” வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க ரெண்டு பேரும்” என்று ஆரத்தி எடுத்து மீனாட்சி – சுந்தரம் இருவரையும் இருபத்தைந்து வருடங்கள் கழித்து தங்களின் பூர்வீக வீட்டிற்குள் வரவேற்றனர் சந்தனபாண்டி குடும்பம்.
Advertisement
சுந்தரபாண்டியனிற்கு தலையில் ஏற்பட்ட காயம் இரண்டு நாட்களிலே ஓரளவிற்கு சரியாகியிருக்க, மூன்றாம் நாளான இன்று அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்திருந்தனர்.
Advertisement
இரு குடும்பமும் பகையை மறந்து இணைந்த பின்பு எதற்கு தனித்தனியாக இருக்க வேண்டும் என்று கூறிய சந்தனபாண்டி, தன் தம்பியை மருத்துவமனையில் இருந்து நேராக வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
Advertisement
இருபத்தைந்து வருடங்கள் கழித்து புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த மீனாட்சியின் விழிகள் இரண்டும் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் கலங்க, அவருடன் என்றும் நான் இருக்கிறேன் என்பதைப் போல அவர் கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டார் சுந்தரபாண்டியன்.
Advertisement
இத்தனை வருடங்கள் சென்று ஒன்றாய் இணைந்த உறவுகளை கண்டு வாயைப்பிளந்த ஊர் மக்கள் இருவரையும் ஒன்றாய் காண அவர்கள் வீட்டின் முன் தான் குவிந்திருந்தனர்.
சுந்தரபாண்டியன் குடும்பம் உள்ளே வந்ததும், மீனாட்சியை அழைத்து பூஜை அறைக்கு கூட்டி சென்று விளக்கேற்றி கடவுளை வணங்க வைத்த காமாட்சி, பின் அனைவருக்கும் உணவு தயாரிப்பதில் மும்முரமாகி விட்டார்.
மீனாட்சியும் அவருக்கு உதவ அடுப்பறைக்குள் சென்று விட, சந்தனபாண்டியனும் சுந்தரபாண்டியனும் அவர்களைக் காண வந்தவர்களுடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்திற்கு மேல் சுந்தரபாண்டியனால் ஒரே இடத்தில் உட்கார முடியாமல் அவரின் உடல் ஓய்வுக்கு கெஞ்ச, அதை அவரின் முகபாவனையை வைத்தே உணர்ந்த அவரின் தமையன் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, ” சரி சரி எல்லாம் வெட்டிக்கதை பேசுனது போதும்.. போய் எல்லாரும் அவங்க பொலைப்பை பாருங்க.. அவன் போய் தூங்கட்டும்” என்று அவர்களை விரட்ட,
கூட்டத்தில் இருந்த ஒரு கிழவி, ” அப்புக்கு தம்பி மேல அம்புட்டு கரிசனையால.. இருக்கட்டும் இருக்கட்டும்.. உங்காத்தா இதை பார்க்கோணும்னு தேன் அம்புட்டு தவியா தவிச்சா.. மவராசி இதை பாக்காமையே போய் சேர்ந்துட்டா.. அவ ஆசைப்படி என்னைக்கும் இப்படியே ஒன்னு மண்ணா இருக்கோணும் டே” என்று கண்கலங்க கூறியவர் பின் கூட்டத்தை பார்த்து,
” அடக்கழுதைகளா இன்னும் என்ன இங்க கரகாட்டமா கட்டுறாக.. போ போய் சோலியைப் பாருங்க லே” என்று அவர்களை கிழப்பிக் கொண்டு அங்கிருந்து செல்ல..
இங்கு அண்ணன் தம்பி இருவருக்கும் அந்த பாட்டி சொல்லிவிட்டு சென்றது தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
தங்கள் தாய் இப்போது மேலே இருந்து தங்களைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவார் என்றெண்ணியவர்கள் இனி என்றும் இதே போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தங்கள் அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
அதன் பின் சுந்தரம் தன்னுடைய அறைக்கு சென்று ஓய்வெடுக்க, சந்தனபாண்டி இத்தனை நாளாக கவனிக்காமல் கிடந்த வேலைகளை பார்வையிட வயல்வெளிக்கு சென்று விட்டார்.
அனைவரும் தத்தம் வேலையில் தங்களை மூழ்கடித்து கொள்ள, சிறியவர்கள் மூவரும் மாடிக்கு சென்று விட்டனர்.
இத்தனை வருடமாய் வெளியில் நின்று மட்டுமே அந்த வீட்டை பார்த்திருந்த கீதா, இப்போது ஒவ்வொரு இடமாய் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே வர, அவள் செய்கையில் புன்னகை தான் வந்தது அஞ்சலிக்கு.
” ஏய் என்னடி ஏதோ தாஜ்மஹாலை பார்க்குற மாதிரி இப்படி பார்த்துட்டு இருக்க?? அவ்ளோ அழகாவா இருக்கு நம்ம வீடு” என்று அவளை கிண்டலாய் கேட்டாள் அஞ்சலி.
அதற்கு கீதா பதிலளிக்கும் முன் அவளை முந்திக்கொண்ட அபி, ” அட நீ வேற ஏன்க்கா அவ இந்த வீட்டோட அழகை பார்க்கலை அளவை பார்த்துட்டு இருப்பா.. எவ்வளவு தேறும் இந்த வீடுன்னு இந்நேரம் மனசுல ஒரு கணக்கு போட்டிருப்பா.. அப்படித்தானே கீது” என்று கீதாவிடமே கேட்க,
கீதாவோ அபிக்கு ஹை-ஃபை கொடுத்துக் கொண்டு, ” என்னை கரெக்டா புரிஞ்சு வச்சிருக்க வாண்டு நீ” என்று அவளிடம் கூறிவிட்டு அஞ்சலி பக்கம் திரும்பியவள்,
” என்ன எலி இன்னும் என்னைப்பத்தி புரியாம வீடு அவ்ளோ அழகாவா இருக்குன்னு கேட்குற.. நம்ம தாத்தாங்க அப்படியே வோர்ல்ட் பெஸ்ட் ஆர்க்கிடெக்ட் வச்சு டிசைன் பண்ணி மைசூர் பேலஸ் மாதிரி கட்டி வச்சிருக்காங்க பாரு.. இதை வேற நான் ஆசையா பார்க்க.. நல்லா அஞ்சு ஏக்கர் நிலத்தை வீடு கட்டுறேன்னு வேஸ்ட் பண்ணி சுத்தி சுத்தி சுவரா கட்டி வச்சுருக்காங்க.. ஆனா என்ன இன்னைக்கு லேண்ட் மதிப்புக்கு இந்த வீடு ஒரு கோடிக்கு போகும்.. அதைத்தான் பார்த்திட்டு இருந்தேன்” என்று அஞ்சலியிடம் கூறியவள் தொடர்ந்து,
” ஆனாலும் பெரியப்பா ரொம்ப மோசம்.. இப்போ மட்டும் எங்கப்பாக்கு அடி படலைனா எங்களை தள்ளியே வச்சு மொத்த சொத்தையும் உங்க ரெண்டு பேருக்குமே பிரிச்சு கொடுத்து எங்களை ஏமாத்திருப்பாரு.. நல்லவேளை எங்கப்பாக்கு ஆக்சிடென்ட் ஆகி கடவுள் என் பங்கை எனக்கு வாங்கி கொடுத்திட்டார்.. தேங்க் யூ பிள்ளையாரப்பா” என்று பேசிக்கொண்டே அவள் மொட்டை மாடிக்கு வந்து விட, அவளை பின்தொடர்ந்து அஞ்சலியும் அபியும் அங்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டைச் சுற்றி மரங்கள் உள்ளதால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக மாடியில் தெரியாமல் போக, மூன்று குமரிகளும் அங்கு கிடந்த ஒரு கயிற்று கட்டிலில் போய் அமர்ந்து விட்டனர்.
” நம்ம இப்படி ஒன்னா இங்க உட்கார்ந்து யாருக்கும் பயப்படாம ஜாலியா பேசுவோம்னு நினைச்சே பார்க்கலைல.. ரொம்ப சந்தோஷமா இருக்கு கீது.. இதெல்லாம் ஏதோ கனவு மாதிரி இருக்கு” என்று அஞ்சலி அந்த நொடியை உணர்ந்து அனுபவித்து கூற,
கீதாவோ அடுத்த நொடியே அஞ்சலியின் கைகளின் தன் கூரிய நகங்களால் நன்றாய் கீறி விட்டு, ” நிசம் தான் நிசம் தான் கனவில்லை” என்று கூற,
அடுத்த நொடி அவளை அடிக்க அஞ்சலி முயல, அவளிடமிருந்து தப்பித்து மாடியை வலம் வந்தாள் கீதா.
” அபி அந்த எருமையை பிடி” என்று தன் தங்கையையும் துணைக்கழைத்து இருவருமாய் கீதாவை துரத்த,
அந்த வீடே பல வருடங்கள் கழித்து அவர்களால் சந்தோஷக் கூச்சலில் நிறைந்திருந்தது.
தன் முன் கடு கடுவென்ற முகத்துடன் அமர்ந்திருந்த பரமசிவனைக் கண்டு அஜய் பெரிதாய் ஏதும் அலட்டிக்கொள்ளாமல், ” நீங்க நேத்து நானும் ஜீவாவும் பேசுனதை கேட்டுட்டிங்கன்னு எனக்கும் தெரியும்.. இப்போ எதுக்கு இப்படி பிடிவாதம் பண்றீங்க?? நீங்க தான இதான் உனக்கு பார்த்திருக்க பொண்ணுன்னு அவளை காட்டுனீங்க.. இப்போ வந்து முடியாது வைக்காதுன்னா என்ன அர்த்தம்.. எனக்கு பொண்டாட்டின்னு வந்தா அவ மட்டும் தான்.. என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்” என்று அவன் எப்போதும் போல் அதிரடியாக பேச,
அதில் பரமசிவனிற்கு மேலும் சினம் தான் கூடியது.
” உன் இஷ்டத்துக்கு தான் எல்லாம் நடக்கணுமா?? அப்பறம் நான் எதுக்கு அப்பான்னு இருக்கேன்..” என்று அவரும் கோபத்தில் கத்த,
“ஆமா என் கல்யாணம் என் இஷ்டத்துக்கு தான் நடக்கணும் .. உங்களையா கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க உங்க இஷ்டப்படி நடக்க?? அப்பான்னா பையனுக்கு எது பிடிக்குதுன்னு பார்த்து அது படி செய்யனும்.. இப்படி கண்டதையும் காதுல வாங்கிகிட்டு கண்மூடித்தனமா ஒரு முடிவெடுக்க கூடாது” என்று அஜயும் அவருக்கு சற்றும் குறையாத கோபத்தில் பேச,
” பிடிக்கிற எல்லாத்தையும் செஞ்சு கொடுக்குறவன் நல்ல தகப்பன் இல்லை.. எது புள்ளைங்களுக்கு நல்லதோ அதை செஞ்சு கொடுக்குறவன் தான் சிறந்த தகப்பன்” என்று பரமசிவன் அஜய்க்கு பதிலடி கொடுத்தார்.
“இப்போ அவளை கல்யாணம் பண்ணுறதுனால நான் என்ன கெட்டு போக போறேன்னு இப்படி துள்ளுறீங்க?” என்று அஜய் கடுப்புடன் கேட்க,
“அஜய் சும்மா எப்பவும் பண்ணுற போல இதுலயும் வீம்புக்கு என்கூட மல்லுக்கு நிக்காத.. நீயே யோசிச்சு பாரு.. அந்த பையன் கீதாவை கொல்ல அவ்ளோ வெறியா இருக்கான்னு ஜீவா உன்கிட்ட தான சொன்னான்.. அப்படி இருக்கப்போ எந்த நம்பிக்கையில நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க?? என் புள்ளை குடும்பம் குட்டியோட சந்தோஷமா வாழனும்னு எனக்கு ஆசை இருக்காதா??” என்று ஒரு தகப்பனாய் ஆதங்கத்துடன் அவர் கேட்க,
அவர் கூற்றில் நியாயம் இருந்தாலும் தன் காதலை இந்த ஒரு காரணத்திற்காக விட்டுக்கொடுக்க விரும்பாத அந்த விடாக்கொண்டனும் தன் தந்தைக்கு புரிய வைத்துவிடும் நோக்கில்,
” அப்பா எனக்கு உங்க நிலமை புரியுது.. அதுபோல நீங்களும் என்னோட மனசை புரிஞ்சுக்கோங்க.. எனக்கு கீதாவை தான் பிடிச்சிருக்கு.. அவளைத்தவிற வேற யாரோடவும் நான் சந்தோஷமா வாழ்வேன்னு எனக்கு தோணலை.. நீங்க அவளை கொன்றுவாங்கன்னு தான பயப்படுறீங்க?? ஆனா எனக்கு அந்த பயமில்லை.. எனக்கு அவ மேல நிறைய நம்பிக்கை இருக்கு.. அதுக்கும் மேல என் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.. எந்த ஆபத்தும் அவளை நெருங்க விடாம என்னால அவளை பார்த்துக்க முடியும்னு நான் ரொம்ப நம்புறேன்..” என்று அவன் திடமாக கூற,
அவனை மறுத்து பரமசிவன் ஏதோ கூற வருகையில் அவரை தடுத்த அஜய், ” நீங்க என்ன கேட்க வரீங்கன்னு புரியுது.. அந்த ஜித்தேஷ் எவ்ளோ பெரிய ஆளு அவனை எப்படி நான் சமாளிப்பேன்னு தான உங்க சந்தேகம்.. அதையெல்லாம் யோசிச்சு நான் எல்லாத்தையும் தயார் பண்ணி வச்சுட்டு தான் ப்பா உங்க கிட்ட வந்து பேசுறேன்.. என்னை நம்புங்க.. நிச்சயம் நீங்க ஆசைப்படுறது மாதிரி நானும் கீதாவும் உங்களால சமாளிக்க முடியாத அளவுக்கு பேரப்பசங்களை உங்களுக்கு பெத்துபோட்டு சந்தோஷமா வாழுவோம்” என்று அவன் கண்ணடித்து கூற,
அவன் காதைப் பிடித்து திருகிய பரமசிவன், ” எப்போப்பாரு விளையாட்டு தான்.. இதோ பாரு அஜய் நீ இவளோ தூரம் என்கிட்ட வந்து பேசுறப்போவே உனக்கு அந்த பொண்ணு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு புரிஞ்சுக்க முடியுது.. அதே சமயம் நீயும் புரிஞ்சுக்கோ.. உனக்கு அந்த பொண்ணு எவ்ளோ முக்கியமோ எனக்கும் உங்க அம்மாக்கும் அதை விட நீ ரொம்ப முக்கியம்.. அவளை காப்பாத்த போறேன்னு உனக்கு எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது.. இப்போவும் எனக்கு மனசில்லை.. இருந்தாலும் உனக்காக உன் சந்தோஷத்திற்காக மட்டும் இந்த கல்யாணத்திற்கு நான் சம்மதிக்கிறேன்” என்று தன் மகனின் சந்தோஷமே முக்கியம் என்று அரைமனதாய் அவர் சம்மதம் அளிக்க,
எப்படியோ விடாக்கண்டனாய் நின்று தான் நினைத்ததை சாதித்து விட்ட அஜயும் உள்ளம் நிறைந்த உவகையோடு தன் தந்தையை கண்டு, “இதுக்காக தேங்க்ஸ் சொல்லுவேன்னு கனவெல்லாம் காணாதிங்க.. நீங்க ஒத்துக்கலைனாலும் நான் அவளை கடத்திட்டு போயாச்சும் கல்யாணம் பண்ணிருப்பேன்.. பெத்த தகப்பனா போய்ட்ட ஒரே காரணத்துக்காக தான் பாவமேன்னு ஒரு மரியாதைக்கு உங்ககிட்ட சம்மதம் கேட்டேன்.. ரொம்ப சந்தோஷப்படாதிங்க” என்று அவரை கிண்டல் செய்தவன் அவர் எதையாவது எடுத்து தன்னை அடிக்கும் முன் அங்கிருந்து ஓடியிருந்தான்.
மறுநாள் இரவு அனைவரும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் ஆஜராகியிருந்தனர்.
மொட்டை மாடியின் வாடிக்கையாளர் பட்டியலில் இப்போது புதிதாய் ராமனும் பரமசிவனும் சேர்ந்திருக்க, அவர்களுக்கு இந்த அனுபவம் புதிதாகவும் புத்துணர்ச்சியை தருவதாகவும் இருந்தது.
அனைவரும் அந்த ஏகாந்த சூழ்நிலையை அனுபவித்து கொண்டிருக்க, அவர்களை கலைத்த மதுரம் தன் இரு மகன்களையும் பார்த்து,
” உங்களுக்கே தெரியும் இப்போ எதுக்கு நாம ஒன்னா கூடியிருக்கோம்னு” என்று பேசத் தொடங்க,
அவரை இடைமறித்த வினோத், ” வேறேதுக்கு ஏதாவது உருப்படாத பேச்சை பேசி என் தூக்கத்தை கெடுக்குறதுக்கு தான” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே அவன் கேட்க,
அருகில் இருந்த சொம்பைத் தூக்கி அவன் மேல் எறிந்த வாசுதேவர், ” வர வர உனக்கு வாய்கொழுப்பு அதிகமாகி கிட்டே போகுது.. என் மது டார்ஜிலிங்கை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டு இருக்க நீ.. இப்படியே பண்ணிட்டு இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ” என்று கண்டித்தார்.
அவரின் அடியில் இருந்து தப்பித்துக் கொண்ட வினோத், “சும்மா இல்லாம எனக்கு சுக்கு காப்பி போட்டு கொடுத்து என்கரேஜ் பண்ணுவீங்களா தாத்தா?? ஆமா இப்போ கொஞ்ச நாளாக மட்டும் எப்படி உங்களுக்கு காது நல்லா கேட்குது.. பரமசிவன் அங்கிள் இதை நீங்க கவனிக்கலையா??” என்று அவரை மாட்டிவிட்டான்.
அவன் கேள்வியில் திருதிருவென விழித்த வாசுதேவர், ” எனக்கு தூக்கம் வருது நான் கிளம்புறேன்” என்று அவர் தப்பித்துக் கொள்ள பார்க்க,
அனைவரும் அவரைக் கண்டு பலமாக சிரித்து விட்டனர்.
” தாத்தா அவன் உங்களை சும்மா கிண்டல் பண்ணிட்டு இருக்கான் … சித்தப்பாவுக்கு எப்பவோ உங்களுக்கு காது கேட்கும் விஷயம் தெரியும்.. நீங்க பயப்படாம உட்காருங்க” என்று அவரைப் பிடித்து அஸ்வத் தன் அருகில் அமர்த்திக் கொள்ள,
மதுரம் மீண்டும் தன் பேச்சைத் தொடங்கினார்.
” இதோ பாருங்கடா ராமா, பரமா.. உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும் நான் எதைப்பத்தி பேச போறேன்னு … என் பேரன்களோடா கல்யாண விஷயத்தை பற்றி பேசத்தான் உங்களை வரச் சொன்னேன் … என் பேரன்களுக்கு அந்த பொண்ணுங்க அஞ்சலி, கீதாவை தான் பிடிச்சிருக்கு.. அதுனால உங்க விளங்காத கோபத்தை எல்லாம் தூக்கி போட்டுட்டு ஒழுங்கா நாளைக்கு வாங்க நாம போய் பொண்ணு கேட்டுட்டு வருவோம்.. நம்ம பிள்ளைங்க சந்தோஷம் தான் நமக்கு முக்கியம் அதை விட்டுட்டு அவர் திட்டிட்டாரு வச்சுட்டாருன்னு அதையே மனசுல வச்சுகிட்டு பிள்ளைங்க வாழ்க்கையை கெடுத்துறாதிங்க” என்று அவர் பேச நினைத்ததை கூறிவிட,
ராமனும் பரமனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பின் இருவரும் புன்னகையுடன், ” நாளைக்கு காலையில பத்து மணிக்கு தான் நல்ல நேரம் ஒரு ஒன்பது முப்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பிறலாம்.. சரிதானம்மா” என்று மறைமுகமாக தன் சம்மதத்தை வழங்கியிருந்தனர்.
அதைக்கேட்டு குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்து முகம் விகசகிக்க அமர்ந்திருந்தனர்.
அப்போது, “எந்த நேரத்துக்கு போனாலும் அந்த அடுத்த விஜயசாந்திகிட்ட(கீதா) மாட்டிக்கிட்ட பின்னாடி உனக்கு ராகு நேரம் தான் மாப்ள” என்று அஜயின் காதைக் கடித்தான் ஜீவா.
அவனை அடக்கிய அஜய் தன் அண்ணனின் காதிற்குள் ஏதோ ரகசியம் போல் கூற, அஸ்வத்தும் அவன் கூறியதைக் கேட்டு அவனிற்கு ஒப்புதலாய் தலையசைத்தவன் ஒரு ரகசிய சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்…