Skip to content
Post Views: 3,101
கற்பனை 17.
தனது மனைவியின் உறக்கம் இன்னும் கலையாதது கண்டு சற்றே எரிச்சல் கொண்டான் நிவாஸ். இவ்வளவு நீண்ட தூக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. முதல் நாள் மாலையில் உறங்கத் தொடங்கியவள் இதோ அடுத்த நாள் மதியம் ஆன பின்னரும் எழவில்லை என்றால் அவனும்தான் என்ன செய்ய முடியும்?
Advertisement
அவனுக்கு காலையிலேயே அலுவலக வேலை இழுத்துக்கொண்டது. அங்கே செல்லவேண்டும் என்றெல்லாம் இல்லை.கடுமையான பனிப்பொழிவு சமயங்களை வெளியே செல்லாமலே கழித்திருக்கிறான். நாள் கணக்கில் அவனுக்குத் துணையாக இருந்தது அவனது அலுவலக வேலையும் இந்த லேப்டாப்பும் தான்.இப்போது மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டாள் .இனி கொஞ்சம் வாழ்க்கை மாறும் என்று நினைத்திருக்க அவளோ கொஞ்சமும் கணவனைப் பற்றிய எண்ணங்கள் இல்லாமல் தூங்குகிறாளே ..என்று அவனுக்குத் தோன்றியது. பிறகு,ப்ச்..ஜெட்லோக் சரியாக நேரம் ஆகும் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தான். அவன் இதோடு இரண்டு முறைமைகள் காஃபி குடித்தாயிற்று. பிரேக் பாஸ்ட் செய்ய மனம் இல்லாதவனாக நேரே சமையல் செய்ய முற்பட்டான்.
சென்னையில் மனைவியின் சமையலை ருசித்தவனுக்கு மீண்டும் இன்று தனது சமையலை சாப்பிடும் வாய்ப்பு. திருவை விட தனது கைப்பக்குவம் நன்றாகவே இருக்கிறது என்று சொல்லிக்கொண்டவன்,எப்படியாவது தனது சமைக்கும் திறனை மனைவிக்கும் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.என்னால் வேறு சுவைக்கு என்னை பழக்கம் செய்து கொள்வது கடினம் என்று முடிவும் செய்துக்கொண்டான்.
Advertisement
Advertisement
சரியாக நிவாஸ் சமையலை முடித்து வெளியே வரவும் திரு எழுந்து பல் துலக்கிவிட்டு வரவும் சரியாக இருந்தது. நடுப்பகலில் கலைத்த தலை முடியும் ,லேசாக எண்ணெய் வழியும் முகமுமாக வந்து நிற்கும் மனைவியை அலட்சியமாக பார்த்தவன்,”எழுந்ததும் குளிச்சிட்டு வரமாட்டே?டைம் பார்த்திருப்ப தானே! இனிமே,இப்படி வெளியே வர வேலை வச்சுக்காதே!என்று விட்டு சென்றுவிட்டான்.
கணவனைப் பார்க்கவேண்டுமெனெ அவசரமாக வெளியே வந்திருந்த திருவின் முகம் சோர்ந்து போனது. அவனது வெளிப்படையான அலட்சியம் வெகுவாக அவளை பாதித்தது. இதே விஷயத்தை இன்னும் கொஞ்சம் இலகுவாக சொல்லலாம்தானே!
Advertisement
சுதாரித்தவள் வேகமாக தனக்காக கொடுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள் . கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. வீட்டில் அவள் அம்மா எப்போதும் சொல்வதுதான். இப்படியெல்லாம் ஹாலுக்கு வராதே திரு என்று. சென்னையில் திருமணமான புதியது.அம்மாவின் உபதேசத்தை முழுமையாக கடைப் பிடித்தவளுக்கு,இங்கே அவரும் நானும் மட்டும் தானே!என்று லேசாக வந்த எண்ணம்.இதோ இப்போது முகம் தொங்கிப் போய் அமர்ந்திருக்கிறாள்.
நிவாஸின் கடும் சொற்கள் ஏனோ அவளுக்குள் பூத்திருக்கும் அவன் மீதான காதலைக் குறைக்கவில்லை. கணவன் சொன்னபடிக்கு தயாராகி வந்தவளை , பிளாக் காபியும் சான்விச்சும் வரவேற்றது. சமையலறையிலிருந்து வந்த பிரத்யேக மணம் அவளுக்கு தன் முன் சமத்தாக அமர்ந்திருக்கும் பிரட்டை வெறுப்பாக பார்க்க வைத்தது.
உள்ளிருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தவன்,நேரே அவள் முன் வந்து நின்று,இப்போ முதல்லே இதை சாப்பிடு. கொஞ்ச நேரம் ஆகவும் சாப்பாடு சாப்பிடலாம். தோட்டத்துல புல் நிறைய வளர்ந்திருக்கு. அதையெல்லாம் கிளீன் செஞ்சுட்டு, கார்டென் அதையும் ட்ரிம் பண்ணிடு. குயிக் .,என்று கட்டளைகளை வரிசைப்படுத்தி விட்டு தன்னறைக்குள் புகுந்துகொண்டான்.
தெருவுக்கு கண்களைக் கரித்துக்கொண்டு வந்தது. அவளுக்கு தோட்டம் பற்றியெல்லாம் ஒன்றும் பெரியதாக தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவள் விரும்பியது இல்லை. கணவனிடம் எப்படி தெரியாது என்று சொல்ல முடியும் என்று தயங்கியவள், நேரே அவன் சொன்ன வேலைகளை செய்ய கிளம்பி விட்டாள் . இதனால்,கணவனுக்கு தன் மீதான எண்ணம் இன்னம் தரம் தாழும் என்று அவளென்ன கனவு கண்டாளா!
நிவாஸ் வரிசைப் படுத்திய வேலைகளை செய்யும் பொழுது அவள் கைகள் கன்றிப் போனதுதான் மிச்சம்.வேலை ஒன்றும் முழுவதுமாக முடியவில்லை. அவளது இடுப்பும் முதுகும் வலியில் சோர்ந்தது . இதற்கு மேல் முடியாது என்று அங்கே இருக்கும் கல் பெஞ்சில் உட்கார்ந்துவிட்டாள் .
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நிவாஸ் வெகுண்டான். அவள் செய்து வைத்திருந்த வேலை அப்படி. புற்களை சீராக வெட்டிவிடாமல்,இங்கொன்றும் அங்கொன்றுமாக காட்சியளித்த அந்த பகுதி அவனுக்கு கோவம் மூட்டியது என்றால், அடர்ந்திருந்த அழகான மரங்களை மொட்டை அடிப்பது போல் குதறி வைத்திருந்ததை பார்த்தவனுக்கு இரத்தம் வேகமாக கொதித்தது.
அவளை அறைய வேண்டும் போல் வந்த உணர்வை கஷ்டப்பட்டு விழுங்கினான். தன்னை கட்டுப்படுத்தியவாறே,”உனக்கு கார்டெனிங் பண்ண தெரியாதா” என்று வினவிய நிவாஸை வேற்று கிரக வாசி போல் பார்த்து வைத்தாள் பெண்.
“அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்?எங்க வீட்டுல இதுக்காக ஆள் இருக்காங்க.நா எதுக்கு இதெல்லாம் பண்ணனும்?என்று புரியாத பாவனையில் கேட்ட மனைவியை என்ன செய்ய முடியும்? “
“ஓஹ் ,தென் நீ உனக்கு இதெல்லாம் தெரியாது னு சொல்லணும் தானே!இப்படி என்னோட கார்டன் முழுசையும் குரங்கு குதறினா மாதிரி செஞ்சு வச்சிருக்க டாமிட்” என்று கத்தி தீர்த்தான் நிவாஸ்.
திருமகளின் மனதில்,”இதென்ன பெரிய விஷயம்.கொஞ்ச நாளல்ல வளர்ந்துட போகுது. பெரிய்ய்ய ஆர்ப்பாட்டம் தான்“என்று நொடிப்பு. தெரியவில்லை என்றால் சொல்லிவிட வேண்டும் என்பதை அவள் எப்போது புரிந்து கொள்வாளோ!
அந்த வாரம் முழுவதும் அவளுடன் சரியாக பேசவில்லை நிவாஸ். அதை கண்டுகொள்ளாமல் தான் பாட்டுக்கு தனது உடைமைகளை அவளுக்கு அவன் கொடுத்திருந்த அறையில் அடுக்கிக் கொண்டாள் திரு. கணவனிடம் போய் கேட்க அவளுக்கு பிடிக்கவில்லை. நிவாஸும் நல்லதாயிற்று,இவளுடன் எனது அறையை பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று அமைதியாய் இருந்தும் விட்டான்.
பிறகு அடுத்து வந்த வாரங்களில் நிவாஸால் திருவின் முகம் பார்த்துக்கூட பேச முடியவில்லை.வேலை கழுத்தை நெறித்தது . திரு வீட்டில் சமைக்க ஆரம்பித்தும் விட்டாள் .நேரம் கிடைக்கும் பொழுது சமையல் அறையில் பார்த்து தீர்ந்து போன்றவற்றை நிரப்பும் நிவாஸ் ஏதாவது தேவைப் படுகிறதா என்று மறந்தும் மனைவியிடம் கேட்கவில்லை.
முழுநாளும் திருவுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.எவ்வளவு நேரம் சமையல் செய்ய முடியும்..டிவி கூட அலுத்து விட்டது. வாட்ஸாப்பில் அம்மா அப்பாவுடன் பேசுபவள் அண்ணன் அண்ணியை வேண்டுமென்றே தவிர்த்தாள் .
சாரு இப்போது ஐந்து மாத கர்ப்பிணி. அவளை தனது பெற்றோரும்,அவளது பெற்றோரும் தாங்குகிறார்கள். அண்ணனோ,ம்ஹும், ஏற்கனவே காதல் திருமணம்.இப்போது,அவளுக்கு கால்கள் அமுக்கி விடுவதிலிருந்து அவன் எதை விடுக்கவில்லை. இங்கே திருவுக்கோ கணவனின் பாராமுகம் பாரமாக இருக்கும் பொழுது ஏற்கனவே இருக்கும் பொறாமை ஊதி விட்டது போலானது.
ஒருவர் குணம் தீர்மானிக்கப் படுவது அவர்களது சூழ்நிலையை பொறுத்தும் தானே அமையும். பிறகு திருமகளை மட்டும் குற்றம் சொல்லி என்னப் பயன்? இனி ,இது அதிகமாவதற்கு வேண்டுமானால் வாய்ப்புண்டு. குறைவது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இதோ-அதோ என திருமகள் இங்கே அமெரிக்க மண்ணை மிதித்து ஒரு முழு மாதம் ஓடி விட்டது .ஆனால் கணவன் மனைவி உறவுக்குள் எந்த முன்னேற்றமும் இல்லை.
எவ்வளவு ஆசையாகவும் கனவுகளுடனும் இங்கே வந்தாள் திரு. அதெல்லாம் இப்போது கானல் நீரை போல மாயமாகிவிட்டது போல் உணர்வு அவளுக்குள்.
வீட்டு வேலைகள் அவளை ஆழிபோல் சுழற்றி அடித்தது. கார்டன் பராமரிப்பு அவள் வேலைகளில் ஒன்று என ஆனது.அதற்காக அவளை இத்தனை வருஷங்களாக நிவாஸின் தோட்டத்தை பராமரித்து வந்த பராமரிப்பாளரிடம் பயிற்சிக்கு அனுப்பிவைத்தான் நிவாஸ். திருவுக்கு கோவம் வந்தது. இத்தனை வருஷங்களில் வீட்டில் இருந்த தோட்டத்தை பராமரிக்க அவள் சென்றதில்லை. இரண்டு நாய்கள் அவளது அப்பா வளர்த்து வந்தார்.ஆனால் ,இவள் அதன் அருகே கூட செல்ல மாட்டாள்.அவளுக்கு இதில் எல்லாம் நாட்டமும் இல்லை.
அப்படி இருக்கும்பொழுது விருப்பமே இல்லாமல் இவற்றை கணவன் செய்யவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கும் பொழுது அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் கையை கட்டிக்கொண்டு அவன் சொற்களுக்கு அடிபணிவது மிகுந்த கஷ்டம்.
அடிக்கடி வீட்டில் பாத்திரம் கழுவும் எந்திரம் ரிப்பேர் ஆகிவிட,நிவாஸ் நேராகவே சொன்னான்.“வீட்டுல சாப்புட்டு சும்மா தானே இருக்க.இதெல்லாம் கூட செய்ய முடியாதா..உன் வசதிக்கு பார்த்து வேலைக்கு ஆள் போடணும்னா என்னோட மொத்த சம்பளமும் அவங்களுக்குத்தான் கொடுக்கணும். நீ வர முன்னாடி இதெல்லாம் நா செஞ்சது தானே. இப்போ நீ செய்“.
இவளும் “அப்போ வேற மிஷின் வாங்குங்க.குளுருள பாத்திரம் கழுவ கஷ்டமா இருக்கு. ஹாட் வாட்டரும் மக்கர் பண்ணுது.மெக்கானிக் யாரும் வந்தும் பாக்க மாட்டேங்குறாங்க.” வந்து ஒரு மாதமே ஆன நிலையில் திருவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
சகஜமாக பழகும் கணவனாக இருந்தால் அவள் ஒருவேளை இவ்வளவு தடுமாறி இருக்க மாட்டாள். அவனோ இவளை சுத்தமாக கண்டுகொள்வதில்லை. வேலைக்காரியாகத் தான் நான் இங்கே அழைத்து வர பட்டோமா‘என்ற எண்ணம் அவளை இன்னும் படுத்தியது.
இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவும் இல்லை. முதலில் இந்தியாவில் அவன் நடந்து கொண்ட முறையில் பயந்தவள் ,இப்போது கணவன் தன்னை சுத்தமாகவே நெருங்குவதில்லை என்பதை அவதானித்தாள் .அவனது இந்த புறக்கணிப்பை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இதைப் பற்றியெல்லாம் பெற்றவளிடம் சொல்லவும் கூட திறமைகளுக்கு தயக்கம்.
எது சரி,எது தவறு? கணவனிடம் நேரே கேட்டு விடலாமா..என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு அதுவும் சுலபமாக இல்லை.காலையில் தன் அறையிலிருந்து வெளியே வருபவன், அலுவலக வேலை ஆரம்பிக்க முழுமையாக தயாராகித்தான் வருவது. காலை உணவையும்,காபியையும் எடுத்துக்கொள்பவன்,மீண்டும் அறைக்குள் புகுந்து கொள்வான்.
திடீரென கிளம்பி அலுவலகம் செல்வான். அவனது பிரயாணங்களும் அப்படித்தான். அடிக்கடி அமெரிக்காவின் பிற மாகாணங்களுக்கு வேலைக்கென செல்பவன் நாட்கள் கணக்கில் திரும்புவதும் இல்லை. இதுபற்றி மனைவியிடம் விவரிப்பதோ, சொல்லிவிட்டு செல்வதோ அவனது அகராதியில் இல்லை.
வீட்டில் இருக்கும் பொழுதுகளில் கூட எப்போது வேலையை முடிப்பானோ தெரியாது. டென்னிஸ் மட்டையை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவான். வீட்டுக்குத் தேவை படும் பொருட்கள் என்னவென்று எப்போது பார்ப்பானோ!அவையெல்லாம் எப்போதும் நிரம்பியே இருக்கும்.
திருமகள் வீட்டில் மனைவி என்ற உரிமையை உணரவில்லை.வீட்டு வேலைகள் முழுவதும் செய்யவே நேரம் போதவில்லை. டாய்லெட் கழுவும் பொழுது அவளுக்கு தனது பெற்றோர் வீட்டில் செல்ல இளவரசியாக நடந்து கொண்டதும் இப்போது இங்கே இப்படி என்றும் தோன்றும்.
ஆரம்பத்தில் நிவாஸ் இங்கே கூட்டிக்கொண்டு வந்தபொழுது ,வீட்டின் பிரம்மாண்டம் பார்த்து மலைத்தவள் இப்போது,அதை பார்த்து பயந்தாள். கணவன் வீட்டில் இல்லாத பொழுது,ஆள் நடமாட்டம் இன்றி இவ்வளவு பெரியவீட்டில் தனியே இருப்பது அவளை உறைய செய்யும் ஒன்று. அத்துடன் வீட்டில் கொஞ்சம் அழுக்கோ தூசியோ இருந்தாலும் நிவாஸால் தாங்க இயலாது.
குத்தல் மொழிகளுடன் கத்த தொடங்கி விடுவான். இப்படியே திருவின் திருமண வாழ்க்கையில் அமெரிக்காவின் மூன்று மாதங்கள் கழிந்தது.
error: Content is protected !!