நவீனா ராஜஸ்தான் சென்று இரண்டு நாள்கள் ஆகியிருந்தது. அவள் பொற்செல்வனின் கண்காணிப்பில் இல்லை என்று தேவராஜிற்கு நேற்றுதான் தெரிய வந்தது. அவளின் அன்னை வீட்டில் இருக்கிறாளா என்று விசாரித்தான். அங்கும் இல்லை என்பது தெரியவே, பொற்செல்வனை காண நேற்றிலிருந்து காத்திருந்தவன், இன்று அலுவலகம் வந்திருந்தான்.
“வாங்க சார், ஆஃபீஸ் வந்துருக்கிங்க” என ஆச்சர்யத்தோடு வரவேற்றான் ராகுல்.
தேவராஜ் அழைக்க, அழைப்பு செல்லவில்லை “நாட் ரீச்சபிள்னுதான் வருது, உன் மொபைல்லயிருந்து கால் பண்ணு” என்றான்.
Advertisement
ராகுல் அழைக்க, தற்போது அவனுக்கும் அப்படித்தான் வந்தது. “முக்கியமான மீட்டிங்கா இருக்கும், அதனால ஆஃப் பண்ணியிருப்பார் சார்” என்றான்.
“நெக்ஸ்ட் டைம் போன் செய்தான்னா எனக்கு கால் பண்ண சொல்லு”
“சரிங்க சார்”
Advertisement
“லன்ச்சுக்குள்ள அவன்கிட்ட நான் பேசியாகனும்” என்றவன், “எமர்ஜன்ஸினா என்ன பண்ணுவ? வேற நம்பர் எதாவது இருக்கா? அவன் எந்த ஹோட்டல்ல தங்கியிருக்கான்? ஹோட்டல் நம்பர் இருக்கா?” என்றான்.
தேவராஜிற்கு வீட்டிற்கு செல்லவே மனம் வரவில்லை. எங்கு சென்றிருப்பாள்? தவறான முடிவேதும் எடுத்திடுவாளோ? இவன் ஏன் அவளை விட்டான்? என எண்ணங்கள் பலவிதமாய் இம்சித்தது.
பொற்செல்வன் சொல்படி தன்னை கட்டி வைத்து விசாரித்தது இவன்தான், ஆக ராகுலும் பொற்செல்வனும் நெருங்கிய நண்பர்கள், இவனுக்கு ஏதாவது தெரியுமா? இவனிடம் விசாரிக்கலாமா? என்ற யோசனையில் அவ்விடத்திலேயே நடந்து கொண்டிருந்தான்.
“சார் நான் போகட்டுங்களா? ஃபேக்டரிக்கு போய் பார்க்க சொன்னார்”
“இங்க எப்போ வருவான்?”
“கன்ஃபார்மா தெரியலைங்க சார், ஆனா ஒன் வீக் பக்கம் ஆகிடும்னு சொன்னார்”
“ஒரு வாரமா?” என அதிர்ந்தவன், “அவன் கால் பண்ணினா உடனே எனக்கு கால் பண்ண சொல்லு” என்று கிளம்பினான்.
மாலை நான்கு மணிபோல் தேவராஜ் மீண்டும் அலுவலகம் வர, “செல்வா சார்கிட்ட பேசுனிங்களா சார்?” என்றான்.
தேவராஜ் முறைக்கவே, “நான் சொன்னேன் சார், ஓகே நான் பார்த்துக்கிறேனு சொன்னாரே” என்றான்.
‘ஓ… வேணும்னே அவாய்ட் பண்றானா?’ என தேவராஜ் நினைக்க, பொற்செல்வனிடமிருந்து அழைப்பு வந்தது. ஏற்றவன், “எங்கடா இருக்க? எப்போ வருவ?” என்றான்.
“நான் வர பத்து நாள் ஆகும், கால் பண்ண சொல்லியிருந்திங்களாம், என்ன விசயம்ண்ணா?”
“செல்வா, தமிழ்லயே நாலு வார்த்தை சேர்ந்தாப்புல பேச மாட்டாடா, ராஜஸ்தான்லபோய் என்ன பண்ணப்போறா? அதுவும் சேல்ஸ்கேர்ளா…” என புலம்பினான்.
“அண்ணா ப்ளீஸ், நானே ரொம்ப டிப்ரஸன்ல இருக்கேன், உங்க பிரச்சனையையும் என்கிட்ட சொல்லி என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்று இணைப்பை துண்டித்தான்.
வேதனையோடு காட்டிலேயே சுற்றிக்கொண்டிருந்து இரவு ஒன்பது மணிபோல் வீட்டிற்கு வந்தான். தனக்கு பரிமாற வேண்டி அன்னை அமர்ந்திருந்தார் மேசைக்கு அருகில்.
“நான் போட்டு சாப்பிட்டுக்கிறேன், நீ போய் படும்மா”
“கல்யாணம் ஆன நாள்லயிருந்து இது வேணும்னு ஒன்னு கேட்டதில்ல, நல்லநாள், விஷேசத்துக்கெல்லாம் நானா எடுத்துக்கொடுக்கிறதை உடுத்திக்குவா. யார் மேலயும் எந்த குறையும் சொன்னதில்ல, அவளா கேட்டது விவாகரத்து மட்டும்தான். அந்தபுள்ள இந்த வீட்டை விட்டு போனதுலயிருந்து வீடு வீடா இல்ல” என்றவருக்கு கண்ணீர் வந்துவிட, அன்னையின் வேதனையை சகிக்க முடியாமல் தேவராஜ் உள்ளே சென்றுவிட்டான்.
அன்னை சொல்வது உண்மைதான், வீட்டில் அவள் சத்தம் ஓர்நாளும் உயர்ந்து கேட்டதில்லை. திருமணமான புதிதில் நன்றாக பேச வராத ப்ரித்திகாவோடு நன்றாக பேசுவாள். ஐந்தாறு மாதம் கழித்து மகளோடு பேசும்போதும் கூட சத்தம் குறைந்துவிட்டது.
இரண்டு நாள்களாக தாய் தந்தையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான், அவர்கள் முகத்தில் அத்தனை வேதனை.
தன்னை துரத்தும் அபாயம், அவளை துரத்த வேண்டாம் என்றுதான் பிரிய நினைத்தான். விவாகரத்து தனிப்பட்டவரின் விவகாரம் அல்ல, குடும்பத்தின் நிம்மதி, கௌரவம் என்பது தற்போதுதான் புரிந்தது தேவராஜிற்கு.
நகை, உடை, பணம் என ஏதும் எடுத்துச் செல்லவில்லை என்று நவீனா வீட்டை விட்டு போன அன்றே தெரிந்துகொண்டான். நம் நினைவு அப்பொழுதுதான் வராது என்று அன்று நினைத்தான்.
ஆனால் இன்றோ… அனைத்தையும் இங்கே விட்டுவிட்டு மொழி அறியாத மாநிலத்திற்கு எதற்கு சென்றாள்? அன்றாட செலவிற்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் எப்படி பத்தும்? படிச்சிருக்கதானே? படிப்புக்கேத்த வேலை பார்த்துட்டு, உன் அப்பாம்மாவோட நிம்மதியா இருக்காம, சேல்ஸ்கேர்ள் வேலைக்கு எதுக்கு போன? ஏன்டி இப்படி செய்த? என சுவற்றில் குத்தினான் வேதனையாக.
தாலிச்சங்கிலியை கழற்றிக்கொடுத்த போது இருந்த நவீனாவின் முகமே கண் முன் நின்றது. இந்த காலத்தில் சின்ன சின்ன விசயங்களுக்கே விவாகரத்து வரை செல்லும் தம்பதியினர் இருக்க, ஒருமுறை கூட சிரித்துப் பேசியிராத என்னிடம் என்ன கண்டுவிட்டாய்? எதற்கு அத்தனை அழுகை? விட்டது சனியன் என நிம்மதியாக சென்றிருக்கலாமே என அவளையே நினைத்திருந்தான்.
“தேவா, சாப்பிட வா” என அமிர்தவள்ளி குரல் கொடுக்க, வெளியே வந்தவன், “நீங்க சாப்பிட்டிங்களாம்மா?” என்றான்.
இப்படியெல்லாம் அக்கறை காட்டாத மகன், முன்பென்றால் மகிழ்ந்திருப்பார், தற்போது அந்த நிலையில் இல்லை, “ம்… சாப்பிட்டேன், இல்லைனா உன் அப்பாவை சாப்பிட வைக்க முடியாது, நீ உக்காரு” என்று பரிமாற ஆயத்தமாக, “ம்மா நான் வெளில சாப்பிட்டேன், எனக்கு வேண்டாம்” என்றான்.
“உன் வயித்துல என்ன இருக்குனு உன் முகம் சொல்லுது, உக்காருடா” என்று பரிமாறினார்.
உண்டு அறைக்குள் சென்றான். நவீனாவின் படுக்கையைப் பார்த்தான். அங்கே படு என்று முதலிரவில் சொன்னதுதான். இவ்வீட்டை விட்டு கிளம்பும்வரை அதுதான் அவள் படுக்கும் இடம்.
ஆனால் தான் அறையில் இல்லாதபோது தன் படுக்கையில் அமர்வதும் படுத்திருப்பதையும் அறிவான். அவளின் தலையில் பூ இருக்கும் நாளெல்லாம் அவனின் மெத்தையில் பூவாசம் மணக்கும்.
பூ வைக்கும் நாளில் அறைக்கதவை தட்டினால் இரண்டு நிமிடம் கழித்தே கதவைத் திறப்பாள். உள்ளே வந்தால் உதிர்ந்த பூக்கள் கதவிற்கு பின்னே இருக்கும். தனது மெத்தையில் உதிர்ந்த பூக்களை அவசரமாக எடுத்து போட்டிருப்பது அப்பட்டமாக தெரியும்.
இப்படியாக நவீனாவின் அன்றாட வாழ்வின் பல நினைவுகள் மனதில் சுழல, அவளுக்கும் தன்னை பிடிக்காமல் போயிருந்தால் பரவாயில்லை, கணவனெனும் உரிமையை கொடுக்காதது மட்டுமல்லாமல் அவளின் உணர்வுகளோடு விளையாடியிருக்கிறோமே என்று மிகுந்த வேதனையடைந்தான்.
எத்தனை வருடங்கள் கழிந்தாலும் அவள் தன்னை மறக்கப்போவதில்லை என்று மனம் உரைக்க, அக்கணமே அழைக்கலாமா என்று மொபைலை எடுத்திருந்தான்.
பொற்செல்வன் பேச்சை மீறி சென்றிருக்கிறாள், ஒருவேளை தன்னை மறக்க முயற்சிக்கிறாளோ? என்றும் யோசித்தான். அவளின் முயற்சி வெற்றியடைய வேண்டுமென்றால் அவளின் வாழ்வில் மாற்றம் வர வேண்டும்.
இவ்விசயத்தை பொறுத்தவரை மாற்றம் வேண்டுமென்றால் திருமணம் செய்ய வேண்டும், தன்னை மறக்க அவளை வறுத்திக்கொள்வாளே தவிர, மறுமணத்திற்க்கெல்லாம் நிச்சயம் சம்மதிக்கமாட்டாள்.
காலப்போக்கில் அது நடக்கலாம் என்றாலும் கூட, நடக்காவிட்டால் அவளின் நிலை என்னவாகும்?
வேறொருவர் வீட்டினில் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? செல்வியோடு அவளுக்கு பிரச்சனை வராதுதான். ஆனால் தற்போது அவளின் அண்ணனும் அல்லவா அவர்களோடு இருக்கிறான். ஏதேனும் மனக்கசப்பு ஆகிவிட்டால் மொழி அறியாத மாநிலத்தில் எங்கு போவாள்? என்று தோன்ற, இதோ அழைத்துவிட்டான் நவீனாவிற்கு.
அவள் அழைப்பை ஏற்காமல் போக, செல்விக்கு அழைக்கலாமா என்று நேரம் பார்க்க, இரவு பதினொரு மணியாகியிருந்தது. நாளை காலை பேசலாம் என்று மொபைலை வைத்தவனிற்கு அதிகாலை வரை தூக்கம் வரவில்லை.
மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு செல்வியோடு பேசிக்கொண்டிருந்தவள், அடுத்தநாள் காலையில்தான் மொபைலை எடுத்தாள். தேவராஜிடமிருந்து அழைப்பு வந்திருப்பதை நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் கால்மணி நேரம்வரை.
நிச்சயம் சேர்ந்து வாழவெல்லாம் நினைத்திருக்கமாட்டான், வேறு எதாவது முக்கியமான காரணமாக இருக்கக்கூடும் என்று யோசித்தவள், விவாகரத்து நாளன்று பணம் கொடுத்தானே? நாம் தற்போது ஊரில் இல்லாததால் அதை கொடுக்க நினைத்திருப்பானோ? என்று தோன்ற, பொற்செல்வனுக்கு அழைத்தாள்.
“ஹேப்பி மார்னிங் அண்ணி” என்றான்.
குரலே நல்ல தூக்கத்தில் இருக்கிறான் என்று புரிய, “இன்னும் எழுந்துக்கலையா? நான் அப்புறம் கால் பண்றேன், தூங்குங்க” என்றாள்.
“எழுந்துட்டேன், என்ன விசயமா கால் பண்ணுனிங்க?”
“அது… உங்க அண்ணன் கால் பண்ணியிருக்கார்”
“என்ன?” என மகிழ்ந்தவன், “என்ன சொன்னார்?” என்றான்.
“இல்ல, நான் செல்வியோட பேசிட்டிருந்தேன், கால் வந்தது எனக்கு தெரியாது, அட்டன் பண்ணல, இப்போ காலைலதான் பார்த்தேன்”
“எத்தனை மணிக்கு பண்ணியிருக்கார்?”
“நைட் பதினொரு மணிக்கு”
‘சூப்பர், உங்க நினைப்பு அண்ணனை தூங்க விடல’ என பொற்செல்வன் மகிழ, “திரும்ப கால் பண்ணினா என்ன பண்றது?” என்றாள்.
“நவீனாக்கா, அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க, வாங்க” என்ற செல்வியின் குரலில் சோர்வு இருக்கவே, அவளின் அண்ணன் எதாவது கேட்டிருப்பானோ? என்று யோசித்தபடி, “என்ன சமையல் இன்னைக்கு? ஆன்ட்டி சமையல் பிடிச்சிருக்கா?” என பேச்சை வளர்த்தினான்.