“ஏட்டி இன்னும் என்ன பண்ணிகிட்டு இருக்கவ?? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரமாச்சு போ போய் புள்ள கிளம்பிருச்சான்னு பாரு.. ஆஹ் சொல்ல மறந்துட்டேன் கட்டிலு மேல காசு மாலை எடுத்து வச்சிடுக்கேன் அந்த குட்டி கண்ணுக்கே தெரியாத அந்த செயினை போட்டுட்டு வந்து நின்னுற போகுது இதை போய் கொடு என்ன.. அப்பறம் உனக்கும் ரெட்ட வட சங்கிலியை எடுத்து வச்சுடுக்கேன் அதை போட்டுட்டு வந்து சேரும் சபைக்கு.. மச மசன்னு நிக்காம போய் வேலையைப் பாரு.. எனக்கு ஆயிரத்தெட்டு வேலை கெடக்கு நகரு நந்தியாட்டம் நிக்காம” என எதிரிலிருப்பவர் பேச வாய்ப்பே தராமல் பட பட பட்டாசாய் பொரிந்து விட்டுப் போன தன் கணவனை முறைத்துக் கொண்டு நின்றார் காமாட்சி.
“இவரா வந்தாரு வாய்ப்பாட்டை ஒப்பிக்கிற மாதிரி ஒப்பிச்சாரு போய்ட்டாரு.. பொண்ணு பார்க்க வாரதுக்கு இம்புட்டு அலப்பறையா இவரே இப்படி பண்ணா இவர் பெத்த அந்த புண்ணியவதி என்ன பண்ணி வச்சிருக்காளோ…. இவங்க மத்தியில என்ன பெத்து போட்டுட்டு போய்ட்டியே காத்தாயி..” என புலம்பியவர் அடுத்து தான் பெத்த மகள் என்ன செய்து வைத்திருக்கிறாளோ என பார்த்து வர சென்றார்.
Advertisement
Advertisement
“ஹேய் அபி இந்த யெல்லோ சுடிதார் ஓகே வா இல்லை அந்த பச்சை லெஹெங்கா ஓகே வா?? ச்சே எதுவுமே செட் ஆக மாட்டேங்குதே ” என தன் முன் கிடந்த மெத்தையில், அலமாரியில் கிடந்த அனைத்து உடைகளையும் பரப்பி வைத்துவிட்டு அதன் முன் சோகமாக தன் வெண்டை விரல்களை ஆப்பிள் கன்னங்களுக்கு முட்டு கொடுத்து உட்காந்திருந்தாள் அவள் – அஞ்சலி!!!
அறை இருந்த கோலம் கண்டு ஏகத்துக்கும் கடுப்பான காமாட்சி, தன் மகளின் முதுகில் பொத்தென்று ஓர் அடியை வைத்தவர் , “அங்க உங்க அப்பாரு மாப்பிள்ளை வீட்டுக்காரக ஏதோ வாசலுல வந்து நின்னுட்ட மாதிரி அந்த பர பரக்குறாக நீ என்னடான்னா பரக்காவெட்டியாட்டம் துணியை போட்டு வச்சுட்டு கெனா கெண்டுக்கிட்டு இருக்கவ .. போ போய் வெரசா அந்த அரக்கு நிற பட்டு சீலையை சுத்திக்கிட்டு வா இல்லை உங்க அப்பாரு ஆடிப்போடுவாரு.. இந்த நகையெல்லாம் போடுடி கண்டதையும் போட்டு வச்சு அவர்கிட்ட என்னை ஏச்சு வாங்க வச்சுப்புடாத” என் கத்தியவர் அங்கு இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் சின்ன மகளைப் பார்த்து, “ஏட்டி என்ன இங்க கரகாட்டமா ஆடிகிட்டு கெடக்காவ கண்ணை சிமிட்டாம பார்த்துக்கிட்டு இருக்கவ .. போ போய் நீயும் எதுனா நல்ல உடுப்பா போட்டுட்டு வெரசா வந்து நில்லு” என அவளையும் விரட்டியவர் அங்கிருந்து நகரப்போக
Advertisement
அவர் கைகளைப் பிடித்த அவரின் மூத்த மகள் , “ம்மா அந்த சேலையை கட்டி கட்டி டையர்ட் ஆகி போய் தான் இப்படி உட்காந்திருக்கேன்.. என்னால அதை கட்ட முடியாது வேணும்னா நான் அந்த அனார்கலி போட்டுக்கவா?? ” என தன் முட்டைக்கண்ணை விரித்து அவள் கேட்ட அழகில் சொக்கிப்போக அவர் என்ன நம் நாயகனா??
அவரோ பக்கா தமிழ் தாயைப் போல் தீயாய் அவளை முறைத்தவர், “ஏழு கழுதை வயசு ஆச்சு இன்னும் சீலை கட்ட தெரியலை .. இதுல நீ என்னத்த சென்னையில படிச்சு கிழிச்சியோ போ போய் ரவிக்கையை போட்டுட்டு வா” என அவள் மண்டையிலே கொட்டினார்.
“சேரி கட்டுறதுக்கும் சென்னையில படிக்குறதுக்கும் என்னடா சம்பந்தம்.. யூ ஆர் ரிடிகுலஸ் மம்மி.. எங்ககிட்ட மட்டும் தான் உன் வீராப்பு எல்லாம் உன் வீட்டுக்காரரை பார்த்தா மட்டும் பொட்டிப் பாம்பா அடங்கிரு..” என புலம்பிக்கொண்டே அவள் ஜாக்கெட்டை போட்டு விட்டு வர, காமாட்சியின் கைகள் ஒருபக்கம் அதன் போக்கிற்கு சேலையை கட்டி விட்டுக் கொண்டிருந்தாலும், அவரின் வாயோ மகளுக்கு அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது..
அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தவளோ மனதிற்க்குள் “அய்யோ ராமா கனடா பிரசிடென்ட்க்கு கசினா பொறக்க வேண்டிய என்னை இப்படி இந்த காமாட்சி கூட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குறியே இது நியாயமா??” என கடவுளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தாள்.
சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் நேரம் மூன்று ஆகி விட்டதை உணர்த்த மூன்று முறை அடித்து ஓய்ந்தது.
அந்த சப்தத்தில் காமாட்சியின் சப்த நாடியும் ஒடுங்க, அவசர அவரமாய் சேலையை எடுத்து அவளுக்கு சொருகி விட்டவர், ” போச்சு.. மாப்பிள்ளை வீட்டுக்காரவுக வர நேரமாய் போச்சு.. இன்னும் கிளம்பலையான்னு உன்ற அப்பாரு வீட்டுக்குள்ள தையத்தக்கான்னு குதிக்கப் போறாரு.. என்னை அவருகிட்ட ஏச்சு வாங்க வைக்கவே எனக்குனு வந்து பொறந்துருக்க பாரு.. ஒரு சீலை கட்ட துப்பில்லை.. நீயெல்லாம் கலெக்டரு ஆகி என்னத்தைப் பண்ண போறியோ” என்று புலம்பிக் கொண்டே அஞ்சலியின் தலையிலே வலிக்குமாறு கொட்டினார் காமாட்சி.
” ஷ்!! அம்மா .. நீ இப்படி கொட்டி கொட்டியே தான் நான் இவளோ குள்ளமா இருக்கேன்… நீயெல்லாம் ஒரு தாயா??” என்று அவள் தலையைத் தேய்த்துக் கொண்டே கேட்க,
தீயாக அவளை முறைத்தவர், ” இல்லைனா மட்டும் அப்படியே ஆறடிக்கு வளர்ந்து தள்ளிருப்பயாக்கும்.. உசரத்துக்கு ஏத்த வாயா பேசுற நீ.. ஒழுங்கா நகை நட்டை போட்டுகிட்டு வெரசா ரெடி ஆகி நில்லு.. நான் போய் கீழ எல்லாம் தயார் செய்யுறேன் … அபிகிட்ட பலகாரம் கொடுத்து விடுறேன் இப்பவே சாப்பிட்டுக்கோ.. அப்பறம் அவுக எப்போ கெளம்புவாகளோ அதுவரைக்கும் உனக்கு பசி தாங்காது.. இப்படி மசா மசன்னு உக்காந்துட்டு கெடக்காம எழுந்து கிளம்புற வழியைப் பாரு” என்று அஞ்சலிக்கு அறிவுறுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார் காமாட்சி.
“ஏய் தனம்!! உன் புள்ளைக்கு வேற சட்டையே கிடைக்கலையா டி.. ஏதோ வித்தை காட்டுறவன் மாதிரி கலர் கலரா போட்டுட்டு வந்திருக்கான்.. இவனைப் பார்த்தா ஒரு வெர்ட்டினரி டாக்டர் மாதிரியா இருக்கு.. இப்படி இவனைப் பார்த்தா யாரு பொண்ணு கொடுப்பா??” என்று தன் மனைவியின் காதைக் கடித்தார் பரமசிவன்.
“அதை அவன் கிட்டயே கேட்க வேண்டி தான என் காதை எதுக்கு கடிக்கிறிங்க?? என் புள்ளை எப்படி இருந்தாலும் அழகாகத் தான் இருப்பான்.. உங்களை வக்கீல்ன்னு நம்பி எங்கப்பா என்னையே கட்டி வச்சிருக்கும் போது என் புள்ளையை டாக்டர்ன்னு நம்பி பொண்ணு தராமையா போய்டுவாங்க” என்று தன் கணவனை வாரினார் தனலட்சுமி.
“அவன் கூட சேர்ந்து உனக்கும் வாய் அதிகமா போச்சு.. உங்க எல்லாரையும் வந்து வச்சுக்குறேன்” என்று பொருமிய பரமசிவன் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார்.
“என்னாது வச்சிருக்கியா?? என்னடா பரமா இது?? உன்னை நான் அப்படியா வளர்த்தேன்.. கல்யாண வயசில பையனை வச்சுக்கிட்டு ஒரு அப்பன் பார்க்குற வேலையா இது.. நம்ம குடும்ப மானமே போய்ருமே இந்த அசிங்கம் வெளிய தெரிஞ்சா.. என் மருமகளுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு” என்று பரமசிவனின் தந்தை வாசுதேவ கிருஷ்ணன் புலம்ப,
அவரின் கூற்றில் பரமசிவனிற்கு கோபம் தலைக்கேற, மற்றவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.
முன் சீட்டில் அமர்ந்திருந்த அஜய்யின் நண்பன் ஜீவா, ” என்ன அப்பாங் அஜய்க்கு பொண்ணு பார்க்கப் போறதா தான சொல்லி கூட்டிட்டு வந்தீங்க.. இப்போ நடக்குறதை பார்த்தா உங்களுக்கு சின்ன வீடு செட்டப் பண்ண ஏற்பாடு பண்றீங்க போலயே” என்று அவரிடம் கிண்டல் செய்ய,
“டேய் மூதேவி என் கோபத்தைக் கிளராம வாயை மூடிக்கிட்டு உட்காரு.. பேசுற பேச்சைப் பாரு.. எல்லாம் இவரால வந்தது.. ஒரு செவிட்டு மிஷினை வாங்கி மாட்டுனா கவுரவக் குறைச்சல் ஆய்டும்னு இப்படியே காது கேட்காம எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சு என் உயிரை எடுக்க வேண்டியது … பொண்ணு வீட்டுல போய் ஏதாவது வாயைத் திறந்தீங்க நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று ஜீவாவிடம் ஆரம்பித்து தன் தந்தையிடம் முடித்தார் பரமசிவன்.
அவர் சொல்வது கேட்காவிட்டாலும் தன்னைத் தான் ஏதோ திட்டிக் கொண்டிருக்கிறான் என்பது வரையில் புரிந்து கொண்ட வாசுதேவர், நமக்கெதற்கு வம்பு என வாயை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டார்.
” அம்மா.. திண்டுக்கல் வந்தாச்சு.. இங்கேயே சாப்பிட்டுட்டு போய்றலாமா?? ” என்று அஜய் காரை ஓட்டிக் கொண்டே கேட்க,
“மச்சான் பைபாஸ்ல வேண்டாம் .. உள்ள போனா சிவா பிரியாணி கடை இருக்கும் .. அங்க சாப்பிடலாம்.. எல்லாமே அங்க செம்மையா இருக்கும்.. அதுவும் மட்டன் சுக்கா அங்க வேற லெவல்ல இருக்கும்..” என்று நாக்கில் எச்சில் ஊற ஜீவா ரசித்துச் சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நம்ம பொண்ணை பார்த்திட்டு வந்து சாப்பிட்டுக்கலாம்.. இல்லைனா அவங்க முன்னாடி போய்டுவாங்க.. நான் அந்தாளுகிட்ட தோற்க மாட்டேன்.. வண்டியை எங்கேயும் நிப்பாட்டாம போ” என்று பரமசிவன் ஆணை பிறப்பித்தார்.
கண்ணாடி வழியாக அவரை முறைத்த அஜய், “எங்கேயும் நிப்பாட்டாம போகணும்னா நேரா பரலோகத்திற்கு தான் போவோம்.. போகலாமா???” என்று அவன் நக்கலாகக் கேட்க,
” டேய் அஜய் என்னடா இது.. நல்ல காரியத்துக்கு போகுறப்போ இப்படி அபாசகுணமா பேசிட்டு இருக்க” என்று அவனை அதட்டினார் தனம்.
“பின்ன என்னம்மா .. ஓட்டுறவனுக்குத் தான் தெரியும் எவ்ளோ டயர்டா இருக்குன்னு .. அவர் பின்னாடி ஒய்யாரமா உக்காந்துட்டு சும்மா நிக்காம போ சிக்காம போன்னு பேசிக்கிட்டு இருக்காரு.. நான் இவர் பேச்சை கேட்டுட்டு சாப்பிடாம வண்டி ஓட்டுனா பசி மயக்கத்தில எங்கயாச்சும் போய் லாரிகுள்ள தான் விடுவேன்.. இவர் வெட்டி வீராப்புக்கு நான் தான் கிடைச்சேனா?? நான் சாப்பிட்டு தான் வருவேன்.. அவருக்கு அவ்ளோ அவசரம்னா ஏதாவது சரக்கு லாரியை நிப்பாட்டி ஏறி போகச் சொல்லுங்க” என்று கத்தியவன் அவர் பேச்சைக் கேட்காமல் அங்கிருந்த உணவகத்தில் போய் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றிருந்தான் அஜய்.
“நல்லா எனக்குன்னு வந்து பொறந்துருக்கு .. அந்த அஸ்வத்தைப் பாரு அவங்க அப்பா என்ன சொன்னாலும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுறது இல்லை.. ஆனா இவனும் இருக்கானே.. நான் எது சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா வீம்புக்கே செஞ்சிட்டு வந்து நிக்கிறது.. டாக்டருக்கு படிடான்னு தலைப்பாட அடிச்சுக்கிட்டேன்.. கேட்டானா?? வீம்புக்குனே வெர்ட்டினரி படிச்சுட்டு வந்தான்.. இருந்தாலும் எப்படியோ தேடிப் பிடிச்சு இவனுக்கு IAS படிச்ச பொண்ணா பார்த்து வச்சா அதையும் கெடுக்குற மாதிரியே உன் மவன் நடந்துட்டு இருக்கான்.. இந்த சம்பந்தம் மட்டும் அமையாம போகட்டும் உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்.. ஒழுங்கா உன் மகனை வாலை சுருட்டி வச்சிட்டு நடந்துக்க சொல்லு” என்று தன் மனைவியிடம் எச்சரித்து விட்டு உணவகத்தின் உள்ளே சென்றார்.
“அவ்ளோ கோவமா இருக்கவரு சாப்பிடாம இருக்கணும் அப்பறம் எதுக்கு உள்ள போறிங்க??” என்று அவரை வாரிய தனமும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தார்.
“இருந்தாலும் சிவா பிரியாணி கடைக்கு போயிருக்கலாம்” என்று நொந்து கொண்டே ஜீவாவும் தாத்தாவுடன் கடைக்குள் நுழைந்தான்.
“கீதா இந்த பூவை வச்சுக்கோ அவங்க வர டைம் ஆச்சு” என்று அழகாய் தொடுத்த அந்த குண்டு மல்லிச்சரத்தை தன் மகளின் தலையில் வைத்து விட்டார் மீனாட்சி.
“அவங்க வந்துட்டு போற வரைக்கும் கொஞ்சம் பொண்ணு மாதிரி நடந்துக்கோ டா தங்கம்.. இல்லை உங்கப்பா சாமி ஆடிடுவாரு” என்று தன் மகளின் தாடையைப் பிடித்துக் கொண்டு அவர் கெஞ்ச,
அவர் கைகளை தட்டி விட்ட கீதா எனப்படும் கீதாஞ்சலி, “ம்மா சும்மா எனக்கே அட்வைஸ் பண்ணிட்டு இருக்காத.. முதல்ல நான் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு உங்ககிட்ட கேட்டேனா?? உன் வீட்டுக்காரரோட சேர்ந்து நீயும் ஆடாத..எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்.. ” என்று அவள் திடமாக மறுத்தாள்.
அப்போது கண்களில் கணலுடன் உள்ளே நுழைந்த சுந்தர பாண்டியன் கீதாவின் காதைப் பிடித்து திருகிக் கொண்டே, “+2 பாஸ் பண்ணலைனாலும் வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஏதோ பெத்த கடமைக்கு உனக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பார்த்தா ரொம்ப வாய் நீளுது.. நீ படிச்ச படிப்புக்கு உனக்கு நான் டாக்டர் மாப்பிள்ளையை பார்த்து வச்சா அவரைக் கட்டிக்க உனக்கு கசக்குதோ?? ஒழுங்கா அடக்க ஒடுக்கமா வந்து சபையில நிக்காம ஏதாவது தகிடுதத்தம் பண்ணனும்னு நினைச்ச தோளை உரிச்சு உப்புக் கண்டம் போட்டிடுவேன்.. மீனாட்சி உன் மக கிட்ட சொல்லி வை” என்று கர்ஜித்து விட்டு அவர் வெளியேற,
கீதாவோ அவர் சென்றதும் காதை குடைந்து விட்டுக் கொண்டே தன் அன்னையிடம், “நீ வேணா பாரு வர மாப்பிள்ளையை துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓட வைக்கலை என் பேரு கீதா இல்லை” என்று சவால் விட்டு விட்டு அவள் தன்னறைக்குள் சென்றுவிட்டாள்.
இருவருக்குமிடையே மாட்டிக் கொண்டு முழி பிதுங்கி நின்றது என்னவோ மீனாட்சி தான்..
” கடவுளே எந்தக் கலவரமும் இல்லாம என் பொண்ணோட கல்யாணத்தை நடத்தி வச்சிருப்பா” என்று வேண்டுவதைத் தவிற அவருக்கு வேறெந்த வழியும் இல்லாததால் கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டு அவர் தன் வேலைகளை கவனிக்கச் சென்றார்.
கடவுளும் அவரின் வேண்டுதலை பரிசீலித்து விட்டு ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தன் திருவிளையாடலை தொடங்கினார்.