Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின்னோடு தமியனாய்

நின்னோடு தமியனாய் 1

அத்தியாயம் 1

அழகான காலைப் பொழுது.பனித் துளிகள் புல்களின் மேல் மொட்டு மொட்டாக மின்னிக் கொண்டிருந்தது. மெல்லிய சாரல், காற்றோடு கலந்து மண்ணின் வாசனையை பரப்பியது.

பச்சை போர்வையை போர்த்தியது போன்று சுற்றிலும் தேயிலைகள்.மேலும் அதன் அலாதியான நறுமணம் வேறு.

இந்த அழகான நிகழ்வுகளுக்கு இடையில் ஆறு அடி ஆஜானுபாகுவான மாநிறமுடைய ஆண்மகன்,பூபதி.



Advertisement

அவன் அருகில்  உலகத்தில் உள்ள மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தாற் போல பால் நிறமுடைய ஐந்தரை அடி மாது, பிருந்தா.

இருவரும் ஒருவருக்கு மற்றொருவர் என படைக்கப்பட்டிருப்பதை போல அவ்வளவு அழகான ஜோடிப். பொருத்தம். காண்பவர் கண்கள் எல்லாம் இவர்கள் மேல்தான்.அதையெல்லாம் இவர்கள் இருவரும் கண்டால் தானே..

பழமையான நீலக் குறிஞ்சி மரத்தின் அடியில்,பிருந்தா மெல்ல பூபதியை அணைத்து நிற்க, அவன் சற்றுக் குனிந்து அவள் இதழை அணுகிய அந்த நிமிடம்…அவள் மூச்சு அவன் மூச்சோடு கலந்தது. குறிஞ்சி மலர்கள் ஒவ்வொன்றாக அவர்கள் மீது விழுந்தது.

Advertisement

ஃபோன் வைப்ரேட் ஆக தூக்கத்தில் இருந்து விழித்தவன். இதழ்களில் குறுநகை பரவ ‘ச்சை கனவா?’ என சலித்துக் கொண்டே ஸ்கிரீனை பார்த்தான். அதில் ‘லவ்பக்’என சிவப்பு நிற ஹார்ட்டின் உடன் ஒளிர்ந்தது.

Advertisement

நைட் குடித்த ‘ஜானி வாக்கர்’ பிராண்டு வேறு தன் வேலையை காட்ட, தலையில் கை வைத்தபடி,தன் குறுந்தாடி மெல்ல அசைய, முகம் முழுவதும் மலர்ந்தவாரே ஃபோனை எடுத்தான்.

சொல்லு டியர்..

‘இன்னும் ஒன் ஃபிப்டி டேஸ் இருக்கு நம்ம மேரேஜ்க்கு’ என்றாள் பிருந்தா

Advertisement

நீ நாட்களைதா எண்ணிட்டு இருக்கே, ஆனா நான் ஒவ்வொரு செகண்ட்டையும் எண்ணிட்டு இருக்கே.

அந்தப் பக்கம் மெல்ல சினுங்கலும், சிரிப்பும் கலந்தவாறே,” ஒகே டுடே வாட் பிளான்?” என்ற கேள்வி வந்தது

ஃபேக்டரியே ஒரு விசிட்.அப்பறோம் நேரா என் செல்லக்குட்டி முன்னாடி வந்து நிக்க போறே

சரி.நானும் ஹாஸ்பிடல் ஒரு விசிட் பண்ணிட்டு வந்தறே.

ஸ்பாட்?

வழக்கமா மீட் பண்றே பார்க்

மிஸ் யூ டியர்

மீ டூ டியர்.

பூபதி- வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணம் கொண்டவன்.எதை பற்றியும் கவலை இல்லாது தன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவன்.
கண்களில் ஒரு தீட்சண்யம். அவன் குடும்பத் தொழிலை தானே எடுத்து நிர்வகிக்க ஆரம்பித்த பின்,அது எவ்வளவு சிகரத்தை அடைந்து நிற்கிறது என்ற கர்வத்தால் வந்தது.

இருபத்தி ஏழு வயதில் தான் அடைந்த உயரத்தை நினைத்து அவ்வளவு பூரிப்பு அவனுக்கு.

பிருந்தா- மருத்துவர். பேரழகான புத்திசாலி மருத்துவர்.வெண்ணை தடவிய தேகம். அழுத்தமான கண்கள்.பெண்கள் கூட  ஒரு நிமிடம் நின்று ரசித்து செல்லக்கூடிய அளவிற்கு டையட் கடைபிடித்து உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளாள்.
இருபத்தி ஐந்து வயதுடைய அழகுப் பதுமை.

பூபதியின் தங்கை ஐஸ்வர்யாவின் தோழிதான் பிருந்தா. அடிக்கடி தோழி  வீடு வர காதல் தீ இருவருக்குள்ளும் பற்றிக் கொண்டது. பின் பெற்றோரிடம் தங்கள் காதலை சொல்லி நிச்சயமும் முடித்து விட்டனர். இன்னமும் நூற்றி ஐம்பது நாட்களில் திருணம்.

கொடைக்கானல் நகரத்தின் சலசலப்பை விட்டு விலகி, இயற்கையின் மடியில் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு அமைதியான கிராமம்தான் கூகல். அது சாதாரண கிராமம் இல்லை… மலைகளின் இதயத்திலே பிறந்த ஒரு ரகசிய உலகம்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும்,அந்த ஊர் ஒருவித மாயையை கொண்டு போவது போல் இருந்தது. நகரத்தின் சத்தம் மெதுவாக மறைந்து, பசுமை நிறைந்த காடுகள், மந்தமான பனி, குளிர்ந்த காற்று இவை எல்லாம் அந்த ஊரின் வரவேற்பு.

அடர்ந்த காடுகள் சூழ்ந்த மலைச்சரிவுகளின் நடுவில், அமைதியாக விரிந்திருந்தது கூகல் ஏரி. காலையில் பனித்துளிகள் அதன் மேல் விழுந்து,சூரிய ஒளியில் மின்னும் போது,அது ஒரு கனவுப் படம் போல தெரியும்.அதற்கருகில் விழும் நீர்வீழ்ச்சி, அதன் சத்தத்தால் அந்த அமைதியையே இசையாக மாற்றியது.

அங்கே வாழும் மக்களின் வாழ்க்கையும் இயற்கையைப் போலவே சுத்தமானது. பூண்டு, மிளகு,காபி,கேரட்,
முள்ளங்கி என மண்ணோடு சேர்ந்து வாழ்ந்து வந்தனர், அங்கு வசிக்கும் மக்கள். அவர்கள் சிரிப்பில் கூட மலைகளின் குளிர் இருந்தது.

நகர வாழ்க்கையை மறந்து, இயற்கையோடு பேசிக்கொள்ள விரும்புபவர்களுக்கு, கூகல் ஒரு இடம் அல்ல… ஒரு அனுபவம்.மலைப் பாதைகளில் நடந்தால்,ஒவ்வொரு அடியிலும் கதைகள் கேட்கும். பறவைகளின் குரல், காற்றின் இசை, மரங்களின் நிழல் எல்லாமே ஒன்றாக சேர்ந்து ஒரு கவிதை எழுதினது போல இருக்கும் . இவ்வளவு அழகியலை கொண்ட கூகல்தான் பூபதியின் ஊர்.

தந்தை விஸ்வநாதன் பரம்பரை பணக்காரர் இல்லை.தன் உழைப்பால் முன்னேறியவர்.தாய் விசாலாட்சியின் குடும்பம் பணக்கார வர்க்கம்.அவரின் தந்தை விலங்குகளின் தோலை பதப்படுத்தி சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்தார்.

பணம் இருந்த அளவு புத்தி இல்லை. அதனால் தனக்குப்பின் தன் மகளையும், சொத்துகளையும் பாதுகாக்க,பாசமும் அதே சமயம் புத்திக் கூர்மையும் உடைய மணமகன் வேண்டும் என அலசி ஆராய்ந்து, ஐம்பது பவுன் நகை, தேயிலை தோட்டம், கூடவே லெதர் ஃபேக்டரியையோடு விஸ்வநாதனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.

திருமணத்திற்குப் பிறகு விசாலாட்சியின் உதவியோடு விஸ்வநாதன் தன் புத்திக் கூர்மையால் அதை சற்று விரிவுபடுத்தினார். விசாலாட்சி குடும்ப நலனை பெரிதாக எண்ணுபவர்.குடும்ப தலைவி என்றாலும், தங்கள் ‘விவி நேசனல் லெதர் ஃபேக்டரி’யின் நிர்வாகம் அத்துபடி அவருக்கு.அந்த அளவிற்கு நிர்வாகத் திறனை அவருக்கு விளக்கி இருந்தார் விஸ்வநாதன்.

தன் தந்தை சிறிய அளவில் நடத்தி வந்த வியாபாரம்,இன்று இவ்வளவு பெரிதாக வளர்ந்து நிற்க காரணம் விஸ்வநாதனின் அறிவுதான் என்பது மனதில் உரைத்தாலும்,அதற்கு காரணம் தான் கொண்டு வந்த சீதனம் தானே என்ற மமதை அவருக்கு எப்போதும் உண்டு. அவரைப் போலவே மகள் ஐஸ்வர்யாவும்…

தூரத்து உறவினரான விக்ரமை திருமணம் செய்து கொண்டாலும், மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவனை வீட்டோட மாப்பிள்ளையாக அழைத்து வந்து விட்டாள்.இருந்தும் கணவனின் தேயிலை தோட்டத்தை வீட்டில் இருந்தே நிர்வகித்து வருகிறாள்.திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் இன்னமும் குழந்தை இல்லை.

தாய்,மகள் இருவரின் ஆதிக்கம் எல்லாம் மற்றவர்களிடம் தான், விஸ்வநாதனிடமும் பூபதியிடமும் தங்கள் வேலையை காட்ட மாட்டார்கள். ஏனெனில் அவ்விருவரும் இல்லையெனில் தாங்கள் செல்லாக் காசு என்பது நன்றாகவே தெரியும் இருவருக்கும்.தந்தையைப் போலவே மகனும் இன்று வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப  லெதர் ஃபேக்டரியை இன்னும் சற்று விரிவுபடுத்தி இருந்தான்.

பிருந்தாவை பார்க்க வருவதாக சொல்லியபின்,இன்னமும் படுக்கையில் கிடக்க மனமில்லை. ராத்திரி குடித்த குடி வேறு எழுந்திருக்க விடவில்லை.

லேசான தலை சுற்றலுடன் குளித்து வந்தான்.ராயல் பளு கலர் சட்டையும், க்ரீம் கலர் பேண்ட்டும் அணிந்து கொண்டான். இடக்கை ஃபுல் ஹேண்ட் சட்டையை மடித்து விட்டவாறே தன்னறையிலிருந்து மாடிப்படி வழியே ஒய்யாரமாக கீழே வந்தவன்.

தாய்,தந்தை வாக்குவாதத்தை கேட்ட வாறே பூஜை அறையினுள் நுழைந்தான்.
பிரமாண்டமான சிவலிங்கம் அவனை வரவேற்றது.

என்னதான் ஏழு தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து, பெயர்,புகழ் இவையெல்லாம் இருந்தாலும்,இந்த சிவலிங்கத்தின் முன் நிற்கும் போது அவன் உணர்ந்து கொள்வது, ‘தான் ஒன்றுமில்லாதவன். இந்த வாழ்வு அந்த ஈசன் இட்ட பிச்சை. இறுதியில் இவ்வுலக வாழ்வு முடிந்ததும் அவனில் சரணாகதி அடைய வேண்டும்’ என்பதே அவனின் எண்ணம்.

அந்த லிங்கம் முன் தன் சிரத்தை குனிந்து வணங்கினான்.பின் சந்தனத்தை குழைத்து நெற்றியில் பட்டை இட்டுக் கொண்டு, பெற்றவர்களின் வாக்குவாதத்திற்கு தீர்ப்பு சொல்ல வந்தான்.

என்ன சத்தம்?

இங்க பாரு ‘பூவ்வு’ இன்னைக்கு  என் தங்கச்சி பொண்ணு சீமந்தம்,இவரு வரலேனு சொல்லாரு. ஐஸ்உம் வரலேனு சொல்றா- விசாலாட்சி

ஏங்கப்பா அதான் சித்தி எல்லாரையும் கண்டிப்பா வரனுனு சொல்லிட்டு இல்ல போயிருக்காங்க.

ஆமா பூவ்வு, இல்லைனு சொல்லுலே. இன்னைக்கு நம்ம ஃபேக்டரிலே வேலை செய்றே சுந்தரத்தோட புள்ளைக்கு கல்யாணம்.நீங்க எல்லாரும் வளைகாப்புக்கு போங்க,நான் கல்யாணத்துக்கு ஒரு எட்டு போய் தலையே காட்டிட்டு வந்தறேன்.

“இவர்களோடு போனால் எப்படியும் இரவாகிவிடும்,அப்பறோம் எங்க போய் பிருந்தாவை பார்ப்பது”என அவனே முந்திக் கொண்டான்.

அப்பா நீங்க எல்லோரும் வளைகாப்புக்கு போங்க நான் நம்ம ஃபேக்டரியே பார்த்துட்டு,அப்படியே சுந்தரம்  பொண்ணோட கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தறேன் என்றான்.

விசாலாட்சிக்கும் அதுதான் சரியெனப்பட்டது.”சரி நாங்க கிளம்பறோம், நீ சீக்கிரமா வா” என கிளம்பி விட்டனர்.

வேலையாள் காலை உணவு வைக்க, இடது கையில் ஃபோனை பிடித்த படி சாப்பிட ஆரம்பித்தான்.

அப்போதுதான் ஐஸ்வர்யாவின் கணவன் விக்ரம், அங்கிருந்த வேலையாளிடம் ஐஸ்வர்யாவிற்கு ஸ்ட்ராங்காக காபி போடச் சொல்லி, டேபிள் மீதிருந்த ஆப்பிளை எடுத்து கொறிக்க ஆரம்பித்தான்.

இவன் சத்தம் கேட்ட பூபதி, ஃபோனில் இருந்த தன் கவனத்தை திருப்பி, ஏன் நீங்க ரெண்டு பேரும் வளைகாப்புக்கு வரலே? என கேட்டான்.

“அது வந்து…..நாங்க அங்க போனா,நீங்க எப்போ குழந்தை பெத்துக்க போறீங்கனு கேப்பாங்க.
அதுமட்டுமல்ல அந்த வளைகாப்பு பண்ற பொண்ணை நம்ம ஐஸ்ஸுக்கு சுத்தமா புடிக்காதாமே. அதான் நாங்க போல” என எல்லாவற்றையும் உளறிக் கொட்டினான்.

என்னதான் தன்னிடம் அவளின் அகங்காரத்தை காட்டா விட்டாலும், தங்கையின் குணத்தை அறிந்தவன்தான்.
ஆனால் மனதில் உள்ளதை எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் பிறரிடம் கூறும் விக்ரமை நினைத்து சற்று வருத்தம் அவனுக்கு.

பூபதி,பிருந்தா காதல் விஷயம் தெரிந்த உடன்,எங்கே ஐஸ்வர்யாவும் இவர்களை போல வந்து நின்று விட்டால்..குடும்ப மானம் போய்விடும் என அவசர அவசரமாக..நல்ல வசதியான குடும்பம் என விசாலாட்சி விடாப்பிடியாக நின்று விக்ரமை மணமுடித்து விட்டாள்.

விக்ரமிற்கு வயதிற்கு உரிய பக்குவம் துளியும் இல்லை. கரப்பான் பூச்சியை பார்த்தால் கூட பயப்படும் ரகம்.நல்ல சாப்பாட்டு ராமன். ஐஸ்வர்யா சாதாரணமாக கூறுவதை எல்லாம் அவனின் அம்மாவிடம் குழந்தை போல ஒப்பிக்க.. மாமியார் மருமகள் போர்க்களம் உண்டானது.

புகுந்த வீட்டில் விக்ரமால் ஐஸ்வர்யா பட்ட அவமானங்களும் கஷ்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. அவளுக்கு ஏதோ குறை அதனால்தான் குழந்தை பிறக்க வில்லை என சதாகாலமும் அவளின் மாமியார் படுத்தி எடுத்தார்.

இவளும் சளைத்தவள் இல்லையே அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலாக தன் முழு உடல் பரிசோதனையையும் பிருந்தா மூலம் எடுத்து வந்து விக்ரமின் அம்மா முகத்தில் விட்டெறிந்தாள்.

மகனை பெற்றவர் இறங்கியா போவார்?
“ஓ!அப்போ எம்மகன் மேல குறை சொல்றையா? இனிமே நீ இந்த வீட்டுக்கு தேவை இல்ல.உன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி நான் என் பையனுக்கு நல்லா அடக்கமான பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார்.

மாமியார் சொன்னதை இவள் செயல் வடிவம் ஆக்கினாள்.அந்த நிமிடமே வீட்டிற்கு வந்தவள் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்ப அனைவருக்கும் அதிர்ச்சி. பின் பஞ்சாயத்து பேசி மகளையும், மருமகனையும் வீட்டோடு அழைத்து வந்து விட்டார் விஸ்வநாதன்.சும்மா வெல்லாம் இல்லை, விக்ரமிற்கு சேர வேண்டிய சொத்துக்களோடுதான்.. இல்லை என்றால் விசாலாட்சி வீட்டோட மருமகனை ஏற்றுக் கொள்வாரா என்ன?

பிருந்தாவையே அவளது சொத்து மதிப்பு,டாக்டர் தொழில் இவற்றை யெல்லாம் கணக்கிட்டுதானே தன் மகனுக்கு மணமுடிக்க ஏற்றுக் கொண்டாள்.

இந்த நிகழ்வுகளை எண்ணியவாறே தன் காதலால் தானே, ஐஸ்வர்யாவின் வாழ்வு இப்படி ஆனது.கொஞ்சம் பொறுத்திருந்து அவளுக்கு ஏற்ற நல்ல வரனை பார்த்திருக்கலாம் என்ற யோசனையோடே ஃபேக்டரிக்கு வந்து சேர்ந்தான் பூபதி.
— தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!