திரிக்கையை நிவாஸிடம் கொடுத்துவிட்டு “போகலாமாங்க,சார் எனக்கு டியூஷன் கூட எடுத்திருக்கிறார். சாகேத் அவரும் நரேன் அண்ணாவும் ஒண்ணா படிச்சவங்க ” என்று தனது ஆர்வத்தை சொல்ல,அவளையே எதுவும் சொல்லாமல் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் நிவாஸ்.
“ஹும் ..போகலாம்.உனக்கு சாகேத்தோட நல்ல பழக்கம் உண்டா?”அவனது கேள்வியை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியாமல், “ம்ம்.பழக்கம் னு சொல்ல முடியாது.பட் அண்ணாவுடைய பிரென்ட்,துரை சாரோட பையன்னு தெரியும்.” என்றவளை யோசனையாக பார்த்தவன்,”சரி, வா ..வெளியே போயிட்டு வரலாம்” என்று கூட்டிக்கொண்டு நேரே வேளச்சேரியில் இருக்கும் பிரபல நகைக்கடைக்கு கூட்டிக்கொண்டு வந்தான்.
அவன் நகைகளுக்காக செலவழித்த தொகையை பார்த்து திருவுக்கு மயக்கம் வந்தது.மனம் முழுவதும் பூரிப்பு.,அதன் பிரதிபலிப்பு அவள் முகத்தில் தெரியவே, மனதுக்குள் ஏளனம் மிக,”பிடிச்சிருக்கா..“என்றான் நிவாஸ்.
“ஹ்ம்ம்..ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்களைப் பார்த்து ரொம்ப பயமா இருந்தது.பட்,யூ ஆர் ஸோ ஸ்வீட். ஐ லவ் யூ ஸோ மச் ” என்றவளிடம்,” ம்ம்ம்… இவ்ளோ செலவு செஞ்ச பிறகும் நீ லவ் யூ சொல்லலைன்னா எப்படி என்றான். அவன் முகம் தீவிரத்தைக் காட்டியதை திரு சரியாக கவனிக்கவில்லை.
அடுத்த நாள் காலையில் , நிவாஸும் திருவும் திருமணத்திற்கு கிளம்பி வந்தார்கள்.முதல் நாள் வாங்கியிருந்த நகைகளை அணிந்து கொண்டிருந்தவள் நிஜமாகவே திருமகள் தான் பூமிக்கு வந்து விட்டாளோ எனும் அளவிற்கு இருந்தால் திரு. இவ்வளவு அழகுடன் மனைவி இருந்த பொழுதும் நிவாஸின் முகம் எந்த உணச்சியும் காண்பிக்கவில்லை. அதற்கும் மேல்,மனைவியிடம் ” நீ அழகா இருக்கே“என்று கூட சொல்லவில்லை.
திருவுக்கு ஏமாற்றம்தான்.ஆனால் ,வெளியே காண்பித்துக்கொள்ளாமல் கிளம்பி விட்டாள் . திருமண மண்டபத்தில் நரேனும் சாருவும் சுழன்று வேலைகள் செய்து கொண்டிருப்பதை பார்த்த திருவுக்கு வயிறு காந்தியது. தனது திருமணத்தின் பொழுது இருவரும் இடத்தை விட்டு அசையவில்லை. இங்கே,மணமக்களுக்கு அடுத்து இவர்கள்தான் எனும் அளவில் இருந்தது நரேன் ஜோடி.
நிவாஸ் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தவன் கூடவே மனைவியின் முகத்தையும் அளவிட தவறவில்லை. திரு அணிந்திருந்த நகைகளை பார்த்த சாம்பசிவம் தம்பதி மனதில் மகிழ்ச்சி.கண்மணி பெருமையுடன்
“மாப்பிள்ளையா வாங்கினாரு .நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணவடி “என்று சொல்ல திருமகள் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்.விதி வலியது. நரேந்திரன் அங்கே வருவதை பார்த்தவள்,”அண்ணா,இங்கே பார்த்தியா,அவர் நேத்து வாங்கி குடுத்தாரு. நீ சொன்ன மாதிரி நா சாகேத்தை கல்யாணம் செஞ்சுகிட்டு இருந்தா இப்போ கிடைச்சிருக்குற வாழ்க்கை கிடைச்சிருக்குமா?இதோ இன்னும் ஒரு மாசத்துல நா அமெரிக்கா போய்டறேன்.அங்கேயே செட்டில் ஆகிடுவேன். சாகேத்தை கல்யாணம் செஞ்சுக்கிட்டா இதெல்லாம் கிடைக்குமா “என்று பேச அவளருகில் அவள் கணவன் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்து இவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பதை என்ன சொல்வது?
இவள் பேசியதைக் கேட்ட கண்மணி தனது மகளை அடக்கப் பார்க்க,நரேந்திரன் பார்வை நிவாஸிடன் சென்று மீண்டது.அத்துடன் தனது தங்கையையும் நக்கலாக பார்த்தவன்,அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “நீ எங்கே,எப்படி பேசணும்னு எப்போ கத்துப்ப திரு.உன் பக்கத்துல உன் வீட்டுக்காரர் இருக்கார்.ஞாபகம் வச்சுக்கோ“என்றுவிட்டு நகர்ந்து விட்டான்.
அப்போதுதான் தன் கணவன் ஞாபகம் வந்தவளாய் அருகில் திரும்பிப் பார்க்க ,நிவாஸின் கண்கள் கிண்டலை வெளிப்படுத்த ,”சாரிங்க..அது..நா என்று எச்சிலை விழுங்கியவளை ஒன்றும் நடக்காதது போல் பார்த்தவன், நாம சாகேத்துக்கு கிப்ட் குடுக்கணுமே ..போகலாமா?என்றான். திருவால் கணவன் மனதில் என்ன இருக்கிறது என்று உணர முடியவில்லை.
உணவருந்த செல்லும் பொழுது நிவாஸ் திருமகளுடன் சாம்பசிவம் கண்மணியும் இணைந்து கொண்டவர்கள் , சாப்பிடும் பொழுது நிவாஸின் காதுகளில் விழாதவாறு ,”என்ன..திரு,எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை முடிச்சோம்.உன்னோட வாயால நீ ஏதாவது செஞ்சுக்காதே .இன்னிக்கு அந்த பையனுக்கும் கல்யாணம்.இங்கே வந்து நீ பேசினது சரியா?யாரு காதுலயாவது விழுந்தா என்ன பண்ணுவே? இதோ இப்போ மாப்பிள்ளை காதுப்படவே உளறிட்டியே ம்மா..‘ என்று அவளுக்கு புரியும்படிக்கு சாம்பசிவம் பேசியதும் நிவாஸின் காதுகளில் விழாமல் இல்லை.
எதையும் கண்டுகொண்டதாக அவன் காட்டிக்கொள்ளவில்லை. திருவும் அதனால் அமைதியாக இருந்துவிட்டாள் .சாகேத்தின் முகம் நிவாஸ் மனதில் பதிந்துவிட்டது.” ம்ஹும்..ஆளும் அழகன்தான் . கல்யாணத்தை பார்த்தா காசுக்கு கஷ்டம்னு சொல்ல முடியாது.நல்ல வேலைல இருக்கான். அப்பர் மிடில் கிளாஸ்னு தெரியுது. அவன் இஷ்டம் இல்லாமலா இவளோட அண்ணன் அந்த பையனுக்காக பேசியிருப்பான்? என்று அவன் மனம் கணக்குப் போடவும் தவறவில்லை.
நிவாஸும் திருமகளும் கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு கிளம்பினார்கள். நிவாஸுக்கு எரிச்சல் அதிகமாக இருக்க,” நா இங்கே மாலுக்கு போறேன். உனக்கு இன்டெரெஸ்ட் இல்லேன்னா கேப் புக் பண்ணிக்கிட்டு கிளம்பு ” என்றான்.
கணவனுடன் வெளியே சுற்ற வாய்ப்பு கிடைக்கும் பொழுது விடவும் அவளுக்கு மனம் இல்லை. “நா உங்க கூடவே வரேங்க .இவ்ளோ நகை போட்டுட்டு எப்படி என்று இழுத்தாள். பொறுமை இழந்தவன் அவள் சொல்வதில் உண்மை இருப்பதில் வீட்டுக்கு காரை திருப்பினான்.அவளை நங்கநல்லூர் வீட்டில் வாசலில் விட்டவன், திரு கீழே இறங்கியவுடன் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.
திரு விக்கித்துப் போய் வாசலிலேயே நின்றுவிட்டாள் .ஜன்னல் வழியாக வெளியே திரு நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அவளது மாமனார்தான் வாசலுக்கு வந்து “இவ்ளோ அலங்காரம் செஞ்சுக்கிட்டு வெளியே தனியா நிப்பியம்மா? உள்ளே போ என்று கொஞ்சம் கடுமை கலந்து பேசியதில் சுயம் பெற்றவள் நேரே தங்களது அறைக்கு சென்றுவிட்டாள்.
அவளுக்கு அழுகை வந்தது.கணவன் தான் பேசியவற்றை முழுவதும் கேட்டுவிட்டான் என்பது அவளுக்கு நிச்சயம் புரிந்தது. அவன் இனி தன்னிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடும் என்று அவளால் கணிக்க முடியவில்லை..
இன்னொருபுறம் சாகேத் திருமணத்தில் ஜான்வியிடம் இருந்த உற்சாகம் சாகேத்திடம் இல்லை. மனமே இல்லாமல் அய்யர் சொன்ன மந்திரங்களை உச்சரித்தான் . துரைக்கு தன் மகன் இப்படி இருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.ராஜம் இவற்றை கவனிக்கவில்லை. ஜான்வியின் பெற்றோரும் கூட மணமகனின் முகம் வாடியிருப்பதை கவனிக்க தவறவில்லை.
அவர்களுக்கும் மனம் சுணங்கியது. மணமகள் கூரை புடவை மாற்ற வரும்பொழுது,ஜான்வியின் அம்மா கேட்டே விட்டார்“ஜானு, சாகேத்துக்கு என்ன பிரச்சனை?அவர் முகத்துல கல்யாண சந்தோஷமே இல்ல. உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனையா“?
அம்மா கேட்ட கேள்வியில் ஜெர்க்கானவள்,”இல்லேம்மா,நா நேத்து நைட்டு பேசினேன். லேசா ஜூரம்னு சொன்னாரு. இதுக்காக கல்யாணத்தை தள்ளி வைக்க முடியாதுதானே..விடுங்க. மதியம் மாத்திரை போட்டு தூங்கினாருன்னா சரியாகிடும்“என்று பேச்சை முடித்துவிட்டு,அவசரமாக அம்மா உதவியில் புடவையை மாற்றியவள்,ஆராய்ச்சி பார்வையுடன் சாகேத் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
“எங்க வீட்டுல உங்களை பார்த்துகிட்டே இருக்காங்க சாகி,கொஞ்சம் மலர்ச்சியா முகத்தை வச்சுக்கோ.வீடியோ வேறே எடுக்கிறோம்.பின்னால போட்டோ வீடியோ பார்த்தா சந்தோசமா இருக்கணும்” என்று சிரித்தவாறே வார்த்தைகளை கடித்து துப்பியவள் அதற்க்கு மேலே அவன் பக்கம் திரும்பினாள் இல்லை.
பெருமூச்சு விட்டுக் கொண்டாலும், சாகேத் அவள் சொல்லில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்டவன் அதற்குப் பிறகு முகத்தை சிரித்தமுகமாக வைத்துக்கொண்டான்.மணமக்கள் இருவரும் பேசிக்கொள்வதும்,பிறகு சாகேத் சிரிப்பதும் துரையின் கண்களில் பட அவர் மனம் லேசானது.
error: Content is protected !!