Skip to content
Post Views: 3,208
கற்பனை அத்யாயம் 9
சாகேத்துக்கு ஜான்வியுடனான திருமண உறவு சரியாக வருமா எனும் சந்தேகம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. இன்னும் திருமணத்திற்க்கு முப்பது நாட்களே மீதமுள்ள நிலையில்,இருவீட்டினரும் திருமண அழைப்பிதழை தெரிந்தவர்,அறிந்தவர்களுக்கெல்லாம் கொடுக்க ஆரம்பித்த பிறகு ,என்னவென்று சொல்லி திருமணத்தை நிறுத்த முடியும். இதோ..போன வார இறுதியில் நாள் நன்றாக இருக்கிறது என்று சாகேத்தின் அம்மா ராஜம் சொல்லிவிடவே,முகூர்த்த கூரையும் ,திருமாங்கல்யமும் எடுக்க சென்னை சென்றிருந்தான்.
Advertisement
ஜான்வி அதிகமாக வேலை இருக்கிறது என்று சொல்லி சென்னை வருவதை தவிர்த்துவிட்டாள் .வீடியோ காலில் தனக்கானவற்றை தெரிவு செய்தவள்,ராஜத்திடமே“அத்தை தைக்க வேண்டியதை சாகேத் கிட்டே கொடுத்து விடுங்க.நா இங்கேயே தச்சுக்கறேன்“என்றும் சொல்லிவிட்டாள் .
சென்னையிலிருந்து பெங்களுர் வந்து இரண்டு முறை அழைத்தும் அவள் வராமல் போனதால்,தானே அவள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சென்று அவளிடம் கொடுத்துவிட்டு வந்தான்.அவளிடம் அலட்சியப் புன்னகை.எதற்கு என்று தெரிந்தததாலேயே சாகேத் எதுவும் பேசாமல்,அவள் கொடுத்த காபியை குடித்துவிட்டு கிளம்பியும் விட்டான்.
Advertisement
Advertisement
வீட்டுக்குள் நுழைய முடியாத அளவுக்கு அவளது வீடு அலங்கோலமாய் இருந்தது. அங்கங்கே குடித்துவிட்டு வைக்கப் பட்டிருந்த காலி கப்புகள்,தோய்த்து வந்தது-தோய்க்க வேண்டியது என ஒன்றாக சிதறிக்கிடக்கும் துணிகள், ஓரமாய் இருந்த பியர் பாட்டில், என்று சாகேத் உள்ளே நுழையும் பொழுதே அவனுக்கு அருவருப்பை கொடுத்தது.
சாகேத் எப்போதும் தனது வீட்டை சுத்தமாக வைத்திருப்பான். அவன் அடுக்களையில் வேலை செய்துவிட்டு வந்தால் கூட,அந்த இடம் பளிச்சென இருக்கும். வாரத்தில் ஒருமுறை மட்டும் மிஷின் போட்டு துணிகளை இஸ்திரி போட்டும் அடுக்கிவிடும் பழக்கமும் அவனிடம் உண்டு. வேலைக்கு யாரையும் அமர்த்திக்கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை.
Advertisement
சமையலும் நன்றாகவே செய்வான். பெரும்பாலும் சைவ உணவுதான் அவனது பழக்கம்.அலுவலகத்தில் வெளியே ஏதேனும் சந்தர்ப்பம் வந்தால் மட்டும் அசைவம் சாப்பிடுவான். மதுக்கிண்ணத்தை கையில் மணிக்கணக்கில் வைத்திருப்பான்.ஆனால் குடிப்பது வெகு அபூர்வம்.
எந்த விதத்திலும் தன் குணத்துடன் பொருந்தாத இந்தப் பெண்ணை கல்யாணம் செய்துக்கொண்டால் சரியாக வருமா..என்ற சந்தேகம் அவனுக்குள் வந்ததில் தவறில்லை.இப்போதும் சாகேத்துக்கு ஜான்வியை குற்றம் சொல்ல விருப்பம் இல்லை. அவளது வாழ்க்கைமுறை நிச்சயம் வேறு.அதை பற்றி விமர்சிக்க அவசியம் இல்லை. ஆனால் ,திருமண உறவு..அது நிச்சயம் வேறல்லவா…
ராஜத்திடம் பேசும்பொழுது நேரடியாகவே சொல்லவும் செய்தான்.“அம்மா,எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.கொஞ்சம் தள்ளிப் போடலாம்னு தோணுது. எனக்கும் ஜானுவுக்கும் நிறைய டிஃபரென்ஸ் இருக்கு. சரியா வருமான்னு இருக்கு“
மகனது கூற்றில் அதிர்ந்தாலும்,வெளிப்படையாக அவற்றைக் காண்பித்துக்கொள்ளாமல்“அதெல்லாம் கல்யாணம் ஆனா நிச்சயம் சரியா வரும் ஸாகி . உனக்கு முன்னமே அவளை தெரியும்ங்கறதுனாலே ரொம்ப யோசிக்கிற.முன்னபின்னே தெரியாத பொண்ணா இருந்திருந்தா என்ன பண்ணுவே..கல்யாணத்துக்கு பிறகு எப்படி ஹாண்டில் பண்ணுவே..யோசி கண்ணா..என்று வைத்துவிட்டார்.
ராஜம் பேசியதில் சாகேத் புரிந்துகொண்டு விட்டான். கல்யாணம் நிறுத்த முடியாத அளவிற்கு அருகில் வந்து விட்டது .இனி,யோசித்தோ..பேசியப்பார்த்தோ பயனில்லை என்று. ராஜம் இந்த திருமணம் நடக்க எவ்வளவு விருப்பம் கொண்டுள்ளார் என்பது சாகேத் அறிந்தது தானே..சரி,இனி விதி விட்ட வழி என்று மௌனம் ஆனான்.
சென்னையில் திருமகளுக்கும் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தது.பணம் அங்கே பிரச்சனை இல்லை. ஐம்பது லகரங்கள் இதுவரை செலவு. நிவாஸ் திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னர் தான் வருகிறான். ஆனால் ,அதற்காக ஏற்பாடுகளை செய்து முடிக்காமல் இருக்க முடியுமா..திருமகளுக்கு நிவாஸ் வீட்டில் எடுத்திருந்த கூரைப் புடவை மட்டுமே இரண்டு லகரங்கள் .திருமகளின் கால்கள் பூமியில்
நிற்பேனா என்று அடம் பிடித்தது. இன்னும் மற்ற புடவைகள்,அவர்கள் வீட்டிலிருந்து கொடுத்த நகைகள் என்று எல்லாமே பணத்தால் மொழுகப் பட்ட ஆடம்பரங்கள். திருமகள் தனது திருமணம் இவ்வளவு ஆர்பாட்டமாய் இருக்கப் போகிறது என்று சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
திருவின் கண்களில் ஒரு அலட்சியம் தெரிந்தது.அதிலும் தன் அண்ணி சாருவை பார்க்கும்பொழுது இன்னுமே அதை காண்பிக்க ஆரம்பித்திருந்தாள்.சாரு அந்த நேரத்தில் சிரித்துக்கொண்டே கடந்தாலும் அவள் மனதில் சுருக் என்ற வலி நிச்சயம் இருக்கிறது. கண்மணி சாருவின் முன் தன் மகளை கடியாவிட்டாலும்,தனிமையில் கண்டித்துப் பார்த்து அலுத்து விட்டாள் . சாருவிடம் “நீ கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்றுவிட்டாள் .
ஆனால் ,கண்மணி-சாரு உறவில் எந்த விரிசலும் இன்றி அமைதியாகத்தான் போய் கொண்டிருக்கிறது. இந்தியா வந்த நிவாஸ் திருவாய் அழைத்துப் பேசவோ, நேரில் சந்திக்கவோ எந்த மெனக்கடலும் செய்யவில்லை.அவன் இந்தியா வந்துவிட்டதே திருவிற்கு இரண்டுநாட்களுக்கு பிறகுதான் தெரியும்.
சாம்பசிவத்திடம் ஏற்கனவே நிவாஸின் அப்பா அவன் வருகையை பற்றித் தெரிவித்து விட்டார்தாம் .நிவாஸ் தன் வருகையை பற்றி சாருவிடம் சொல்லியிருப்பான் என்று சாம்பசிவம் எண்ணிவிட்டார்.எதேச்சையாக மாப்பிள்ளைக்கு பெண் வீட்டு சார்பில் உடைகள்,மோதிரம் போன்றவை வாங்கவேண்டுமென சாம்பசிவமும்,நரேந்திரனும் ஹாலில் உட்க்கார்ந்து பேசும் பொழுதுதான்,நிவாஸ் வந்துவிட்டதை திருமகள் தெரிந்துகொண்டாள் .
முதல்முறையாக,நிவாஸிடம் தனக்கான இடம் எது என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவள் யோசிக்க ஆரம்பிக்கும்பொழுது நிஜமாகவே காலம் கடந்திருந்தது. திருமணம் இன்னும் மூன்றே நாட்களில் எனும் பொழுது என்ன செய்ய முடியும்?அதுவும் தனது விருப்பத்தை சபையில் முழுமையாக பதிவு செய்த பிறகு?
திருமணம் என்பது விளையாட்டு இல்லையே!திருமகளின் வயிற்றில் சந்தோஷத்திற்கு பதிலாக பய பந்து உருண்டது.
கடையில் நிவாஸ் சாம்பசிவத்துடன் சகஜமாக பேசினாலும், அவன் குரலிலும் நடத்தையிலும் கர்வம் தெரிந்தது. நரேந்திரனிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை. திருமணம் பற்றிய விஷயங்களில் தனது முழு கவனத்தையும் வைத்திருந்த பெண்ணைப் பெற்றவர் ஏனோ,மாப்பிள்ளையிடம் கவனம் வைக்க மறந்துவிட்டார்தாம் போலும்! நரேந்திரன் மனதில் நிவாஸுடன் பேசும்பொழுது தன்னைப் பற்றி திரு ஏதாவது சொல்லியிருப்பாள் .அதனால்தான் இவன் இப்படி நடந்துகொள்கிறான் என்று ஓடியது.
நகைக்கடையில்,சாகேத்துக்கும் பிளாட்டினத்தில் பிரேஸ்லெட் வாங்கினான் நரேந்திரன். சாகேத்தின் திருமணம் இன்னும் ஒரே வாரத்தில் .திருவுக்கு திருமணம் முடிந்தபிறகு கடைக்கு வரவே ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்காது.
தங்கை மீது லேசான ஆதங்கம்தான் நரேனுக்கு. அவனது பெற்றோரே அவனை இப்போது சமீப காலமாகத் தானே ஒழுங்காக நடத்துகிறார்கள்.திருவை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன் என்று தன்னை அமைதி படுத்திக்கொண்டான்.
உண்மையில் திரு,நரேந்திரனைப் பற்றியோ,அவன் மனைவி சாருவைப் பற்றியோ எதுவும் சொன்னதில்லை. அண்ணனுக்கு திருமணம் அவன் காதலிக்கும் பெண்ணுடன் என்று மட்டும்தான் சொல்லியிருந்தாள் . நிவாஸுக்கு பொதுவாகவே, அனைவரும் தனக்கு கீழ் தான் என்ற எண்ணம் உண்டு. அதெல்லாம் திருவுக்கே புரிய இன்னும் காலம் எடுக்கும். நரேந்திரனுக்கு எப்படி புரியும்?
ரிசப்ஷனுக்கு தான் எடுத்திருக்கும் ஷெர்வானிக்கு தோதான நிறத்தில் தான் திருவும் உடை அணியவேண்டும் என்று,அவள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ஆடையை கழித்துக் கட்டிவேறு நிவாஸ் இன்னொரு கேளிக்கையை அரங்கேற்றினான். அவன் அப்பா கூட சொல்லிப் பார்த்தார்.“மருமகள் எடுத்து வச்சிருக்கிற டிரஸ் கலர்ல நீயும் எடுத்துக்கோடா .இப்போ மாத்த சொன்னா அந்த பொண்ணு என்ன பண்ணும் ?”என்று. ஆனால் , “அவளுக்காக நா மாற மாட்டேன்.அவளை மாத்திக்க சொல்லுங்க“என்றுவிட்டு பிடிவாதமாக நிற்கும் மகனை யோசனையாக பார்த்தார் அவன் அப்பா.அவர் மனதில்,இவனுக்கு கல்யாணம் செய்ய நினைச்சதே தப்போ என்று தோன்றியது.
ஆனால் ,அவருக்கு வேறு வழி இல்லை. அவர்களது குடும்பமும்,அதன் ஆடம்பரங்களும் நிவாஸை நம்பித்தான் இருக்கிறது.பொதுவாக நிவாஸ் தன் அம்மா சொல்பவற்றை கொஞ்சம் கேட்பான். மற்ற பெண்கள் என்றால் அலர்ஜி. அதனாலேயே அவன் திருமணத்தை இவ்வளவு வருஷங்களாக ஒத்தி போட்டான்.
திருமகள் கூட அவனது அம்மா தெரிவு செய்த பெண்தான். ஆயிரம் காரணங்களை சொல்லி,நிவாஸின் அம்மா அவனை இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாள் . நிவாஸ் ஒவ்வாமை காரணமாகத்தான் திருவிடமும் அதிகம் பேசவில்லையோ ?
எது காரணமோ..நிவாஸ் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிடம் கூட சரியாக நடந்துக்க கொள்ளப் போவதில்லை. அங்கே அமெரிக்காவில் எம்.எஸ் முடித்துவிட்டு ஆரம்பத்தில் சாதாரண வேலையில்தான் இருந்தான் நிவாஸ். பிறகு அங்கிருக்கும் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்து டெக்சாஸில் குடியேறினான். அதே நிறுவனத்தில் இப்போது மிகப்பெரிய பதவியில் இருக்கிறான் நிவாஸ். இந்திய கணக்கிற்கு அவனது வருமானம் வெளியில் சொல்லக்கூடியது அல்ல. அவன் கர்வத்திற்கு குறைவு என்ன?
நோர்த் கரோலினாவில் இப்போது மிகப்பெரிய பங்களா வாங்கிக்கொண்டு விட்டான். வயதும் அதிகமில்லை. முப்பது தான் ஆகிறது. க்ரீன் கார்டும் போன வருஷ இறுதியில் கம்பனி மூலமாகவே கிடைத்துவிட்டது. நிவாஸின் அம்மாவுக்கே கர்வம் கூடிப்போன பிறகு நிவாஸை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவனது சமூக நிலை தெரிந்ததுனாலே தானே சாம்பசிவம் இந்தக் கல்யாணத்தை இவ்வளவு ஆடம்பரமாக நடத்துகிறார்.
ஹல்தி ,மெஹந்தி என்று திருமணத்திற்கு முதல் மூன்று நாட்களும் வடக்கத்து பாணியுடனும், ரிசப்ஷன் இப்போதைய ஆடம்பரத்துடனும் நடந்தாலும்,திருமண நிகழ்வு மட்டும் குடும்ப ஸம்ப்ரதாயத்துடன் நடந்தது. வெறும் குடும்ப நபர்கள் மட்டும் அதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். வெறும் நூறு பேர் இருக்காது. திருவுக்குள் சந்தோஷ சாரல் வீசுவதற்குப் பதிலாக தன் அருகே அமர்ந்திருக்கும் நிவாஸை பார்த்து மனம் பயம் கொண்டது.தனது உணர்வுகளை வெறும் வார்த்தைகளைக் கொண்டு நிரப்ப முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.
தொண்டை உலர்ந்தது. நிவாஸ் மங்கலநாணை அவள் கழுத்தில் பூட்டும் பொழுது அவள் முகம் கண்டவனுக்கு,அவளது அச்சம் கண்டு பரம திருப்தி.இது..இந்த பயம் தான் மனைவியிடமிருந்து அவன் எதிர்பார்ப்பது.
இவனெல்லாம்…என்ன ஆளென்று உங்களுக்குத் தோன்றலாம்..அல்லது இந்த காலத்தில் இது சாத்தியமா என்றோ,திருவின் குணாதிசயங்கள் வைத்து அவளுக்கு இதெல்லாம் சரிவராது என்றோ உங்களுக்கு தோன்றக் கூடும்.
சில சமயங்களில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதியது போல ‘ஊழ்வினை வந்து தொடரும் பொழுது நிறைய விஷயங்கள் மாறித்தான் போகிறது.
சாருவும் நரேந்திரனும் மணமக்கள் இருக்கும் மேடை பக்கம் கூட செல்லவில்லை.சாருவுக்கு தமிழ் சம்பிரதாயங்கள் புதியது. அதனால்,ஏதாவது செய்யப்போய் தவறாகிவிடுமோ என்ற பயத்தில் கீழேயே இருந்துகொண்டாள். கண்மணியும் கூப்பிட்டா கொஞ்சம் வாம்மா என்றுவிட்டாள் . சாருவுக்கு தமிழ் பேச வரும்.ஆனால்,வேகமாகவோ பதட்டமாகவோ எதிரில் நிற்பவர் பேசினால் புரிந்துகொள்ள தாமதம் ஆகும். அவள் மனதில் திரு நடந்துகொள்ளும் விதம் பற்றிய சங்கடங்கள் இல்லை.
ஆனால் ,தன் அருகிலேயே பசை போட்டது போல அமர்ந்திருக்கும் நரேந்திரன் திருவின் அண்ணனாயிற்றே! இவர் ஏன் இங்கேயே இருக்கிறார் என்று தோன்றவே நரேந்திரனிடம் யாருக்கும் புரியாதவாறு கன்னடத்தில் “நீங்க ஏன் கீழேயே இருக்கீங்க.மேலே மேடைக்கு போய் ஹெல்ப் பண்ணுங்க. உங்க அம்மாவும் அப்பாவுமே எவ்வளவு பாக்க முடியும்?”என்றாள் சாரு .
நரேந்திரன் நகைக்கடையில் நிவாஸ் நடந்துகொண்ட விதம் பற்றி மனைவியிடம் சொல்லியிருக்கவில்லை.சொல்லியிருந்தாலும் அவள் ஏதாவது பதில் சொல்லி சமாதானம் செய்திருப்பாள். இப்போதும் அது பற்றி பேச பிடிக்காமல் அமைதியாக இருந்தான். திரு தன் திருமணத்தின் போது நடந்துகொண்ட விதம் அவன் கண்முன் நிழலாட,”ப்ச்..அங்கே போய் என்ன பண்ணனும். எல்லாம் தயாரா இருக்கு. நிவாஸ் -திரு ரெண்டு பேரும் அய்யர் சொல்றத செஞ்சுட்டு போக வேண்டியதுதான்“என்று சுவாரஸ்யம் இல்லாமல் பதில் சொன்னான்.
மேடையிலிருந்து திருமகள் தன் அண்ணனையும் அவன் தன் மனைவியிடம் சிரித்து பேசிக்கொண்டிருப்பதையுமே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் சாரு தன் அண்ணியாக படவில்லை.அவள் தன் அண்ணனின் மனைவி மட்டும் தான்.
“எனக்கு இன்னிக்கு கல்யாணம்.இதுக்குப்பிறகு நா அவங்க வீட்டுக்கு போய்டுவேன்.அவங்க வீட்டுப் பொண்ணாகிடுவேன் . இப்போவாச்சும் என்னை பத்தி யோசிக்கலாம்ல“என்று மனதில் குமைந்தாள். அவளுக்கு யார் சொல்லி புரியவைப்பது..சாருவும் இப்போது திருமணமான பின்பு இவர்கள் வீட்டுப் பெண்ணாகிவிட்டாள் .அதனால்,வீட்டுப் பெண்ணுக்குரிய உரிமைகளும்,சலுகைகளும் கடமைகளும் அவளுக்கு உண்டு என்று. (என்னவோ போடா மாதவா..இந்த பொண்ணுங்க மனசுல என்ன ஓடுதுன்னு ஒண்ணும் புரியாது)
நிவாஸும் கூட சாருவையும் நரேந்திரனையும் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் மனதில் “இதுங்க காதல் கல்யாணமாமே …கல்யாணத்துக்கு முன்னமே பையன் அவகிட்ட பிளாட் ஆகிட்டான் போல.விட்டு நகர மாட்டேங்குறான். முதுகெலும்பு இல்லாதவன்” என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.
திருவின் கல்யாணத்துக்கு சாகேத் வரவில்லை. அவனது பெற்றோர் மட்டும் முதல்நாள் மாலை வந்துவிட்டு சென்றுவிட்டார்கள். அதுபற்றி நரேந்திரனுக்கு கூட வருத்தம்தான். ஒருவேளை நிவாஸுக்கு பதிலாக சாகேத் தங்கள் வீட்டு மாப்பிள்ளையாகி இருந்தால் நான் இப்படி ஒதுங்கி உட்காரவேண்டி வந்திருக்குமா..என்று நினைத்தவனுக்கு ஏக்கப் பெருமூச்சு ஒன்று வெளியேறியது.
error: Content is protected !!