கதவை திறந்து பார்த்த சீதா, வெளியே தன் கண்கள் கண்ட காட்சியை நம்ப முடியாமல் உச்ச கட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
Advertisement
அவரின் சப்தத்தில் மற்றவர்களும் வெளியே வர, அங்கு ஜோடியாய் தோள்களில் கை போட்டு நின்றிருந்த ராமன், பரமசிவன் சகோதரர்களைக் கண்டு மற்றவர்களுக்குமே மயக்கம் வராத குறை தான்.
Advertisement
சுதாரித்த தனம் முதலில் தன் தமக்கையை தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டார்.
Advertisement
ஆனால் இன்னும் அதிர்ந்து போய் வாயைப்பிளந்து கொண்டு நின்றிருந்த வாசுதேவனின் வாயை மூடிய மதுரம் வாசலில் நின்றிருந்த தன் மகன்களை சந்தேகமாக பார்த்தார்.
Advertisement
” இன்னும் எவ்ளோ நேரம் தான் எங்களை வாசல்லையே நிக்க வைக்கிறதா உத்தேசம்? வாயைப் பிளந்துகிட்டு பார்க்கிறதுக்கு நாங்க என்ன குரங்கு வித்தையை காட்டிக்கிட்டு இருக்கோம்.. வழியை விடுங்க” என்று பரமசிவன் அதட்டல் போட்டுவிட்டு தன் அண்ணனை நோக்கி,
” நீங்க பார்த்து வாங்கண்ணா” என்று தேன் தடவிய குரலில் கூற, இப்போது மதுரத்திற்கே மயக்கம் வந்து விடும் போல் இருந்தது.
அவர்களின் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் தன் அண்ணனை கைத்தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த கதிரையில் அமர வைத்த பரமசிவன், வேகமாய் சமயலறைக்கு சென்று ஒரு சொம்பு முழுக்க மோர் எடுத்து வந்து தன் அண்ணனிடம் நீட்டினார்.
“இந்த வெயிலுக்கு இதை தொண்டைக்கு இதமா குடிங்கண்ணா” என்று வேறு உபசரிக்க,
‘ என்னடா நடக்குது இங்க ‘ என்கிற ரீதியில் மற்றவர்கள் அனைவரும் குழம்பிப் போய் பார்க்க, மதுரம் தான் முதலில் வாயை திறந்தார்.
“இத்தனை வருஷமா நாங்க அவ்ளோ சொல்லியும் ஒருத்தரை ஒருத்தர் மூஞ்சியை கூட பார்க்காம திருப்பிட்டு போனிங்க.. இப்போ திடீர்னு எங்க இருந்து டா ஞானோதயம் வந்துச்சு?? ஏதோ புது பொண்டாட்டியை கவனிக்கிற மாதிரி ஒன்னா ஒட்டிக்கிட்டு வந்தது மட்டுமில்லாம இப்போ விழுந்து விழுந்து கவனிக்கிற?? நடந்தது என்ன??” என்று தன் புலன் விசாரணையை தொடங்கினார் மதுரம்.
“ஒரு மனுஷன் பேசினாலும் தப்பு பேசலைனாலும் தப்பா?? உங்களோட ஒரே இம்சையா போச்சு.. அண்ணா நீங்க முதல்ல ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க.. இங்க இருந்தா இவங்க நசநசன்னு ஏதாவது பேசி தொல்லை பண்ணிட்டே இருப்பாங்க” என்று பரமசிவன் அலுத்துக்கொள்ள,
அவர் முதுகிலே நான்கு அடிகளை பரிசளித்த அவரின் அன்னை, ” நாங்க உனக்கு தொல்லையா?? என்னை கொலைகாரி ஆக்காம என்ன நடந்துச்சுன்னு சொல்லு” என்று மதுரம் கோபமாய் வினவ,
பதில் கூற வந்த பரமசிவத்தை அடக்கி விட்டு தன் திருவாய் மலர்ந்து பேசத் தொடங்கினார் ராமன்.
” நான் காலையில ஒரு பத்திரத்தை சரி பார்க்க வேண்டி தேனிக்கு கிளம்பினேன்ல” என்று அவர் கூறிவிட்டு நிறுத்த,
” ஆமா அது தெரியாது பாருங்க … மேல சொல்லுங்க” என்று எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் சீதா அவரை அவசரப்படுத்த,
“அப்போ……..” என்று இழுத்த ராமனின் நினைவுகள் சற்று முன்னோக்கி சென்றது…
தேனிக்கு பத்திரம் சரி பார்க்க செல்கிறேன் என்று வீட்டில் பொய் உரைத்து விட்டு தன் மகனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு தேனியில் பிரபலமான ஜோசியர் ஒருவரை காண அதிகாலையிலே கிளம்பி சென்றார் ராமன்.
அவர் போகும் போது கலவரம் ஏதும் தொடங்காததால் அவருக்கு அதைப்பற்றி சுத்தமாய் தெரிந்திருக்கவில்லை.
பேருந்து நிலையத்தின் அருகிலே அந்த ஜாதகம் பார்ப்பவரின் அலுவலகம் இருந்ததால் பொடி நடையாகவே அங்கு சென்று பார்க்க, வீடோ பூட்டியிருந்தது.
ஆனால் அதில் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் ‘ பார்வை நேரம் காலை 9.30 – 12.30 ‘ என்று போட்டிருக்க, மணியைப் பார்த்தார்.
இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்க, நேரத்தை கடத்த அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்து விட்டு திரும்பி வரும்போது பார்த்தால் தேனி மாநகரமே போர்க்களமாக காட்சியளிக்க, இராமனிற்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘ போகும் போது நல்லாத்தானே இருந்தது.. இப்போ எதுக்கு எல்லா கடையையும் அடிச்சு ஒடைச்சிட்டு இருக்காங்க ‘ என்று அவர் குழம்பி, அருகில் சென்ற ஒருவரின் மூலம் விஷயத்தைக் கேட்டறிந்தார்.
அனைத்தையும் கேட்ட பின், ” அச்சோ இப்போ எப்படி ஊருக்கு போறது.. பஸ் வேற இருக்காதே .. பேசாம அப்போவே கார் எடுத்துட்டு வந்திருக்கலாம்” என்று அவர் நொந்து கொள்ள,
அப்போது அந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவன் இவரை நெருங்கி அவர் கைகளில் ஒரு பலகையை திணித்து, ” இந்தா பெருசு இந்த போர்டை கையில வச்சுக்கிட்டு ‘ விடுதலை செய்!! விடுதலை செய்!! கதிரவனை விடுதலை செய்!! ஒழிக ஒழிக!! போலீஸ் அராஜகம் ஒழிக!!’ அப்படின்னு கோஷம் போட்டுக்கிட்டே எங்க கூட வா.. ஒரு குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் அவன் முன்னேறி செல்ல,
கடுப்புடன் தன் கையில் திணித்திருந்த பலகையை தூக்கி எறிந்த ராமன், ” நான் ஏண்டா உன் பின்னாடி போர்டை தூக்கிட்டு வரணும்.. இதுக்கெல்லாம் வேற ஆளை பாரு.. இவனுங்க தொல்லை தாங்க முடியலை” என்று அவர் கத்திக்கொண்டே அவனுக்கு எதிர்திசையில் நடக்கத் தொடங்கினார்.
அவரின் பேச்சில் கோபம் கொண்ட அவனோ அவரின் வழியை மறித்து வந்து நின்றவன், “என்ன பெரிசு பேச்செல்லாம் மரியாதை இல்லாம வருது” என்று ஒரு மார்க்கமாக கேட்க,
அவனை முறைத்த ராமன், ” நீ முதல்ல மரியாதையா பேசுடா.. நான் யார் தெரியுமா சென்னை உயர்நீதிமன்றத்தில் என் பேரை சொன்னா ஜட்ஜே பம்முவாரு.. நீ என்னையவே பெருசுன்னு சொல்றியா.. மரியாதையா இங்க இருந்து போய்டு.. இல்லை பப்ளிக் நியூசன்ஸ் கேஸ்ல தூக்கி உன்னை உள்ள போட்டிடுவேன்” என்று அவனை மிரட்டிவிட்டு அவர் அவனைத் தாண்டி செல்ல முற்பட,
அவரை போக விடாமல் அவரின் கையைப் பிடித்து தடுத்தவன் அவர் எதிர்பார்க்காத வகையில் அவர் கன்னத்தில் அரைந்திருந்தான்.
அவன் அடித்த அடியில் ராமன் கண்களில் பூச்சி பறக்க பொறி கலங்கிப் போய் நின்றிருந்தார்.
அப்போது அங்கு தன் பைக்கில் வந்த பரமசிவன் கண்களில் இந்த காட்சி பட, அந்த நொடி இருவருக்குமிடையே இத்தனை நாள் இருந்த மனக்கசப்பு சுத்தமாய் அவர் நினைவில் இல்லை.
அவருக்கு தெரிந்ததெல்லாம், ‘ தன் அண்ணனின் மேல் எப்படி ஒருவன் கை வைக்கலாம்.. வைத்த அவன் கையை உடைக்காமல் விடக்கூடாது ‘ என்று அவரின் உள்மனம் குரல் கொடுக்க, அவரின் முகம் கோபத்தில் சிவக்க , கை முஷ்டிகள் இறுகியது.
ரௌத்திரத்துடன் ராமனை அடித்தவனை நெருங்கிய பரமசிவன் அவன் கன்னத்தில் தன் முழு பலத்தையும் திரட்டி ஒரு அடி கொடுக்க, அவனோ கொசு கடித்ததைப் போல் கன்னத்தை துடைத்துக் கொண்டு, ” எவன் அவன் இந்த பீட்டர் மேலேயே கை வச்சது??” என்று கடுப்புடன் பரமசிவனிற்கும் ஒரு அடியை பார்சல் செய்தவன்,
” ரெண்டு பெருசுங்களும் ஒழுங்கா இங்க இருந்து ஓடிருங்க.. சாகப்போற வயசுல என் கையால அடிவாங்கி பரலோகம் போகாம வீடு போய் சேருற வழியை பாருங்க” என்று இருவரையும் எச்சரித்தவன் ஒரு போன் அழைப்பு வரவும் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
அவன் அடித்த அடியில் பரமசிவனின் கடவாய்ப் பல் அவர் கையோடு வந்துவிட, பாவமாய் அவர் பல்லை வெளியில் எடுத்து பார்த்துக் கொண்டிருக்க,
அப்போது அவர் தோளில் ஆதரவாய் ஒரு கரம் விழுந்தது.
யாரது என்று அவர் பக்கவாட்டாய் திரும்பி பார்க்க, ராமன் தான் கண்களில் கனிவுடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தார்.
ராமனைக் கண்டவுடன் தான் பரமசிவனிற்கு ‘ அவருக்காக துடித்து அந்த முரடனை அடிக்கப் போய் தான் அடி வாங்கியது ‘ நினைவில் எழ, ” அச்சோ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டோமோ.. இவர் வேற என்ன நினைப்பார் நம்மளைப்பத்தி” என்று அவர் ராமனைக் காண சங்கோஜப்பட்டு குனிந்து கொள்ள,
” என் மேல அவளோ பாசமாடா பரமா??” என்று அன்பும் ஆச்சரியமும் கலந்த குரலில் ராமன் வினவ,
பரமசிவன் என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டு, ” எவனோ ஒருத்தன் உங்க மேல கையை வச்சா நான் கையை கட்டி வேடிக்கை பார்ப்பேண்ணு நினைச்சிங்களா??நமக்குள்ள ஆயிரம் இருந்தாலும் என் அண்ணனை யாரும் எதுவும் சொல்ல விட மாட்டேன்” என்று அவர் கூற,
அந்த நொடி இருவருக்குமிடையில் இருந்த திரை விலக, மனதுக்குள் புதைத்து வைத்திருந்த பாசம் அவர்களையும் மீறி வெளியே வந்து விட, பரமசிவனை தாவி அணைத்துக் கொண்ட ராமன், ” என்னை மன்னிச்சிடுடா பரமா.. இத்தனை வருஷமா ஏதோ சில்லறை சண்டையை மனசுல வச்சுக்கிட்டு உன்னை ரொம்ப கஷ்டபபடுத்திட்டேன்” என்று ராமன் தன் ஈகோவை தூக்கி எரிந்து விட்டு தன் தம்பியிடம் மன்னிப்பு வேண்ட,
” அச்சோ என்ன அண்ணே நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு .. நான் தான் அண்ணே பாவி.. என்னை தூக்கி வளர்த்த தெய்வத்துகிட்டயே கோபத்தை காட்டி இத்தனை வருஷம் ஒதுக்கி வச்சிட்டேன்.. என்னை மன்னிச்சிடு அண்ணே” என்று கரகரத்த குரலில் பரமசிவன் மன்னிப்பு கோற,
இருவரும் அதன் பின் மாறி மாறி மன்னிப்பு வேண்டி தங்களின் பாசமழையை பொழிந்து தள்ளியதில் தேனியில் வெள்ளம் வராதது அதிசயம் தான்.
” அப்பறம் என்னாச்சு??” என்று கதை கேட்பதைப் போல் சீதா அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக வினவ,
” ஹம்ம் அடுத்து என்ன ‘ நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை .. தன்னைப்போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய்ப்பிள்ளை ‘ அப்படின்னு பாடிகிட்டே இங்க வந்துருப்பானுங்க.. இவனுங்களை பத்தி தெரியாது” என்று மதுரம் நீட்டி முழுக்க,
‘ நீங்க இவளோ லூசுண்ணு தெரிஞ்சிருந்தா முன்னாடியே உங்களை ஆள் வச்சு கூட அடிச்சு ஒன்னா சேர்த்துறுப்பேனேடா.. இது தெரியாம இருபது வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேனே.. ஒரே அடில இந்த லூசுங்களை ஒன்னு சேர்த்த அந்த புண்ணியவான் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் ‘ என்று தன் மனதோடு மட்டும் கூறிக்கொண்டார் மதுரம்.
அதன்பின் அந்த சகோதரர்கள் இருவரும் தங்களின் இத்தனை வருட பிரிவு துயரை ஈடுகட்ட பாசமழையை பொழிய, மற்றவர்கள் அனைவரும் இவர்களின் அலம்பல் தாங்க முடியாமல் அங்கிருந்து கிளம்பி தத்தம் வேலையை கவனிக்க சென்றனர்.