Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை -8

நேரம் இரவு பத்தை நெருங்கிக்கொண்டிருக்க கதிரிடமிருந்து அழைப்பு வந்தது சேனாவிற்கு “அண்ணே எங்க இருக்கீங்க” என்றான்.

“டின்னர்” என்றான் ஒரேவார்த்தையில்.

“சரிண்ணா… வீட்ல இருந்து போன் வந்தது என்னோட மாமனார் படியில் உருண்டு விழுதுண்டாராம் ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துருக்காங்க, என் பொண்டாட்டி போன் போட்டு ஒரே அழுகை நான் வீட்டுக்குப் போகட்டுமா” என்க.

“ஒன் செகண்ட்” என்று அவர்களிடம் கூறி தனியே வந்தவன் “என்னடா சொல்ற எப்போ!” என்றான் நேரத்தைப் பார்த்துக்கொண்டே, எப்படி போக முடியும் என்ன வழி என்று அவன் மூளை அதற்குள் யோசனை செய்தது.



Advertisement

“இப்போதாண்ணே போன் வந்துச்சு” என்க.

“ஹ்ம்ம் சரி ஒண்ணுப்பன்னு நம்ம எஸ்டேட் ஜீப் எடுத்துக்கோ பஸ்லாம் இப்போ வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது, நான் அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுறேன்” என்றான் உடனடியாக முடிவு செய்து.

“சரிண்ணா” என்றவன் வேகமாக அவனுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு ஜீப்பை எடுத்தான், இங்கு வந்தால் மலையில் ஓட்ட அதைத்தான் உபயோகப்படுத்துவது, எப்பொழுதும் நல்ல கண்டிஷனில் வைத்திருப்பர்.

Advertisement

“திலோமா நல்லா ரெஸ்ட் எடு, முடிஞ்சா நம்ம தோட்டத்தைச் சுத்தி பாரு மறக்காம அண்ணாகிட்ட பேசிடு, உடம்பை பாத்துக்கோ” என்றவன் பாண்டியம்மாவிடம் திலோவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பினான்.

Advertisement

உண்மையில் கதிர் இருந்தவரை திலோவுக்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது, இப்பொழுது இந்த இருளும் குளிரும்… புதிதாகக் கேட்கும் சத்தங்களும் ஏதோ அமானுஷ்யம் போலத் தோன்றியது.

“அம்மாடி நீ போய்த் தூங்கு தம்பி எப்போவரும் தெரியாது” என்றார் பாண்டியம்மா.

கீழே அடுக்கலையை ஒட்டி ஒரு சிறிய அறை இருந்தது அங்கேதான் அவர் படுத்துக்கொள்வார், அதுபோக கீழே இரண்டு அறைகள் மேலே இரண்டு அறைகள் இருந்தது, கதவுகளை அடைத்துச் சரிபார்த்தவர் அப்படியே ஹாலில் கம்பிளி விரித்துப் படுத்துக்கொள்ள சோபாவில் வந்து அமர்ந்தாள் திலோத்தமா.

Advertisement

“இங்கேயே தூங்குறீங்க” என்றாள் ஆச்சர்யமாக அவரைப் பார்த்து.

அவளை நிமிர்ந்து பார்த்தவர் “இல்லமா அந்த ரூம்லதான் தூங்குவேன் தம்பி வந்தா தெரியாதுல அதான், அவங்க வந்தப்புறம் உள்ள போய்ப் படுத்துப்பேன்” என்றார்.

“இவங்க இங்க அடிக்கடி வருவாங்களா” என்றாள் திலோ.

“வருவாங்கம்மா தோட்டம் இருக்குல்ல… பதினஞ்சு ஏக்கர் நெறய பழவகைகள் இருக்கு பாதியும் வெளிநாட்டுக்கு போகும், மிச்சம் இங்க இருக்குற பெரிய கடைகளுக்கு அப்புறம் வீட்டுக்கு, எப்போவும் நானும் போவேன் பழம் பறிக்கும்போது” என்றார் அவர்.

‘இந்தமுறை தான் இங்கிருப்பதால் அவர் போகவில்லை’ என்று புரிந்தது அவளுக்கு.

“அவ்ளோ நல்லா இருக்கும், தனி தனியா பறிச்சு அழகா அடுக்கிப் பெட்டில போட்டு வண்டியில ஏத்துவாங்க பாக்கவே அவ்ளோ ஆசையா இருக்கும், இந்தத்தடவ புதுசா ஒருத்தங்களுக்கு பேசியிருக்காங்க அதான் தம்பி போயிருக்கு”.

“கொஞ்சம் தண்ணிலாம் இன்னைக்கு இருக்கும் எப்போவும் கதிர் கூடவேயிருந்து கூட்டிட்டு வருவான் இன்னைக்கு என்னனு தெரியல, அதிகமா குடிக்காம வந்துடனும்” என்க புதிய கவலையும் சேர்ந்துகொண்டது திலோவிற்கு.

‘அதிகமா குடிச்சுட்டு வண்டியோட்டி எங்கயாவது இடிச்சுட்டா… மலைல இருந்து விழுந்துட்டா’ என்று அவள் கற்பனை தறிகெட்டு ஓடியது.

அதன்பிறகு சேனாவின் குடும்பத்தைப் பற்றி அவர்களின் குணத்தை பற்றி என்று பெருமையாகப் பேசினார் “வருஷா வர்ஷம் மே மாசம் குடும்பமா இங்க வந்துடுவாங்க, பெரியய்யாவுக்கு உடம்பு சரியில்லாம ஆனதிலேயிருந்து அம்மாவும் ஐயாவும் வரதில்ல, பாப்பா தம்பியோட வரும் ஒருவாரம் ரெண்டுபேரும் இங்க இருப்பாங்க” என்றவர்.

“தம்பி கல்யாணம் செஞ்சு பொண்டாட்டியோட இங்க வரணும் ரெண்டு பேருக்கும் என் கையால சமச்சு போடணும், எங்க… பிடிகொடுக்க மாட்றார்” என்று பெருமூச்சு விட அவரை முறைத்துப்பார்த்தாள் திலோத்தமா.

“அதுமட்டுமா பக்கத்து எஸ்டேட் பரமசிவன் அவர் பொண்ணுக்கு தம்பியைப் பிடிச்சுருக்குன்னு வந்து பேசினார், இங்கயும் எல்லார்க்கும் பிடிச்சிருந்தது பொன்னும் பாக்க அவ்ளோ அழகா இருக்கும்” என்க ஜன்னலில் இருந்த கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டாள் திலோத்தமா.

“தம்பிகூட ஒருதடவை அந்தப் பொண்ணை பாத்துச்சு… சரி பேசுங்க அப்படின்னு சொல்லிட்டுப்போன ஆளு நாலு நாள்ல திரும்பி வந்து கல்யாணம் செஞ்சுக்க விருப்பமில்லை நீங்க வேற பாருங்கன்னு சொல்லிடுச்சு”.

“அந்தப் பொண்ணு அன்னைக்கு அழுததை பாக்கணுமே ரொம்ப பாவமா இருந்துச்சு” என்றார் மிகவும் வருத்தப்பட்டு ஏதோ இன்று நடந்ததைப் போல.

“அவனுக்கும் பிடித்தது…” அந்த நினைப்பே அவளுக்குப் பிடிக்கவில்லை “என்ன காரணம்னு இன்னைக்கு வரைக்கும் தெரியல, அவங்களும் ஆறு மாசம் கழிச்சு வேற மாப்ள பாத்து கட்டிக்குடுத்துட்டாங்க, எப்போவாவது இங்க வரும்போது கேக்கும் சேனா வந்தாரான்னு” என்க.

அந்தக் குளிரிலும் அவள் மனம் தீயாய் எரிந்தது ‘மறுபடியும் வரட்டும் அவ காலை ஒடைச்சுடுறேன்’ என்று மனதில் கருவியவள் ‘யோவ் ஹல்க் உனக்கு எதுக்குயா அவளைப் பிடிச்சுது… அவளை மட்டுமா நெறய பொண்ணுங்கன்னு அன்னைக்கு சொன்னானே, முதல்ல இவன் காலை உடைச்சு வீட்ல படுக்க வைக்கணும், கண்ணை நோண்டிடனும் அப்போ எப்படி பாப்பான்’ என்று தீவிரமாக யோசித்தவள்.

‘அடப்பாவி ஒரு டாக்டரை இப்படி வில்லி மாதிரி யோசிக்க வெச்சுட்டியே’ என்று அதற்கும் மனதில் அவனைப் புரட்டிப் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தாள்.

மணி பன்னிரெண்டை நெருங்கும் நேரம் வந்து சேர்ந்தான் சேனா, அவனுடைய வண்டி சத்தத்தில் விழித்துக்கொண்டாள் திலோ அவன் படிகள் ஏறும்போதே கதவைத் திறந்துவிட்டாள் அவளை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

கடந்துசென்றவன் மீது மதுவின் நெடி இல்லை அவனின் பிரத்யேகமான மனம் மட்டுமே, அவள் அங்கேயே நிற்பதை பார்த்தவன் “தூங்காம என்ன பண்ற இவ்ளோ நேரம்” என்றான் அவளிடம்.

அவனின் குரலில் அடித்துபிடித்து எழுந்த பாண்டியம்மா “சத்தமே கேக்கல தம்பி” என்க பரவாயில்ல என்றவன் “போய்த் தூங்கு” என்றுவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவடைத்தான்.

‘எப்படி இருக்க ஜுரம் சரி ஆயிடுச்சா… ஒண்ணுமே கேக்கல, சாப்டியான்னு கூடக் கேக்கல’ என்று எண்ணியவளுக்கு மீண்டும் அழுகை வந்தது,  வேகமாக அவளுக்கென்று கொடுத்த அறைக்குச் செல்ல நடந்தவள் கார்பெட் தடுக்கி குப்புற விழுந்தாள்.

சத்தம் கேட்டு ஓடிவந்தவன் பார்த்தது காலைப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தவளைத்தான் “ஒழுங்கா நடக்கவே மாட்டியா விழுந்து முத்தெடுக்கறதே உனக்கு வேலையா” என்றவன் அவளைத் தூக்கி சென்று கட்டிலில் விட்டான்.

“ரெண்டு மூட்டைத் தூக்கியிருந்தா காசாவது கெடச்சிருக்கும்” என்று சொல்லிச்சென்றவனை எதுவும் செய்யமுடியா இயலாமையில் மீண்டும் அழுகை வந்தது.

அவள் காலைப் பிடித்துப் பார்த்த பாண்டியம்மா “ஒண்ணுமில்லமா சின்ன சுளுக்குத்தான்” என்று எண்ணெய் வைத்து இரண்டு இழு இழுக்க சுளுக்கோடு சேர்ந்து அவள் உயிரும் போனதாகத் தோன்றியது திலோவிற்கு.

‘எதுக்கு அழணும் போ இந்த ஹல்க் வேண்டாம் உனக்கு, யாருமே வேண்டாம் படிச்சு முடிச்சு இவங்க யார் கண்ணுலயும் படாம எங்கேயாவது போய்டணும்’ சிந்தித்து சிந்தித்து மூளை சோர்வடைந்து அவளைத் தட்டி உறங்கவைத்தது.

காலை உறக்கம் கலைந்தபோது வெளிச்சம் சிறிதாக வந்திருந்தது, எங்கும் பனிமூட்டம் இருக்க சரியாக ஒன்றும் தெரியவில்லை நேரம் ஏழுமணி என்றது கடிகாரம், மெல்ல நடந்து பார்க்கச் சிறிதாக வலி இருந்தது மற்றபடி ஒன்றுமில்லை.

ஜன்னலின் அருகில் சென்று நின்றவள் ஜன்னலைத் திறந்து பார்க்க அந்தப் பணியில் தோட்டத்தில் நடந்துகொண்டே யாரிடமோ கடலை வறுத்துக்கொண்டிருந்தான் சேனாபதி, உண்மையில் அவன் கதிரை வறுத்துக்கொண்டிருந்தான்.

காலைச் சேனாவை அழைத்தவன் “அண்ணே பெருசா ஒன்னும் பிரச்சினையில்ல இவ பயந்துட்டு என்னை வரவெச்சுட்டா” என்றவன் கூற  “இவகிட்ட கோத்துவிட்டுட்டு நீ அங்கபோய் நாடகமாடுறியா” என்று கடித்து துப்பினான்.

“யார்கிட்ட கோத்துவிட்டேன்?”  என்றவனை வாயில் வந்ததெல்லாம் சொல்லித் திட்டியவன் “உன் பாசமலரை இங்க விட்டுட்டு போயிருக்கியே அவளை நான் என்ன பண்ண, என்னைக்கு கிணத்துல குதிச்சாலோ அன்னைல இருந்து இவளைத் தூக்கிட்டு நடக்கிறதே எனக்கு வேலையா போச்சு சரியான அவசரக்குடுக்க” என்றான்.

‘ஐயோ இப்போ என்ன பண்ணுச்சுன்னு தெரியலையே’ என்று மண்டையை உடைத்துக்கொண்டான் கதிர்.

பல்துலக்கி வெளியில் வந்தவள் கிட்சன் செல்ல இவளைப் பார்த்ததும் “எப்படிம்மா இருக்கு” என்றார் பாண்டியம்மா.

“பரவாயில்ல கால்ல கொஞ்சம் வலியிருக்கு” என்க.

“சரியாயிடும்” என்றவர் சூடான காப்பியை அவள் கைகளில் வைத்தார்.

“சுடுதண்ணி இருக்குமா மேலுக்கு ஊத்திக்கோ, குளிச்சுட்டு வந்து சூடா சாப்பிடு” என்க அவளும் சென்று குளித்து ஒரு ஜீன் டீ ஷர்ட் அணிந்து வெளியில் வந்தாள்.

இட்லி சாம்பார் என்றிருக்க அந்தக் குளிருக்கு சூடாக உணவு அமிர்தமாக இருந்தது, சேனாவும் வந்தவன் அவளுக்கு எதிர்பக்கம் அமர்ந்துகொண்டான்.

“சாப்பிடுங்க தம்பி வரேன்” என்ற பாண்டியம்மா பின்னில் தோட்டத்திற்கு சென்றார்.

“சாப்பிட்டு கிளம்பு” என்றான் சேனா.

“எங்க?”.

“ஹ்ம்ம்… நீதான் விழறதுக்கு எடம் தேடிட்டே இருக்கியே, அங்க நல்ல ஒரு எடம் இருக்கு குதிச்சா அப்படியே பறந்துட்டே போய்ப் பாறைல மோதிக் கண்ணாடி மாதிரி சில்லுசில்லா சிதறி போலாம் நல்லாயிருக்கும்” என்றான் சீரியஸாக.

பத்து இட்லியை  ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தவன் ஒரு இட்லியை பத்து நிமிடமாக உண்டுகொண்டிருப்பவளை பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டு சென்றான்.

அவள் சாப்பிட்டு முடிக்க வேறு புடவை மாற்றிப் பாண்டியம்மாவும் வந்தார் “எங்கப்போறிங்கம்மா” என்றாள் திலோ.

“தோட்டத்துக்குமா… தம்பி சொல்லலையா வாப்போலாம், இங்கேயே எவ்ளோ நேரம் இருக்க, நேத்து சொன்னேன்ல பாக்க நல்லா இருக்கும்” என்றவர் ஒரு ஸ்வெட்டர் எடுத்துப் போட்டுக்கொண்டார்.

அவள் அப்படியே வெளியில் வர அவளை மேலும் கீழும் பார்த்தவன் உள்ளே சென்று ஸ்வெட்டர் ஒன்றும் ஸ்டோல் ஒன்றும் எடுத்துவந்து கொடுத்தான்.

‘யாருடையது?’ என்றவள் அதையே பார்த்துநிற்க.

“கீர்த்தியோடது” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து, உதட்டைக் கடித்துக்கொண்டவள் வேகமாக அதை அணிந்துகொண்டு வண்டியில் ஏறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!