Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

யான் நீயே!

Yaan Neeye 1.2

யான் நீயே 1.2

மீனாட்சியின் இரண்டாவது மகன் முத்துவேல் பாண்டியன். அவருக்கும் மூத்தவள் தான் மருதய்யனின் மனைவி மகாலட்சுமி.

மீனாட்சியும், மருதய்யனின் தந்தையும் உடன் பிறந்தவர்கள். ஆதலால் சிறுவயது முதலே மருதனுக்கும், பாண்டியனுக்கும் அத்தனை நெருக்கம். உறவாலும், நட்பாலும்.

மருதய்யனுக்கு மகாவின் மீது காதல். வீட்டில் சொல்லிட… இரு குடும்பமும் மனமுவந்து திருமணம் செய்து வைத்தனர்.



Advertisement

மருதய்யன் வீட்டிற்கு மூத்த ஆண் பிள்ளை. தனக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் வேண்டுமென்று ஆசை. அவரின் ஆசை பல வருடங்கள் நிறைவேறாது ஏக்கமாக வலி சுமந்தே நடந்தது.

அபிராமி பாண்டியனுக்கு வெளி உறவில் எடுக்கப்பட்ட பெண். திருமணம் முடிந்த வருடமே வீரனை பெற்றெடுத்தார். தனது மாமனின் பிள்ளை ஆசை அறிந்த பாண்டியன் தனது மகவை மருதனுக்கே வார்த்து கொடுக்க… மருதன் நெகிழ்ந்துபோனார்.

தன் கரம் ஏந்திய முதல் பிஞ்சுவின் மீது கொள்ளைப்பிரியம் வைத்தார். வீரன் பிறந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர், அபிராமிக்கு லிங்கம் பிறக்க, மகாவுக்கு பிரேம் பிறந்தான். லிங்கத்திற்கு அடுத்து அழகு நாச்சியார். அவ்வீட்டின் கடைக்குட்டியாக, மருதனின் இளவரசியாக பிறந்தாள் தங்க மீனாள். இவளுக்கு அடுத்து மகா, மருதன் தம்பதியருக்கு பிறந்த கடைசி வாரிசு அங்கை. வீரனின் செல்லக்குட்டி.

Advertisement

இவர்களது குடும்பத்தொழில் விவசாயம் தான். மருதனும், பாண்டியனும் சேர்ந்து மதுரையில் சுற்றுலாவாசிகளை அடிப்படையாக வைத்து, உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தனர். நன்கு முன்னேற்றம் கண்டு மாவட்டத்திலேயே நான்கைந்து கிளைகள் கொண்டுள்ளனர்.

Advertisement

வீரன் முதுகலை படித்திருந்தபோதும், தந்தை மற்றும் மாமனுக்கு ஓய்வு கொடுக்க எண்ணி தங்களது தொழிலை கையில் எடுத்துக்கொண்டான். பேச்சுவார்த்தை இல்லையென்றாலும் தொழில் லாபத்தில் சரிபாதியை மருதனின் கணக்கில் செலுத்திடுவான்.

ஒரு கட்டத்தில் விவசாயத்திலும் அவனது நாட்டம் செல்ல… இயற்கை முறையில் பயிரிடத் தொடங்கி முன்னேற்றம் கண்டான். அதனை தொடர்ந்து தன்னுடைய சொந்த முயற்சியில் அரிசி ஆலை தொடங்கினான். விளாங்குடிக்கும் மதுரைக்கும் இடையில் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. மதுரை முழுக்க வீரனின் அரிசி ஆலை மற்றும் மண்டி பிரபலம். கொள்முதல், விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, அனைத்திற்கும் இங்குதான் வருவர். பாதி நேரம் அவனின் நாள் ஆலையில் தான் கழியும்.

வீரன் விவாசயம், ஆலையென்று இறங்கிட… லிங்கம் படிப்பை முடித்து ஹோட்டலை தன் கையில் எடுத்துக்கொண்டான். வீரனாக பொறுப்பை ஒப்படைத்தான் என்பது சரியாகும். அங்கு அனைத்தும் லிங்கத்தின் கீழ் தான் என்றாலும், தின நடவடிக்கைகள் மற்றும் கணக்குகளை அண்ணனிடம் தவறாது உரைத்திடுவான்.

Advertisement

பிரேம் நகரத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். ஊர் என்றாலே அவனுக்கு அதிர்வு தான். அறியாத வயதில்… அப்படி சொல்லிவிட முடியாது, அறிந்த வயதில் தெரியாது செய்த செயலின் வீரியம் மனதளவில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக குடும்பம் உறவை பாசத்தை விட்டுவிட முடியாதே! விடுமுறை மற்றும் விசேட நாட்களில் ஓடிவந்திடுவான்.

அழகு நாச்சி கடந்த வருடம் இளங்கலை முடித்திருக்க… மேலே படிக்க ஆர்வமில்லாததால் வீட்டோடு இருக்கிறாள். அப்பப்போ ஆலைக்கு அழைத்துச் சென்று கணக்கு வழக்குகளை பார்க்க வைப்பான் வீரன். அவனுக்கு தங்கை மேலே படித்து நல்ல வேலைக்கு போக வேண்டுமென்கிற ஆசை இருந்தது. ஆனால் அவளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து எதையும் திணிக்காமல் விட்டுவிட்டான். தங்கைக்கு தையலில் ஆர்வமென்பதை அவனாக கண்டுகொண்டு அதற்கான வகுப்பிற்கு தற்போது அனுப்பி வைக்கின்றான்.

மீனாள் படிப்பில் கெட்டி. அவளுக்கு இந்த வேலைக்கு செல்ல வேண்டுமென்று ஒரு பெரும் கனவுண்டுஏதும். அதற்காக படிக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டுமென்பது மட்டுமே ஆசை. முதுகலை முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

அங்கை இப்போது தான் பள்ளி உயர் கல்வியில் முதல் வருடம். வீரனுக்கு அங்கை என்றால் அதீத பாசம். அவளும் அவனுடன் தான் அதிகம் சுற்றித் திரிவாள். தங்கையை விவரம் தெரியாத வயதில் தூக்கி பழகியிருந்தாலும், அவனை பெரிய மனிதனாக உணர வைத்தது அங்கை தான். அவளை தன் குழந்தைபோல் பாவித்து கையில் ஏந்திய தருணம் எப்போது நினைத்தாலும் அவனின் இதழில் புன்னகையை தோற்றுவிக்கும்.

வீரனுக்கு அடுத்து ஐந்து பிள்ளைகள் பிறந்திருந்தாலும், மருதனுக்கு வீரனின் மீது அதீத பாசம். அவரின் மார்பை உதைத்த முதல் பிஞ்சு பாதம் அவனுடையதல்லவா. விட்டுக்கொடுத்திடுவாரா?

அப்படி அவர் விட்டுக்கொடுத்து பேசிய நாளும் ஒன்று உள்ளது. அந்நாளின் கசப்பு… வீரன் பேசிய வார்த்தைகள் அவரின் மனதை அதிகமாக காயப்படுத்திவிட்டது. மருதனின் பதில் தாக்குதல் அதைவிட அதிகமாக வீரனை தாக்கியது. அதில் இருவருமே உறவளவில் விலகி நின்றுகொண்டனர்.

மனதளவில்? அவ்விருவருக்கு மட்டுமே தெரியும்.

பிரச்சனையின் மூலகர்த்தாவான பிரேம் வீரனிடம் ஒட்டிக்கொண்டு தான் திரிகிறான். அவனுக்கு மட்டுமல்ல மற்ற பிள்ளைகளுக்கும் எதுவென்றாலும் வீரன் வேண்டும். இதில் தங்க மீனாள் மட்டும் வீரனிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிற்பாள். அளந்து பேசுவாள். அதற்கு வீரனின் அன்றைய பேச்சு காரணமாக இருக்கலாம்.

மீனாளின் விலகல் எல்லாம் அவளளவில் மட்டுமே!

வீரன் மற்ற ஐவரிடமும் காட்டும் அக்கறை அன்பை கொஞ்சமும் குறையாது மீனாளிடமும் காட்டிடுவான்.

அன்றைய நிகழ்வுக்கு பின்னர் மருதனின் வரவு இங்கு முற்றிலும் நின்று போக, பிள்ளைகள் இரு வீட்டுக்கும் பாலம் அமைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மருதனும் தன் பேச்சை வீரனிடம் மட்டுமே நிறுத்திக்கொண்டார். இருப்பினும் வீரனென்றால் அன்றைய பாசம் இந்த நொடியும் அவருக்கு குறையாது உள்ளது.

ஆதலாலே வீரன் ஒத்தையாக கரியனைத்தேடி சென்றிருக்கிறான் என்றதும் விரைந்து ஓடி வந்திருந்தார்.

அவரின் பாசத்தை தள்ளி நின்றாலும் மனதால் உணரப்படுபவனுக்கு… அன்றைய மருதனின் வேறுபாடான பேச்சு இன்றும் வருத்தத்தை கொடுக்க அபிராமி பேசுவதை கவனத்தில் கொள்ளாது தனது அறைக்கு சென்றுவிட்டான்.

“அமிழ்தன் போயிட்டானா?” உள்ளே வந்த மீனாட்சி, கூடத்து தூணில் சாய்ந்து உட்கார்ந்தவராக அபிராமியிடம் கேட்க…

“போயிட்டான் அத்தை” என்ற அபிராமி, “தூங்கலையா?” எனக் கேட்டு அவரின் முன் அமர்ந்தார்.

“நம்ம வூட்டுக்கு ஒண்ணுன்னதும் ஓடிவந்தியான் பார்த்தியா? அவனுக்கு ஏதுமாட்டிக்கும்ன்னா இங்கிருந்தும் ஓடுவானுவ. பொறவு என்னத்துக்கு சடவுன்னு தெரியல” என்று தினமும் புலம்பும் பேச்சை இப்போதும் பேசினார் மீனாட்சி.

“எனக்கொரு ரோசனை அத்தை” என்று, கொல்லை புறத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பாண்டியனை பார்த்துக்கொண்டே கூறினார் அபிராமி.

“என்ன சங்கதி?” பாண்டியனும் அவர்களுக்கு அருகிலிருந்த ஊஞ்சலில் அமர,

“கரியனுக்கு தண்ணீ காட்டிட்டேங்க. நானு உறங்க செல்லுதேன்” என்று வந்த லிங்கம் அவர்களின் பேச்சு கேட்டதும், காதினை கூர்மையாக்கி படிகளில் மெல்ல ஏறினான்.

“மீனாளுக்கும், அமிழ்தனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிப்புடலாம்” என்றார்.

“ஆத்தீ…” லிங்கம் நெஞ்சில் கை வைத்துக்கொண்டான். சத்தமில்லாமல் அளறிவிட்டான்.

“அண்ணே அன்னைக்கு பேசுன பேச்சுக்கு அந்தபுள்ள பக்கமே வரமாட்டிக்கு. இதுல இவுக கோர்த்துவிடப் பார்க்குறாய்ங்க” என்று முணுமுணுத்தவனாக சென்றுவிட்டான்.

“இது நடக்குமாட்டிக்கு உனக்கு தோணுதாக்கும்” என்ற அப்பத்தாவிடம் மட்டுமல்ல, கேட்ட அபிராமிக்குமே அந்த நம்பிக்கை இல்லை.

“ஆசைதான். நடந்தாக்கா நல்லாயிருக்கும்” என்ற பாண்டியன், “செத்த கட்டையை சாயிங்க” என எழுந்து சென்றார்.

“நான் இங்கனக்குள்ளவே உறங்குறேன். நீயி போத்தா” என்று கூடத்துலே படுத்து கண் அயர்ந்தார் மீனாட்சி.

புலம்பியபடி மாடியேறிய லிங்கம் படியில் கால் இடறி பொத்தென்று அமர்ந்திட… மர பலகையால் ஆன படி என்பதால் சத்தம் கேட்டு தனதறையிலிருந்து வந்த வீரன்…

“இன்னுமாட்டிக்கு உறங்காமல் என்ன செய்யற நீயி?” என்ற அதட்டலோடு தம்பியை தூக்கி விட்டு, அவனின் காலினை ஆராய்ந்தான்.

“அடியெல்லாம் இல்லைங்கண்ணே” என்ற லிங்கம், “உங்க கல்யாணப்பேச்சு பேசுறாய்ங்க” என்றான்.

“பொண்ணு யாராம்?”

“அண்ணே?” வீரனின் கேள்வியை நம்ப முடியாது விழி விரித்தான் லிங்கம்.

“காலா காலத்துல நடக்க வேண்டியது நடந்து தானேடா ஆவனும்” என்ற வீரன், “நாச்சியாவுக்கு முடிச்சிட்டு பொறவு பார்ப்போம்” என்று நகர்ந்தான்.

வீரன் இப்படித்தான். போகிறபோக்கில் வாழ்வை எதிர்கொண்டுவிடுவான். அவனின் பக்குவம் யாருமே எதிர்பாராத வகையில் இருக்கும்.

“பொண்ணு மீனுக்குட்டியாம்” என்றான். வீரனின் பிரதிபிலிப்பு என்னவாக இருக்குமென்பதை தெரிந்துகொள்ள, செல்லும் அவனின் முதுகை பார்த்து வேகமாக கூறியிருந்தான்.

“ஹோ” என்று எவ்வித பாவனையும் காட்டாது சாதாரணமாக குவிந்து ஒலித்தது அவனது அதரங்கள்.

“ஷாக் ஆவீங்க நெனைச்சேன்.” லிங்கம் உண்மையை மறையாது கூறினான்.

“அவளுக்கு வேணுமின்னா ஷாக்கா இருக்கலாம்” என்றான் வீரன்.

“அப்போ நீங்க எதிர்பார்த்தீங்கமாட்டிக்கு!” லிங்கம் புருவம் உயர்த்தினான்.

“ஏண்டா… அவ எனக்கு அத்தை மவ, கல்யாணம் பேச்செடுத்தாக்கா இப்படியொரு ரோசனை வருமின்னு கூடவா தெரியாது” என்று வேகமாக மொழிந்த வீரன், “போயி சோலியை பாரும்” என்று தம்பியின் முதுகிலே தன் கழுத்தில் கிடந்த துண்டால் தட்டிவிட்டு சென்றான்.

“இவீங்க மனசுக்குள்ளார என்னத்தையோ மறைக்குதாக” என்று முணுமுணுத்த லிங்கம், “என்னைக்காச்சும் தெரியுமாட்டிக்கு” என்று நகர்ந்தான்.

காலை எழுந்ததும் வயலை சுற்றி நடந்து வந்த வீரன், கட்டுத்தறிக்கு சென்று அங்கிருக்கும் கால்நடைகள் மற்றும் பறவைகளை பார்வையிட்டான்.

“அண்ணே கரியன் மட்டும் நீங்க வச்சாதேன் உண்குவேன்னு சலம்புறான்” என்று கால்நடைகளை பராமரிக்கும் கண்ணாயரம் சொல்லிட,

கூடையிலிருந்த பருத்தி கொட்டையை கை நிறைய அள்ளி கரியனின் வாயருகே நீட்டினான்.

அதுவரை முரண்டு பிடித்துக்கொண்டிருந்த கரியன் சமத்தாக உண்ணத் துவங்கியது.

“வர வர இவன் ரொம்பத்தான் பகுமானம் பண்ணுதான் அண்ணே” என்ற கண்ணாயரம் அடுத்த மாட்டை கவனிக்கச் செல்ல, வீரனின் பார்வை அங்கிருந்த தோட்டப் பகுதியை கடந்து சற்று தொலைவில் தென்பட்ட வீட்டின் மொட்டை மாடியில் பதிந்தது.

“பனி விலகாம மேலுக்கு முழுகியிருக்கா! பொறவு தலை நோவுன்னு கத்துவாள்” என்று மெல்ல சடைத்தவனின் பேச்சினை பாதி கேட்டும் கேட்காது அருகில் வந்த லிங்கமும், நாச்சியும்…

“அங்கனக்குள்ள என்னத்தண்ணே பார்த்திட்டு இருக்கீய்ங்க?” என்று ஒருசேர வினவினர்.

வீரன் பதில் சொல்லாது தனது பார்வையையும் மாற்றாது, அவர்களையும் பாராது, கரியன் உண்டு முடிப்பதற்கு காத்திருந்தவன் போல் தனது கை காலியானதும் ஓடும் வாய்க்காலில் குனிந்து கையினை கழுவினான்.

“அங்குட்டு தெரியுற மீனாவையாண்ணே பார்த்திட்டு இருந்தீய்ங்க?”

வீரனின் மனசை ஓரளவுக்கு அறிந்திருந்த நாச்சியா, அவனை சீண்டி பார்க்கும் விதமாக கேட்டிட,

“ம்க்கும்… பார்த்துப்புட்டாலும்” என்று நொடித்த லிங்கம், “இந்த தென்னந்தோப்பு தாண்டி அங்குட்டு மாடியில முடியை உணத்துர மீனாவை ஏன் அவுக பார்க்கப்போறாவ! தோட்டத்துல செடிலாம் காய்ச்சிக்கிடக்கா பார்திருப்பாய்ங்க” என்றான்.

“ஆமாவாண்ணே?” என வீரனிடம் கேட்ட நாச்சியிடம் அப்படியொரு விஷமப் புன்னகை.

“பார்த்திருந்தாலும் என்ன தப்பிருக்குமாட்டி” என்ற வீரன் பார்வையாலே தங்கையை கண்டித்திருந்தான்.

“கோர்ஸ் எப்போ முடியுது?”

“இன்னும் ரெண்டு மாசம் இருக்குண்ணே” என்ற நாச்சி, “பொட்டிக் வச்சித்தறீங்களா?” என்று ஆசையாகக் கேட்டாள்.

“மொத யாருக்கிட்டவாச்சம் சேர்ந்து கொஞ்சநா(ள்) நீக்கு போக்கு கத்துக்கோ. பொறவு வச்சிக்கலாம்” என்றவன், “வாத்து குட்டையை சுத்தம் பண்ண சொல்லு லிங்கு. கோழிங்க கூண்டு புதுசு மாத்த சொல்லு” என்று சொல்லிச் சென்றான்.

“நீயேன் நாச்சியா அண்ணனை சீண்டுறா மாறி பேசுற?” வீரன் தலை மறைந்ததும் லிங்கம் தங்கையிடம் வினவினான்.

“மீனாள் மேல அண்ணேக்கு விருப்பம் இருக்குமாட்டிக்கு அண்ணே.”

நாச்சியா சொல்லியதை நம்ப முடியாது அரண்டு பார்த்தான் லிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!