Skip to content
Post Views: 3,537
நரேந்திரனின் வீட்டுக்கு மாலை ஏழு மணியளவில் சென்று சேர்ந்தார்கள் சாருவின் குடும்பம். வாசலை கடக்கும் பொழுதே அவர்கள் அனைவரது மனதிலும் பிரமிப்பு.! இவ்வளவு பெரிய வீடு, பொருளாதார நிலையில் நம்மைவிட பலமடங்கு அதிகமாக இருப்பவர்களுடன் உறவு சாத்தியமா?எனும் கேள்வி அங்கே அனைவருக்குமே மனதை உறுத்தியது. நரேந்திரனிடம் உள்ள அபிப்ராயம் மட்டுமே காரணமாக உள்ளே நுழைந்தார்கள்.
பொதுவான பேச்சுக்களுடன் இரவு உணவை முடித்துக்கொண்டு ஹாலில் சாருவின் குடும்பம் வந்து அமர்ந்துகொண்டது. இங்கே நடப்பவை திருமகளின் மனதில் பாரத்தை ஏற்ற எல்லோரிடமும் பொதுவாக சொல்லிக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
திருமகள் உணவறையில் மறந்தும் இனிப்பை தொட்டாள் இல்லை. இதை யார் கவனித்தார்களோ இல்லையோ,சாரு கவனித்து விட்டாள் .
Advertisement
சாருவின் மனதினில்,”இவளுக்கு நா இங்கே கல்யாணம் ஆகி வர்றது பிடிக்கலையா..இல்லே,தனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு கவலையா“என்று ஓடியது. கூடவே,அத்தனைபேரும் இங்கே இருக்க இந்த பெண் மட்டும் தனது அறைக்கு சென்றுவிட்டாளே ..என்று நெருடியது. முகத்தை புன்னகை மயமாக வைத்துக்கொள்வது பெரிய பிரச்சனையாக இருந்தது அவளுக்கு.
Advertisement
வீட்டுக்கு வந்தவர்களை நரேந்திரனின் குடும்பம் உபசரித்த விதத்தில் ஒரு குறையும் கூற இயலாது. சாருவின் அப்பாவுக்கு மனதில் சந்தோஷமே!ஆனால்,கல்யாணத்திற்கு வீட்டில் ஒரு பெண் காத்துக்கொண்டிருக்கும் பொழுது தன் மகளை இங்கே எப்படி மருமகளாக அனுப்பி வைக்க முடியும்? வீட்டின் பெண்ணுக்கு அல்லவா முதலில் திருமணம் முடித்து அனுப்பிவிடவேண்டும்..என்று தோன்ற அதை கேட்கவும் செய்தார்.
Advertisement
நாங்க இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ண தயார்தான்.ஏதாவது நிச்சயம் ஆகுற மாதிரி இருக்கா..என விசாரித்ததில் , “ரெண்டு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கோம். இன்னும் எதுவும் சரியா வரல.செவ்வாய்தோஷம் இருக்கும் ஜாதகம்.கொஞ்சம் நிதானிச்சுதான பண்ணனும்” என்ற சாம்பசிவத்தின் பதில் கொஞ்சமாக சாருவின் பெற்றவர்கள் வயிற்றில் புளியை கரைத்தது என்னவோ நிஜம்.
Advertisement
பொதுவாக,நிறைய பிரச்சனைகளை தவிர்க்கவே வீட்டுப் பெண்ணை முதலில் திருமணம் செய்து அனுப்புவது. இவர்கள் இன்னும் எவ்வளவு வருஷங்கள் எடுத்துக்கொள்வார்களோ ..என்று சாருவின் அப்பா பயம் கொண்டார்.வெளியே சொல்ல தயக்கம்.
நரேந்திரனின் அம்மா,”உங்க பொண்ணோட ஜாதகம் வேணும்.என்னதான் காதலிக்கிறேன்னு என்னோட பையன் வந்து நின்னாலும்,அந்தஸ்து வேணும்னா பாக்காம கல்யாணம் செய்ய ஓத்துக்குவோம் . ஆனா,கலியாணம் ஆயிரம் காலத்து பயிர். எடுத்தோம்,கவிழ்த்தோம்னு செய்ய முடியாது” என்று தீர்மானமாக சொல்லிவிட நரேனுக்குக்குள்,’ஒருவேளை,இந்த கல்யாணத்தை நடக்கவிடாமல் செய்ய இவர்களது தந்திரமோ எனவும் மயங்கினான்.
அவனால் இந்தநிலையில் அவனது பெற்றவர்களை நம்ப முடியவில்லை. பெண்ணை பெற்றவர்களுக்கும் இதே போல் சந்தேகம் ஒருபக்கம் என்றாலும்,அவர்களுக்கும் ஜாதக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்வதில் கொஞ்சம் மன நெருடல் இருப்பதுவும் உண்மை.
கொஞ்சமும் யோசியாமல்,தங்களிடம் இருக்கும்,பெண்ணின் ஜாதகத்தை பெற்றவர் எடுத்துத் தர, மீண்டும் நரேனின் அம்மாவோ,”உங்கள் பொண்ணோட பிறந்த நேரம், கிழமை இதெல்லாம் குடுங்க.ஜாதகம் எங்க ஜோசியரே கணிச்சு சொல்லுவாரு . பொண்ணு பெரியவளான டீடெயில்ஸ் இருந்தா அதையும் குடுங்க“என்று தேவையான விவரங்களை கேட்டு வாங்கிக்கொண்டாள்.
வேறு எனத பற்றியும் இப்போது பேச முடியாது. இவர்கள் சொல்வதை பார்த்தால் ஜாதகம் பொருந்தி வந்தால்தான் மேற்கொண்டு எதுவும் பேச முடியும் என்பது தெளிவாகப் புரிய சாருவின் வீட்டினர் விடை பெற்றார்கள்.
சாகேத்தின் வீட்டுக்கு வந்த பிறகு, அவர்களிடம் பெண்ணின் ஜாதகம் கொடுத்துவிட்டு வந்திருக்கும் விவரம் தெரிவித்தவர்களுக்கும் அவர்கள் வீட்டில் திருமணம் ஆகாது பெண் இருப்பதை பற்றி இவர்களிடம் பேசலாமா..என்று தயக்கம் எழ மௌனம் அங்கே ஆட்சி செய்தது. அன்றைய இரவு சாருவின் வீட்டினருக்கு எப்போது முடியும் என்று இருக்க தூக்கம் இன்றி நீண்டது.
நரேன் மனதில்,’காதல் கல்யாணம்னா மனசு பொருந்தி இருக்குன்னு தானே அர்த்தம்..பின்னே எதுக்கு இந்த டிராமாவெல்லாம்‘ என வெதும்பினான். அவனால்,சாருவிடமிருந்து இதற்கு மேல் பிரிந்திருக்க முடியாது என்ற எண்ணம் மேலோங்க, ஒருவேளை யாருமே ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கவலை இல்லை. இருக்கவே இருக்கிறது பதிவுத் திருமணம் என்று முடிவு செய்துகொண்டே தூங்கினான்.
இவர்களுடன் சேர்ந்து தூக்கம் வராமல் தவித்த இன்னொரு ஜீவன் திருமகள். தான் கல்யாணம் எப்போது ஆகும் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுது, அண்ணனின் காதலும்,தனது வயதை ஒத்த பெண்ணான சாருவுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்ய சூழ்நிலை சாதகமாக இருப்பதும் மனதுக்குள் நெருஞ்சி முள்ளாய் குத்த, காரணமே இல்லாமல், அவளுடன் லிவ் இன் ஓகேயா..என்றவனது முகம் வேறு வந்து போனதில் தவித்துப் போனாள் திரு.
போதாத குறைக்கு ,முகமறியா நபருடன் கல்யாண கனவுகள் வேறு அவளது தூக்கத்திற்கு டாடா சொல்ல அந்த இரவு அவளுக்கும் சோதனையான இரவாகிப் போனது.
மறுநாள் விடிகாலையிலேயே சாகேத் வீட்டிலிருந்து சாருவின் குடும்பம் கிளம்பியது. ராஜம் விடிகாலையில் எழுந்து அவர்களுக்கு காபி வார்த்துக்கொடுத்தாள் . ஒரே நாள்தான் பழக்கம் என்றாலும் கூட அவர்கள் இரு குடும்பத்துக்குமே நீண்ட நாட்களாக பழக்கம் இருப்பதைப்போல் உணர்வு தோன்ற,மனதில்லா மனதுடன் அவர்கள் விடை பெற்றார்கள்.
துரை சாருவின் அப்பாவிடம்“ஒண்ணும் கவலை படாதீங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும்“என்று சொல்லி அனுப்ப, சாகேத்தும் கூட தானும் அப்போதே கிளம்பிவிட்டான். அவனுக்குத் தேவையான மிளகாய்ப்பொடி, பருப்புப் பொடி எண்டு சகலத்தையும் பேக் செய்து வைத்திருந்தாள் ராஜம்.
அவளுக்குள் ஏக்கம் தலைதூக்கியது. தனது மகனுக்கு எப்போது திருமணம்…பெண் பார்க்கலாம் என்றால் இவன் ஒத்துக்கொள்ளாமல் தவிர்க்கிறானே..என்று மனதில் குமைந்தார். தன் அம்மாவின் எண்ணம் தெரிந்தும் பதில் எதுவும் சொல்லவில்லை அவன்.
இரண்டு நாட்களுக்கு பிறகு நரேந்திரனும் பெங்களுரு வந்து சேர்ந்தான். அவன் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாகவெல்லாம் ஜோசியர் கணித்து சொல்லவில்லை.நல்ல நாள் பார்த்துதான் செய்வேன் என்று அவரும் அடம்பிடிக்க நரேந்திரனது பொறுமை காணாமல் போனதுதான் மிச்சம்.
அந்த வார வெள்ளிக்கிழமை அன்று சாம்பசிவம்,சாருவின் அப்பாவுக்கு அழைத்து” ஜாதகம் ஒன்பது பொருத்தங்களுடன் அமோகமாக பொருந்தி இருக்கு. நல்ல நாள் பார்த்து நாங்களே உங்க வீட்டுக்கு வரோம்“என்று வைத்துவிட்டார்.
சாருவுக்கு அழைத்து விஷயத்தை சொன்னவருக்கே சந்தோசம் தாங்க முடியவில்லை என்றால் சாருவின் நிலை கேட்கவா வேண்டும்?அருகில் உட்கார்ந்திருந்த நரேனுக்கு முத்தமழை பொழிந்தாள்.
நடப்பவை எதுவும் புரியவில்லை என்றாலும்கூட அவள் கொடுக்கும் முத்தங்களை ஆனந்தமாக பெற்றுக்கொண்டான் நரேந்திரன். பெண்ணவளும் அவனிடம் வார்த்தைகளில் எதையும் சொல்லவில்லை. அவர்கள் வீட்டுக்கு எப்போது வருவார்கள்?அவர்களது எதிர்ப்பார்ப்பு தன்னிடம் என்னவாக இருக்கக் கூடும் என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு நரேந்திரனிடம் சொல்ல தோன்றவில்லை.அத்துடன் அவனுக்கு தெரிந்திருக்கும் என்ற எண்ணமும் சேரவே,மீண்டும் தனது வேலையை தொடரலானாள்.
அதற்குள் சாருவின் அப்பா சென்னையில் துரைக்கும் தகவல் சொல்லிவிட ,துறை ராஜம் மூலமாக விஷயம் சாகேத் காதுகளுக்கு வந்தது. மாலையில் அவன் வீட்டுக்கு வரும்பொழுது ,கண்ணில் கே சி தாஸ் கண்களில் பட நரேனுக்கு பிடிக்கும் என்று மால்புவே வாங்கிக்கொண்டு விரைந்தான்.
அவன் மனதினில் நரேந்திரன் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று ஆதங்கம் லேசாய் இருக்க,வீட்டுக்கு வந்த நரேந்தரனுக்கு சாகேத் சொல்லித்தான் விஷயமே தெரியும். வாங்கி வைக்கப்பட்டிருந்த இனிப்பை வாயிலிட்டவன்,” அப்படியா..எனக்கே நீ சொன்ன பிறகுதான் விஷயம் தெரியும்.அந்த பிசாசுக்கு தெரியுமா..அதான் என்னை…என்று அவள் கொடுத்த முத்தங்கள் இனிப்பை இப்போதும் உணர்ந்தவனாக வார்த்தைகளை விழுங்கினான்.
சாகேத்துக்கு ஏதோ புரிய” சரி..சரி.. போய் பிரெஷ் ஆகி வா.. டின்னெர் சாப்பிட வெளியே போகலாம்” என்றுவிட்டு தனது அறைக்கு சென்று லப்டோப்புடன் ஐக்கியம் ஆகினான்.
சொன்னபடிக்கே இரண்டு வாரங்கள் சென்று பெங்களூரு வந்தவர்கள் ஜேபி நகரில் அறை எடுத்துக்கொண்டு தங்கியவர்கள் , அன்று மாலை வருவதாகவும், சாரு கண்டிப்பாய் வீட்டிலிருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் பேசும்பொழுது மணி காலை பத்து . சாரு அலுவலகம் செல்ல பாதி தூரம் வந்து விட்டாள் . அவளுக்கு அவள் அம்மாவிடமிருந்து நேரே வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு வரவே ,விபரம் புரியாமல் சாருவும் ‘இன்று அலுவலகம் வர இயலாது ‘என்று நரேனுக்கு மெசேஜ் தட்டிவிட்டபடியே வீடு திரும்பினாள்.
அவள் மனதில் மாலை நரேனும் அவர்களுடன் வருவான் என்று தோன்றவே,அதிக சிரத்தை எடுத்து தன்னை அலங்காரம் செய்து கொண்டாள் . அவனுக்கு பிடித்த மயில் கழுத்து நிறத்திலான லெஹங்காவில் தங்கப் பதுமையாக ஜொலித்தாள்.அவள் முகம் பொலிவு கூடியிருக்க,அவள் அம்மா மை எடுத்து அவளது காதின் பின்னால் இட்டுவிட்டார் .இன்னொரு வீட்டுக்கு செல்ல தயாராகிறாள் பெண் என்ற எண்ணம் அவரை வெகுவாக தாக்கினாலும்,இங்கே பெண்ணும் மாப்பிள்ளையும் பெங்களூருவில் தானே..என்று மனதைத் தேற்றிக்கொண்டவருக்கு எங்கே தெரியப் போகிறது,வருபவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப் போவதே இதைப் பற்றித் தான் என்று.
வந்தவர்களை வரவேற்ற சாருவின் பெற்றோர்கள் ,அவர்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கும் முன்பே அவர்களது உபச்சாரத்தை வெகு நாசூக்காக மறுத்தவர்களை சாருவின் பெற்றோரால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
வீட்டை வெகுவாக நோட்டம் விட்டவர்களுக்கு சாரு வீட்டினரின் பொருளாதார நிலைமை நன்றாக புரிந்தது .மனதுக்குள் “நம்ம நரேனின் காதல் தரம் இவ்வளவு கீழேயா இருக்கணும்“என்ற கேள்வி நரேனின் பெற்றவர்கள் மனதில் எழ அதை அவர்கள் முகம் தெளிவாகவேக் காட்டிக்கொடுத்தது. இன்னும் சொல்லப் போனால் அதை அவர்கள் மறைக்கவும் விரும்பவில்லை.
நேராக முகத்துக்கு நேராக தரக்குறைவாக பேசினால்தான் அவமதிப்பா என்ன? சாருவுக்கு கோவம் ஏறியது. நானும் யாருக்கும் குறைந்தவள் இல்லையே.. நன்றாக படித்திருக்கிறேன். வெளியே வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சென்றால் இவளுக்கு வரும் சம்பளத் தொகையே வேறாயிற்றே! இவர்கள் நிறுவனத்தில் குப்பை கொட்டுவது நரேந்திரனுக்காக மட்டும் தானே?என்ற ஆதங்கம் மனதில் எழ,அவள் முகத்தில் சட்டென ஒரு கம்பீரம் வந்து அமர்ந்து கொண்டது. இதை நரேந்திரனை பெற்றவர்கள் கவனிக்கத் தவறவில்லை. சாம்பசிவத்தின் முகத்தில் கண்டுகொண்டதின் அடையாளமாக புன்னகை லேசாக வந்தமர்ந்து கொண்டது.
சாம்பசிவமே பேச்சை ஆரம்பித்து வைத்தார்.
அவர்களது பேச்சில் ஒரு தீர்மானம் இருந்தது.
.பார்வை சாருவையும்,அவர்களது பெற்றவர்களையும் மாற்றி மாற்றி அளவிட்டுக்கொண்டே
பேசியதன் சாரம் இதுதான்.
“சாருவும் நரேந்திரனும் கல்யாணம் செஞ்சுக்கறதுல எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லே..ஆனா,கல்யாணத்துக்கு பிறகு அவங்க நிரந்தரமா சென்னை வந்துரணும் .அதோட சாரு சென்னை ஆபிஸ்ல வேலைக்கு ஜோஇன் பண்ணனும். வேற எங்கயும் வேலை தேட கூடாது.“
சாருவுக்கு மட்டுமல்ல,அவர்களது வீட்டில் அனைவருக்குமே இவர்கள் மகனுக்கு பெண் தேடுகிறார்களா இல்லை,வேலைக்கு ஆளும் தேடுகிறார்களா ..என்ற எண்ணம்.அத்துடன் திருமணமான பின்பும் மகள் இங்கே பெங்களூருவிலேயே இருப்பாள் என்ற சாருவின் அம்மாவின் எண்ணமும் பொய்த்துப் போனது. சாருவுக்கு இவர்கள் சொல்லும் விஷயங்களில் உடன்பாடு இல்லை ஏந்திற்றாலும்கூட அவளால் நரேந்திரனை விட்டு மற்றொருவரை மணக்க நிச்சயம் முடியாது.இப்படியே இருக்கவும் பெற்றவர்கள் விட மாட்டார்கள்’ என்றெல்லாம் யோசனை ஓடியது.
சாருவின் அப்பாவும் இப்போது விடுவதாக இல்லை.“உங்க வீட்டுல ஏற்கனவே ஒரு பொண்ணு கல்யாணமாக காத்திருக்கும் பொழுது, ஒண்ணு இவங்க கல்யாணத்தை தள்ளி வைக்கணும்.இல்லேன்னா பொண்ணுக்கு கல்யாணம் தகையும் வரைக்கும் இவங்க இங்கே பெங்களூரில் இருக்க நீங்க சம்மதிக்கணும்” என்றார்.
சாம்பசிவம் கொஞ்சம் யோசித்தவர்,” ம்ஹும்..அது சரி வராது. ஒரு அண்ணனா நரேந்திரனும் பொறுப்பை எடுக்கணும்.தங்கைக்கு கல்யாணம் செய்ய பாக்க வேண்டியது அவனோட கடமை.அவனை கல்யாணம் செஞ்சுக்குறே உங்க பொண்ணும் சேர்ந்துதான் செய்யணும்“.என்றார்.
சாருவின் மனதில் பயம்,இவர்கள் ‘இந்தக் கல்யாணத்தை நடக்க விடுவார்களா’ என்று.
அவளுக்கு நன்றாகவே தெரியும் நரேந்திரன் சென்னை செல்வதை எவ்வளவு வெறுக்கிறான் என்று. இவர்கள் வீட்டை பற்றியும் கூட சமயத்தில் புலம்புவான்.அப்படி இருக்கும் பொழுது அவனிடம் எப்படி சென்னையில் தான் இனி நம் வாழ்க்கை என்று சொல்ல முடியும்?
மனம் விரும்புபவனின் வாய் மூலமாக நிறைய விஷயங்களை கேட்டிருந்தவளுக்கு கூட சென்னை செல்வதற்கு சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால் இப்போது இவர்கள் பேசுவது என்னவோ நரேன் சென்னை வருவதாக இருந்தால்தான் இந்த திருமணம் என்பது போல இருக்கிறது. நரேந்திரநை நிரந்தரமாக சென்னைக்கு வரவழைப்பதற்கும் இந்த திருமணத்திற்கும் என்ன சம்மந்தம்? தலை சுழன்றது சாருவிற்கு .
சாரு தனது அப்பாவை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தவள் நேரடியாகவே கேட்டுவிட்டாள் ,”நீங்க சொல்ல வரது என்னன்னு சுத்தமா எங்களுக்குப் புரியல. இந்த கல்யாணத்துக்கும் நீங்க சொல்ற விஷயங்களுக்கும் என்ன சம்மந்தம்?
சாம்பசிவம் தெளிவாக இந்த முறை சொல்லிவிட்டார்.
” நீங்க செஞ்சுக்க விரும்புறது காதல் கல்யாணம். பணம், மொழின்னு எல்லாமே வேறே. ஆனாலும் நாங்க ஒத்துக்கறோம். நாங்க எங்க சொந்தக் காரங்களுக்கு பதில் சொல்லணும்.எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கும் இடத்துல கேள்வி கேப்பாங்க. இவ்வளவையும் சந்திக்க நாங்க எங்க மகனுக்காக தயாரா இருக்கும் பொழுது நீங்க ரெண்டு பேரும் எங்க கூட நின்னு தாங்குறது தானே சரி? எங்க மகன் தன் குடும்பத்தோட எங்களோட இருக்கணும்னு நாங்க நினைக்கிறது தப்புன்னு சொல்லுவியாம்மா .. இன்னொன்னு.. நா இதை பத்தி நரேந்திரன்கிட்ட நேரடியா பேச விரும்பல. அதனால என்னோட மருமகளா என் சார்பா என்னோட மகன்கிட்டே நீதான் பேச போறே“.
அவரது வார்த்தைஜாலங்களில் அயர்ந்து போனாலும்,சாருவுக்கு கடைசியாக அவர் சொன்ன என்னோட மகன் குடும்பமா எங்க கூட இருக்கணும் எனும் வார்த்தைகளில் உள்ள நியாயம் புரியவே மௌனம் காத்தாள் . பெற்றவர்களின் ஆதங்கம் ,அதில் உள்ள நியாயம் அவளை வாயடைக்க செய்தது. அத்துடன் தன்னை அவர் தன் மருமகள் என்று சொன்னதில் வேறு மனம் ஆனந்தக் கூத்தாடியது.
நரேந்திரனிடம் பேசும் பொறுப்பை மனிதர் தந்திரமாக இவள் தலையில் சுமத்தி விட்டாரே.. இவள் பேச்சை அவன் காது கொடுத்து கேட்பானா என்ன?
error: Content is protected !!