Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்பனை 28.

கற்பனை 28.

அன்று என்ன நினைத்து நிரூபன் வெடியை பற்ற வைத்தானோ தெரியாது. ஆனால் ,திருமகளின் நிலை கண்ணிவெடியில் கால் வைத்தது போலானது. பொதுவாக குழந்தைகளின் முன் மனைவியை கடிந்து கொள்ளாத நிவாஸ், இப்போதெல்லாம் குழந்தைகளையும் கூட்டு சேர்த்துக்கொண்டு இவளை முட்டாளாக்குவது அல்லது இவளை அழவைத்து பார்ப்பது என்று இருந்தான். இந்தியன் குரோசேரி கடையில் செய்யும் வேலையை தவிர இவளை ஆற்றுப்படுத்த வேறு எதுவும் இருக்கவில்லை.



Advertisement

நிரூபனும்  மிக இயல்பாக இவர்கள் வீட்டுக்கு வந்து சென்று கொண்டும் குழந்தைகளோடு ஒன்றிக்கொண்டும் இருக்கிறான். வீட்டில் அவன் இருக்கும் நேரங்களில் திருவுக்கு இன்னும் நரகம் கூடிப் போனது. நிவாஸின் கண் எதிரிலேயே திருவை தொட்டுப் பேசுவது, நடு இரவில் இவளது அறைக்கதவை தட்டிவிட்டு, நிவாஸ் அரை என்று நினைத்து தட்டியதாக  இவளிடம் கூறுவது, நிவாஸ் கண்முன்னே இவளுடன் சகஜமாக பேசுவது, அடுக்களைக்குள் புகுந்துகொண்டு இவளுடன் சமைக்கப் போவதாக குழந்தைகளிடம் சொல்வது என்று எல்லாமே எல்லை மீறி சென்றுவிடும்.

தன் மனைவியை யாராவது நிமிர்ந்து பார்த்தாலே பிடிக்காத நிவாஸ் வெகு அதிசயமாக ஒன்றும் வாயை திறந்து சொல்லவில்லை.நிரூபனைக் கண்டிக்கவும் இல்லை. அவர்களது நட்பு ஒரு சதவிகிதம் கூட குறையவில்லை.

Advertisement

Advertisement

குழந்தைகளும், நிவாஸ் நிரூபனும்  அருகில் இருக்கும் பூங்காவில் ஒன்றாக விளையாட செல்வது அவர்கள் வீட்டில் இயல்பானது. நிரூபனை குழந்தைகள் சித்தா என்று அழைக்க தொடங்கியிருந்தார்கள். திருவுக்கு நடப்பதை  புரிந்துகொள்ளும் அளவுக்கு கூட புத்தி வேலை செய்யாமல் தேங்கி நின்றாள்.

நிரூபன் நிவாஸ் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தனக்கென ஒரு வீடு வாங்கிக் கொண்டு இவர்கள் அருகிலேயே வந்துவிட்டான். நிவாஸ்- நிரூபன் காதலிக்க நிரூபனின் வீடும்,குடும்பம் நடத்த நிவாஸின் வீடுமாகிப் போனது. குழந்தைகள் இருவருக்கும் மூணரை வயதாகிறது. அதற்குள்ளாகவே அவர்களுக்குள் மனதில் அம்மா என்றால் இளக்காரமும் , வன்மமும் வரும்படிக்கு செய்திருந்தார்கள் நிரூபனும் நிவாஸும்.

Advertisement

ஒருநாள் காலையில் வெடித்து சிதறிய திருமகள் , நேரடியாகவே அவர்களிடம் கேட்டுவிட்டாள் .”என்னதான் நடக்குது இங்கே? நிரூபனை சுட்டிக்காட்டி,இவர் எதுக்கு இங்கேயே இருக்காரு? இவருக்குனு குடும்பம் இருக்குமே. நம்ம வீட்டுல என்ன வேலை?”

நிரூபன் இந்த நாளை இவ்வளவு சீக்கிரம் எதிர்பாக்கவேயில்லை . நிவாஸ் பதறாமல் பதில் சொன்னான்.”பாரு திரு.இங்கே வந்து படிக்கும் காலத்திலிருந்தே நாங்க ரெண்டு பேரும் எல்லாத்தையும் பகிர்ந்துக்குவோம். ஈகோ இல்லாம. ஆனா,விதி பாரு ,காதலையும் பகிந்துக்கோங்கடா ன்னு சொல்லிடுச்சு.என்ன பாக்குற,இவ்ளோ நாள் இந்த கேள்வியை நீ ஏன் கேக்கல?அவன் மீது இருக்கும் லவ் தானே.இப்போகூட  உன்னோட மோட்டிவ் என்னனு எனக்கு தெரியும்.நா கவனிக்கிறேனா இல்லையா ன்னு தெரிஞ்சுக்கணும். அதானே? அர்த்த ராத்திரி நேரத்துல நா *****  கூப்பிட்டா முகம் சிறுத்து போகுமே உனக்கு.அவன் கதவை தட்டி கூப்பிட்டா திறக்குற. இன்னுமா எனக்கு புரியாது என்று அவள் தலையில் கூடை நெருப்பை அள்ளிக் கொட்டினான்.

திரு துடித்துப் போனாள் . போதாத குறைக்கு,நிரூபனும்  நம்ம காதலை பத்தி ஏற்கனவே நிவாஸ் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் திரு. இனிமே அவன் உன்னை தொந்திரவு செய்ய மாட்டான் என்றுவிட்டு அவளிடம் விவாகரத்து பத்திரத்தை  நீட்டினான். திரு ஸ்தம்பித்து நின்றாள். வெகு காலம் கழித்து வாய் விட்டு கதறினாள். ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லை. குழந்தைகள் அப்பாவின் கால்வ்களை இறுக்கமாக கட்டிக்கொண்டார்கள். இவற்றை பார்த்த திருவுக்கு கோவம் எல்லை கடக்க குழந்தைகளை வேகமாக தன்னிடம் இழுக்க பார்த்தாள் .

மிரண்ட குழந்தைகள் தங்களை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்ய, அவர்கள் கைகள் சிவந்து லேசாக காயம் பட்டது.திருவின் நக கீறல் ஒரு குழந்தையின் மணிக்கட்டில் விழ ,  அருகே வீட்டில் இருப்பவர்கள் 911 ஐ அழைத்து குழந்தைகளை அடித்து துன்புறுத்துவதாக புகார் கொடுத்து விட்டார்கள்.

நிவாஸ் குழந்தைகளின் துணையுடன் அவர்கள் இருவரையும் சாட்சியாக்கி  ,அம்மா தங்களை அடித்து துன்புறுத்துவதாக சொல்ல, அதையே காரணம் சொல்லி நிவாஸ் விவாகரத்து செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். திருவை  குண்டுக்கட்டாக விமானம் ஏற்றி சென்னைக்கு அனுப்பியும் வைத்தான்.இவையெல்லாம் நடந்து முடியவும் திரு மனதுக்குள் ஒடுங்கிப் போனாள் . சந்தோஷம் கொள்ளவேண்டிய ஒரே விஷயம் திருவின் உடலை வைத்து அங்கே எந்த வன்முறையும் நிகழவில்லை. நிரூபன்  அவளை அடையவும் முயற்சி ஏதும் செய்யவில்லை. அப்படி ஏதாவதும் நிகழ்ந்திருந்ததால் திருமகள் திக்ப்ரமை பிடித்தவள் ஆகியிருப்பாள்.

சென்னை வந்தவள்  நேராக சென்றது தனது அம்மா வீட்டுக்குத்தான். வாசலில் சாரு  கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் .கையில் ஒரே ஒரு சூட்கேசுடன் வந்து நிற்கும் நாத்தனாரை பார்த்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. திருவின் முகம் பார்த்து ஏதோ சரியாக இல்லை என்று புரிந்து கொண்டவள்,  கோலத்தை பாதியில் நிறுத்திவிட்டு திருவின் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள் . சாருவின் முகத்தில் ஆயிரம் கேள்விகள். நாத்தனாரிடம் அவள் அதிகம் பேசி பழக்கம் இல்லை.அதோடு இவற்றை தான் கேட்டல் சரியாக பதில் வராது என்று புரிந்தவள், திருமகளை சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு வீட்டில் இருக்கும் மற்றவர்களை கூப்பிட ஓடினாள்.

வரும்பொழுது கையில் வாட்டர் பாட்டிலுடன் வந்தவள் திருவிடம் கொடுத்து குடிக்க சொன்னாள் . சாரு பேசிக்கொண்டிருக்கும்பொழுதே திரு மயங்கி சரிந்தாள். அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்கள் ஓடி வருவதற்கும் திரு கீழே மயங்கி விழவும் சரியாக இருந்தது.

சாகேத் பள்ளி நிர்வாகத்தை கைகளில் எடுத்து  நான்கு  வருஷங்கள் ஆகிவிட்டது.பெங்களூரு வாழ்க்கையை மறந்தாகவேண்டிய கட்டாயம். அங்கே போவதையும் குறைத்துக்கொண்டான்.  துரை இப்போது எவ்வளவோ பரவாயில்லை. தினமும் அவரும் பள்ளிக்கு வருகிறார். அவர்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. சிபிஎஸ்சி  அங்கீகாரம் பெற்று அவன் பள்ளிக்கு அருகே இருந்த இன்னொரு பள்ளியை விலைக்கு வாங்கி தங்கள் பள்ளியின் பெயர் கொண்டு ஆரம்பித்துவிட்டான். இவர்களது ஆங்கிலவழி பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்புவரை வந்துவிட்டது. இன்னொரு பள்ளியில் பத்தாம் வகுப்புவரை. தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்று பிரபல பத்திரிக்கையில் இவனது பேட்டி பிரசுரம் ஆகும் அளவுக்கு இவனது நிர்வாகம் சீராக இருந்தது.

ஜான்வி அடிக்கடி வாட்சாப்பில் ஏதாவது மெசேஜ் அனுப்புவாள்.இவன் பதில் ஏதும் அனுப்ப மாட்டான். தனது பெற்றோரை சாகேத் பத்ரிதான் பார்த்துக்கொள்கிறான்  என்று அவளுக்கும் தெரியும். அதனால் பெரும்பாலும் பெற்றோர் பற்றிய விசாரிப்புகள் வரும். இரண்டாவது முறை கருத்தரித்திருப்பதாக வந்த மெசஜ் இவனை உணர்வுகளின் பிடியில் தள்ளியது.சுதாரித்தவன் குழந்தை பிறந்திருப்பதாக வந்த தகவலுக்கு வாழ்த்துக்கள் என அனுப்பினான். ஏனோ அவளது எண்ணை முடக்கிவிட அவனால் முடியவில்லை. திருமணம் எனும் முன் அவள் இவனது தோழி. அதனால் இருக்கலாம்.அவளும் இவனை அடிக்கடி எல்லாம் தொந்திரவு செய்ய மாட்டாள். பெற்றோர் ஞாபகம் வந்தால் மட்டும் இவனுக்கு மெசேஜ் தட்டிவிடுவாள்.

சாகேத்திடம் நிறைய மாற்றங்கள்.உடலில் செழுமையுடன் கம்பீரம் கூட்டிப்போய் இருந்தது. பணம் சேரும்பொழுது, அதுவும் சுய சம்பாத்தியம் எனும் பொழுது ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான் சாகேத். இப்போதும் நரேந்திரன் தான் சாகேத்தை தேடி வருவானே தவிர சாகேத் அவர்கள் வீட்டுக்கு போவதில்லை. சாருவும் நரேந்திரனும்   வெகு இயல்பாக குழந்தைகளுடன் துரை -ராஜத்தை பார்க்க வந்து போவார்கள். சாருவை பொறுத்தவரை சாகேத் குடும்பம் இன்னொரு பிறந்த வீடு போல் ஆனது.

துரை சாகேத்திடம் இப்போதெல்லாம் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வெகுவாக வற்புறுத்த தொடங்கி விட்டார்.ஜான்வியின் பெற்றோரும் கூட ,”மாப்பிள்ள , அவதான் ரெண்டாவது கலியாணம் செய்ஞ்சு ரெண்டு குழந்தைகளையும் பெத்துட்டாளே.இன்னமும் நீங்க எதுக்கு இப்படி நிக்கணும்?”என்று கேட்டுவிட்டார்கள் . அவர்களது குற்ற உணர்ச்சியிலிருந்து அவர்களாலும் வெளியே வர முடியவில்லை. சாகேத்தும் சொன்னான்.”அதேதான் மாமா ,அவளுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கு. நீங்க பாட்டி தாத்தா இருக்கும் பொழுது அந்த குழந்தைகளை  பாக்கலாமே!”

என்னவோ வருஷங்கள் ஆன பிறகும் அவர்களால் ஜான்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விநீதன் வீட்டிலும் அதே நிலை தான். விநீதன் -ஜானவி செய்தது குற்றமா இல்லையா என்று நிச்சயம் என்னிடம் பதில் இல்லை. அதை உங்கள் முடிவுக்கு விடுகிறேன்.

“கல்யாணம் செய்துகொள் “என்ற வற்புறுத்தல் , சாகேத்துக்கு நிச்சயம் தெரியும். எந்த பெண்ணிடமும் அவனது உணர்வுகள் எழும்பாது.அதை எழுப்பும் வல்லமை படைத்தவள் ஒருத்திதான்.அப்படி இருக்கும் பொழுது இன்று ஜான்வி தன்னை காட்டிக்கொடுக்காமல் விட்டு சென்றது போல் இன்னொரு பெண்ணும் அமைதியாக செல்வாளா என்ன? அல்லது இன்னொரு பெண்ணுக்கும் அவளை தொடாமல் வைத்திருந்தது துரோகம் செய்ய முடியுமா? மனதுள் உள்ள கேள்விக்கு பதில் நிச்சயம் முடியாது தான். அப்படி என்றால் அவன் காலம் முழுவதும் தனியாக இருப்பதுதான் சரி!என்று  மௌனத்தை ஆயுதமாக்கி கொண்டான். அவர்களின் கல்யாணம் பற்றிய கேள்விகளுக்கு இவனிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இருக்காது.

துரை -ராஜம் இருவருக்கும் தனது மகன் வாழ்க்கை செழிக்காதா?என்று மனம் அடித்துக்கொள்கிறது. நிதர்சனம் வேறு ஆயிற்றே!

நரேந்திரன் காலை பத்து மணிக்கு மேல் சாகேத்துக்கு அலைபேசி அழைப்பில் , “திரு வந்திருக்கா சாகேத். சீர் கெட்டு  வந்திருக்கா. அவன் அந்த ராஸ்கல் இவளை என்ன செஞ்சான்னு தெரியல.குழந்தைகள் வரல. இங்கே வந்தவ எதுவும் சொல்லும் முன்னால மயக்கம் ஆகிட்டா.ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம்”என்று விவரம் தெரிவித்துவிட்டு வைத்தான்.

சாகேத்தின் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடித்தது.வீட்டில் கூட விவரம் சொல்லாமல் பள்ளியிலிருந்து நேராக ஹாஸ்பிடல் நோக்கி பறந்தது அவனது ஆடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!