Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்ப(னை)து சுகமானதே… 3

சாருவின் நிலைமை தெரிந்து தான் நரேன் அவளை விரும்புகிறான். 

அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டு. இருவரும் திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. 

 

ஆனால் நரேந்திரனுக்குள் தன் வீட்டினரும் இதற்கு சம்மதிக்க கூடும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை. 



Advertisement

 

 ‘ஒருவேளை சாருவும் கூட சி ஏ படிப்பதால் வீட்டில் ஒப்புக்கொள்ள கூடும்என்ற எண்ணம் இருக்கலாம். 

 

Advertisement

அவனுக்குள் அந்த எண்ணம் இருப்பின் அது குழந்தைத்தனமான ஒன்று. இதையே தான் நரேந்திரனிடம்  சாகேதும் சொன்னான். 

Advertisement

 

யூ ஸ்டுபிட்… கல்யாணம் பண்றது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா… இவ்வளவு ஈஸியா முடிவு பண்றது  கொஞ்சம் கூட சரி இல்லை.உங்க வீட்ல ஒத்துப்பாங்களான்னு முதல்ல யோசி. சப்போஸ் உங்க பேரண்ட்ஸ் ஒத்துக்கலைன்னா அடுத்த ஆப்ஷன் என்ன? 

 

Advertisement

 வீட்ல ஒத்தக்கலைன்னு இவள விடுவியா.. இல்ல, என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு  சாருவை கல்யாணம் பண்ணுவியா? அவங்க வீட்ல வேற நீங்க ரெண்டு பேருமா பேசணும்.  அவங்க ஒத்துப்பாங்களான்னு வேற தெரியாது. 

சாருவோட வீட்டுலயும் ஒத்துக்கலைன்னா இந்த பொண்ணு வீட்டை விட்டு வெளியே வந்து, நீங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க தயாரா? 

 

 தன் நண்பனின் அடுக்கடுக்கான  கேள்விகளை யோசித்துப் பார்க்கவே நரேனுக்குள் நடுங்கியது. 

 

 ஆண்- பெண் இருவருமே இவற்றைப் பற்றி எல்லாம் இன்று வரை யோசிக்கவில்லை. நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். வீட்டினருக்கு  தெரிந்தாலும் ஒன்றும் மாறிவிடாது என்ற எண்ணத்தில் மட்டும்  இருவரும் இருக்க, நிதர்சனம் வேறு என்று மண்டையில் ஆணி அடித்தது போல் சாகேத் சொன்னது, நரேந்திரனை வெகுவாக காயப்படுத்தியது. 

 

எந்த ஒரு காரணத்திற்காகவும் காதலிக்கும் பெண்ணை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை. இதைப் பற்றி சாருவிடமும்  பேச வேண்டும் என்று மனதிற்குள் யோசித்தான். 

 

இவன் அளவிற்கு பெண் ஒன்றும் பயப்படவில்லை. அவன் சொல்வதை காது கொடுத்து கேட்டவள், 

 

எங்க அப்பா ரொம்பவே முற்போக்குவாதி நரேன். நிச்சயம்  எங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க. அதோட இத பத்தி இப்ப பேச எனக்கு கண்டிப்பா இஷ்டம் இல்லை. 

முதல்ல நம்ம ரெண்டு பேரும் பைனல்ஸ் எழுதுவோம். அதுல பாஸ் பண்ணுவோம். ஏற்கனவே இப்போ எப்படி காதலில் சிக்கினேன்னு எனக்கு குழப்பமா இருக்கு. 

இன்னும் கல்யாணம் என்கிற கமிட்மெண்ட் பத்தி யோசிக்க இப்ப நான் தயாராக இல்லை. 

 

ரெண்டு பேரும் எக்ஸாம் பாஸ் பண்ணி முதல்ல ஒரு நல்ல வேலையை தேடிக்கலாம். அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம். ஒருவேளை உங்க வீட்டிலையோ, என் வீட்டிலேயோ சம்மதிக்கலைன்னா கூட நமக்கு இன்னொரு வழி இருக்கே… அதையும் யோசிப்போம். 

 

அவளது குரலில் இருக்கும் திடம் அவனுக்குள்ளும் பரவியதோ? 

 

நரேன் இது பற்றி சாகேத்திடம் சொன்ன பொழுது, உங்க ரெண்டு பேருக்கும் என் வழியா ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு.நான் நிச்சயம் பண்றேன் என்று முடித்து விட்டான். 

 

அதற்குப் பிறகு நரேந்திரனின் காதல் பற்றி சாகேத் மறந்தும் கூட பேசவில்லை. முழுமூச்சாக தனது அலுவலக வேலையில் தனது ஈடுபாட்டை காட்டத் தொடங்கி விட்டான். வாழ்க்கை அதன் போக்கில் தினமும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. 

 

நடுவில் இரண்டு  முறை துரை-ராஜம் இருவரும் வந்து தங்கி விட்டு போனார்கள். அவர்கள் இருவரும் வந்தது  சாகேத்தை விட நரேனுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது. 

 

அவனது பெற்றோர் பெங்களூருவிற்கு ஏதாவது விஷயமாக வந்தால் கூட இவனது பிளாட்டுக்கு வந்து இவனை சந்தித்ததில்லை. இவன்தான் அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்கு செல்ல வேண்டும். 

 

நிஜத்தில் சொல்லப்போனால்,  அவர்களது மனதில் சாகேத்துடன் தன்மகன் தங்கி இருப்பது ஒருவித அசூயையை உண்டு பண்ணி இருந்தது. முன்பை விட இப்போது அவர்களது பொருளாதார நிலை இன்னும் கூடி இருக்கிறது. அதனாலேயே  பொருளாதார அளவில் தங்களை விட கீழே இருக்கும், சாகேத் பற்றிய அலட்சியம் ஒருபுறம். 

 

பாசாக முடியாமல் திரும்பத் திரும்ப   தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கும் தன் மகன் மீதான கோபம் இன்னொரு புறம். அதனாலயே அவன் தங்கி இருக்கும் இடம் நோக்கி செல்ல அவர்களுக்கு பிடிக்கவில்லை. 

 

பெற்றவர்களின் இந்த போக்கு, நிச்சயம் தனது காதல் விவகாரம் தெரியும் போது அவர்கள் ஒப்புக்கொள்ளும் சாத்தியம் இல்லை என்று நரேந்திரன் மனதில் ஆழ விதைத்தது. 

 

சாகேத்திற்கும் கூட, நரேந்திரனின் பெற்றவர்களின் அணுகுமுறை கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. எவ்வளவு நன்றாக சம்பாதித்தாலும் அவர்கள் பெண்ணை தனக்கு தருவார்களா… எனும் யோசனை, இத்தனை வருஷ காதல்! 

 

தன் பெற்றோர் பற்றி நிச்சயம் அவனுக்கு தெரியும். அவனது சந்தோஷம் திருமகளிடம் மட்டும்தான் என்று தெரிந்து விட்டால் இப்போதே பெண் கேட்க கிளம்பி விடுவார்கள். L 

 

நண்பனுக்கு தைரியம் சொன்னாலும் கூட அவனால் தனது சொந்த சூழ்நிலையை கையாள முடியாமல் தவித்தான். 

 

காதல் எனும் உணர்வை தாங்க முடியாமல், அதை தவிர்க்கவும் முடியாமல் , வெறுத்தாலும் கூட அதை விட்டு வெளியே வர இயலாமல், ச்சை… மனிதனை உயிருடன் கொள்ளும் மாய உணர்வு! 

 

இதையெல்லாம் யோசிக்கும் சாகேத், தான் விரும்பும் பெண் தன்னை மறுக்க கூடும் என்று கூட யோசித்து இருக்க வேண்டுமோ? 

 

ஒருவேளை தன்னை மறுப்பதற்கு பெண்ணிடம் காரணம் ஏதும் இல்லை என்ற எண்ணம் இருக்கலாம். 

பொதுவாகவே நிறைய ஆண்களுக்கு, எந்தப் பெண்ணும் தன்னை மறுப்பதற்கு காரணம் இல்லை எனும் அதீத நம்பிக்கை இருப்பதை ஒரு சிலரிடம் நானும் கூட பார்த்- 

-திருக்கிறேன். 

அவனுள்ளும் இதே போன்ற விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. 

 

அப்படி ஒரு சூழ்நிலை வரும் பொழுது அதை எதிர்கொள்ளப் போகிறான் என்று தெரியவில்லை. 

 

காதல் எவ்வளவு வலிமை வாய்ந்ததோ அது பற்றி தெரியாது. ஆனால், வைரஸ் யாரை தாக்கினாலும் உடல் பலவீனம்கொள்ளும் . காதல் யாரை தாங்குகிறதோ அவர்கள் மனம் பலவீனம் கொள்வது உறுதி. 

சாக்கேத் இப்போது அந்த நிலையில் தாம் இருக்கிறான். காதல் வைரஸ் தாக்குதல்! 

 

நரேன்- சாரு 

இருவரும் பரீட்சை எழுத தயாராகிவிட்டார்கள். நரேன் வேலையில் விடுப்பு எடுத்துகொண்டு பத்து நாட்களாக வீட்டில் தான் இருக்கிறான். சவரம் செய்து கொள்ளும் உத்தேசம் கூட அவனுக்கு இல்லை. சாருவும் கூட அழைக்கவில்லை. 

சாப்பிட மறந்து உட்கார்ந்து படிக்கும் நரேனுக்கு, தான் வீட்டில் இருக்கும் சமயங்களில் சாதம் பிசைந்து ஸ்பூன் போட்டு கொடுக்கும் சாகேத்தை பார்க்கும் பொழுது மனம் குழையும். கலங்கிய கண்களை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டவனுக்கோ கலங்கும் மனதை அடக்க முடியவில்லை. 

 

வீட்டில் அவன் பெற்றோரின் வார்த்தைகள் அவனை எவ்வளவு நோகச் செய்தது என்பதை அவன் அறிவான். 

 

இன்று வரை துவளாமல் என்னை பார்த்துக் கொள்பவன் சாக்கேத் தானே என்ற எண்ணம். 

 

பரிட்சை சமயங்களில் தனது காரில் கொண்டு போய் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் சாக்கேத் மாலை பரீட்சை முடிந்ததும் அலைபேசியில் அழைத்து விசாரிக்க தவறியதில்லை. 

 

கல்லூரி காலத்தில் ஆரம்பித்த நட்பு, இப்போது இவ்வளவு ஆழமாய் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.  

 

அடுத்த நிலைக்கு கொண்டு சென்று, தன் தங்கையின் கணவனாய் சாகேத்திடம் நிரந்தர உறவை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் கொண்டிருந்த நரேனின் மனம் இப்போது தன் தங்கை மற்றும் பெற்றோர் குறித்து பலமாக சிந்திக்கிறது. 

 

காலம் எல்லாவற்றையுமே மாற்றி விடுகிறது. வெகு சீக்கிரமாக மாறுவது மனிதனின் மனம். 

 

வேலைக்கு சென்று கொண்டிருக்கும்  திருமகளை  அங்கே அவளது ப்ராஜெக்ட் ஹெட்டாக இருக்கும் நிரூபன் விரும்புவதாக தெரிவித்தவுடன், அவளது மனம் இறக்கை இல்லாமல் சிறகடித்து பறக்கத் தொடங்கி விட்டது. 

 

நிரூபன் இவ்வளவு வருஷங்களாய் அமெரிக்காவில் இருந்துவிட்டு இப்போது அவனது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக இந்தியா வந்திருக்கிறான். ஒருசில வருஷங்கள் அவர்களுடன் இருந்துவிட்டு மீண்டும் அங்கேயே சென்று விடுவதாக தான் அவனது எண்ணம். முடிந்தால் பெற்றோரை எப்படியாவது தன்னுடன் கூட்டி சென்று விட வேண்டும் என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறான். 

 

பணம் என்று பார்த்தால் திருமகள் குடும்பத்தை விட பல படிகள் மேலே. அமெரிக்க மண்ணில் எம் எஸ் முடித்துவிட்டு, அங்கேயே  வாழ்நாள் முழுவதும் இருப்பதற்கு கொடுப்பினை… 

 

அவனது உயரம், அழகு, படிப்பு, அந்தஸ்து எல்லாமே வாவ் ரகம் தான். 

நிரூபன் திருமகள் வேலை செய்யும் அந்த கம்பெனியின் பங்குதாரர் வேறு. 

 

வேறொன்றும் வேண்டாமே பெண்ணேஎன்றது திருமகளின் மனம். இருபத்து மூன்று வயதில் அவளிடம் இதை விட பக்குவம் இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாதோ? 

 

அவன் தன் காதலை சொன்ன உடனேயே திருமகள்  ஒப்புக் கொள்ளவில்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை. தன் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் முடிந்தவரை அமைதியாக தான் இருந்தாள். 

 

வீட்டிலும் கூட அவள் இதைப்பற்றி எதுவும் வாயை விடவில்லை. திருமகள் அமைதியாக இருப்பதை பார்த்து நிரூபன் இன்னும் அதிகமாகவே அவள்பால் ஈர்க்கப்பட்டான். 

 

அலுவலகத்தின் சார்பாக ஏற்காட்டிற்கு மூன்று நாட்களுக்கான சுற்றுலா ஏற்பாடாகி இருந்தது.  மொத்தம் முப்பது பேர். அதில் திருமகளும் நிரூபனும் அடக்கம். 

 

அங்கே ரிசார்ட்டில் இரண்டு பேருக்கு ஒரு அறை என்ற விகிதத்தில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன. 

நிரூபனுக்கு தனி அறை. 

 

இரவு நடந்த பார்ட்டியில் நிரூபன் திருமகளை பார்த்து, மேரே சப்புனோ கி ராணி கபு ஆயிகி து என்ற ஹிந்தி பாடலை பாட திருமகளின் முகம் செவ்வானமாய் சிவந்தது. 

 

அவனுக்கு எப்படி தன் மனதை தெளிவு படுத்துவது என்று மயங்கியவள் எங்கே நீயும் நானும் அங்கே உன்னோடு என்ற பழைய தமிழ் பாடலை பாட யாரும் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும் கூட நிரூபனுக்கு பொருள் புரிந்தது. 

 

இருவருமே மற்றவர்கள் எதிரில், தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்ளவில்லை. மூன்று நாட்கள் சுற்றுலா முடிந்த பிறகு  இரயில் சென்னை வந்து சேர்ந்த உடனேயே நிரூபன் யார் கண்ணிலும் படாமல் அவளை மட்டும் தனியாக தன் காருக்குள் ஏற்றிக்கொண்டு இசிஆர் ரோடு நோக்கி பறந்தான். 

 

அவனால் தனது உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அவன் இழுத்த இழுப்புக்கு புன்னகையுடனே உடன்பட்டது பெண். 

 

அங்கே ஐந்து நட்சத்திர தகுதியுடைய ஒரு ஹோட்டலில் காரை பார்க் செய்துவிட்டு இருவருமாக  சாப்பிடுவதற்கு  சென்றார்கள். சாப்பிட்டு முடிக்கும் வரை இருவருக்கும் எந்த பேச்சும் இல்லை. 

 

தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டாள் திருமகள். தன் காதலை சொல்லவும், திருமணம் பற்றி பேசவும்தான் நிரூபன் தன்னை தனியாக அழைத்து வந்திருப்பதாக பெண் தீர்மானமாக நம்பியது. 

 

அவளது முகம் பல்வேறு உணர்வுகளின் குவியலாய் வர்ணஜாலங்களை காட்ட, நிச்சயம் அதில் மயங்கி தான் போனான் நிரூபன். 

 

 “நமக்காக ஒரு பிளாட் பார்க்கவா திரு எங்கேயோ கிணற்றில் இருந்து ஒலிப்பது போல் அவளுக்கு கேட்டது. 

 

புரியல… எதுக்காக பிளாட்? அவள் வயிற்றில் ஏதோ ஒரு பயப்பந்து. 

 

கம் ஆன் திரு.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுக்கு பிளாட் வேண்டாமா?  

 

எதுக்குங்க தனி பிளாட்? உங்களுக்கு அடையாறுல வீடு இருக்குதானே… கல்யாணத்துக்கு அப்புறம் நாம உங்க பேரன்ட்ஸோட அங்கேயே இருந்துக்கலாம். அப்படி இல்லன்னா எங்க அப்பா கிட்ட சொல்லி தனியாக ஒரு பிளாட் வாங்க சொல்லலாம். நம்ம மேரேஜ் லைப் அங்கே ஸ்டார்ட் பண்ணிக்கலாம்.  

 

அவளது பேச்சைக் கேட்டவனுக்கு திகைப்பு கூடியது. என்ன பதில் சொல்வது என்று புரியாமல்  தேங்கியவன், நோ.. நோ.. திரு. நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க. எடுத்த எடுப்புல நம்ம கல்யாணம் பண்ணிக்க முடியாது. ரெண்டு பேரும் கொஞ்ச வருஷம் ஒன்னா சேர்ந்து வாழணும். ரெண்டு பேராலையும் ஒருத்தர விட்டு ஒருத்தர பிரிந்து இருக்க முடியாதுன்னு நிச்சயமா தோணினாதான் கல்யாணம். இல்லன்னா நண்பர்களாகவே பிரிஞ்சிடலாம். அதுவரைக்கும் நோ  கமிட்மெண்ட்ஸ். உனக்கு ஓகேவா சொல்லு. இப்ப கேட்டா எனக்கு உன்ன அவ்வளவு பிடிச்சிருக்குன்னு சொல்லுவேன் “. 

அவனது பேச்சு கேட்டு அவளுக்கு மயக்கம் தான் வந்தது. லிவ் இன் உறவில் வாழ அழைக்கிறான். 

 

அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள், சாரி நிரூபன். எனக்கு கூட உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வாழறதா இருந்தா, கண்டிப்பா என்னோட பதில் எஸ் தான். பட் லிவ் இன் ல பிடிக்குமா பிடிக்காதான்னு ஒரு சந்தேகத்தோட லைஃப்ப ஓட்ட எனக்கு இஷ்டம் இல்லை. 

 

கல்யாண வாழ்க்கை என்னை பொறுத்த வரைக்கும்  லைஃப் டைம் கமிட்மென்ட். பிரிஞ்சிடுவோமான்னு சந்தேகத்தோட கல்யாணம் பண்ணிக்க முடியாது… என்று புன்னகையுடனே முடித்து விட்டாள். 

 

ஆனால் அவள் மனதில் ஏதோ ஒன்று நொறுங்கியது. அவள் பதில் தந்த அதிருப்தியில் முகத்தில் கடுமையை கூட்டிக் கொண்டான் நிரூபன். ஏமாற்றம் அவனை பலமாகத் தாக்கியது. 

 

அதற்குப் பிறகு வந்த நாட்களில் அலுவலகம் பெண் அவளுக்கு நரகமானது. அவள் கம்ப்யூட்டரில்  பீட் செய்து வைத்திருந்த டேட்டா எல்லாம் எப்படி டெலிட் ஆனது என்று கூட புரியவில்லை. 

அவளை கூப்பிட்டு ஒண்ணுத்துக்கும் லாயக்கில்ல என்று இரு பொருளில் திட்டி தீர்த்தான் நிரூபன். 

 

சோர்ந்து போன பெண், வேலையை ராஜினாமா செய்து விட்டாள். நிரூபன் பற்றிய எந்த விஷயத்தையும் அவள் வீட்டில் சொல்லி இருக்கவில்லை. 

 

அலுவலகத்தில் நடந்த விஷயங்களுக்கும் நிரூபனின் கேள்விக்குமான தொடர்பு புரியாத அளவிற்கு அவள் ஒன்னும் சின்ன குழந்தை அல்ல. 

 

மனதளவில் அவளுக்கு இவற்றில் இருந்து வெளியே வர கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. 

 

நல்லதாகிப் போயிற்று என அவளது பெற்றோர் உனக்கு கல்யாணம் செய்யலாம்னு யோசிக்கிறோம் திரு. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா இப்போ ஆரம்பிச்சாவே நல்ல இடம் தகைய ரெண்டு வருஷம் ஆகும் என்று பேச்சை தொடங்க திருமகளும் தன் சம்மதத்தை  சொல்லி விட்டாள். 

 

சி ஏ தேர்வில்  நரேனும் சாருவும் வெற்றி பெற்றுவிட, ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்த இடத்திலேயே இருவரும் வேலையை தொடர ஆரம்பித்து விட்டார்கள். 

 

சென்னையில் வந்து தங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும்படி நரேனின் அப்பா எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டு பார்த்தும் கூட, நரேன் அசைந்து கொடுக்கவில்லை. 

 

அவனது கோவம் அவருக்கும் புரியாமல் இல்லை. தனக்குப் பிறகு இந்த அலுவலகத்தை எடுத்து நடத்த வேண்டியது நரேந்திரன்தான் என்பதில் அவருக்கு வேறு எந்த மாற்றுக் கருத்தும் இல்லாத நிலையில் உனக்கு இங்கே சென்னை வர பிடிக்கலைன்னா நம்ம பெங்களூரு கிளையன்ட்ஸ்ஸ நீ ஹாண்டில் பண்ணு நரேன். இங்கேந்து நா உனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் தரேன் என்று இறங்கி வந்து பேசினார். 

 

சாருவும் உங்க அப்பா சொல்றேத கேளுப்பா.. என்று கொஞ்சவே,  சரி என்று ஒப்புக்கொண்ட நரேன், தன்னுடன் சாரு வேலை செய்ய வேண்டும் என்று அவளிடம் நிர்பந்தம் செய்தான். கூடவே தனக்கு உதவியாக பழைய அலுவலகத்தில் உடன் வேலை செய்த பெண் இப்போது நம் அலுவலகத்தில் வேலை செய்வாள் என்று அவன் அப்பாவிடம் சொல்லிவிட்டான். 

 

மகன் பேசியதை கேட்ட பெற்றவருக்கு ஏதோ இடற, கவனிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!