Skip to content
Post Views: 3,365
ஜான்வி வேலையில் சேர்ந்து இன்றுடன் மூன்று முழு வருஷங்கள் முடிந்துவிட்டது. அவளுக்கு வேலையில் பரிபூர்ண நிறைவு என்றெல்லாம் சொல்லிவிட இயலாது. ஆனாலும் வேறு வேலை தேட அவளுக்கு விருப்பம் இல்லை. தன் காதலை அவனிடம் சொல்லியதும் அவன் மறுத்ததுவும் நெஞ்சின் அடி ஆழத்தில் தேங்கி நிற்கிறதுதான். அதற்காகவெல்லாம் துவண்டு நின்று விட முடியாதே! அப்படி நினைத்துதான் அவள் பெங்களுர் வந்து இங்கே வேலையில் சேர்ந்தாள்.
நல்ல சம்பளம். கலகலப்பான சூழ்நிலை..இள வட்டங்களின் நட்பு. தனியாக அறை எடுத்துத் தங்கி கொண்டாள் . சகல வசதிகளுடன் சேர்ந்த சர்வீஸ்ட் அபார்ட்மெண்ட். முதல் தளத்தில் வீடு . இரவு நேரம் கழித்து வந்தாலும் கேட்பவர்கள் இல்லை. பணியிடம்,வார இறுதி நாட்களில் பப் என்று சுறுசுறுப்புக்கும் சந்தோஷத்திற்கும் சற்றும் பஞ்சமில்லை. இவள் வீட்டில் இவளது சம்பளம் எதிர்பார்க்கும் நிலை இல்லை.
Advertisement
நடை,உடை என்று நிறைய மாற்றங்கள். மாற்றங்கள் அத்துடன் நிற்கவில்லை. அவளது பாஸ் வினீதனுடன் தனது அறையை பகிர்ந்தும் கொண்டாள் . லிவ் -இன் ? என்று கேட்டால் ‘ஆம் ‘என்பேன் நான். இரண்டு வருஷங்களாக இருவருக்குமே நல்ல நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. விநீதன் கேரளத்தை சேர்ந்தவன். ப்ராஜெக்ட் என்று இத்தனை வருஷங்களாக ஆஸ்திரேலியாவில் இருந்தவன் இந்தியா வந்து நான்கு வருஷங்கள் ஆகிறது.
முதலில் பிடிக்காமல் இங்கே வந்தவனுக்கு ஜான்வியின் நட்பு ஆரம்பித்ததிலிருந்து வாழ்க்கை வர்ணங்கள் மாறியுள்ளது. இருவருக்கும் திருமணம் செய்துகொள்வதில் இப்போதைக்கு விருப்பம் இல்லை. ‘இன்னும் கொஞ்சகாலம் தாக்குப் பிடித்தால் பிறகு பார்க்கலாம் ‘எனும் எண்ணம். ஜான்வி தனது பெற்றவர்களுக்குத் தெரியாமல் இவ்வளவு காலமாய் ஓட்டி விட்டாள் .
Advertisement
Advertisement
அவளுக்கு நன்றாக தெரியும்.. பெற்றோருக்குத் தெரியும் படிக்கான விஷயத்தை அவள் செய்துகொண்டிருக்கவில்லை. அதனாலேயே , இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சென்னைக்கு வந்து ‘உள்ளேன் அய்யா’ …என்று பதிவு செய்துவிட்டு வருவதும் பண்டிகைகளுக்கு கிளம்பிப் போவதும், அவளுக்கு தவறாக தெரியவில்லைதான். காதலித்தவனை தவிர வேறு யாரையும் அவளால் திருமணம் செய்து கொள்ள முடியாது. அதே சமயம் உணர்வுகளையோ, வேறு எதையுமோ தியாகம் செய்ய முடியாது. (சிரிக்காதீங்கப்பா…அவ மெண்டல் இல்ல)
ஜான்வி வீட்டில் மும்முரமாக அவளுக்கு வரன் பார்க்க தொடங்கி விட்டார்கள். ஜாதகம்,கிரக சஞ்சாரம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்ததில் அவளுக்கு குரு பலன் நன்றாக இருக்கிறது.திருமணம் சீக்கிரம் நடந்து விடும் என்றார் ஜோசியர்.
Advertisement
ராஜமும் கூட தனது மகனது ஜாதகத்தை வெளியே எடுத்து விட்டாள் .இன்னமும் மகனது வார்த்தைக்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று அவளும் துரையும் முடிவு செய்துவிட்டார்கள். ஜோசியரோ..“இப்போ கல்யாணமெல்லாம் செய்யலாம். ஆனா .. சனி தான்…கொஞ்சம் பிரச்சனை பண்ணுவான்.“என்று முழம் அளவுக்கான பரிகாரங்களை குறித்துக் கொடுத்தார். மகனுக்கு இதில் நம்பிக்கை கிடையாது என்று இவர்களே சென்று எல்லாவற்றையும் முடித்து விட்டு சாகேத்தின் ஜாதகத்தை ஆன்லைன் தளங்களிலும், தெரிந்தவர்களிடமுமாக கொடுக்க நிறைய வரன்கள் வந்தது.
“அதில் பத்துப் பொருத்தமும் அருமையா இருக்கு ” என்று வந்து சேர்ந்தது தான் நமது ஜான்வியின் ஜாதகம். மயிலாப்பூரில் சொந்த வீடு. பூர்வீக சொத்துக்கள். வீட்டின் ஒரே வாரிசு. நல்ல படிப்பு,சம்பளம்…ஹா…பெண் நம் மகனுடன் படித்தவள்” என்று இந்த வரனை முடிப்பதில் தீவிரம் கட்டினார்கள் இரு பக்க பெரியவர்களும்.
வாட்சாப்பில் சாகேத் புகைப்படம் ஜான்விக்கும், ஜான்வியின் புகைப்படம் சாகேத்துக்கும் அனுப்பி வைக்கப் பட இருவருக்குமே திகைப்பு. சாகேத்துக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. ஜான்வி தன் அப்பாவுக்கு அழைத்து சம்மதம் சொல்லிவிட்டாள் .
அவள் காதலித்தவனை மீண்டும் கைகோர்க்க சந்தர்ப்பம் அமையும் பொழுது விடுவதற்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லை. சாகேத் தன் பெற்றோருக்கு அழைத்து மறுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது. ராஜம் தன் பிடியில் உறுதியாக நின்றாள்.
சாகேத் பேசுவதைக் கேட்ட நரேன்தான்,” மாப்ள ,தப்பா எடுக்காதே..நீ காதலிக்கிற பொண்ணு என்னோட தங்கச்சி திருதான்னு தெரியும்.எங்க வீட்டை பத்தியும் உனக்கு தெரியும். திருவும் இப்போ நிறைய மாறிட்டா. நம்ம ஜான்வி தானே..ஏற்கனவே நீ யார லவ் பன்றேன்னு எங்ககிட்ட கேட்டுட்டு வந்து நின்னா.இப்போ,இதுதான் கடவுள் போட்ட முடின்னு கல்யாணத்துக்கு ஓத்துக்கோடா மாப்ள” என்றவனை கையாலாகாதனத்துடன் பார்த்தான் சாகேத்.
சாக்கேத்தின் மனம் முழுவதும் குழப்பம் மட்டுமே! இவ்வளவு பேசுபவனுக்கு தெரியுமா? நான் இவன் தங்கையை எவ்வளவு காதலிக்கிறேன் என்று. அவள் எவ்வளவு மாறி இருந்தாலும் அவள் என் உயிர் அல்லவா.. குற்றங்கள் இருப்பினும், குறைகள் நிறைய இருப்பினும் அப்படியே ஏற்றுக்கொள்வது தானே காதல்..
இல்லை.. என்னிடம் எல்லாம் நூறு சதவிகிதம் நிறை மட்டும் தானா…
வாய் விட்டு சொல்லாத விஷயங்களை அவனது கண்கள் பேச உறைந்து போனான் நரேன். அவனுக்குத் தெரியும் சாக்கேத் எப்படி என்று. ஆனால் “என்னையே சரியாக நடத்தாத என் குடும்பம் இவனை எப்படி ஏற்கும்” எனும் கேள்வி மனதில் எழவே அவ்விடம் விட்டு நீங்கினான்.
அன்றைய இரவு நரேந்திரனால் சுத்தமாக கண் மூட முடியவில்லை. மறுநாள் காலையிலேயே சாருவுக்கு அழைத்து ” இன்னிக்கு நீ ஆபீஸ் பார்த்துக்கோ. நா சென்னை போறேன். ” என்றுவிட்டு அவள் வேறெதும் கேட்கும் முன்பே அழைப்பை துண்டித்து விட்டு சாக்கேத்திடம் சென்னை போவதாக மெசஜ் மட்டும் மொபைல் போனில் அனுப்பியவன் தனது காரில் சென்னை நோக்கி கிளம்பியும் விட்டான்.
வீட்டில் எப்படி பேச்சை தொடங்குவது என்று வழி முழுவதும் யோசனை. ஆனால், சாக்கேத் போல மாப்பிள்ளை கிடைப்பது என்பது தவம் செய்திருந்தால் மட்டும் அமையும்.
எவ்வளவு வருஷங்களாக எனக்கு சாக்கேத்தை தெரியும்… வீட்டில் ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்றெல்லாம் தவித்தவாறே வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டில் பெரியதாக வரவேற்பு இல்லை. அம்மா தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்க, அப்பா அலுவலகம் சென்று விட்டிருந்தார். திரு வீட்டின் மாடியில் நாயை கொஞ்சி கொண்டிருந்தாள். சப்தம் கீழே கேட்க ” படித்த பெண்ணை மேலே முன்னேற வழி செய்யாமல் இதென்ன வீட்டில் சும்மா வைத்துக்கொண்டு ” என்று நரேந்திரனுக்கு கோவம் வந்தது. அதனால் மட்டும் ஏதாவது மாறுமா என்ன?
அவனை பார்த்த அவன் அம்மா கேட்ட முதல் கேள்வி ” ஆபீஸ் வேலை தலைக்கு மேல இருக்கு. நீ என்ன இங்கே.. அவளாவது ஆபீஸ் போயாச்சா.. இல்லை அவளும் இன்னிக்கு லீவா.. என்றவாறே சாருவின் அலைபேசிக்கு அழைத்து அலுவலகம் தொடர்பான சில விவரங்களை அனுப்ப சொல்லி கேட்டதை பார்த்த நரேந்திரன் பல்லை கடித்து கோவத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
“இல்லேம்மா ,நா மட்டும் இன்னிக்கு லீவு. நாளைக்கு காலைல கிளம்பிடுவேன். அப்பா எப்போ வீடு வருவாங்க?”என்று கேட்ட மகனை வினோதமாக பார்த்த பெற்றவள்,
“அது இருக்கட்டும். அந்த பொண்ணு..அவ பெரு என்ன? ஹ்ஹ்ம் ..சாரு . அவ உன்கிட்ட ஏதாவது பேசினாளா? நாங்க அவளை பார்த்துட்டு வந்தே ரெண்டு மாசம் ஆகிடுச்சு. உண்மையாவே நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறீங்களா,இல்ல ஜஸ்ட் டைம் பாஸா?”
அம்மா சொன்னதை கேட்டவனுக்கு விக்கித்துப் போனது. சாருவை இவர்கள் பார்த்தார்களா ..அவளும் வாயை திறக்கவில்லையே! என்று மனதிற்குள் நொந்தவனுக்கு,அவள் தன்னிடம் எதை பற்றி பேசியாகவேணும் ? இவ்வளவு அவள் யோசிக்கும் அளவிற்கு என்னவாக இருக்கும்? என்று யோசனை ஓடினாலும்,” “இல்லேம்மா..நாங்க ரெண்டுபேரும் வேலைல பிஸி . இயர் எண்டிங் இல்லையா.“.என்று அம்மாவுக்கு பிடித்த பதிலை சொன்னான்.
ஆனால் அதற்கும் அவன் அம்மா விடுவதாக இல்லை. “அது சரி,பின்னே இவ்வளவு ஹெக்ட்டிக் சமயத்துல நீ எதுக்கு இங்கே வந்தே?” என்றாள் .
“ம்ஹும், கொஞ்சம் பேசணும்னு இங்கே வந்தேன். பிள்ளையா யோசிக்காம,உங்க ஆஃபீஸ் எம்ப்ளயியா நினைச்சு பேசினா நானும் அதுக்கு ஏத்தா மாதிரி நடந்துப்பேன்“என்றுவிட்டு வேகமாக மாடியில் இருக்கும் தனது அறைக்கு சென்றுவிட்டான்.மனம் முழுதும் வெறுமை. என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆயாசம் .
தான் கேட்டதில் என்ன தவறு என்று புரியாமல் அவன் அம்மா லேப்டாப் ஸ்க்ரீனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் வெகு நேரம். நிறைய மனதில் கேள்விகள்.மகன் தங்களை விட்டு வெகுதூரம் போய்விட்டதை ஒரு அம்மாவாக அவள் உணர்ந்து கொண்ட தருணம் இது.பொதுவாகவே அம்மாக்களுக்கு மகன் என்றால் கொஞ்சம் பாசம் அதிகம்தான்.ஆனால் அவன் சி,ஏ வில் முதல் சமயமே பாஸாக வேண்டும் என்று சிறுபிள்ளைத் தனமாக முகம் திருப்பியது தவறு .முதல் முறை வெற்றி பெறுபவர்கள் வெகு சிலர்தான் என்பது இவர்கள் அறியாததா? தானும் தன் கணவரும் ஏன் அப்படி நடந்து கொண்டோம்‘ என்றெல்லாம் வெகு தாமதமாக மனதுக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டாள்..
மகன் மீது அலட்சியம் ஏன் வந்தது என்றும் அவளுக்குப் புரியவில்லை.அவன் இருக்கும் இடம் தேடி சென்று பார்த்தது இல்லையே. .. சாகேத் மீது அலட்சியம் என்றால்,இவனை இவ்வளவு தூரம் நிற்க துணை நின்றது அவன் தானே? அவன் மீது என்ன பிடித்தமின்மை? அவளால் தன் மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு சூடான டீ எடுத்துக்கொண்டு வந்து தந்தான் நரேன்.இன்னும் திரு நாயை விட்டு வந்தபாடில்லை. “டீ குடிங்க.நா இப்போ லாகின் பண்றேன். அப்பா வந்தா சொல்லுங்க.டின்னருக்கு அப்பறம் உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசணும்” என்று விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றான்.
டீயை ரசித்துக் குடித்தவளின் மனம் மகனின் அக்கறை கண்டு நெகிழ்ந்தது. ஆனால் ,அவன் பேசுவதை கேட்ட பிறகும் இப்படியான மனோநிலை நீடிக்குமா…
இரவு உணவு முடியும்வரை நரேந்திரன் எதுவும் வாயைத் திறந்து பேசவில்லை. சாம்பசிவமும் அவர் மனைவி கண்மணியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதற்குமே அவன் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. அவன் மனம் முழுவதுமே எப்படி ஆரம்பிப்பது என்று யோசனை.
ஒருவழியாக ‘நம்ம திருமகளுக்கு ரொம்ப நிறைய மாப்பிள்ளை பார்த்தும் எதுவும் சரியா வரலைல்ல .நம்ம சாகேத்தை பார்த்தா என்ன?நல்ல சம்பளம் வாங்குறான்.பெங்களூருல மூணு பெட் ரூம் பிளாட் இருக்கு.அவங்க அப்பா ஸ்கூல் இப்போ டென்த் வரைக்கும் வந்தாச்சு. உங்க அளவுக்கு இல்லேன்னாலும் நல்ல இடம்தான். அவங்க வீட்டுல பேசிப் பாக்கலாமே.அவனுக்கும் திரு மேல இஷ்டம் இருக்கும்னு நினைக்கிறேன் ” என்று மனதில் இருப்பவற்றிற்கு வார்த்தை வடிவம் கொடுத்து விட்டான்.
அவன் சொன்ன உங்க அளவுக்கு என்ற வார்த்தை சாம்பசிவத்தை வெகுவாக பாதித்து விட்டது. வெளியே அவர் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. கண்மணிக்கு சாகேத்தை மாப்பிள்ளையாக்குவதை பற்றி நரேன் பேசியது கொஞ்சமும் பிடிக்கவில்லை. இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சாம்பசிவம்“நம்ம திருவுக்கு அமெரிக்க வரன் ஒண்ணு நெருங்கி வருது நரேன். பொருத்தமும் நல்லா இருக்கு .கிட்டத்தட்ட முடியும் நேரம். திரு அந்த பையனோட பேசிட்டா.ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு ” என்றுவிட்டார்.
திருவின் முகத்தில் ஒரு அலட்சிய பாவம் வந்துவிட்டிருந்ததை நரேன் அப்போதுதான் கவனித்தான். “அப்போ கல்யாணம் எப்ப வைக்கிறதா இருக்கீங்கப்பா“என்றவனுக்கு குரல் உள்ளே அடங்கி விட்டிருந்தது.
ஹான்..வர்ற தை மாசம்னு யோசிக்கிறோம்.அப்போதான் டிசம்பர் லீவுல பையனும் இந்தியா வர நேரம். நிம்மதியா ஏற்பாடு பண்ணலாம். அதுக்கு முன்னாடி உனக்கும் சாருவுக்கும் ஐப்பசில கல்யாணம் வைக்கலாம்னு நினைக்கிறேன். அப்போதானே,நீயும் அவளும் இங்கே ஷிப்ட் ஆகி வர முடியும் என்று அனாயசமாக நரேன் தலையில் அடுத்த குண்டையும் இறக்கினார் .
error: Content is protected !!